Loading

அத்தியாயம் 13

 

“என்ன சொல்றீங்க தாத்தா? அந்த மோதிரம் யாரோடது?” என்று இரா வினவ, “யாரோடதா இருக்கும்னு நீ நினைக்கிற?” என்று பதில் கேள்வி கேட்டார் மாடசாமி.

 

“க்கும், இந்த நேரத்துல குவிஸ் கேட்குதா உங்க ரெண்டு பேருக்கும்?” என்று இராவின் செவியருகே முணுமுணுத்த அத்வைத், அவளின் முறைப்பில் அடங்கி நின்றான்.

 

“ஒருவேளை வசுந்தரா… அவங்களோடதா?” என்று இரா வினவ, அதற்கு பதில் சொல்லாமல், “மோதிரம் எப்படி உங்களுக்கு கிடைச்சது?” என்றார் மாடசாமி.

 

“நான் அந்த கோவில்ல நடந்தப்போ, அந்த மோதிரம் இருந்த எலும்புத்துண்டு எதேச்சையா என் காலுல பட்டது.” என்று அத்வைத் கூற, “மண்ணுக்குள்ள புதைஞ்சு போனது எதேச்சையா எப்படி உன் காலுல படும்?” என்றார் மாடசாமி.

 

“அப்போ அவங்களோட உடலை யாரோ எடுத்திருப்பாங்களோ?” என்று இரா வினவ, அங்கிருந்த சூழல் மேலும் தீவிரமடைந்தது.

 

“ஆனா, அதுக்கு வசுந்தரம்மாவோட உடல் கோவிலுக்குள்ளதான் புதைக்கப்பட்டிருக்குன்னு தெரிஞ்சுருக்கணும். அதைத் தெரிஞ்ச யாரோதான், இதை செஞ்சுருக்கணும்.” என்றார் மாடசாமி.

 

“தாத்தா, மோதிரம் அவங்களோடதுன்னு எப்படி சொல்றீங்க? அதுவுமில்லாம, அது வெளிய வந்தா… அவனோட சக்திகள் எப்படி பெருகும்?” என்று குழப்பத்துடன் வினவினாள் இரா.

 

“உனக்கு வசுந்தராம்மாவோட கதை எவ்ளோ தெரியும்?” என்று மாடசாமி வினவ, “எனக்கு எவ்ளோ சொல்லப்பட்டதோ, அவ்ளோ தெரியும்.” என்றவளின் குரலில் சட்டென்று இறுக்கம் வந்து ஒட்டிக் கொண்டது.

 

அதை மாற்ற வேண்டி, அத்வைத் களத்தில் குதித்தான்.

 

“மந்திரங்களை தவறான வழியில உபயோகப்படுத்துனதால அம்மன் கோச்சுக்கிட்டு ஊரை விட்டுப் போக, வசுந்தரா அம்மனை…” என்று சொல்லிய அத்வைத்தை இடைவெட்டிய மாடசாமியோ, 

 

“அம்மன் சும்மாவெல்லாம் போகல தம்பி. வசுந்தராம்மாவோட குடும்பத்துகிட்ட எக்கச்சக்க மந்திர சக்திகள் இருந்ததுதான், இதுக்கு காரணம்னு, அது காணாம போயிடும்னு சாபம் குடுத்தாங்க. அதனாலதான், மந்திரசக்திகளோட ஆற்றல் குறைஞ்சு போச்சு. சூனியனை அழிக்கணும்னா, அவங்க கிட்ட இருக்க மந்திர சக்திகள் பத்தாதுன்னு, அம்மனை முழுமையா சரணடைஞ்சாங்க வசுந்தராம்மா. அப்போ அம்மனே அவங்களுக்கு குடுத்ததுதான் அந்த பச்சை கல் மோதிரம்.” என்றார் மாடசாமி.

 

அதைக் கேட்ட அத்வைத்திற்கு முழுமையாக நம்ப முடியவில்லை என்றாலும், சூழல் கருதி அமைதி காத்தான்.

 

“அப்போ அந்த மோதிரம், மந்திர சக்தியை அதிகரிக்கக் கூடியதா?” என்று விழிகளைச் சுருக்கி இரா வினவ, ‘ஆம்’ என்று தலையசைத்த மாடசாமி, “இப்போ அது எங்க இருக்கு?” என்று வினவ, மற்ற இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

 

இருவரும் விழியின் வழியே, ‘உன்கிட்ட இல்லையா?’ என்று வினவி, அதற்கான பதிலில் அதிர்ந்தவர்களாக, “அப்போ, அது கடையிலேயே இருக்கா?” என்று ஒருசேரக் கூறினர்.

 

“நல்ல பிள்ளைங்க போங்க. நீங்க போய் அந்த மோதிரத்தை எடுத்துட்டு காட்டுக் கோவிலுக்கு வந்துடுங்க. நான் நேரா அங்க போய் பார்க்கிறேன்.” என்று மாடசாமி கூற, இருவரும் தலையாட்டி ‘கொக்கோ விஸ்பர்ஸ்’ நோக்கி நடந்தனர்.

 

செல்லும் வழியெல்லாம், இருவரும் அவரவரின் யோசனையிலேயே இருந்தனர்.

 

இராவிற்கு, வசுந்தராவைப் பற்றியும் அந்த மோதிரத்தைப் பற்றியும் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது.

 

‘ச்சே, அந்த புக்கை ஒழுங்கா வாசிச்சுருக்கணும்.’ என்று எண்ணிக் கொண்டாள்.

 

அத்வைத்தின் மனமோ, ‘இதெல்லாம் உண்மையா இருக்க எத்தனை பெர்சன்ட் சான்ஸ் இருக்கு? நோ வே! அம்மன் சாபம் குடுக்குறதும், மோதிரம் குடுக்குறதும்… ஏதோ சாமிப்படத்தோட கதையை கேட்குற மாதிரி இருந்துச்சு! ஆனா, இராவோட மேஜிக்… ஒருவேளை காதல் மயக்கத்துல நான் எதுவும் தப்பா பார்த்திருப்பேனோ! இதுல, இவ வேற சாகப் போறேன்னு பேசிட்டு இருக்கா. நானும், அவளைக் காப்பாத்தப் போறேன்னு வாக்கு குடுத்துருக்கேன். யாருக்கிட்ட இருந்து, எப்படி காப்பாத்தப் போறேன்?’ என்ற கேள்விகளால் குழம்பிக் கொண்டிருந்தது.

 

ஒருவழியாக ‘கொக்கோ விஸ்பர்ஸ்’ஸை அடைந்த இருவரும், இரா முன்னர் நின்றிருந்த மேசைக்கு சென்று பார்க்க, அங்கு இராவின் இரத்தத் துளிகள் மட்டுமே மிச்சம் இருந்தன. 

 

உடனே, இருவரும் கீழே மேலே என்று அனைத்து இடங்களிலும் மோதிரத்தை தேட, அது அங்கு இருப்பதற்கான தடயமே இல்லை.

 

“எங்கப் போச்சு?” என்று இருவரும் ஒரே நேரத்தில் வினவ, அதற்கான பதில்தான் கிடைத்த பாடில்லை.

 

“வேற எங்கயும் விழுந்துருக்குமோ?” என்று அத்வைத் யோசனையுடன் வினவ, “சான்ஸே இல்ல. இங்கதான் நான் மோதிரத்தை கையில வச்சு பார்த்துட்டு இருந்தேன். மோதிரத்தோட ஷார்ப்பான எட்ஜ் பட்டு கையில ரத்தம் வந்தப்போ, இங்கதான் வச்சுட்டு வந்தேன்.” என்று இரா உறுதியுடன் கூறினாள்.

 

“அப்போ, வேற யாராவது எடுத்திருக்கணும். எனக்கென்னவோ, அந்த கோவில்ல மோதிரம் எடுக்க டிரை பண்ணி, அதை மிஸ் பண்ணவங்கதான், நம்மகிட்ட மோதிரம் இருக்குறது தெரிஞ்சு, இங்க வந்து எடுத்துட்டுப் போயிருப்பாங்கன்னு தோணுது.” என்று அத்வைத் கூற, விழிகளைச் சுருக்கிய இராவோ, “அவங்க யாரா இருக்கும்?” என்று யோசித்தாள்.

 

அவளின் யோசனையில் வானதியின் முகம் வரவே இல்லை. அவள் பொறாமையினால் அத்தனை தூரம் செல்வாள் என்று யோசித்திருக்கவில்லை இரா.

 

‘யோசித்திருக்க வேண்டுமோ?’ என்று காலம் சென்ற பின் வருந்துவாளா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

 

*****

 

“தேவா, எங்க இருக்க? பூஜைக்கு தேவையான பொருளை எடுத்துட்டேன்.” என்று அவளின் வீட்டிற்குச் செல்லும் வழியில் நடந்து கொண்டே பேசினாள் வானதி.

 

அவளை ஒரு உருவம் பின்தொடர்வதைக் கவனிக்கவில்லை.

 

அவள்தான் வெற்றிபெற்ற மிதப்பில் சுற்றிக் கொண்டிருந்தாளே.

 

இறுதி நொடிகளில் கூட முடிவுகள் மாற்றம் பெறும் என்று அவளுக்குத் தெரியவில்லை போலும்!

 

மறுமுனையில் என்ன சொல்லப்பட்டதோ, “சீக்கிரம் வா. என்னால ரொம்ப நேரம் இதை மறைச்சு வச்சுருக்க முடியாது. இப்பவே என்மேல சந்தேகம் வந்திருக்க வாய்ப்பிருக்கு.” என்ற வானதி, வீட்டிற்குள் அவளுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த பெட்டியினுள் அந்த மோதிரத்தையும் கைக்குட்டையையும் பத்திரப்படுத்தினாள்.

 

அவளைத் தொடர்ந்து வந்த உருவம், அதை மறைந்திருந்து பார்த்ததை அவள் கவனிக்கவில்லை.

 

பின்பு, எதுவும் அறியாததைப் போல மீண்டும் பணியிடத்திற்கு வந்து விட்டாள் வானதி.

 

உள்ளே, இன்னமும் இராவும் அத்வைத்தும் தீவிர சிந்தனையில்தான் இருந்தனர்.

 

அவர்களைப் பார்த்தாலும், கண்டு கொள்ளாததைப் போல நகர, அவளை சந்தேகப் பார்வையுடன் பார்த்த அத்வைத்தோ, “இவ்ளோ நேரம் எங்க போயிருந்த?” என்று வினவினான்.

 

“ஒரு பெர்சனல் வேலையா வெளிய போயிருந்தேன் சார். மேனேஜருக்கு கூப்பிட்டு சொல்லிட்டுதான் போனேன். சிலரை மாதிரி சொல்லாம எல்லாம் நான் போகல.” என்று இராவை வார்த்தைகளால் குத்தினாள்.

 

அப்போதும் அத்வைத்தின் சந்தேகம் தீர்ந்த பாடில்லை.

 

“எப்போ இங்கயிருந்து கிளம்புன?” என்று அடுத்தக் கேள்வியை முன்வைக்க, “சார், அதெல்லாம் நான் மேனேஜருக்கிட்ட சொல்லிட்டேன். உங்ககிட்ட எதுக்கு சொல்லணும்?” என்று பதில் கேள்வி கேட்டாள் வானதி.

 

அத்வைத் ஏதோ சொல்ல வர, அவனைத் தடுத்த இராவோ, “விடுங்க அத்வைத். இவ எடுத்திருக்க மாட்டா.” என்று அவனிடம் முணுமுணுக்க, அதையும் வில்லங்கமாகவே எடுத்துக் கொண்ட வானதியோ, ‘நான் அதுக்கெல்லாம் லாயக்கில்லன்னு சொல்றியா? இருடி, இதுக்காகவே உன்னைப் படுத்துறேன்!’ என்று எண்ணிக் கொண்டாள்.

 

“இப்போ என்ன பண்றது?” என்று இரா வினவ, “இங்க சிசிடிவி இருக்குல்ல?” என்று அத்வைத் வினவ, வானதிக்கு பதற்றம் தொற்றிக் கொண்டது.

 

‘அடச்சை, அதை மறந்துட்டேனே!’ என்று வானதி மனதிற்குள் தன்னைத்தானே நிந்தித்துக் கொள்ள, “இதை எப்படி மறந்தேன்?” என்று கிட்டத்தட்ட அதே கேள்வியை வேறு விதமாகக் கேட்ட இரா, சிசிடிவி காட்சியைக் காண கணினியை இயக்கினாள்.

 

எப்போது வேண்டுமென்றாலும் மாட்டிக் கொள்ளும் நிலையில் இருந்த வானதிக்கு அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கக் கூட முடியவில்லை.

 

ஆனால், ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் அந்த இடத்தை விட்டு அகலாமல், மறைவில் இருந்தபடியே, அவர்கள் செய்வதைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

 

இராவோ துரிதமாக செயல்பட்டு, சிசிடிவி காட்சிகளை ஓடவிட, அத்வைத்தும் தன் கூர்ப்பார்வையை அதில் செலுத்தினான்.

 

இராவின் கரத்திலிருந்து குருதி வழிவதும், அதற்கு அத்வைத் முதலுதவி செய்வதும், பின்னர் அவளை அழைத்துச் செல்வதும் பதிவாகி இருந்தது.

 

இதோ, அடுத்து மோதிரத்தை எடுத்தது யாரென்று தெரியப் போகிறது என்று இருவரும் கவனத்துடன் கணினியையே உற்று நோக்கிக் கொண்டிருக்க, அவர்களின் ஆர்வத்தை உடைப்பது போல, வெள்ளை மற்றும் கருப்பு நிறக் கோடுகள் திரையை ஆக்கிரமித்திருந்தன.

 

இருவருமே அதில் கடுப்பாகி விட, என்ன நடந்தது என்று வானதிக்கு சரிவர தெரியவில்லை என்றாலும், அவர்கள் தேடியது கிடைக்கவில்லை என்பதை அவர்களின் உடல்மொழியைக் கொண்டு அறிந்தவள், மகிழ்ச்சியாகிப் போனாள்.

 

அத்துடன், ‘கடவுள் இருக்கான்!’ என்ற ஆர்ப்பரிப்பு வேறு!

 

“ப்ச், இந்த சிசிடிவி சரியா எப்படி அந்த நேரத்துல ஒர்க்காகாம போகும்?” என்று இரா வினவ, “மோதிரத்தை எடுத்த நபரோட கைங்கரியமா இருக்கலாம்.” என்ற அத்வைத், “இந்த மோதிரத்தைப் பத்தி வேற யாருக்கும் தெரிய வாய்ப்பிருக்கா?” என்று கேட்டான்.

 

“எனக்கே இப்போதான் தெரியுது!” என்று குழப்பத்துடன் இரா கூற, “உங்க குடும்பத்துல இருக்கவங்களுக்கு இதைப் பத்தி தெரிஞ்சுருக்கும்ல!” என்று அத்வைத் கூற, சற்று சிந்தித்தவள், “தெரிஞ்சுருக்கும்தான். ஆனா, இப்படி கோவில்ல புதைச்சவங்களோட உடலை தோண்டி மோதிரத்தை எடுக்க முயற்சிப்பாங்களான்னு தெரியல.” என்றாள்.

 

சிறிது யோசித்த இரா, “ஆனா, ஒருத்தன் இருக்கான்.” என்று கூற, “யாரு அது?” என்று வினவினான் அத்வைத்.

 

பதில் எதுவும் சொல்லாமல் வெளியில் செல்ல, அங்கு அவள் எதிர்பார்த்தவன் அவளின் எதிரே நடந்து வந்து கொண்டிருந்தான்.

 

அவன் முன்னே சென்ற இராவோ, “மோதிரம் எங்க?” என்று வினவ, “என்ன மோதிரம்?” என்று குழப்பத்துடன் வினவினான் எதிரிலிருந்தவன்.

 

அவனை விட குழப்பத்துடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான் அத்வைத்.

 

“ரொம்ப சீரியஸான விஷயம். விளையாடாத.” என்று இரா எச்சரிக்க, “எனக்கென்ன உன்னோட விளையாடணும்னு ஆசையா? ஏதாவது புரியுற மாதிரி பேசினாதான பதில் சொல்ல முடியும்.” என்றவன், அருகிலிருந்த அத்வைத்திடம், “உங்க ஆளு உங்ககிட்ட மோதிரம் கேட்டா, அதுல அர்த்தம் இருக்கு. சும்மா நடந்து போற என்கிட்ட வந்து மோதிரம் கேட்குறா!” என்றான்.

 

அவன் சாட்ஷாத் வாசுவேதான்!

 

“ப்ச், ரக்ஷா கொஞ்சமாச்சும் சீரியஸா பேசு.” என்று இரா எரிச்சலுடன் கூற, “ஹோல்டான்! இவனை நீ என்னன்னு கூப்பிட்ட?” என்று அத்வைத் இராவிடம் வினவ, “ஏன் பொழுதன்னைக்கும் இவனோடதான சுத்துறீங்க? இவன் பெயர் கூட தெரியாதா?” என்றாள் இரா.

 

அத்தை மகன் மீதிருந்த எரிச்சல் அத்வைத்தின் மீதும் பாய்ந்தது போலும்!

 

அத்வைத் மற்றவனைக் காண, அவனோ தோளைக் குலுக்கிக் கொண்டு, “என் வேலை அப்படி பாஸ்.” என்றான்.

 

“ஒழுங்கா பெயரை சொல்லிடு.” என்று அத்வைத் மிரட்ட, “அதான் உங்க ஆளு சொல்லிட்டாளே… ரக்ஷன் – அதுதான் என் பெயர்.” என்றான் அவன்.

 

“உங்க பஞ்சாயத்தை அப்புறம் வச்சுக்கோங்க. முதல்ல மோதிரம் எங்கன்னு சொல்லுடா.” என்று இரா ரக்ஷனை மிரட்ட, “ஒரு போலீஸ்காரன்னு கூட பார்க்காம, ரெண்டு பேரும் மிரட்டிட்டு இருக்கீங்க… இதெல்லாம் நல்லா இல்ல பார்த்துக்கோங்க.” என்றான் ரக்ஷன்.

 

‘போலீஸா? அப்புறம் எதுக்கு ரெஸ்டாரண்ட்ல வேலை பார்த்துட்டு இருந்தான்?’ என்று யோசித்த அத்வைத்திற்கு அப்போதுதான் அது ஞாபகம் வந்தது.

 

வாசு என்கிற ரக்ஷன், அங்கு வேலை செய்வதாக சொல்லவே இல்லை. மேசையைத் துடைத்ததை வைத்து, அத்வைத்தேதான் அப்படி முடிவு செய்து கொண்டான்.

 

வேலையை விட்டுவிட்டு அவனுடன் சுற்றும்போதாவது கண்டு கொண்டிருக்க வேண்டும்.

 

காதல் மயக்கத்தில் இருந்த அத்வைத்திற்கு அது உரைக்கவே இல்லை!

 

‘அட்லீஸ்ட், சாரதி அங்கிள் ‘வாசுவா’ன்னு சந்தேகமாக கேட்கும்போதே சுதாரிச்சுருக்கணும்!’ என்று எண்ணியவனோ, ‘எதுக்கு வாசுன்னு ஏமாத்தினான்னு கேட்கணும்.’ என்று மற்ற இருவரில் கவனம் செலுத்த, அங்கோ போர் மூள்வதற்கான சூழல் நிலவுவது போல, அத்தனை உக்கிரமாக இருந்தது.

 

“அட இரா, என்னை நம்ப மாட்டியா? நான் எதுக்கு மோதிரத்தை எடுக்கணும்? எனக்கும் உங்க குடும்பத்துக்கும்தான் சம்பந்தமே இல்லன்னு விலகிட்டேன்னே.” என்று ரக்ஷன் கூற, “விலகியிருக்கவன் எதுக்குடா என்னை வேவு பார்க்க இங்க வந்த?” என்றாள் இரா.

 

‘இவளை வேவு பார்க்கத்தான் வந்தானா? ஆமா, இவன் ஏதோ ஒன் சைட் லவ்வுன்னு புலம்பிட்டு இருந்தானே… அது?’ என்று அத்வைத் நினைக்க, ‘யோசிக்க எத்தனையோ இருக்கும்போது, உனக்கு அவனோட ஒன் சைட் லவ்வுதான் ஞாபகம் வருதோ!’ என்றது அவனின் மனம்.

 

“அட, நான் எதுக்கு உன்னை வேவு பார்க்கப் போறேன்? நான் இந்த ஏரியா போலீஸாக்கும். இங்க நடக்கிறது குற்றங்களை தடுக்க வேண்டாமா? அதுக்குத்தான் ஆதாரங்களை சேகரிக்க மஃப்டில வந்தேன்.” என்றான் ரக்ஷன்.

 

“பெயருக்கு ஒரு போலீஸ் ஸ்டேஷன், அதுக்கு ஒரு இன்ஸ்பெக்டர் வேற! இதுல தனியா வந்து ஆதாரம் சேகரிக்கப் போறீயா?” என்று இரா கேலி செய்ய, “இரு இரு… அப்போ எங்களுக்கு வந்த அனானிமஸ் கால் உன்னோடதுதானா?” என்றான் அத்வைத்.

 

இடைவரை குனிந்த ரக்ஷனோ, “அடியேன்தான்! நான் மட்டும் தனி ஒருவனா ஏதாவது செய்ய, இதென்ன படமா? அதான், துணைக்கு ஆளை வரச் சொன்னேன்.” என்றான் தோளைக் குலுக்கியபடி.

 

“நான் வந்ததுமே என்கிட்ட உண்மையை சொல்லியிருக்க வேண்டியதுதான?” என்று அத்வைத் வினவ, “உங்களோட கேபாசிட்டி என்னன்னு எனக்கு தெரிய வேண்டாமா? சும்மா பெயருக்கு வந்து பார்த்துட்டுப் போற ரிப்போர்ட்டரா இருந்தா, நான் எப்படி என்னோட சீக்ரெட் இன்வெஸ்டிகேஷனை ஷேர் பண்றதாம்?” என்று பதில் கேள்வி கேட்டான் ரக்ஷன்.

 

“ஓஹோ, அப்போ உண்மையை எப்போ சொல்றதா இருந்த?” என்று அத்வைத் இடையில் கைவைத்து கேட்க, “நீங்க எப்போ லவ் மூட்ல இருந்து ஒர்க் மோடுக்கு வரீங்களோ, அப்போ சொல்லலாம்னு நினைச்சேன்.” என்றான் ரக்ஷன்.

 

“ப்ச், உங்க பிரச்சனையை அப்புறம் பேசிக்கோங்க. இப்போ ஒழுங்கா உண்மையை சொல்லு, மோதிரம் எங்க?” என்று மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள் இரா.

 

“மோதிரத்தை நான் எடுக்கல. ஆனா, எடுத்த ஆள் யாருன்னு தெரியும்…” என்று இடைவெளி விட்ட ரக்ஷனைப் புருவம் இடுங்கப் பார்த்தாள் இரா.

 

அவனோ அதைக் கண்டு கொள்ளாமல், “அதை நான் உனக்கு சொல்லணும்னா, நான் சொல்றதை நீ கேட்கணும்.” என்று அவன் கூற, அது என்னவென்று தெரிவதற்கு முன்பே, “முடியாது!” என்று மறுத்திருந்தாள் இரா.

 

“அப்போ நானும் அது யாருன்னு சொல்ல மாட்டேன்.” என்றான் ரக்ஷன்.

 

இவர்களின் சண்டையை வேடிக்கை பார்த்த அத்வைத்தோ, ‘இது எங்க போய் முடியுமோ!’ என்று மானசீகமாக தலையில் கைவைத்து நின்று விட்டான்.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
11
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment