அத்தியாயம் 6
“என்ன டா விளையாடுறியா?” கண்ணகி மகனிடம் கேட்க,
“நீங்க தான் விளையாடுறிங்க. லீவ்ல தானே வந்தேன்? இப்பவே நாலு நாள் ஆச்சு” என்றான் கார்த்திகைசெல்வனும்.
ஊருக்கு மாலை செல்வதற்கு தயாராய் அனைத்தையும் எடுத்து பையில் வைத்திருந்தான்.
“கார்த்தி! என்ன பேசுற நீ? அப்போ தேவா?” என மகன் செயலில் பரமேஸ்வரனும் அதிர்ந்து கேட்டார்.
அதிர்ந்து நின்றிருந்த தேவதைர்ஷினியை கண்டவன், “என்னை என்ன பண்ண சொல்றிங்க? வேலையை அப்படியே விடவா?” என்றவன் அங்கிருந்து ஹாலுக்கு வர, அன்னையும் தந்தையும் அவன் பின்னேயே வந்தனர்.
“நீ பண்றது நல்லா இல்ல கார்த்தி. நடந்ததை யாராலும் மாத்த முடியாது. புரியுதா இல்லையா?” அர்த்தத்தோடு அழுத்தமாய் பரமேஸ்வரன் கேட்க,
“நான் இல்லைன்னு சொல்லல ப்பா. நான் போய்ட்டு என்னனு சொல்றேன்!” என்றவனுக்கு இங்கிருந்து கிளம்பிவிட்டாள் போதும் என்பதை போல மூச்சுமுட்டிவிட்டது.
“அப்போ தேவாவையும் கூட்டிட்டு போ!” என்றார் தடலாடியாய் கண்ணகி.
சட்டென திரும்பி அன்னையை அவன் முறைத்துப் பார்க்க, கண்ணகி அருகே வந்து நின்றாள் தேவதர்ஷினி.
“இவ அம்மா அப்பா என்ன டா நினைப்பாங்க?” என்றவர்,
“தெரியாத நாயை விட தெரிஞ்ச பேயே பரவால்லன்னு தான் உன்னை மண்டபத்துல மாப்பிள்ளையா உக்கார வச்சேன். நீ என்னவோ ரொம்ப பண்ணிட்டு இருக்க. என்ன தான் உன் பிரச்சனை?” என்று கேட்க, பதில் சொல்லாமல் நின்றான் அவன்.
“ப்ச்! கார்த்தி! என்ன தான் நினைச்சுட்டு கிளம்புற. தெளிவா சொல்லு!” என கார்த்திகைசெல்வன் தோளில் கைவைத்தார் பரமேஸ்வரன்.
“எனக்கும் தெரில ப்பா. இப்போதைக்கு ஊருக் போகணும். அவ்வளவு தான்!” என்று சொல்லிவிட,
“இருக்கட்டும் த்தை! எல்லாம் எதிர்பார்க்காம தானே நடக்குது? கொஞ்சம் அவங்களையும் நாம யோசிக்கணுமே! போய்ட்டு ஒரு மாசமோ ரெண்டு மாசமோ.. அப்புறம் வந்து கூட்டிட்டு போகட்டும். அதுவரை நானும் உங்களோட இருப்பேன்ல?” என்ற தேவதர்ஷினியை பாவமும் பரிதாபமும் என கண்ணகி பார்க்க, உள்ளுக்குள் என்னவோ குறுகுறுவென குத்த ஆரம்பித்தது கார்த்திகைசெல்வனுக்குமே அவளின் இந்த பேச்சு.
ஆனால் மகனின்மேல் அத்தனை கோபம் அத்தனை ஆதங்கமும் இல்லாமல் இல்லை.
எதுவும் சொல்லாமல் அவர் கோபமாய் உள்ளே சென்றுவிட, அவர் பின்னேயே சென்றுவிட்டாள் தேவதர்ஷினியும்.
“கார்த்தி!” என கண்டிப்புடன் பரமேஸ்வரன் அழைக்க, அதன் வித்யாசம் நன்றாய் புரிந்தது கார்த்திகைசெல்வனுக்கும்.
“உன் அம்மா பண்ணினது தப்பு தான். ஆனா உன்னோட தப்பும் இதுல நிறையவே இருக்கு!” பரமேஸ்வரன் சொல்ல,
“நான் என்னப்பா பண்ணினேன்?” என எழுந்தான்.
“நீ எதுவுமே பண்ணிருக்க கூடாது கார்த்தி. எப்பாடுபட்டாவது அன்னைக்கு கல்யாணத்தை நிறுத்தி இருக்கனும். அதைவிட்டுட்டு இன்னைக்கு நீ இவ்வளவு பண்றது சுத்தமா சரி இல்ல!”
“நானும் அதுக்கு தான் ப்பா எவ்வளவோ ட்ரை பண்ணினேன். யாருமே என் பேச்சை கேட்கல. அம்மாவும் சரி அஷ்வினியும் சரி. ரெண்டு பேருக்குமே அவங்கவங்க குடும்பம் முக்கியமா போச்சு. இப்ப என்னை பேசுறாங்க!”
“அப்போ ரெண்டு பேருமே தெளிவா இருக்காங்கன்னு அர்த்தம் கார்த்தி. நீ மட்டும் தான் அப்பவும் ஸ்டேடியா இல்ல இப்பவும் ஸ்டேடியா இல்ல!” என்றார் பரமேஸ்வரன்.
“அஷ்வினி குடும்பத்துக்காக யோசிச்சு பண்ணான்னு நீயே சொல்ற. அவ யோசிச்ச அளவு அவளை விட பெரியவன் நீ யோசிக்கல தானே?” என்றவர்,
“எல்லாரும் தெளிவா தான் இருக்கீங்க. ஆனா இதுல பாவம் என்னவோ தேவா மட்டும் தான். ஆனாலும் இப்போ உனக்காக பேசிட்டு போறா”
“நானும் நீ வருத்தப்பட கூடாதுன்னு தான் பேசாம இருந்தேன். ஆனா இன்னைக்கு நீ கிளம்புறதுக்கு நான் துணையா இருந்தா உனக்கும் எனக்கும் வித்யாசம் இல்லாமல் போய்டும். இனியாவது உன்னை பத்தி மட்டும் நினைக்காம சுத்தி இருக்கவங்களையும் கொஞ்சம் நினச்சு பாரு!” என்று சொல்லி சென்றுவிட்டார்.
அவர் சொல்வது புரிந்தது தான். ஆனாலும் அதை உடனே ஏற்றுக் கொள்ள தான் முடியாமல் மனம் தடுமாறியது. தேவதர்ஷினியை அந்த இடத்தில் பொருத்திப் பார்க்க முடியாமல் மனம் அல்லாடியது.
மாலை நான்கு மணிக்கு சுந்தரி பெண்ணையும் மாப்பிள்ளையையும் அடுத்த நாள் வீட்டிற்கு விருந்திற்கு அழைக்க வர, அங்கே கண்ணகி புலம்பியதை கேட்டு அவருக்குமே அதிர்ச்சி தான்.
“என்ன கார்த்தி!” என்பதற்கு மேல் என்ன சொல்வதென அவருக்கும் தெரியவில்லை.
அன்னை தந்தை சொல்லாததையா தான் சொல்லிவிட என தான் அதிருப்தியாய் பார்த்தார்.
அனைவரின் எதிர்ப்பும் புரிய தான் செய்தது. ஆனாலும் அன்று மாலை கிளம்பிவிட்டான் பெங்களூர்.
தேவதர்ஷினியிடம் சிறு தலையசைப்பை கூட கொடுக்கவில்லை. ஒற்றைப் பார்வை கொடுத்தவன் அவள் பார்வையையும் வாங்கிக் கொண்டு புறப்பட்டுவிட்டான்.
“லீலாகிட்ட சொன்னா வருத்தப்படுவாளே!” என கண்ணகி கவலையாய் சொல்ல,
“அதுக்காக மறைக்க முடியுமா நான்? என்னை என்ன நினைப்பா அவ?” என்ற கண்ணகிக்கு அத்தனைக்கு கவலையாகி போனது.
தன் மகனை தானே பெருமையாய் நினைத்து திருமணம் செய்து வைத்திருக்க, இப்பொழுது அவன் கிளம்பி சென்ற விதம் கேட்டு லீலா தன்னை என்னவெல்லாம் நினைப்பாளோ என மனம் கனக்க நினைத்து அதையும் சுந்தரியிடம் புலம்பி வைத்தார்.
“அப்படிலாம் லீலா நினைக்கிறவளா அண்ணி? அதுவும் உங்களையும் உங்க மனசையும் அவளுக்கு தெரியாதா? அவனுக்கு என்ன அவசரமோ? மாமன் பொண்ணுக்கு கல்யாணம்ன்னு ரெண்டு நாள் அவசரமா லீவு கேட்டு வந்தவன் நாலு நாள் இருந்ததே பெரிய விஷயம் தான். அப்படியே பாதில விட்டுட்டு வந்திருப்பான். அங்க அவனுக்கு மேல இருக்கவங்க கேட்பாங்க தானே?” என சுந்தரி தான் சமாதானம் செய்யும் நிலைமை வந்தது.
எழு மணிவில் வரை கண்ணகி வீட்டில் தான் சுந்தரி அமர்ந்திருந்தார் அவருக்கு ஆறுதலாய் பேசிக் கொண்டு.
“நீ எதுவும் நினைக்காத தேவா! சீக்கிரமே வந்து உன்னை கூட்டிட்டு போவான். எத்தனை நாள் தான் கல்யாணத்துக்கு அப்புறமும் இந்த பசங்க தனியா இருப்பாங்கன்னு நினைக்குற?” என அவளுக்குமே பேசி மனதை மாற்றி என சுந்தரி கிளம்பியவர்,
“இந்த அஷ்வினிக்கு வேற காய்ச்சல். நேத்து தான் ரெண்டு நாள் லீவுக்கு அப்புறம் காலேஜ் போனா. இன்னைக்கு காய்ச்சல்ன்னு மதியமே வந்துட்டா. நான் போய் அவளை என்னனு பாக்குறேன். நீங்க அவனை நினைச்சுட்டு அப்படியே இருக்காம போய் தேவாவை கவனிங்க அண்ணி!” என கண்ணகிக்கு சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
கண்ணகியும் தேவதர்ஷினிக்காக தான் எழுந்து அடுத்த வேலை என நகர்ந்ததே!
தம்பி வீட்டில் இருந்து தன் குடும்பத்தை நம்பி வந்த பெண். இப்பொழுது கணவனின் செயலில் அவளும் வாடி இருப்பாள் என புரிந்து அவளுக்காக தன்னைத் தானே தேற்றிக் கொண்டு சமையல் செய்து மருமகளையும் சாப்பிட வைத்து பேசிக் கொண்டு இருந்து என அன்றைய பொழுது அப்படியே தான் சென்றது.
லீலா, அஷ்வினி, கயல்விழி, கணேசன், பசுபதி என அனைவரும் ஒன்றாய் வெளியில் அமர்ந்திருந்தனர் சுந்தரி வரும் நேரம்.
“என்ன க்கா சொல்றிங்க? கார்த்தி ஊருக்கு போய்ட்டானா?” என லீலாவும் அதிர்ந்தார் சுந்தரி வந்து கூறியதும்.
அஷ்வினியும் இதை எதிர்பாராதவள் சுந்தரி சொல்வதை கேட்க, கண்ணகியிடம் கூறியதையே இங்கே லீலாவிடமும் கூறி சமாதானமாய் பேசி வைத்தார் சுந்தரி.
“காய்ச்சலை வச்சுக்கிட்டு இந்த பனில வந்து உக்காந்திருக்க? உள்ள போ அஷ்வினி!” என சுந்தரி மகளை சொல்லிவிட்டு வீட்டிற்குள் வந்தவர் கணவர் கணேசன் உள்ளே வரவும் கார்த்திகைசெல்வனை அத்தனை பேசி வைத்தார்.
“கார்த்தியை நானும் என்னவோ நினைச்சேன்ங்க. ஆனா அவன் இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்ல. இதையே கண்ணகி அண்ணிகிட்டயோ லீலாகிட்டயோ சொன்னா வருத்தபடுவாங்களேன்னு தான் சொல்லல” என்ற சுந்தரி,
“கல்யாணம் பண்ணி நாலு நாள்ல பொண்டாட்டியை தனியா விட்டுட்டு போற அளவுக்கு அவனுக்கு அப்படி வேலை முக்கியமா போச்சா?” என கோபமாய் கேட்டார் கணவனிடம்.
“அவனுக்கு என்ன பிரச்சனையோ!” என கணேசனும் தன் சகோதரி மகனுக்கு ஆதரவாய் பேச,
“இருக்கட்டுமே! நாலு வார்த்த அந்த பொண்ணை கூப்பிட்டு ஆறுதலா பேசி இத்தனை நாளுல வர்றேன், வந்து கூட்டிட்டு போறேன்னு சொல்லனுமா இல்லையாங்க? நானும் பார்த்துட்டு தான் நிக்குறேன் கல்லுளிமங்கன் மாதிரி அந்த பொண்ணுகிட்ட சொல்லிக்காம போறான். என்ன பாடுபடும் நம்ம தேவா மனசு. அவளா இருக்க போய் இத்தனை பொறுமையா இருக்கா. நம்ம அஷ்வினி மாதிரி எல்லாம் வாச்சிருக்கணும் அவனுக்கு. அப்போ தெரியும். இந்தமுறை விட்டுட்டேன். அடுத்து அவன் ஊருக்கு வரட்டும். புடிச்சு வச்சு நாலு கேள்வி கேட்குறேனா இல்லையா பாருங்க!” என வாட்டி எடுக்க, அத்தனையையும் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள் அஷ்வினியும்.
“கண்ணகி அண்ணி பேச்சுக்கு மதிப்பு கொடுத்து கல்யாணம் பண்ணிகிட்டான்னு இப்பவும் கார்த்தியை நினைச்சு பெருமையா தான் இருக்கு. ஆனா கட்டிக்கிட்ட பொண்ணு மனசையும் புரிஞ்சிக்கணும் தானேங்க? அண்ணிக்கும் அத்தனை கவலை. அவங்களும் புலம்பிட்டாங்க என்கிட்ட. நான் என்ன பண்ண? எரியுற நெருப்புல எண்ணையை ஊத்தவான்னு சமாதானமா நாலு வார்த்தை பேசி வச்சுட்டு வந்திருக்கேன்!” என்றார் இன்னும் கார்த்திகைசெல்வனை பொருமிக் கொண்டு.
அதுவரை மௌனமாய் இருந்த அஷ்வினி வீட்டிற்குள் சென்று கார்த்திகைசெல்வன் திருமணத்திற்கு பின் முதல்முறையாய் தானே அவனுக்கு அழைத்திருந்தாள்.
பேருந்தில் ஏறி அமர்ந்து ஒரு மணி நேரம் தாண்டியும் மனது சமனடையாமல் எதனுள்ளோ உழன்றுக் கொண்டே இருந்தது கார்த்திகை செல்வனுக்கு.
அங்கிருக்கும் போது தான் இந்த பிரச்சனை என்று கிளம்பி வந்திருக்க, இப்பொழுதுமே மனதின் அலைப்புறுதல் அவனை இருக்கவிடவில்லை.
அத்தனை பேருக்கும் தேவதர்ஷினியின் மேல் இருக்கும் அந்த பாசம். அதை தெரியாதவன் இல்லையே! இதுவே தனக்கு ஒன்று என்றாலும் அன்னை முதற்கொண்டு சுந்தரி அத்தை, லீலா அத்தை என தனக்கும் வந்து நிற்பார்கள் தானே என புரிந்தது அவனுக்குமே!.
மூன்று இரவுகளை அந்த அறைக்குள் அதுவும் தன் அறைக்குள் தேவதர்ஷினியுடன் என சுத்தமாய் உறக்கம் பறிபோயிருந்தது அவனுக்கு.
முதல் நாள் அவ்வளவு பேசியவள் அடுத்த இரண்டு நாட்களும் இரவு ஒரு வார்த்தை பேசவில்லை. வந்ததும் வழக்கமாய் சோஃபாவில் சென்று சாய்ந்து கொள்ளுவாள்.
பகல்களிலும் தேவையான பேச்சுக்கள் மட்டும் தான். ஆனாலும் பார்த்து பார்த்து என அன்னை தந்தை முன் அவளே தனக்கு பரிமாறியதும் தன் அருகில் வந்து நின்று கொண்டதும் என இன்னுமே அவனுக்கு அது கஷ்டமான தருணங்கள்.
இத்தனைக்கும் நான்கு நாட்கள் என்ற கணக்கில் தன்னிடம் வந்து நின்ற பெண்ணிடம் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசிஇருக்கவில்லை அவன்.
இப்பொழுதும் கூட என்னென்னவோ எண்ணத்தின் அலைக்கழிப்புடன் பேருந்தில் தலையில் கைவைத்து அவன் அமர்ந்திருக்க, கையில் இருந்த கைபேசி, “அஷ்வினி” என்ற பெயர் தாங்கி ஒளிர்ந்து அவன் எண்ணத்தை திசைமாற்றியது.
தொடரும்..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
15
+1
+1
1