அத்தியாயம் 9
இராவின் வீட்டை விட்டு வெளியே வந்த அத்வைத்தோ, எதிர்புறமிருத்த பெரிய மரத்திற்கு பின்னே நின்றிருந்த இருவரை நோக்கி நடந்தான்.
அவன் வருவதைக் கண்டதும், இன்னமும் மரத்திற்குப் பின்பு மறைந்து கொண்டாலும், அவனின் பார்வையிலிருந்து தப்பவில்லை.
அதில் ஒருத்தி வானதி. மற்றொருத்தி, வானதியின் அக்கா தமயந்தி.
“ஹலோ, அதான் பார்த்துட்டேனே… அப்புறம் எதுக்கு இப்படி ஒளிஞ்சு விளையாடிட்டு இருக்கீங்க?” என்ற கேலியுடன் அவர்களை நெருங்கினான் அத்வைத்.
அதில், இருவரும் வெளியே வந்தனர். அப்போதும் இருவரின் பார்வையிலும் தவறு செய்த பாவனை இல்லை. மாறாக, அலட்சியப்பாவனையையே வெளிப்படுத்தினர்.
இருவரையும் அழுத்தமாகப் பார்த்த அத்வைத், “அடுத்த முறை, இத்தனை கஷ்டப்பட்டு ஒளிஞ்சிருந்து பார்க்க வேண்டாம். நானே உள்ள கூட்டிட்டுப் போறேன், ஓகேவா?” என்று நக்கலாக வினவ, “க்கும், அவளோட முகத்தை எல்லாம் பார்க்கணும்னு எனக்கு என்ன தலையெழுத்து?” என்றாள் வானதி தோளைக் குலுக்கிக் கொண்டு.
“ஓஹ், அப்போ இவ்ளோ நேரம், இந்த மரத்துக்கு பின்னாடி என்ன சாதிச்சிட்டு இருந்தீங்க?” என்றான் அத்வைத் குரலில் கடுமையை ஏற்றியபடி.
“ப்ச், நாங்க என்னவோ பண்ணிட்டு இருந்தோம். உங்களுக்கு என்ன? உங்களைத் தெரிஞ்சதுக்காக ஒண்ணு சொல்றேன். அவளோடப் பழகுறதை நிறுத்திடுங்க. அவளே ஒரு சூனியக்காரி! என்ன வசியம் செஞ்சு உங்களை மயக்கினாளோ…” என்று வானதி வஞ்சத்துடன் பேசிக் கொண்டே போக,
“இனஃப், தானுண்டு தன் வேலை உண்டு இருக்குறவ சூனியக்காரின்னா, இப்படி பொறாமைல ஊறிப் போய், அடுத்தவங்களைப் பத்தித் தப்பு தப்பா புரளி பேசிட்டு இருக்க உங்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் மிஸ். வாந்தி? ஓஹ் சாரி, வானதி…” என்றான் அத்வைத்.
“ஹலோ, யாரைப் பார்த்து என்ன சொல்றீங்க?” என்று தமயந்தி எகிறிக் கொண்டு வர, “ப்ரூஃப் வேணுமா? நான் யாருன்னு தெரியும்ல? உங்களுக்கு மட்டும் காட்டவா? இல்ல, ஊருக்கே காட்டவா?” என்றவன், வானதியிடம் திரும்பி, “அப்படியே, நீங்க வேலை செய்யுற லட்சணத்தை உங்க முதலாளி கிட்ட சொல்லிடவா?” என்றதில் இரு பெண்களுக்கும் திக்கென்று இருந்தது.
அத்துடன் விட்டானா அவன்!
“நீங்க பெரிய பணக்கார குடும்பம் போலயே! சொந்த வேலையெல்லாம் விட்டுட்டு, இப்படி அடுத்தவங்க விஷயத்துல மூக்கை நுழைக்குற அளவுக்குச் செல்வம் கொட்டி கொட்டி கிடக்குது போலயே!” என்று நக்கலாக வினவ, உடனே சமரசத்திற்கு முன்னுரை போட்டனர் சகோதரிகள் இருவரும்.
“சாரி சார்… எங்களை விட்டுடுங்க சார். தெரியாம பேசிட்டோம்.” என்று வானதி அடங்கிய குரலில் பேசினாள்.
ஆனால், மனதிலோ, ‘ப்ச், இவனைப் பத்தி தெரிஞ்சும் வாயை விட்டிருக்கக் கூடாது. அந்த மாயக்காரி அப்படி என்ன வசியம் வச்சாளோ, இவன் அவகிட்ட இப்படி மயங்கிக் கிடக்குறான். அவளுக்கு மட்டும் எப்படித்தான் இப்படி அமையுதோ?’ என்று புழுங்கிக் கொண்டிருந்தாள்.
“சாரியோட வேல்யூ தெரியுமா மிஸ். வானதி? தெரிஞ்சுருந்தா, இப்படி அநாயசமா அள்ளித் தெளிக்க மாட்டீங்களே! தெரியாம பேசிட்டீங்களா? அதை நான் நம்பணுமா? என் அனுபவத்துல உங்களை மாதிரி எத்தனை பேரை பார்த்திருப்பேன்? உங்களுக்கு இதுதான் கடைசி எச்சரிக்கை, இன்னொரு முறை இராவைப் பத்தி எதாவது தப்பா புரளி வெளிய வந்துச்சு… சொல்ல மாட்டேன், செஞ்சு விட்ருவேன்!” என்று மிரட்டியவன், அவன் வழியில் சென்றான்.
“என்னடி இது? இப்படி மிரட்டிட்டு போறான்? எதுவும் செஞ்சுடுவானா?” என்று தமயந்தி கேட்க, “ஹ்ம்ம், பத்திரிக்கைகாரன் வேற… செஞ்சாலும் செய்வான்!” என்று பெருமூச்சை வெளியிட்ட வானதியோ,
“ஆனாலும், போயும் போயும் அவளுக்கு இவனை மாதிரி ஒருத்தன் கிடைச்சுட்டானே. ஹ்ம்ம், எத்தனை நாளைக்குன்னு பார்க்கிறேன். சொந்த அப்பா அம்மாவே வேண்டாம்னு ஒதுக்கி வச்சவளை, இவன் மட்டும் காவியமா கொண்டாடவா போறான்? கிடைச்ச வரைக்கும் லாபம்னு, கொஞ்ச நாள்ல தூக்கிப் போட்டுட்டுப் போயிடுவான்.” என்று வஞ்சத்தை வார்த்தைகளாகக் கக்கிவிட்டே அங்கிருந்து நகர்ந்தாள்.
‘அவன் மத்தவங்களை மாதிரி இல்ல.’ என்று கத்த வேண்டும் என்று எண்ணிய இராவோ, அடுத்த நொடியே, ‘இவளெல்லாம் ஒரு ஆளுன்னு இவளுக்கு விளக்கம் குடுக்கணுமா?’ என்று நினைத்தவள், அவளின் வீட்டிற்குள் நுழைந்தாள்.
சில நொடிகளுக்கு முன்பு…
அத்வைத்தைப் பின்தொடர்ந்து சில நிமிட இடைவெளியில் இராவும் அவளின் இல்லத்திற்குச் செல்ல வெளியே வந்திருந்தாள்.
அப்போதுதான் வெளியே அத்வைத்தின் குரல் மிரட்டும் தொனியில் கேட்க, அங்கேயே தேங்கி நின்றாள்.
அவனின் பேச்சோ, இராவிற்குள் அவன் விதைத்த நம்பிக்கைக்கு வலு சேர்ப்பது போலிருக்க, அவளையும் அறியாது அந்த தருணத்தையும், அவனின் பேச்சையும் ரசித்திருந்தாள்.
அவன் பேச்சை மட்டும் கேட்டவளோ, அந்த நேரத்தில் அவன் முகம் வெளிப்படுத்தும் பாவனையை எல்லாம் மனதிற்குள் கொண்டு வந்தாள்.
அவனை இவ்வளவு கவனித்திருக்கிறாளா என்று அவளே உணர்ந்த நேரம் அது!
அவனின் முகபாவனை மட்டுமல்ல, அவனிடம் மாட்டிக் கொண்ட வானதியின் முகபாவனையும் கண்முன் வர, ‘இவளுக்கு இது தேவையா?’ என்று சிரிப்புடன் எண்ணிக் கொண்டாள்.
அந்த சம்பவம் கொடுத்த சிறு நிறைவில், உறங்கச் சென்றாள் பாவை.
அவளின் மனதில் உண்டான நம்பிக்கை அடுத்த உறவுக்கு வழிவகுக்குமா, இல்லை அடுத்து நடக்கப் போகும் நிகழ்வுகளில் சிக்கிச் சின்னாபின்னமாகுமா? விதியின் கைகளில்!
*****
தன் இடத்திற்கு வந்த அத்வைத், நீண்ட நேரமாக சைலன்ட்டில் இருந்த அலைபேசியை நோக்கினான்.
அவன் எண்ணியது போலவே, ஆதிகேசவனிடமிருந்து அழைப்புகள் வந்திருந்தன.
முதலில், இராவைப் பற்றி அவரிடம் கூறலாம் என்று எண்ணியவன், பின்னர் அவளைப் பார்க்கும்போது இதை வைத்து ஆதிகேசவன் எதுவும் பேசிவிடக் கூடாது என்று எண்ணியவனாக, இராவின் அனுமதியின்றி அதைச் சொல்ல வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தான்.
எனவே, ‘ஐ’ம் டையர்ட். வில் கால் யூ டுமாரோ.’ என்ற செய்தியை மட்டும் தந்தைக்கு அனுப்பியவன், கட்டிலில் மல்லாக்க படுத்து விட்டான்.
அந்த ஒரே நாளில் அவனுக்கு நிறைய தகவல்கள் கிடைத்திருக்க, அவற்றை எல்லாம் சிந்தித்தபடி உறங்காமல் விழித்திருந்தான் அவன்.
அதுவும், இரா பேசியதை மீண்டும் மனதிற்குள் ஓட்டிப் பார்த்தவனுக்கு, ஒருபக்கம் அவளை எண்ணி வருத்தமாக இருந்தது என்றால், அவள் சொல்லாமல் விட்டு வைத்ததை எண்ணி குழப்பமாகவும் இருந்தது.
‘எதுக்கு இறப்பை பத்தி பேசணும்? அதுக்கு என்ன தேவை?’ என்ற யோசனையில் இருந்தவன், ‘என்னவா இருந்தாலும், அதை ஃபேஸ் பண்ணாம விட மாட்டேன். ஸ்டார்லைட், இந்த வாழ்க்கையில், நீ எனக்குத்தான், நான் உனக்குத்தான். அதை மாத்த யாராலயும் முடியாது.’ என்று உறுதியுடன் எண்ணியவன் நித்திரைக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தான்.
*****
எங்கு நோக்கினும் இருளின் ஆட்சியே நடைபெற்று கொண்டிருக்க, அதில் சிறு வெளிச்சமாக அவன் நின்று கொண்டிருந்தான்.
மறுபுறம், உருவமில்லா அருவமாக, இருளின் அரசனாக, அதன் கோரப்பசிக்கு இரையாக அனைத்தையும் விழுங்க வல்லதாக அதுவும் இருந்தது.
இருவருக்கும் இடையே நிராயுதபாணியாக அவளும் நின்றிருந்தாள்.
கண்களில் பொங்கிய கண்ணீரும், கைகளில் வழியும் குருதியுமாக இருந்தவள், இறுதி முறையாக அவளவனைக் கண்டாள்.
அவன் ‘வேண்டாம்’ என்று தலையசைக்க, அவன் உடலில் வழியும் குருதியையும், தன் கரத்திலிருந்த குருதியையும் கண்டவள், அவளின் முடிவில் உறுதியாக மாறினாள்.
அவனைக் கண்ணோடு கண் நோக்கியவள், “என் வாழ்க்கையோட லட்சியமே என்னோட இறப்புதான்னு வாழ்ந்துட்டு இருந்த எனக்கு, வாழ்க்கையோட அழகான தருணங்களை பரிசா குடுத்தீங்க. எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்க மாதிரி, அந்த அழகான தருணங்களுக்கும் முடிவு இருக்கு. இதுதான் அந்த முடிவுன்னு நினைக்கும் போது, ஏத்துக்க கஷ்டமாதான் இருக்கு. ஆனா, என்ன செய்ய? ஏத்துகிட்டு கடந்துதான ஆகணும். நீங்களும் என்னைக் கடந்து, உங்க வாழ்க்கையை சந்தோஷமா வாழனும்.” என்றவள், இறுதியாக, “ஐ லவ் யூ அத்து!” என்றாள் அவன் எதிர்பார்த்த வர்ணஜாலங்களுடன், அழுகையையும் ஒரு வர்ணமாக சேர்த்தபடி!
“நோ…” என்று அவன் கத்த, அதைக் கேட்க முடியாமல், மனதளவில் கல்லாக மாறியவளாக, அவளுள் ஊடுருவும் சக்தியின் ஆற்றல் மொத்தத்தையும் வெளிப்படுத்தியவாறு, அந்த அருவத்தை நோக்கி நடந்தாள்.
அவள் வெளிப்படுத்திய சக்தியின் ஒளியில் மற்றதெல்லாம் மங்கிப் போக திடுக்கிட்டு கண் விழித்தாள் இரா.
அவளுக்கு கனவெல்லாம் புதிதல்ல. அதுவும், கனவில் எத்தனையோ முறை அவளின் இறப்பை விதவிதமாக கண்டிருக்கிறாள்.
ஆனால், அத்வைத்தும் அவனிடம் அவள் உரைத்த காதலும் புதிதல்லவா!
அது ஏற்படுத்திய கனத்தை தாங்க முடியாமல் அழுதாள் இரா.
அவனுக்காக அழுகிறாளா, அவளுக்காக அழுகிறாளா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், அழுதாள்.
‘இதுதான் உன்னோட முடிவு போல! இதுக்குள்ள அவனையும் இழுத்து விடணுமா?’ என்று அவளின் உள்மனம் பயமுறுத்த, ‘இல்ல, எதுவா இருந்தாலும் நான் மட்டுமே அதை ஃபேஸ் பண்ணிக்கிறேன்.’ என்று கண்களை இறுக்கி மூடி தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.
‘அதுதான் சரி! இதுக்கு முன்னாடி எப்படி இருந்தியோ, அப்படியே இரு. அவனை சீக்கிரம் இங்க இருந்து அனுப்பப் பாரு. அதுதான் எல்லாருக்கும் நல்லது.’ என்றது அவளின் மனம்.
முடிவை எடுத்தவளாக, உறக்கம் தொலைத்து, விழிகள் கலங்க அகிருந்த இருளை வெறித்திருந்தாள் இரா.
*****
நன்றாக உறங்கிக் கொண்டிருந்த அத்வைத்திற்கு திடீரென்று ஏதேதோ காட்சிகள் படமாக ஓடுவது போல தெரிந்தது.
அது என்னவென்று தெளிவாக தெரியவில்லை என்பதால் புருவம் சுருக்கி அங்கிருந்தவர்களை காண முயன்றான் அத்வைத்.
அதில், ஒருத்தியின் முகம் மட்டும் மங்கலாக தெரிய, இருப்பினும் அவள் யாரென்று கண்டு கொண்டான்.
“ஸ்டார்லைட்…” என்று அவன் தூக்கத்திலேயே முணுமுணுக்க, அங்கோ அவனின் குரல் அவளை எட்டவில்லை போலும், இருட்டை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தாள்.
அங்கு என்ன நடக்கிறது என்று இன்னமும் அத்வைத்திற்கு புரியவில்லை.
அப்போது அவன் செவியில் யாரோ, “அவளைத் தடுத்து நிறுத்து. உன்னாலதான் அது முடியும்.” என்று தொடர்ந்து யாரோ சொல்லிக் கொண்டிருப்பது போலிருக்க, அந்த மர்ம நபரைக் காண முயன்றான் அத்வைத்.
இருளின் பிடியில் இருந்த இடத்தில் அருகில் இருப்பவரைக் கூட சட்டென்று இனம் காண முடியவில்லை.
“என்னை எதுக்கு பார்த்திட்டு இருக்க? அவளை சீக்கிரம் போய் காப்பாத்து.” என்று அந்தக் குரல் அவசரப்படுத்த, அத்வைத்திற்கு அந்த சமயத்தில், அந்த மர்ம நபர் யாரென்று அறிந்து கொள்வதில்தான் ஆர்வம் அதிகமாக இருந்தது போலும்.
இன்னும் சில அடிகள் அருகே செல்ல, அந்த நபரின் முகம் சிறிது சிறிதாக தெரிய ஆரம்பித்தது.
தெளிவாக தெரிந்த முகத்தைக் கண்ட அத்வைத்தோ திகைப்பில், “வாசு…” என்று விளிக்க, “ஆமா வாசுதான். எவ்ளோ நேரம் கூப்பிடுறது? கண்ணைத் திறந்து பாருங்க சார்.” என்று காதருகே கத்தினான் வாசு.
அதில், அடித்துப் பிடித்து விழித்தான் அத்வைத்.
அவன் முன்னே நின்றிருந்த வாசுவோ, “நீங்க எல்லாம் எதுக்குத்தான் மொபைல் வச்சுருக்கீங்களோ?” என்று அலுத்துக் கொண்டவன், அவனை ஒரு மார்க்கமாக பார்த்தபடி, “ஆமா, நான் எதுக்கு உங்க கனவுல வரேன்? ஒருவேளை… ச்சீ, நானெல்லாம் அந்த மாதிரி பையன் இல்ல.” என்று முகத்தைச் சுழித்தான்.
அதுவரை, தனக்கு ஏன் இப்படி ஒரு கனவு வர வேண்டும் என்ற யோசனையில் இருந்த அத்வைத், வாசுவின் புகாரைக் கேட்டதும், அங்கிருந்த தலையணையை அவன் மீது வீசினான்.
“க்கும், உங்க மொபைலுக்கு சார்ஜை போட்டுப் பாருங்க சார்.” என்றபடி வெளியேறினான் வாசு.
அந்தக் கனவின் தாக்கத்தால், தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான் அத்வைத்.
‘இன்னைக்கு முழுக்கதையையும் கேட்டாதான் இதுக்கு பதில் கிடைக்கும்.’ என்று முடிவிற்கு வந்தவன், இராவைக் காண கிளம்பினான்.
*****
இரா, அவளின் பணிக்காக கிளம்பி வெளியே வர, அங்கு அவளுக்காக காத்திருந்தார் ஐங்கரன்.
அவளோ அவரைக் கண்டு கொள்ளாமல் கிளம்ப முற்பட, “இரா, நேத்து வீட்டுக்கு வந்தியா?” என்றார் அவர்.
“ஏன், அதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா?” என்று விதாண்டவாதமாக கேட்டாள் இரா.
அந்தக் கனவு அவளின் மனநிலையை முற்றிலுமாக மாற்றியிருந்தது.
முன்னர் எப்படியோ, முன்தினம் அத்வைத் அளித்த நம்பிக்கையும், அதைத் தகர்த்தெறிவதாக வந்திருந்த கனவும், அவளை மொத்தமாக பாதித்திருந்தது.
அந்த எதிர்வினைதான் ஐங்கரனிடம் அவளை எகிற வைத்தது.
“நான் அப்படி சொல்லல இரா.” என்று ஐங்கரன் சமாதானமாகப் பேச வந்தாலும், “போதும், உங்ககிட்ட நான் பேச விரும்பல.” என்று முகத்திலடித்ததைப் போல கூறியவளை, அதிர்ச்சியுடன் பார்த்தார் அவளின் தந்தை.
முன்னரும், பெற்றோரிடம் முகம் கொடுத்து பேச மாட்டாள்தான். ஆனால், ஒருபோதும் இப்படி முகத்திலடித்ததைப் போன்று பேசியதில்லை.
அதைத் தாங்கிக் கொள்ள முடியாத ரூபிணியோ, “நில்லு இரா, அப்பா கிட்ட இப்படித்தான் பேசுவியா?” என்று கண்டிக்க, “அப்பாவா? ஓஹ், இருபத்தியோரு வருஷம் மட்டும் அப்பா – அம்மாவா இருந்தீங்களே, அதைச் சொல்றீங்களா?” என்று நக்கலாக வினவினாள் இரா.
அதைக் கேட்டு வேதனையில் முகம் கருக்க நின்ற ஐங்கரனோ, “விடு ரூபி…” என்று கூற, “எப்படிங்க விட முடியும்? எல்லாம் அந்த பையனால வந்தது. இதுவரை இப்படி பேசியிருப்பாளா இவ? இதுல, நேத்து நம்மளை அனுப்பி வச்சுட்டு, அந்தப் பையனை வீட்டுக்கே வரச் சொல்லியிருக்கா. தனியா அப்படி என்னதான்…” என்று பேசிக் கொண்டே போனவரை, “ரூபிணி…” என்று கத்தி தடுத்திருந்தார் ஐங்கரன்.
அப்போதுதான் ரூபிணிக்கு அவர் பேசியதன் பொருள் புரிந்தது.
அதற்கான வருத்தப் பார்வையுடன் மகளைக் கண்டவர், “சாரி இரா…” என்று ஏதோ கூற வர, கையுயர்த்தி அவரைத் தடுத்தவளோ, “உங்களுக்கு என்மேல இருக்க நம்பிக்கையைப் பத்திதான் எனக்கு ஏற்கனவே தெரியுமே. இதனால, நான் பெருசா ஒண்ணும் ஃபீல் பண்ணப் போறதில்ல. அதான், முன்னாடியே மொத்தமா ஃபீல் பண்ணி முடிச்சுட்டேனே.” என்றாள்.
“இராம்மா, நேத்து ஊருக்கு வர வழியில, உன்னோட வேலை செய்யுற பொண்ணுதான், அந்தத் தம்பி இங்க வந்ததை சொன்னா. அதோட…” என்று ஐங்கரன் அதற்கு மேல் சொல்லாமல் விட, ‘அவ சொன்னா, நம்பிடுவீங்களா?’ என்று விழிமொழியாலேயே கேள்வி கேட்டாள் அவரின் புதல்வி.
அதற்கு என்னவென்று பதில் சொல்லுவார். அவரும், மனைவி இப்படி கேட்பாள் என்று எண்ணவில்லையே!
வெளியே செல்லப் போனவள், திரும்பி அவர்களைப் பார்த்து, “உங்ககிட்ட கிடைக்காத ஆறுதல், அவருக்கிட்ட எனக்கு கிடைச்சது. நீங்க எனக்குத் தராத நம்பிக்கையை, அவரு எனக்குத் தந்தாரு.” என்று பெருமூச்சை வெளியிட்டவள்,
“அதனாலேயே, அவரை விட்டு விலகி இருக்கப் போறேன். அவரை விலக்கப் போறேன். என்னோட துரதிர்ஷ்டம் அவரையும் பிடிச்சுக்கக் கூடாதுல. சோ, இனிமே நீங்க கவலைப்பட வேண்டியதிருக்காது. உங்க பொண்ணு எப்பவும் போல தனியாவே இருப்பா… தனியாவே அவளோட இறப்பை எதிர்நோக்கி காத்திருப்பா.” என்றவள் அவளின் பணியிடத்தை நோக்கிக் கிளம்பினாள், அவனை தள்ளி நிறுத்த வேண்டும் என்ற முடிவுடன்.
*****
காட்டு அம்மன் கோவில்…
காலை நேர பரபரப்புகள் எதுவும் இல்லாமல், அமைதியாக இருந்தது. சுற்றிலும் ஏதாவது நடமாட்டம் தெரிகிறதா என்று கவனித்தபடியே அந்த கோவிலுக்குள் நுழைந்தது அந்த உருவம்.
முதல் நாள் இரவு வந்த வேலை முடியாத காரணத்தினால், இப்படி மீண்டும் வர வேண்டியதாகிற்றே என்ற புலம்பலுடன், கோவிலின் சுற்று சுவருக்கு உள்ளே, ஒரு குறிப்பிட்ட பகுதியை, சற்று தடிமனான மரக்கிளையைக் கொண்டு தோண்ட ஆரம்பித்தது.
அவ்வபோது, அதன் கவனம் அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இருக்கிறதா என்று பார்ப்பதிலும் இருந்ததால், சற்று நேரம் பிடித்தது.
ஒருவழியாக, வேண்டப்பட்ட ஆழம் வரை தோண்டி முடித்ததும், உள்ளே ஏதாவது இருக்கிறதா என்று தேட, அதற்கான விடை சூனியம்தான்.
“ப்ச், எங்கதான் போச்சு?” என்று முணுமுணுத்த அந்த உருவம், நேரமாகி விட்டது என்பதால் வேறு வழியில்லாமல் அங்கிருந்து கிளம்பியது.
அந்த உருவம் தேடி வந்த பொருளோ, அத்வைத்திடம் பத்திரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது!
தொடரும்…