Loading

அத்தியாயம் 12

அகனிகா தன்னுடைய சகப் பணியாளர்களான சுகன் மற்றும் ஆனந்தனுடன் காஞ்சிபுரத்தில் கொலை நடந்த இடத்திற்கு சென்று கொண்டிருக்க, மற்றொரு இடத்தில் சத்தமில்லாமல் ஓர் உயிரின் இறப்பு அரங்கேறிக் கொண்டிருந்தது.

மதுரை புறநகர் – தனியார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு.பழனியப்பன் வீடு. அவரது வீடு பள்ளிக்கு அருகிலேயே உள்ளது. மதியம் போல் அவரின் பெயரில் பள்ளி முகவரிக்கு பார்சல் வந்திருக்க, அதனை மாலைநேர இடைவெளியில் என்னவென்று பிரித்துப் பார்த்தார்.

உள்ளே நவீனரக கைக்கடிகாரம்.

பழனியப்பனுக்கு அருகில் அமர்ந்திருந்த மற்றொரு ஆசிரியர், அந்த கைக்கடிகாரத்தைப் பார்த்திட்டு,

“நியூ மாடல்… நெம்பர் ஒன் பிராண்ட் சார். பயங்கர காஸ்ட்லி. கிஃப்ட்டா சார்?” எனக் கேட்டார்.

பழனியப்பன் ஆமாமென்று தலையசைத்தாலும், ‘தனக்கு இவ்வளவு விலையுயர்ந்த பொருளை யார் பரிசாகக் கொடுப்பது?’ என்று மனதோடு சிந்தித்தார்.

கைக்கடிகாரமிருந்த அட்டைப்பெட்டியை திருப்பி திருப்பிப் பார்த்தார். அதில் அவரது முகவரி தவிர்த்து வேறொன்றுமில்லை.

“கையில கட்டுங்க சார். நல்ல ஸ்டைலிஷா இருக்கும்” என்று மற்றொரு ஆசிரியர் சொல்லிட, பழனியப்பனும் ஆர்வமாகக் கட்டிக்கொண்டார்.

“நல்லாயிருக்கு சார்” என்றவர், மணியடிக்கவே தன்னுடைய வகுப்பிற்கு சென்றுவிட்டார்.

அடுத்தடுத்து இரு வகுப்புகளை முடித்து வந்தவர், கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தையே மறந்துப்போனார். பள்ளி விடும் இறுதி மணி ஒலிக்கவே, வீட்டிற்கு கிளம்பிவிட்டார்.

“என்ன நேரத்துல வந்துட்டீங்க?” அவரின் மனைவி கோமதி கேட்க, “எக்ஸ்ட்ரா கிளாஸ் இல்லை. வந்துட்டேன்” என்றவர், அறைக்குள் சென்று ஆடை மாற்றிய தருணம் கைக்கடிகாரத்தை கழட்டிட முனைய முடியவில்லை.

அந்நேரம் கோமதி மாலை சிற்றுண்டிக்கு அழைக்க, அவரும் வெளியில் வந்தார்.

“பக்கத்து வீட்டு கல்பனா பையனுக்கு விடியல் முகூர்த்தத்துல கல்யாணம். இப்போ வரவேற்பு. நம்ம அப்பார்ட்மெண்டே கிளம்புது. நானும் போயிட்டு வந்துடுறேன். உங்களுக்கு நைட்டுக்கு சாப்பாடு செஞ்சு வச்சிட்டேன். போட்டு சாப்பிட்டுக்கோங்க. காலையில கல்யாணம் முடிஞ்சு தான் வருவேன்” என்ற கோமதி சில நிமிடங்களில் கிளம்பியும் இருந்தார்.

கோமதி சென்ற ஐந்து மணி நேரத்திற்குப் பின்னர் பழனியப்பன் மாரடைப்பால் இறந்திருந்தார்.
___________________________________

ஐவரும் நேரம் செல்வது தெரியாது தங்களின் பேச்சிலும், விளையாட்டிலும் மூழ்கியிருந்தனர்.

இவர்களில் மிதுன் மட்டுமே வெளி மாநிலத்தில் தனித்து இருந்தது. மற்ற நால்வரும் ஒரே நகரத்தில் இருந்தாலும், முக்கிய நேரங்களில் சந்தித்துக்கொள்வதோடு சரி. அதிலும் நடந்து முடிந்த நிகழ்வினை கடந்து வரவே அவர்களுக்கு இடைப்பட்ட வருடங்கள் சரியாக இருந்திருக்க… பல வருடங்களுக்குப் பின்னர் அவர்களுக்கே உரித்தான நேரமாக இன்றைய இரவை மாற்றியிருந்தனர்.

இவர்களின் சிரிப்பு சத்தம் கேட்டு, சிதம்பரம், ராஜேந்திரன், இளங்கோவும் கூட வந்து சிறிது நேரம் உரையாடிவிட்டுச் சென்றிருந்தனர்.

என்னதான் மற்றவர்களுடன் கலகலத்துக் கொண்டிருந்தாலும் கால் மணி நேரத்திற்கு ஒருமுறை மனைவிக்கு தவறாது தகவல் அனுப்பிக் கொண்டிருந்தான் புவித்.

அவன் மதியம் அனுப்பிய சாப்டியா மற்றும் ஆவக்கா புகைப்படத்தையும் பார்த்திருந்தாள். அதற்கு பின்னராக அவள் இன்னும் வீடு வந்து சேரவில்லையென்று அவளின் நலன் வேண்டி அனுப்பிய எந்தவொரு தகவலும் ஒற்றை குறியில் நின்றிருக்கிறது.

வேலை நேரத்தில் அழைத்து தொந்தரவு செய்யக் கூடாதென்று புலனம் வழி தகவல் அனுப்பி, அது ஒற்றைக் குறி காண்பித்ததுமே ஆனந்தனுக்கு அழைத்து அகா என்று கேட்டிருந்தான்.

ஆனந்தனும் தாங்கள் காஞ்சிபுரம் வந்துள்ளோம் என்று சொல்லாது, “இப்போ நடக்குற கொலைகள் சம்மந்தமா விசாரிக்க வந்தோம் சார்” என்றிருந்தார்.

அவ்வழக்கைப் பற்றி செய்திகளில் பார்ப்பதால், பணி முடித்து வரட்டுமென்று அழைப்பை வைத்தாலும், நேரம் செல்ல செல்ல அவனுள் மனைவியை அருகில் பார்த்துவிட வேண்டுமென்கிற தவிப்பு.

பழைய நிகழ்வின் தாக்கமாக இருக்கலாம். அவனது பதற்றம்.

“இங்கிருக்க ஸ்டேஷன் தானடா. என்னவோ இன்னைக்குதான் புதுசா அவள் லேட்டா வர மாதிரி ரொம்பத் தேடுற” என்று தம்பியை கிண்டல் செய்தான் விதார்த்.

இம்முறை அவளுக்கே நேரடியாக அழைத்திட,

“கிளம்பிட்டேன். மேக்சிமம் ரெண்டு மணி நேரத்தில் வந்துடுவேன். எனக்காக வெயிட் பண்ண வேணாம்” என்று எடுத்ததும் புவித்தை பேசவிடாது பேசி வைத்திட்டாள்.

மீண்டும் அழைத்தவன்,

“இங்கிருக்க ஸ்டேஷனிலிருந்து வர டூ ஹவர்ஸா? எங்க இருக்க நீ?” எனக் கேட்டான்.

புவித்தின் குரலில் கடுமை சிறிதுமில்லை. ஆனால் ஆழப் புதைந்த வலியின் பிரதிபலிப்பாக மெல்லிய நடுக்கம் தென்பட்டது.

புவித்தின் குரல் வைத்தே அவனது மானவோட்டம் எப்படியிருக்கும் என்பதை அனுபவமாக அறிந்தவள்,

“காஞ்சிபுரம் வந்திருக்கேன்” என்றாள்.

“ஓகே” என்ற புவித், “லைவ் லொகேஷன் ஷார் பண்ணிவிடு” என்று வைத்திட்டான்.

அவள் பாதுகாப்பாக தடையேதுமின்று வருகின்றாளா என்பதை கவனிக்கவே லைவ் லொகேஷன் அனுப்புமாறுக் கூறினான்.

கணவனின் எண்ணம் புரிந்ததால் அவளும் அனுப்பி வைத்திட, இணையத்தை உயிர்ப்பிக்க, புலனம் வழி புவித்தின் பல தகவல்கள் திரையில் எம்பிக் குதித்தன.

எப்போதும் அவளுடன் தான் இருக்கின்றேன் என்பதை கூறும் வகையில் உடனில்லாப் பொழுதுகளில், வழக்கமான உரையாடல்களை அனுப்பி வைப்பான். வேலையின் போது சோர்ந்து உட்காரும் தருணங்களில், புவித்திடமிருந்து வரும், சாப்டியா, நேரமாச்சு சாப்டுடி, நான் வீட்டுக்கு வந்துட்டேன், நீ எப்போ வருவ என்று அவன் அனுப்பிடும் சின்ன சின்ன வார்த்தைகளில் நொடியில் உற்சாகம் கொண்டிடுவாள்.

ஆனால் இன்று இணையத்தை உயிர்பிக்கவே மறந்திருக்க, அவனது தவிப்புகள் வார்த்தை வடிவம் கொண்டு புலனத்தை தத்தளிக்க வைத்திருந்தது.

அவனது தவிப்புகள் யாவும் அவளுக்கு அவனின் அன்றைய நாளின் மிச்சமாய் எஞ்சி நிற்கும் பயமாகவேத் தெரிந்தது.

புவித்திடம் சொல்லாது இத்தனை தூரம் வந்த தன்னை மனதில் நிந்தித்துக் கொண்டாள்.

“சாரி” என்று பதில் அனுப்பி வைத்தாள்.

பார்த்தவன் இதழ்கள் கீழ்நோக்கி வளைந்தன.

நேரமாக ஆக ஒவ்வொருவராக அங்கேயே உறங்கத் துவங்கினர்.

மனைவியை எதிர்ப்பார்த்து புவித் பால்கனி இருக்கையில் வந்தமர்ந்து கொண்டான்.

“விலகிப்போற ஐடியா கொஞ்சமும் இல்லையா?”

இருளின் நிசப்தத்தில் அதிக அடர்த்தியோடு செவி நுழைந்த மிதுனின் குரலில் ஏறிட்டுப் பார்த்த புவித்…

“முடியும் தோணல” என்றான்.

“ஹ்ம்ம்” என்ற மிதுன், அறைக்குள் திரும்பிப் பார்த்து மூவரின் உறக்கத்தையும் உறுதி செய்து கொண்டவனாக புவித்தின் அருகில் வந்தமர்ந்தான்.

“பிளீஸ் மச்சான் அவள் உனக்கு வேணாம்னு மட்டும் சொல்லாத. என்னால கனி இல்லாம முடியாதுடா” என்றான் புவித்.

“அவயில்லாம எப்படி உன்னால இருக்க முடியாதோ… அதேதான் அவளுக்கும் ஆருஷ். நீயில்லாம அவள் இருக்கணும் தானே?” என்று புவித்தின் கையில் அழுத்தம் கொடுத்தான் மிதுன்.

“புரியுது… ஆனால் என் காதலுக்கு இந்த புரிதல் வேண்டாமே” என்ற புவித், “அவளுக்கு நான் எப்படிடா கஷ்டம் கொடுப்பேன். தெரிஞ்சே” என்றான்.

“அவள் இப்போ உனக்குக் கொடுத்திட்டுதானே இருக்காள். உன்னை சேர முடியாதுன்னு வலி அவளுக்கு. அவளோட சேர முடியலன்னு வலி உனக்கு. இப்படியொரு வாழ்க்கை வேணுமா?” என்ற மிதுன்,

“வலி தான் மிஞ்சும். உனக்கேத் தெரியும் என்ன பண்ணனும் அப்படின்னு” என்றான்.

“கனி என்னைவிட்டு தள்ளி இருக்கிறதும் லவ் தான் மிதுன்.” சிறுவனாய் தன்னிடமிருக்கும் பொம்மையை விட்டுக்கொடுக்க முடியாது காரணம் கூறும் பாவம் அவனிடத்தில்.

“தங்கச்சி லைஃப் நல்லாயிருக்கணும் கொஞ்சமும் அக்கறை இல்லையடா உனக்கு?” கேட்ட புவித்தை முறைத்த மிதுன்,

“அக்கறை இருக்கிறதால தான் சொல்றேன் அவளை விட்டுடு” என்று அவ்வறையை விட்டு வெளியேறினான்.

தலையை இருக்கையில் பின் சாய்த்து கண்கள் மூடி அமர்ந்திட்ட புவித்தின் மனதில் எவ்வித குழப்பமும் இல்லை. இருக்கும் வரை அவளுடனான நிமிடங்களை காதலாகக் கடத்திடவே நினைக்கின்றான்.

மிதுன் சொல்லிச் சென்றதில் அவன் மீதும் எவ்வித கோபமும் இல்லை. விட்டுவிடு என்பவனிடத்திலும் தங்கைக்கான அன்பே பிரதானம் என்பதை புவித் அறிவான்.

மிதுன் கீழே வர, அகனிகா வீட்டிற்குள் நுழைந்தாள்.

அண்ணனைப் பார்த்ததும் அகா நின்றுவிட, மிதுன் தங்கையை முறைத்துப் பார்த்தான்.

“இதுதான் வீட்டுக்கு வர நேரமா?”

கோபமாக என்றாலும் மிதுன் தன்னிடம் பேசியதை அகா ஆச்சரியமாகப் பார்த்தாள்.

அகனிகாவின் பார்வை மட்டுமே சகோதரன் மீது படிந்திருந்தது. அவள் ஒரு வார்த்தையும் உதிர்க்கவில்லை.

“உனக்காக ஒருத்தன் உருகிட்டு இருக்காங்கிற நினைப்பாவது இருக்கா?” என்ற மிதுன், “அவனோட முயற்சியால மட்டும் தான் உயிர்ப்பை தொலைச்ச இந்த குடும்பம் கொஞ்சமாவது சகஜமாகியிருக்கு. அவனையே நீ முடங்க வச்சிடாதே” என்றான்.

“எனக்காக யாரும் வெயிட் பண்ணுங்கன்னு நான் சொல்லலையே” என்றவள், “நான் அவங்களுக்கு வேணாம்னு தான் சொல்லிட்டு இருக்கேன். அவங்களை என்னை விட்டுடச் சொல்லுங்க. முழு நிம்மதி கிடைச்சிடும்” எனக்கூறி வேகமாக மாடியேறி வந்தவள், முதல் படியில் மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்த புவித்தைப் பார்த்து தடுமாறியவளாக பார்வையை தழைத்துக்கொண்டு அறைக்குள் சென்றுவிட்டாள்.

கீழிருந்து மிதுன் பார்க்க,

“ஏன்டா?” எனும் விதமாக வார்த்தைகளற்று பார்வையால், விரல்கள் விரித்துக் கேட்ட புவித் அறைக்குள் சென்றான்.

அகனிகா குளித்து ஆடைமாற்றி வர,

“சாப்டியா கனி?” எனக் கேட்டான்.

அவனை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தவள் பதிலேதும் சொல்லாது மெத்தையில் சென்று படுத்துக் கொண்டாள்.

“உன்கிட்ட தான் கனி கேட்கிறேன்?” புவித் அவள் பக்கம் வந்து நின்று அழுத்தமாக வினவினான்.

போர்வையை எடுத்து முகம் வரை இழுத்துப் போர்த்திக் கொண்டாள்.

“அவன் சொன்னதுக்கு நான் என்னடி பண்ணுவேன்” என்று இடையில் கை வைத்து நின்றவன், “உனக்குத்தான் எப்பவும் நான் வேணாம். ஆனால் எனக்கு” என்று நிறுத்தி, “நான் சொன்னாதான் உனக்குத் தெரியுமா என்ன?” என்றான்.

போர்வையை விலக்கிக்கொண்டு வேகமாக எழுந்தமர்ந்த அகனிகா,

“யாருக்குமே நான் இங்க இருக்கிறது… அதுவும் உங்க லைஃப்ல இருக்கிறது பிடிக்கல. அப்புறம் நீங்க மட்டும் ஏன் என்னை உங்ககிட்ட கட்டி வைக்கிறீங்க? எனக்கே நான் உங்க வாழ்க்கையை வீணாக்கிட்டு இருக்கேன்னு தோண வைக்குது. முன்னும் இதைத்தான் சொன்னேன்… இப்பவும் சொல்றேன். என்னை விட்டுடுங்க ப்ளீஸ்” என்றாள்.

முகத்தை மூடி அழுதவளின் கண்ணீர் பல வருடங்களுக்குப் பின்னர் அவனுக்காக வெளிவந்தது.

“ஃபைன்” என்று அவளின் அருகில் அமர்ந்த புவித், “உன்னை நானா கட்டி இழுக்கிறதுக்கு வேல்யூ இல்லை கனி. நீயா வரணும். வரமாட்ட தெரியும். அதான் பிடிச்சு வச்சிருக்கேன். எதுக்காக வரமாட்டேங்கிறன்னும் தெரியும்” என்றவனின் பார்வையில் அர்த்தம் கூர்மைப்பெற்றது.

அவனது விழிகளின் கூர்மையில் அவள் கட்டுண்டிருக்க…

“நான் உன்னை அடமா பிடிச்சு வைக்கவும் காரணம் அதுதான். என்னை நினைச்சாவது நீ உன் முட்டாள்தனமான முடிவிலிருந்து வெளிய வரமாட்டியாங்கிற எண்ணம் தான்” என்றான்.

“மாமா!”

“எனக்குத் தெரியாதுன்னு நினைச்சு எதுவும் செய்யாத கனி. உன் நிழலுக்கான அசைவுக்கு கூட என்னால காரணம் கண்டுபிடிக்க முடியும்” என்ற புவித், “உன்னால இந்த காக்கி ட்ரெஸ் போட்டும் எதுவும் மாத்த முடியல தான்? இந்த சமூகம் இப்படித்தான். இனியாவது புரிஞ்சிக்கிட்டு உனக்குன்னு இருக்க வாழ்க்கையை பாரு” என்றான்.

அவள் கண்ணீர் கன்னம் வழிய,

“உன் வாழ்க்கைக்குள்ளதான் என்னோட வாழ்க்கையும் அடங்கியிருக்கு. இதைப்பத்தி நிறைய பேசியாச்சு. தினம் தினம் இதையே பேசணுமா? நமக்குள்ள இதைத்தாண்டி நிறைய இருக்குடி” என்ற புவித், “நேத்து மொட்டை மாடியில் நீயா உன் மனசை திறந்து பேசவும்… உடனே இல்லைன்னாலும், கொஞ்சம் கொஞ்சமா மாறிடுவ நினைச்சேன். ஆனால்” என்று இருபக்கமும் தலையை ஆட்டியவன், இரு உள்ளங்கைகளாலும் முகத்தை தேய்த்துக் கொண்டவனாக எழுந்து நின்றான்.

“விலகியே இருந்தாலும் நீ என்னோட இருக்கிறது தான் எனக்கு நிம்மதி” என்றவன், “தூரமா போறன்னா என்கிட்ட சொல்லிடு” என்று மறுபக்கம் சென்று படுத்துக்கொண்டான்.

என்ன செய்தாலும் காதலை மட்டுமே காட்டுகின்றான். விலக்கி வைத்து நடப்பது போல் நடிப்பது அவளுக்கும் வேதனை தான். ஆனாலும் அவள் செய்யவிருக்கும் செயல், அவனைத் தனிமைப்படுத்தும். அவளிடமிருந்து அவனை தனித்து நிறுத்தும். அந்நேரம் அவளின்றி அவன் வாழ வேண்டும். அதற்காக மட்டுமே அவளின் இந்த விலகல்.

புவித்திற்கும் அதே காரணம் தான்.

ஆனால் அவனின் மனம் வேண்டுவது, நேரவிருக்கும் தனிமையில் அவனது நாட்கள் அவளின் நெருக்கமான நினைவுகளோடு கழிந்திட வேண்டும். அதற்காகவே தூரம் ஓடுபவளை காதல் சிறையில் கட்டி வைக்கின்றான்.

காரணம் என்னவோ ஒன்றுதான். இருவருக்குமான கோணம் தான் வேறு வேறு. இலக்கு ஒன்று. பாதைகள் வேறு. யாரின் பாதை முடிவை எட்டும் என்பது காலத்தின் கையில்.

கண்கள் மூடி படுத்திருந்தாலும், தான் உறங்காது அவன் உறங்கிட மாட்டானென்று அமைதியாகப் படுத்து கண்களை மூடிக்கொண்டாள்.

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
17
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்