அத்தியாயம் 7
நீண்ட அழைப்பை தாங்கி வந்த அலைபேசி அழைப்பு ஒரு கட்டத்தில் நின்றும் விட, அதுவரையுமே அதன்மீது தான் அஷ்வினி என்ற எழுத்தின் மீது தான் கார்த்திகைசெல்வனின் பார்வை முழுதும் இருந்தது.
மீண்டும் அழைப்பு வர, ஒரு பெருமூச்சுடன் அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.
இருபக்கமுமே பலத்த அமைதி யார் முதலில் பேசுவது என தெரியாமல்.
“கார்த்தித்தான்!” என அஷ்வினி நிமிடங்கள் சென்ற பின் அழைக்க,
“நீ இப்படி பண்ணிருக்க கூடாது அஷ்வினி. உன்கிட்ட இதை நான் சுத்தமா எதிர்பார்க்கல!” கார்த்திகைசெல்வன் கூற, கண்கள் கலங்கி வந்தது அஷ்வினியிடம்.
ஆனாலும் அவன்முன் காட்டிக் கொள்ள தயாராய் இல்லை அவள்.
“ஏன் த்தான் இப்படி பண்றீங்க? இப்ப எதுக்காக உடனே கிளம்பி போறீங்க நீங்க? இங்க ஆளாளுக்கு உங்களையும் உங்க கேரக்டரையும் விமர்சனம் பண்ணிட்டு இருகாங்க” அஷ்வினி சொல்ல,
“அதை பத்தி உனக்கென்ன கவலை? அதான் மொத்தமா என்னை வாரி குடுத்துட்டியே!” என நேரடியாய் அவன் குற்றம் சாட்டினான்.
“த்தான்! என்ன பேசுறிங்க? மொத்த குடும்பமும் இப்ப தான் நிம்மதியா இருக்காங்க. நான் கொஞ்சம் தடுமாறி இருந்தாலும் மொத்த குடும்பமும் நிலைகுலைஞ்சு போயிருக்கும்!” என புரிய வைக்க முயன்றாள்.
“அப்போ நான் எப்படி போனாலும் பரவால்ல இல்ல உனக்கு? பின்ன எதுக்கு அஷ்வினி இத்தனை நாளும் என்கிட்ட அப்படி பேசி தொலைச்ச?” என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை அவளால்.
“நாம ஒரே குடும்பம்ன்னு தெரிஞ்சு தானே பேசின? அப்ப தெரியாதது தான் மண்டபத்துல தெரிஞ்சதா உனக்கு? அவ்ளோ தெரிஞ்சதுன்னா நான் தேவாவோட விருந்துக்கு வந்தப்ப வாங்கத்தான்ன்னு கூப்பிட்டிருக்க வேண்டியது தானே? ஏன் என்னைப் பார்த்ததும் ஓடி ஒளிஞ்ச நீ?” என மனதின் ஆதங்கத்தை எல்லாம் கொட்டினான்.
“இப்பவும் என்ன அக்கறைல நீ எனக்கு கால் பண்ணின? ரொம்ப பெரிய மனுஷியா கல்யாணத்தை நிறுத்தினா செத்துடுவேன்ன்னு சொன்னவ தானே நீ? இப்ப என்ன உனக்கு? இப்ப நான் தேவா ஹஸ்பண்ட் அஷ்வினி!” என சொல்ல, சுருக்கென்று மனதை தைத்தது அவன் கூறிய வார்த்தைகள்.
‘நிஜம் தானே! என்ன நம்பிக்கையில் எதற்காக அழைத்தோம்?’ என மனம் பதறிவிட்டாள் அஷ்வினி.
“நீயா தான் பேசின. இப்பவும் நீயா தான் விலகி இருக்க. ஆனா என் நிலைமை என்ன தெரியுமா உனக்கு? அசிங்கமா இருக்கு அஷ்வினி. தங்கச்சியை காதலிச்சுட்டு அக்காவை கல்யாணம் பண்ணி… என்னால தேவா முகத்தை கூட பார்க்க முடியல. என்னை எங்க நிறுத்தி இருக்க தெரியுமா நீ?” என கார்த்திகைசெல்வன் வேதனையாய் கேட்க, அதிர்ந்து நின்றாள் அஷ்வினி.
நிச்சயம் அவனிடம் இவ்வளவு எதிர்பார்க்கவில்லை அவள். தன் மேல் கோபம் இருப்பது கூட அதிசயமில்லை. ஆனாலும் அவனின் இந்த அன்புக்கு தான் என்ன செய்துவிட்டோம் என அவள் மனமுமே ஏங்கியது.
பேருந்தில் அமர்ந்திருந்தவன் சுற்றிலும் பார்த்துக் கொண்டு தன்னை நிதானத்துக்கு கொண்டு வர முயன்றான்.
“சொல்லு! எதுக்கு கால் பண்ணின?” என முகத்தை அழுந்த துடைத்து அவன் கேட்க,
“நான் பண்ணினது தான் சரின்னு இப்பவும் சொல்லுவேன். இப்ப நீங்க இப்படி சட்டுன்னு கிளம்பினதை எல்லாரும் என்னென்னவோ பேசுறாங்க த்தான். நீங்க இப்படி அவசரப்பட்டு கிளம்பிருக்க கூடாதுன்னு உங்க நல்லத்துக்காக சொல்ல தான் கால் பண்ணினேன்! வேற… வேற எதுவும் இல்லைத்தான்!” என தயங்கியவள்,
“தேவா பாவம் த்தான். அவளுக்கு வாயை திறந்து இது வேணும்ன்னு சொல்ல கூட தெரியாது!” அஷ்வினி தயக்கத்தோடு சொல்லி இருக்க,
“அதுக்காக உனக்கு வேணும்ன்றதை நீ குடுத்துட்ட அப்படி தானே?” என கோபமாய் கூறியவன்,
“இனி இது என் வாழ்க்கை. நான் பாத்துக்குறேன்.” என்று சொல்லி வைத்துவிட்டான்.
முகத்தில் அடித்தார் போன்ற அந்த அழைப்பின் துண்டிப்பில் கண்ணீர் வடிந்த போதும் அது தான் நன்மைக்கு என்று மனதுக்கு புரியாமல் இல்லை அஷ்வினி பக்கம்.
பேசி முடித்து மூச்சு வாங்க அமர்ந்த கார்த்திகை செல்வனுக்கு தன் கோபமான பேச்சில் அஷ்வினி எத்தனை வருந்தி இருப்பாள் என ஒரு எண்ணமும் எழுந்து மீண்டுமாய் தலைவலியை கொண்டு வந்தது.
ஆனாலும் சமாதானப்படுத்தும் உறவு நிலையிலும் இனி தாங்கள் இல்லை என்பதை வலிக்க நினைவுக்கு கொண்டு செலுத்தி இருந்தான்.
அஷ்வினி அழைப்பை வைத்து பத்து நிமிடங்களில் மீண்டும் கார்த்திகை செல்வனின் அலைபேசி அழைக்க, ‘மீண்டும் அழைக்கிறாளா என்ன?’ என்ற கேள்வியோடு சட்டைப் பையில் இருந்து அலைபேசியை எடுத்தான்.
“தேவா!” என்ற பெயரில் அழைப்பு இப்பொழுது வர, கண்களை சுருக்கினான் கார்த்திகைசெல்வன்.
‘இவள் எதற்கு அழைக்கிறாள்?’ என்ற கேள்வி மனதுள் ஓட, அழைப்பை ஏற்க,
“த்தான்! பஸ் கிளம்பிடுச்சா?” என தேவதர்ஷினி கேட்க, இன்னும் புருவங்கள் சுருங்கிய நிலை தான் கார்த்திகைசெல்வனுக்கு.
“அத்தை… அத்தை தான் கேட்க சொன்னாங்க!” தேவதர்ஷினி சொல்ல,
“ஹ்ம்!” என்றொரு பதில் அவனிடம்.
“ஓகே த்தான்! அத்தை இட்லி வச்சாங்க. மறக்காம சாப்பிடுங்க!” என்றவள்,
“அத்தை தான் சொல்ல சொன்னாங்க!” என்றும் சொல்ல, மீண்டும் ஒரு “ஹ்ம்!” அவனிடம்.
“ஓகே த்தான்!” என்று சொல்லிய தேவதர்ஷினி சில நொடிகள் அவன் எதாவது கேட்க கூடுமோ என அழைப்பை அப்படியே வைத்திருக்க, அவனுமே காதில் தான் அலைபேசியை வெறுமெனே வைத்திருந்ததில், நொடிகள் கடந்தும் சத்தம் இல்லை என்ற பின் தேவதர்ஷினி தான் மெதுவாய் காதில் இருந்து எடுத்து அழைப்பை நிறுத்தி இருந்தாள்.
கார்த்திகைசெல்வன் அமைதியானவன் தான் என்றாலும் இத்தனை அமைதியானவன் இல்லை என்று தேவதர்ஷினியும் அறிவாள்.
இந்த திடீர் திருமணத்தை ஏற்று கொள்ள முடியவில்லை போல. பாவம் தான் என்று அவனுக்காக வருந்தவும் செய்தவள் தான் தேவதர்ஷினி.
அவளுக்குமே அத்தனை அதிர்ச்சி தான் கார்த்திகைசெல்வன் தன் கணவன் என்று ஆனதில். ஆனாலும் மனதில் பெரிதாய் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தவளுக்கு இதை ஏற்க பெரிதாய் மெனக்கெட வேண்டி இருக்கவில்லை.
இப்பொழுதும் தங்களது திருமணத்தன்று கார்த்திகைசெல்வன் தனக்கு மாங்கல்யம் அணிவித்த அந்த பொழுதை அப்படியே படமாக்கி நிரஞ்சன் அனுப்பி இருந்ததை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
அத்தனை இறுக்கம் கார்த்திகைசெல்வனின் கண்களில் அப்பட்டமாய் தெரியவும் அதை கூர்ந்து கவனித்தவள், எண்ணத்தில் பெரிதாய் எந்த ஒரு வித்தியாசமும் எழவில்லை.
“ரொம்ப வர போற மனைவிகிட்ட எதிர்பார்த்து இருந்திருப்பாங்களோ? அதான் என்னை ஏத்துக்க முடியாம இப்ப கிளம்பிட்டாங்களோ?” இப்பொழுதும் இப்படி தான் தோன்றியது அவளுக்கு.
அவன் தான் கணவன் என்று ஆனது முதல் தேவதர்ஷினி தன் மனதை முழுதாய் அவன் பக்கம் கொண்டு செல்ல ஆரம்பித்திருந்தாள்.
அதனால் அவன்பால் வந்த பிடித்தத்தையும் மனப்பூர்வமாய் உணரவும் ஏற்கவுள் ஆரம்பித்திருந்தாள்.
இந்த நான்கு நாட்களில் நான்கு வார்த்தை கூட முழுதாய் அவன் பேசியதில்லை என்பதில் சிறு புன்னகை தான் வந்தது தேவதர்ஷினிக்கு.
சிறுவயது முதல் தெரிந்தவர்கள் இருவருமே! பழக்கமும் கூட. அதனால் தான் அவனின் இந்த தயக்கம் தன்னிடம் பழக என்று அவளாய் ஒரு முடிவிற்கும் வந்திருந்தாள்.
எவ்வளவு தான் தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டாலும் இன்று காலை அவன் பெங்களூர் செல்ல இருக்கும் தகவலை கூறியதும் நிஜமாய் அதை எதிர்பாராத நெஞ்சம் வாடிவிட்டது என்னவோ உண்மை தான்.
அவன் முகத்தை அதன்பின் மட்டும் பலமுறை பார்த்திருப்பாள். அதில் சில முறை இரு பார்வைகளும் சந்தித்ததும் உண்டு.
அதையும் மீறி அவனிடம் கேட்டிட முடியவில்லை. அதற்கான எல்லைக்குள் இன்னும் அவன் அனுமதிக்கவில்லையே என்ற எண்ணம் தான் பேசவிடாமல் செய்தது தேவதர்ஷினியை.
அனைத்தையும் மீறி உள்ளுக்குள் எழுந்த ஒருவித நேசம் தான் இப்பொழுது சொல்லிக் கொள்ளாமல் சென்றவனுக்கு அழைப்பு விடுக்க வைத்திருந்தது.
அழைத்துவிட்டு அவன் அழைப்பை ஏற்க காத்திருந்த நேரங்களில் தன் அழைப்பை கண்டு அவன் எண்ணம் என்னவாக இருக்கும் என்ற குறுகுறுப்பில் நின்றவள் அவன் ஏற்றும் பேசவில்லையே என மனம் சுணங்கினாலும் தானே ஆரம்பித்து வைத்து தானே முடித்தும் வைத்து என ஒருவழியாய் பேசிவிட்டாள்.
அங்கே பேருந்தில் அமர்ந்திருந்தவன் நிலை தான் முழுதாய் கவலைக்கிடம்.
அஷ்வினியிடம் கோபமாய் பேசியதை போல பேச தோன்றவில்லை தேவதர்ஷினியிடம்.
இன்னும் இந்த திருமணத்தை ஏற்கும் நிலைக்கே அவன் வரவில்லை என்பது தான் உண்மை.
அவனுக்கு இருக்கும் சிக்கல்களில், கோபங்களில், காயங்களில் நிச்சயம் தேவதர்ஷினியை தன்னில் பாதியாய் எல்லாம் நினைக்கவே மனம் வரவில்லை.
மூன்று நாட்களாய் இரவு அந்த அறைக்குள் அவளுடன் என முழுதாய் அவன் வெறுத்த தருணங்கள் அது.
ஆனாலும் கவனித்தான் தான். தான் விலக விலக தன்னை தேடி வந்து காலை காபி கொடுப்பது முதல் சாப்பிடும் நேரம் அருகிருந்து கவனிப்பது வரை என தேவதர்ஷினியின் அக்கறையில் மனது அவளை பரிதாபமாய் தான் பார்த்துக் கொண்டது.
“ஹாய் அண்ணி! என்ன இந்நேரம் ஹால்ல இருக்கிங்க? தூங்கலையா?“ என கேட்டு வந்தான் நிரஞ்சன்.
“நீ எங்க டா போன? மணி என்ன தெரியுமா? பத்து மணி!” என்றார் கண்ணகி.
“ம்மா! அண்ணி தான் அத்தை வீட்டுல போய் அவங்க திங்ஸ் வாங்கிட்டு வர சொன்னாங்க. அதான் போயிருந்தேன்!” என்றான் நிரஞ்சன்.
“என்ன திங்ஸ் தேவா? அதுவும் இந்நேரத்துல கேட்டிருக்க?” கண்ணகி கேட்க,
“ஒண்ணுமில்ல த்தை. நாளைக்கு நான் போய்ட்டு இருந்த ஸ்கூல்க்கு போய் பார்க்கலாம் நினைச்சேன். வீட்டுல சும்மா தானே இருக்கனும். இப்ப அங்கே வேகண்ட் இருந்தா என்னை எடுத்துப்பாங்க. எனக்கும் நேரம் போகும்ல? இங்க இருந்தாலும் நீங்க என்னை சமைக்க கூட விட மாட்டிங்க!” என்று சொல்ல, கண்ணகி பரமேஸ்வரனைக் காண, அவரும் மனைவியை தான் அர்த்தமாய் கண்டார்.
“நீங்க வேண்டாம்ன்னு சொன்னா போகல த்தை!” அவர் பார்வை வைத்து தேவதர்ஷினி சொல்ல,
“நீ வேற தேவா! வேலைக்கு போக வேண்டிய நேரமா இதுன்னு நினச்சேன். வேற எதுவும் இல்லை. உன் விருப்பப்படி இரு அதெல்லாம் ஒன்னும் யாரும் சொல்ல போறது இல்ல!” என்றார் சோர்வாய்.
“அப்ப சரி த்தை. வேலையை விட்டு அஞ்சு மாசம் கிட்ட ஆச்சே! ஆள் வந்துட்டாங்களா என்னனு தெரிலை. நாளைக்கு நேர்ல பார்த்துட்டு வந்துடுரேன்” என்றாள்.
“என்னங்க இதுங்க ஆளாளுக்கு அவங்கவங்க வேலையை தேடி போதுங்க!” என புலம்ப ஆரம்பித்துவிட்டார் கண்ணகி.
தொடரும்..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
20
+1
2
+1
1