Loading

அத்தியாயம் 10

அரசுப் பொது மருத்துவமனை.

“பர்ஸ்ட் டே எப்படி இருந்தது?”

நிரூப் கேட்க, மிதுன் அளவாகப் புன்னகைத்தான்.

“இடம் தான் மாறியிருக்கு” என்ற மிதுன், “ஜார்ஜ் ரிப்போர்ட் என்னை பார்க்க சொல்லியிருக்காங்க” என்றான்.

“ம்ம்” என்ற நிரூப், “குணசீலன் அண்ட் ஜார்ஜ்… ரெண்டு பேரோட டெத்தும் ஒரே மாதிரி தான். நீ ரீ எக்ஸாமின் பண்ணும்னா பண்ணிக்கோ” என்றான்.

“ஒன்ஸ் நானும் செக் பண்ணிட்டா நல்லது” என்ற மிதுன், “ரெண்டு பேரோட ரிப்போர்ட் நான் பார்க்கலாமா?” எனக் கேட்டான்.

“ரிப்போர்ட்ஸ் காப்பி சிஸ்டம்ல இருக்கும். பேப்பர்ஸ் அகாகிட்ட கொடுத்தாச்சு” என்றான்.

“ஹ்ம்ம்… நான் பார்த்துக்கிறேன்” என்ற நிரூப், “இன்னைக்கு நைட் பார்ட்டி இருக்கு” என்றான்.

“ஜானவிக்கிட்ட கேட்டு சொல்றேன்டா” என்று நிரூப் கூறியதும், மிதுனிடம் கேலிப் புன்னகை.

“கல்யாணம் பண்ணிப்பாரு… அப்புறம் தெரியும்” என்ற நிரூப், மிதுனின் முகம் நொடியில் மாற்றம் கொண்டு, கடுமையின் சாயலை பிரதிபலித்த பின்னரே, தான் சொல்லியதை உணர்ந்தான்.

“சாரி மச்சான். டிடின்ட் மீன்” என்றான்.

“இட்ஸ் ஓகே. லீவ் இட்” என்ற மிதுன், “நம்ம ஐந்து பேரும் ஒண்ணா சேர்ந்திருந்து ரொம்ப வருஷமாச்சு. சோ கண்டிப்பா நைட் வர” என்றான்.

“ஷ்யூர் டா” என்ற நிரூப் அடுத்து என்ன பேசுவதென்று மௌனித்து நிற்க,

“எனக்கு ஜெனரல் வார்டு ரவுண்ட்ஸ் இருக்குடா… பார்ப்போம்” என்று மிதுன் நகர்ந்தான்.

செல்லும் அவனை பார்த்து நின்றிருந்த மிதுனுக்கு மனம் கனத்தது. உடன் புவித்தின் குடும்ப அமைப்பும்.

எப்படியிருந்த குடும்பம். நேர்ந்துவிட்ட அனர்த்தத்தின் தடம் பல வருடங்கள் சென்றும் அக்குடும்பத்தின் நிலையை அதனுள் கட்டி வைத்திருக்கிறது.

அவர்களது பழைய சந்தோஷத்தின் சுவட்டைத் தேடி நிரூப்பின் மனம் அலைந்திட, ஜானவியின் அழைப்பு அவனை நிகழ் மீட்டது.

“மிதுன் வந்திருக்கிறதா ஆருஷ் சொன்னான்.”

நிரூப் அழைப்பை ஏற்றதும் ஜானவி முதலில் கேட்டது இதைத்தான்.

“ம்ம்… இன்னைக்கு தான் ஜாயின் பண்ணியிருக்கான்” என்ற நிரூப், “காலம் எல்லாத்தையும் மாத்தும், மறக்க வைக்கும் சொல்றதெல்லாம் சும்மா பேச்சுக்குத்தான்னு தோணுது ஜானு” என்றான்.

“ச்சூ… என்னதிது நீயும் இப்படியிருந்தா, அவனை மாத்தணும். அவனுக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கணும் நினைச்சு ஆருஷ் அவனை இங்க வரவச்சதுக்கு மதிப்பே இல்லாம போயிடும். இனி அதிக நேரம் அவனோட நீதான் இருக்கப்போற” என்றாள்.

“ஹேய் ஜானுமா” என்ற நிரூப், “நடக்குற விஷயமா இது? பல வருஷமா அவன் என்கிட்ட பேசவே இல்லை. ஆருஷ் நினைச்சே முடியல. நான் எப்படி?” என்றான்.

“அவன் உன் பிரண்ட் தான? அவன் நல்லாயிருக்கணும் எண்ணமில்லையா உனக்கு?” என்ற ஜானு, “நீ மட்டும் பொண்டாட்டி, குழந்தைன்னு ஜாலியா இருக்க” என்றாள்.

“ஹேய்…” என்றவன், “அதுக்குத்தான் சொல்றேன். அவனாவது சிங்கிளா நல்லாயிருக்கட்டும்” என்றான்.

“வீட்டுக்குத்தான வரணும். வா பேசிக்கிறேன் உன்னை” என்று ஜானவி வைத்திட, “இதுக்குத்தான் சொன்னேன்” என்று சிரித்தவன்,  “உண்மையை சொன்னா யார் நம்புறா?” என்று புலம்பினான்.

“என்னடா தனியா நின்னு புலம்பிட்டு இருக்க” என்று அவனின் முதுகில் தட்டினான் நிரூப்.

“நீ ரவுண்ட்ஸ் போகலையா?”

“போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து கால் வந்ததுன்னு ஹெட் நர்ஸ் இன்ஃபார்ம் பண்ணாங்க. உனக்கு டியூட்டி முடிஞ்சுதே. சோ, நான் போகணும்” என்றான் மிதுன்.

“ஓகே… ஓகே… என்ஜாய்.”

“வந்த அன்னைக்கே டெத் கேஸ். இதுல என்ஜாய் பண்ண என்ன மேன் இருக்கு” என்ற மிதுன், “ஓகே பைஃ” என்று நகர,

“உன் தங்கச்சி தான் வருவா. இப்போ பேசித்தானே ஆகணும்” என்றான் நிரூப்.

“பெர்சனல் வேற, புரொபஷனல் வேற” என்று நின்று தலையை மட்டும் திருப்பி உரைத்துவிட்டு வேக எட்டுக்கள் வைத்து கிளம்பியிருந்தான் மிதுன்.

பார்த்து நின்றிருந்த நிரூப்புக்கு மட்டுமல்ல, அவனுக்கு முதுகுக்காட்டி நடந்துகொண்டிருந்த மிதுனுக்குமே வருத்தம் மேலோங்கியது.

கடந்திட நினைத்தும் அணு அணுவாய் கொள்ளும் வதை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களே அதன் பொருள் உரித்தானது.
_______________________________

வகுப்பு முடிந்து பணியாளர்கள் அறை நோக்கி வந்துகொண்டிருந்த புவித், தான் வகுப்பாசிரியராக இருக்கும் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவு வகுப்பை கடக்கையில், நித்யா என்கிற மாணவி மட்டும் தனித்து அமர்ந்திருப்பதை கண்டு யோசனையாகினான்.

சன்னல் வழி அவளை பார்த்து கடந்திருந்தவனுக்கு அவள் கண்களை கசக்குவது தெளிவாக கருத்தில் பதிந்திருந்தது.

உணவு இடைவேளை நேரம் என்பதால் அனைவரும் கேன்டீன் சென்றிருக்க, இவள் மட்டும் ஏன் தனித்திருக்கிறாள் என நினைத்த போதும், தனியாக இருக்கும் மாணவியிடம் சென்று பேசுவது சரியானதல்ல எனும் கண்ணோட்டத்தில் தனக்கான அறைக்கு வந்திருந்தான்.

ஜானவி அப்போதுதான் உணவினை முடித்து, வகுப்புத் தேர்வுத்தாள்களை திருத்திக் கொண்டிருந்தாள்.

“என்ன ஆருஷ் இவ்வளவு லேட்டா வர?” ஜானவி கேட்க,

“ஃபைனல் இயர் பிராக்டிகல் கிளாஸ் ஜானு… முடிய டைம் ஆகிடுச்சு” என்ற புவித், “சாப்டியா கனி?” என மனைவிக்கு தகவல் அனுப்பிவிட்டு உணவு உண்ண அமர்ந்தான்.

“என்ன ஆருஷ்… என்ன சாப்பாடு?” என்று வந்த அவனது துறையைச் சேர்ந்த காயத்ரி பேராசிரியர், “உனக்கு பிடிக்குமே ஆவக்கா. இன்னைக்கு கொண்டு வந்தேன்” என்று அவன் முன்பு குட்டி டப்பா ஒன்றை திறந்து வைத்தார்.

உணவில் கை வைக்கச் சென்றவன், அவர் ஆவக்காவை முன் வைத்ததும், அலைபேசியில் படம் பிடித்து மனைவிக்கு அனுப்பி வைத்தான். முன்னர் அவன் அனுப்பிய தகவலே இன்னும் பார்க்கப்படாமல் இருந்தது.

“நினைச்சேன் இதை செய்வீங்கன்னு” என்று அவனது செயலில் சிரித்தாள் ஜானவி.

“கனிக்கு ரொம்ப பிடிக்குமே இது. சும்மா டெம்ப்ட் பண்ண” என்று குறும்பாய் முறுவலித்தான் புவித்.

“அவள் ஆகிட்டாலும்” என்ற ஜானவி, “எனக்கு இல்லையா மேம்?” என்றாள்.

“நான் வரதுக்கு முன்ன உன்னை யார் சாப்பிட சொன்னது?” என்ற காயத்ரி, “நாளைக்கு கொண்டு வரேன்” என்றார்.

“என்னயிருந்தாலும் உங்களுக்கு ஆருஷ் சார் தான் ஸ்பெஷல்” என்ற ஜானவியிடம், “அப்படித்தான் வச்சுக்கோயேன் ஜானு” என்ற காயத்ரிக்கு புவித் மகன் போன்று.

ஒருமுறை கல்லூரியில் வயதின் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரித்து அவர் மயங்கியிருக்க, ஆருஷ் தான் உடனிருந்து பார்த்துக்கொண்டான். அத்தருணத்திலிருந்து பிள்ளையில்லாத அவருக்கு பிள்ளையாகிப்போனான்.

“உங்க குடும்பத்துக்குள்ள நான் வரலப்பா” என்ற ஜானவி, “இன்டர்னல் பேப்பர்ஸ் கரெக்ட் பண்ணிட்டீங்களா மேம்?” எனக் கேட்டாள்.

“லாஸ்ட் ஹவர் ஆருஷ் கிளாஸ் தான் காயு. இந்தப்பொண்ணு நித்யாக்கு என்னாச்சு தெரியல. இந்த டைம் சுத்தமா மார்க் இல்லை. பேப்பர்ல எதுவும் எழுதல. டாப்பர் லிஸ்டில் இருக்கப்பொண்ணு… ஏன் எக்ஸாம் சரியா பண்ணல கேட்டதுக்கு வாய் திறக்கவே இல்லை” என்றார்.

“அவளுக்கு ஃபேமிலில எதும் இஷூஸ் இருக்குமோ? என் பேப்பர்லையும் ஒன்னுமில்ல” என்று தான் திருத்திக் கொண்டிருந்த விடைத்தாளை தூக்கிக் காட்டினாள் ஜானவி.

“உன் பேப்பர் எப்படி பண்ணியிருக்கா ஆருஷ்?” என்று புவித்திடம் வினவிய காயத்ரி, “கிளாஸ் டீச்சருங்கிற முறையில் நீ பேசிப்பாரு. அவள் நார்மலா இல்லன்னு தோணுது” என்றார்.

“என் பேப்பர்லையும் மார்க் வரல. த்ரீ இன்டர்னல்ஸ்ல பெஸ்ட் டூ தான எடுப்போம். சோ, இந்த டைம் ஃப்ரீயா விட்டிருக்கலாம்” என்றபோதும், “நான் பேசிப்பார்க்கிறேன் மேம்” என்றிருந்தான் புவித்.

நித்யா படிப்பிலும் விளையாட்டிலும் மிகவும் சூட்டிகையானப் பெண். அனைத்து பேராசிரியர்களுக்கும் விருப்பமானவள். எப்போதும் தேர்வில் முதலிடம் வருபவள் இம்முறை தோல்வியை தழுவியிருந்ததால், ஆசிரியர்களுக்கு அவள் நிலை குறித்து கவலை உண்டானது.

இரு தினங்களுக்கு முன்னர் கூட வகுப்பில் கவனமின்றி அமர்ந்திருந்த நித்யாவின் முகம் புவித்திற்கு நினைவில் வந்து போனது.

“உங்க சார் எப்படியிருக்கார் மேம்?” ஜானவி, காயத்ரியின் கணவர் மகேந்திரன் குறித்து நலம் விசாரித்தாள்.

“அவருக்கென்ன இப்பவும் ஹீரோ மாதிரி இருக்கார்” என்ற காயத்ரி, “அவர்கூட போன நான் அவருக்கு அம்மா மாதிரி தெரியுறேன்” எனக்கூறி சிரித்தார்.

“அதுசரி” என்ற ஜானவி, “அப்போ சாருக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிடுங்க” என்றாள் கிண்டலாக.

“அதுக்கு அவர் ஒத்துக்கணுமே” என்ற காயத்ரி, “எனக்கு குழந்தை பாக்கியம் இல்லைன்னு தெரிஞ்சதுமே சொல்லி பார்த்துட்டேன். டிவோர்ஸ் கொடுக்கிறேன், வேற கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு. முடியாதுன்னுட்டார். நான் மட்டும் போதுமாம்… இப்பவும் இதை சொல்லுவார்” என்று கணவனின் அன்பில் கர்வமாகக் கூறினார்.

“அப்போ வீட்டில் ஒரே லவ் தான் போல” என்று ஜானவி சிரிக்க, “வாலு…” என்று புன்னகை முகமாக அவளின் தோளின் அடுத்த காயத்ரியின் சிரிப்பு இன்னும் சில நொடிகளில் முடிவுக்கு வர இருந்தது.

அவரின் மகிழ்ந்திருக்கும் முகத்தைப் பார்த்திருந்த புவித்திற்குள் அத்தனை கனிவு.

இடைவேளை நேரம் முடிந்ததாக மணியடிக்கவும் தத்தம் வகுப்புகள் நோக்கி நகர்ந்தனர்.
___________________________________

“என்ன சுகன் இது… இந்த கேஸ் போக போக இன்னும் காம்ப்ளிகேட் ஆகும் போல” என்ற அகனிகா நெற்றியைத் தேய்த்திட,

“ரொம்பவே சிக்கலாகும் தோணுது மேம்” என்ற சுகன், “இந்த சிட்டிக்குள்ள நடந்த ரெண்டு கொலைகள், வேலூர், காஞ்சிபுரத்தில் நடந்த கொலைகள் எல்லாம் ஸ்கூலில் தான் நடந்திருக்கு. ஆனால் இது காலேஜ். கொலை பண்றவனுக்கு என்ன தான் வேணுமாம்?” எனக் கேட்டான். ஆயாசமாக.

“இதுக்கே டென்ஷன் ஆனா எப்படி சுகன்?” என்ற அகா, “ஒரு கேஸ் அப்படின்னு வந்தா தப்பு செய்தது யாருன்னு ஓரளவு யூகிக்க முடிஞ்சாலும், காரணம் என்னன்னு குற்றவாளி சொல்லாம நமக்குத் தெரியாது. கொலை எப்படி நடந்ததுன்னு பார்த்ததும் தெரியும்.  ஆனால் இந்த கேஸில் அப்படியில்லை. கொலைக்கான காரணம் நம்ம கண்ணு முன்னாடி இருக்கு. ஆனால் எப்படி? யாருன்னு தான் தெரியல. பொறுமையா தான் மூவ் பண்ணனும்” என்றவள், “செத்தது எவனும் ராமன் இல்லையே. ஸ்கூல், காலேஜ் படிக்கிற சின்னப்பிள்ளைங்கன்னு கூட பார்க்காம… ஆசியருங்கிற தொழிலுக்கும்…” என சொல்லி முடிக்காது, கோபம் அதிகரித்தவளாக வார்த்தைக்கு தடைவிதித்து கை முஷ்டி இறுக நின்றாள்.

அகாவின் மற்றொரு கையில், மகேந்திரனின் பணியாளர் அறையில் அவரது மேசையிலிருந்து எடுக்கப்பட்ட அட்டை பெட்டி கசங்கிக் கொண்டிருந்தது.

“அவர் கிளாஸ் பொண்ணுங்களை விசாரிச்சா ஆள் எப்படின்னு தெரிய வரும் மேம்” என்றான் சுகன்.

“மாலதிக்கு கால் பண்ணியிருக்கேன். அவங்க கேர்ள்ஸ்கிட்ட விசாரணை பண்ணும்போது கூட இருங்க” என்றவள், கல்லூரி முதல்வர் வரவும் அவரிடம் சென்றாள்.

“கிளாஸ் நடத்திட்டு இருக்கும்போதே இறந்திருக்கார். நீங்க இப்போ தான் வர்றீங்க?” என்று முதல்வரை பார்த்து புருவம் உயர்த்தினாள்.

“முக்கியமான மீட்டிங் மேம். யுனிவர்சிட்டி வரை போயிருந்தேன். நியூஸ் கிடைச்சதும் கிளம்பி வரேன்” என்றவர், வகுப்பில் நாற்காலியில் அமர்ந்த நிலையில் இறந்துகிடந்த மகேந்திரனை பார்த்தார்.

“ரொம்ப நல்லவர் மேம். ஸ்டூடண்ட்ஸ் என்ன ஹெல்ப் கேட்டாலும் செய்வார்.” முதல்வர் தன்னைப்போல் கூறியிருந்தார்.

“ஹார்ட் அட்டாக் தான மேம்?” முதல்வர் கேட்க, “கார்டியாக் அரெஸ்ட் தான். பட் இட்ஸ் மர்டர்” என்றாள்.

“வாட்?” முதல்வர் அதிர்ந்தார்.

“ஹார்ட் அரெஸ்ட் எப்படி மேம் மர்டர் ஆகும்?” என்ற முதல்வரிடம், தன்னுடைய கையிலிருந்த அட்டைபெட்டியையும், அதிலிருந்த வாசகத்தையும் காண்பித்தாள்.

“Your death is a lesson for you.”

“இதெப்படி மேம் பாசிபில்?”

“கண்டுபிடிக்கணும்” என்ற அகா, “தடயம் எதுவுமில்லையா?” என அங்கு ஆராய்ந்துக் கொண்டிருந்த பெஞ்சமினிடம் வினவினாள்.

“பார்த்திட்டு இருக்கேன் அகா” என்ற பெஞ்சமின், மகேந்திரனின் மணிக்கட்டில் கைக்கடிகாரம் இறுகக்  கட்டியிருந்த தடத்தை கூர்ந்து நோக்கினான்.

அந்நேரம் தன்னுடைய மருத்துவக் குழுவுடன் மிதுன் அங்கு வந்தான்.

“டாக்டர் நிரூப் வரலையா?”

அவர்களை முதலில் கவனித்து சுகன் கேட்டிட,

“அவரோட டியூட்டி டைம் ஓவர்” என்ற மிதுனின் குரலில் வேகமாக திரும்பிப் பார்த்த அகாவை சற்றும் பாராது, அங்கு இருக்கையில் இறந்திருந்த மகேந்திரனின் உடலருகில் சென்றான் மிதுன்.

“ஹேய் மிதுன்…” என்று நீண்ட நாள் கழித்து நண்பனைப் பார்த்ததில் மகிழ்ந்த பெஞ்சமின், “இந்த மார்க் செக் பண்ணு” என்று கடிகாரத்தின் தடத்தைக் காண்பித்தான்.

“வாட்ச்சோட மார்க் இது… இதிலென்ன இருக்கு?” என்ற மிதுன், “எப்படி?” எனக் கேட்டான்.

“பாடம் நடத்திட்டு இருக்கும்போதே, செஸ்ட் பிடிச்சிட்டு சேரில் உட்கார்ந்திருக்கார்… ஸ்டூடண்ட்ஸ் என்னாச்சுன்னு பக்கத்தில் வரதுக்குள்ள உயிர் போயிருக்கு” என்றான் பெஞ்சமின். அங்கு வந்ததும் மாணவர்களை விசாரித்து தெரிந்து கொண்டதை அகாவின் மூலம் அறிந்திருந்ததை மிதுனிடம் தெரிவித்தான் பெஞ்சமின்.

“அப்போ இது நார்மல் டெத் தான. அப்புறம் எதுக்கு இவ்வளவு டென்ஷன் உங்க மேடத்துக்கு?” எனக் கேட்ட மிதுன்,  தெர்மாமீட்டரை எடுத்து, மகேந்திரனின் காதுக்குள் விட்டு மூளையின் வெப்பநிலையை கண்டறிய முயன்றான்.

“நீ நியூஸ்லாம் பார்க்கிறது இல்லையா?” எனக் கேட்ட பெஞ்சமின், இதற்கு முன்னர் நடந்த இறப்புகளைப் பற்றிக் கூறினான்.

“சீரியல் கில்லிங்கா?”, மிதுன்.

“மே பீ…” என்று நகர்ந்த பெஞ்சமின், “இவரோட வாட்ச் செக் பண்ணிப்பாரு அகா. எதும் கிடைக்கலாம்” என்றவன், “குணசீலன், ஜார்ஜ்… இவங்க ரெண்டு பேரோட கையிலும் வாட்ச் மார்க் இருக்கா செக் பண்ண சொல்லு” என்றான்.

“ஏன்… அதுல எதுவும் டவுட் இருக்கா உங்களுக்கு?” என்ற அகாவிடம், “நார்மலா வாட்ச் டைட்டை கட்டினாலும் இந்தளவுக்கு மார்க் பாசிபிள் இல்லன்னு நினைக்கிறேன்” என்றான்.

“அப்போ?” என்று கேள்வியாக இழுத்த அகா, மிதுன் அருகில் சென்று, “கைக்கான நரம்பில் அழுத்தம் கொடுக்கும்போது, கார்டியாக் அரெஸ்ட் ஆக சான்ஸ் இருக்கா?” எனக் கேட்டாள்.

மகேந்திரனின் உடலை பார்வையிட்டுக் கொண்டிருந்த மிதுன், அவளது கேள்வியில் மிக நிதானமாக ஏறிட்டுப் பார்த்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
20
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment