Loading

அத்தியாயம் 11

 

“ப்பா! ப்பா!” என தந்தையை தேடி ஓடி வந்தாள் தேவதர்ஷினி.

 

“அப்பா இன்னும் வரலையே தேவா? எதாவது வேணுமா?” லீலா கேட்க,

 

“ம்மா!” என்றவள் வழித்தாள்.

 

“க்கா! நாங்க ரெண்டு கேம் முடிச்சிட்டோம். இன்னுமா அத்தான்கிட்ட பேசுறீங்க?” என கிண்டல் செய்து கயல்விழி அழைக்க, அஷ்வினி ஓரமாய் பார்த்தாள் தேவதர்ஷினியை.

 

“நான் என் வீட்டுக்கு போணுமே!” பொதுவாய் தேவதர்ஷினி சொல்ல,

 

“உங்க வீட்டுக்கா? அப்போ இது யார் வீடாம்?” என கயல்விழி சிரிக்க,

 

“ம்ம்ஹும்! அதில்ல. நான் அங்கே போகணும். அங்கே.. அங்கே..” என்றவள் தடுமாற்றத்தில்,

 

“கண்ணகி அண்ணியை பாக்கணும்னு இருக்கா?” லீலா சிரித்தபடி கேட்க,

 

“இல்ல சித்தி! கார்த்தி அத்தான்கிட்ட பேசிட்டு இருந்தாங்க அக்கா. திடீர்னு வந்து என் வீட்டுக்கு போகணும் சொல்ராங்க. அப்போ அத்தான் தான் போக சொல்லிருப்பாங்க போல” என்று கயல்விழி கூறினாள்.

 

கேட்டதும் பதறிவிட்டது லீலாவிற்கு. நிஜம் அது தான் என நம்பவே செய்துவிட்டவர், “நீ கார்த்திகிட்ட சொல்லாமலா இங்க வந்த? இப்ப கார்த்தி என்ன சொல்லுச்சு? திட்டிட்டானா?” என லீலா வேகமாய் கேட்க, 

 

“இல்ல ம்மா! கார்த்தித்தான் வந்திருக்காங்க! அதை தான் சொல்ல வந்தேன். அதுக்குள்ள இந்த கயல்.. “ என கயல்விழியை முறைத்த தேவதர்ஷினி,

 

“அத்தான்கிட்ட பைக் இல்ல. வீட்டுல இருந்த பைக்கை மாமா எடுத்துட்டு போய்ட்டாங்களாம்!” என அவளாய் சொல்லிக் கொண்டிருக்க, வெளியில் வண்டி சத்தம் கேட்கவும்,

 

“அப்பா வந்துட்டாங்க ம்மா!” என வெளி வாசலுக்கு ஓடியவள்,

 

“ஒரு நிமிஷம்!” என தனது அறைக்கு ஓடினாள்.

 

அவள் கூறியதை கேட்டபின் தான் நிம்மதியாய் மூச்சுவிட்ட லீலாவிற்கு மகள் அவசரத்தில் சிரிப்பும் வர, உள்ளே நுழைந்த பசுபதியிடம் விவரத்தைக் கூறவும்,

 

“இருந்தாலும் அக்காக்கு இவ்வளவு ஆகாது. வந்து ரெண்டு நாள் தான் ஆச்சு. அத்தான் ஒரு போன்ல கவுத்துட்டாரே! அப்போ நாமல்லாம் தக்காளி தொக்கா?” என கேட்க, அஷ்வினியும் அதில் புன்னகைத்தாள்.

 

“சார்ஜர் வேணுமே! அதான் எடுத்துட்டு வந்தேன். போலாமாப்பா?“ என்றவள் முகம் பார்த்து அத்தனை மகிழ்ச்சி பசுபதிக்குமே.

 

“ப்பா! கிண்டலா சிரிக்கிங்க?” என தேவதர்ஷினி முறைக்க,

 

“இல்லயே பாப்பா. பெருமையா பார்த்தேன்!” என சிரிப்புடனே சொல்ல,

 

“போவோம் ப்பா. என்கிட்ட அவங்க வர்றதா சொல்லவே இல்ல. திடிர்னு வந்திருக்காங்க. உடம்பு சரி இல்லையா என்னனும் தெரியல!” என புலம்பியபடி வாசல் வரை சென்றவள்,

 

“கயல், அஷ் பை! நான் அப்புறம் போன் பண்றேன்!” என சொல்லி வேகமாய் சொல்ல,

 

“இது தேவா தானே லீலா?” என பசுபதி கேட்டு சிரிக்க,

 

“கண்ணு வைக்காதிங்க! சீக்கிரம் போங்க. இல்லைனா நடந்தே போய்ட போறா!” என சொல்லி லீலாவும் சிரித்தபடி வெளியே வந்தார்.

 

அனைத்தையும் மௌனமாய் ஒரு புன்னகையுடன் பார்த்து நின்றுவிட்டு தான் அஷ்வினி தன் வீட்டிற்கு சென்றாள்.

 

அரை மணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்துவிட்ட தேவதர்ஷினிக்கு கார்த்திகைசெல்வனை பார்க்கப் போகும் படபடப்பு மனதை ஆக்கிரமித்தது.

 

திருமணம் அன்று கூட இத்தனை தோன்றவில்லை. அவனுடன் இருந்த மூன்று நாட்களிலும் இவ்வளவு தேடவில்லை. ஏன் பிரிந்திருந்த இத்தனை நாட்களிலும் கூட அவனிடம் அவளே பேசிய போது கூட இப்படி ஒரு உணர்விற்கு ஆட்கொள்ளப்படவில்லை.

 

இன்று உண்டான இந்த புதிவித உணர்வுகள் முற்றிலும் தேவதர்ஷினிக்கு புதிலிலும் புதிது.

 

அவனே அழைத்ததோடு அவன் வரவை சொல்லாமல் சொல்லி இதோ அவளையே வரவைப்பதாய் பேசி என என்னவோ ஒரு அல்லாடல் தேவதர்ஷினி மனதில்.

 

வாசல் ஏறி உள்ளே வந்ததுமே தன்னவனின் தரிசனம் கண்களை நிறைக்க, இதல்களில் தானாய் நிறைந்தது புன்னகை.

 

ஹாலில் அமர்ந்து மொபைலைப் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திகைசெல்வன் வாசலில் நிழலாடவும் திரும்பிப் பார்த்தவனும் சட்டென புன்னகைக்க,

 

அத்தனை கூர்மையாய் ஒரு பார்வை தன் மனைவியிடம். “வா!” என பிரத்யேக அழைப்பும் அவனிடம் இருந்து வந்திருந்தது.

 

“வாங்க மாப்பிள்ளை! எப்ப வந்திங்க?” என்றபடி வந்த பசுபதி மிக தாமதமாய் தான் கார்த்திகைசெல்வன் கவனத்தில் விழுந்தார்.

 

“கொஞ்ச நேரம் முன்ன தான் மாமா! எப்படி இருக்கீங்க?” என அவரிடம் பேச ஆரம்பித்தவன் பார்வை அவ்வபோது தன்மேல் விழுவதைக் கண்டு நிஜமாய் அத்தனை ஆச்சர்யம் தேவதர்ஷினிக்கு.

 

“அத்தை எங்க த்தான்? தனியா இருக்கீங்க?” தேவதர்ஷினி கேட்க,

 

“பின்னாடி இருக்காங்க!” என அவன் சொல்லவும் அங்கே சென்றாள்.

 

“அவங்க வர்றது ஏன் எனக்கு சொல்லல நீங்க? தெரிஞ்சு தான் என்னை அனுப்பி வச்சீங்களா? எத்தனை மணிக்கு வந்தாங்க? வந்ததுமே நீங்க எனக்கு கூப்பிட்டிருக்க வேண்டாமா த்தை?” என கேள்வி கேட்டவளை ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க இயலாமல் மகனிடமே இழுத்து வந்துவிட்டார்.

 

“இந்தா கார்த்தி! நீ இனி ஊருக்கு வர்றது போறது எல்லாம் எனக்கு சொல்றியோ இல்லையோ! இந்த உன் வீட்டுக்காரிக்கு சொல்லிட்டு பண்ணு. கேள்வியா கேட்டு கொலை பண்ணுறா பார்த்துக்க” என கார்த்திகைசெல்வனிடம் கண்ணகி சொல்ல, 

 

“அத்தை! சொல்லாதீங்க! ஷ்ஷ்ஷ். சரி இனி கேட்கல!” என கண்ணகி வாயை அடைக்கப் பார்த்து பாவமாய் தேவதர்ஷினி விழிக்க, சாதாரண பார்வை தான் அவனுடையது.

 

“இங்க வந்துமா தேவா? அங்கே வீட்டுலயும் ஒரு ரவுண்டு எல்லாரையும் கண்ணை கட்ட வச்சுட்டு தான் வந்தா!” என்று பசுபதியும் தன் வீட்டில் நடந்ததை சொல்ல,

 

“ப்பா!” என்றவள் கணவன் முகத்தைப் பார்ப்பதும் அனைவரையும் விழிப்பதும் என திண்டாடி நின்றாள் அவர்களோடு.

 

சிறிது நேரம் இருந்து பேசிவிட்டு கிளம்பிவிட்டார் பசுபதி.

 

“உன் அப்பா தான் எதுவும் வேண்டாம்னு கிளம்பிட்டான். நீ எதாவது சாப்பிடுறியா தேவா?” என மருமகளிடம் கேட்க, அவள் பார்வை கார்த்தியிடம் சென்றது.

 

“அவன் வந்து ஒரு காபி, ரெண்டு முறுக்கு, மூணு கேக் சாப்பிட்டான். உனக்கு வேணுமா வேண்டாமா டி?” என கண்ணகி கேட்க,

 

“ம்மா! ஸ்வீட் வாங்கிட்டு வந்தேன்ல. அதை குடுங்க!”என்றான் கார்த்திகைசெல்வன்.

 

“ஆமா! அதை மறந்துட்டேன் பாரு. மாமன் பொண்ணுக்கு குடுக்க சொல்றியே! கொஞ்சம் முன்ன தான் உன் மாமன் கிளம்பினான். அவனுக்கு குடுக்க சொன்னியா?” என்றும் விளையாட்டாய் கேட்டு வைத்தார்.

 

“இருக்கட்டும் த்தை! இப்ப எதுவும் வேணாம். வர்றதுக்கு முன்னாடி தான் நான், அஷ், கயல் எல்லாரும் காபி, ஸ்னாக்ஸ்னு சாப்பிட்டுட்டே விளையாடிட்டு இருந்தோம். அத்தான் கால் பண்ணவும் அப்படியே வந்துட்டேன்!” என்று சொல்ல,

 

“அப்போ சரி!! என்று உள்ளே சென்றுவிட்டார் கண்ணகி.

 

கார்த்திகைசெல்வன் தேவதர்ஷினி இருவர் மட்டும் அங்கே அமர்ந்திருக்க, தேவா அவனை பார்க்கும் நேரம் அவனும் அவளை தான் பார்த்திருந்தான் என்பதில் புன்னகை கொடுத்தவள் அமைதியாய் நிற்க,

 

“ஏன் நிக்குற? உக்காரு!” என்றான் அவனே!.

 

“எவ்ளோ நாள் லீவ் த்தான்? உடனே கிளம்பிடுவீங்களா?” என்றாள் அமர்ந்தபடி அவனிடம்.

 

“ஹ்ம்! ஒரு ஷார்ட் லீவ். பத்து நாள்கிட்ட!” என்றதும்,

 

“பத்து நாளா?” என சந்தோஷத்தில் கண்களை விரிக்க,

 

“லீவ் பத்து நாள் வரும். பட் இங்க மூணு நாள்” சொல்லி முடிக்கும் முன்,

 

“ஏன்? அப்ப மீதி நாள்?” என உடனே கேட்டிருந்தாள்.

 

“பெங்களூர்” என்று மட்டும் சொல்ல,

 

“ஓஹ்!” என்றவளுக்கு,

 

‘அங்க தனியா ஒரு வாரம் என்ன பண்ணுவாங்களாம்? இங்க இருந்தா தான் என்ன?’ என மனதில் தோன்றாமல் இல்லை.

 

“வீடு பார்க்கணுமே! அன்னைக்கே சொன்னேன். உனக்கு கேட்டுச்சா தெர்ல” என சேர்த்து அவன் சொல்லவும் மீண்டும் புதிதாய் மலர்ந்தது அவள் முகம்.

 

அனைத்தும் அவன் பார்க்க தான். ஒவ்வொரு விஷயத்திற்கும் என அவள் முகபாவனைகள் அவனில் இறங்கிக் கொண்டு தான் இருந்தது.

 

மனதார மீண்டுமாய் ஒரு முறை நண்பன் நந்தனை நினைத்துக் கொண்டான் கார்த்திகைஸ்செல்வன்.

 

ஆயிரத்தெட்டு குழப்பங்கள், கோபம், ஆற்றாமை, ஆதங்கம், எரிச்சல் என திருமணம் முடிந்து பெங்களூர் சென்ற நாட்களில் முழுதாய் வேலையில் கவனத்தை கொண்டு செல்ல முடியாமல் களைத்து தான் போயிந்தான்.

 

நாளாக நாளாக வாழ்வில் மாற்றம் வர இரண்டே காரணம் என ஒன்று தேவதர்ஷினியின் அழைப்புகள். 

 

அவள் அழைக்கும் பொழுதெல்லாம் நெஞ்சில் அப்போது எழும் குற்ற உணர்வுகள் அவனை கொன்று கொன்று எண்ணங்களுக்கு உருவத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தது.

 

மற்றொரு காரணம் தான் இந்த நந்தன். அலுவலகத்தில் இருக்கும் ஒரே தோழன். அவனிடம் முதலில் விஷயத்தை சொல்லவே அவ்வளவு யோசனை.

 

இவனும் தன்னை புரிந்துகொள்ளவில்லை என்றால் என்ற கேள்வியோடு.

 

ஆனாலும் மனதின் அழுத்தம் யாரிடமாவது என்னை சேர்த்துவிடு என கெஞ்சி உயிரை எடுக்கவும் நந்தனிடம் கூறிவிட்டான் கார்த்திகைசெல்வன்.

 

“இப்படி எல்லாம் நடக்கும்னு நீனைக்கவே இல்லை!” என முழுதாய் கூறியதும்,

 

“இப்ப இதுல என்ன பிரச்சனை?” என கேட்டவனை கார்த்தி அப்படி முறைத்தான்.

 

“புரியலையா உனக்கு? எனக்கு கால் பண்ணி அஷ்வினி மறந்துடுன்னு சொல்றா. அப்கோர்ஸ்! மறந்து தான் ஆகணும். ஆனா நான் எப்படி டா தேவாவை அந்த இடத்துல?“ என கண்ணை இறுக்க மூடி திறந்தான் கார்த்திகைசெல்வன்.

 

“ஏன் தேவாவை அந்த இடத்துல வைக்கணும் கார்த்தி? அஷ்வினி உனக்கு லவ்வரா, பிரண்ட்டா இருந்திருக்கலாம். ஆனா மனைவின்ற இடத்துக்கு வர்ல தானே? அது எப்பவும் அந்த தேவாக்கான இடம் தான்” என்ற நந்தனை முறைத்தான் கார்த்திகைசெல்வன்.

 

“நிஜமா கார்த்தி! சொல்லபோனா லவ்வர் விட மனைவிக்கு பவர் ஜாஸ்தி. உனக்கே தெரியுது உன் லைஃப்ல இனி அஷ்வினி இல்லைனு. அப்போ இருக்கவங்களை ஏத்துக்க என்ன பிரச்சனை உனக்கு?” என்று நந்தன் கேட்க,

 

“ஆமாம்!” என்று தான் நீண்ட ஆழ்ந்த சிந்தனைக்கு பின் தோன்றி இருந்தது கார்த்திகைசெல்வனுக்கும்.

 

இப்படி தான் புலம்பும் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஆன அடிப்படை காரணம் முதல் ஆணி வேர் வரை பிரிக்க வல்லவன் தான் நந்தன்.

 

“அப்போ நான் வேதாவை ஏத்துகிட்டா தப்பில்லையா?” என ஒருநாள் நந்தனிடம் தானே சென்று கேட்டிருந்தான்கார்த்திகைசெல்வன்.

 

“அவங்க உன் மனைவி! அவ்வளவு தான் நான் சொல்ல முடியும்” என ஒரு அளவுக்கு மேல் தலையிட விரும்பவில்லை நந்தன்.

 

“த்தான்!” என்ற தேவதர்ஷினி சத்தத்தில் 

 

“சொல்லு தேவா! என கனவில் இருந்து தெளிந்தான் அவன்.

 

“அப்போ நானும் சீக்கிரமா உங்களோட வர்றேனா?” என கேட்டவளைக் கண்டு கண் சிமிட்டி புன்னக்கதவன் பார்வையே அவளுக்கு பதிலானது.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
24
+1
2
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்