அத்தியாயம் 13
அகனிகா காலையில் கண் விழிக்கையில் புவித் அவளின் அருகில் உறங்கிக் கொண்டிருந்தான்.
இது என்றுமே நடவாத நிகழ்வு.
அவளுக்கு முன் அவன் எழுந்து காலை நேர உடற்பயிற்சிக்கு சென்றிருப்பான். இன்று அதிசயத்தியிலும் அதிசயமாக அவன் தூங்கிக் கொண்டிருக்க ஆச்சரியமாகப் பார்த்தாள்.
எப்போதுமே புவித் அமைதி தான். கோபம் கூட அத்தனை அமைதியாகவே வெளிப்படும் அவனிடம். உறக்கத்தில் அந்த அமைதி இன்னும் அதிகம் ஆனதுபோல் தோன்றியது அவளுக்கு.
புவித்தின் மென்மை தழுவிய முகத்தை பார்த்தவாறு சில கணங்கள் அமர்ந்திட்டாள்.
“எதுக்கு எம்மேல இவ்ளோ லவ்?” அவனிடம் கேட்க அவளிடமிருக்கும் ஒரே கேள்வி.
கேட்டாலும், அந்த காதல் தான் காரணமென்று கூறுபவனிடம் வேறென்ன கேட்டு விலக்கி வைக்க முடியும்.
தனக்குத்தானே வலிக்க வலி கொடுத்து விலகி நிற்கின்றாள்.
“லவ் யூ மாமா” என்று சத்தமின்றி மொழிந்தவள், புவித்தின் முன்னுச்சி கேசம் ஒதுக்கி மென்மையில் மென்மையாய் அவனது நெற்றியில் இதழ் ஒற்றி பிரிந்தாள்.
இதழில் அவனது உடல் சூடு உணர்ந்தவள் நெற்றிச் சுருக்கினாள்.
இரவு நன்றாகத்தானே இருந்தானென்று, நெற்றி, கன்னம், கழுத்து என கை வைத்துப் பார்த்தாள்.
அதிக சூடு இல்லையென்றாலும் காய்ச்சல் இருந்தது.
வேகமாக மிதுன் அறைக்குமுன் சென்று நின்றாள். அவனிடம் பேச தயக்கமிருந்தாலும், கதவினை மெல்லத் தட்டினாள்.
திறந்தது நிரூப்.
“ஹாய் அகா. குட்மார்னிங்” என்ற நிரூப் இன்னும் முழுதாய் கலையாத உறக்கத்தை கண்களைத் தேய்த்து விரட்ட முயற்சித்தான்.
“நீங்க இங்க?” என அகா கேட்கும்போதே, நிரூப்பிற்கு பின்னால் வந்து நின்ற மிதுன், “என்ன?” எனக் கேட்டான்.
“மாமாக்கு ஃபீவரிஷ்ஷா இருக்கு” என்றாள். மிதுனின் கண்களை சந்திக்காது.
“நைட் நல்லாதானே இருந்தான்” என்று எழுந்து வந்த விதார்த்தையும், பெஞ்சமினையும் பார்த்ததும் இரவு ஐந்து பேரும் மீட்டப் செய்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டாள்.
“தெரியல மாமா… சடன் பீவர்” என்ற அகா முன்னே செல்ல அவளை மற்றவர்கள் பின் தொடர்ந்தனர்.
மிதுன் புவித்தை பரிசோதித்துவிட்டு, “டெம்ப்பரேச்சர் அதிகமில்லை. பட் இன்கிரீஸ் ஆகலாம். இன்ஜெக்ஷன் போடுறேன்” என்றவன், “என்னோட ரூமில் மெடிக்கல் கிட் இருக்கு. கொண்டு வாடா” என்றான் நிரூப்பிடம்.
“நைட் ஜூஸ்ல நட்ஸ் மிக்ஸ் பண்ணியிருந்ததா?” என்று அகா விதார்த்திடம் வினவினாள். அவளின் பார்வை அறைக்குள் டீபாயின் மீது காய்ந்திருந்த கண்ணாடி குவளைகள் மீது படிந்திருந்தது.
“சாரிடா… ரொம்ப நாள் கழிச்சு எல்லாரும் ஒண்ணு சேர்ந்ததும் அவனுக்கு நட்ஸ் அலர்ஜிங்கிறதே மறந்துட்டேன். அவனும் எப்படி நோட் பண்ணாம விட்டான் தெரியல” என்றான் விதார்த்.
“நீங்களாவது செக் பண்ணியிருக்கலாமே” என்று அகா முடிக்கும் முன்பு, “புருஷன் மேல ரொம்பத்தான் அக்கறை” என்று முணுமுணுத்த மிதுன், “சாப்பிட கொடுத்திட்டு நான் கொடுக்கிற டேப் கொடு. சரியாகல, டெம்ப் அதிகமான ஹாஸ்பிடல் போகலாம்” எனக்கூறி வெளியேறினான்.
“நல்லவேளை ஸ்கின் ரெட்னெஸ் ஆகல” என்ற நிரூப், “பார்த்துக்கோ அகா” என்று மற்றவர்களுடன் வெளியில் சென்றான்.
அகனிகா மிதுன் முனகிவிட்டுச் சென்ற வாரத்தை காதில் எதிரொலிக்க புவித்தின் முகம் பார்த்தவாறு நின்றுவிட்டாள்.
அந்நேரம் அவளின் அலைபேசி ஒலிக்க, நீண்ட பெருமூச்சோடு அதனை ஏற்று காதில் வைத்தவளாக கீழே சென்றாள்.
சுகன் தான் அழைத்திருந்தான்.
ஒன்பது மணிக்கு ஆணையர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டமென்று தெரிவித்திருந்தான்.
ரொம்பவும் சுத்தலில் விடும் இவ்வழக்கை நினைக்கையில் ஆயசமாக வந்தது.
விரைந்து முடிக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டாள்.
கீழே கூடத்தில் யாருமில்லை.
அடுக்களைக்குள் உள்ளிருந்த யாரையும் பொருட்படுத்தாது உள் நுழைந்த அகனிகா, அங்கு பவானியுடன் சமையல் செய்துக் கொண்டிருந்த சந்தியாவிடம்…
“அவங்களுக்கு உடம்பு சரியில்லை. கஞ்சி வைக்கணும்” என்றாள்.
“எவங்களுக்காம்?” பவானி கேலியாக வெடுக்கெனக் கேட்க,
அவரை அழுத்தமாகப் பார்த்துக்கொண்டே…
“என் புருஷனுக்கு” என்றாள். அதிக அடர்த்தியுடன்.
“இப்போதான் நினைவுக்கு வருதாக்கும்” என்ற பவானி, “நான் வரேன். நீங்களே உங்க மருமகனுக்கு கஞ்சி வைங்க” என்று இழுத்து நளினமாகக் கூறிச் சென்றார்.
செல்லும் முன்பு, அகனிகாவை கடக்கும் போது…
“சுடு தண்ணியாவது வைக்கத் தெரிஞ்சாதான புருஷனுக்கு உடம்பு முடியாத நேரத்தில் கஞ்சியாவது காய்ச்சிக் கொடுக்க முடியும்” என்று பேசிச் சென்றார்.
சந்தியா மகளை முறைக்க…
“இப்போ என்ன உங்களால வைக்க முடியாதா?” என வேகமாகக் கேட்டாள் அகனிகா.
“மிதுன் அப்பவே வந்து சொல்லிட்டான்” என்று கஞ்சி ஊற்றிய கிண்ணத்தையும், அதன் கூடவே சிறு கிண்ணத்தில் எள்ளுத் துவையலும் வைத்த தட்டினை அவள் முன் நீட்டினார்.
“தேங்க்ஸ்” என்றவள் படியேற,
“இப்போ எப்படியிருக்கு?” என எங்கோ பார்த்துக்கொண்டு மகளிடம் வினவினார் ராஜேந்திரன்.
“ஸ்டேபுல் தான்” என்று அகனிகா சொல்லிச் செல்ல, அறையிலிருந்து சிதம்பரம் மற்றும் இளங்கோ வெளியில் வந்தனர்.
“விதார்த் சொன்னாம்மா. அதான் பார்த்திட்டு போலாம் வந்தோம்” என்றார் இளங்கோ.
“ம்ம்” என்றவள், புவித் படுத்திருந்த இடம் காலியாக இருக்க எங்கென்று பார்வையை ஓட்டினாள்.
“இப்போ தான் எழுந்தான். வாஷ் ரூம் போயிருக்கான்” என்று கூறிச் சென்றார் சிதம்பரம்.
காய்ச்சல் கண்டிருக்கும் உடல், திடமாக அவனால் நிற்க முடியுமா என யோசித்தவள்,
குளியலறை முன்னின்று, “மாமா” எனக் குரல் கொடுத்தாள்.
அவனிடமிருந்து பதிலில்லை.
மெல்ல கதவினை தட்டினாள்.
“ஆல் ஓகே?”
“வரேன் கனி” என்றவன் ஓய்ந்தத் தோற்றத்தில் வெளி வந்தான். உடல் சூடு அதிகம் இல்லையென்றாலும் மிகவும் களைத்திருந்தான்.
தடுமாறியவனைத் தாங்கிப் பிடித்தவள், மெத்தையில் அமர வைத்தாள்.
“என்ன பண்ணுது மாமா?” அவளின் முகத்தில் வெகு நாட்களுக்குப் பின்னர் அவனுக்கான உணர்வு.
அகனிகாவின் முகத்தையே பார்த்திருந்த புவித்,
“நீட் அ ஹக்” என்றான்.
அகனிகா தடுமாறவில்லை, அவன் இப்படி கேட்கிறானென்று விலகல் கொள்ளவும் இல்லை. மெதுவாக முன் வந்து, அவனது தோள்களில் கை போட்டு அணைத்துக்கொண்டாள்.
அவனது உடலில் இன்னும் சூடு இருந்தாலும், அந்த அணைப்பு அவளின் மனக்குளிரை மீட்டுவிட்டது.
அந்தக் கணத்தில், எத்தனை நாள் அடக்கிவைத்த பாசமோ, அதனுடன் கலந்த கண்ணீரோ அவளது கண்களில் திரண்டு வந்தது.
புவித் அவள் முதுகைத் தடவி, “பரவாயில்லை கனி… சின்ன பீவர் தான்… கவலைப்படாதே” என்று மெல்லக் கூறினான்.
அவனது குரலில் இருந்த அந்த அமைதி, அவளது உள்ளத்தில் புயலை அடக்கிக் கொண்டது.
“நீங்க நல்லா இருக்கணும். எப்பவும். அது போதும் எனக்கு,” என்றாள் அகனிகா, அவனது கையைப் பிடித்தவாறு. அவள் கூறிய வார்த்தைகளின் உட்பொருளை விளங்கிக் கொண்டவன், இதழ் விரியாது சிரித்தான்.
“சரிதான்… நீயில்லாம எங்க நல்லாயிருக்கிறது” என்றான்.
அந்த வார்த்தையில் அவள் உள்ளம் உருகிவிட்டது. பல நாட்களாகச் சுவர்க்குள் அடைத்திருந்த பாசம், அந்தக் கணத்தில் புவித்தின் அருகில் அவனது வார்த்தையில் உருக்கமாக வெளிப்பட்டது.
அதே நேரத்தில், கதவின் வெளியே இருந்து மிதுனின் குரல் கேட்டது.
“அகா… டேப்லட்” என்றான்.
அகனிகா உடனே கதவைத் திறந்தாள். மிதுனின் கண்கள் புவித்தை நோக்கி இருந்தன. ஆனால் எதுவும் சொல்லாமல் திரும்பி விட்டான்.
அவள் திரும்பி வந்து புவித்தின் அருகில் அமர்ந்து, “மாமா… இந்த மாதிரி உங்களை நான் பார்க்கவே கூடாது. கஷ்டமா இருக்கு. எதுக்கு ஜூஸ் குடிச்சீங்க?” கிண்ணத்திலிருந்த கஞ்சியை கலந்துகொண்டே வினவினாள்.
புவித் அவளது கையைப் பிடித்து,
“குடிக்கணும் தோணுச்சு” என்றான்.
“அப்போ நட்ஸ் இருக்குன்னு தெரிஞ்சும் குடிச்சிருக்கீங்க?” என்றாள். முறைக்க முடியாது முறைத்து வைத்தாள்.
“இந்த மாதிரி நேரத்திலாவது நீ என்னோட இருப்பியான்னு தெரிஞ்சிக்கத் தோணுச்சு” என்றான்.
அவள் அவனது முகத்தைப் பார்த்தாள்.
சோர்வாக இருந்தாலும், அந்தக் கண்களில் இருந்த காதல் துளி, அவளது உள்ளம் முழுவதையும் நிரப்பிவிட்டது.
“இருக்கணும் தான் நினைக்கிறேன். ஆனா முடியாது” என்ற அகனிகா, “கமிஷ்னர் மீட்டிங் இருக்கு இப்போ” என்று சொல்லும் போதே, சுகனிடமிருந்து அழைப்பு வந்தது.
அகனிகா அழைப்பை எடுக்காது அவளையும், அவளது அலைபேசியையும் மாற்றி மாற்றிப் பார்க்க… அவளை முகம் சுருங்கி நின்றாள்.
அழைப்பு முடியும் தருவாயில் ஏற்று காதில் வைத்தாள்.
கண்களை மூடியபடி புவித் படுத்துக் கொண்டான்.
பேசி முடித்து அலைபேசியை அணைத்து, புவித்தின் அருகில் வந்த அகா, அவன் தலைமீது கையை வைத்தவாறு, “எழுந்திருங்க. கஞ்சி குடிச்சிட்டு, டேப் போட்டு படுங்க” என்றாள்.
அமைதியாக எழுந்தமர்ந்தான்.
அதே நேரத்தில், கீழே கூடி இருந்தவர்கள் எல்லாம் புவித்தின் உடல்நிலை குறித்து உரையாடிக் கொண்டிருந்தனர்.
விதார்த்தின் மனம் சோர்ந்திருந்தது.
“என்னாலத்தான் இப்படி ஆயிருச்சு… நான் கவனிச்சிருந்தா அவனுக்கு ஃபீவர் வந்திருக்காது” என்று தனக்குத்தானே சொன்னான்.
பெஞ்சமின் அவனை ஆறுதல் படுத்த, “டோண்ட் வொர்ரி… ஆருஷ்க்கு சீக்கிரம் குணமாகும்,” என்றான்.
அடுத்து சில நிமிடங்களில் பெஞ்சமின், மற்றும் நிரூப்பிற்கு அவரவர் துறையிலிருந்து அழைப்பு வர, சொல்லிக் கொண்டு புறப்பட்டிருந்தனர்.
மிதுன் இருவரும் விரைந்து வெளியேறுவதை அசட்டையாக வெறித்தான். அவனது கண்களில் ஒரு விதமான கடுமை இன்னும் தெரிந்துகொண்டே இருந்தது.
____________________________
சமையலறையிலிருந்து வெளியேறிய பவானி நேராகச் சென்றது தோட்டத்திலிருக்கும் அகிலாவைத்தேடி தான்.
அகிலா தோட்டத்திற்கு நடுவில் உள்ள பிள்ளையார் முன்பு வணங்கி நின்றிருந்தார்.
“நீங்க நம்ம பசங்க நல்லாயிருக்கணும், இந்த குடும்பம் நல்லாயிருக்கணும்னு தினம் இந்த கடவுள் முன்ன நின்னு வேண்டிக்கிறீங்க. ஆனால் நம்ம ஆருஷ் நல்லாயிருக்க மாதிரி தெரியலையே” என்றார் பவானி.
கண்கள் மூடியிருந்த அகிலா பவானியின் பேச்சில் என்னவென்று இமைகள் திறந்து பார்க்க…
“ஆருஷ்க்கு காய்ச்சல். அவளுக்காக தினமும் லேட் நைட்டு வரை வெயிட் பண்ணி சரியான தூக்கம் இல்லாததால் தான் காய்ச்சல் வந்திருக்கு” என்று இல்லாததை காரணமாக்கி அகனிகாவுக்கு எதிராக அகிலாவின் கோபத்தை அதிகப்படுத்தினார்.
புவித்துக்கு உடல்நிலை சரியில்லை என்றதுமே அகிலா அடுத்தடுத்து பவானி கூறியதைக் கேட்டுக்கொண்டு வீட்டிற்குள் விரைந்திருந்தார்.
______________________________
அகனிகா புவித்தின் கன்னத்தில் கை வைத்து, “டெம்ப் குறையுது. இன்ஜெக்ஷன் வேலை செய்யுது” என்றவள், “கொஞ்சமா சாப்பிடுங்க மாமா… மருந்து குடிக்கணுமே,” என்ற கூறினாள்.
புவித் அவளையே பார்த்தவாறு, “அகா ஃபீட்பண்ணுவான்னா நான் சாப்பிடுறேன்” என்றான்.
“சின்ன பையனா நீங்க?” என்று தன்னைப்போல் கிண்டல் செய்தாலும், கரண்டியில் கஞ்சியை எடுத்துப் புவித்தின் வாயில் வைத்தாள்.
அவன் மெதுவாக விழுங்கினான்.
அந்தக் கணத்தில் அகனிகாவுக்கு அந்தச் செயல் புதிதாக இல்லை. ஆனால் அதுவே அவளது இதயத்தில் புதிதாய் ஒரு பிணைப்பை ஏற்படுத்தியது. அவளுக்கான காரணங்கள் யாவும் அக்கணம் காணாமல் போயிருந்தது.
புவித் சோர்வான சிரிப்புடன்,
“இதுக்காகவே நான் சின்ன பையனா இருந்தாலும் பரவாயில்லை தோணுது. கூடவே இருக்க. ஆனா, ரொம்ப தூரமா போயிட்டே இருக்கன்னு தோணுதுடி” என்றான்.
அகனிகாவின் கண்கள் கண்ணீரால் ஈரமானது.
“நாம சேர்ந்தா வலி இன்னும் அதிகம் தான் ஆகும். இப்போ இருக்க இந்த டிஸ்டென்ஸ் தான் நல்லது” என்றாள்.
அனிகாவின் விழியோடு தன்னுடைய கண்களை அழக் கலந்தவன்,
“உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடி?” எனக் கேட்டான்.
கன்னம் வழிய துடித்த கண்ணீரை மூச்சினை இழுத்து அடக்கியவள்,
“நான் ஸ்டேஷன் போகணும்” என்று மிதுன் கொடுத்துச் சென்ற மாத்திரைகளை புவித்திடம் நீட்டினாள்.
“உனக்கு நான் எவ்ளோ முக்கியம் தெரியும். ஆனாலும் இப்போ கேட்கணும் தோணுது” என்ற புவித், “உனக்கு நான் முக்கியமே இல்லையா கனி?” எனக் கேட்டான்.
நெஞ்சம் துடித்து அடங்கியது.
“உன்னை ரொம்ப பிடிக்கும் மாமா” என்று கத்திக் கூறிட, இதயத்தில் உறைந்திருக்கும் காதல் கரை உடைந்திட உடலின் ஒவ்வொரு அணுவும் ஆர்ப்பரித்திட… மனதை அதே காதல் கொண்டு இறுக்கி கட்டி வைத்தாள்.
“இன்னைக்கும் ஒரு கொலை நடந்திருக்கு. நான் போகணும். நல்லா ரெஸ்ட் எடுங்க” என்று மாத்திரையை, அவனுக்கு அருகிலிருந்த மேசையின் மீது வைத்தவள் ஆடை மாற்றும் அறைக்குள் புகுந்துகொண்டாள்.
அந்நேரம் அகிலா பவானியுடன் அங்குவர, அகனிகா காக்கி உடையில் தயாராகி வந்தாள்.
அகனிகாவை அத்தோற்றத்தில் கண்டதும் அகிலா நேரடியாக முகத்தை வெட்டித் திரும்பினார்.
“இந்த மாதிரி நேரத்திலும் கூட இருந்து பார்த்துக்க முடியாதா?” கேட்ட பவானியை அகனிகா கண்டுகொள்ளவே இல்லை.
“எல்லாம் நீ கொடுக்கிற இடம் ஆருஷ்” என்ற பவானி, “இப்போ எப்படி இருக்குப்பா?” எனக் கேட்டார்.
மேசை மீதிருந்த மாத்திரையை கண்டுவிட்ட அகிலா,
“இன்னும் போடலையா ஆருஷ்” என்றவராக, மாத்திரையை எடுத்து விழுங்கச் செய்தார்.
புவித்தை ஒரு பார்வை பார்த்த அகனிகா மற்ற இருவரின் சுட்டெரிக்கும் பார்வையை கருத்தில் கொள்ளாதவளாக வெளியேறியிருந்தாள்.
“இப்படியுமா ஒரு பொம்பளை இருப்பா” என்ற பவானி, “இவள் நம்ம பையனுக்கு வேணுமாக்கா?” எனக் கேட்டார்.
“சித்தி பிளீஸ்” என்ற ஆருஷ், “டயர்டா இருக்கும்மா தூங்கணும்” என்றான்.
“நீ தூங்குப்பா. நான் கூடவே இருக்கேன்” என்று அகிலா புவித்தின் அருகில் அமர்ந்திட, அவன் கண்களை மூடிக் கொண்டான்.
பவானியும் பிறகு வருவதாக சென்றிருந்தார்.
மகனின் ஓய்ந்த முகத்தையே பார்த்திருந்த அகிலா, புவித் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டானென்று தெரிந்தும் ஒரு முடிவை எடுத்திருந்தார்.
அம்முடிவை செயல்படுத்துவதற்காக என்றுமில்லாத நிகழ்வாக அகனிகாவின் வருகையை எதிர்ப்பார்த்து நள்ளிரவு நெருங்கும் வேளையிலும் விழித்திருந்தார். காத்திருந்தார் என்பது சரியாகும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
18
+1
+1