Loading

அத்தியாயம் 15

 

ரக்ஷன் கூறியதைக் கேட்ட இராவோ, “லூஸாடா நீ! மோதிரத்தையும் கர்சீஃபையும் எடுத்தா, அப்படியே விட வேண்டியதுதான? பெரிய ஹீரோவா நீ? உன்னோடதை போய் வச்சுருக்க!” என்று கத்தினாள்.

 

யாரும் அவளைத் தடுக்கவில்லை. என்னதான் அத்வைத்தும் இவற்றை எல்லாம் முழுமையாக நம்பவில்லை என்றாலும், அவனுக்கும் ரக்ஷன் செய்தது தேவையில்லாதது என்றே தோன்றியது.

 

ரக்ஷன் ஏதோ சொல்ல வருவதற்குள், “இப்போ அதுக்கெல்லாம் நேரமில்ல. தேவா அந்த பூஜையை பண்றதுக்குள்ள, அவனைக் கண்டு பிடிக்கணும்.” என்றார் மாடசாமி.

 

“அவனைத்தான் நீங்க ரொம்ப நேரமா தேடுறீங்கன்னு சொன்னீங்களே…” என்று அத்வைத் கூற, “ம்ம்ம், அவனை நம்ம கண்டுபிடிக்க முடியாததுக்கு காரணம் மந்திரம்!” என்றார் புருவ முடிச்சுக்குள் அவரின் யோசனையை தேக்கி வைத்தபடி.

 

“மந்திரமா?” என்று அத்வைத் வினவ, “அந்த தேவாக்கு அந்தளவுக்கு மந்திரம் எல்லாம் தெரியுமா என்ன?” என்று ரக்ஷன் வினவ, இராவிற்கு ஏதோ புரிவது போலிருந்தது.

 

“அவன் அந்தளவு வொர்த் இல்ல.” என்று இரா கூற, “அப்போ அவனுக்கு யாரோ உதவியிருக்காங்களா?” என்று சரியாக யூகித்தான் அத்வைத்.

 

“இப்போதைக்கு இந்தளவு மந்திர தந்திரங்கள் தெரிஞ்சவன்னா அது…” என்று மாடசாமி நிறுத்த, “சூனியன்!” என்று முடித்து வைத்தாள் இரா.

 

“இராம்மா, அவன் ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டான். இதை இப்படியே விட்டா, அவனை அழிக்கிறது ரொம்ப கஷ்டமாகிடும்.” என்ற மாடசாமி, “அவனோட இந்த மந்திரத்தை உன்னோட மந்திரத்தை வச்சுதான் முறியடிக்கணும்.” என்றார்.

 

“என்ன? நான்… அதெல்லாம் எனக்கு எப்படின்னு தெரியாது தாத்தா. நான் இதுவரை மந்திர சக்தியை பிரயோகிச்சது இல்லையே.” என்று பதற்றத்துடன் கூறினாள் இரா.

 

“எனக்குத் தெரியும் இரா. ஆனா, இப்போ நாம தாமதிக்கிற ஒவ்வொரு நொடியும் ரொம்ப ஆபத்து.” என்ற மாடசாமி ரக்ஷனை நோக்க, இராவோ அவனைக் கொலைவெறியுடன் முறைத்தாள்.

 

ரக்ஷனோ அத்வைத்தின் பின்னே பம்மியபடி, “பாஸ், உங்க ஆளுகிட்ட இருந்து என்னைக் காப்பாத்துங்க.” என்று கூற, “தள்ளி நில்லுடா. உன்னால அவ என்னையும் முறைக்கிற மாதிரி இருக்கு. நானே இப்போதான், அவளை உஷார் பண்ணியிருக்கேன். ஒரே நாள்ல, அதுக்கு சங்கூதிடாத.” என்று கிசுகிசுத்தான் அத்வைத்.

 

“இரா, இந்த மோதிரத்தை போட்டுக்கிட்டு, நம்ம அம்மனை மனசுல நினைச்சு கண்ணை மூடு.” என்று மாடசாமி கூற, இராவும் ஒரு பெருமூச்சுடன் அவர் சொல்லியவற்றை செய்தாள்.

 

“உன்னோட ஐம்புலன்களையும் கூர்மையாக்கு. இயற்கையோட ஐம்பூதங்களையும் துணையா நினைச்சுக்கோ. இப்போ இந்த காட்டை உன் மனசால உணர ஆரம்பி. சுத்தியிருக்க சத்தத்தை வச்சு சுற்றுப்புறத்தை மனக்கண்ணுல கொண்டு வா.” என்று மாடசாமி ஒவ்வொன்றாகக் கூற, முதலில் அதை உள்வாங்கி செயல்படுத்த சிரமப்பட்டாலும், சிறிது நேரத்திலேயே அதில் மூழ்கிப் போனாள் இரா.

 

இதை எல்லாம் அசுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருந்த அத்வைத்தின் அருகே வந்த ரக்ஷன், “உங்களுக்கும் இதுல எல்லாம் நம்பிக்கை இல்லதான? கொஞ்சம் உங்க ஆளுகிட்ட சொல்லலாம்ல?” என்று மென்குரலில் வினவினான்.

 

“எனக்கு முன்னாடியே நீ பண்ணியிருக்க வேண்டியதுதான?” என்று பார்வையை இராவை விட்டு நீக்காமல் அத்வைத் வினவ, “க்கும், கேட்டுட்டுதான் மறுவேலை பார்ப்பா!” என்று சலித்துக் கொண்டான் ரக்ஷன்.

 

“அப்புறம் நான் சொன்னா மட்டும் கேட்டுடுவாளா? என் காதலை காப்பாத்திக்க என்னவெல்லாம் பண்ண வேண்டியதா இருக்கு!” என்று அத்வைத் புலம்ப, “எனக்கே உங்களைப் பார்த்தா பாவமா இருக்கு பாஸ்.” என்று நமுட்டுச் சிரிப்புடன் கூறினான் ரக்ஷன்.

 

“அதிருக்கட்டும், நீ உன் ஒன் சைட் லவ்வரை பார்க்கப் போறேன்னு இராவைதான் பார்க்கப் போனியா?” என்று அத்வைத் மென்குரலில் சற்றே வெளிப்பட்ட பொறாமை உணர்வுடன் வினவ, “பாஸ் பாஸ், கூல் டவுன். என் மாமா பொண்ணுன்னு சொல்றதுக்குப் பதிலா டங் ஸ்லிப்பாகி அப்படி சொல்லிட்டேன். நீங்களே பார்த்தீங்களே எங்க சண்டையை. இதுல எங்கயிருந்து லவ்ஸ் பண்றதாம்? ஆனா, அவ உங்க பக்கம் சாஞ்சுட்டான்னு அன்னைக்குத்தான் கன்ஃபார்ம் செஞ்சேன்.” என்றான் ரக்ஷன் கண்ணடித்து.

 

‘எப்படி?’ என்று ஆர்வத்துடன் விழியாலேயே அத்வைத் வினவ, “மேடமுக்கு உங்க மேல் ஒரு ஸாஃப்ட் கார்னர் இருக்குன்னு அதுக்கு முன்னாடியே டவுட் இருந்துச்சு. அன்னைக்கு அவ தடை செய்யப்பட்ட மந்திரங்களை சோதிக்கிறதைப் பார்த்து டென்ஷனான நான், அவ மொபைலை பிடுங்கி டிராக்கர் செட் பண்ணும் போதுதான், அதுல உங்களோட கேண்டிட் ஃபோட்டோஸ் இருக்கிறதை பார்த்தேன். அப்போவே தெரிஞ்சுடுச்சு, உங்க ஒன் சைட் லவ் ஒருநாள் டபுள் சைட்டாகும்னு. ஆனா, இவ்ளோ சீக்கிரம் அதை அச்சீவ் பண்ணுவீங்கன்னு நான் நினைக்கல. வாழ்த்துகள் ப்ரோ.” என்று ரக்ஷன் லேசான கேலியுடன் கூற, அவனை முறைக்க முடியாமல், அதே சமயம் அவன் கேலியில் உண்டான வெட்கத்தை மறைக்க முடியாமலும்,   சிரித்து விட்டான் அத்வைத்.

 

அவர்களைக் கண்ட மாடசாமி முறைக்க, இருவரும் நல்ல பிள்ளைகளாக மௌனமாக நடப்பதை வேடிக்கை பார்த்தனர்.

 

இரா, மெதுவாக அவளின் சக்திகளைக் கட்டுப்படுத்த ஆரம்பித்தாள். இப்போது, இருந்த இடத்திலிருந்தே அந்த காட்டின் ஒவ்வொரு பகுதியையும் மனதால் பார்வையிட முடிந்தது அவளால்.

 

அவள் உடலில் ஊடுருவிச் செல்லும் சக்தியை இருளில் ஒளிரும்  வெளிச்சமாக மற்றவர்களாலும் காண முடிந்தது.

 

கண்களுக்கு முன் நிகழ்வதை சிறிது ஆச்சரியத்துடனும் ஆராய்ச்சியுடனும் பார்வையிட்டனர் இரு ஆண்களும்.

 

முதல் முறை சக்திகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதால், இரா களைப்புடன் காணப்பட்டாலும், அவள் எடுத்திருக்கும் முயற்சி மிக முக்கியமானது என்பதால், தொடர்ந்து அந்த காட்டை சல்லடையாக அலசும் வேலையில் ஈடுபட்டாள்.

 

சில நிமிடங்களில், அவள் தேடுதலுக்கு பயனாக தேவா அவளின் மனக்கண்ணில் தென்பட்டான்.

 

அவனைச் சுற்றி பூஜைக்கான பொருள்கள் இருக்க, பூஜையையும் செய்ய தொடங்கி விட்டான் அவன்.

 

இரா தேவாவை மட்டும் அங்கு காணவில்லை. அவனுக்கு நிழலாக ஒரு கருப்பு உருவம் அருவமாக இருந்ததையும் கண்டாள். 

 

நித்தமும் கனவில் காணும் உருவத்தை அவள் எப்படி கண்டு கொள்ளாமல் இருப்பாள்?

 

அது அவனே, சூனியன்!

 

தேவா இருக்கும் இடத்திற்கான வழியை மற்றவர்களிடம் பகிர்ந்த இரா, “அங்க அவனும் இருந்தான்.” என்றாள் தயக்கத்துடன்.

 

மாடசாமியோ, “இனி தாமதிக்கக் கூடாது. அவன் தேவாவை வசியப்படுத்திதான் பூஜையை ஆரம்பிக்க வச்சுருப்பான். இந்த பூஜை வெற்றிகரமா முடிஞ்சுட்டா, அந்த சூனியனோட சக்திகள் கூடிடும். அவனால யாரையும் அவனோட கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வர முடியும். நாம சீக்கிரம் இந்த பூஜையை நிறுத்தணும்.” என்று மாடசாமி கூற, அனைவரும் இரா சொன்ன திசையில் ஓட ஆரம்பித்தனர்.

 

செல்லும் வழியில், “தாத்தா, இது செய்வினை பூஜை இல்லையா?” என்று இரா சந்தேகம் கேட்க, “செய்வினை செய்ய தீய சக்திகளை துணைக்கு அழைச்சா, பூஜை முடிஞ்சதும் அவங்களுக்கு காணிக்கையா பூஜை செஞ்சவங்க ஏதாவது தரணும். சூனியன் அதை அவனோட சக்திகளை பெருக்க ஒரு வழியா பாவிப்பான். காணிக்கையா, பூஜை செஞ்சவங்களையே தன்னோட கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்துடுவான். இதைத்தான், அவன் முன்னாடியும் செஞ்சான். ஒருத்தரை கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்துட்டா, அதுக்கப்புறம் அவங்களை வச்சே நிறைய பேரை தனக்கு அடிமைகளா மாத்திடுவான்.” என்று மூச்சு வாங்கியபடி கூறினார் மாடசாமி.

 

பேசியபடி நால்வரும் இரா சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தனர். ஆனால், அங்கும் தேவா இருக்கவில்லை.

 

மூவரும் மாடசாமியை பார்க்க, “கண்கட்டு மந்திரம்!” என்றவர், “இதை முறியடிக்கிறதுக்கான மந்திரம் உனக்குத் தெரியும்ல இரா?” என்று வினவ, அவளும் தயக்கத்துடனே தலையசைத்து, கண்களை மூடி மந்திர வாக்கியங்களை முணுமுணுத்தாள்.

 

அவள் கரத்திலிருந்த மோதிரமும் அதன் பங்கிற்கு வெளிச்சத்தை வாரியிறைக்க, அந்த மந்திரக்கட்டு உடைக்கப்பட்டு, தேவா அவனைச் சுற்றியிருந்த பொருள்களுடன் அவர்களின் கண்களுக்கு காட்சியளித்தான்.

 

மந்திர உச்சாடனங்கள் முடிந்து, அவன் கோழியை பலி கொடுக்கும் சமயத்தில்தான் அங்கு வந்திருந்தனர் நால்வரும்.

 

“இரா, அவன் பலி குடுக்குறதுக்கு முன்னாடி அவனை வசியத்துல இருந்து வெளிய கொண்டு வரணும். இல்லன்னா, பூஜை முடிஞ்சதுக்கு சமம்.” என்று மாடசாமி கூற, இராவும் அதற்கான முயற்சிகளில் இறங்கினாள்.

 

இதற்கான மந்திரங்களையும் அவள் ஏற்கனவே பயின்றிருந்தாள். அதற்கு மாடசாமியே காரணமும் கூட.

 

ஆனால், பயின்ற மந்திரங்களை அவள் இதுவரை சோதித்துப் பார்த்ததில்லை. அதனாலேயே பெரும் தயக்கத்துடன் மந்திர உச்சாடனத்தை செய்தாள்.

 

மந்திரங்கள் எப்போதும் இருமுனை கத்தியைப் போன்றுதான் செயல்படும்!

 

என்னதான் இரா ஒரு பக்கம் மந்திரங்களை ஜெபித்தாலும், மறுபக்கம் அத்வைத்தும் ரக்ஷனும் தேவாவை தடுக்க முயன்றனர்.

 

“அந்த வட்டத்துக்குள்ள போகாதீங்க.” என்று மாடசாமி சொல்லிவிட, வெளியில் இருந்தே அவன் பெயரைச் சொல்லி அழைத்தனர். அதற்குப் பலன்தான் இல்லை.

 

தேவா அந்த கோழியின் கழுத்தை திருகி அதன் குருதியை யாகத்தில் வழிய விடும் இறுதி தருவாயில்தான் இராவினால் அவனை சூனியனின் வசியத்திலிருந்து வெளியே கொண்டு வர முடிந்தது.

 

எனினும், ஒரு துளி இரத்தம் யாகத்தீயில் விழுந்து நெருப்புடன் கலந்து விட்டது.

 

தேவாவிற்கு அவன் எப்படி இங்கு வந்தான், எப்படி பூஜையை செய்தான் என்று எதுவுமே நினைவில் இல்லை.

 

இதில், அந்த நால்வருக்கு முன்னிலையில் பூஜை செய்தபடி பிடிபட்டது வேறு அவன் பதற்றத்தை உயர்த்தி இருந்தது.

 

அத்வைத்தும் ரக்ஷனும் தேவாவை விசாரித்துக் கொண்டிருக்க, இராவோ சுற்றிலும் தேடிக் கொண்டிருந்தாள்.

 

“இராம்மா, உனக்கு எதுவும் இல்லையே?” என்று மாடசாமி வினவ, “எனக்கு ஒன்னுமில்ல தாத்தா. அந்த சூனியனைதான் தேடிட்டு இருக்கேன். அவன் இங்க இல்லையே!” என்று கூற, “ஓடி ஒளிஞ்சுருப்பான். அவனுக்கு இது ஒன்னும் புதுசில்லையே!” என்றார் அவர்.

 

அப்போது அங்கு வந்த அத்வைத் இராவிடம் அவளின் நலத்தைப் பற்றி விசாரிக்க, “எனக்கு ஒன்னுமில்ல. அந்த தேவா கிட்ட கேட்டீங்களா? ஏதாவது தெரிஞ்சுதா?” என்று வினவ, ‘இல்லை’ என்று தலையசைத்தவன், “அவனுக்கு எதுவுமே ஞாபகம் இல்லன்னு சொல்றான்.” என்றான்.

 

அங்கு மாடசாமிக்கும் ரக்ஷனுக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

 

ரக்ஷன் தேவாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப் போவதாகக் கூற, “உனக்கு இப்போ ஓய்வு ரொம்ப முக்கியம். அந்த பூஜை தொண்ணூறு சதவிகிதம் முடிஞ்சுருச்சு. அதனால நீ ஜாக்கிரதையா இருக்கணும். தேவாவை நாளைக்கு ஊர் பெரியவங்க முன்னாடி நிறுத்தலாம்.” என்றார் மாடசாமி.

 

ரக்ஷனுக்கு அவர் சொல்வதில் சுத்தமாக நம்பிக்கை இல்லை.

 

‘முடியாது’ என்பதில் அவன் அடமாக நிற்க, “அவருதான் சொல்றாருல. இந்தப் பிரச்சனைக்கு மூலக்காரணமே நீதான். நீ மட்டும் உன் இன்வெஸ்டிகேஷன் மூளையை அடக்கி வச்சுட்டு இருந்திருந்தா, இந்த நிலைமை வந்திருக்குமா? வீம்பு பிடிக்காம, ஒழுங்கா அவர் சொல்றதைக் கேளு.” என்று மிரட்டினாள் இரா.

 

அவள் கூறியதற்குப் பிறகு, வேறு பேச்சிற்கு இடமில்லை என்பது போல அமைதியாகிப் போனான் ரக்ஷன்.

 

‘இது உனக்குத் தேவையா?’ என்று அத்வைத் நக்கலாக அவனைப் பார்க்க, அவனோ உதட்டைப் பிதுக்கினான் பாவமாக.

 

“இரா, உங்க அப்பா கிட்ட நடந்ததை சொல்லி, ஊர் பெரிய மனுஷங்க கிட்ட பேச சொல்லுவோம்.” என்று கூற, “அதை நீங்களே பார்த்துக்கோங்க தாத்தா.” என்றாள் அவள் அசுவாரசியமாக.

 

மேலும், “இவனை உங்க கூட தங்க வச்சுக்கோங்க. கொஞ்சம் கேர்ஃபுல்லா பார்த்துக்கோங்க.” என்று அத்வைத்திடம் வேறு அவள் கூற, காதலி முதல்முறையாகக் கேட்கும்போது ‘இல்லை’ என்று சொல்வானா அவன்?

 

அதன்படி, அன்று இரவு அத்வைத்தின் அறையில் தங்க வைக்கப்பட்டான் ரக்ஷன்.

 

தனியே பேச சந்தர்ப்பம் கிடைத்தபோது, “பாஸ், இரா ரொம்ப பாவம். ஒரே நேரத்துல பல அதிர்ச்சிகளை சந்திக்க வேண்டிய காட்டாயத்துக்கு தள்ளப்பட்டுட்டா. அந்த நேரத்துல, அவளுக்குன்னு யாருமே இல்லாததுதான் இன்னும் வேதனையான விஷயம்.” என்று ரக்ஷன் கூற, “அப்போ நீ எங்கப் போன?” என்று வினவினான் அத்வைத்.

 

“ஹ்ம்ம், எங்க குடும்பத்துல ஒரு டிரடிஷன் இருக்கு. எல்லாருக்கும் அவங்களோட பதினெட்டாவது வயசுல, எங்க குடும்பத்தோட மந்திர வரலாறைப் பத்தி சொல்லுவாங்க.” என்று அசுவாரசியத்துடன் கூறத் தொடங்கினான் ரக்ஷன்.

 

“எனக்கும் என்னோட பதினெட்டாவது வயசுலேயே எங்க குடும்பக் கதையை சொன்னாங்க. எனக்கு அதுல பெருசா ஈடுபாடு இல்ல. அது மட்டுமில்லாம, பல ஜெனரேஷனா எங்க குடும்பத்துல ஒண்ணுக்குள்ள ஒண்ணா கல்யாணம் பண்ணி வாழ்ந்துட்டு இருந்தாங்க. அதையும் என்மேல ஃபோர்ஸ் பண்ண பார்த்தப்போதான், கோபம் வந்து குடும்பத்தை விட்டே விலகிட்டேன்.” என்று இறுக்கத்துடன் கூறிய ரக்ஷன் அத்வைத்தைப் பார்த்து,

 

“நான் சின்ன வயசுல இருந்தே இராவை தங்கச்சி மாதிரிதான் பார்த்து வளர்ந்தேன். திடீர்னு கல்யாணம் பண்ணனும்னு சொன்னா, எப்படி முடியும்?” என்றான்.

 

“இந்தளவு எக்ஸ்ப்ளனேஷன் எதுக்கு குடுக்குற இப்போ? அதுவும் என் மூஞ்சியைப் பார்த்து… என்ன, என்னைப் பார்த்தா சந்தேகப்படுற மாதிரி தெரியுதா?” என்று அத்வைத் வினவ, “சும்மா செக் பண்ணி பார்த்தேன் ப்ரோ.” என்று சிரித்தான் ரக்ஷன்.

 

“அப்படியே மழுப்பாத மேன். மீதியை சொல்லி முடி.” என்று அத்வைத் கூற, “ஹ்ம்ம், நான் என் குடும்பத்தோட டச்ல இல்லாத காரணத்தால, இராவுக்கு நடந்த விஷயம் எனக்கு ரொம்ப லேட்டாதான் தெரிய வந்துச்சு. அந்த டைம், டிரெயினிங்ல இருந்ததால, உடனே என்னால இங்க வரவும் முடியல.” என்ற ரக்ஷனின் குரல் தேய்ந்து ஒலித்தது.

 

“நான் வந்தப்போ, காலம் ரொம்ப கடந்துடுச்சு. இதோ, இப்போ பேசின அளவுக்கு கூட அப்போ என்கிட்ட பேசல அவ. கலகலன்னு இருந்தவளை என்னால அப்படி பார்க்க முடியல. நான் எவ்ளோவோ சொல்லியும், அவ மனசுல அவங்க பதிஞ்சு வச்சதை என்னால மாத்த முடியல. அதுதான், இந்த மர்மத்தை எப்படியாவது வெளியக் கொண்டு வரணும்னு உறுதியா நிக்க வச்சது. அதுதான், உங்களை இதுக்குள்ள இழுத்து விடவும் வச்சது.” என்றவன், இயல்புக்கு மாறியவாறு, “நான் என்னவோ இங்க நடக்கிற மர்மங்களை விசாரிக்கத்தான் உங்களை வரச் சொன்னேன். ஆனா, நீங்க…” என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்.

 

“நான்… என்ன? வந்த இடத்துல, கண்ணுக்கு அழகா ஒரு பொண்ணு… அதுவும் ஊரே ஒதுக்கி வச்ச ஒரு ஓவியத்தை, என் வாழ்க்கைல காவியமா இணைச்சுக்க ஆசைப்பட்டேன். அது ஒரு குத்தமா?” என்று அத்வைத் வினவ, “தப்பே இல்ல ப்ரோ. உண்மையை சொல்லுங்க, இப்படி பேசிப் பேசித்தான் எங்க இரும்புப் பொண்ணை கரைச்சீங்களா? இந்த வித்தையை எனக்கும் சொல்லி தாங்களேன்.” என்றான் ரக்ஷன் குறும்புடன்.

 

“அதெல்லாம் தானா வரணும் தம்பி!” என்று இல்லாத சட்டைப்பட்டையை உயர்த்திக் கொண்டான் அத்வைத்.

 

“ஹ்ம்ம், எப்படியோ அவ நல்லா இருந்தா சரி. இந்த பிரச்சனை எல்லாம் முடிஞ்சதும், அவளை இங்க இருந்து கூட்டிட்டுப் போயிடுங்க. திரும்ப அந்த கும்பலோட சேர விடாதீங்க.” என்று பொருமினான் ரக்ஷன்.

 

அவனின் ஆதங்கத்தைப் புரிந்து கொண்ட அத்வைத்தோ அவனின் தோளில் ஆதரவாகத் தட்டிக் கொடுத்து, “அதுசரி, உன் திட்டம் என்ன?” என்று வினவ, “நானும் அப்படியே எங்கேயாவது போயிடுவேன். இவங்களோட எல்லாம் இருக்க மாட்டேன். இல்லன்னா, எப்போ கழுத்துல மாலையை போட்டு பலியாடு கணக்கா நிக்க வைப்பாங்களோன்னு பயத்துலயே இருக்கணும்.” என்றான் ரக்ஷன்.

 

அவன் விளையாட்டாகக் கூறினாலும், அதன் பின்னிருந்த வேதனை அத்வைத்தை சென்று சேர்ந்தது.

 

சூழலை மாற்ற வேண்டி, “அப்போ உன் தம்பி?” என்று அத்வைத் வினவ, “அந்த அரை டிக்கெட் வந்தா கூட்டிட்டு போவேன். இல்லன்னா, அனுபவிக்கட்டும்.” என்ற ரக்ஷன், “அப்போ அவனி?” என்று பதிலுக்கு வினவ, “என் குட்டி மச்சினிச்சியை நாங்க எங்களோட கூட்டிட்டுப் போயிடுவோம்.” என்று தோளைக் குலுக்கினான் அத்வைத்.

 

இப்படி அவர்கள் இருவரும் அவரவர்களின் வருங்கால திட்டத்தை தீட்டிக் கொண்டிருக்க, நிகழ்காலம் அவர்களுக்கு என்ன வைத்திருக்கிறதோ?

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
16
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்