Loading

காட்சிப்பிழை 20

அந்த கட்டிடத்தின் மேல்மாடியில் விஸ்தாரமாக அமைந்திருந்த அறைக்கு நவியை அழைத்துச் சென்றான் ரிஷப். அறைக்கு வெளியிலிருந்து பார்க்கும்போதே நவிக்கு ஏதோ பல உணர்வு குவியல்களில் மூழ்கியிருப்பது போல இருந்தது.

எனினும், தன் கேள்விக்கான விடையை தெரிந்து கொள்ள அந்த அறைக்குள் சென்றாள்.

அந்த அறையை சுற்றிப் பார்த்தவளிற்கு வித்தியாசமாக எதுவும் படவில்லை. அங்கு ஒருபக்க சுவர் முழுவதும் தொங்க விடப்பட்டிருந்த புகைப்படங்களே அவளைக் கவர்ந்தன. அதனருகே அவள் செல்ல, ரிஷப் எதுவும் பேசாமல் அவளின் பின்னே சென்றான்.

அந்த புகைப்படங்கள் அனைத்திலும் நடுத்தர வயதுடைய ஆணும் பெண்ணும் வித விதமான போஸ்களில் இருந்தனர். அவர்களைப் பார்த்ததும் நவியின் இதயம் படபடவென அடித்துக் கொள்ள, அதற்கான காரணம் தெரியாமல் தவித்தாள் அவள்.

சில நொடிகளிலேயே தன்னிலை அடைந்தவள், மீண்டும் அந்த புகைப்படங்களைக் காண, அப்போது தான் அவர்களை இதற்கு முன்னரே பார்த்த நினைவு எழுந்தது நவிக்கு.

உடனே ரிஷபிடம், “இவங்களை தான அந்த இல்யூஷன்ல பார்த்தோம்?” என்று அவளே உணராத ஆர்வத்துடன் வினவினாள் நவி.

“ஆமா…” என்று கரகரப்பாக உரைத்தான் அவன்.

நவி மட்டுமல்ல, ரிஷபும் கூட அந்த அறைக்குள் நுழைந்ததிலிருந்து இப்போது வரை உணர்ச்சி குவியல்களில் தான் சிக்கியிருக்கிறான் என்பது அவனின் கரகரப்பான குரலிலேயே தெரிந்தது. ஆனால், ஆர்வத்துடன் இருந்த நவியினால் அதை கவனித்து விசாரிக்கத் தான் இயலவில்லை.

ரிஷப் மேலும் அவர்களைப் பற்றி கூற ஆரம்பித்தான். “இந்த உலகத்தோட தலை சிறந்த ஆராய்ச்சியாளர்கள் தான் இவங்க.” என்று அவன் கூற, “ம்ம்ம், நானும் கேள்விப்பட்டிருக்கேன். மிஸ்டர் அண்ட் மிசஸ் கிருஷ்ணன்… கரெக்ட்டா?” என்றாள் நவி.

“ஹ்ம்ம், இவங்களை ஆராய்ச்சியாளர்களா நீ கேள்விப்பட்டிருக்கலாம். ஆனா, உன் அப்பா அம்மாவா இவங்களை உனக்கு தெரியாது!” என்று கூறிய ரிஷபை திகைப்புடன் நோக்கினாள் நவி.

இவையெல்லாம் கனவோ, இங்கு வந்தது ரிஷபுடன் பேசியது அனைத்தும் கனவோ என்று தான் நினைக்கத் தோன்றியது நவிக்கு!

எத்தனை பெரிய அதிர்ச்சி இது நவிக்கு! அதை தெரிந்ததாலேயே அவளுக்கான நேரத்தை வழங்கி அமைதியாக அவளின் முகபாவங்களை ஆராய்ந்து கொண்டிருந்தான் அந்த ஆராய்ச்சியாளன்.

நவி, இன்னும் நம்பவில்லை. ரிஷப் தன்னிடம் விளையாடிப் பார்க்கிறானோ என்று கூட தோன்றியது. ஆனால், மறுநொடியே தன்னிடம் இப்படி விளையாடுவதில் அவனிற்கு என்ன இலாபம் என்று அவளின் மூளை எதிர் கேள்வி கேட்டது.

உண்மையில், நவிக்கு இந்த நிமிடங்களை எப்படி கடப்பது என்றே புரியவில்லை. ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்த நீள்சாய்விருக்கையில் அமர்ந்து விட்டாள்.

அவளின் செயலகளைக் கண்ட ரிஷபிற்கு, இந்த தகவலை அவளிடம் கொஞ்சம் கொஞ்சமாக சொல்லியிருக்க வேண்டுமோ என்று தோன்றியது. சொல்லி முடித்தபின்னர், வருந்துவது வீண் என்று நினைத்தவன், அவளை சமன்படுத்த வேண்டி அவளருகே அமர்ந்தான்.

கால் முட்டியுடன் கை முட்டியை சேர்த்து, கைகளில் தலையைத் தாங்கி குனிந்து அமர்ந்திருந்தவளின் தோளில் கைவைத்த ரிஷப், “ரிலாக்ஸ் நவி!” என்று தன் வழக்கமான வசனத்தை வார்த்தை மாறாமல் கூற, “எப்படி ரிலாக்ஸா இருக்க முடியும் ரிஷப்? என் வாழ்க்கையை மாற்றி போடுற மாதிரி ஒரு செய்தியை சொல்லிட்டு, எப்படி ரிலாக்ஸா எடுத்துக்க முடியும்னு நினைக்கிறீங்க?” என்று கோபமாக பேசியவள், அடுத்த நொடியிலேயே, “என்னால முடியல ரிஷப். ரொம்ப குழப்பமா இருக்கு! இதெல்லாமே என்னோட கற்பனையா, அப்பா – அம்மான்னு இயல்பா வாழனும்னு நானே இப்படியெல்லாம் நினைச்சுக்குறேனான்னு ரொம்ப பயமா இருக்கு ரிஷப். இதெல்லாம் என்னோட கனவு தான.” என்று உடைந்து அழுதவளைக் கண்ட ரிஷபிற்கு பாவமாக இருக்க, அவளின் தற்போதைய நிலைக்கு காரணமான சூழலை தான் நிந்திக்க முடிந்தது அவனால்.

அவளை ஆறுதலாக அணைத்து முதுகை வருடியவன், “இல்ல நவி, இதெல்லாம் கனவு இல்ல. நிஜம் தான். நீ, தி க்ரெட் சயின்டிஸ்ட் கோகுல கிருஷ்ணனுக்கும் மித்ரா தேவிக்கும் பிறந்த பொண்ணு தான் நவி. உன்னோட இந்த நிலைக்கு என்ன காரணம்னு நான் சொல்றேன். ஆனா, அதை கேட்குறதுக்கு நீ உன்னை தயார் படுத்திக்கணும். உன்கிட்ட எல்லாமே ஒரே நேரத்துல சொல்லி உன்னைக் கஷ்டப்படுத்துறது எனக்கும் பிடிக்கல தான். ஆனா, நமக்கு நிறைய நேரம் இல்ல. நாம தாமதிக்கிற ஒவ்வொரு நிமிஷமும், நமக்கு மட்டும் இல்ல இந்த உலகத்துக்கே ஒருவிதத்தில பாதிப்பா தான் முடியும்.” என்று கூறி அவளை சமாதானப்படுத்தினான்.

சிறிது நேரம் அவன் தோள் சாய்ந்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள், மெல்ல அவனிடமிருந்து விலகி அமர்ந்தாள்.

ரிஷப் அப்போதும் கூட, “நவி, ஆர் யூ ஓகே நவ்?” என்று அவளிடம் வினவ, அவளும் ‘ஆம்’ என்று தலையசைத்தாள். அவளின் செய்கையிலேயே அவள் இன்னும் தன்னிலைக்கு வரவில்லை என்பதை உணர்ந்த ரிஷப் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க, நவி தான் பேசத் துவங்கினாள்.

“என்னாச்சுன்னு சொல்லுங்க ரிஷப். இவ்ளோ பெரிய சயின்டிஸ்ட் ஏன் அவங்க பொண்ணை அனாதையா வளர விடணும்?” என்று வினவினாள்.

அவளின் உணர்ச்சிகளற்ற முகமும், அவள் கேள்வி கேட்ட விதமும், அவளின் பெற்றோர் செய்ததை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதை நன்குணர்த்தியது. எந்த மகவால், இதனை தாங்கிக் கொள்ள இயலும்! அதையும் தாண்டி தான் சொல்லப் போவதை அவள் எவ்வாறு எடுத்துக் கொள்ளப் போகிறாள் என்ற தயக்கத்துடனே நவிக்கு அவளின் பெற்றோரைப் பற்றி கூறத் துவங்கினான் ரிஷப்.

“கோகுல கிருஷ்ணன் அண்ட் மித்ரா தேவி, தங்களோட வாழ்க்கையையே ஆராய்ச்சிக்காக அர்ப்பணிச்சவங்க.” என்று கூறும்போதே நவியைக் கண்டான் ரிஷப். அவளின் விரக்தி சிரிப்பே அவளின் எண்ணங்களை அவனிற்கு கடத்த, ஒரு பெருமூச்சுடன் தொடர்ந்தான்.

“ரெண்டு பேரும் கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே நல்ல பிரெண்ட்ஸ்னு சொல்வாங்க. அப்போவே அவங்களோட ரிசர்ச்சை ஆரம்பிச்சாங்க. மெடிக்கல் ஃபீல்டுல மக்களுக்கு பயனுள்ள நிறைய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிச்சாங்க. இன்னைக்கு இருக்க பல நவீன மருத்துவ சாதனங்கள் அவங்களோட நேரடி கண்காணிப்புல தான் கண்டுபிடிக்கப்பட்டது.” என்று ரிஷப் கூறிக் கொண்டிருக்க நவியின் இறுகிய முகமே அந்த பேச்சினை அவள் ரசிக்கவில்லை என்பதை எடுத்துரைத்தது.

அதைக் கண்டுகொண்ட ரிஷப், அவர்களின் சாதனை கதைகளை நிறுத்திவிட்டு, அவளின் வரலாற்றை கூற ஆரம்பித்தான்.

“அவங்க பல ஆராய்ச்சில வெற்றிபெற்றதை பார்த்த பல நாடுகள் அவங்க ரெண்டு பேரையும் அவங்க நாட்டுக்காக ஆராய்ச்சி பண்ண அழைச்சாங்க. இவ்ளோ ஏன், மேற்கு மாகாணமே பல சலுகைகளை கொடுக்குறதா சொல்லி கூப்பிட்டப்போ, தங்களோட பணி உலக மக்கள் எல்லாரோட வளர்ச்சிக்கும் உறுதுணையா இருக்கும். அதனால எல்லாருக்கும் பொதுவான இடத்துல இருந்து அவங்க ஆராய்ச்சியை தொடரப் போறதா சொன்னாங்க. அவங்களுக்காகவே இந்த இடத்துல பிரம்மாண்ட ஆராய்ச்சி கூடத்தை நிறுவினாங்க **** நிறுவனம். இங்க வந்து சிக்கிக்கிட்டதை தெரிஞ்சுக்காம, அவங்களும் தங்களோட இலட்சியத்தை நோக்கி சந்தோஷமாவே பயணிக்க ஆரம்பிச்சாங்க… இது தான் அவங்க செஞ்ச முதல் தப்பு!” என்று கூறி நிறுத்தினான்.

நவிக்கு, அவன் ‘இந்த இடம்’ என்று கூறியதில், எந்த இடம் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும், அதைப் பற்றி வினவாமல் அமைதியாகவே இருந்தாள். அவளின் அமைதி கண்டு, மேலும் தொடர்ந்தான் ரிஷப்.

“கொஞ்ச நாளைக்கு அப்பறம் தான், இந்த நிறுவனத்து ஆளுங்க தங்களை வேவு பார்க்குறாங்களோன்னு சந்தேகம் வந்துச்சு அவங்களுக்கு. அவங்களை மட்டுமில்ல அவங்க குடும்பத்தையே தொடர்ந்து கண்காணிச்சுட்டு இருந்துருக்காங்க. அதே சமயத்துல தான் மித்ராம்மா பிரெக்னன்ட்டா இருக்கிறது தெரிஞ்சுருக்கு. தங்களை சுத்தி பின்னப்படுற வலையில நீயும் மாட்டிக்கக்கூடாதுன்னு நினைச்சாங்க அவங்க. சோ பிரெக்னன்சி பிரேக் எடுத்துட்டு அவங்க சொந்த ஊருக்கு போனாங்க. அங்க தான் நீயும் பிறந்த. ஏற்கனவே, தங்களோட சொந்தங்களை வச்சு அவங்களை சில ஆபத்தான ஆராய்ச்சிகளை பண்ண சொல்லி மிரட்டின சமயம் அது. உன்னையும் அது மாதிரி பகடையா யூஸ் பண்ணிடுவாங்களோன்னு நினைச்சு தான், வெளியுலகத்துக்கு நீ இறந்துட்டதா சொல்லி, உன்னை அனாதை ஆசிரமத்துல விட ஏற்பாடு செஞ்சாங்க.” என்று கூறினான் ரிஷப்.

அப்போதும் நவியின் முகபாவத்தில் எந்த மாறுதலும் இல்லை. “நவி, உனக்கு புரிஞ்சுதா? அவங்க வேணும்னே உன்னை தனியா விடல. இந்த உலகத்தோட நன்மைக்காக.” என்று அவன் கூறும்போதே இடைவெட்டியவள், “ஹ்ம்ம், நல்லாவே புரிஞ்சுது ரிஷப். இந்த உலகத்தோட நன்மைக்காக பலி கொடுக்கப்பட்டது என்னோட சைல்ட்ஹுட்! என்ன தான் சொன்னாலும், என்னால ஏத்துக்க முடியல ரிஷப். சின்ன வயசுல இருந்து எவ்ளோ போராட்டங்கள், எத்தனையோ அவமானங்கள்! என்னவோ நானா என்னைப் பெத்தவங்க கிட்டயிருந்து பிரிஞ்சு வந்த மாதிரி பேசுவாங்க! அஸ் இஃப் ஐ ஹேட் அ சாய்ஸ்?” என்று கண்கலங்கினாள் நவி.

அவளின் இந்த நியாயமான கேள்விக்கு அவனிடமும் பதிலில்லை அல்லவா!

அவன் யோசிக்கும்போதே, “சரி, அப்படி என்னை விட்டுட்டு வந்தாங்களே, அதனால எத்தனை ஆபத்தான ஆராய்ச்சிகளை அவங்களால தடுக்க முடிஞ்சுது?” என்றாள்.

அவளின் இந்த கேள்விக்கு விரக்தி சிரிப்புடன், “உன்னை பகடையா வச்சு தங்களை கார்னர் பண்ணுவாங்கன்னு நினைச்சவங்களுக்கு தங்களையே பகடையா வச்சு அவங்களுக்கு தேவையானதை சாதிச்சுக்க போறாங்கன்னு தெரியல. அப்படி தெரிஞ்சுருந்தா, என்னை மாதிரி சிலர் மேல அன்பு காட்டாம இருந்துருப்பாங்களோ என்னவோ!” என்றான் ரிஷப்.

அவர்களைப் பற்றி பேசும்போது அவன் குரல் மாற்றத்திலிருந்தே அவர்களை பெரிதாக மதிக்கிறான் என்பது நவிக்கு விளங்கியது. எங்கே அவள் தவறாக நினைத்து விடுவாளோ என்று ஒவ்வொரு வாக்கியத்திற்கும் நவியின் முகத்தை பார்த்தது அவளிற்கு புரிந்து தான் இருந்தது. ஆனால், இப்போது அவன் கூறியதை வைத்து பார்க்கும்போது புரிந்தது என்னவோ, தன் பெற்றவர்கள் இவனின் மனம் கவர்ந்தவர்கள் மட்டுமல்ல, இவனும் தன் பெற்றவர்களின் மனம் கவர்ந்தவன் என்பது!

நவி ரிஷபின் முகம் நோக்க, அவனோ இம்முறை அவளின் முகத்தைக் காணாமல் இவர்களின் பேசும்பொருளாக விளங்கிய இருவரின் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டே பேசினான்.

“ரெண்டு பேரும் உன்னைப் பாதுகாத்துட்டோம்ங்கிற நினைப்புல, அவங்களோட கண்டிஷன்ஸ் எதுக்கும் சம்மதிக்காம, உலகத்தோட பாதுகாப்புக்கு பங்கம் வராத ஆராய்ச்சிகளை மட்டும் பண்ண ஆரம்பிச்சாங்க. அப்போ தான் நானும், என்னோட சிலரும் இங்க வந்து ஜாயின் பண்ணோம். பிறந்ததுல இருந்து அனாதையா இருந்த எங்களுக்கு குருவா மட்டுமில்லாம, அதையும் தாண்டி ஒரு குடும்பமா இருந்தாங்க ரெண்டு பேரும்.” என்று அவன் சொல்ல, ‘அவங்க பொண்ணை அனாதையா தவிக்க விட்டதுக்கு பிராயசித்தம்மோ!’ என்று நினைத்துக் கொண்டாள் நவி.

“கொஞ்ச நாள் எங்களைக் கண்டுக்காதது போல இருந்தவங்க, எங்க பழக்கத்தை பார்த்து திரும்பவும் பிளான் பண்றாங்கன்னு எங்களுக்கு ரொம்ப லேட்டா தான் தெரிஞ்சுது! தெரிஞ்சப்போ, மக்களோட அழிவுப்பாதையில என் பேரும் பொறிக்கப்பட்டிருக்கும்னு நான் எதிர்பார்க்கல.” என்று ரிஷப் நிறுத்த, நவியின் மூளையில் சட்டென்று மிஸ்டிரியோவில் இருந்தபோது அவள் கண்ட ரிஷபின் தவிப்பான முகமே தோன்றியது.

“ஆன்ட்டி-ய்ஏஜிங் ட்ரக்?” என்று நவி வினவ, ஒரு பெருமூச்சுடன், “எதை என் வாழ்நாள் சாதனையா நினைச்சேனோ, அதை சொல்றதுக்கு கூட கூனி குறுகுவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. ஆமா, அந்த ‘ஆன்ட்டி-ஏஜிங் ட்ரக்’ என்னோட கண்டுபிடிப்பு தான். முதல் முறை அதை டெஸ்ட் பண்ணி பாசிடிவ் ரிசல்ட் வந்தப்போ நான் ஏதோ பெருசா சாதிச்சுட்ட மாதிரி இருந்துச்சு. அது மார்க்கெட்ல வரப்போகுதுன்னு அவ்ளோ எக்ஸ்சைட்மெண்ட்! ஆனா, அதோட கான்சீக்வென்சஸ் பார்க்கும்போது தான், அது எவ்ளோ பெரிய ஆபத்தா இருக்கும்னு புரிஞ்சுது. உடனே, மார்க்கெட்டுக்கு போகவிடாம தடுக்கணும்னு மேலிடத்துல எவ்ளோ பேசினாலும் அவங்க ஒத்துக்கவே இல்ல. அப்ப கூட, அந்த பேடன்ட் என் பேர்ல தான இருக்குன்னு அவங்ககிட்ட சவால் விட்டேன். ஆனா, அதுவே எனக்கு எதிரா திரும்பும்னு எதிர்பார்க்கல. பேடன்ட் ரைட்ஸ் அவங்களுக்கு மாத்தி தர சொல்லி கட்டாயப்படுத்துனாங்க. நான் முடியாதுன்னு சொன்னப்போ தான், கிருஷ்ணன் சாரையும் மித்ராம்மாவையும் வச்சு என்னை கார்னர் பண்ண ஆரம்பிச்சாங்க. ஒரு நிலைக்கு அப்பறம் என்னால அவங்களோட போராட முடியல. ஏன்னா, அவங்க எனக்கு எதிர்ல நிக்க வச்சது, என் வாழ்க்கைல பெருசா மதிக்கக்கூடியவங்களை. அப்போ தான் அந்த தப்பை செஞ்சேன். பேடன்ட் ரைட்ஸை அவங்களுக்கே எழுதி கொடுத்துட்டேன். அப்போவும், எப்படியாவது ரிவர்ஸ் மெடிஸின் கண்டுபிடிச்சு ரிலீஸ் பண்ணிடனும் எவ்வளவோ முயற்சி செஞ்சேன். ஆனா, இப்பவரைக்கும் அந்த ரிவர்ஸ் மெடிஸின் மார்க்கெட்டுக்கு போகல. ஏன்னா, அங்கயும் இவங்க ஆதாயம் தேட முயற்சி பண்ணாங்க!” என்று நிறுத்தினான் ரிஷப்.

இத்தனை நேரம் தன் இழப்பே பெரியது என்று நினைத்து வருந்தியவள், ரிஷபின் பேச்சைக் கேட்டு என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தாள். தன் பெற்றோரைப் பணயமாகக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டதா அந்த மருந்து என்று அதிர்ச்சி ஒரு புறம், அதனால் ஏற்பட்ட விளைவுகளை எண்ணி வருத்தம் மறுபுறம் என்று நவியும் சோர்வுடன் ரிஷபைக் கண்டாள்.

“எத்தனை எத்தனை இழப்புகள்! இதெல்லாம் என்னோட பாவ கணக்குல சேரப்போகுதுன்னு நினைக்கும்போது, எதுக்கு சயின்டிஸ்ட் ஆனேன்னு எனக்கு தோணுது. ஒவ்வொரு நாள் முழிக்கும்போதும் இன்னைக்கு எத்தனை பேரோட இறப்புக்கு நான் காரணமா இருந்துருக்கேனோன்னு மனசு அடிச்சுக்கும். இந்த குற்றவுணர்வு நான் சாகுற வரைக்கும் போகாதுன்னு நினைக்குறேன்!” என்று ரிஷப் உடைந்து போன குரலில் கூற, நவிக்கு இந்த குற்றவுணர்வை தவிர்க்க தானே தன்னைப் பெற்றவர்கள் தன்னை விட்டுச்சென்றனர் என்று தோன்றியது.

ரிஷபின் நிலையில் தன் பெற்றோரையும், அவர்களின் எதிரில் தன்னையும் வைத்துப் பார்த்தவளிற்கு, அந்த நிலையை விட இப்போது இருக்கும் நிலை எவ்வளவோ மேல் என்றே தோன்றியது!

தனக்காக அவர்களும், அவர்களுக்காக தானும் வருத்தப்பட்டு, தங்களின் சூழ்நிலையை நொந்துகொண்டு மக்களிற்கு துரோகம் இழைப்பதைப் போல அவளால் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

‘இப்படி அப்பா-அம்மா இருக்காங்கன்னு தெரியாம இருந்த உனக்கே இவ்ளோ கஷ்டம்னா, உன்னைத் தெரிஞ்சே பிரிஞ்சிருந்த அவங்களுக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துருக்கும்?’ என்று அவளின் மனசாட்சியும் எடுத்துக்கூற, ஒரு பெருமூச்சுடன் அந்த புகைப்படங்களை மீண்டும் பார்த்தாள்.

“அட்லீஸ்ட் ஒரு முறையாச்சும் நேர்ல பார்த்திருந்துருக்கலாம்.” என்று நவி முணுமுணுக்க, “அவங்களை எந்நேரமும் வாட்ச் பண்ண ஆளுங்க இருப்பாங்க. நான் கூட விடியோ ஏதாவது கிரியேட் பண்ண சொன்னேன். அதுக்கு அவங்க, ‘அதை வச்சு கூட என் பொண்ணை கண்டுபிடிச்சுடக்கூடாது’ன்னு சொல்லிட்டாங்க!” என்றான் ரிஷப்.

ரிஷப் கூறியதைக் கேட்டவளிற்கும் அவன் கூற்றிலிருந்த உண்மை புரிந்தது. அடுத்த கேள்வியைக் கேட்க மூளை உந்தினாலும், அவள் மனம் தடுத்தது. பெற்றோரின் மரணம் பற்றி பிறர் கூறி அறியும் நிலையில் இருப்பதைக் கண்டு தன்னிலையை வெறுக்கத் தான் செய்தாள் நவி.

தயங்கியபடியே, “அவங்க… எப்.. எப்படி இற…” என்று அவள் ஆரம்பிக்கும்போதே அவள் எதைக் கேட்க நினைக்கிறாள் என்பதை புரிந்து கொண்டவன், அதை வார்த்தைகளால் வெளிப்படுத்தும் கஷ்டத்தையாவது அவளிற்கு தரக்கூடாது என்று எண்ணினானோ என்னவோ, அவனே கூற ஆரம்பித்தான்.

“ஆன்ட்டி-ஏஜிங் ட்ரக் விஷயத்துலயே, ‘நீ ஏன் பேடன்ட் ரைட்ஸ் கொடுத்த?’ன்னு என்னைத் திட்டுனாங்க. ஆனா, அதோட முடியல. திரும்பவும் இப்படி ஒரு சிசுவேஷன் வரப்போகுதுன்னு தகவல் கிடைச்சதும், எங்க திரும்பவும் அவங்களை வச்சு என்னைக் கார்னர் பண்ணிடுவங்களோன்னு, அவங்க லேப்பை அவங்களே…” என்று சொல்லி முடிக்க முடியாமல் பாதியிலேயே நிறுத்தினான்.

அதைக் கேட்டவளின் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டோடியது நவிக்கு. மௌனமாக அழுதவளை கலைத்தது ரிஷபின் குரல்.

“உன்னோட இழப்புக்கு நானும் ஒரு காரணம் நவி!” என்று அவன் கூற, அதை ஏற்கவும் இல்லை மறுக்கவும் இல்லை அவள்.

இப்போதிருக்கும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டவள், தன் அழுகையை அடக்கிக் கொண்டு, “அப்போ இந்த ப்ராஜெக்ட் மிஸ்டிரியோ யாரை வச்சு கார்னர் பண்ணாங்க ரிஷப்?” என்று கேட்டாள்.

இத்தனைக்கு பிறகும், அவன் இப்படியொரு ஆராய்ச்சியில் ஈடுபடுகிறானே என்ற ஆதங்கம் அவளை அப்படி கேட்க வைத்தது.

“முதல்ல எந்த பிராஜெக்ட்க்கும் ஒத்துக்காம தான் இருந்தேன் நவி. என்னால எதுலயும் கான்செண்ட்ரேட் பண்ண முடியல. ஆனா, ஜாஷா தான் இந்த பிராஜெக்ட்ல என்னை இன்வால்வ் பண்ண வச்சாங்க. அதுக்கும் காரணம் இருக்கு. நான் இதுக்கு ஒத்துகலைன்னா, இதை பண்றதுக்கு மத்த சயின்டிஸ்ட் ரெடியா இருந்தாங்க. ஆனா, மத்தவங்க கைல போயிடுச்சுனா எவ்ளோ சீக்கிரம் முடிக்க முடியும்னு தான் பார்ப்பாங்க. அதான் நானே இதுக்கு ஒத்துகிட்டேன். அட்லீஸ்ட் கொஞ்சம் டிலே பண்ணலாம்னு தான்.” என்று கூறியவன், அத்தனை நேரம் சுவரை வெறித்துக் கொண்டே பேசியவன் நவியை நோக்கி திரும்பி, “ஜாஷா, மித்ராம்மாவோட பிரெண்ட். நீ பிறந்தப்போ அவங்களும் கூட இருந்ததா சொல்வாங்க.” என்று கூற, ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள் நவி.

“அம்மாவோட பிரெண்டுன்னா?” என்று ஜாஷாவின் வயதை எண்ணிப் பார்க்க, அவளிற்கு சிரமம் தராமல் ரிஷபே, “ஆன்ட்டி-ஏஜிங் ட்ரக்” என்று அதற்கான காரணத்தைக் கூறினான்.

மேலும், “இங்க இருக்க எல்லாருமே அதைப் போட்டுக்கணும்.” என்ற தகவலையும் கொடுத்தான்.

நவியின் கண்கள் கேள்வியாக ரிஷபை நோக்க, அவனோ உதட்டோர சிரிப்புடன், “என்னோட ஒரிஜினல் வயசு முப்பத்திரெண்டு.” என்றான்.

உடனே, மறுபுறம் திரும்பிக் கொண்டாலும், அவளின் மனமோ ‘முப்பத்திரெண்டா!’ என்று அதிர்ந்தது உண்மை தான்.

சில நொடிகள் மௌனத்தில் கழிய, நவி தான், “இப்போ என்ன செய்ய போறோம்?” என்று வினவினாள்.

“நீ இங்க வர வரைக்கும், நாங்க பெருசா பிளான் எதுவும் போடல. ஆனா, உன்னை இங்க பார்த்ததும் ஜாஷா தான் சந்தேகப்பட்டு உன்னோட டிஎன்ஏவை டெஸ்ட் பண்ணாங்க. அதுல தான் நீ மித்ராம்மா பொண்ணுன்னு கன்ஃபார்மாச்சு. ஆனா, இதை மத்தவங்களுக்கு தெரியாம மறைச்சோம்.” என்று அவன் கூற, ‘ஏன்’ என்பது போல பார்த்தாள் நவி.

“நீ அவங்களோட வாரிசுன்னு தெரிஞ்சா, அதுலயும் ஏதாவது ஆதாயம் தேட முயற்சிப்பாங்க. சோ அதைத் தடுக்க தான் மறைச்சோம். இந்த நேரத்துல தான், இந்த நிறுவனத்தோட ஒரிஜினல் ஓனர் இங்க வராத சொன்னாங்க. அதான் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்க நினைச்சோம். அதுக்கான பிளான் கூட ரெடி பண்ணியாச்சு.” என்று ரிஷப் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அந்த அறையில் விளக்குகள் அணைந்து எரிய ஆரம்பித்தன.

*****

ரிஷபும் நவியும் ஜோடியாக செல்வதைக் கண்ட கண்களுக்கு சொந்தமானவள் வேறு யாரும் அல்ல, ஜென்சி தான்.

முதலில் தான் கண்டது நிஜம் தானா என்று பல முறை எண்ணிப் பார்த்துக் கொண்டாள். ஏனெனில், தவறாக இருப்பின், இந்த இடத்திற்கு வந்ததற்கு அவளிற்கு தானே தண்டனை கிடைக்கும். ஆம், இந்த இடத்திற்கு சிலருக்கு மட்டுமே அனுமதி உண்டு.

தனக்குள்ளேயே பலமுறை உறுதி செய்து கொண்ட பின்னர், யாரிடம் கூறலாம் என்று யோசித்தாள். யாரிடம் கூறினால், தனக்கு ஆதாயம் கிட்டும் என்ற திசையிலும் யோசித்தாள்.

ரிஷபின் மேலே உள்ள ஈர்ப்பைக் காட்டிலும், அவளின் பேராசை அங்கு வென்றது போலும். இதைக் கூறுவதற்கு சரியான நபர் பிரதாப் தான் என்று எண்ணினாள்.

இவளின் திட்டத்திலேயே சிலபல நிமிடங்கள் கடந்திருந்தன. அவள் வேகமாக பிரதாப்பை தேடி அலைய, அதைக் கணினி வழியே கண்ட ரியானோ, ‘இந்த பொண்ணு எதுக்கு நடுராத்திரி இப்படி அலைஞ்சுட்டு இருக்கு?’ என்று சாதாரணமாக விட்டுவிட்டான்.

ஜென்சி பிரதாப்பின் அறைக்கதவை தட்ட, அவரோ அறைக்குள் வேறொரு ஆலோசனையில் ஈடுபட்டிருந்ததால், அவள் வெளியே காத்திருக்க வேண்டியதாகிற்று.

ஜென்சியோ காத்திருக்க முடியாமல் அவ்வப்போது ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்க, பிரதாப்போ அலைபேசியில் பேசுவதிலேயே மும்முரமாக இருந்தார்.

‘ப்ச், இந்த ஆளு வேற அவசரம் புரியாம!’ என்று திட்டியபடியே நின்றவள், பல நிமிடங்கள் கழிந்ததும், சென்று விடலாம் என்று திரும்பினாள்.

அப்போது உள்ளிருந்து, “ஜென்சி…” என்ற அழைப்பு வந்தது.

“உஃப்…” என்றவாறே உள்ளே சென்றாள் ஜென்சி.

அங்கு மதுக்கோப்பையுடன் இருந்தவரைப் பார்த்தவள், ‘இந்த ஆள் நிதானமா இருந்தாவே, யோசிக்காம தாம் தூம்னு கத்துவாரு, இப்போ பாதி போதையில இருக்காரே, தப்பான நேரத்துல வந்துட்டோமோ!’ என்று நினைக்க, அதையே தான் ரியானும் நினைத்தான்.

‘இப்போ எதுக்கு இந்த பொண்ணு அதுவா போய் இவருக்கிட்ட மாட்டியிருக்கு?’ என்று யோசித்தவாறே, பிரதாப்பின் அறையில் அவன் வைத்திருந்த மறைகாணியின் ஒலிவாங்கியை உயிர்ப்பித்தான்.

“என்ன ஜென்சி, இந்த நேரத்துல வந்துட்டு பேசாம இருக்கீங்க? வாட் இஸ் தி ப்ராப்ளம்?” என்று வினவ, ‘நல்ல மூட்ல தான் இருக்காரு போல!’ என்று எண்ணியவள், “சார், ஈஸ்வர் சாரும், அந்த பொண்ணு நவியும் சேர்ந்து வெளிய சுத்திட்டு இருந்ததைப் பார்த்தேன். அது தான் உங்ககிட்ட சொல்லலாம்னு…” என்று இழுத்தாள்.

அவள் எங்கு பார்த்தாள் என்று கூறினால், தானும் மாட்டிக்கொண்டு விடுவோமோ என்று நினைத்து இடத்தை மறைத்து ரிஷபின் குழுவிற்கு தான் உதவி செய்திருந்தாள். அவள் மட்டும் இடத்தை கூறியிருந்தால், பிரதாப்பிற்கு வேறு சந்தேகங்கள் வலுத்திருக்குமோ!

“நினைச்சேன், எப்படி தவறுதுன்னு? பொண்ணு அழகைப் பார்த்து மயங்கியிருப்பான்! ம்ம்ம், இந்த சான்ஸுக்காக தான காத்திருந்தேன்.” என்ற பிரதாப் உடனே டேனியலுக்கு அழைத்தான்.

இதைக் கேட்ட ரியான் தான், மேல் தளத்திலுள்ள விளக்குகளை அணைத்து மீண்டும் எரியவிட்டு என்று சமிக்ஞைகளின் மூலம் ஆபத்தை உணர்த்தினான்.

*****

விளக்குகள் அணைந்து மீண்டும் எரிவதைக் கண்ட ரிஷப் சுதாரித்து, “நவி, கம் ஃபாஸ்ட், நாம உடனே உன் ரூமுக்கு போகணும்!” என்று நவியை இழுத்துக் கொண்டே ஓடினான்.

நவிக்கு விளக்கம் கேட்க கூட நேரம் கிடைக்கவில்லை. வேகமாக வந்த வழியே கூட்டிச் சென்றவன், அவசரமாக அந்த இயங்கு ஏணிக்குள் நுழைந்தான், நவியுடன்…

*****

“பிரதாப், எப்போ பார்த்தாலும் ஈஸ்வர் மேல கம்ப்ளைன் பண்ணிக்கிட்டே இருக்கீங்க. திஸ் இஸ் நாட் அட் ஆல் குட் மேன்!” என்று தூக்கம் பறிபோன கடுப்பில் டேனி பேச, “டேனி, இந்த முறை கம்ப்ளைன் பண்ணது நான் இல்ல. நேரடி சாட்சியா ஜென்சி இருக்காங்க.” என்று பிரதாப் அலைபேசியில் கூற, தேவை இல்லாத பிரச்சனையில் மாட்டிக் கொண்டோமோ என்று எண்ணினாள் ஜென்சி.

“ஓகே, போய் அந்த பொண்ணு ரூம்ல செக் பண்ணுங்க. ஐ வில் ஃபாலோ யூ.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

ரிஷபை மாட்டிவிடப்போகும் குதூகலத்துடனே நவியின் அறை நோக்கி பயணமானார் பிரதாப். அவரின் பின்னே குழம்பிய மனதுடன் சென்றாள் ஜென்சி.

*****

நொடி நேரம் கூட தாமதிக்காமல் பயணித்த ரிஷபும் நவியும், அந்த மஞ்சள் மற்றும் பச்சை வண்ண விளக்குகள் ஒளிரும் தளத்தை அடைந்தனர். சரியான இடத்திற்கு வந்ததும் ரிஷப், பக்கத்து அறையில் ஒளித்து வைத்திருந்த ஏணியை எடுத்து நவியின் அறையில் இருந்த துளையை நோக்கி செங்குத்தாக வைத்து நவியை ஏறச் சொல்ல, அவளும் ஒருவித பதட்டத்துடனே ஏறினாள்.

நவி உள்ளே செல்ல, அறையின் வெளியே பேச்சு சத்தம் கேட்டது. உடனே, அவளைப் படுக்கையில் படுக்கச் சொன்ன ரிஷப், அந்த துளையை அவனே மூடினான்.

நவி படுக்கையில் படுப்பதற்கும், ரிஷப் கீழிருந்து துளையை மூடுவதற்கும், பிரதாப் கதவைத் திறந்து உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது.

“உஃப்…” என்ற பெருமூச்சு ரியானுடையது. “நல்லவேளை அந்த அறிவாளிக்கு சிசிடிவி செக் பண்ணனும்னு தெரியாம போச்சு.” என்று முணுமுணுத்துக் கொண்டான்.

நவியை அறையில் கண்ட பிரதாப்போ, குதூகலம் எல்லாம் வடிந்துவிட்டதைப் போல வெளிர, அவன் பின்னே வந்து நின்ற டேனியல், “ப்ச், பிரதாப் இதே மாதிரி இன்னும் எத்தனை முறை எங்க டைம்மை வேஸ்ட் பண்ண போறீங்க?” என்று சலித்துக் கொண்டே சென்றார்.

பிரதாப்போ ஜென்சியை முறைத்துக் கொண்டிருக்க, அவரிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தாள் ஜென்சி.

இவற்றையெல்லாம் கீழிருந்து கேட்டுக் கொண்டிருந்த ரிஷப், அவர்கள் அறையை விட்டு வெளியே சென்று விட்டனர் என்பதை அறிந்ததும் தான் பதட்டத்திலிருந்து வெளிவந்தான்.

அப்போது, “அவங்க வேணா கண்டுபிடிக்காம இருந்துருக்கலாம் மிஸ்டர். ரிஷபேஸ்வரன். ஆனா என்கிட்ட மாட்டிக்கிட்டீங்களே!” என்ற குரல் பின்னிலிருந்து கேட்க, அதிர்ந்து திரும்பினான் ரிஷப்.

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்