Loading

அத்தியாயம் 8

“புவித்தோட லவ்டி இந்த கனி.”

கணவனின் கால்களுக்கு இடையே நின்றிருந்தவளுக்கு, அவளின் உலகமே அவனாகத் தெரிந்தான்.

புவித் தன்னுடைய காதலை உணர்த்துவதற்கு அதிக மெனக்கெடல்கள் எல்லாம் செய்ய வேண்டியதில்லை.

புவித்தின் மனம் முழுக்க அகா நிறைந்திருக்க, அவளிடம் அவனது சிறு அசைவும் காதலாகவே வெளிப்படும்.

அதுபோன்று தான் புவித் சாதாரணமாக சொல்லிவிட்டான், அவள் தான் அவனது வார்த்தையில் தொலைந்து கரைந்து கொண்டிருந்தாள்.

அவனது காதல் பெருகும் விழிகளிலிருந்து தன்னுடைய கருவிழிகளை அகற்ற முடியாது தவித்தவள், சட்டென்று இடித்த இடியின் ஓசையில் வேகமாக அவனிலிருந்து தள்ளி நின்றாள்.

வானத்தை பார்த்து முறைத்த புவித்,

“மழை வரும்போல. கீழ போகலாம் கனி” என்று சுவற்றிலிருந்து இறங்கி அவளுக்கு முன் நடந்தான்.

“மாமா…”

அகா அழைத்திட புவித் நின்று திரும்பினான்.

“கனிக்கும் எல்லாம் புவி தான்” என்று அவனை நெருங்கி அணைத்திருந்தாள்.

வான் தூறலும் நிலம் சேர்ந்திருந்தாள்.

இழந்த நாட்களுக்கும் சேர்த்து வைத்து ஒற்றை அணைப்பில் அதிக காதலின் கனம் காட்டி அவனை திக்குமுக்காட வைத்தாள்.

“டேய்…” என்ற புவித், அவளின் அணைப்பில் கட்டுண்டவனாக, அவளை நகர்த்திக்கொண்டு, தண்ணீர் தொட்டிக்கு கீழே வந்து நின்றிருந்தான்.

சுற்றம் மறந்து தன்னுடைய மார்பில் முகம் புதைத்திருந்த அகாவை மெதுவாகப் பிரிக்க புவித் முயன்றான்.

ஆனால் அவளது கைகள் அவனை விட்டு விட மறுத்தன. மெல்ல சிரித்துக் கொண்டே, அவளின் கன்னத்தில் பட்டுவிட்டிருந்த மழைத்துளிகளை துடைத்தவன் அவளை தனக்குள் அழுத்தமாக பதித்துக் கொண்டான்.

அவளது வார்த்தைகள் புவித்தின் நெஞ்சை ஒற்றை அடியாகத் தட்டியது. அவன் எந்தக் காரணத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதை அந்த கணத்தில் மீண்டும் உணர்ந்தான்.

அவளது காதலினால் மட்டுமே அவனது உயிரோட்டமான வாழ்வும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

“கனி…” என்று மெதுவாக அவளது தலையைத் தூக்கி, அவள் கண்களில் விழுந்தான். அந்த கண்கள் அவனுக்கு மட்டுமே உரித்தானவை. காவல்துறை அதிகாரி எனும் நிலையில் எப்போதும் கண்களில் அனலை மட்டுமே வீசிக்கொண்டிருப்பவள், இக்கணம் தன்னவனிடத்தில் குளிரை பாய்ச்சிக் கொண்டிருந்தாள்.

முழு பிரபஞ்சமே மங்க, அங்கே அவர்கள் இருவரின் பார்வை மட்டுமே எரிந்தது.

சுற்றிய மழைத்துளிகள் சத்தமிட்டு விழுந்தாலும், இருவருக்கும் இடையே நிலவியது ஒரு உளவியல் மௌனம்.

மழைச்சாரல் பிணைந்த குளிர்காற்று ஊடுருவிய தேகம் சில்லென்று உணர்வலையை பரவச்செய்திட, மென்மையிலும் மென்மையாய் கனியின் நெற்றியில் முத்தமிட்டான். சூடாய் இறங்கிய தன்னவனின் இதழ் தீண்டலில், பாதங்களின் வலுவிழந்து அவனது அணைப்பில் மேலும் ஒன்றினாள்.
முத்தம் வழியாக அவனது உயிர் பாய்ந்து அவளுக்குள் சேர்வது போல் அகாவுக்கு தோன்றியது.

நேற்று முத்தம் தான். ஆனால் முதல் முத்தமல்லாவா! எதிர்பாராது கொடுத்திருந்தான்.

மழை மேலும் வேகமெடுத்து பெய்ய, இருவரும் ஒருவரை ஒருவர் விடாமல், அந்தத் தூறலின் நடுவே நின்றனர்.

“எப்பவும் இப்படி உனக்குள்ள அடங்கியிருக்க பேராசை மாமா.” ஈரம் படர்ந்த மார்பில் அவளது பூவிதழ் அசைந்து வெம்மையைக் கூட்டியது.

தன்னுடைய வார்த்தைக்கு புவித் எதுவும் சொல்வானென்று எதிர்பார்த்தவள், அவனிடம் பதிலின்றிபோக, முகம் உயர்த்தி அவனது முகம் பார்த்தாள்.

அவனது ஆழ்ந்தப் பார்வை, அவளுக்கான கேள்வியை வழங்கியது.

“அப்புறம் ஏன் உனக்கு நீயே ஒரு லிமிட் வச்சு எட்ட நிக்கிற கனி?”

“தெரியலையே” என சிறுமியை உதடு வளைத்தவளை, பின்னந்தலையில் கையிட்டு தன்னுடைய நெஞ்சுக்குள் அடைத்துக்கொண்டான்.

“இங்க யாரும் அதை மறந்திடல கனி. அந்த நினைவோட வாழ பழகிட்டாங்க. மறக்கிறதைவிட கடந்து போறது ஈசி” என்ற புவித், “அதை கடக்கிறதுக்காக வேற ஒன்னு செய்யணும் நினைக்கிறது தீர்வில்லை” என்றான்.

“புரியுது” என்ற அகா, “நானும் எல்லாம் தள்ளி வச்சிட்டு உங்களோட சந்தோஷமா வாழணும் தான் நினைக்கிறேன். ஆனால் முடியலையே மாமா. நான் என்ன பண்ணறது? எப்பவும் அந்த இன்சிடெண்ட் மனசுக்குள்ள ஓடிட்டே இருக்கே” என்றவள், இதற்கு முன்னர் இப்படி வெளிப்படையாக அவனிடம் இதுகுறித்து பகிர்ந்துக்கொண்டதில்லை.

உள்ளுக்குள் அடக்கி வைத்த உணர்வுகள் எல்லாம் அவனது நெருக்கத்தில் தன்னைப்போல் சொல்லத் துவங்கியிருந்தாள். அவனும் அவள் எல்லாம் சொல்லட்டும், அவளது மனம் பழைய நினைவிலிருந்து கொஞ்சம் தெளியட்டுமென மௌனமாக இருந்தான்.

சொல்லப்போனால் திருமணம் ஆன பின்னரும் கூட, இதுபோன்று அவனிடம் அவள் பேசியதில்லை. பல வருடங்கள் கழிந்து இன்று தான் அவர்களுக்குள்ளான பேச்சு, தனிமை, நேரம் நீள்கிறது.

அகா சொன்ன வார்த்தைகள் மழைத் துளிகளின் சத்தத்தில் கலந்து கரைந்தாலும், புவித்தின் காதுகளில் மட்டும் மிகத் தெளிவாக விழுந்தன. அவன் கைகளில் துடித்தவள், இன்னும் மனதில் அடங்காத காயங்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்.

அகாவின் குரல் நொறுங்கியிருந்தது.

“அந்த நாள் நடந்ததை மறக்க முடியல மாமா… அந்த சத்தம், அந்த ரத்தம்… நம்ம நம்ம…” எல்லாம் இன்னும் கண் முன்னாடி நிக்குதே…”

புவித் மெதுவாக அவளது தோள்களைப் பிடித்து, அவளின் பார்வையை தன்னிடத்தில் நிலை நிறுத்தினான்.

“கனி… நினைவுகள் வந்து போகும். ஆனால் அந்த நினைவுகள் உன்னுடைய வாழ்க்கையை நியமிக்கக் கூடாது. அவ்வளவுதான். நீ அதை மறக்க வேண்டியதில்லை. நீ அந்த நினைவுகளோட முன்னப்போக கத்துக்கணும். அதுதான் உன்னோட ஸ்ட்ரென்த்.”

அகா நிமிர்ந்து அவனை நோக்கினாள்.

“ஆனா அந்த வலிமை சுத்தமா என்கிட்ட இல்லை மாமா…” என்றாள்.

அவள் கூறிய அந்த ஒற்றை வரியில், தன்னுடைய உள்ளம் எவ்வளவு சோர்ந்து கிடக்கிறது என்பதை புவித் உணர்ந்தான். அவளின் முகத்தில் படிந்திருந்த கண்ணீரை மழைத்துளிகள் கூட துடைக்க முடியவில்லை.

புவித், அவளை மேலும் தன்னிடமாய் இழுத்து, அவளது நெற்றி மீது மீண்டும் முத்தமிட்டான்.

“உன்னோட வலிமை உனக்குள்ளதான் இருக்கு கனி. அது உனக்கு தெரியல. நீ அந்த நாளை மீறிக்கடக்கணும், ஏன்னா… என் கனி எப்பவும் சந்தோஷமா இருக்கணும். அவளுக்கு எல்லாமாவும் நானிருக்கணும். நான் இருக்கும்போது நீ இப்படி இருக்கிறது ஒருமாதிரி இருக்குடா” என்றான்.

புவித் வார்த்தைகள் யாவும் அவனுக்கு அவள்மீதிருக்கும் காதலையே பறைசாற்றியது.

இத்தனை தெளிவாக தனக்காக பேசுகின்றவன் ஒன்றும் அந்நிகழ்விலிருந்து முற்றும் முழுதாக வெளிவந்துவிட்டானென்று சொல்லிவிட முடியாது.

அவளைவிட அவனுக்குத்தான் வலி அதிகம். அவனது உயிரில் பாதியை இழந்தும் அவன் அவளுக்காக பேசுகின்றனென்றால் எப்பெரும் காதலை அவளிடத்தில் அவன் கொண்டிருக்க வேண்டும்.

புவித் காட்டும் இந்த எல்லையற்ற அன்பினால் தான், அகா இன்னுமின்னும் தனக்குள் ஒடுங்கிப்போகிறாள்.

தன்னால் அவனுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்க… அவனுக்கு மட்டுமா மொத்த குடும்பத்திற்குமே! அவளால் எப்படி அவனுடன் சங்கமித்து வாழ முடியும்?

அகா கண்களை மூடி, அவனது மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.

புவித்தின் இந்த தெளிவு, அமைதி, ஆறுதல் எல்லாம் அவளுக்காக அல்லவா. அவனுக்காகவாவது மற்றவர்கள் போல் இயல்பாக இருக்க வேண்டுமென அக்கணம் நினைத்திட்டாள்.

புவித்தின் வார்த்தைகள் அவளது மனத்தில் சிறிய நம்பிக்கையின் விதையாய் பதிந்தது.

மழைத் தூறல் மெதுவாக அடங்க, காற்றில் புது ஈரப்பதம் பரவியது.

“மாமா…” என்றவள், “நீங்க கூட இருந்தா எதையும் ஃபேஸ் பண்ண முடியும் தோணுது” என்றாள்.

அவளது குரலில் இருந்த அதிர்வை புவித் தெளிவாக உணர்ந்தான்.

“உன் வாழ்க்கையோட பக்கத்துல நான் இருக்கேன். உன்னை வருத்தி நீ மட்டும் துன்பம் தாங்க வேண்டியதில்லை” என்ற புவித்துக்கு அக்கணம் இருந்ததெல்லாம் ஒரே எண்ணம் தான். எப்படியாவது அகாவை இதிலிருந்து வெளிக்கொண்டுவந்துவிட்டால் போதுமென்று.

அதற்காகவே அவனது வலியை ஒதுக்கி வைத்து தன்னை இயல்பாகக் காட்டிக்கொள்கின்றான்.

இருவரும் அந்த ஈர சாரலில் நின்றபடியிருக்க, அவனது தேறுதலில் அவள் ஆறுதல் கண்டாள்.

வானம் கருமையாக இருந்தாலும், அகாவின் உள்ளத்தில் சிறு ஒளி மிளிர்ந்தது.

புவித்திற்கு மனதால் ஒடுங்கி, வெளிப்புறம் மட்டுமே திடமாக காட்சியளிப்பவளை, இக்கணம் போன்று எப்போதும் தனது கைவளைவிலேயே வைத்துக்கொள்ள எண்ணம். தனக்குள் அவளை அடைக்கத்துக்கொள்ள பரிதவித்து காத்திருந்தவன் இத்தருணத்தை இழக்க விரும்பவில்லை.

எந்நிலையிலும் உனக்கு நன்றிருக்கிறேன் என்பதை ஒவ்வொரு நொடியும் காண்பித்துக் கொண்டிருந்தவன், இந்த நொடி தனது வார்த்தகளாளும், அணைப்பினாலும் காண்பித்துக் கொண்டிருந்தான்.

புவித்தின் முகம் கூட நேருக்குநேர் பார்க்க தவித்து ஒதுங்கியவள், அவனிடத்தில் விவரிக்க முடியா அமைதியில் மனம் அமிழ்வதை உணர்ந்து, அவனைவிட்டு நீங்காது நின்றிருந்தாள்.

மழை சற்றே அடங்கியபின், புவித் அவளை மெதுவாக விலக்கி, “வா கனி… உள்ள போலாம். சாரலிலே நனைஞ்சாச்சு” என்றான்.

அகா அமைதியாக தலையசைத்து, அவனோடு கைபிடித்தபடி வீட்டிற்குள் வந்தாள். இருவரும் நனைந்த உடையோடு சற்று சிரமத்தோடு, ஆனால் உள்ளம் பூரணமாய் ஒருவரை ஒருவர் சார்ந்தபடி, அறைக்குள் நுழைந்தனர்.

சுவற்றோரத்தில் தொங்கியிருந்த பழைய குடும்பப் புகைப்படம், அகாவின் பார்வையை சற்றே குத்தியது. அங்கே அவள் இழந்ததன் தடம். புன்னகையாக உறைந்திருந்தன. அவள் கண்ணில் ஒரு துளி வலி வலிக்க வெளிவந்தது.

அதை கவனித்த புவித், “கனி…” என்று மெதுவாக அவள் தோளில் கை வைத்தான்.

அவள் சற்றே நெருங்கி, “நினைவுகள் துரத்தும்போது என்ன செய்யறது மாமா? சில சமயம் சிரிப்பு கூட குற்றமா தோணுது. நான் சிரிச்சா… நடந்ததை மறந்துட்டேனோ தோணுது… நடந்ததுக்கான நியாயம் செய்யாம நான் மட்டும் சந்தோஷமா இருக்கன்னு என் மனசாட்சியே என்னை கொல்லுது” என்றாள்.

புவித் மெதுவாக சுவாசித்து, அருகிலிருந்த நாற்காலியில் அவளை அமர வைத்தான். அவன் அவளுக்கு அருகில் அமர்ந்து, நேராக அவளது கண்களில் பார்த்தான்.

“கனி… நீ மூவ் ஆன் ஆகிறது, சிரிக்கிறது, இயல்பா நடந்துக்கிறதுலாம் துரோகம் இல்லை. அது தப்பும் கிடையாது. பெரிய க்ரைம் ஒன்னுமில்ல. நீ இப்படி இருக்கிறது தான் வலி” என்றான்.

அவள் குழப்பமாய் ஏறிட்டாள்.

“உன் மகிழ்ச்சி. உன் சிரிப்பு. உன் வாழ்க்கை. நீ இப்படி துன்பத்தை தள்ளிட்டு இருக்கணும்னு நினைச்சு போயிருக்கமாட்டாங்க. மறக்கமுடியாது தான். ஆனா நினைவோட வாழ முடியும். இதுதான் ரியாலிட்டியும் கூட. உன் சிரிப்பில முடிஞ்சுப்போன வாழ்வுக்கான உயிர்ப்பு இருக்கு கனி” என்றான்.

அகாவின் உதடுகள் சற்று அதிர்ந்தன. அவன் சொல்லும் வார்த்தைகளில் உண்மை இருந்தது. அவள் கண்கள் ஈரமாயின.

“மாமா… நான் சிரிச்சா ரொம்ப பிடிக்கும். ஆனால்” என்று விசும்பியவள், “நீங்க இல்லனா நான்…” என்று சொல்லி முடிக்காமல் நின்றாள்.

புவித் அவள் கையைப் பிடித்து, அவளது விரல்களில் தன் விரல்களை பூட்டி, “இப்படி யோசிக்காத கனி. நீ என் உயிரோட பாகம்டி” என்றான்.

உடன் நானிருக்கின்றேன் எனும் வார்த்தை தரும் ஆறுதலுக்கு வானமும் ஈடாகாது.

அதனைத்தான் அக்கணம் மனைவியின் மனதில் ஆழப்பதிக்க முயன்றான்.

அவள் சற்றே அமைதியாக அவனது தோளில் சாய்ந்தாள். அறை முழுவதும் ஆழ்ந்த மௌனம் நிலவியது. ஆனால் அந்த மௌனம் இருவரின் உள்ளத்தில் பெரும் மாற்றத்த ஊட்டியது.

அகா அவனது தோளில் சாய்ந்து இருந்தபோது, புவித்தின் உள்ளம் சொல்லாத பல உணர்வுகளால் நிரம்பியது. அவன் மெதுவாக அவளது விரல்களை தடவி, “கனி… நீ எப்பவும் நிறைய வலியோட தான் இருந்திருக்க. ஆனா அந்த வலியை யாருக்குமே காட்டலை. நானும் கூட உன்னை முழுசா புரிஞ்சுக்கிட்டேன்னு சொல்ல முடியாது. ஆனா… நீ எனக்கு இயல்பாவாவது இருக்கணும்.” என்றான்.

“உன்னை சந்தோஷமா பார்த்துக்கணுங்கிறதைவிட நிம்மதியா வச்சிக்கனும்னு தான் தோணுது” என்றான்.

“மாமா” என்றவள் அவனது கழுத்தோடு கைகளிட்டு கட்டிக்கொண்டாள்.

அவளது ஒற்றை அழைப்பில், மீண்டுவர வேண்டுமென்ற தவிப்பு நிறைந்த விளிப்பில் புவித்தின் உள்ளம் கண்ணீரை கரைய விட்டது.

அவளது நம்பிக்கை, அவனுக்கு இருந்த பொறுப்பை இன்னும் பெரிதாக்கியது. அவளுக்காக செய்ய வேண்டுமென்றெடுத்த செயலை விரைந்து முடிக்க வேண்டுமென எண்ணினான்.

“நடந்த துன்பத்தோட மட்டும் வாழ்க்கை நின்னுடறதில்லை கனி. உனக்கு நான் இருக்கேன். சேர்ந்து வெளிவரும்” என்றான்.

அகாவின் கண்களில் மின்னல் பாய்ந்தது. அவள் மெதுவாக அவனது முகத்தை இரண்டு கைகளாலும் பிடித்து, “மாமா… நீங்க மட்டும் இருந்தா போதும்” என்றாள்.

புவித் அவளை மெதுவாக தன்னிடமாய் இழுத்து, அவளது நெற்றியில் நீண்ட முத்தமிட்டான். அந்த முத்தத்தில் அவனது எண்ணத்தின் உறுதியும், அவளது ஆறுதலும் ஒன்றிணைந்திருந்தன.

அகா மெதுவாக கண்களை மூடி, “இனிமே நான் கடந்ததை நினைச்சு வலிக்க மாட்டேன் மாமா. நீங்க என்கிட்ட இருக்குற வரை, நான் அந்த நினைவுகளுக்கு அடிமை இல்லை” என்றாள்.

புவித் அவளை அணைத்தபடி, “இனி கடந்தது எல்லாம் நிழலா மட்டும் இருக்கட்டும்” என்றான்.

அறையின் சுவர்கள் அவர்களின் மௌன சத்தியத்தை சாட்சியாய் ஏற்றுக் கொண்டது. மழை முழுதும் நின்றிருந்தது.

அவனுக்காக அவள் மாற்றம் கொள்ள நினைத்தாலும், மனதின் வெம்மை மட்டும் தீர்ந்தபாடில்லை.

அவளின் புழுக்கத்தை உணர்ந்தவனுக்கு, அவளுக்கான ஆறுதலின் வழி எதுவென்று தெரிய, அதில் பயணித்துக்கொண்டிருந்த வேகத்தை துரிதப்படுத்த நினைத்தான்.

“இப்பவும் முழுசா நார்மல் ஆகிடுவேனான்னு தெரியல. ஆனா நார்மலா இருக்க முயற்சி பண்றேன்” என்றவளை மெதுவாகத் தன்னுள் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான். அவனது மூச்சின் சூடு, அவளது தேகத்தில் பாய்ந்து, சில்லென்ற குளிரை உருகச் செய்தது.

அவனுக்கு இது போதுமே! இதற்காகத்தானே இத்தனை மெனக்கெடல்கள். அவளுக்காக அவனும் அவனின் பெருங்காதலின் காத்திருப்பும், அவளின் இத்தகைய மாற்றத்திற்காகத்தானே!

அவன் மெதுவாக அவளது தலையை உயர்த்தி, அவளது நெற்றி மீது முத்தமிட்டான். அவளது கண்கள், கன்னம் வழியாக மெதுவாகத் தொலைந்தபடி, இறுதியில் அவளது உதடுகளின் அருகில் நின்றான்.

புவித் முத்தமிட்டதையே அவள் ஆச்சரியம் கொண்டு உறைந்திருந்தாள்.

முதல் முத்தம் திகைப்பை உண்டாக்கியது.

அகா மூச்சை நிறுத்தியபடி அவனைப் பார்த்தாள். அந்த பார்வையில் பயமில்லை, சஞ்சலமில்லை. வெறும் ஒற்றை ஏக்கம் மட்டுமே.

அன்பின் நிமித்தமாக கொடுத்த முத்தத்தில் காதலின் தடம் மட்டுமே!

அகாவுக்கு அந்த முத்தத்தில் அவளது உள்ளம் காலியாகி, புவித்தின் உயிர் மட்டுமே தன்னை நிரப்பியது போல் தோன்றியது.

அவனிடத்தில் மனம் தழுவும் நிம்மதியில், அவளின் அமிழ்த்தப்பட்ட காதலெல்லாம் பொங்கி மேலெழும்பத் துடித்திட்டது.

தனக்காக இத்தனை யோசிப்பவனை வதைத்துக் கொண்டிருக்கிறோம் எனும் வலி உள்ளுக்குள் அவளை உருகுலைத்தது.

இன்று ஏதோ சஞ்சலம். அவனது அண்மை வேண்டுமாக இருக்க தன்னைப்போல் அவனிடம் தஞ்சம் புகுந்திட்டாள்.

தன்னுடைய நெருக்கம் அவனை அடுத்தக்கட்டத்திற்கு முன்னேற்றி விடுமோ என்ற அச்சம் எழுவதை தடுக்க முடியவில்லை.

“என்னடா?”

ஒண்ணுமில்லையென தலையசைத்தாள்.

“பயப்படாத நமக்குள்ள எல்லாம் தானா நடக்கணும்… காதலோட… இப்போ என் பக்கத்துல இருக்க கனிக்கு என்கிட்ட ஆறுதல் மட்டும் தான் வேணும்ன்னு எனக்கு நல்லாவே தெரியும். அதைத்தாண்டி இப்போதைக்கு கொடுக்க என்கிட்டவும் எதுவுமில்லை. உன் கண்ணுல எனக்கான காதலைவிட, என்னை கஷ்டப்படுத்துறங்கிற தவிப்பு தான் அதிகம் தெரியுது. எனக்கு இது வேணாம்” என்ற புவித்,

“ஏதோவொரு தாக்கத்துல என்கிட்ட உரிமையா பேசி, அவசரப்பட்டு எனக்கு நம்பிக்கைக் கொடுக்கிற மாதிரி நடந்துக்கிட்டோம்னு ஃபீல் பண்ணவும் வேணாம்” என்றான்.

நிஜத்திற்கும் அவனது கண்ணில் தனக்கான காதலை காணும் அந்த கணம் அவள் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.

தான் ஆறுதல் தேடி அவன் மனதில் காதல் பாதையை திறந்துவிட்டோமோ… இன்றைய இணக்கத்திற்கு பின்னர் தன்னால் அப்பாதையில் பயணித்திட முடியுமா எனும் பெரும் தவிப்பு அவளுள்.

தன்னுடைய கனியின் மனம் அவனுக்கு புரியாதா என்ன?

“என்னை ஏன் இவ்வளவு லவ் பண்றீங்க?”

“இதுக்கு பதில் உனக்கே தெரியும். ஒவ்வொரு முறையும் கேட்க வேணாம்” என்ற புவித், “ஏதோ குழப்பம் உனக்கு. என்கிட்ட நார்மலா பேசிட்ட இப்போ. இதையே காரணமா வச்சு அடுத்தகட்டம் மூவ் பண்ணுவேன்னு நினைக்க வேணாம். எனக்காக மாறுறேன்னு சொல்லியிருக்க. அது போதும். அந்த மாற்றத்துக்காக லைஃப் லாங் வெயிட் பண்ண முடியும்” என்றவன் அவளின் கன்னம் தட்டினான். மென்மையாக.

“எப்பவும் விலகி நின்னுட்டே இருக்கணும்ல” என்ற புவித், “இன்னைக்கு மாதிரி… அப்பப்போ கொஞ்சம் பேசுடி… எனக்கும் ஆறுதல் நீ மட்டும் தான்” என்றான்.

அவளுக்குத்தான் அவனிடத்தில் தனது எண்ணம் மறந்து மெல்ல உருகிக் கொண்டிருப்பது தன்மீதே அதீத கோபத்தை உண்டாக்கியது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
20
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்