Loading

புயல் 12

இருவரும் திருதிருவென முழிப்பதைப் பார்த்தவன் மேலேறிச் சென்றுவிட்டான். மனதுக்குள் அவனுக்கு அவ்வளவு கோபம். காட்டக் கூடாது என்று முடிவு எடுத்தவனால் மேலே தன் அறையில் இருந்த வெறுமையைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அவன் போவதையேப் பார்த்த கவிதா “அம்மா அண்ணன் என்ன சொல்லிட்டுப் போறான். சின்ன அண்ணனுக்குத் தெரியும்னா என்ன அர்த்தம். என்னம்மா நடக்குது இங்க? எனக்குக் கூட தெரியாமல்” என்றாள். அவளுக்கு இதில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதாகவே பட்டது.

“கம்முன்னு இருடி. அவன் ஏதோ உளறிட்டுப் போறான்” மணியம்மாள் கவனமாக பேசினார்.

“இல்லைம்மா நீ எதையோ என்கிட்ட மறைக்குற?”

“ஒன்னும் இல்லை நீ பேசாமல் இரு. அவன் உமாகூட சண்டை போட்டுருப்பான். அதை நம்மகிட்ட காட்டிட்டுப் போறான். எப்படியோ அவ வீட்டை விட்டு ஒழிஞ்சுப் போனாளே அது போதும்” மணியம்மாள் நிம்மதியாய் மூச்சு விட்டார்.

 

ஆனால் கவிதா அப்படியில்லை. உடனே சின்ன அண்ணனுக்கு அழைத்தாள்.

 

ஏற்காட்டில் ஜாலியாக இருந்தவனுக்கு தங்கையிடம் இருந்து அழைப்பு வர அதைப் பார்க்கும் முன்னரே அவனது மனைவி லட்சணா பார்த்துவிட்டாள்.

“என்ன?” என புருவம் உயர்த்த அவன் தோள் குலுக்கி “தெரியல” என்றான்.

“அட்டெண்ட் பண்ண வேண்டாம்” அவள் சொல்லவும் அவனும் பேசாமல் விட்டுவிட்டான்.

 

சின்னவன் போனை எடுக்கவில்லை என்றதும் “உன் மகனுக்கு ரொம்பத்தான் கொழுப்பு போன் கூட எடுக்க மாட்டானா?” என பொரிய ஆரம்பித்துவிட்டாள் அவள்.

“மொத சாப்பிடு டி” என்று அவளிடம் மணியம்மாள் தட்டை நீட்டினார்.

 

வாங்கி கொறித்துக் கொண்டே “அந்த ராட்சசி கூடவே இருந்துருக்கும் அதான் இவன் எடுத்துருக்க மாட்டான். ஆனால் இவன் நல்லா வாழ்றான்மா” என்றாள் கவிதா.

“கடையிலயே இருக்குறவன்டி. அவன் இப்படி எங்கயாவது போனால்தான் உண்டு” சின்ன மகனைத் தாங்கி பேசினார்.

“யாரு அவனா? உன்னைலாம் உன் சின்ன மகன் நடுத்தெருவுல நிறுத்தும் போதுதான் உனக்குலாம் புத்தி வரும்” என்று சொல்லிவிட்டு கவிதா உணவில் கவனமாகிவிட மணியம்மாள் பெருமூச்சு விட்டார்.

 

ருத்ரனின் நடவடிக்கை இப்போது தங்களுக்கு எதிராக இருப்பதாக பட்டது. இதை இப்படியே நீட்டிக்க விடக் கூடாது என்பதில் தான் அவரது கவனம் இருந்தது.

 

வீர ராஜேந்திரனுக்கு தங்கையின் அழைப்பு எதுவோ சரியில்லை என்பதை உணர்த்தியது. அவன் ஏற்காடு வந்திறங்கிய அன்றே ருத்ரனின் மனைவி வீட்டுக்கு வந்துவிட்டதை மணியம்மாள் அவனுக்குச் சொல்லியிருந்தார். அப்போது இருந்தே அவனுக்குள் சின்ன உதறல் இருந்துக் கொண்டுதான் இருந்தது. ஊருக்குச் சென்று என்ன செய்வது என்று பார்க்கலாம் என முடிவு செய்தவன் அதையெல்லாம் தூக்கி தூரப் போட்டுவிட்டு மனைவியோடு ஏற்காட்டின் அழகில் மெய்மறந்து இருந்தான். ஆனால் அவன் வீடு திரும்பும் நேரம் அவனிடம் இருக்கும் மொத்த சந்தோஷமும் பறிக்கப்பட்டுவிடும் என்பது அவனுக்குத் தெரியவில்லை.

———————

அறைக்குள் நுழைந்ததும் ருத்ரன்  போனில் இருந்து உமாவுக்கு அழைப்பு பறந்தது.

போனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள் பெண்ணவள். எடுத்துப் பேச வேண்டும் என்றிருந்தது. கட்டுப்படுத்தி அமர்ந்திருந்தாள்.

மீண்டும் அழைக்க இம்முறை அவள் எடுத்துவிட்டாள்.

“வீட்டுக்குப் போயாச்சா..” மனைவியாய் அவளது பொறுப்பான குரல் அவனை எட்டியது.

“போயிட்டேன்டி”

“கைவலி இப்போ பரவாயில்லையா?”

“வலிக்குது”

“சாப்பிட்டு டேப்லெட் போட்டால் சரியாகிடும். சாப்பிடுங்க மொதல்ல. அதுசரி கையில கட்டோட போனீங்களே உங்களைப் பெத்த உங்க அம்மா அதைக் கவனிச்சு கேட்டாங்களா?”

அவனிடம் பதில் இல்லை.

“கேட்கலையா?” குரல் மாறுபடாமல் அவளிடம் இருந்து வார்த்தைகள் வந்தது.

“கேட்கலைடி” இறங்கிப் போனது குரல்.

“அதுதான் தெரிஞ்ச விஷயமாச்சே.. சரி ருத்ரன் நமக்குக் கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு..”

 

“வர்ற வைகாசி வந்தால் மூனு வருஷம்”

“உங்க வீட்டுக்கு வந்த இந்த கொஞ்ச நாள்லயே நான் உங்க எல்லாரையும் பத்தி தெரிஞ்சு வச்சுருக்கேன். ஆனால் உங்களுக்கு மட்டும் ஏன் எதுவும் தெரியல. பாசம் கண்ணை மறைச்சுடுமா என்ன?”

“உமா ஏன்டி?” ஆயாசமாக கேட்டான் அவன்.

 

அவள் பதில் பேசவில்லை இம்முறை.

“உமா எனக்கு பசிக்குதுடி” மௌனத்தினை கலைத்தான் ருத்ரன்.

“சாப்பிடுங்கன்னு சொன்னேன்”

“இந்த கையோட என்னால சாப்பிட முடியாது”

“உங்க அம்மாவை ஊட்டி விடச் சொல்லுங்க. இல்லைன்னா உங்க தொங்கச்சி வந்துருக்காளே அவளை ஊட்டி விடச் சொல்லுங்க. நீங்கதான் பாச மலராச்சே”

“இப்படிப் பேசாத உமா. என்னால முடியல”

“இப்போ என்ன நான் வந்து ஊட்டி விடணுமா?”

“வாடி. உன்னை விட்டால் எனக்கு யார் இருக்கா சொல்லு”

“நான் வரலை ருத்ரன். ப்ளீஸ் என்னை விட்டுடுங்க”

“அப்போ நான் சாப்பிடலைன்னாலும் உனக்குப் பரவாயில்லையா?”

“என் புள்ளைங்களைப் பார்த்துக்க வேண்டியது தான் என்னோட பொறுப்பு.. மணியம்மா பெத்ததை எல்லாம் பார்க்கணும்னு எனக்கு என்ன தலையெழுத்தா மிஸ்டர் ருத்ரன்?”

“போனை வைடி” சொல்லியவன் போனையும் வைத்துவிட்டான்.

 

சற்றுமுன் அவள் கெஞ்சிக் கேட்டதில் தான் அவளை விட்டுவிட்டு வந்திருக்கிறோம் என்பதை மறந்து போனவன் இப்போது அவளிடமே கெஞ்சிக் கேட்டான்.

 

அவள் வரமாட்டேன் என்று சொல்லியது அவனுக்கு வலித்தது. அந்த வலி கைவலியை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு இருந்தது.

“வரமாட்டேன்னு சொல்லிட்டதானே டி.. நான் எப்படியோ போனால் என்னதான” என தனக்குள்ளயே புலம்பியவன் படுக்கையில் புரண்டுக் கொண்டிருந்தான்.

 

அவனால் அவளில்லாது இருக்க முடியவில்லை. அவளை வேதனைப் படுத்தியிருக்கிறோம். அவளது மரியாதையை சேதப்படுத்தியிருக்கிறோம் அவளுக்கான உரிமையை தர மறுத்திருக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக தான் தவறு செய்துவிட்டு அவள் முன் நின்றிருக்கிறோம்.. இதையெல்லாம் தாங்கி அவள் மனம் படும் பாடு உண்மையில் ருத்ரனுக்குப் புரியவே இல்லை. புரிந்திருந்தால் அவன் இப்படி அவளை வேதனைப்படுத்தியிருக்க மாட்டான். இப்போதும் அவனது சொகுசுக்காக அவன் யோசிக்கிறான். விஷம் நிறைந்தவன்.. அவள் மீதான காதல் சரவணன் சொன்னது போல் கல்யாணம் முடிந்த உடனே நின்று விட்டதுதான் போல..

கைவலி உயிர் போனது. இப்போது பசிக்க வேறு செய்தது.

மணியம்மா சாப்பிடவாவது அழைக்குமா என்ற எதிர்பார்ப்பு கூட நேரம் ஆக ஆக ருத்ரனிடம் இருந்து மறைந்து போனது. உடைந்து போனவனாய் அவன் விழி மூடிக் கொண்டான். இவர்களுக்காகத்தான் நீ பார்த்து பார்த்து எல்லாம் செய்தாயா? மனம் காறித் துப்பியது.

தளர்ந்து போய் உருண்டவன் தலையணையை இடது கையில் அணைத்துக் கொண்டான்.

“தங்கம்” முணங்கலாய் வந்து விழுந்தது அந்த அழைப்பு.

“நீ பக்கத்துலயே இரேன் டி. நான் பண்ணது எல்லாம் தப்புத்தான். என் தலையில நீ கொட்டி கொட்டி சொல்லிக் குடேன்டி. இப்படி நீயும் விட்டுட்டுப் போனால் எப்படி டி..” தலையணையினை முத்தமிட்டபடி அவன் உளறிக் கொண்டிருந்தான்.

 

அவளது தொடுகைக்கு ஏங்கியது அவனது மொத்த தேகமும். அது கிடைக்காது என்பதில் உஷ்ணம் தாறுமாறாக ஏறியது.

“பட்டு லட்டு அம்மாவுக்கு தான் அப்பா மேல பாசமே இல்லை. நீங்களாவது அம்மாகிட்ட சொல்லி அப்பாவைப் பார்க்கப் போகலாம்னு சொல்லக் கூடாதா. அப்பா பாவம்ல” என புலம்பியபடி உறக்கத்திற்குச் சென்றான்.

——————-

“நீ வரவர முழுப்பையித்தியமாவே மாறிட்ட உமா” ஆத்விக் பேச்சில் அவள் அவன் புறம் திரும்பவே இல்லை.

 

“உன்கிட்ட தான் சொல்லுறேன் என்னை நிமிர்ந்து பாரு உமா”

“என்னை நீ மாமா கிட்ட கூட்டிட்டுப் போய் விடு”

“கிறுக்கு பிடிச்சுருக்கா உனக்கு.. இப்போத்தானே அந்த ஆளு வந்தபோது வரமாட்டேன்னு அழிச்சாட்டியம் பண்ண. என்ன பிரச்சனை உனக்கு “

“நானே போய்டுவேன். இருட்டிடுச்சுன்னு பார்க்குறேன். அதுவும் இந்த மாதிரி டயத்துல துணைக்கு ஒரு ஆள் வேண்டும்”

“அப்போ உன் வீணாப்போன புருஷனைக் கூப்பிட்டுப் போ. எப்படித்தான் அங்க போக உனக்கு மனசு வருதோ?”

“கையில அடிபட்டிருக்கு ஆத்வி”

“அது உனக்கு அப்போ தெரியலையா?”

“ப்ச் கூட்டிட்டுப் போக முடியுமா முடியாதாடா. அவன் பாவம்டா. சாப்பிடக் கூட இல்லை”

“அதுக்கு முன்னாடி நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு”

“என்ன கேளு?”

“உனக்கு ரோஷமே இல்லையா?”

“இப்போ என்னடா உனக்கு”

“கேட்குறதுக்கு பதில் சொல்லு. அவன் எவ்வளவு கேவலமான ஒரு காரியத்தைப் பண்ணிட்டு வந்து நிக்கிறான். நீ என்னடான்னா அவன்கிட்ட போகணும்னு நினைக்குற?”

“கண்ணகி மாதிரி ஆகலாம்னு தான்” அவள் சொல்லவும் “உனக்கென்ன தலையெழுத்தா. நீ ஏன் இப்படி பண்ணுற? ஒருவேளை ப்ரக்னென்ஸி டைம்ங்கிறதால இப்படி மைண்ட் சேஞ்ச் ஆகிட்டே இருக்கா.. ” அவனுக்கு நிஜமாகவே புரியவில்லை.

“பாவம்டா ருத்ரன். அந்த வீட்டுல அவருக்குச் சோறு போடக் கூட ஆள் இருக்காது. இப்போக் கூட்டிட்டு போ. சாப்பிட வச்சு டேப்லட் குடுக்கணும் “

 

“நீயெல்லாம் திருந்தவே மாட்ட. என் பேச்சைக் கேட்டுடக் கூடாதுன்னு தான் கொள்கை வச்சுருக்கயா என்ன? அங்க போய் உன்னோட ஹெல்த் அபெஃக்ட் ஆனால் யார் பொறுப்பு. அந்தாளு அந்த குடும்பத்துக்கே நேத்து விட்டமாதிரி கடையில போய் செட்டில் ஆகிடுவாரு. உன்னை யாரு பார்த்துப்பா? பசிக்குற நேரத்துக்கு சாப்பாடு போடக் கூட ஆள் இருக்காது உமா. நான் சொல்லுறதைக் கேளு. நீ இங்கேயே இரு‌ நான் உன் நல்லதுக்குத்தான் சொல்லுறேன்” அவளை எப்படியாவது தடுத்திட வேண்டும் என்று அவன் பேசினான்.

“டேய் ஆத்வி நான் இப்போ உன்கிட்ட ஒரு கேள்வி கேட்கட்டுமா?”

“கேளு”

அவள் கேட்டாள். அந்த கேள்வியில் ஆத்வியின் வாய் தன்னாலே மூடிக் கொண்டது.

“என்னடா பதில் பேசாமல் இருக்க. சொல்லு” அவள் ஊக்கினாள்.

“இரு பைக் சாவி எடுத்துட்டு வர்றேன். உன்னை உன் வீட்டுலயே பத்திரமா விட்டுட்டு வர்றேன். கேள்வி கேக்குறாளாம் கேள்வி விளக்கெண்ணெய் மாதிரி” என்று முணுமுணுத்தவன் அவளை வீட்டில் விட்டு எதுவும் சொல்லாமல் கணப் பொழுதில் காணாமல் போயிருந்தான். அவளுக்கு ஆத்வி நடந்துக் கொள்வதை நினைத்து சிரிப்புத்தான் வந்தது.

 

அப்போதுதான் சாப்பிட்டு முடித்துப் படுக்கச் சென்ற மணியம்மா கதவு தட்டும் சத்ததில் கதவைத் திறந்தார்.

 

உமாவை எதிர்பார்க்காத அவரது முகம் சினத்தில் சிவந்தது.

 

பெரிய ருத்ரன்னு நினைப்பு. ஆளைப் பாரு.. உள்ளுக்குள் நினைத்தவள் உள்ளே நுழைந்தாள்.

“ஏய் நில்லு”

“என்ன அத்தை”

“எங்க வந்த?”

“இதென்ன அத்தை கேணத்தனமா கேள்வி கேக்குறீங்க. என் வீட்டுக்கு வந்தேன். என் புருஷனைப் பார்க்க வந்தேன். பாவம் அவருக்குக் கையில அடி. சாப்பிடக் கூட முடியாது. சாப்பிட வைக்கணும். வெட்டியா பேச எனக்கு டைம் இல்லை”

“ச்சே உனக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா? அவன் தான் உன்னை விட்டுட்டு வேற யார் பின்னாடியோ போயிட்டான்னு தெரியுதுல. பின்ன ஏன் அவனையே தேடி வர்ற”

“காலையில என் புருஷன்கிட்ட கேளுங்க எனக்கு வெட்கம் இருக்கா இல்லையான்னு. அவன் பதில் சொல்லுவான். அவன்தானே அதைச் சொல்லணும். இப்போ நான் ரூம்க்குப் போறேன்” என்றவள் உள்ளே சென்று சாப்பாட்டைப் போட்டு எடுத்து வந்தாள். இதையெல்லாம் குறுகுறு என்று பார்த்தபடியே நின்றிருந்தாரே தவிர அவனுக்கு அடிபட்டுச்சா என்று விசாரிக்க மட்டும் இல்லை.

 

தொல்லை விட்டது என்று நினைத்திருந்த மணியம்மாளுக்கு தொல்லை அன்றே வந்துவிட்டதை எண்ணி கடுப்பு தான் எக்கச்சக்கமாக வந்தது.

“இப்போ ஏன் இப்படி வழியை அடைச்சுட்டு நிக்குறீங்க அத்தை. போய் தூங்குங்க. காலையில என்ன செய்யணும்னு நான் உங்களுக்குச் சொல்லுறேன். நான் சொல்லுறதைத்தான் செய்யணும்”

“உமா ரொம்ப சீண்டுற. இதெல்லாம் சரியே இல்லை”

“அமைதியாய் இருந்தால் உங்க இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கலாம்னு நினைச்சீங்க தானே அதான். நானும் கொஞ்சம் அடாவடியாய் மாறலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். போய் நிம்மதியாய் தூங்குங்க அத்தை. குட்நைட்” அவள் பாட்டுக்கு நகர்ந்துவிட அவரால் முறைக்க மட்டும்தான் முடிந்தது.

 

உறக்கத்தில் இருந்தவன் காதோரம் குறுகுறுவென்று ஓர் உணர்வு. உறக்கக் கலக்கத்தில் திரும்பிப் படுத்தவனுக்கு மீண்டும் அதே உணர்வு..

 

இதழ்கள் மட்டும் அனிச்சையாக “தங்கம்” என முணங்க அவனது செவியில் “மாமா” என்னும் அழைப்பு கேட்டது.

 

வெள்ளத்தில் அடித்துச் செல்வது போலான அந்த உணர்வில் பட்டென்று விழி திறந்தான்.

“தங்கம் நீயா?”

“ஆமா எழுந்திருங்க.. சாப்பிடலாம் “

“தங்கம்”

“அட எந்திரிச்சு வாயைத் தொறடா.. சாப்பிட்டு மாத்திரை போடணும்” என்று அவள் சத்தமாய் சொல்ல அவன் எழுந்து அமர்ந்தான்.

 

கண்களை கசக்கிப் பார்த்தான். அவனது செயலில் அவளுக்குச் சிரிப்பு வந்தது.

“நிஜமாவே நீயா?”

அவன் கன்னத்தினை திருப்பி முத்தமிட்டு “இப்போ நம்புறியா நான்தான்னு” என்றதும் அவனுக்கு ஜில்லென்றானது.

 

“வரமாட்டேன்னு சொன்ன தங்கம்”

“சாப்பிடாமல் இருக்கயா அதான் மனசு கேட்கலை. வந்துட்டேன். உன் லட்டு பட்டு வேற எங்க அப்பாவைப் பார்க்கணும்னு என்கிட்ட சொல்லி அடம்பிடிக்குதுங்க. சோ வந்துட்டேன் இந்தா சாப்பிடு”

 

ஆ.. வாய் திறந்தான்.

 

இத்தனை நேரமும் எந்த உணர்வில் வெந்துக் கொண்டிருந்தானோ அது அவனை விட்டு நீங்கியிருந்தது.

“உமா‌”

“சாப்பிடு. உமா எங்கேயும் போக மாட்டா.. சாப்பிட்டு பேசிக்கலாம்”

 

வேகமாய் அவன் சாப்பிட அவனது பசியினை அறிந்துக் கொண்டவளுக்கு மனம் கனத்தது.

“ஸ்பூன் போட்டாவது நீ சாப்பிட்டுருக்கலாம்ல டா” மனம் தாளாமல் அவள் கேட்டாள்.

“தோணலைடி. சாப்பிடவாவது கூப்பிடுவாங்கன்னு நினைச்சேன் அதுவும் கூப்பிடல. நான் மட்டும் அனாதை..”

 

“அடி வாங்குவ. நான் இருக்கேன் நமக்கு இரண்டு பசங்க இருக்காங்க அப்பறம் என்ன டேஷ்க்கு இப்படி பேசுற..?”

மாத்திரையை எடுத்துக் கொடுத்தாள்.

அவன் விழுங்கிவிட்டு “உன் மடியில படுத்துக்கவா” என்றான்.

“படுத்துக்கோ.. கொஞ்ச நேரம்தான். பட்டு லட்டு இருக்காங்கள்ல அதனால ரொம்ப நேரம்லாம் என்னால இப்படியே கால் நீட்டி உக்கார முடியாது..”

“ஒரு இரண்டு நிமிஷம் தான்” என சொன்னவன் அவளது மடியில் படுத்துக் கொண்டான்.

 

அவனது நெற்றியில் அளாவிய அவளது விரல்களை பற்றியவன் இதழ்களுக்கு இடமாற்றிட அவளுள் பெருமூச்சொன்றெழுந்தது.

 

அவனுடனான அவளது வாழ்வினை அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதனை அவளது இமைக்குள் நர்த்தனம் ஆடிய விழிகளே சொல்லாமல் சொல்லியது.

புயல் தாக்கும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
24
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்