அத்தியாயம் 9
உறங்கிக்கொண்டிருந்த புவித்தின் மீது அழுத்தமாய், காதலாய், கனிவாய் படிந்திருந்தது அகனிகாவின் பார்வை.
அவனோடு பேரின்பமாய் ஓர் வாழ்வு வாழ்ந்திட கொள்ளை விருப்பம் அவளுக்கு. ஆனால் அதற்கு தடையாய் அவளே.
கொண்ட உறுதி அவனிடமிருந்து விலகி நிற்கச் சொல்கிறது.
புவித்தின் ஆழ் அன்பு அவன்பால் கட்டி இழுக்கிறது. இரண்டிற்கும் இடையில் அலையில் மிதக்கும் மிதவையாய் தத்தளித்துக் கொண்டிருக்கிறாள்.
அந்த தத்தளிப்பின் தடுமாற்றமே அனைத்தும் மறந்து முந்தைய இரவில் அவனுடன் நெருங்கியது. மனம் திறந்து பேசியது எல்லாம்.
இப்பொழுது அவன் கண் திறந்தாலும் இரவில் தோன்றிய இயல்பான பேச்சு அவனிடத்தில் தனக்கு தன்னைப்போல் வருமா என்பது அவளிடம் சந்தேகமே.
“சாரி மாமா. உன் லவ் என்னை பலவீனமாக்கும். உன்னோட வாழனுங்கிற ஆசை வந்துட்டா நான் என் முடிவிலிருந்து விலகிடுவேன். அதுக்கு நான் உன்னைவிட்டு தள்ளி நிற்கிறது தான் ரெண்டு பேருக்குமே நல்லது” என உறங்கிக் கொண்டிருப்பவன் முகம் பார்த்து மெல்லொலியில் மொழிந்தவள், நேரமாவதை உணர்ந்து அலுவலகம் செல்ல கிளம்பத் துவங்கினாள்.
அகா குளியலறைக்குள் புகுந்ததும், தூங்கிக் கொண்டிருப்பவனாக கண்கள் மூடியிருந்த புவித் இமைகள் திறந்து எழுந்தமர்ந்தான்.
“எவ்வளவு தூரம் போகணுமோ போடி…” என்றவனிடத்தில் அவள் மீதான நேசம் மட்டுமே.
அகா காக்கி உடையில் தயாராகி கீழே வர, புவித் கல்லூரி செல்லும் தோற்றத்தில் உணவு மேசை இருக்கையில் அமர்ந்திருந்தான்.
அங்கு விதார்த்துக்கு பவானி உணவு வைத்துக் கொண்டிருக்க, நேராக வாயிலை நோக்கிச் சென்ற அகாவை தடுத்து நிறுத்தியது புவித்தின் அழைப்பு.
“ஹோய் பொண்டாட்டி…”
அவளுக்கே அவ்வழைப்பு அதிர்வென்றால் காலை நேரப்பரபரப்பில் அங்குமிங்குமாக இருந்த குடும்பத்தினருக்கு சொல்லவும் வேண்டுமோ?
தட்டில் உணவு வைக்கச் சென்ற பவானியின் கையில் அதிர்வு. உணவினை மென்று கொண்டிருந்த விதார்த் பொங்கி வந்த சிரிப்பினை சத்தமின்றி சிதறவிட்டான்.
ஆறு வயது மகள் ரீனாவுக்கு பின்னலிட்டுக் கொண்டிருந்த வர்ஷினி நமட்டு சிரிப்பை உதிர்த்தாள்.
கூடத்தில் தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருந்த கணவருக்கு தேநீர் எடுத்து வந்த அகிலா ஜெர்க்காகி நிற்க, சத்தம் வந்தா திசையில் திரும்பிப் பார்த்தார் சிதம்பரம்.
அகிலாவுக்கு எதிரே வாயில் பக்கம் எடுத்த அடி முன்னோக்கி வைக்க முடியாது திரும்பிய அகா,
இங்க வா எனும் விதமாக இமைகள் மூடி திறந்த கை அசைத்த கணவனின் அழைப்பை மீற முடியாது, தன்னை முறைத்துக்கொண்டு நின்ற அகிலாவை சிறு பார்வை பார்த்திட்டு உணவுமேசை அருகில் சென்றாள்.
புவித்தின் அருகில் சென்ற அகாவையே பார்த்து நின்ற அகிலா கையிலிருக்கும் தேநீரையும் கணவரையும் மறந்துப் போனார்.
“டீ ஆறிப்போன கசக்கும் அகிலா.”
சிதம்பரத்தின் குரலில் நிகழ் மீண்ட அகிலா, அவரின் கையில் கோப்பையை கொடுத்துவிட்டு, அங்கேயே அமர்ந்தார்.
“கிச்சனில் வேலை முடிஞ்சுதா? உட்கார்ந்திட்ட” என்ற சிதம்பரம், தேநீரை ருசித்தபடி மனைவியை பார்த்தார்.
அகிலா பதில் சொல்லாது இருக்க…
“உடம்பு முடியலையா?” எனக் கேட்டார்.
“அதெல்லாம் இல்லை. அவள் போகட்டும்” என்றார்.
“அகா இருந்தா என்ன?” என்ற சிதம்பரத்தின் பார்வையில் கடுமை.
“இல்லை போகட்டும்.”
“இது சரியில்லை அகிலா. அவளும் நம்ம வீட்டுப் பொண்ணு தான். அவள் மேல தப்பில்லைன்னு அப்போ புரியலன்னாலும், முடிஞ்ச இத்தனை வருஷத்துல புரிஞ்சிருக்கும். வீணா கோபத்தை இழுத்துப் பிடிச்சு நம்ம பசங்க சந்தோஷத்துக்கு நீயே தடையா இருந்துடாத” என்றார்.
அகிலா சிறு பதிலும் பேசாது தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த செய்தியில் கவனம் வைத்தார்.
சிதம்பரம் பெருமூச்சோடு திரும்பிக் கொண்டார்.
அகா உணவுமேசைக்கு வரவும் பவானி சமையலறைக்குள் சென்றுவிட்டார்.
“சாப்பிடலையான்னு கேட்டா தான் மேடம் சாப்பிட வருவீங்களா?” புவித் கேட்க, அமைதியாக பக்கத்து இருக்கையில் அமர்ந்தவள் தானாக உணவினை எடுத்து உண்ணத் துவங்கினாள்.
“புருஷன் சாப்பிட்டானா இல்லையான்னு கவனிக்கிற வேலையெல்லாம் இல்லை” என்று புவித் சொல்ல, வாயில் வைக்க எடுத்துச் சென்ற அகாவின் உணவடங்கிய கை அப்படியே நின்றது.
“ஆருஷ்” என்று கண்டிப்போடு பார்த்த விதார்த், “சும்மா இருடா” என்றுவிட்டு, “நீ சாப்பிடு அகா” என்றான்.
அவளோ உணவடங்கிய கையை புவித்தின் வாயருகே நீட்டிருந்தாள்.
அகாவின் விரல்கள் மொத்தமும் தனது உதட்டில் பதியுமாறு உணவை வாங்கிக்கொண்டவன்,
“சாப்பிடு” என்றான்.
அவன் இதழ் ஸ்பரிசத்தில் இதம் உணர்ந்தவளுக்கு தன்னுடைய கையால் உண்ட அடுத்த வாய் உணவு அத்தனை சுவையளித்தது.
புவித் முகத்தை கன்னம் தாங்கி அவளை ரசித்தவாறு இருக்க…
விதார்த் சிறு புன்னகையோடு அவனது தோளில் தட்டிவிட்டு சென்றான்.
அமைதியாக உண்டு முடித்து எழுந்தவள், காதில் விழுந்த செய்தியில் வேகமாக சிதம்பரத்திடம் சென்று அவரது கையிலிருந்த ரிமோட்டை வாங்கி மற்றச் செய்தி அலைவரிசைகளை மாற்றிப் பார்த்தாள்.
அனைத்திலும் முக்கியச் செய்தியாக மார்த்தாண்டத்தின் இறப்பும், மற்றொரு ஊரில் பெற்றோர் பள்ளியில் புகுந்து அடித்த ஆசிரியரின் இறப்பும் ஓடிக் கொண்டிருந்தது.
“இருவேறு இடங்களில் ஒரே மாதிரி ஒரே நேரத்தில் இறப்பினை சந்தித்த ஆசிரியர்கள்” என்று செய்தி வாசிப்பாளர் அடுத்தடுத்து விளக்கமாக வாசிக்கத் துவங்க,
“என்னாச்சு அகா?” என்று வினவினார் சிதம்பரம். அவளின் முகத்தில் கண்டுவிட்ட குழப்பத்தில்.
“இதே மாதிரி ரெண்டு டெத் நம்ம சிட்டியில் நேத்து நடந்தது மாமா” என்றவள், வேகமாக சுகனுக்கு அழைத்தாள்.
“மாரடைப்பு வந்து செத்துப்போயிருக்க இதிலென்ன சந்தேகம். நேரங்காலம் வந்தா போய் சேர வேண்டியதுதானே” என்று முனகியவாறு அகிலா நகர்ந்திட, நேற்று போல் இன்றும் இது தற்செயலான மரணமென்று கொஞ்சமேனும் நினைக்க முடியவில்லை அகனிகாவால்.
ரீனா, ரித்விக்கை பள்ளிச்செல்ல அழைத்து வந்த விதார்த்,
“டென்ஷன் ஆகாம டீல் பண்ணு அகா” என்று கூறிவிட்டுச் சென்றான்.
“பாய் சித்தி.”
பிள்ளைகள் இருவருக்கும் கையசைத்த போதும் அவளின் முகம் யோசனையில் ஆழ்ந்திருந்தது.
சுகன் அலைபேசியை எடுக்காதுப்போகவே,
“ஷிட்” என்று மீண்டும் அழைக்க முயல…
ஆணையரிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.
ஒரு கணம் அழைப்பு வந்த பெயரை உற்று நோக்கியவள் ஏற்று காதில் வைத்தாள்.
“குட்மார்னிங் சார்.”
“ஐஜி ஆபீஸ் வாங்க அகனிகா” எனக்கூறி ஆணையர் வைத்திட, வேகமாக வீட்டை விட்டு வெளியேறினாள்.
அப்போதுதான் மாடியிறங்கி வந்து கொண்டிருந்த மிதுனின் பார்வை புவித்தின் பார்வையோடு அர்த்தமாக கலந்து தொலைக்காட்சித் திரை தொட்டு விலகியது.
______________________________
ஐஜி அலுவலகம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.
ஏற்பட்ட மரணங்கள் இயற்கையானவையென்று ஒதுக்க முடியாதவையென இன்றைய இரு மரணங்கள் உணர்த்தியிருந்தன.
அகனிகா அங்கு வரும் முன்னர் காவல்துறையில் முக்கியம் வாய்ந்த அனைவரும் கூடிவிட்டிருந்தனர்.
கூட்டம் நடைபெறும் அறைக்குள் நுழைந்த அகனிகா விறைப்பாக சல்யூட் அடித்து தனக்கான இருக்கையில் அமர…
“குணசீலன், ஜார்ஜ்… இவங்க மரணம் என்ன சொல்லுது அகனிகா?” என ஐஜி பரசுராம் நேரடியாக வினவினார்.
“நேத்தே இது கொலையாக இருக்க வாய்ப்பிருக்குன்னு கெஸ் பண்ணிட்டோம் சார். ஆனால் எந்தளவுக்கு உண்மையா இருக்கும்னு அடுத்தகட்ட விசாரணையில் தான் தெரியவரும்” என்றாள்.
“ஜார்ஜ் இறந்து கிடந்த ஸ்கூலும் உங்க கண்ட்ரோலில் தான் வருது இல்லையா?” என்ற ஆணையர் மகேஷ், “எவ்வளவு சீக்கிரம் முடியுமோ முடிக்கப் பாருங்க” என்றார்.
“ஓகே சார்… கிவ் மை பெஸ்ட்.”
“குணசீலன், ஜார்ஜ் ரெண்டு பேருடையதும் கொலைன்னு எதை வச்சு சொல்றீங்க?” எனக் கேட்டார் பரசுராம்.
“ரெண்டு இடத்திலும் ஒரே மாதிரியான சின்ன அட்டைப்பெட்டி, தென்… அதிலிருந்த கில்லர் கோட்” என்றாள் அகனிகா.
“ரெண்டும் செக் பண்ணிப்பார்த்தீங்களா?”, மகேஷ்.
“ஜார்ஜ் டெத் ரிப்போர்ட் எல்லாம் அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கிட்ட கலெக்ட் பண்ணியாச்சு சார். இனி இவங்க ரெண்டு பேர் பற்றிய தகவல் விசாரிச்சு, இவங்களுக்குள்ள என்ன கனெக்ட் அப்படின்னு ஃபைன்ட் பண்ணிட்டா, இறப்புக்கான காரணம் என்னன்னு தெரிஞ்சிடும்” என்றாள்.
“இந்த வேகத்தை செயலிலும் காட்டுங்க” என்ற பரசுராம், “இன்னைக்கு நடந்த டெத் ரெண்டும் வேற வேற ஊராக இருந்தாலும். இதுக்கு கீழதான் வரும். சோ, அந்தந்த ஏரியா இன்வெஸ்டிக்கேட்டிங் ஆபிசர்சை உங்களை காண்டாக்ட் பண்ண சொல்றேன்” என்றார்.
“தேங்க் யூ சார்” என்று வெளியேறியவள் தன்னுடன் பின்னே வந்த சுகனிடம், “போன் பண்ணா அட்டெண்ட் பண்ணனும் சுகன். அனாவசியமா நான் உங்களுக்கு கால் பண்ணமாட்டேன். நான் கால் பண்ண எதும் எமர்ஜென்சி புரிஞ்சிக்கோங்க” என்றாள். வேகமாக நடந்து கொண்டே.
“சாரி மேம்” என்ற சுகன், “வெறும் அட்டை பெட்டியை மட்டும் வச்சு எப்படி மேம் கொலைன்னு சொல்ல முடியும்?” என்றான்.
“அதுதான் நமக்கான க்ளூ சுகன். கார்டியாக் அரெஸ்ட் கூட நார்மல் வச்சிப்போம். பட் அந்த பாக்ஸ், எப்படி ரெண்டு இடத்திலும் ஒரே மாதிரி இருக்க முடியும்?” என்றவள், “எந்தெந்த ஊர்?” எனக் கேட்டாள்.
“காஞ்சிபுரம், வேலூர் மேம்” என்ற சுகன், “அந்த ஏரியா ஆபீஸர்ஸ்கிட்ட பேசிடுறேன் மேம்” என்றான்.
“இல்லை சுகன்… நேர்ல போய் ஒருமுறை பார்த்திட்டா நல்லாயிருக்கும்” என்றாள்.
“எப்போ கிளம்பலாம் சொல்லுங்க மேம்” என்றவன், “குணசீலன் அண்ணா வந்து பாடி வாங்கிட்டுப்போகும் போது அவர் முகத்துல கொஞ்சமும் வருத்தம் இல்லை மேம். வேண்டா வெறுப்பா வாங்கிட்டுப் போனார்” என்றான்.
“ம்ம்” என்ற, “ஜார்ஜ் டெத் பிளேஸ் பார்க்கணுமே” என்றாள்.
“போலாம் மேம்” என்றவன், அந்தப்பகுதியின் திசையில் வாகனத்தை செலுத்தினான்.
செல்லும் பொழுது அகா பெஞ்சமினுக்கு அழைத்து குணசீலன் இறந்த இடத்தை ஆய்வு செய்யக்கூறி வைத்ததோடு, ஜார்ஜ் வழக்கை ஆய்வு செய்யும் அப்பகுதி காவலரை வரசொல்லிட அழைத்திருந்தாள்.
அகா பயிற்சி நிலையம் வருமுன் அப்பகுதி ஆய்வாளர் வந்திருந்தார்.
“ஸ்பாட் நல்லா எக்ஸாமின் பண்ணியாச்சா?”
ஆய்வாளர் மத்தையனிடம் அகனிகா கேட்டிட,
“பண்ணியாச்சு மேம். கிடைத்தது இந்த அட்டைப்பெட்டி மட்டுந்தான்” என்ற மத்தையன், “மர்டர் தான்னு தெரியுது. பட் அட்டாக் வரவைக்கிற மாதிரி எதுவும் நடந்ததா தெரியல. மொபைல் கையில் இருந்தது மேம். அதோட ஹிஸ்டரியிலும் நத்திங் யூஸ்ஃபுல்” என்றான்.
அகனிகா மூச்சினை இழுத்து வெளியேற்றினாள். அவ்விடத்தை சுற்றி பார்வையால் அலசியபடி.
நேற்று கொலை நடந்திருக்க, ஜார்ஜ் இறந்த இடமான பயிற்சி நிலையத்திற்கு விடுமுறை அளித்திருந்தனர்.
“இது என்ன மாதிரியான பாக்ஸ் அப்படின்னு எதும் தோணுதா?” என்றவள், “இவரெப்படி… கிளாஸ் ரூமில் இருந்ததை யாரும் நோட் பண்ணலையா?” எனக் கேட்டாள்.
“இங்க டைம் லிமிட் எல்லாம் கிடையாது மேம். அடுத்தடுத்து கிளாஸ் நடந்திட்டு இருக்கும். அந்தப்பக்கம் ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ். இங்க அரசு தேர்வுக்கு பிராக்டிஸ்” என்றார் அந்தப் பயிற்சி நிலையத்தின் நிறுவனர் சுப்பு.
“ம்ம்…” என்று அவ்விடத்தை சுற்றி நடந்த அகா, மீண்டும் அவர் அருகில் வந்தவளாக, “ஆள் எப்படி?” எனக் கேட்டாள்.
“ரொம்ப நல்லவர் மேம். எவ்வளவு நேரமானாலும் பசங்க கேட்கும் டவுட்ஸ் எல்லாம் க்ளியர் பண்ணிட்டு தான் போவார். பக்கத்துல தான் ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்க்கிறார்” என்ற சுப்பு, “பெண் பிள்ளைகளுக்கு விருப்பமான வாத்தியார் மேம்” என்றார்.
சுப்பு சொல்வதையெல்லாம் அசிரத்தையாகக் கேட்டுக் கொண்டிருந்தவள், அவர் இறுதியாகக் கூறியதில் நெற்றிச் சுருக்கினாள். சுகனை அர்த்தமாக ஏறிட்டாள்.
“அவரோட ஃபேமிலியை விசாரிச்சிங்களா மத்தையன்?” என்று அப்பகுதி ஆய்வாளரிடம் கேட்டவள், “அவரோட மெடிக்கல் ஹிஸ்டரி என்ன ஏதேன்னு விசாரிங்க” என்றாள்.
“இன்னைக்கு தான் மேம் ஜார்ஜ் வீட்டுக்கு விசாரணைக்கு போகலாம் இருந்தேன். அதுக்குள்ள நீங்க இங்க கூப்பிட்டுங்கன்னு வந்துட்டேன்” என்ற மத்தையன் அவள் அமைதியாக பார்த்திருக்கவும், நேற்றே விசாரணை செய்யவில்லை என்று பார்க்கின்றாளோ என நினைத்து, “டெத் ரிச்வெல்ஸ் முடிய லேட் ஆகிடுச்சு மேம். சோ, நேத்து விசாரிக்க முடியல” என்றார்.
“ஓகே… பட் இன்வெஸ்டிகேஷன் கொஞ்சம் ஃபாஸ்ட்டா மூவ் பண்ணுங்க. இது இத்தோட நிக்காதுன்னு தெரியுது” என்றாள்.
“யா சூர் மேம்” என்ற மத்தையன் ஜார்ஜ் வீட்டிற்கு செல்ல அங்கிருந்து புறப்பட்டிருந்தார்.
அகா அங்கேயே சுப்பு மற்றும் ஜார்ஜின் மாணவர்களிடம் மேற்கொண்டு விசாரணை முடித்து குணசீலன் இறந்த பள்ளிக்கு வந்தாள்.
அகா வருவதற்குள், நேற்று சுனில் ஆய்வு செய்திருந்த இடத்தை இன்று பெஞ்சமின் மீண்டும் ஒருமுறை செய்து முடித்திருந்தார்.
“கிளியர் ஸ்பாட்… நீதான் அகா எதும் கண்டுபிடிக்கணும்” என்ற பெஞ்சமின், “இதே மாதிரி வேற வேற ஊரில் நடந்திருக்குப்போல?” என்றான்.
“ஹ்ம்ம்…” என்ற அகா, “செத்தவன் எவனும் ஒழுங்கு இல்லை” என்றாள்.
“என்ன சொல்ற நீ?
“சுகன் சொல்லுவாரு” என்ற அகா அங்கிருந்த மரத்தடியில் சென்று அமர்ந்தாள்.
அவள் அமரவும் வாயிற் காவலாளி அவளருகில் வந்து, “ஏதாவது வேணுமா மேடம்?” எனக் கேட்டான்.
“ஆள் எப்படி?”
அகா குணசீலன் குறித்து கேட்கிறாள் என்பது புரிய,
“அவர் யார்கிட்டவும் பேசமாட்டார் மேடம். வருவாரு போவாரு. ஞாயித்து கிழமையில் கூட அவர் கிளாஸ் பிள்ளைகளை வரவச்சு பாடம் நடத்துவார்” என்ற காவலாளி, “இந்த பொம்பளை பிள்ளைங்க தான், ஜடையை பிடிச்சு இழுக்கிறாரு, கையில கன்னத்துல கிள்ளுறாருன்னு முனகிட்டே போவுங்க. படிக்கலன்னா அடிக்கத்தானே செய்வாங்க” என்றவர் அகா பார்த்தப் பார்வையில் வாயினை மூடிக்கொண்டார்.
“லேடீஸ் ஸ்டாஃப்கிட்ட எப்படி நடந்துப்பார்?”
“அவர் பேசியே நான் பார்த்தது இல்லைங்க” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்க, அங்கு பெண் ஆசிரியர் ஒருவர் வந்தார்.
“குட்மார்னிங் மேம்.” அவர் பேச வந்திருப்பதாகப்பட, அகா காவலாளியை போகச் சொல்லிவிட்டு, எழுந்து நின்றாள்.
“நேத்து நான் ஸ்கூல் வரல மேம்… அதான் இப்போ ஒரு விஷயம் சொல்லலாம்னு வந்தேன்” என்றார்.
“ம்ம் சொல்லுங்க…”
“குணசீலன் பொம்பளை பிள்ளைங்கக்கிட்ட ஒரு மாதிரி தான் மேம் நடந்துப்பார். அவர் தப்பு யாருக்கும் தெரிஞ்சிடக் கூடாதுன்னு தான், வந்து நாலு மாசமாகியும் யாரோடவும் சரியா பேசி பழகல” என்ற ஆசிரியரிடம், “நீங்க இதை ஹெட்மாஸ்டர்கிட்ட கம்பளைண்ட் பண்ணலையா?” என்றாள் அகனிகா.
“ஒரு பொண்ணு கன்னத்தை கிள்ளினாருன்னு நான் நேரடியா கேட்டதுக்கு, எல்லாத்துக்கும் என் பேத்தி வயசு இருக்கும். உங்க பார்வையில் தான் தப்புன்னுட்டார் மேம். ஆனால் அதுக்கப்புறம் அவரோட பார்வையே என்கிட்ட சரியில்லை. ஆதாரத்தோட ஹெட்மாஸ்டர்கிட்ட சொல்லணும் நினைச்சிட்டு இருந்தப்போ தான் இப்படி ஆகிப்போச்சு” என்றார் அவர்.
“ஹ்ம்ம்” என்ற அகா, “தேங்க்ஸ் ஃபார் யுவர் இன்ஃபோ” என்று அவரை அனுப்பி வைத்தாள்.
சுகன் மற்றும் பெஞ்சமின் வர,
“ஜார்ஜ் பத்தி விசாரிக்க சொன்னனே சுகன்” என்றாள். புருவத்தை விரலால் நீவியவளாக.
“மத்தையன் இப்போதான் கால் பண்ணார் மேம். ஜார்ஜ்க்கு பொண்ணுங்ககிட்ட கிரேஸ் இருந்திருக்கு மேம்… ஆனால் அவரோட இன்னர் கேரக்டர் என்னன்னு தெரியவரலன்னு சொன்னார்” என்றாள்.
இரு பக்கமும் தலையை ஆட்டிய அகா,
“வேலூர், காஞ்சிபுரம் போய் அந்த கொலைகள் எப்படின்னு தெரிஞ்சிட்டு ஒரு முடிவுக்கு வருவோம்” என்றாள்.
அகனிகா ஒரு முடிவிற்கு வருவதற்குள் அடுத்தடுத்து கொலைகள், சாதாரண இறப்பு போன்று அரங்கேறி அவளை நிலைகுலையச் செய்திருந்தன.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
20
+1
1
+1