Loading

கண்ணாலம் 2

 

“எங்கடா போயிட்டு வர?”

 

“உன் மருமகளப் பார்க்க!”

 

“அங்க போகாதன்னு எத்தனைத் தடவை சொல்றேன்.”

 

“என் பொண்டாட்டிய நான் பார்க்கப் போறேன்.” 

 

“திமிருக்கு பொறந்தவன்!” 

 

தலையில் அடித்துக் கொண்ட கோமளம் வேலையைப் பார்க்கச் செல்ல, “இந்தப் பூவைக் குடுக்க மறந்துட்டேன். அவ பின்னாடிப் பக்கம் தான் இருப்பா, குடுத்துடு.” என இலவச இணைப்பாக முறைப்பை வாங்கிக் கொண்டான். 

 

“ஏன்டா, வம்பு பண்ணிக்கிட்டுத் திரியுற.”

 

“உன் கண்ணாலத்துக்கு நீ பண்ணலையா?” என்றவன் மூத்த அண்ணி மீராவைப் பார்த்து, 

 

“ஏன் அண்ணி, இவன் நல்ல புள்ளையாவா நடந்துக்கிட்டான்.” திரியைக் கொளுத்திப் போட, அது சரவணன் தலையைப் பதம் பார்த்தது. 

 

‘இதற்குத்தான் இவனிடம் பேச்சே கொடுக்க மாட்டேன்.’ என்ற தோரணையோடு கண்ணன் அமர்ந்திருக்க, “என்னடா, புழுக்கையைத் தின்னுபுட்டியா?” வேண்டும் என்று வம்பிழுத்தான் சிங்காரன். 

 

“எல்லாம் உங்க மேல இருக்க பயம்தான் கொழுந்தனாரே.”

 

“அடடே! வணக்கம் அண்ணி…” எனப் பணிவாகத் தலை குனிந்து கை கூப்பினான்.

 

தன்னைக் கலாய்க்க வாய் கொடுத்த மனைவி புவனாவை, நாசூக்காகக் கலாய்த்த தம்பியைக் கண்டு சத்தமிட்டுச் சிரித்த கண்ணன், “இதுக்குத்தான அமைதியா ஒக்கார்ந்து இருக்கேன்.” என்றான்.

 

“என் தங்கச்சி வீட்டுக்காரனுக்கு வாய்க் கொழுப்பு அதிகம்னு தெரிஞ்சும் வாயைக் குடுத்தேன் பாரு, என்னைச் சொல்லணும்.” 

 

“வீட்டுக்கு வரப்போற மருமவனுக்கு அம்புட்டுத் தான் மருவாதி!”

 

“ஐயா ராசா, நீ இந்த வீட்டையும் அந்த வீட்டையும் ஆளப்போற மகராசன்… உனக்கு மருவாதி குடுக்கலைன்னா, எங்க நாலு பேத்தையும் வீட்டை விட்டுத் துரத்திட மாட்ட.”

 

“ச்ச! ச்ச!” என அவன் உச்சுக் கொட்டியதும் நால்வரும் அவனை நல்லவனாகப் பார்க்க, “அப்புறம் வீட்டுவேலை, வெளிவேலை எல்லாம் யார் செய்யறது?” எனக் கேவலமாகப் பார்க்க வைத்தான். 

 

அவர்கள் பார்வைக்கு அலட்டாது, “எனக்கும் என் பொண்டாட்டிக்கும் கொஞ்சிக்கவே நேரம் போதாது. எங்குட்டு இருந்து அண்ணிங்களா…” என்றுவிட்டு வெறும் தரையில் அமர்ந்தவன், வலது காலை இடது கால் முட்டி மீது போட்டுக் கையைப் பின்னந்தலைக்குத் தாங்கிக் கொண்டான்‌. 

 

அண்ணிகளின் பார்வை அவன் மீதே நிலைகுத்த, “போங்க… வெட்கமா வருது.” எனச் சிரித்தான்.

 

சிங்காரவேலனின் உடன்பிறந்தவர்களும், அவர்களை நம்பி வாக்கப்பட்டு வந்த மருமகள்களும் வெட்டவா குத்தவா என்ற ரீதியில் பார்த்துக் கொண்டிருக்க, 

 

“ஹனிமூனுக்கு எந்த இடம் நல்லா இருக்கும்?” வெட்கமில்லாது ஆலோசனை கேட்டான். 

 

“இந்தாடா…”

 

“என்னாதும்மா?”

 

“உன் பொண்டாட்டி பனியாரம் சுட்டுக் குடுத்து விட்டிருக்கா.”

 

“பார்த்தியாம்மா, அவளுக்கு என் மேல எவ்ளோ பாசம்னு. இங்கயும் தான் மூணு பொம்பளைங்க இருக்கீங்களே. கண்ணாலம் ஆகப் போற கன்னிப் பையனுக்கு, வாய்க்கு ருசியா ஆக்கிப் போட்டுத் தேகத்தை வலுவாக்குவோம்னு எண்ணம் இல்லாம.” 

 

இவர்கள் பேச்சுக்கு நடுவில் இரண்டாவது பெண்ணையும் கொடுக்கப் போகும் அன்னம் உள்ளே நுழைய, “வாங்க மாமியாரே!” தேனாக வரவேற்றான் சிங்காரவேலன். 

 

செல்ல மருமகனைக் கண்டு புன்னகைத்தவர், சுட்டு வந்த பணியாரத்தைக் கொடுக்க, “ஆல்ரெடி வந்துடுச்சு.” கிண்ணத்தைக் காட்டினான். 

 

“அது சரி!” 

 

“உன் மாமியாரை அடக்கி வை அத்தை. எப்பப் பாரு என்கிட்ட மல்லுக் கட்டிக்கிட்டுத் திரியுது அந்தக் கெழட்டுக் கெழவி.”

 

“அவங்க பாவம் சிங்காரா… என்னாதான் வெளியில உன்னத் திட்டிக்கிட்டு இருந்தாலும், அவங்க மவன்கிட்ட உனக்கு அவ்ளோ சப்போர்ட் பண்ணுச்சு. அதுக்கும் உன்ன ரொம்பப் புடிக்கும். மவன மாதிரி வெளிவேஷம் போட்டுக்கிட்டுத் திரியுது.”

 

“சைடு கேப்புல உங்க புருஷனையும் நுழைக்கப் பாக்குறீங்க பாருங்க.”

 

“அவருக்கும் உன்னப் புடிக்கும் சிங்காரா…”

 

“ஆமாமா!”

 

“புடிக்காமத்தான் கண்ணாலத்துக்குச் சம்மதம் சொன்னாரா?”

 

“அது அந்தப் பரமேஸ்வரனுக்குத் தான் தெரியும்.”

 

“ம்க்கும். மாமனுக்கும், மருமவனுக்கும் வேற வேலை இல்ல. இவன்கிட்டப் பேசிகிட்டு இருக்காம வேலையப் பாரு அன்னம்.” என்ற அண்ணியைக் கண்டு சிரித்தவர், 

 

“அண்ணனுக்கு இது குடுத்துடுங்க அண்ணி.” என்று விட்டு வெளியேறினார். 

 

***

 

விடிந்தால் இருவருக்கும் திருமணம். இந்த நாளிற்காகக் காத்திருந்த இருவருக்கும் உறக்கம் வரவில்லை. கோவிலில் திருமணத்தை முடித்துவிட்டு, மாலை வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஓவியமாக வரைந்து காதலை வெளிப்படுத்திய காகிதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் முகம் தெரிந்தது. அன்று வெட்கமும், கூச்சமும் கலந்து அவள் வெளிப்படுத்திய வார்த்தைகளை எண்ணிச் சிரித்துக் கொண்டவன் காகிதத்தில் இதழ் பதித்து, 

 

“கொள்ளை அழகு என் லாலா!” என்றான். 

 

அவன் நினைவில் அன்னையோடு படுத்துக் கொண்டிருந்தவள் கைபேசித் திரையில் மின்னிக் கொண்டிருக்கும் அவன் முகத்தில் தன் இதழ்களை ஒட்டி எடுத்து, “லவ் யூ மாமா!” என்றிட, அன்னம் சிணுங்கிப் படுத்தார். 

 

அதில் தன் உணர்வுகளை அடக்கியவள், நெஞ்சுக்குள் அவன் உருவம் இருக்கும் கைபேசியை வைத்து, “நாளைல இருந்து நான் உன் பொண்டாட்டி! இந்த நாளுக்காக எத்தனை நாள் காத்திருக்கேன் தெரியுமா மாமா… தாலி கட்டி முடிச்ச கையோட உன் கூட வந்துடுவேன்.” என்றவளின் நாளைய நிலையை எண்ணிச் சிரித்தது அந்த இரவு. 

 

***

 

விடியற்காலையில் அதிர்ந்தது மைக் செட். கல்யாணப் பாடல்களை ஒலிபரப்பி அந்த ஊரையே எழுப்பி விட்ட சிங்காரவேலன், ஓயாமல் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனைக் கண்டும் காணாமலும் இருக்கும் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார் கோமளம்.

 

“இது வேலைக்காகாது! வேலைக்கே ஆகாது! நீயே களத்துல குதிச்சிடுடா சிங்காரவேலா…” எனத் தன் மார்தட்டித் தைரியப்படுத்திக் கொண்டவன் நலங்கு வைப்பதற்காகத் தயார் படுத்தி வைத்திருந்த மனையில் சென்று அமர்ந்தான். 

 

அவன் செயலைப் பார்த்த மருமகள்கள் சிரிக்க, “அவசரக் குடுக்க!” கன்னத்தில் இடித்தார் சீதாலட்சுமி.

 

“உங்கள நம்பி இம்புட்டு நாள் இருந்ததே போதும். சட்டுன்னு நலங்கு வச்சு என் பொண்டாட்டியப் பார்க்கக் கூட்டிட்டுப் போங்க. என்னான்னு தெரியல, காலைல இருந்து போன் பண்றேன், உன் பேத்தி எடுக்க மாட்டேங்குறா.” 

 

“அவ அம்மாக்காரி போன வாங்கி வச்சுட்டா.”

 

“என்னாவாம் உன் பொண்ணுக்கு?”

 

“ராத்திரி எல்லாம் தூங்காம போனப் பார்த்துட்டு ஒக்காந்து கெடந்திருக்கா பைத்தியக்காரி!” என்றதும் வெட்கத்தில் புன்னகைத்தவன், 

 

‘மாமன் வரேன்டி செல்லம்!’ மனத்திற்குள் சொல்லிக் கொண்டான். 

 

அவன் பொறுமையைச் சோதிக்கும் விதமாக, மனையில் உட்கார்ந்து அரை மணி நேரம் ஆகியும் யாரும் நலங்கு வைக்கவில்லை. அண்ணிகளை அழைத்துப் பார்த்தவன், அன்னையை முறைத்துப் பஸ்பம் ஆக்கினான். தன் வீட்டுப் பிள்ளையை வெறுப்பேற்ற நினைத்தவர், “நான் கோவிலுக்குக் கிளம்புறேன். இவனைக் கூட்டிகிட்டு வந்து சேருங்க.” என வெளியேற, 

 

“யோவ் நீலகண்டா!” உரக்கக் கத்தினான். 

 

இடுப்பில் சொருகியிருந்த முந்தானையை உதறித் தள்ளி, வேகமாக ஓடி வந்து மகன் வாயை மூடிய கோமளம், “அடேய்! அவர் வாசல்ல தான்டா நின்னுகிட்டு இருக்காரு.” என்றார். 

 

“அது தெரிஞ்சு தான் கூப்பிடுறேன்!” 

 

“என்னாத்துக்கு?”

 

“ஆஹான், என்னா பொண்டாட்டிய வளர்த்து வச்சிருக்கன்னு நாக்கப் புடுங்குற மாதிரிக் கேட்கத்தான்.” 

 

“மொதப் பொறந்த ரெண்டும் எப்படி அடக்கமா இருக்குங்க. நீ மட்டும் ஏன்டா அவுத்துவிட்ட காளையாட்டம் கெடக்குற. உன்னக் கண்டாலே ஓடி ஒளியுறாரு.” 

 

“ராத்திரி எல்லாம் மப்புல ஆடிட்டு, எங்கடா திட்டப் போறேன்னு பயத்துல ஓடிக்கிட்டு இருக்காரு, நீ வேறம்மா.” 

 

“அப்பன், புள்ளைக்குப் பயந்து ஓடுறது எந்த ஊரு உலகத்துலயாவது நடக்குமா?”

 

“ஒன்னுக்கு மூணு ஆம்பளப் புள்ளைங்களை வச்சிக்கிட்டு, குடிச்சிட்டு ஆடுற அப்பனா இருந்தா கண்டிப்பா நடக்கும்.”

 

“அவர் மேல பாசமே இல்லையாடா உனக்கு?”

 

“எவன் சொன்னது? உன்ன விட அவரைத்தான் ரொம்பப் புடிக்கும். அவரை நான் திட்டுவேன், எவனும் திட்டக்கூடாது.” 

 

பிள்ளையின் பேச்சில் மனம் மகிழ்ந்த கோமளம், “தங்கம்!” என ஐவிரல்களைச் சுழற்றிக் காதுக்கு மேல் வைத்து நட்டை உடைக்க, நலங்கு தொடங்கியது சிங்காரவேலனுக்கு. 

 

“ரொம்பச் சந்தோஷப்படாத தாயே. எவனும் திட்டக் கூடாதுன்னு தான் சொன்னேன், அடிக்கக் கூடாதுன்னு சொல்லல.‌ என் பொண்டாட்டி வந்த பின்னக் குடிச்சிட்டுக் கலாட்டா பண்ணாரு, தண்ணித் தொட்டிக்குள் முக்கி எடுத்துடுவேன்.‌” 

 

மகன் கன்னத்தில் இடித்தவர் விளக்கை ஏற்றினார். அவனுக்குத் தொடங்கப்பட்ட சிறிது நேரத்தில் பூங்கொடிக்கும் கடைசி நலங்கு தொடங்கப்பட்டது. இரு வீட்டிற்கும் ஒளிவு மறைவு இல்லாத வாசல்படி. இந்நேரம், ஒருவரை ஒருவர் ரசித்துக்கொண்டு நலங்கை அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும். வீட்டுப் பெருசுகளின் சதித் திட்டத்தால் இரு வீட்டிற்கும் நடுவில் ஓலைப்பந்தல் வீற்றிருக்கிறது. 

 

பார்த்தால் பரவசமாகும் மனம் பார்க்காமலே திக்கு முக்காடியது. அவள் வெட்கத்தை எண்ணி இவனும், இவன் வெட்கத்தை எண்ணி அவளும் நலங்கை முடித்து வைத்தார்கள். தாய்மாமன் மாலையிட்டுச் சிங்காரவேலன் கோவிலுக்குப் புறப்பட, வீட்டு வாசலில் ஒளிந்து நின்றவள் அவன் வரும் நொடி ‘டக்கென்று’ எட்டிப் பார்த்தாள். 

 

அவள் பார்ப்பாள் என்றறிந்து பார்த்துக் கொண்டே வந்தவன், “லவ் யூ பொண்டாட்டி, உம்மா…” எனப் பறக்கும் முத்தத்தைத் தூது விட்டு நடக்க, இதழ் குவித்துப் பதில் முத்தத்தைக் கொடுத்து வழி அனுப்பி வைத்தாள். 

 

நாசூக்காக அங்கு நடக்கும் காதல் நாடகத்தைக் கடந்த சேதுராமன், “புள்ளையச் சீக்கிரம் கூட்டிட்டுப் போ…” என்றார் மனைவியிடம். 

 

தந்தையாக அவர் உணர்வுகளைப் புரிந்து கொண்ட அன்னம், பார்வையால் ஆறுதல் கூறி மகளைச் சாமி அறைக்கு அழைத்துச் சென்றார். கடைசியாகத் தன் வீட்டிலிருந்து தன்னுடைய மகளாகப் புறப்படுபவள் கையில் நாணயங்களைக் கொடுத்தார். கண் கலங்க மடி ஏந்தி நிற்கும் அன்னையின் முந்தானையில் கொட்டியவள், நெற்றியில் திருநீறு வைத்தார் சேதுராமன். 

 

கண்களுக்குக் கீழ் தேங்கியிருந்த நீரைப் பெற்றோர்களுக்குக் கடைசியாகச் சமர்ப்பணம் செய்தவள் காலில் விழுந்து வணங்க, கண் கலங்கி ஒதுங்கி நின்றார் ரங்கம்மாள். அவர் காலிலும் விழுந்து ஆசி பெற்ற பூங்கொடி, இனித் திரும்பவே போவது தெரியாமல் வீட்டை விட்டுக் கிளம்பினாள். 

 

அல்லி நடை போட்டு ஆடிவரும் தங்கத்தேரை மணவறையில் அமர்ந்திருந்த மணமகன் ரசித்தான். தங்கச் சிலையாக மின்னிக் கொண்டிருக்கும் மலை தேகம் கொண்டவனை மணமகள் ரசித்தாள். இருவரின் ரசிப்பும் அக்னி முன்பு ஒன்றாக நின்றது. பெரியவர்களை வணங்கி, ஒரே மனையில் இடித்துக் கொண்டு அமர்ந்தவர்கள் முன்பு தாலி. 

 

***

 

மிதமாக எரிந்து கொண்டிருந்த அக்னி முன்பு அமர்ந்து செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்து முடித்த மணமக்கள், கையில் முகூர்த்த ஆடை கொடுக்கப்பட்டது. வாங்கிக்கொண்டு ஆளுக்கு ஒரு பக்கம் பிரிந்து சென்றார்கள். இந்தப் பிரிவே இனி நிரந்தரம் என்பதை அறியாது, உடை மாற்ற உதவி செய்ய முன்வந்த தன் வீட்டு ஆள்களை விரட்டி விட்டவள் தானே வெட்கம் சூழக் கட்ட ஆரம்பித்தாள். 

 

அவளைப் போல் எந்த வெட்கமும் இல்லாமல், இன்னும் சிறிது நேரத்தில் தன்னவளை அள்ளிக்கொண்டு அனுமானாகப் பறக்கப் போகிறோம் என்ற குஷியில், “இந்தாடா பெரியவனே! இந்தச் சட்டைய அழுங்காம குலுங்காம மடிச்சு வை.” போட்டு வந்த சட்டையைக் கழற்றி சரவணனிடம் கொடுத்தான். 

 

மூத்தவன் முறைத்துக் கொண்டு அதை வாங்க, “உனக்குத் தனியா சொல்லனுமா, புடி வேட்டிய…” இளையவனிடம் தூக்கிக் கொடுத்தான். 

 

“சட்டுன்னு தாலியைக் குடுத்துக் கட்ட வைக்காம, இதைச் செய்யி அதைச் செய்யின்னு நம்ம உசுர வாங்குறானுங்க. கண்ணாலம் மட்டும் முடியட்டும். இவனுங்க சங்காத்தமே வேணாம்னு என் லாலாவத் தூக்கிட்டுப் பறந்துடுறேன்.”

 

“எதுக்குடா, வீட்ல சொல்லிக் கண்ணாலத்துக்கு ஏற்பாடு பண்ண. ஒரு தாலிய எடுத்து நீயே கட்டிருக்க வேண்டியதுதான…”

 

“இன்னிக்குத் தான்டா மூத்தவனா நீ ரொம்ப அறிவாப் பேசி இருக்க.”

 

“இதுக்கு முன்ன அறிவு இல்லன்னு சொல்லறியா?”

 

“அட கூறுகெட்ட குப்பா! இதை விடத் தெளிவா யாராது சொல்ல முடியுமா? கேள்வி கேட்டு மடப்பயன்னு ப்ரூஃப் பண்றான் பாருடா.”

 

“மல்லுக் கட்டிக்கிட்டு இருக்காம துணிய மாத்திக்கிட்டுப் போடா…” எனத் தம்பி கையில் பட்டு வேஷ்டி சட்டையைத் திணித்தான் இளையவன். 

 

மூன்று காளையர்கள் காதில் ஏதோ சத்தங்கள் விழ ஆரம்பித்தது. பேச்சு வாக்கில் அதைக் கடந்தவர்கள் எட்டிப் பார்த்தார்கள். கோவில் வாசலில் நின்று கொண்டு நீலகண்டனும், சேதுராமனும் வாதமிட்டுக் கொண்டிருந்தனர். எப்போதும் குடித்தால் மட்டுமே இது போன்ற நிகழ்வுகள் நடக்கும். தெளிவாக இருக்கும் பொழுது என்ன இது கூத்து! என்ற சிந்தனையோடு, 

 

“என்னான்னு போய்ப் பாருடா” கண்ணனை விரட்டி விட்டான் சிங்காரவேலன். 

 

“நீங்க பேசறது கொஞ்சம் கூட நல்லா இல்ல மச்சான்.”

 

“நீ பேசுறது மட்டும் நல்லா இருக்கா? என்னை என்னா கேனப்பையன்னு நெனைச்சியா? எம்புட்டுத் தைரியம் இருந்திருந்தா இப்புடிச் சொல்லி இருப்ப.” 

 

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது இடைபுகுந்த கண்ணன் இருவரையும் சமாதானம் செய்ய, “உங்கப்பன் கிட்டச் சொல்லி வை. ஒரு நேரம் போல ஒரு நேரம் பேசிக்கிட்டு இருக்க மாட்டேன். நல்லா தெள்ளத் தெளிவா திட்டம் போட்டு, என் வீட்டுச் சொத்தை அபகரிச்சதும் இல்லாம, என் வேட்டிய உருவி ஓட விடுவேன்னு சொல்லி இருக்கான்.” என்றார் சேதுராமன். 

 

“என்னாப்பா?”

 

“நீ என்னடா இந்தக் குடிகாரன் பேச்சைக் கேட்டுகிட்டு. எப்பவோ எவன் கிட்டயோ குடிச்சுட்டு, இவன் வேட்டிய உருவி ஓட விடுவேன்னு சொன்னனாம். அதை எவனோ கூறு கெட்டவன் இப்ப வந்து இவன்கிட்டச் சொல்லி இருக்கான். அதுக்குத்தான் இப்படிக் குதிகுதின்னு குதிச்சுட்டுக் கெடக்கான் உன் மாமனார்.”

 

“யாரைடா குடிகாரப் பையன்னு சொல்ற? தினப் பொழுது ஓசிலயே என்கிட்ட இருந்து வாங்கிக் குடிச்சிட்டு என்னையவே குடிகாரன்னு சொல்றியா?”

 

“மருவாதி இல்லாமப் பேசாத, மருவாதி கெட்டுப் போயிடும்.”

 

“பெத்தப் புள்ளைங்களைச் சொத்துக்காக விக்கிற உனக்கு என்னாடா மரியாதை?”

 

“எவன்டா புள்ளைங்கள வித்தது. நீ தான்டா என் தங்கச்சியக் கண்ணாலம் பண்ணிச் சொத்தைக் கேட்டு வாங்கின. இப்போ ரெண்டு பொண்ணுங்களையும் கண்ணாலம் பண்ணிக் குடுத்து நைசா இருக்க எல்லாத்தையும் ஆட்டையப் போடப் பாக்குற. உன்ன மாதிரி ஒரு போக்கத்தவன் குடும்பத்துல சம்பந்தம் பண்ணின என் புத்தியச் செருப்பால அடிக்கணும்.”

 

“இந்தா… உன் பக்கத்துல தான் இருக்கு, எடுத்து நீயே அடிச்சுக்க.”

 

“விடுங்க மாமா, அப்பா எதோ பேசிட்டுப் போறாரு.”

 

“என்னாடா என்னா… உங்கப்பன் பேசுவான், நான் சும்மா விடனுமா?” எனக் கண்ணனிடம் எகிறிக் கொண்டு வந்தார் சேதுராமன்.

 

தூரத்திலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிங்காரவேலன், வேட்டியை இடுப்புக்குள் சொருகி விட்டு வேகமாக ஓடி வர, “மருமவனுக்கு மருவாதி குடுக்கத் தெரியாத இவனெல்லாம் ஒரு பெரிய மனுசன்…” என்றார் நீலகண்டன். 

 

“உன் வீட்டுக்கு மருமவனா வந்தப்போ, நீ என்ன வெத்தலை பாக்கு வச்சு வரவேத்தியா என்னை… மானம் மருவாதி என்னான்னு உன் குடும்பத்துக்குத் தெரியாதுடா.”

 

“என்னாப்பா, என்னா இங்க பிரச்சினை?”

 

“இதோ வரான் பாரு, உன் கடைசிப் புள்ள. தெனாவட்டா அலைஞ்சிட்டுக் கெடக்க இவனுக்கு, என் பொண்ணக் கட்டிக் குடுக்குறதுக்கு நீங்க தான்டா என் கால்ல வந்து விழுந்து கெடக்கணும்.”

 

“யோவ் மாமா! தேவையில்லாம பேசாத.” என்றவனைச் சரவணன் வந்து அடக்குவதற்குள், 

 

“பொடிப் பயலே… யாரைடா யோவ்னு சொல்ற? உங்கப்பனும் நீயும் சேர்ந்து எத்தனை நாள் இப்படி என்னை அசிங்கப்படுத்தத் திட்டம் போட்டீங்க.” தாவி அவன் சட்டையைப் பிடித்தார்.

 

சுற்றி இருந்த ஆள்கள் அனைவரும் அவரைத் தடுத்துக் கொண்டிருக்க, மகன் சட்டையிலிருந்து தங்கையின் கணவர் கையை எடுத்துவிட்ட நீலகண்டன், “இந்தக் குடிகாரப் பைய பேச்சைக் கேட்காம நீ போய் ஒக்காருடா.” என்றார்.

 

“ஒரு அடி எடுத்து வச்சே, காலை வெட்டிடுவேன்.”

 

“எங்க வெட்டு, பாக்கலாம்.” மல்லுக்கட்டத் தயாராகினான் சிங்காரவேலன்.

 

“எடுத்து வச்சுப் பாருடா… வெட்டுறனா இல்லையான்னு தெரியும்.”

 

“வேணாம் மாமா, தேவையில்லாம பிரச்சினை பண்ணாதீங்க.”

 

“உங்கப்பன் தான்டா என்கிட்டப் பிரச்சினை பண்றான். பண்றவனை என்னான்னு கேட்கத் துப்பு இல்ல, இவன்லாம் வந்துட்டான் பேச…” 

 

“எவனோ, என்னமோ சொன்னான்னு இப்ப வந்து பிரச்சினை பண்றீங்க. இந்தக் கண்ணாலத்த நிறுத்தத்தான இப்படிப் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.”

 

“ஆமாடா, அதுக்குத்தான் பண்றேன். என்னா பண்ணிடுவ?”

 

“வேணாம் மாமா, தேவை இல்லாம பிரச்சினை பண்ணாம அமைதியா இருங்க.”

 

மெல்ல விஷயம் கோவில் முழுவதும் பரவியது. சண்டையைக் கேட்ட வீட்டுப் பெண்கள் அனைவரும் ஓடி வந்து தடுத்துக் கொண்டிருந்தனர். யார் பேச்சையும் அங்கிருக்கும் ஆண்கள் கேட்பதாக இல்லை.

 

“உங்கப்பன் என் வேட்டிய உருவி ஓட விடுவேன்னு சொல்லுவான். நீ மருவாதி இல்லாமப் பேசுவ. கேட்டுக்கிட்டு விரல் சூப்பிட்டு ஒக்காரச் சொல்றியா?”

 

“டேய்! பேச்சு உனக்கும் எனக்கும் தான். என் மவன்கிட்ட எதுக்குப் போற?”

 

“உன் மவனுங்க தான்டா என்கிட்டப் பிரச்சினை பண்ண வரானுங்க. ஆம்பளப் புள்ள யாரும் இல்ல, சுளுவா இந்தச் சேதுராமனை அடிச்சிடலாம்னு பார்க்குறீங்களா?” என்ற சேதுராமன் சொடக்கிட்டு, 

 

“தைரியமான ஆம்பளைங்களா இருந்தா அடிச்சுப் பாருங்கடா.” என்றார்.

 

“என்னாங்க பண்றீங்க? நம்ம பொண்ணுக்கு இன்னைக்குக் கண்ணாலம்.”

 

“வாடி வா… உன்னத்தான் தேடிக்கிட்டு இருந்தேன். பார்த்தியா உன் அண்ணனும், அண்ணன் மவனுங்களும் எப்புடி ஒன்னு சேர்ந்து என்னை அசிங்கப்படுத்துறாங்கன்னு. அப்பவே சொன்னேன், கட்டிக் குடுத்ததோட போதும். இருக்கறதையாது எங்கயாவது நிம்மதியா வாழ வைக்கலாம்னு. காது குடுத்துக் கேட்காம, இம்புட்டுப் பேருக்கு மத்தியில என்னை அசிங்கப்படுத்திட்டல்ல.” என அன்னத்தை அடிக்கப் பாய்ந்தார். 

 

“எடேய்! எம்முன்னாடியே என் தங்கச்சிய அடிக்கப் பாயுற.” எனத் தடுத்ததும் வெகுண்டு எழுந்த அன்னத்தின் கணவர், கோபத்தில் நீலகண்டன் கன்னத்தில் ‘பளார்’ என்று அறைந்து விட, அந்த இடம் சீற்றத்திற்குச் சமமான சூழ்நிலையில் சிக்கியது. 

 

அடித்த அடி உரைத்ததும், விழி அகண்டு நின்ற நீலகண்டன் செய்வதறியாது நிற்க, தந்தையை அடித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது மாமன் சட்டையைத் தாவிப் பிடித்த சிங்காரவேலன், “யாரடா அடிக்கிற?” ஓங்கிக் கன்னத்தில் அறைந்தான். 

 

அதன்பின், அங்கு என்ன நடந்திருக்கும் என வார்த்தைகளால் விவரிக்க வேண்டுமா என்ன? ஆண் என்ற அகம்பாவத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் அடித்துக் கொண்டனர். தந்தையை அடித்ததற்காக ஆண்கள் மூவரும் சேதுராமனைச் சுற்றி வளைக்க, தன் சொந்த பந்தங்களோடு அவரும் எதிர்கொண்டார். வீட்டுப் பெண்கள் தான், சுற்றி நின்று தலையிலும், மார்பிலும் அடித்துக்கொண்டு கதறினார்கள். 

 

கோவிலுக்குப் பின்புறத்தில் இருந்ததால், இந்தக் கலவரங்கள் எதுவும் தெரியவில்லை பூங்கொடிக்கு. ஆசையாகச் சேலை கட்டியவள் அழைப்பிற்காகக் காத்திருந்தாள். அவள் ஆசையை நிரந்தரமாகப் பூட்டி வைத்தது தோழியின் அலறல். கேட்டதும் இடி இடித்தது போல் அரண்டு மிரண்டு ஓடினாள். 

 

“எவனாவது இனிமே என் பொண்ணைக் கேட்டு வந்தீங்க, செருப்பால அடிப்பேன்டா.”

 

“டேய்! இனி எந்த ஜென்மத்துலயும் உன் பொண்ணு என் வீட்டுல வந்து வாழாது.”

 

“அடப் போடா, ஈத்தரப் பயலே. உன் பையன் நாக்கத் தொங்கப் போட்டுகிட்டு என் பொண்ணு பின்னாடி தான்டா அலைவான்.”

 

“உன் பொண்ண விட்டா ஊர் உலகத்துல வேற பொண்ணே இல்லையா? இந்த மாதிரிக் குடிகாரக் கூமுட்டையன் பொண்ணைக் கண்ணாலம் பண்ணனும்னு எனக்கு என்ன தலை எழுத்தா? உன் பொண்ணு தான்டா, ஊரு உலகத்துல ஆம்பளையே இல்லாத மாதிரி என் பின்னாடி வந்து சுத்துனா…”

 

“கேட்டியாடி உன் அண்ணன் மவன் சொல்றத. அண்ணன் அண்ணன்னு அவன் குடும்பத்துக்கு ஓடி உழைச்ச உனக்கு, இதுவும் வேணும். இதுக்கு மேலயும் வேணும்.”

 

“என்னா சிங்காரா இது?”

 

“பின்ன என்னா அத்தை? எம்புட்டுப் பேச்சுப் பேசுறாரு. இந்தக் கண்ணாலத்த நிறுத்தவே இவ்ளோ வேலையும் பாக்குறாரு.”

 

“அவர் ஏதோ பேசிட்டுப் போறாரு சிங்காரா, நீ கொஞ்சம் அமைதியா இரு.”

 

“என் மவனை எதுக்கு அமைதியா இருக்கச் சொல்ற? உன் புருஷன் தெனாவட்டாப் பேசுவான். நாங்க பார்த்துகிட்டுச் சும்மா இருக்கணுமா? இவனை இங்கயே வேட்டிய உருவி அடிக்காம, நானும் என் மவனுங்களும் போக மாட்டோம்.” என்றதும் நீலகண்டன் வேட்டியில் கை வைத்த சேதுராமன், அவர் சொன்னதை அவருக்கே நடத்திக் காட்டிப் பழி தீர்க்க எண்ணினார். 

 

சுற்றி இருந்தவர்களும், சிங்காரவேலனும் அதைத் தடுத்துக் கொண்டிருந்தார்கள். எதற்கும் அடங்காமல் வேட்டியை அவிழ்த்தவர், அதை உருவுவதற்குள் அவர் மார்பில் எட்டி உதைத்தான். இரண்டு அடி தள்ளிச் சென்று விழுந்தவரைப் பார்த்துக்கொண்டே ஓடி வந்தாள் பூங்கொடி. 

 

“அவ்ளோதான் உனக்கு. எங்கப்பன் மேல கைய வைக்காத…”

 

எழுந்து அவன் கன்னத்தில் ‘பளார்’ என்று அடித்த சேதுராமனை அவனும் தாக்கத் துவங்கினான். ஓட்டத்தில் வேகத்தைக் கூட்டி இருவருக்கும் நடுவில் வந்து நின்றவளைச் சிறிதும் கண்டு கொள்ளவில்லை.

 

“என் மேல கைய வெச்ச உனக்கு, என் பொண்ணைத் தரமாட்டேன்டா…”

 

“நீ என்னாடா தரமாட்டேன்னு சொல்றது, உன் பொண்ணு எனக்கு வேணாம்.”

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
18
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்