Loading

அத்தியாயம் 7

அகனிகாவிடம் பேசிவிட்டு புவித் நேராக தங்களது ராயல்டி டைம் தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தான்.

அவனது வரவை நம்பாது பார்த்த விதார்த்,

“என் பேச்சை கேட்கலாம் முடிவு பண்ணிட்டியா என்ன?” எனக் கேட்டான்.

மென் சிரிப்பை உதிர்த்த புவித்,

“புது டிசைன் ஒண்ணு மண்டைக்குள்ள ஓடுது. நீங்களும் புது ஃபீச்சர்ஸ்ல வாட்ச் லாஞ்ச் பண்ணா நல்லாயிருக்கும் சொன்னீங்களே அதான் வந்தேன்” என்றான்.

“பாருடா…” என்ற விதார்த், “எப்போ ஸ்டார்ட் பண்ற? உனக்கு எந்த ஸ்பேஸ் வேணும் சொல்லு ரெடி பண்ணிடுறேன். இந்த சீட் ஓகேன்னாலும் எனக்கு ஓகே தான்” என்ற விதார்த், தான் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எழுந்திருந்தான்.

“நான் கேட்காமலே எல்லாத்தையும் கொடுப்பீங்கன்னு தெரியும். நீங்க உட்காருங்க முதலில்” என்றதோடு, “நான் டிசைன் பண்றன்னு தான் சொன்னேன்… ஆபீஸ் வரேன் சொல்லவே இல்லையே” என்ற புவித், “டிசைன் முடிச்சிட்டு சென்ட் பண்றேன்… மத்ததுலாம் உங்க வேலை” என்றான்.

“நீ டீச்சர் வேலை பாக்கிறது எனக்கு சுத்தமா பிடிக்கல ஆருஷ்” என்ற விதார்த்தின் முகம் வெறுப்பை காண்பித்தது.

“உங்களுக்கான காரணம் புரியுது. அதுக்காக அந்த வேலையையே வெறுக்கிறது நாட் குட் அண்ணா” என்ற புவித், “எனக்கு பிடிச்சிருக்கு” என்றான்.

“என்னவோ… லீவ் தட் டாபிக். நினைக்கவே இப்போலாம் வலியாகுது” என்ற விதார்த், “இதைப்பாரு” என்று ஒரு செய்தியை தன்னுடைய அலைபேசியில் காண்பித்தான்.

“எல்லா ஊர்லையும் இதே நிலைமைதான் போல, இருக்க இருக்க மோசமா தான் போயிட்டு இருக்கு” என்ற விதார்த், “ஆம்பளைன்னு சொல்லிக்கவே அசிங்கமா இருக்குடா” என்றான்.

அலைபேசியில் ஓடிய செய்தியைப் பார்த்து புவித்தின் முகத்தில் கடுமை குடிபுகுந்தபோதும், வெளிக்காட்டிக்கொள்ளாது திரையை வெறித்திருந்தான்.

“தன்னிடம் பயிலும் மாணவியின் மீது தவறான தொடுகையில் ஈடுபட்ட ஆசிரியரை அம்மாணவியின் குடும்பத்தினர் பள்ளியில் புகுந்து தாக்கிய சம்பவம் அந்நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.”

“இவங்க இப்படி அடிச்சா மட்டும் இவனுங்க திருந்திடுவாங்களா?” என்ற புவித், “மத்தவங்க மாதிரி நம்மால சாதாரணமா இதையெல்லாம் கடந்துப்போக முடியுறதில்லைல” என்று அலைபேசியை அணைத்திருந்தான்.

முகத்தில் மறைக்கப்பட்ட வேதனையின் அழுத்தம் புவித்தின் குரலில் தென்பட்டது.

தனக்கு முன்னிருந்த மேசையின் மீது படிந்திருந்த தம்பியின் கையின் மீது தன்னுடைய கை வைத்து அழுத்தம் கொடுத்த விதார்த் அர்த்தமாக கண்களை மூடித் திறந்தான்.

புவித்திடம் பெருமூச்சொன்று வெளியேறியது.

இருவரிடமும் குடிகொண்டிருந்த பேரமைதிக்கு நடுவில் சுமக்க முடியா சுமையாய் பழைய நினைவு சிக்கி சுழன்றது.

“நான் கிளம்புறேன்” என்று எழுந்துகொண்ட புவித்,

“வாழ்க்கை இப்படியே போயிடுமோன்னு பயமா இருக்குண்ணா” என்று வெளியேறியிருந்தான்.

அவன் சொல்லிச் சென்ற வார்த்தைகளின் தாக்கம் விதார்த்தினுள் மீளா வலியை மேலெழுப்பியது.
________________________________

எங்கிருந்தோ பறந்து வந்த காகித ஏவுகணை, தலையின் பின்னலில் கட்டியிருந்த ரிப்பனில் வந்தமர, தன்னுடைய தோழியிடம் தற்போது ட்ரெண்டிங்கில் சென்று கொண்டிருக்கும் ரீல்ஸ் ஒன்றினைப் பற்றி பேசிக்கொண்டிருந்த மாணவி கோபம் பெற்றவளாக அந்த ஏவுகணையை எடுத்து, அது வந்த திசை நோக்கி யாரெனக் கேட்டுக்கொண்டே எறிந்தாள்.

அதுவோ சன்னல் அருகே நின்று கொண்டிருந்த வேறொரு மாணவன் முகத்தில் சென்று மோதிட, அவன் பதிலுக்கு ஒரு ஏவுகணையை எறிய ஆரம்பிக்க வகுப்பு முழுக்க இரு புறமும் மாற்றி மாற்றி மாணவ மாணவியர் காகிதத்தை தூக்கி எறிந்து கொண்டாட்டமாய் கூச்சலிட்டனர்.

மாலை நேர இறுதி வகுப்பு, அவ்வகுப்பிற்கான ஆசிரியர் வேறு வரவில்லை என்பதால் அவர்களின் ஆட்டத்தை கண்டிப்பார் யாருமில்லை.

முதலில் காகிதத்தை பறக்க விட்ட மாணவியை கண்டுபிடித்து மொத்த வகுப்பும் அவளை காகிதத்தால் தாக்கிட, அவளோ…

“வேணாம்… வேணாம்…” என சொல்லிக்கொண்டே பின்னால் நடந்தவாறு வாயில் பக்கம் செல்ல யார் மீதோ முழுவதும் மோதி நின்றாள்.

அந்த நொடியே அதுவரை சத்தமும், இரைச்சலுமாய் இருந்த இடம் அமைதியாகியது. மாணவர்கள் அனைவரது கண்ணிலும் அப்பட்டமான மிரட்சி.

இடித்து நின்ற மாணவியான அனு யாரென்று பார்க்க, அவளுக்கு மூச்சே நின்றுவிட்டது.

அவர் அவ்வகுப்பின் தாவரவியல் ஆசிரியர் மார்த்தாண்டம். பின் முப்பதில் இருக்கும் தோற்றம். முகம் அத்தனை இறுக்கமாக இருந்தது.

மார்த்தாண்டத்தின் பார்வைக்கே அனு இரண்டடி பின்னால் நகர்ந்து நிற்க, அனுவின் ரிப்பன் வைத்து மடக்கிக் கட்டிய பின்னல் முன் விழுந்திருக்க, அவளின் பின்னலை உடலோடு கை அழுத்தம் கொள்ளும் வகையில் பிடித்து தனக்கருகில் அவளை இழுத்தான். அனு அவனின் பக்கம் வந்த பின்னரும், பின்னலிலிருந்த கரத்தை அவன் விலக்கிக்கொள்ளவில்லை.

அனு அவ்விடத்தில் அசௌகரியம் உணர்ந்த போதும், அவளால் நகர்ந்திட முடியவில்லை. அவளின் ஒரு கால் பாதத்தின் நுனியில் தன்னுடைய காலினை வைத்து அவள் அசைந்திடாது இருக்க அழுத்தம் கொடுத்திருந்தான் மார்த்தாண்டம்.

அனுவுக்கு வெளியில் சொல்ல முடியாத ஒவ்வாமை. கண்கள் கலங்கிவிட்டிருந்தது.

காலிலும், பின்னல் இழுப்பிலும், படதா இடத்தில் படும் ஆணின் தொடுகையும் வலியோடு கலந்த அருவருப்பைக் கொடுத்திட,

“சார்… சார்…” என்று மெல்லொலியில் விடுமாறு கெஞ்சினாள்.

“போச்சுடி… இன்னைக்கு அனு மாட்டிக்கிட்டா” என்றொரு மாணவி சத்தமின்றி தனக்கு அருகிலிருந்த தோழியிடம் முணுமுணுக்க,

“ஷ்ஷ்” என அவளோ காற்றின் ஒலியில் அவளை அடக்கினாள்.

“அனுவை தனியா கூப்பிட்டா, நாமளும் கூடப்போகணும்டி” என்று மற்றொரு மாணவி கூறினாள்.

மாணவிகள் அனைவரும் அட்டென்ஷனில் நின்றிருந்தாலும் அவர்களுக்குள் மெல்லிய முனகல் இருந்திடவே, மார்த்தாண்டம் அழுத்தம் அவர்கள் புறம் திரும்பிட, அனைவரும் சிலையென மாறியிருந்தனர்.

“சார் நீங்க தெரியாம அனுவோட காலை மிதிச்சிட்டு இருக்கீங்க” என்றொரு மாணவன் கவனித்துக் கூற, அதனை மார்த்தாண்டன் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

“கிளாசுக்கு டீச்சர் வரலன்னா சப்ஸ்ட்யூட் ஸ்டாஃப் யாரும் கூப்பிட வேண்டியது தானே. இதென்ன பிளே கிரவுண்டா. ஹயர் ஸ்டடி ஸ்டூடண்ட் மாதிரியா பிஹேவ் பண்றீங்க?” என்று மாணவர்களை பார்த்து வினவியதில் அனைவரும் பயந்து தலை குனிந்தனர்.

வகுப்பு முழுவதும் கிடந்த காகிதக் குப்பைகளை கவனித்த மார்த்தாண்டன்,

“யாரோட வேலை இது” என்று அனுவின் புஜத்தில் ஆடையை மேலேற்றி இரு விரலில் வலிக்கக் கிள்ளினார்.

வலி என்னவோ அனுவுக்கு தான், அவளின் அவ்வலியிலும் மார்த்தாண்டம் தனது விரல் உணர்ந்த மென்மையில் முகம் காட்டா ரசனையை கண்களில் படரவிட்டிருந்தான்.

“சார்… சார்… தெரியாம பண்ணிட்டோம். இனி இப்படி பண்ணமாட்டோம்” என்று அனு அழுக்குரலில் கூறிட,

“பெல் அடிச்சதும் என்னை வந்து பார்த்திட்டுதான் நீ போகணும்” என்று அனுவின் புஜத்திலிருந்து தன்னுடைய விரல்களை மெதுவாக விலக்கிக்கொண்ட மார்த்தாண்டன்,

“வர” என்று அங்கிருந்து சென்றான்.

மார்த்தாண்டன் செல்லவும் மணியடிக்கவும் சரியாக இருந்தது.

மாணவர்கள் அனைவரும் தாண்டிக்கொண்டு வெளியேறிட,

அனு தான் நின்றிருந்த அவ்விடத்திலேயே கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்துவிட்டாள். அவ்வகுப்பில் மொத்தம் பதிமூன்று மாணவியர் தான். அனுவுக்காக முனகிய அவளது தோழியர் நால்வரும் அனுவை சூழ்ந்துகொண்டனர்.

“அனு பயப்படாத நாங்களும் கூட வர்றோம்” என்று ஒருத்திக்கூற,

“இந்த முறையாவது ஹெட் மிஸஸ் கிட்ட சொல்லுவோம்” என்றாள் ஒருத்தி.

“சொன்னாலும் நம்பமாட்டாங்க. அந்த வாத்தி தான் அம்புட்டு நல்லவனா நடிக்கிதே” என்றாள் இன்னொருத்தி.

“எவ்வளவு நாள் சகிக்கிறது? அடிக்கிறேன், கிள்ளுறேன்னு கண்ட இடத்தில் தொடுறான். தனியா கூப்பிட்டு கன்னத்தை வேற பிடிக்கிறான். யார்கிட்டயும் சொன்னா, தப்புப் பண்ணா இப்படி கண்டிக்கத்தான் செய்வேன்னு பிளேட்டை மாத்திடுறான்” என்று அவர்கள் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி புலம்பினர்.

“லேட்டா போனா அதுக்கும் எதுவும் பண்ணுவாண்டி.”

“நீங்க ஸ்டாஃப் ரூம் வெளியவே நில்லுங்கடி” என்ற அனு முகத்தைத் துடைத்துக்கொண்டு மார்த்தாண்டன் அறைக்குச் சென்றாள்.

அவளின் நல்ல நேரமோ என்னவோ, பள்ளி உதவியாளன் மார்த்தாண்டத்திற்கு பார்சல் வந்திருப்பதாகக் கொடுக்க வந்தான்.

அதனை பயன்படுத்திக் கொண்ட அனு, மார்த்தாண்டத்தின் மேசையில் அடுக்கி வைத்திருந்த மாணவர்களின் செயல்முறை குறிப்பேட்டை தட்டிவிட, அவை சரிந்ததில் மார்த்தாண்டத்தின் மேசையே முழுவதும் கலைந்தது.

“அச்சோ சாரி சார்” என்று அனு அப்பாவியாக மன்னிப்பு வேண்ட,

“பெல் அடிச்சிருச்சே பாப்பா. கேட் மூடிடுவாங்களே, நீ போ. நான் சாருக்கு ஹெல்ப் பண்ணிக்கிறேன்” என உதவியாளர் கூற, அனு தப்பித்தோம் என்று ஓடி வந்திருந்தாள்.

வேகமாக வெளியேறியவளை விவரிக்க முடியா உணர்வில் பார்த்த மார்த்தாண்டன்,

“வெளிய போங்க. நான் பார்த்துக்கிறேன்” என்று உதவியாளரிடம் தன்னுடைய கடுகடுப்பைக் காட்டினான் மார்த்தாண்டன்.

‘என்னாச்சு இவருக்கு?’ என நினைத்த உதவியாளர் சென்றிட, மேசையை சரி செய்து அதில் சிதறிய பொருட்களையெல்லாம் சரியாக அடுக்கி வைத்த மார்த்தாண்டன், உதவியாளர் தன்னுடைய பெயருக்கு வந்ததாக வைத்துவிட்டுச் சென்ற சிறியளவிலான பார்சல் பெட்டியை எடுத்து திறந்தார்.

அப்போது பலத்த காற்று வீச, சன்னல், கதவு தானாக மூடிக் கொண்டது.

மார்த்தாண்டமும் பெட்டிக்குள்ளிருந்த நவீனரக கைக்கடிகாரத்தை எடுத்து திருப்பி திருப்பிப் பார்த்தவராக,

“யார் அனுப்பியது” என்ற யோசனையில் மூடிய கதவுகளை பொருட்படுத்தவில்லை.

அனுப்புநர் யாரென்று குறிப்பிட்டிருக்கவில்லை. ஆனால் பெறுநரில், அவன் எடுக்கும் வகுப்பு பிரிவும் தவறாது குறிப்பிடப்பட்டிருந்தது.

“யாரோ நம்மள நல்லாத் தெரிஞ்சவன் தான் போல. என் கிளாஸ் செக்ஷன் வரை தெரிஞ்சு வச்சிருக்கான்” என்ற மார்த்தாண்டம், கடிகாரத்தை கையில் அணிந்து பார்த்தான்.

“நல்லாதான் இருக்கு” என்றவன், கழட்ட முயல, முடியாதுப்போனது. கையோடு ஒட்டிக்கொண்டதுப் போல் அசைக்கூட இயலவில்லை.

மார்த்தாண்டம் என்னென்னவோ செய்தும் கைக்கடிகாரத்தை அகற்ற முடியவில்லை.

திடீரென அவனது அலைபேசியில் தகவல் வந்ததற்கு அறிகுறியாக சத்தம் வர, கைக்கடிகாரமும் சத்தம் எழுப்பியது.

என்னவென்று எடுத்துப் பார்க்க,

கைக்கடிகாரம் அவனது அலைபேசியுடன் இணைக்கப்பட்டிருந்தது.

“ஹவ் இட்ஸ் பாசிபில்” என முனங்கிய மார்த்தாண்டன், தான் எதுவும் செய்யாமலே அலைபேசியில் காணொளி ஓடவும், சிறிதாக அதிர்ந்தான். அவனுக்கு என்ன நடக்கிறதென்று ஒன்றும் புரியவில்லை.

காணொளியில் அவன் மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்ளும் காட்சிகள், அவனது முகம் மட்டும் தெளிவாகத் தெரியும்படி இருந்தது.

கைக்கடிகாரத்தையும், அலைபேசியையும் என்னென்னவோ செய்துப் பார்த்தான்… அவனது அசைவில் கைக்கடிகாரம் இருந்த அட்டைப்பெட்டி உருண்டு கீழேவிழ, அப்போதுதான் கவனித்தான் மூடும் பகுதியின் உள் பக்கம் எழுதியிருந்த வாசகத்தை.

“யூர் டெத் இஸ் அ லெஸன் ஃபார் யூ.”

நெற்றிச் சுருக்கினான்.

காணொளி முடியும் தருணத்தில்,

“உனக்கு ரெண்டு மணிநேரம் டைம் கொடுக்கிறேன். அதுக்குள்ள நீ செய்த தவறெல்லாம் வெளிப்படையா ஒத்துக்கிட்டு போலீசில் சரண்டர் ஆகிடு. இல்லைன்னா நடக்கும் விபரீதத்துக்கு நான் பொறுப்பில்லை” என்று பதிவுக் குரல் ஒலித்தது.

மார்த்தாண்டம் அதற்கு பயந்துவிடவெல்லாம் இல்லை.

‘இவனெல்லாம் என்னை என்ன செய்துவிடுவான்’ எனும் அலட்சியமே அதிகமாகத் தென்பட்டது.
_________________________________

நள்ளிரவில் உறக்கம் கலைந்து எழுந்த புவித், தன்னுடைய கைவளைவில் மனைவி இல்லையென்றதும் மின்விளக்கை உயிர்பித்து எங்கென்று தேடினான்.

அறை அவளின் அரவமின்றி இருக்க, எழுந்து பால்கனி சென்று பார்த்தான்.

‘இந்நேரம் எங்கப்போயிருப்பாள்?’ சிந்தித்த புவித், அகாவின் எண்ணிற்கு அழைக்க, அறைக்குள்ளேயே ஒலித்தது.

அவளின் அலைபேசியை எடுத்து அழைப்பைத் துண்டித்தவன், அடுத்து சென்ற இடம் மொட்டைமாடி.

தேகம் நடுங்கும் குளிரை பொருட்படுத்தாது மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு வீட்டிற்கு பின்னால் பெரும் பரப்பில் கண்களின் காட்சியை நிறைத்திருக்கும் வெள்ளியலை கடலை வெறித்தவாறு, புவித் வரும் திசைக்கு முதுகுக்காட்டி நின்றிருந்தாள்.

“இருட்டுல யாரை சைட் அடிச்சிட்டு நிக்கிற” என்று அகாவின் அருகில் சென்ற புவித், அவள் நின்றிருந்த பக்கச்சுவரின் மீது குதித்து அமர்ந்தான்.

“தூக்கம் வரலையா?”

அவளிடம் பதிலில்லை.

“அந்த அலை மாதிரி தான் நானும் உன் பின்னாடியே வர்றேன்” என்றவன், “லவ் பண்ணலாமா?” எனக் கேட்டான்.

அவளின் உள்ளம் அவனது கேள்வில் அதிர்ந்து சீரானது. அவளுக்கும் கொள்ளை காதல் அவன் மீது. ஆனால் அதனை வெளிக்காட்டும் நிலையில் அவளில்லை.

அசைவின்றி இருப்பவள் மீது அவனது பார்வை உறைந்துவிட்டது.

“ரொம்ப குளிருது” என்ற புவித், தன்னிரு உள்ளங்கைகளையும் தேய்த்து அவளின் இரு கன்னத்திலும் வைத்தான்.

அவனது சூடு அவளின் குளிர்ந்த தேகத்தில் வெம்மையாய் இறங்கியது. அவளின் உள்ளே அமிழ்ந்திருக்கும் அவன் மீதான காதலை தொடும் ஆழத்திற்கு.

“எவ்ளோ நேரமா நின்னுட்டு இருக்க நீ? ஐஸ் மாதிரி இருக்க” என்ற புவித், தனது கையை அவளின் கன்னத்திலிருந்து இறக்கிட, விடாது அவன் கை மீது தனது கை வைத்து கன்னத்தில் அழுத்தி பதித்தாள்.

“கனி…” உயிர் கரையும் அழைப்பு.

மனதில் சிலிர்த்து நடுங்கினாள்.

இருவருக்குமான காதல் பிறந்தது முதலில் அவளிடம் தான். ஆனால் அதனை நொடிக்கு நொடி ஆழமாய் காட்டிக்கொண்டு இருப்பவன் அவன் மட்டுமே.

நீண்ட நாட்களுக்குப் பிறகான அவளது காதலின் சிறு வெளிப்பாடு, அவனது கரத்தின் மீதான அவளின் கரம் தீண்டும் தொடுகை.

“என்னடா?”

அவள் தன்னை நாடுகிறாள் என்பதில் அவன் மகிழ்வதற்கு பதிலாக அச்சமே கொண்டான். கடந்து சென்ற வருடங்களில் பார்வையில் கூட விலகலை மட்டுமே காட்டுபவள், முற்றிலும் முடியாத நேரங்களில் மட்டுமே, அதுவும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே ஆதரவாய் அவனது சிறு விரலைத் தேடிடுவாள். இன்று அப்படியே. அவளாக அவனது அண்மையை வேண்டுகிறாள் என்றால், அவளால் முடியாது எனும் புள்ளியில் நின்றுகொண்டிருக்கிறாள் என்பது அவனறிந்தது.

அகாவிற்கு பெரிய பெரிய ஆறுதல்கள் எல்லாம் தேவையில்லை. புவித்தான் நொடி நேரப் பார்வை போதும். சுட்டுவிரல் பிடி போதும்.

அவனோடு கோர்க்கும் சிறு விரல் பிடியில் அத்தனை நிம்மதி, அமைதி கொள்வாள்.

“ரொம்ப அழுத்தம் கொடுக்காத கனி. என்கிட்ட எதுவும் சொல்லணுமாடா?” எனக் கேட்டான்.

“எண்ணம் போல வாழ்க்கைங்கிறது உண்மையா மாமா?” எனக் கேட்டாள். தன்னுடைய பார்வையை அவனிடம் திருப்பாது.

“இப்போ உனக்கென்ன எண்ணம் அதை சொல்லு” என்றான்.

“என்ன நினைச்சு இந்த காக்கி யூனிபார்ம் போட்டேனோ ரெண்டு வருஷமாகியும் அதை செய்ய முடியல” என்றாள்.

“கொலை பண்றதுக்கு அவ்வளவு வேகமா?” எனக் கேட்டவனை நிதானமாக ஏறிட்டுப் பார்த்தாள்.

“கொன்னாலும் தப்பில்லையே!”

“தப்பு பண்றவங்களுக்கு தண்டனை கொடுக்க நாம யாரு?” என்ற புவித், “மரணம் அவங்களுக்கு ரொம்பவே சின்ன தண்டனை” என்றான்.

“அதைவிட அதிகப்படியான தண்டனை இருக்கா?”

“நீயே ஒரு பெஸ்ட் பிளான் வச்சிருக்கியே” என்றான்.

“நான் என்ன நினைச்சாலும் எப்படி கண்டுபிடிக்கிறீங்க?”

“இங்க நான் இருக்கேன்டி” என்று அகாவின் இதயப்பகுதியை சுட்டு விரலால் சுட்டிக் காண்பித்த புவித், “என்னோட மொத்தம் நீதான். உன் பார்வையை வச்சே உன்னை என்னால் கெஸ் பண்ண முடியும் நம்புறேன்” என்றான்.

அவளின் பார்வை விரிந்து அவனை ரசனையாய் விழுங்கியது.

“அதான் எப்படி?”

அவளது கேள்வியில் மெலிதாய், மிகமிக மெலிதாய் புன்னகைத்த புவித்,

“பிகாஸ் ஆஃப் லவ்” என்று நிறுத்தி, “புவித்தோடா லவ்டி இந்த கனி” என்றான். மனைவியை சுண்டி இழுத்து தன்னுடைய கால்களுக்கு இடையில் நிறுத்தியவனாக.

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
21
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்