அத்தியாயம் 12
“எப்ப டா வந்த?” என கேட்டு பரமேஸ்வரன் மகனிடம் நேரம் செலவிட, அன்றைய நாள் முழுதும் அப்படியே கார்த்திகைசெல்வன் வரவிலேயே சென்றிருந்தது.
கண்ணகி இரவு சமையலை ஆரம்பித்திருக்க, தானும் உதவுவதாய் வந்து நின்றாள் தேவதர்ஷினி.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ போய் வேற எதாவது உன் வேலை இருந்தா பாரு. பொங்கலும் சாம்பாரும் செய்ய எவ்வளவு நேரமாகிடும்?” என கண்ணகி அவளை விடவில்லை.
நிரஞ்சன் வெளியே நண்பர்களுடன் சென்றவன் அப்பொழுது தான் வந்திருக்க, அவனும் சென்று அண்ணன், தந்தையோடு பேச்சில் கலந்து கொள்ளவும் டிவியை போட்டுவிட்டு அமர்ந்தாள் தேவதர்ஷினி.
“ப்பா! அண்ணாக்கு ரிசெப்ஷன் வைக்கணும் சொன்னிங்களே! எப்ப வைக்கலாம்? சீக்கிரம் வச்சா நானும் என் பிரண்ட்ஸ் எல்லாம் கூப்பிடலாம் இல்ல? காலேஜ் முடிய இன்னும் நாலு மாசம் தான் இருக்கு!” நிரஞ்சன் சொல்ல,
“ஹ்ம்! ஆமா டா. வச்சிடனும்!” என்ற பரமேஸ்வரன் மகனைப் பார்க்க, அவன் தேவதர்ஷினியை திரும்பிப் பார்த்தான். தேவா அவர்களை கவனிக்கவில்லை டிவியில் கவனம் வைத்திருந்தவள்.
“என்ன வச்சிடனும்?” என கண்ணகி சமைத்தவற்றை கொண்டு வர, தேவதர்ஷினியும் அவருக்கு உதவி செய்ய,
“அண்ணா ரிசெப்ஷன் தான் ம்மா. சீக்கிரமா வைங்களேன்!” என்றான் நிரஞ்சன்.
“ஆமா! அதுவும் சரி தான். இன்னைக்கு என் உன் அப்பா வீட்டுப் பக்கம் எல்லாம் நம்ம மேல கோவத்துல தான் இருப்பாங்க. வச்சுட்டா நல்லது!” என்ற கண்ணகி,
“அடுத்த மாசம் தேவாவை கூட்டிட்டு போறேன்னு வேற கார்த்தி சொல்லிட்டான். அப்ப அப்படி கூட்டிட்டு போறதுக்கு முன்னாடியே வச்சிடுவோம்!” என சொல்லவும் தேவதர்ஷினியும் இப்பொழுது கணவனை திரும்பிப் பார்த்தாள்.
அவன் புன்னகைக்கவும் தானும் பதிலுக்கு தேவதர்ஷினி புன்னகைக்க, “நீ என்ன டா சொல்ற?” என்ற பரமேஸ்வரன் கேள்விக்கு,
“எனக்கு ஓகே தான். எதாவது சண்டேன்னா இன்னும் சிறப்பு. தனியா லீவ் பிளான் பண்ணாதீங்க. அது ரெண்டு நாள் இழுத்திடும்!” என்றாம் கார்த்திகைசெல்வன்.
“இப்ப தான் வந்துட்டியே! இப்பவே செஞ்சோடுவோம்?”
“ப்பா! நாளன்னைக்கு கிளம்பிடுவேன். போய் வேலை இருக்கு. அதை முடிக்கணும். நீங்க எல்லாருக்கும் சொல்லி இன்வைட் பண்ணி ரெடி பண்ணவே நாளாகிடும்!” கார்த்திகைசெல்வன் கூற,
“அதுவும் சரி தான்!” என்று பரமேஸ்வரன் கேட்க,
“ஊருக்கு கூட்டிட்டு போகும் முன்ன வச்சுட்டா நல்லாருக்குமே பார்த்தேன்!” என்றார் கண்ணகி.
அதன்பின் பேச்சுக்கள் மாறி அனைவரும் சாப்பிட்டு தூங்க சென்றிட, கார்த்திகைசெல்வனும் தன் அறைக்கு சென்றுவிட்டான்.
“தேவா! அவனை அவன் போக்குல விடாத. நீ கேட்டு சொல்லு. அதான் பத்து நாள் லீவ் இருக்காமே! இப்ப போய்ட்டு பத்தாவது நாள் வர சொல்லு. அன்னைக்கே ரிசெப்ஷன் வச்சுக்குவோம். ஆளுக்கு ஒரு வேலைனு பார்த்தா அதெல்லாம் வேலையை முடிச்சிடலாம்!” என கண்ணகி சொல்லவும்,
“நானா? இதை நான் எப்படி த்தை கேட்குறது?” தேவதர்ஷினி பதறி கேட்டாள்.
“இந்த தெரு முக்குல ஒரு கிழவி இருக்கும். அதை கூட்டிட்டு வர்றியா கேட்க?” என முறைத்த கண்ணகி,
“இனி அவன் உன் புருஷன். அப்ப நீ தான் கேட்கணும். காலம் முழுக்க நீ சொல்றத கேட்பானோ இல்லையோ! கல்யாணமான புதுசுல எல்லா பயலுங்களும் பொண்டாட்டி பேச்சை கேட்பானுங்க. அதனால தான் சொல்றேன். நீ போய் சொல்லு. போய்ட்டு அடுத்த வாரம் வந்து ரிசெப்ஷன்ல நிக்க சொல்லு!” என்று சொல்லி தேவதர்ஷினியை தள்ளிவிட்டார் அவர்கள் அறைக்குள்.
டேபிளில் இருந்த அந்த சிறிய திருமண புகைப்படத்தை கையில் வைத்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தான் கார்த்திகைசெல்வன்.
தேவதர்ஷினி வந்ததைக் கண்டவன், “ஆல்பம் வந்துடுச்சா என்ன?” என புகைப்படத்தைக் காட்டி கேட்க,
“ஆல்பம் எல்லாம் வாங்கல த்தான். நிறைய வேண்டாத போட்டோஸ் தான் அதுல இருக்கும்னு அத்தை வேண்டாம்னு சொல்லிட்டாங்க. நிரஞ்சனும் அப்பாவும் தான் நேர்ல ஸ்டூடியோ போய் வேணும்ங்குற போட்டோ மட்டும் பார்த்து செலக்ட் பண்ணி குடுத்துட்டு வந்ததா சொன்னாங்க. நிரஞ்சன் இந்த போட்டோ மட்டும் எனக்கு அனுப்பி இருந்தான். அதை தான் இப்படி நானே…. “ என்றவள் அவன் என்ன நினைக்கிறானோ அதைப் பார்த்து என அமைதியாகிவிட,
“ஹ்ம்ம்! சின்னதா அழகா இருக்கு!” என்றவன் அவளை நேர்கண்டு புன்னகையையும் கொடுக்க, அதன்பின் தான் இன்னும் நிம்மதி தேவதர்ஷினிக்கு.
“அப்புறம் த்தான்! இன்னோன்னும் சொல்லணும்!” என்றவளை என்னவெனக் கண்டான்.
“நீங்க நாளன்னைக்கு போய்ட்டா வீடு பாக்குற வேலை தானே ஒரு வாரமும்?” என்றதுன் அவன் ஆமாம் என தலையாட்ட,
“அப்போ பார்த்து வச்சுட்டு அடுத்த சண்டே வர்றிங்களா?” என்றவளை கேள்வியாய் பார்த்தான் கார்த்திகைசெல்வன்.
“இல்ல ரிசெப்ஷன்..” என அவள் இழுக்கவுமே,
“அம்மா சொன்னாங்களா? நான் கூட நீ தான் எதுவும் கேட்க போறியோன்னு நினச்சுட்டேன். அதெல்லாம் இப்ப பாசிபிள் இல்ல தேவா. வீடு பார்த்தா மட்டும் போதுமா? அடுத்து வீட்டுக்குன்னு சில திங்க்ஸ் வாங்கி வைக்கணும். நீ வர்றனா அதுக்கு எல்லாம் தயார் பண்ணனும். எவ்ளவோ இருக்கே. ரிசெப்ஷன் அப்புறம் பார்த்துக்கலாம்!” கார்த்திகைசெல்வன் கூற,
வேண்டாம் என மறுத்தால் கூட எதாவது பேசி சம்மதிக்க வைக்கலாம் இவ்வளவு காரணம் கூறுபவனிடம் என்ன சொல்ல? என பார்த்தாள் தேவதர்ஷினி.
“என்னாச்சு?” என்றவன் அவளையும் அவள் பார்வையையும் கண்டு,
“உனக்கு இப்ப ரிசெப்ஷன் வைக்கணுமா?” என்றான்.
பதில் சொல்லாமல் அவள் விழிக்க, “என்னவோ நினைக்குற. ஆனா என்னால புரிஞ்சுக்க முடியல. ஓப்பனா சொல்லு. பார்த்துக்கலாம்” என்றான்.
அவன் கைகளில் இருந்த அந்த சிறிய சட்டமிடப்பட்ட புகைப்படத்தைக் காட்டியவள்,
“அன்னைக்கு நடந்ததுல நம்ம மேரேஜ் வரையுமே எல்லாமே நாம நினைக்காதது. எல்லாருக்குமே கஷ்டம் தர கூடியது!” என்றவளை இன்னும் அவன் புரியாமல் பார்க்க,
“ஏன்! இன்னைக்கு இருக்குற உங்களுக்கும் அன்னைக்கு அந்த இடத்துல இருந்த உங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குல்ல?” என்றதும் கார்த்திகைசெல்வன் பேச வர,
“நான் தப்பா சொல்லல த்தான். அன்னைக்கு உங்களுக்கு கொஞ்சமும் இஷ்டம் இல்லை தானே? ஆனா அது எனக்கு தெரியாது த்தான். அதையெல்லாம் நான் கவனிக்கவும் இல்லை. அம்மாவும் அப்பாவும் என்ன சொன்னாலும் சரினு விட்டுட்டேன். அதுல உங்க லைஃப் கூட இருக்குன்னு எல்லாம் நான் யோசிக்கல!” என்றவள்,
“தெரியும்ன்றதுகாக கல்யாணம் பண்ணிக்கணுமானு கேட்டீங்க இல்ல. அப்ப தான் கொஞ்சமா உறுத்தல் ஆரம்பிச்சது எனக்கு!” என சில நொடி அவள் மௌனம் காக்க, கார்த்திகைசெல்வனாலும் அந்த மௌனமான நொடிகளை ஈடுசெய்ய முடியவில்லை.
“ப்ச்! என்னவோ சொல்ல வந்து என்ன சொல்லிட்டு இருக்கேன்!” என தன் தலையில் தானே தட்டிக் கொண்டவள்,
“இப்ப வேற வழி இல்லை உங்களுக்கு. வைஃப்னு ஆன பின்ன ஏத்துகிட்டு தான் ஆகணும்னு முடிவு பண்ணி அடுத்த ஸ்டெப்பா வீடு பார்க்கவும் ஸ்டார்ட் பண்ணிருக்கீங்க இல்ல த்தான்? நாம ஏத்துக்கிட்ட இந்த லைஃப்பை எல்லாருக்கும் தெரியப்படுத்த வேண்டாமா? யாருக்கும் சொல்லாம நான் பெங்களூர் வந்தா சரியா இருக்காதே! அத்தை நினைக்குறது சரி தானே? மாமா வீட்டுப்பக்கம் கொஞ்சம் கோபம் இருக்கும். உங்க கல்யாணத்தை அவங்க எதிர்பார்த்திருப்பாங்க இல்ல? அப்ப அவங்களுக்கும் மரியாதை குடுக்கணும் இல்ல!” என்றவளை மட்டுமாய் அவள் பேசிமுடிக்கும் வரை பார்த்திருந்தான் கார்த்திகைசெல்வன்.
“நான் தப்பா எதுவும் சொல்லலையே த்தான்?” என இப்பொழுது தயங்கியே அவள் கேட்டாள்.
“தப்பா சொல்லல. ஆனா நல்லா குத்திகாட்டினா என்னை!” என்றவன் சொல்லில்,
“அப்படியெல்லாம் இல்ல!” என அவள் பதற,
“ப்ச்! அதான் தப்பா சொல்லலனு சொல்லிட்டேனே!” என்றவன்,
“அம்மா ஷார்ட்டா சொன்னதை நீ புரியுற மாதிரி சொல்லி இருக்க. ஓகே ஐ அண்டர்ஸ்டாண்ட்” என நிறுத்தி சிறிதாய் சிந்தித்து,
“ஹ்ம்! நீ சொன்ன மாதிரி அடுத்த சண்டே ரிசெப்ஷன் வச்சுக்கலாம்” என்றான்.
“கோவம் இல்லையே த்தான்?” என்றவள் முகத்தில் அப்பட்டமாய் கவலைகள் அப்பியிருந்தது.
“ம்ம்ஹும்ம்!” என புருவங்கள் சுருக்கி சின்ன புன்னகையும் தலையசைப்புமாய் அவன் கூறவும் தான் தெளிந்தாள்.
“ரிசெப்ஷன் டைம் குறிச்சிட்டு வரும் போது பெங்களூர் போறதுக்கும் கூட ஒரு நல்ல நாள் அடுத்த மாசம் பார்க்க சொல்லிடு. அதுவும் முக்கியமான நாள் தானே நமக்கு?” என கார்த்திகைசெல்வன் கூறவும் உடனே சரி நான் தலையாட்டி வாசல் நோக்கி நடக்க,
“தேவா! இப்பவே இல்ல. மணி என்ன?” என்று சொல்லவும் தான் நேரத்தை கவனித்தவள் பத்தை தாண்டி இருந்த நேரத்தை பார்த்தாள்.
“நாளைக்கு மார்னிங் சொல்லிடு. இப்ப தூங்கு!” என்றான்.
“சரி த்தான்!” என்றவள் சோஃபாவிற்கு செல்ல, இப்போழுது தான் அவனுக்கு தயக்கமே.
‘நான் சொல்லி தான் தெரியனுமா? இங்க வந்து தூங்க வேண்டியது தானே?’ நினைத்தபடி அவன் பார்த்தவன்,
“என்ன பண்ற?” என்றதும் அவள் புரியாமல் பார்க்க,
“இத்தனை நாளும் இங்க எங்க தூங்கின?” என்றான்.
“இங்க தான்!” என அவள் சோஃபாவைக் காட்ட,
“நான் இல்லாதப்ப?” என அவன் கேட்க,
“அப்பவும் இங்கே தான் த்தான்!” என சோஃபாவைக் காட்டியதில் அதிர்ந்து விழித்தான்.
“ஏன்? பெட்ல தூங்கினா என்ன உனக்கு?” என அவன் கேட்டதும் சட்டென்று ஒரு முறைப்பு அவளையும் அறியாமல் அவளிடம் இருந்து வெளிவந்திருந்தது.
‘நீங்க இல்லாதப்ப தான் நான் பெட்ல தூங்கணுமா?’ இப்படி தோன்றிய நொடி முறைக்கவும் செய்திருந்தவள் அடுத்த நொடி சாதாரணமாய் பார்த்து வைத்து,
“இருக்கட்டும் த்தான்!” என திரும்பிப் படுத்துக் கொள்ள, அவள் முறைப்பிலேயே முழுதாய் அடங்கிவிட்டான் கார்த்திகைசெல்வனும். அதன் அர்த்தம் புரியாதவன் இல்லையே!
அவன் அளவுக்கு அவ்வளவு எல்லாம் அதன்பின் யோசிக்கவில்லை தேவதர்ஷினி. அவன் வந்துவிட்டான். இதோ அன்று போல் இல்லாமல் அத்தனை இலகுவாய் பேசிவிட்டான். அழைத்து செல்லவும் தயாராகிவிட்டான் என மனைவியாய் மனம் நினைத்து நிறைந்து நிற்க, நிம்மதியான ஒரு உறக்கம் கண்களை எட்டியது.
நிச்சயம் அந்த நிம்மதியான உறக்கம் அவளுக்கு மட்டும் அன்றி அவள் பெற்றோரோடு கார்த்திகைசெல்வனின் பெற்றோருக்குமே தான்.
திருமண பந்தனம், மஞ்சள் கயிறு மேஜிக் என அடுத்தக்கட்ட வாழ்க்கை அவர்களை அதற்குள் இழுத்துக் கொள்ள தயாராய் இருந்தது. அதில் இருவரும் குழம்பாத வரை அனைத்தும் தெளிந்த நீரோட்டமாய் வாழ்க்கை அழகு தான்.
தொடரும்..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
10
+1
+1
2