Loading

அத்தியாயம் 10

 

இராவைக் காண வேண்டும் என்பதற்காகவே விரைவாகக் கிளம்பியவன், கால்சராயை மாட்டும் போதுதான் அதற்குள் இருந்த பொருளை கவனித்தான்.

 

மோதிரத்துடன் இருந்த எலும்புத்துண்டு!

 

‘அட, இதை மறந்துட்டேன்! கோவிலுக்குள்ள இறந்த உடலை புதைச்சுருக்காங்க. சம்திங் ஃபிஷி! இதையும் ஸ்டார்லைட் கிட்ட கேட்கணும்.’ என்று எண்ணிக் கொண்டவன், காலை உணவைக் கூட தவிர்த்து விட்டு, அவளைக் காணச் சென்றான்.

 

கொக்கோ விஸ்பர்ஸ்…

 

வழக்கமான நேரத்திற்கு வந்த இராவோ, அவளின் வேலைகளைச் செய்ய ஆரம்பிக்க, அவளையே கவனித்துக் கொண்டிருந்த வானதியோ, ‘என்ன எந்த ரியாக்ஷனும் காணோம்!’ என்று உற்று நோக்கிக் கொண்டிருந்தாள்.

 

சற்று நேரம் பொறுத்துப் பார்த்த இராவோ, ஒரு முடிவோடு அவளருகே வந்தவள், “இங்க என்ன பார்வை? இன்னொரு முறை, என்னைப் பத்தி பின்னாடி ஏதாவது பேசின, உன் வேலையை பறிச்சு, குடும்பத்தோட நடுத்தெருவுல உக்கார வச்சுடுவேன். என்னைப் பத்தி தெரியும்னு நினைக்கிறேன். நான் சொன்னதை செய்வேன். ஜாக்கிரதை!” என்று மிரட்டி விட்டு மீண்டும் அவளின் வேளைகளில் மூழ்கினாள்.

 

வானதிக்கோ, இராவின் இந்த அவதாரம் அதிர்ச்சிதான்!

 

என்னதான் ஊருக்குள் இராவைப் பற்றி பயங்கரமான புரளிகள் பரவினாலும், எதையும் கண்டு கொள்ளாத, பதிலுக்குப் பதில் பேசாத இராவின் குணத்தை தவறாக எண்ணிய வானதிக்கு, இராவின் மீது பயம் தோன்றவில்லை.

 

மாறாக, அவளை மதிக்காமல் சுற்றுவது, அவளைப் பற்றி வேண்டுமென்றே அவதூறு பரப்புவது என்று செய்து கொண்டிருந்தாள்.

 

அதனாலேயே, இராவின் எதிர்வினை இப்படி இருக்கும் என்று அவள் கனவில் கூட நினைத்திருக்க மாட்டாள்.

 

அதே போல, இரா சொன்னதிலுள்ள உண்மையும் வானதிக்கு புரிந்துதான் இருந்தது.

 

ஏனெனில், இராவின் மாமா விநாயகம், ‘கொக்கோ விஸ்பர்ஸ்’ஸின் பங்குதாரர் ஆவார். 

 

இது தெரிந்தும் கூட வானதி இராவை சீண்டியது எல்லாம் அவளின் மடத்தனம் அல்லாமல் வேறு என்ன?

 

இப்போது, வானதியை மற்றும் ஒரு பயமும் பீடிக்க ஆரம்பித்தது.

 

இராவிற்கு இருக்கும் சக்தியும், அதை வைத்து, அவள் ஒரு மந்திரவாதி என்று பரவியிருக்கும் வதந்தியும்தான் இந்த புதிய பயத்திற்கான காரணம்.

 

இரா அமைதியாக இருந்தவரை வந்திருக்காத பயம், இப்போது அவள் கோபப்பட்டதும் நினைவுக்கு வந்துவிட, இனிமேல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், முகம் முழுவதும் பயத்தில் வெளிரியவளாக நின்றிருந்த வானதியை நமுட்டுச் சிரிப்புடன் கடந்தான் அத்வைத்.

 

இரா வானதியை மிரட்டியதும், அதற்கு வானதியின் முகம் எதையோ தின்ற மூதாதையர்களைப் போல மாறியதையும் கண்டு கொண்டுதான் இருந்தான் அத்வைத்.

 

அவனுக்கு காத்திருக்கும் ஆப்பு தெரியாமல், ‘கம்மான் மை கேர்ள்!’ என்ற பாராட்டு வேறு மனதிற்குள்!

 

“என்ன மிஸ். வாந்தி… க்கும், சாரி வானதி… இந்த அவமானத்துக்கு இந்நேரம் இங்கயிருந்து போயிருக்கணுமே.” என்று கேலி செய்ய, அவனையும் முறைக்க வழியில்லாது, அங்கிருந்து சென்றாள்.

 

அடுத்து அவன் சென்று நின்றது அவனின் ‘ஸ்டார்லைட்’டிடம்தான்!

 

“வாவ், என்ன ஒரு டிரான்ஸ்பர்மேஷன் ஸ்டார்லைட்! மிரட்டுறதுல பின்னிட்ட போ.” என்று அத்வைத் சிலாகித்து கூற, அவளோ நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு குனிந்து கொண்டாள்.

 

‘இதென்ன பார்வையே சரியில்ல! கஷ்டப்பட்டு, பல பிட்டுகளை போட்டு ஒரு ஃபார்முக்கு கொண்டு வந்தேனே. திரும்ப யாராவது ஏதாவது மந்திரிச்சு விட்டுட்டாங்களா?’ என்று ஐயத்துடன், அவளை ஆராயும் பார்வை பார்த்திருக்க, அவனை விலக்கி நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவளுக்கு அந்த பார்வையே எதிரியாக மாறியது.

 

ஒரு கட்டத்தில் பொறுமை, சகிப்புத்தன்மை அனைத்தும் வற்றிப் போக,  “என்ன வேணும் உங்களுக்கு?” என்று வாயைத் திறந்திருந்தாள் இரா.

 

“அட, பேசுறியே! நான் கூட இந்த பில்டிங்க்குள்ள வந்ததும், உனக்கு பழசெல்லாம் மறந்து போய், பேசாமடந்தை ஆகிடுவன்னுல யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்.” என்றான் நக்கலாக.

 

அதில் அவனை முறைத்தவளுக்கு, அவள் மனனம் செய்து வந்த யாவும் மறந்துதான் போனது.

 

“சரி சொல்லு, இங்கேயே ஆரம்பிக்கலாமா, இல்ல தனியா எங்கயும் போயிடலாமா?” என்று மொட்டையாகக் கேட்டவனை புருவம் இடுங்கப் பார்த்தாள் இரா.

 

“அட, பேச ஆரம்பிக்கலாமான்னு கேட்டேன்மா! உடனே, உன் இன்டென்சிட்டியை கூட்டிடாத.” என்று அத்வைத் சிரிப்புடன் கூற, “என்ன பேசணும்?” என்று அவனோடு அதிகம் உரையாடுவதைத் தவிர்க்க முயன்றாள் இரா.

 

பேசினாலே, மாயங்கள் பல செய்து அவன் வழிக்கு கொண்டு வந்து விடுகிறானே அந்த மாயக்காரன்!

 

“நேத்து விட்டதை கன்டின்யூ பண்ணனும்ல. சரி இங்கேயே பேசுவோம். இந்த கடைக்கு என்னைத் தவிர வேற எந்த கஸ்டமர் வரப் போறான்.” என்று கூற, பல்லைக் கடித்த இராவோ, “எனக்கு உங்ககிட்ட பேச எதுவும் இல்ல. தயவுசெஞ்சு இங்க இருந்து கிளம்புறீங்களா?” என்றாள்.

 

“திரும்ப முதல்ல இருந்தா? சரி உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம்… இன்னைக்கு ஒரே நாள், உன்னோட கதையை முழுசா சொல்லி முடிச்சுடு. அதுக்கப்புறம்… அதை அப்புறமா பார்த்துப்போம்.” என்று அவன் கூற, ‘முடியவே முடியாது!’ என்று நின்றாள் இரா.

 

“அப்போ நேத்து சொன்னதுதான் இன்னைக்கும்! நீ எப்போ வேணும்னாலும் சொல்லிக்கோ. ஆனா, அதுவரை என்னோட படையெடுப்பு தொடரும். நீ வேற, நான் இருந்தா ஏதோ அஃபெக்ட் ஆகும்னு சொல்லிட்டு இருந்தேல…” என்றான் வேண்டுமென்றே.

 

ஒரு பெருமூச்சுடன், “வெளிய வெயிட் பண்ணுங்க. லீவ் சொல்லிட்டு வரேன்.” என்று அவள் அலைபேசியை எடுத்துக் கொண்டு தள்ளிச் செல்ல, ‘என்ன உடனே ஒத்துகிட்டா? வேற எதுவும் ஆப்பு வச்சுருப்பாளோ? எதுக்கும் கவனமாவே இருக்கணும்டா அதி!’ என்று அவன் மனதிற்குள் எண்ணிக் கொண்டான்.

 

*****

 

அடுத்த கால் மணி நேரத்தில், இருவரும் ஆளரவமற்ற இடத்தில் அமர்ந்திருந்தனர்.

 

சுற்றிலும் பச்சை பசேலன புற்களும் செடி கொடிகளும் அவர்களை சூழ்ந்திருந்தன. அதை மேலும் சிறப்பிக்கும் வகையில், அந்த காலை நேரத்திலும் பனி அதன் இருப்பை காட்டிக் கொண்டிருக்க, ரம்மியமாக இருந்தது அந்தச் சூழல்.

 

அதை ரசித்தவனாக அத்வைத் இருக்க, அவனருகே சற்று இடைவெளியுடன் அமர்ந்திருந்த இராவோ, படபடக்கும் நெஞ்சத்துடன் இருந்தாள்.

 

இருவருக்குமிடையே இருக்கும் மௌனத்தைக் கலைத்த அத்வைத், “டிவைன்…” என்று முணுமுணுக்க, சட்டென்று திரும்பி அவனைப் பார்த்தாள் இரா.

 

உடனே, “உன்னை இல்லம்மா, சரவுண்டிங்கை சொன்னேன்.” என்று அவன் பின்வாங்க, மீண்டும் அவள் மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாள். 

 

அதன் தலைப்பு, ‘இங்கு இவனுடன் வந்தது சரியா? தவறா?’ என்பதுதான்!

 

“அட, என்ன டிம்மாகிட்ட? உன்னை சொல்லலன்னு கோபம் எதுவுமில்லையே?” என்று அவன் வேண்டுமென்றே வம்பிழுக்க, ஒரு பெருமூச்சுடன், “வந்த வேலையை பார்ப்போமா?” என்றாள்.

 

“நானெல்லாம் டபுள் மீனிங்க்ல யோசிக்க மாட்டேன்மா. நாம ‘பேச’ ஆரம்பிப்போம்.” என்று அவன் ‘பேச’ என்பதில் அழுத்தம் கொடுத்து கூற, ‘உன்னைப் பெத்தாங்களா, செஞ்சாங்களா?’ என்ற ரீதியில் பார்த்து வைத்தாள் இரா.

 

“சரி சரி, உன்னோட ஃப்ளாஷ்பேக்கை கன்டின்யூ பண்ணு.” என்று அத்வைத் கூற, முழுதாக சொல்லாமல் விட மாட்டான் என்று எண்ணியவளாக, அவளின் நினைவுகளுக்குள் பயணித்தாள்.

 

*****

 

ஷ்ரவனுக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று மருத்துவர் சொல்லியிருக்க, அதற்கான பணியில் இருந்தனர் தாரணியும் விநாயகமும்.

 

அவர்களுக்கு உதவியாக இருந்த ஐங்கரனுக்கு அழைத்த ரூபிணியோ, என்னவென்று சொல்லாமல், “நீங்க உடனே கிளம்பி வாங்க.” என்று பதற்றதுடன் கூற, “என்னன்னு சொல்லு ரூபி.” என்று சற்று எரிச்சலுடன் பேசினார் ஐங்கரன்.

 

“ஹையோ, நிலைமை புரியாம… இராக்கு…” என்று எப்படி சொல்வதென்று தெரியாமல் ரூபிணி நிறுத்த, “இராக்கு என்னாச்சு? ஷ்ரவனை கவனிக்கிற பதட்டத்துல அவளைப் பார்க்காம விட்டுட்டேனா!” என்ற பதற்றம் இப்போது ஐங்கரனையும் தொற்றிக் கொண்டது.

 

“ப்ச், அவளுக்கு எதுவும் இல்ல. ஆனா, ஷ்ரவனுக்கு இப்படியானதுக்கு அவதான் காரணம்.” என்றார் ரூபிணி.

 

“என்ன உளறிட்டு இருக்க? ஷ்ரவனை தூக்கியடிக்க அவளால எப்படி முடியும்?” என்று கேட்டவரின் குரல் போகப் போக தேய்ந்து ஒலித்ததிலேயே, அவருக்கும் புரிந்து விட்டது என்பதை உணர்ந்து ரூபிணி, “நீங்க சீக்கிரம் இங்க வாங்க.” என்று கூறினார்.

 

அடுத்த இருபதாவது நிமிடத்தில் வீட்டிற்கு வந்திருந்த ஐங்கரனிடம் சென்ற ரூபிணி, “நம்ம இரா…” என்று ஆரம்பிக்க, “பொறு ரூபி, அப்படி இல்லாமலும் இருக்கலாம்.” என்றவர், “அப்படி இருக்கக் கூடாது.” என்று மென்குரலில் தனக்குத்தானே கூறிக் கொண்டார்.

 

இவை அனைத்தும் இராவிற்கும் கேட்கத்தான் செய்தது. ஆனால், அவளே குழப்பத்துடனும் அதிர்ச்சியிலும் இருந்ததால், பெரிதான எதிர்வினை இல்லை அவளிடம்.

 

அப்போது அவளின் அறைக்குள் நுழைந்த ஐங்கரனோ, “இரா, என்னாச்சும்மா?” என்று வினவ, அவரைக் கட்டிக்கொண்ட இராவோ, “அப்பா… எனக்கு என்னமோ ஆகிடுச்சு போல. நான் வேணும்னே ஷ்ரவனை தள்ளி விடல. ஆனா, உள்ளுக்குள்ள எதுவோ… அப்படி செஞ்சுடுச்சு. எனக்கு எதுவும் புரியலப்பா.” என்றாள் அழுகையுடன்.

 

ஐங்கரனோ அசைவற்று நின்றிருந்தார். எது நடக்கக் கூடாது என்று எண்ணினாரோ, அதுவல்லவா நடந்திருந்தது.

 

அதன்பிறகு, என்னென்னவோ நடந்தது. விஷயம் அறிந்து மருத்துவமனையிலிருந்தவர்களும் இல்லம் வந்திருந்தனர்.

 

இன்னும் சற்று ஆழமாக அடிப்பட்டிருந்தால், உயிருக்கே ஆபத்து என்று சொல்லி, கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தி அனுப்பியிருந்தனராம் மருத்துவர்கள்.

 

அவர்களிடமும் இராவின் விஷயம் பகிரப்பட, தாரணியின் குடும்பத்தினர் யாரும் அவளைக் காண கூட வரவில்லை.

 

அதைக் கூட, மகனைக் காயப்படுத்தியதால் உண்டான மனக்கசப்பு என்று எண்ணிக் கொண்டாள் இரா.

 

ஆனால், அவளும் கேட்பாள் என்று அறிந்தே, “அண்ணா, நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க… விஷயம் இவ்ளோ தூரம் வந்ததுக்கு அப்புறம், அவளோட பழகுறது உங்களுக்கு பாதுகாப்பு இல்லன்னு தோணுது. ஷ்ரவனை வச்சு மட்டும் சொல்லல… எதுக்குன்னு உங்களுக்கே புரியும். இனிமே,நாங்க இங்க இருக்கிறது சரியா வராது. நாங்க கிளம்புறோம்.” என்றிருந்தார் தாரணி.

 

அதைக் கேட்ட இராவுக்கோ, அத்தனை அதிர்ச்சி!

 

‘எப்போதும் அன்பாக, பாசமாக பேசும் அத்தையா இது?’ என்ற திகைப்பில் ஆழ்ந்திருந்தவளுக்கு, அடுத்த அதிர்ச்சியாக அமைந்தது, இனி அவளின் வாழ்க்கை லட்சியம் என்று பெற்றோர் காட்டிய பாதை!

 

இராவை அவர்கள் வீட்டிலிருந்த நூலகத்திற்கு அழைத்துச் சென்றனர் அவளின் பெற்றோர்.

 

“இரா, உனக்கே தெரியும், நம்ம குடும்பம் தலைமுறை தலைமுறையா இதே ஊருல வாழ்ந்துட்டு வராங்க. ஆனா, நம்ம குடும்பத்தைப் பத்தி உனக்குத் தெரியாத மர்மமும் இருக்கு. இதை உன்னோட பதினெட்டாவது வயசுலேயே சொல்லியிருக்கணும். இப்படி ஒரு சூழ்நிலைல அதை உனக்கு சொல்லுவோம்னு நாங்க நினைக்கவே இல்ல. உனக்கு இது அதிர்ச்சியாதான் இருக்கும். ஆனா, எங்களுக்கு வேற வழியில்ல!” என்று ஐங்கரன் கூற, அடுத்து வரப்போவதை எண்ணி படபடக்கத் தொடங்கினாள் இரா.

 

ஐங்கரனோ அங்கிருந்த பெரிய புத்தகத்தை திறந்து, குறிப்பிட்ட ஒரு பக்கத்தை சுட்டிக்காட்டி, “இரா, இவங்க என்னோட தாத்தாவோட பாட்டி. உனக்கு ஆறு தலைமுறை முன்னாடி பிறந்தவங்க. இவங்களோட பெயர் வசுந்தரா.” என்றார்.

 

இராவோ இதயம் துடிக்க அந்த படத்தைப் பார்த்தாள்.

 

அவளைப் போலவே நீலநிற விழிகளுடன் பதின்பருவ மங்கையாக காட்சியளித்தார் வசுந்தரா.

 

இராவோ வாயைத் திறப்பதற்கு கூட பயந்தவளாக, மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தாள்.

 

அவளைக் காண பாவமாக இருந்தாலும், இது அவர்களின் குடும்ப பொறுப்பாகிற்றே!

 

கடமை என்ற கயிறால் கட்டப்பட்ட அந்த பெற்றோர் இருவரும், அந்த நொடியிலிருந்து மகளுக்கான பாசத்தை தாரைவார்க்க தயாராகினர்.

 

“இவங்களுக்கும் உன்னை மாதிரியே மந்திர சக்தி இருந்துச்சு இரா. இவங்களுக்கு மட்டுமில்ல, இவங்களுக்கு முன்னாடி இருந்த, நம்ம குடும்பத்தை சேர்ந்த முன்னோர்களுக்கும் மந்திர சக்தி இருந்துச்சு. வழிவழியா நம்ம குடும்பத்துல வந்ததுதான் இந்த சக்தி.” என்று ஒரு இடைவெளி விட, அவளின் விழிகள் மட்டும் கேட்ட செய்தியால் உண்டான அதிர்ச்சியில் விரிந்தன.

 

அதற்கு மாறாக, அவளின் நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக் கொண்டது போலும்! 

 

மீண்டும் பேசத் தொடங்கினார் ஐங்கரன்.

 

“நம்ம குடும்பமே நாடோடி குடும்பம்தான். அப்படி அவங்க வந்த ஊர்தான் மறைப்புரம். அவங்களுக்கு இயற்கையிலேயே சில சக்திகள் இருந்ததாம். அதாவது, நடக்கப் போறதை முன்னாடியே தெரிஞ்சுக்குறது மாதிரி! இந்த ஊருக்கும் இயற்கையிலேயே இருந்த மந்திர சக்தியை உணர்ந்த நம்ம முன்னோர்கள், இங்கேயே வாழ ஆரம்பிச்சாங்க. அதோட, தியானம், இறை வழிபாடுன்னு முறையா செஞ்சு, அவங்களோட மந்திர சக்திகளை அதிகரிச்சதோட மட்டுமில்லாம, அதை அவங்களோட கட்டுப்பாட்டுக்குள்ளயும் வச்சிருந்தாங்க. காட்டுல இருக்க அம்மன்தான், முதன்முதலா நம்ம முன்னோர்கள் வழிபட்ட தெய்வம். அம்மனோட அருளாலதான், மந்திரசக்திகள் தலைமுறை தலைமுறையா தங்குதடையில்லாம கடத்தப்பட்டதாகவும் நம்பினாங்க. அந்த கடவுளுக்கு காணிக்கையா, பக்தியோட சேர்த்து ஒரு வாக்குறுதியும் குடுத்தாங்க. எக்காரணத்தைக் கொண்டும், அவங்களோட மந்திர சக்திகளை சுயநலத்திற்காகவோ, அடுத்தவங்களுக்கு கெடுதல் விளைவிக்கிறதுக்காகவோ பயன்படுத்த மாட்டோங்கிறதுதான் அந்த வாக்குறுதி.” என்றவர், ஒரு பெருமூச்சுடன்,

 

“ஆனா, சக்திகள் பெருக பெருக, அதோட சேர்ந்து பேராசையும், சுயநலமும் பெருகுச்சு. அவங்ககிட்ட இருந்த சக்திகளை வச்சு பணம் சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்படி உருவானதுதான் பில்லி, சூனியம், ஏவல் எல்லாம். அது மட்டுமில்லாம, சக்திகள் இல்லாம இருக்க சாமான்ய மக்களுக்கு, எப்படி மந்திர உச்சாடனம் பண்ணி கடவுள்களை மகிழ்விச்சு சக்திகளை பெறலாம்னு சொல்லியும் குடுக்க ஆரம்பிச்சாங்க. தெய்வீக சக்தி இருந்த மறைப்புரம், இவங்களோட சுயநலத்தால, தீய சக்திகளுக்கு உறைவிடமா மாறுச்சு. நம்ம முன்னோர்கள் குடுத்த வாக்குறுதியை காப்பாத்ததால, அந்த காட்டுக்கோவில் அம்மனும் கோபப்பட்டு, இந்த ஊரை விட்டே போயிட்டாங்களாம்.” என்றவரை, அடுத்து என்னவோ என்ற திகிலுடன் பார்த்திருந்தாள் இரா.

 

“முதல்ல பொன்னையும், பொருளையும், தேவையான எல்லாத்தையும் அள்ளி அள்ளி குடுத்த தீய சக்திகள், கொஞ்ச நாளிலேயே அதோட வேலையை காட்ட ஆரம்பிச்சுச்சு. அந்த தீய சக்திகளுக்கெல்லாம் தலைவனா ஒருத்தன் இருந்தான். அவனுக்கு உருவமோ அடையாளமோ இல்ல. உருவம் இல்லாத அவனை ‘சூனியன்’னு அடையாளப்படுத்துனாங்க. அவன் கொஞ்சம் கொஞ்சமா மந்திரம் தெரிஞ்ச எல்லாரையும் அவனோட தீய எண்ணங்களால ஆக்கிரமிக்க ஆரம்பிச்சான். அவங்களை அவனோட கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்தான். அவனோட நோக்கம், அவங்ககிட்ட இருந்த மந்திர சக்தியை முழுசா உறிஞ்சு, யாராலயும் கட்டுப்படுத்த முடியாத மிகப்பெரிய சக்தியா உருவாகுறதுதான்.”

 

“இதை எப்படியோ தெரிஞ்சுகிட்ட வசுந்தரா, அந்த சூனியனை அப்படியே விட்டா இந்த உலகத்துக்கே கூட ஆபத்து ஏற்படலாம்னு கணிச்சு, அதுக்கான தீர்வுக்காக அம்மன் கிட்ட சரணடைஞ்சாங்க. ஆனாலும், அம்மனுக்கு நம்ம முன்னோர்கள் மேல இருந்த கோபம் குறையவே இல்ல. வசுந்தராவுக்கு முழுசா உதவ முடியாதுன்னு சொன்னவங்க, அந்த சூனியனை அழிக்கிறதுக்கான வழியை பூடகமா சொல்லியிருக்காங்க. அதன்படி, வசுந்தரா தன்னோட உயிரோட சேர்த்து, இதுக்கெல்லாம் காரணமான மந்திர சக்திகளை பணயமா வச்சு, அந்த சூனியனை, வெளியவே வர முடியாத அவங்களோட மாயவலைக்குள்ள சிக்க வச்சாங்க.” என்றார்.

 

“அப்போ அந்த சூனியன் அழியலையா?” என்று முதல்முறையாக வாயைத் திறந்து கேட்டாள் இரா.

 

“இல்ல, வசுந்தரா எத்தனை முயற்சி செஞ்சும், அவனை முழுசா அழிக்க முடியல. அவன் பழிதீர்க்க திரும்பவும் வருவான்னு சொல்லிட்டுதான் இறந்தாங்க.” என்றார் ஐங்கரன்.

 

“வசுந்தரா பாட்டி மந்திர சக்திகளையும்தான பணயம் வச்சாங்க…” என்று அவள் சந்தேகமாக வினவ, “ஆமா, அதுக்கப்புறம் நம்ம குடும்பத்துல யாருக்கும் மந்திர சக்திகள் இல்ல… இப்போவரை!” என்ற ஐங்கரன் இராவைப் பார்த்தார்.

 

“அப்போ…” என்று இரா பயத்துடன் இழுக்க, “உனக்கு மந்திர சக்திகள் வந்திருக்குன்னா, அதுக்கு ஒரே அர்த்தம், அந்த சூனியன் வசுந்தராம்மாவோட மாயவலைல இருந்து தப்பிச்சுட்டான்.” என்றார் அத்தனை நேரம் அமைதியாக இருந்த ரூபிணி.

 

அடுத்து என்ன வரப்போகிறது என்பதை ஓரளவு யூகித்து விட்ட இராவோ, “நோ நோ என்னால முடியாது.” என்று அரற்ற ஆரம்பித்து விட, “இது நம்ம குடும்பத்தோட கடமை இரா.” என்றார் ஐங்கரன்.

 

“நான் என்ன தப்பு பண்ணேன்பா? எனக்கு இந்த சக்தி எதுவும் வேண்டாம். எனக்கு சாதாரண பொண்ணா இருக்கத்தான் ஆசைப்பா.” என்று இரா கதறி அழ, மகளின் நிலை கண்டும் பெற்றவர்கள் இருவரும் கடமை என்னும் கயிறால் கட்டப்பட்டது போல கையறுநிலையில் நின்றனர்.

 

“இரா, இதை நாம செஞ்சுதான் ஆகணும். இல்லன்னா உலகமே பாதிக்கப்படும்.” என்று ரூபிணி சொல்ல, “அதுக்கு… என்னை சாக சொல்றீங்களாம்மா?” என்று அழுதபடி வெகுண்டாள் இரா.

 

“இரா, இது எங்களுக்கும் வேதனையான முடிவுதான். இந்த முடிவுக்கு வந்ததுக்கு பின்னாடி, நாங்க எவ்ளோ கஷ்டப்பட்டிருப்போம்னு யோசிச்சு பாரு.” என்றார் ரூபிணி.

 

“என்னால முடியாது.” என்று பிடிவாதமாகக் கூறியவளை சம்மதிக்க வைக்க அடுத்த அஸ்திரத்தை பிரயோகித்தனர் அவளின் பெற்றோர்.

 

“நீ இதுக்கு ஒத்துக்கலைன்னா, எங்களுக்கு வேற வழியில்ல… அவனியை இதுக்கு சம்மதிக்க வைக்க வேண்டியதா இருக்கும்.” என்று மனதைக் கல்லாக்கியபடி அவர்கள் கூற, “ச்சே, உண்மைலேயே நீங்கதான் எங்களைப் பெத்தவங்களா?” என்று கோபத்தில் வினவிய இரா, அதற்காக வாங்கிக் கட்டியும் கொண்டாள்.

 

இறுதியாக, இந்தக் களேபரங்களைப் பற்றி எல்லாம் எதுவும் அறியாத அவனிக்காக, அவர்களின் முடிவுக்கு சம்மதித்தாள்.

 

ஆனால், அன்றிலிருந்து இருவருக்கும் பெற்றவர்கள் என்ற ஸ்தானத்தை அவள் தரவில்லை.

 

அவர்களுடன் இருக்க விரும்பாமல், சிறிய வீட்டிற்கு ஜாகையை மாற்றிக் கொண்டாள்.

 

இதைக் குறித்து அவனி எத்தனை முறை கேட்டும், ஏதேதோ சொல்லி சமாளித்து வருகிறாள் இரா.

 

*****

 

ஒருவழியாக அவளின் கடந்த கால கசடுகளை மேலோட்டமாக சொல்லி முடித்த இரா அத்வைத்தைப் பார்க்க, அவனோ சாவகாசமாக கன்னத்தில் கைவைத்து, அவளையே பார்வையை அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

ஒருவித ஏமாற்றத்துடனும், அது உண்டாக்கிய எரிச்சலுடனும் அவன் முன்பு சொடக்கிட்டவள், “நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன்?” என்று இரா வினவ, “இல்ல, அப்போயிருந்து சக்தி சக்தின்னு சொல்லிட்டு இருக்கியே தவிர, எதையும் செஞ்சு காட்ட மாட்டிங்குறியேன்னு யோசிச்சுட்டு இருந்தேன்.” என்றான் அத்வைத்.

 

“ப்ச், நான் என்ன மேஜிக் ஷோவா நடத்துறேன்?” என்று கடுப்பில் அவள் கத்த, “நான் ஜர்னலிஸ்ட்மா. கண்ணால பார்க்காம எதையும் நம்ப மாட்டேன்.” என்று உறுதியாகக் கூறினான் அவன்.

 

“அதுக்கு… சும்மா எல்லாம் சக்தி வேலை செய்யாது.” என்று அவள் உதட்டைச் சுழிக்க, “ஹ்ம்ம், ஐ சீ… ஆர்டினரி சிஷ்ஷுவேஷன்ல வேலை செய்யலன்னா என்ன, சிஷ்ஷுவேஷனை எக்ஸ்ட்ராடினரியா மாத்திடலாம்.” என்று பேச்சினூடே, அருகில் அமர்ந்திருந்தவளின் இடையைச் சுற்றி ஒற்றை கரத்தால் வளைத்து, அருகில் இழுத்தான்.

 

இருவருக்கும் இடையே நூலளவே இடைவெளி இருந்தது.

 

இருவரின் கண்பார்வையும் ஒன்றோடொன்று கவ்விக் கொள்ள, இருவரின் மூச்சுக்காற்றும் மற்றவரை தீண்டிச் செல்ல, அந்த ஒரு நொடி, இருவரும் மற்றவரில் லயித்துதான் இருந்தனர்.

 

அடுத்த நொடி அவன் குறும்புடன் சிரிக்க, அவளோ அதிர்ச்சியில் விழிக்க, அப்போதும் இடைவெளி மட்டும் அதிகரிக்கவில்லை!

 

“இப்போ நம்புறேன்!” என்று அவன் முணுமுணுக்க, அவள் புரியாமல் விழித்தாள்.

 

இதழ் விரிந்த புன்னகையுடன், “சுத்தி பாருங்க மேடம்.” என்று அவன் கூற, அந்த தருணத்தில் அவனின் கைப்பாவையாகவே மாறி இருந்தவள், பார்வையை சுற்றுப்புறத்திற்கு திருப்பினாள்.

 

அத்தனை நேரம், அவர்களைச் சுற்றி வெறும் செடிகளாக இருந்தவற்றில் பலவண்ண மலர்கள் பூத்துக் குலுங்குவதை ஒருவித திகைப்புடன் கண்டவள், அவனை நோக்கித் திரும்ப, அவனும் அவளுக்கான அடுத்த அதிர்ச்சியுடன், ஒற்றை காலில் மண்டியிட்டு அவள் முன் அமர்ந்திருந்தான்.

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
21
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment