Loading

அத்தியாயம் 10

 

“கார்த்தி?” என அவன் வரவை எதிர்பாராத கண்ணகி அதிசயமாய் முதலில் பார்த்து வைத்தவர் பின் ஆராய்ச்சி யாய் பார்த்து,

 

“உடம்புக்கு என்னவும் பண்ணுதா கார்த்தி. நல்லாருக்கியா நீ?” என அருகே வந்து மகனை தொட்டுப் பார்த்து உறுதி செய்ய, அன்னையின் செயலில் சிறிதாய் புன்னகை கார்த்திகைசெல்வனிடம்.

 

இவ்வளவு சிறிய இடைவெளியில் எல்லாம் அவன் ஊர் பக்கம் வந்ததே கிடையாது. ஒரு மாதத்திற்குள் வந்திருக்கிறானே!

 

மனைவியைப் பார்க்க வந்திருப்பான் என நினைக்கும் அளவுக்கு அவர்கள் உறவில் இன்னும் பலப்படவில்லை எனவும் அறிந்தவர் இந்த வரவை என்னவென்று புரிந்து கொள்ள என தெரியாமல் தடுமாறினார்.

 

“ரெண்டு நாள் முன்னாடி கூட பேசினியே கார்த்தி. அப்ப கூட வர்றதா சொல்லலையே!” என மீண்டும் அதையே கேட்க,

 

“ம்மா! ப்ராஜெக்ட் ஒண்ணு முடிச்சேன். சின்னதா லீவ் கிடைச்சது. அதான் வந்தேன்!” என்றவன் ஹாலில் அமர்ந்து சுற்றிலும் கண்டான்.

 

“அப்போ நிஜமா சும்மா தான் வந்தியா?” என்ற கண்ணகி மகன் முறைக்கவும்,

 

“எதை தான் டா சொல்லிட்டு செய்வ நீ? என்னவோன்னு பயந்துட்டேன்!” என்றார்.

 

“உன்னை எனக்கே புரிஞ்சிக்க முடியல. தேவா என்ன தான் பண்ண போறாளோ!” என்றவர்,

 

“ஆமா வீடு பார்த்தியா?” என கேட்க,

 

“பார்த்தேன் ம்மா. இன்னும் செட் ஆகல. இப்ப நான் இருக்குற பிளேஸ் ஆபீஸ்லேர்ந்து தூரம். அதான் ஆபீஸ் பக்கத்துல பார்த்துட்டு இருக்கேன்!” என்றான்.

 

“அப்போ மறுபடியும் வந்து தான் கூட்டிட்டு போவியா? இப்பவே வந்தா மறுபடி ஒரு மாசத்துல லீவ் தருவாங்களா?” கண்ணகி கேட்க,

 

“அதெல்லாம் தருவாங்க” என்றவன்,

 

“ஆமா! நீங்க எல்லாரும் வர்றதா சொன்னிங்க? நீங்க எல்லாரும் வந்தா நான் எதுக்கு லீவ் போட்டு வரணும். நீங்களே வர வேண்டியது தானே?” என்றவன் பேச்சை கேட்டபடி, அவனுக்கு சாப்பிட எடுத்து வர சமையலறை சென்றவர்,

 

“ஆமா! நாங்க மாசத்துக்கு நாலு நாள் பெங்களூருக்கும் இங்கேயும் சுத்துறோம் பாரு! நினைச்சதும் நாங்களே வர்றதுக்கு!” என்றவர்,

 

“உன் அப்பா மாமன்களை நம்பி எல்லாம் ட்ரெயின்ல எங்களால அவ்வளவு தூரம் வர முடியாது. நீ தான் வந்து கூட்டிட்டு போனும் பார்த்துக்க” என்றார் காபியோடு சிறு உணவையும் கொடுத்து.

 

“இப்ப தான் நிம்மதியா இருக்கு டா. கல்யாணம் ஆன கையோட நீ கிளம்பி போனதும் ரொம்ப பயந்துட்டேன். தேவா பாவம். சின்ன பொண்ணு. அவ அம்மா சொன்னதும் அந்த கல்யாணத்துக்கு சரின்னா. அது இல்ல இவன் தான் கல்யாணம் பண்ணிக்கோன்னு நான் சொன்னதும் இதுக்கும் சரின்னா. அவளுக்குன்னு தனியா எதுவும் நினைக்காத பொண்ணு. நல்லா பார்த்துக்கோ என்ன?” என மகனிடம் கெஞ்சலை வார்த்தைகள் மூலம் கேட்க, பதில் சொல்லவில்லை அவன். 

 

வீட்டை சுற்றிலும் பார்வையும் ஓடிக் கொண்டு தான் இருந்தது அவனுக்கு.

 

இங்கிருந்து திருமணம் முடிந்து பெங்களூர் சென்ற இருபத்து நாட்களும் அவனுக்கு தேவையாய் இருந்தது யோசிக்க.

 

நடந்ததை அப்படியே ஏற்று கொள்ள முடிந்ததா என்றால் அவனுக்கும் அதில் தெளிவில்லை தான். ஆனாலும் திருமணம் என்ற ஒன்று அனைவரின் விருப்பத்தின் பேரில் முடிந்துவிட்ட பின் அதை மாற்றிட நினைக்கும் சுயநலக்காரன் எல்லாம் இல்லை கார்த்திகைசெல்வன்.

 

இது தான் என்றும் வாழ்க்கையின் முக்கியமான தருணம் என்றும் தெரிந்திருக்க, அடுத்த என்ன என்பதை ஒவ்வொருவராய் அழைத்து ‘தேவாவை எப்போது கூட்டி செல்ல இருக்கிறாய்?’ என மாற்றி மாற்றி அழைத்ததிலேயே புரிந்து கொண்டவன் அவனும் அடுத்த கட்டத்திற்கு செல்ல தயாராகிவிட்டான்.

 

இடையில் அவன் அறியாத ஒன்றாய் தேவதர்ஷினியும் ஒரு காரணம் என்றே சொல்லலாம்.

 

அவன் அழைக்காமல் நினைக்காமல் தினம் தினம் அழைத்து பேசி அவன் என்ன செய்கிறான் என தெரிந்து கொள்ள அவளே முயற்சித்தது கூட ஒரு வகை காரணம் தான்.

 

முதல் நாள் அஷ்வினி கார்த்திகைசெல்வனுக்கு அழைத்து பேசியவள் அடுத்து அவன் எண்ணை தன் அலைபேசியில் இருந்து அழித்துவிட்டாள். கார்த்திகைசெல்வன் அதையெல்லாம் கவனிக்கவில்லை.

 

உறவுகள் என்ற தலைப்பில் இவர்கள் அனைவரும் வாட்சப் செயலியில் ஓரு குழுவில் ஒன்றாய் இருக்க தான் செய்கின்றனர்.

 

நிரஞ்சன் தான் எதாவது அனுப்பிக்கொண்டிருப்பான். இப்பொழுது கொஞ்ச நாளாய் அந்த குழுவும் அமைதியாய் தான் இருக்கிறது.

 

“ஏன் டா கார்த்தி! பேசாம ஒரு கார் வாங்கிறேன்! உனக்கும் வந்து போக வசதியா இருக்கும்ல? தேவாவை கூட்டிட்டு போய்ட்டா அடுத்து அப்பப்ப நீங்க நினைச்ச நேரம் வந்து போகலாம் பாரு!” கண்ணகி சொல்ல, அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

 

தேவாவை அழைத்து செல்வதாய் சொல்லியதில் இருந்து இப்படி தான் எதாவது ஒரு திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தில்.

 

“வாங்கலாம் ம்மா. வாங்கணும். நானுமே நினைச்சேன். பார்க்கலாம்!” என்றான் இன்னுமா தன் சத்தம் அறையில் கேட்கவில்லை என்ற நினைப்போடு.

 

தேவதர்ஷினி அவள் வீட்டிற்கு சென்றது இன்னும் கார்த்திகைசெல்வனுக்கு தெரிந்திருக்கவில்லை.

 

இடையே இரண்டு நாட்களாய் அவள் அழைக்கவும் இல்லை. அன்று தானே அழைத்து அவளிடம் பேசியது தான். 

 

‘இன்று என்ன அழைப்பு வரவில்லை?’ என இரண்டு நாட்களுமே நினைத்திருக்க, கொஞ்சம் வேலையும் குறைந்திருந்ததில் கிளம்பி வந்துவிட்டான்.

 

அன்று வேகவேகமாய் கிளம்பி சென்றதும் இப்போது ஒரு வகையில் மனதை என்னவோ செய்ய, இது ஒரு வகை சமாதானப்படுத்தும் விதம் தான் அவனுக்கு.

 

“ஆனா நீ சொல்லிட்டு வந்திருக்கலாம் கார்த்தி. இப்ப பாரு அவ இங்க இல்ல!” என்றதும்,

 

“இல்லையா?” என அதிர்ச்சியாய் அவன் கேட்டுவிட,

 

“ஆமா! ஏன் உன்கிட்ட சொல்லலயா தேவா?” என்றார் உடனேயே.

 

“நீ பேசலையா தேவாகிட்ட?” அங்கே சென்றதை இவனிடம் அவள் கூறவில்லை என்றால் இருவருக்குள்ளும் எதுவும் பிரச்சனையோ? அதனால் தான் இவன் இவ்வளவு தூரம் வந்திருக்கிறானோ என்றெல்லாம் நினைக்க ஆரம்பித்துவிட்டது கண்ணகியின் மனம்.

 

“இல்ல சொன்னா. நான் தான் சரியா கவனிக்கல.” சொல்ல வேண்டுமே என ஒன்றை சொல்லி வைத்தான்.

 

“என்னவோ போ டா! கல்யாணமானதும் நீ அங்க போய்ட்ட. இப்ப அவ அம்மா வீட்டுக்கு போய்ட்டா. நல்லா விளையாடுறிங்க கண்ணாமூச்சி!” என்று சொல்லி அவர் சிரிக்க, அப்படியே அமைதியாகிவிட்டான் கார்த்திகைசெல்வன்.

 

“இப்பவும் ஒண்ணுமில்ல. சாப்பாடு வைக்குறேன். குளிச்சு தயாராகி வா. சாப்பிட்டு போய் தேவாவை கூட்டிட்டு வந்துடு!” என்று சொல்ல, அது இன்னுமே கஷ்டம் தான் கார்த்திகைசெல்வனுக்கு.

 

என்ன தான் இது தான் தன் வாழ்க்கை என அதன்வழி பயணிக்க முடிவெடுத்துவிட்டாலும் அஷ்வினியை சந்திக்க இன்னுமே அவன் மனம் சக்தி கொள்ளவில்லை.

 

நடக்கும் அனைத்தும் ஒரு வகையில் அஷ்வினி விட்டு கொடுத்த ஒரே காரணத்தால் என்ற எண்ணமும் அவன் மனதில் பதிந்துவிட்டிருக்க, அவள் இருக்கும் இடத்தில் சென்று தன் மனைவியை பார்க்க நினைப்பது அவனுள் ஒரு சிறு கண்ணுக்கு தெரியாத ஒருவித மன அழுத்தத்தை விளைவிக்க, சோர்வாய் உணர்ந்தவன் தன் அறைக்கு சென்றான்.

 

தன் அறையில் டேபிளில் சின்னதாய் புதிதாய் முளைத்திருந்தது தேவதர்ஷினியும் தானுமாய் என திருமணம் நடந்த உடன் எடுத்த முதல் புகைப்படம்.

 

அதை கையில் எடுத்துப் பார்த்தவன் அறையில் வேறு எந்த வித்தியாசத்தையும் உணரவில்லை அப்போது.

 

“கார்த்தி! சீக்கிரம் வா! தேவாக்கு நான் போன் பண்ணி சொல்றேன் நீ வந்துட்டன்னு. அப்ப தான் கிளம்பி இருப்பா. நீ கூட்டிட்டு வர சரியா இருக்கும்” என அன்னை கீழே இருந்து சத்தமிட, வேகமாய் மொபைலை எடுத்து தானே அவள் எண்ணிற்கு அழைத்தான்.

 

“சொல்லுங்க த்தான்!” என அழைத்தவள் முகத்தில் புன்னகையை இங்கிருந்தே உணர முடிந்தது கார்த்திகைசெல்வனால்.

 

“க்கா! நீங்க தப்பு தப்பா விளையாடுறீங்க. அஷ்! நீ சொல்லு. தப்பு தானே?” என்று கயலின் சத்தமும் கேட்டது அவனுக்கு.

 

“இப்ப பரவால்லையா தேவா?” கணவன் கேட்க,

 

“ஹ்ம் சரியாகிடுச்சு த்தான்!” என்றவள் மகிழ்ச்சியும் அந்த நிமிட அவன் கேள்வியில் கூடிக் கொண்டு தான் இருந்தது.

 

“அஷ்வினி, கயலுக்கு லீவ். அதான் சும்மா விளையாடிட்டு இருக்கோம்!” அவன் கேட்காமலே தேவதர்ஷினி கூற,

 

“ஓஹ்! அதான் நாள் போறதே தெரிலயா? அம்மா வீட்டுல இருக்க போல?” கார்த்திகைசெல்வன் கேட்க,

 

“த்தான்!” என்றவளுக்கு அப்போது தான் அவனுக்கு தான் அழைக்கவில்லை என்பதில் வார்த்தைகள் கழன்று கொண்டது.

 

அன்னை வீட்டிற்கு வந்து விட்டாலும் முதல் நாள் சோர்வில் படுத்தே தான் இருந்தாள். இரண்டாம் நாள் பள்ளிக்கு சென்று வந்து கயல்விழியுடன் கதை பேசி நேரம் நகர்ந்தது.

 

மூன்றாம் நாள் இன்று விடுமுறை என்பதால் தான் அனைவரும் அமர்ந்து பேசி சிரித்து என நேரம் இலகுவாய் நகர்ந்து கொண்டிருந்தது.

 

முழுதாய் குணமானதும் தானே அழைத்து பேச தான் நினைத்தாலே தவிர்த்து அவன் அழைப்பான் என்று காத்திருக்கவெல்லாம் இல்லை.

 

இன்று அவனாய் அழைத்ததும் ஒரு மகிழ்ச்சி தான். எதிர்பாரா அந்த அழைப்பில்.

 

“அம்மா கூப்பிட்டாங்க. அதான் வந்தேன் த்தான். நாளைக்கு சண்டேல்ல. லீவ் தான். இங்க இருந்துட்டு நாளன்னைக்கு நம்ம வீட்டுக்கு போய்டுவேன்” என்றாள் அஷ்வினி கயல்விழியிடம் இருந்து தூரமாய் வந்து.

 

“ஓஹ்!” என்றவன் எப்படி கூறுவது என விழிக்க, 

 

“கார்த்தி! தேவாக்கு போன் போகல டா. நீ பண்ணி குடேன்!” என்ற கண்ணகி சத்தத்தில் தேவதர்ஷினி அங்கே புரியாமல் விழிக்க,

 

“தேவா நாளைக்கு அங்க இருந்துட்டு நாளன்னைக்கு வர்றாளாம் ம்மா!” என்று சொல்லிக் கொண்டே தன் கையில் இருந்த அலைபேசியை அவருக்கு நீட்டி இருந்தான் கார்த்தி.

 

ஒரு நிமிடம் முழுதாய் தேவைப்பட்டது அங்கே நடப்பது அவளுக்கு புரிய. 

 

‘அத்தான் வந்திருக்காங்களா?’ என விழி விரித்தவள் பேசும் முன்,

 

“அப்படியா? அப்போ நீ வேனா அங்க போய் அவ கூட இருந்துட்டு வாயேன்?” என்று கண்ணகி சொல்ல,

 

“ம்மா!” என அழைத்து கார்த்திகைசெல்வன் முறைத்தான் அவரை.

 

“தேவா!” என அவனை கண்டு கொள்ளாதவர் போனில் அழைக்க,

 

“அத்தான் வந்திருக்காங்களா த்தை? எப்ப வந்தாங்க? என்கிட்ட சொல்லவே இல்லை நீங்க?” என அடுத்தடுத்த கேள்விகள் சந்தோசமாய் அவளிடம்.

 

“தேவா! இப்ப தான் அவன் வந்து அரை மணி நேரம் இருக்கும்” என்று அவர் சொல்ல,

 

“ம்மா! பைக் இல்லையே வீட்டுல! அப்பா எடுத்துட்டு போய்ட்டாங்களா?” என்ற கார்த்தியின் சொல் புரிந்தோ இல்லை தனக்கே தோன்றியதோ அடுத்த ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் பசுபதியுடன் கணவனை தேடி வந்திருந்தாள் தேவதர்ஷினி.

 

தொடரும்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
20
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்