அத்தியாயம் 3
“கார்த்தி!” என அவனறைக்குள் பரமேஸ்வரன் வர, நிமிர்ந்து பார்த்தவன் அமைதியாய் இருந்தான்.
அவன் தோளில் கைவைத்தவர் அவன் எதிரில் வந்து அமர,
“இப்ப நான் என்ன ப்பா பண்றது? அம்மா ஏன் இப்படி பண்ணினாங்க? நான் எப்படி இதை ஏத்துக்க முடியும்?” என்று கார்த்திகைசெல்வன் கேட்க, இப்பொழுது பரமேஸ்வரன் அமைதியானார்.
“என்னால எப்படி இனி அவளை ஃபேஸ் பண்ண முடியும்? என்னனு பேச?” என அவன் கேட்க,
“எனக்கும் என்ன சொல்றதுன்னு தெரியல டா!” என்றவர் மகனின் இப்பொழுதைய மனதை தெரிந்து கொள்ள தான் வந்திருந்தார் இப்போழுது.
“என்னங்க!” என சாதாரணம் போல கண்ணகி அறைக்குள் நுழைய, மீண்டும் கோபமாய் முகத்தை வைத்து திரும்பிக் கொண்டான் கார்த்திகைசெல்வன்.
“சொல்லு!” என கணவன் கேட்கவும்,
“காபி வேணுமான்னு கேட்க வந்தேன் என்றவர் பார்வை மகனிடம் தான் இருந்தது.
“நீ வேவு பார்க்க தான் வந்திருக்கனு எங்களுக்கு புரியாதுன்னு நினைக்குறியா கண்ணகி? என்ன இப்படி ஆகிட்ட நீ?” என அதிருப்தியாய் உடனே சொல்லிவிட்டார் பரமேஸ்வரன்.
“அவ்வளவுக்கு நான் உங்களுக்கு அடுத்தவ ஆகிட்டேனா? புள்ளையும் புருஷனும் பேசுறதை கேட்க வந்தது வேவு பாக்க வர்றதா?” என தானும் கண்ணகி குரல் உயர்த்த,
“ம்மா!” என தலையைப் பிடித்துவிட்டான் கார்த்திகைசெல்வன்.
“பார்த்தியா டா உன் அப்பா சொல்றதை? நான் என்ன உங்களுக்கு கெட்டதா நினைப்பேன்?” என மகனிடமும் அவர் கேட்க,
“நான் இப்ப எதுவுமே பேசுற மூட்ல இல்ல. தயவுசெஞ்சு என்னை தனியா விடுங்க!” என்றுவிட்டான்.
“தனியா எவ்வளவு நேரம் தான் இருப்ப? இன்னும் ஒருமணி நேரத்துல பொண்ணு வீட்டுக்கு போகணும்!” என்று கண்ணகி சொல்லவும் அவன் முறைக்க,
“இதெல்லாம் முறை. மாத்த முடியாது. அதை சொல்லிட்டு போக தான் வந்தேன். அப்பாவும் மகனும் என்னவும் பேசிக்கோங்க. எனக்கென்ன?” என வந்த விஷயத்தை சொல்லியாகிற்று என்றபடி வெளியேறிவிட்டார் கண்ணகி.
“ப்ச்!” என தலையசைத்துக் கொண்டான் கார்த்திகைசெல்வன்.
“நீ என்ன நினைக்குற கார்த்தி?” தந்தை கேட்க,
“என்ன நினைக்குறன்னா? என்ன சொல்ல? இனி என்ன நினைக்குறது? ஆனா அஷ்…. “ என சொல்ல வந்தவன் அமைதியாகிவிட,
“இப்ப தான் மண்டபத்துல பேசிட்டு வரேன். நான் தான் பேசினேன். அவ எதுவும் சொல்லல. ஆனா இனி வேற வழி இல்லையே!” என்றார் பரமேஸ்வரனே.
“வழி இல்லைனா? என்ன பண்ண சொல்றிங்க ப்பா?” அத்தனை அழுத்தமாய் பார்த்து கார்த்திகைசெல்வன் கேட்க,
“உனக்கே தெரியுமே கார்த்தி. இது சாதாரண விஷயமே இல்ல. அவ்வளவு ஈஸியும் இல்ல நம்ம இஷ்டத்துக்கு எதையும் தூக்கி போட”
“அதனால?”
“நான் உனக்கு சொல்ல வேண்டியது இல்ல. நீ எல்லாம் தெரிஞ்சவன்!” என்று சொல்லி எழுந்துவிட்டார்.
“ப்பா நில்லுங்க!” என கார்த்திகைசெல்வனும் எழுந்து கொண்டவன்,
“எனக்கு எல்லாம் புரியுது. ஆனா…. “ என்றவன் சில நொடி தயங்கி,
“அஷ்வினி பாவம் ப்பா. வலிக்க வலிக்க பார்த்துட்டு நின்னா!” என கூறியவன் அந்த வலியையும் அனுபவித்துக் கொண்டிருந்தான்.
“ஹ்ம்! இவ்வளவு நேரமும் மண்டபத்துல தான் இருந்தா. இப்ப தான் நிரஞ்சன் அவளை வீட்டுல கொண்டு விட்டுட்டு வந்தான். எல்லாத்துக்கும் காலம் நேரம் சூழ்நிலைன்னு ஒண்ணு இருக்கே!” என்ற பரமேஸ்வரன்,
“இது தான் நடக்கும்னு இருக்கும்போது மாத்திட முடியாது. நீ எல்லாம் தெரிஞ்சவன் கார்த்தி” என்று சொல்லி நகர, இன்னுமே அஷ்வினியின் அந்த அதிர்ந்த முகம் மனதை கொஞ்சம் கொஞ்சமாய் தின்று எரிமலையாக்கிக் கொண்டிருந்தது கார்த்திகைசெல்வன் அடிஆழத்தில்.
ஐந்து மணி ஆனதும் கண்ணகியே பிடித்து கிளப்பி இதோ இப்பொழுது பசுபதியின் வீட்டின் முன் மாப்பிள்ளையும் பெண்ணுமாய் கார்த்திகைசெல்வனும் தேவதர்ஷினியும் நிற்க, கார்த்திகைசெல்வனின் கண்கள் தன்னைப் போல பக்கத்து வீட்டின் பக்கம் சென்றது.
“அஷ்வினி எங்க? அவ தானே இளையவ? அவ தானே ஆரத்தி எடுக்கணும்?” கண்ணகி கேட்க,
“அவளுக்கு தலைவலியாம். மண்டபத்துல இருந்து வந்தாலும் வந்தா ரூமை விட்டு எழுந்துக்கல. நீ ஆரத்தி எடு டி!” என கயல்விழி கையில் வெற்றிலை வைத்து குங்குமம் கரைத்த தட்டை நீட்டி கற்பூரத்தை ஏற்றினார் சுந்தரி.
“வெளில கொண்டு கொட்டிட்டு வா” என்று ஆரத்தி சுற்றி முடித்து பெண் மாப்பிள்ளையை வீட்டிற்குள் அழைத்துக் கொள்ள, கார்த்திகை செல்வனை தான் லீலா பார்த்துக் கொண்டே இருந்தார்.
நிச்சயம் அவனுக்கு இதில் அதிர்ச்சி இருக்கும் என தெரியும் தான். அதையும் தாண்டி என்னவோ ஒரு பயம் அவன் முகத்தை பார்க்கவும் லீலாவிற்கு தொற்றிக் கொண்டது.
‘ம்மா ப்ளீஸ்! இது என் வாழ்க்கை பிரச்சனை’ காலையில் அவன் கூறியது இன்னும் நினைவில் நின்றாடியது.
கண்ணகியை மீறி யாராலும் எதுவும் பேசிட முடியவில்லை. இதில் லீலாவும் மகள் திருமணம் இப்பொழுது நடந்துவிட்டால் போதாதா என்று தான் அப்பொழுது நினைத்திருக்க, இப்பொழுது இந்த குரல் மனதை கீறிக் கொண்டே இருந்தது.
“அசைவம் சமைச்சு புதுப்பொண்ணுக்கு விருந்து வைக்கணுமே லீலா! சமையல் முடிஞ்சதா?” என கண்ணகியே கேட்டு லீலாவின் சமையலறைக்குள் நுழைய,
“அப்பவே செஞ்சாச்சு அண்ணி. நானும் லீலாவுமா வேலைய முடிச்சிட்டோம். இப்ப காபி தண்ணி எதாவது குடுத்துட்டு சாப்பாடு கொடுப்போமா இல்ல அப்படியே சாப்பிட வச்சிடுவோமா?” என சுந்தரியும் அவரோடு இணைந்து வர,
“கார்த்தி இப்ப காபி குடிக்க மாட்டானே! எதுக்கும் கேட்டுக்குறேன்!” என்று கண்ணகி வந்து கேட்க,
“எதுவும் வேண்டாம் ம்மா!” என்றான்.
“அப்போ சரி! சாப்பிட வா! ஏழு மணிக்குள்ள நம்ம வீட்டுல இருக்கனும் நீங்க ரெண்டு பேரும்!” என்றவரை நிமிர்ந்து அவன் முறைக்க,
“பசிக்கலைனாலும் முறைக்கு கொஞ்சமா சாப்பிடு கார்த்தி” என்றார் சுந்தரியும்.”தேவா! நீயும் வா!” என்று அழைக்க, மறுக்க முடியாமல் சென்று அமர்ந்தவன் அருகே,
“ஸ்வீட் சாப்பிடுங்க த்தான்!” என லட்டை கொண்டு வந்து வைத்தாள் கயல்விழி.
“அக்கா!” என தேவதர்ஷினிக்கும் அவள் வைக்க,
“இங்க வா! இப்படி உக்காரு!” என கயல்விழியை தன்னோடு தனக்கு அருகில் அமர வைத்துக் கொண்ட தேவதர்ஷினி,
“அஷ்வினிக்கு என்ன? காலைல கூட மண்டபத்துல ஜாலியா தானே இருந்தா?” என்று மெதுவாய் கேட்க, அது கார்த்திகைசெல்வன் காதுகளிலும் விழுந்தது.
“தெரில க்கா! எல்லாரும் மண்டபத்துல இருந்து கிளம்பும் போது தான் நான் கவனிச்சேன். என்னனு கேட்டேன் போடின்னு சொல்லிட்டா. அப்புறம் நிரஞ்சன் அத்தான் தான் அவளை கூட்டிட்டு வந்தாங்க. தலைவலின்னு சொன்னான்னு அம்மா தைலம் போட்டுவிட போனாங்க. கத்திவிட்டுட்டா. வேணும்னா தேச்சிக்கோன்னு சொல்லிட்டு அம்மா இங்க வந்துட்டாங்க!” என்று கயல்விழி சொல்ல,
“நான் கூப்பிட்டேன்ன்னு ஒருவாட்டி சொல்லி கூப்பிட்டு பாரேன். நான் இப்ப அங்க வர முடியாதுல?” தேவதர்ஷினி கயல்விழியிடம் சொல்ல, நிஜமாய் அஷ்வினியோடு தேவதர்ஷினியை நினைத்தும் இப்பொழுது மனம் அதிகமாய் கனத்தது கார்த்திகைசெல்வனுக்கு.
கயல்விழி தான் அவர்களில் மிகவும் சிறியவள். தேவதர்ஷினி தான் மூத்தவள் கூட. ஆனாலும் தேவதர்ஷினி அஷ்வினி இருவருமே தோழிகள் போல தான். பெரியப்பா சித்தப்பா மகள்கள் என்றாலும் பக்கத்து பக்கத்து வீடு என்பதால் நெருக்கமும் அதிகம். எங்கே என்றாலும் இருவருமாய் தான் சுற்றுவது எல்லாம்.
அஷ்வினி தான் தேவதர்ஷினியை தனக்கு துணையாய் பெரும்பாலும் இழுத்து செல்வதாய் இருக்கும்.
இப்பொழுதும் அவளை பார்க்க வேண்டும் என தேவதர்ஷினி கேட்க, “அய்யோ அக்கா! பசி வந்தா நீ நீயா இருக்க மாட்டன்ற மாதிரி அஷ்வினி கோபம் வந்தா பேயா மாறிடுவா. ஏற்கனவே அம்மா ரெண்டு வாட்டி கடி வாங்கிட்டாங்க. நான் போகலப்பா. இங்க நம்ம அத்தை வீட்டுல தானே இருக்க போறீங்க. நாளைக்கு அவளே சரியாகி வருவா. அப்ப பார்த்துக்கோங்க!” என்றுவிட்டாள் கயல்விழி.
பேருக்கு இரண்டு வாய் மட்டும் என கார்த்திகைசெல்வன் எழுந்து கொள்ள, தேவதர்ஷினியும் அவனோடு எழுந்து கொண்டாள்.
“இதுங்களுக்கு விருந்து ஏற்பாடு பண்ணினா என்ன சாப்பிட்டு இருக்காங்க ரெண்டு பேரும்?” என சுந்தரி இவர்களை முறைக்க,
“விடு சுந்தரி! நேரம் ஆகலையே! ஆறு மணிக்கு சாப்பிட சொன்னா இவ்வளவு தானே இறங்கும்?” என்றுவிட்டார் கண்ணகி.
“மாமா அத்தைகிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கோ கார்த்தி!” கண்ணகி சொல்லவும் முதலில் பசுபதி லீலா காலில் விழுந்து எழுந்த தம்பதியர் பின் கணேசன் சுந்தரி காலிலும் விழுந்து எழ, ஏழு மணிக்கு முன்பே அங்கிருந்து கிளம்பி இருந்தனர்.
வெளியில் வந்தது முதல் காரில் ஏறி கிளம்பும் வரையும் கார்த்திகைசெல்வன் கண்கள் அஷ்வினி வீட்டில் தான் இருந்தது.
காரில் ஏறிய நொடி பின்னால் தலையை சாய்த்து கண்களை மூடிக் கொண்டான்.
இத்தனை வருடங்கள் இல்லாதபடி இன்று மட்டும் கார்த்திகைசெல்வன் முகத்தை அத்தனை முறை பார்த்து எதாவது தெரிந்து கொள்ள முடியுமா என எண்ணிவிட்டாள் தேவதர்ஷினி.
ஒருமுறை கூட அவன் பார்வை இவள்மேல் விழவில்லை.
வீட்டினர் சொல்லுவதற்கெல்லாம் தலையாட்டி வைத்திருக்க, இப்பொழுது கணவனானவனின் முகம் என்னவோ ஒருவித சங்கடத்திற்குள் இவளை ஆழ்த்தியது.
எப்படி அவனிடம் பேசிட என்றும் தெரியவில்லை. காலை திருமணம் முடிந்ததில் இருந்து இதோ வானம் இருட்டி வந்துவிட்ட போதும் இன்னும் ஒரு வார்த்தை அவன் இவளிடம் பேசியிருக்கவில்லை.
விருப்பமில்லை என்றால் இவன் மறுத்திருக்கலாமே என்பது வரை நினைத்துவிட்டாள்.
மாமன் மகள்கள் அத்தை மகன்கள் என பேச்சுவார்த்தைகள் சிரிப்புகள் என ஒன்றாய் இருந்தவர்கள் தான் இத்தனை வருடங்களும்.
ஆனாலும் இப்படி ஒரு எண்ணம் வந்ததே இல்லை இவர்கள் வளர்ந்தபின்னும் கூட.
நிரஞ்சன் எப்பொழுதுமே அதிகமாய் பேசி அஷ்வினி, கயல்விழி அவனை துரத்தி அடிக்கும் வரை பேச்சும் சிரிப்புமாய் தான் செல்லும்.
கார்த்திகைசெல்வன் பெங்களூரில் இருந்து எப்போதாவது தான் வருவான். பார்த்தால் சிரிப்பான் அவ்வளவு தான். அஷ்வினி தான் அவனையுமே வம்பு செய்து பேசி சிரித்திருப்பாள். அது அவளின் இயல்பு.
தேவதர்ஷினியிடம் எப்போதும் ஒரு புன்னகையுடன் அளவான பேச்சுக்கள் தான் இருக்கும்.
இப்பொழுதுமே தேவதர்ஷினியின் திருமணத்திற்கு என மூன்று நாட்கள் விடுமுறையில் தான் வந்திருந்தான் கார்த்திகைசெல்வன். சொல்லிவிட்டு வந்தபடி பார்த்தால் நாளை மாலை இங்கிருந்து அவன் பெங்களூர் கிளம்ப வேண்டும்.
சொல்லபோனால் இப்பொழுது இந்த திருமணத்திற்கு வரும் எண்ணம் கூட அவனுக்கு இல்லை. அவ்வளவு வேலையில் இருந்தவனை “ப்ளீஸ் அத்தான்!” என கெஞ்சிக் கொஞ்சி என வரவைத்ததே அஷ்வினி தான் என மற்றவர்களுக்கு தெரியாதே!.
தொடரும்..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
19
+1
1
+1