(இக்கதையில் வரும் காட்சிகள் அனைத்தும் கற்பனையே. எந்த கருத்துக்களுக்கும் ஆதாரபூர்வ சாட்சிகள் இல்லை!)
அத்தியாயம் 5
கால்சராய் பைக்குள் ஒரு கரத்தை விட்டபடி, ஏதோ யோசனையுடன், அவன் தங்கியிருந்த விடுதியை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான் அத்வைத்.
சரியாக அதே சமயம் அவனின் தந்தை ஆதிகேசவன் அவனின் அலைபேசிக்கு அழைத்திருந்தார்.
இயல்பாக இருந்திருந்தால், அந்த அழைப்பை ஏற்றிருப்பானோ என்னவோ, யாரென்று பார்க்காமலேயே அழைப்பை ஏற்று, அலைபேசியை காதில் வைத்திருந்தான்.
“டேய் அதி, உனக்கு எதுவும் இல்லையே. நீ நல்லாதான இருக்க?” என்று எடுத்ததும் இப்படி ஒரு கேள்வி எதிர்புறமிருந்து வர, “அப்பா…” என்று சலித்துக் கொண்டான் மகன்.
“பின்ன, சாதாரணமா உன்னை கால்ல பிடிக்கவே முடியாது. அதுவும் இந்த நேரத்துல, நீ ஃபிரீயாவே இருந்தாலும் எடுக்க மாட்ட. திடீர்னு, ஃபோன் காலை அட்டெண்ட் பண்ணா ஷாக்காதான இருக்கும். எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய்டா மகனே.” என்று வம்பிழுத்தார் ஆதிகேசவன்.
“இப்படி வெட்டிப்பேச்சு பேசத்தான் கால் பண்ணீங்களா மிஸ்டர். ஆதி?” என்று இலகுவாக கேட்டபடி உணவகத்திற்குள் நுழைந்தான் அத்வைத்.
“வெட்டிப்பேச்சு இல்ல மிஸ்டர். அதி! அங்க ஏதோ பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருக்கியாம்? இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு தேவையா அதி?” என்று ஆதிகேசவன் அழுத்தமாக வினவ,
“என்ன பண்ண, இதெல்லாம் என் ரத்தத்திலேயே ஊறி இருக்கு போல! ஏதோ சொல்லுவாங்களே… ‘அப்பா போல பிள்ளை’ன்னு…” என்று கேலியாகக் கூறினான் அத்வைத்.
“டேய் அது ‘தாயைப் போல பிள்ளை’டா!” என்று ஆதிகேசவன் மறுத்துக் கூற, “இங்க, நீங்கதான என் அம்மா பின்னாடி சுத்தியிருக்கீங்க.” என்று தோளைக் குலுக்கினான் மகன்.
“அதுசரி, பொண்ணு எப்படி? நம்ம குடும்பத்துக்கு செட்டாவாளா?” என்று ஆதிகேசவன் ஆர்வத்துடன் கேட்க, “ம்ம்ம், அவ செம அமைதி.” என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்தான் அத்வைத்.
“எது அமைதியா? அப்புறம் எப்படிடா உன்னை எல்லாம் சமாளிக்கும் அந்தப் பொண்ணு. நீ சும்மாவே, பேசிப் பேசி மத்தவங்க தலைல மொளகாய் அரைக்கிற பார்ட்டி.” என்று ஆதிகேசவன் கூற, “அதெல்லாம் நாங்க பார்த்துப்போம். உங்களுக்கு எதுக்கு அந்தக் கவலை எல்லாம்?” என்றான் அத்வைத்.
“சரி, எப்போ பொண்ணு பார்க்க வரது?” என்று ஆதிகேசவன் பரபரக்க, “எது? பொண்ணு பார்க்க வரதா? நானே, இங்க பொண்ணு ஓகேயாகுமாங்கிற குழப்பத்துல இருக்கேன்.” என்றவன், சற்று முன்னர் நடந்ததை தந்தையிடம் கூறினான்.
“அடப்பாவி, பொண்ணோட அப்பா கிட்டயே, பொண்ணோட பேர்த் டே என்னன்னு கேட்டுருக்கியா? தைரியம்தான்டா! எனக்கெல்லாம் இந்த தைரியம் இல்ல பாரேன்.” என்று அங்கலாய்த்தார் அவனின் தந்தை.
“போதும் போதும். அதான் விஷயம் தெரிஞ்சுடுச்சுல, காலை கட் பண்றேன்.” என்று அத்வைத் கூற, “டேய் இருடா… அப்படி என்ன தலை போற வேலை? இங்க நம்ம வீட்டுக்கு வேலைக்கு வருவாங்கள, சரோஜா… அவங்க வீட்டு மாடு கண்ணுக்குட்டி போட்டுருக்காம். அப்புறம்…” என்று இழுக்க,
“அப்பா… இதெல்லாம் இப்போ ரொம்ப முக்கியம்! நான் காலை கட் பண்றேன். நான் அங்க இல்லன்னு, ஸ்வீட்டா வாங்கி சாப்பிடாதீங்க. டெயிலி வாக்கிங் போங்க. உடம்பை பார்த்துக்கோங்க. பை.” என்றவன் மறுமுனையில் பதில் சொல்வதற்குள் துண்டித்து விட்டான்.
*****
சகோதரிகள் இருவரும் வீட்டை நோக்கி நடை போட்டுக் கொண்டிருக்க, “இராக்கா, உங்களுக்கு புது ஃபிரெண்டு கிடைச்சுருக்காங்கன்னு ஏன் என்கிட்ட சொல்லவே இல்ல? நானெல்லாம் என் ஃபிரெண்ட்ஸ் பத்தி உங்ககிட்ட சொல்றேன்தான?” என்று அவனி கோபத்துடன் கேட்க,
“அது… அவரை இப்போ… கொஞ்ச நாள் முன்னாடிதான் தெரியும் அவனி.” என்று சொல்லி சமாளிக்க முயன்றாள் இரா.
அதற்குள் வீடும் வந்துவிட, “இப்படியே சொல்லி சொல்லி, என்னை சமாளிச்சுடுங்க.” என்ற அவனி, “எனக்கு அவரைப் பிடிச்சிருக்கு இராக்கா. அந்த ஷ்ரவன் மாதிரி இல்ல. ரொம்ப நல்லா பேசுறாருல.” என்றபடி உள்ளே நுழைய, ‘க்கும், பேசலைன்னாதான் அதிசயம்!’ என்று நினைத்தவாறே தங்கையைப் பின்பற்றி நுழைந்தாள் இரா.
பெரிய வீட்டின் வாசலிலேயே இருவரின் பெற்றோர் ஐங்கரனும் ரூபிணியும் பயணப்பொதிகளுடன் நின்றிருந்தனர்.
அதைக் கண்டதும் அவனி, “இராக்கா, நீங்களும் எங்களோட அத்தை வீட்டுக்கு வரலாம்ல?” என்று வினவ, எப்போதும் போல் ஒரு விரக்தி சிரிப்பை தங்கையிடமிருந்து மறைத்தவள், “எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அவனி. நீ போய் நல்லா என்ஜாய் பண்ணு.” என்றாள்.
“ம்ச், நீங்க இல்லாம என்ன என்ஜாய் பண்றது? நாலு வருஷத்துக்கு முன்னாடி, எல்லாரும் சேர்ந்துதான் போவோம். இப்போ மட்டும் ஏன்? எனக்குத் தெரியும்… நீங்க வராததுக்குக் காரணம் அந்த ஷ்ரவன்தான?” என்று அவனி வினவ,
அதற்கு இரா பதில் சொல்வதற்கு முன்னர், “அவனி, உன் டிரெஸ் எல்லாம் பேக் பண்ணிட்டு சீக்கிரம் வா. நேத்தே எடுத்து வைக்க சொன்னேன்ல?” என்று ரூபிணி சத்தம்போட, அதற்கு மேல் அங்கு நின்றால், அடுத்த திட்டு விழும் என்பதை நன்கறிந்தவளாக வீட்டிற்குள் ஓடிச் சென்றாள் அவனி.
அதைக் கண்ட இராவும் ஒரு பெருமூச்சுடன் அவளின் சிறு வீட்டை நோக்கி நடக்க, “இரா, நில்லு… உன்கூட கொஞ்சம் பேசணும்.” என்றார் ஐங்கரன்.
அதில் அவளின் நடை நின்றாலும், திரும்பி எல்லாம் பார்க்கவில்லை இரா.
ஒரு செருமலுடன், “ஊர்ல என்ன பேசிக்கிறாங்கன்னு உனக்கும் தெரியும்தான?” என்று ஐங்கரன் பொதுப்படையாக வினவ, சட்டென்று கோபம் வந்து விட்டது இராவிற்கு.
“ஊர்ல என்னென்னவோ பேசுவாங்க. அதையெல்லாம் நான் எதுக்கு தெரிஞ்சு வச்சுக்கணும்?” என்று வெடுக்கென்று கேட்டாள் இரா.
“இரா…” என்று கண்டிப்புடன் அழைத்த ரூபிணியோ, “உன்னையும் அந்த பையனையும் சேர்த்து… தப்பு தப்பா பேசுறாங்க. இதெல்லாம் நல்லா இல்ல.” என்று கூற, அத்தனை நேரம் அவர்கள் புறம் திரும்பாமல் இருந்த இராவோ, கோபத்தை பிரதிபலித்தபடி,
“ஏன், இதுக்கு முன்னாடி இந்த ஊர்ல என்னைப் பத்தி தப்பா பேசுனதே இல்லையா? அப்போ எல்லாம், நீங்க இவ்ளோ கவலைப்பட்ட மாதிரி தெரியலையே! இப்போ மட்டும் என்ன?” என்றவள்,
போலிச் சிரிப்புடன், “ஓஹ் புரிஞ்சுடுச்சு… அப்போ தப்பா பேசுனதுக்கு காரணமே நீங்கதான!” என்றாள்.
“இரா, என்ன இது?” என்ற ரூபிணியை அமைதிப்படுத்திய ஐங்கரன், “நீ எங்களை எப்படி நினைச்சாலும் பரவால்ல இரா. ஆனா, அது எங்க கடமை.” என்று கூற, ‘செல்ஃபிஷ்’ என்று மனதிற்குள் முணுமுணுத்தாள் இரா.
“அந்த பையன்… உங்களுக்குள்ள என்ன இருக்கு?” என்று ரூபிணி சந்தேகமாக வினவ, இம்முறை கோபம் எல்லையைக் கடந்து விட்டது இராவிற்கு.
“என்ன இருந்தா உங்களுக்கு என்ன?” என்று கத்தியவள், அவனி வருவதைக் கண்டு, தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டவள், “என்னவா இருந்தாலும், உங்க கடமைக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அதுதான உங்களுக்கும் வேணும்? இப்போ சந்தோஷமா ஃபேமிலி-டூர் போயிட்டு வாங்க.” என்று அடிக்குரலில் கூறியவள், வீட்டிற்குள் நுழைந்து, கதவைப் பட்டென்று மூடினாள்.
வெளியே அவனி கேட்கும் கேள்விகளும், அதற்கு பெற்றவர்களின் சமாதானமும் இராவிற்கு கேட்க கோபத்துடனும் ஏமாற்றத்துடனும் படுக்கையில் சென்று விழுந்தாள்.
அவளின் நினைவலைகள் பின்னோக்கி நகர்ந்தன.
அவர்களின் குடும்பம் இப்படியானது இல்லையே!
மகிழ்ச்சியும் இன்பமுமாக, சிரிப்பும் கொண்டாட்டமுமாக அல்லவா இருந்த குடும்பம் அவர்களது.
எல்லாம் அந்த நாள் வரும் வரைதான். எல்லாம் மாறியதும் அன்றுதான்!
அந்த நிகழ்வுகளை எண்ணிப் பார்க்கவும் பிடிக்காமல் வேறு வேலைகளைப் பார்க்கச் சென்று விட்டாள்.
*****
அறைக்கு வந்த அத்வைத்தோ, அவனுக்குக் கிடைத்த மோதிரத்துடன் இருந்த விரல் எலும்பை புகைப்படம் எடுத்து சாரதிக்கு அனுப்பி வைத்தான்.
‘முதல்ல, இது என்னன்னு தெரிஞ்சுக்குறதுக்கு முன்னாடி, மாந்திரீகம், தாந்த்ரீகத்தைப் பத்தி ஓரளவு தெரிஞ்சுக்கணும்.’ எந்த அதைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி விட்டான்.
இணையத்தில் எக்கச்சக்க தகவல்கள் கொட்டிக் கிடக்க, மெல்ல ஒவ்வொன்றாக பார்த்தவனுக்குத் தலைசுற்றிப் போனது.
மாந்திரீகத்தில் ஆரம்பித்து கருப்பு மாந்திரீகம் வரையிலும், தாந்த்ரீகத்தில் ஆரம்பித்து பில்லி, சூனியம், ஏவல், செய்வினை வரையிலும் அவனைக் கூட்டிச் சென்றது இணையம்.
‘அடேங்கப்பா, இதைப் பத்தி தெரிஞ்சுக்க பல மாசங்கள் ஆகும் போல!’ என்று எண்ணியவன், தலையை தடவியபடி வெளியே வந்தான்.
வழக்கம் போல உணவகத்தில் தன்னிடத்தில் அமர்ந்தவன், தலைவலிக்கு ஏதுவாக குளம்பியைக் கொண்டு வரப் பணித்தான்.
அப்போது அவனிடம் வந்த வாசுவோ, “என்னாச்சு சார்?” என்று வினவ, “ஹ்ம்ம், மாந்திரீகத்தையும் தாந்த்ரீகத்தையும் பத்தி கொஞ்சமா தெரிஞ்சுக்கலாம்னு நினைச்சேன். கொஞ்சமா பார்த்ததுக்கே தலைவலி வந்துடுச்சு.” என்றான் தலையின் இருபுறமும் தடவிக் கொடுத்தபடி.
“சரி, என்னோட வாங்க… ஒரு இடத்துக்கு போயிட்டு வருவோம்.” என்ற வாசு, அத்வைத் கேட்ட கேள்விகளை எல்லாம் கண்டு கொள்ளாமல், கையோடு அவனை அழைத்துச் சென்றான்.
“அட கையையாவது விடேன். நான் என்ன ஓடியா போகப் போறேன். என்னமோ, உன் லவரை கூட்டிட்டுப் போற மாதிரிதான்! எனக்கென்னவோ உன்னைப் பார்த்தா சந்தேகமாதான் இருக்கு.” என்று அத்வைத் வளவளவென்று பேசிக் கொண்டே வர, அதற்கு பதிலளித்தபடி நடந்து கொண்டிருந்தான் வாசு.
“ஒரு காஃபியைக் கூட குடிக்க விடாம இப்படி இழுத்துட்டுப் போற. அட்லீஸ்ட், எங்கப் போறோம்னாவது சொல்லேன்.” என்று அத்வைத் வினவ, “ஆமா, கஷாயம் போல இருக்க அந்த காஃபிதான் இப்போ முக்கியமா? உங்க வேலைக்காகத்தான் போறோம். கொஞ்ச நேரம் பேசாம வாங்க சார்.” என்றான் வாசு.
அத்வைத் முன்தினம் சென்ற அதே வழிதான். அந்த காட்டுப்பாதையை நெருங்காமல், வேறொரு வழியில் நடந்தான் வாசு. அத்வைத்தும் சுற்றிலும் ஆராய்ச்சிப் பார்வை பார்த்துக் கொண்டே அவனைப் பின்தொடர்ந்தான்.
அதுவும் காடு போலதான் இருந்தது. ஆனால், அந்த பெரியக்காட்டைப் போல அடர்த்தியான பெரிய மரங்கள் இல்லை. மாறாக, காட்டுச்செடிகளும் கொடிகளும் பின்னிக் கிடந்தன.
அதற்கு மத்தியில் ஒரே ஒரு கூரை வேய்ந்த வீடு தெரிய, கண்களைச் சுருக்கி அதைக் கண்ட அத்வைத், “அந்த குடிசைக்கா போறோம்?” என்று வாசுவிடம் வினவினான்.
“ஆமா சார், உங்களுக்கான பதில்கள், அங்க இருக்க மாடசாமி கிட்ட இருக்கலாம்.” என்று முன்னேறிக் கொண்டே கூறினான் வாசு.
“ஊருக்குள்ள இல்லாம, இந்த காட்டுக்குள்ள ஏன் இருக்கணும்?” என்று பாதையில் கவனம் வைத்தபடி அத்வைத் கேட்க, “அவரு மந்திரவாதியாம் சார். அதான், ஊர்ல இருந்து விரட்டி விட்டுட்டாங்களாம்.” என்றான் வாசு.
“இது வேறயா?” என்ற அத்வைத், நம்பிக்கையின்றியே சென்றான்.
இருவரும் அந்த குடிசைக்கு முன் நின்றிருக்க, “ஆமா, இவரைப் பத்தி உனக்கு எப்படி தெரிஞ்சுது?” என்று அத்வைத் வாசுவிடம் கேட்க, அவனோ அந்த மரக்கதவில் தட்டிவிட்டு, “அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு? எனக்கு பக்கத்துல ஒரு வேலை இருக்கு. நீங்க பேசிட்டு வாங்க, அதுக்குள்ள நான் வந்துடுவேன்.” என்று கூறி சென்று விட்டான்.
“அடப்பாவி, என்னை இப்படி யாருன்னே தெரியாதவர் கிட்ட தனியா கோர்த்து விட்டுப் போயிட்டானே!” என்று மெல்லியக் குரலில் முணுமுணுத்து விட்டு திரும்ப, அங்கு பல நாள்களாக வாரப்படாத தலைமுடியும், கவனிப்பில்லாமல் அடர்ந்து வளர்ந்திருந்த தாடியுமாக இருந்தவரைக் கண்டு ஒருநொடி பயந்துதான் போனான் அத்வைத்.
முகம் முழுவதும் மண்டிக்கிடந்த தாடிக்குள் சிரிப்பை மறைத்தவாறு, “யாரு தம்பி நீ?” என்று வினவியிருந்தார் அந்த மனிதர்.
தன்னைக் சமாளித்துக் கொண்ட அத்வைத்தோ, “நீங்கதான் மாடசாமியா? நான் உங்களைப் பார்க்கத்தான்… அதாவது உங்ககிட்ட சில சந்தேகங்கள் கேட்கத்தான் வந்திருக்கேன்.” என்றான்.
அவரோ தீர்க்கமான பார்வையுடன், “நான் கேட்ட கேள்விக்கு பதில் இது இல்லையே.” என்று கூற, மானசீகமாக தலையிலடித்துக் கொண்ட அத்வைத், அவனை அறிமுகப்படுத்திக் கொண்டு, “ஐயா, இந்த ஊர்ல மர்மமா ஏதோ நடக்குதுன்னு எங்களுக்கு தகவல் வந்துச்சு. அதான், என்னன்னு விசாரிக்க வந்துருக்கேன்.” என்றான்.
“மர்மமாவா? இந்த ஊர்லயா? அதுசரி…” என்று சிரித்தவரோ, “உள்ள வாப்பா.” என்று அழைத்தார்.
அவரை வித்தியாசமாக பார்த்தபடி, ‘டேய் வாசு… நீ மட்டும் என்கிட்ட மாட்டுன…’ என்று கறுவிக் கொண்டான் மனதிற்குள்.
அந்த குடிசைக்குள் ஒரு கோரப்பாய், ஒரு மண்பானை, வளைந்து நெளிந்த ஒரு தட்டு மற்றும் கோப்பை மட்டுமே இருந்தது.
அனைத்தையும் பார்வையிட்டவனை, “உட்காரு தம்பி. எவ்ளோ நேரம் நின்னுட்டே இருப்ப?” என்று தரையில் அமரச் சொன்னார் மாடசாமி.
சற்று தயங்கியபடியே அங்கு அமர்ந்த அத்வைத்தைக் கண்டு குறுநகை பூத்த மாடசாமி, “இப்போ எல்லாம், மனுஷங்களுக்கு மண்ணோட இருக்க நெருக்கம் ரொம்ப குறைஞ்சுடுச்சு. சொகுசா வாழ்ந்தே பழகிட்டாங்க.” என்றார்.
‘நல்லா வந்து சிக்கிட்டோம் போல!’ என்று எண்ணிய அத்வைத், பேச்சை மாற்ற வேண்டி, “நீங்க மந்திரவாதியா? அதனாலதான், இங்க தனியா இருக்கீங்களா?” என்று மாடசாமியிடம் இருந்தே ஆரம்பித்தான்.
அதற்கும் சிரித்த மாடசாமி, “அப்படித்தான் ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.” என்று பொதுவாகக் கூற, ‘சுத்தம்!’ என்று நினைத்த அத்வைத், அவன் வந்த வேலையை நினைவில் கொண்டு, “மாந்திரீகம், தாந்த்ரீகம் பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா?” என்றான், அவன் அலைபேசியில் குரல் பதிவு செயலியை (வாய்ஸ் ரெக்கார்ட்டர் ஆப்) உயிர்ப்பித்தபடி.
“மாந்திரீகங்கிறது, எண்ணங்களோட வலிமையை கொண்டும், மந்திரங்களை கொண்டும் செய்யப்படுற அபூர்வமான கலை. அதை செய்யணும்னா, அதுக்குன்னு சில சக்திகள் அவசியம். அது வெகு சிலருக்கு இயற்கையாவே இருக்கும். சிலர், பல உடல் பயிற்சிகளாலும், உள்ளப் பயிற்சிகளாலும், பிரபஞ்சத்துகிட்ட இருந்து சக்தியை பெறுவாங்க.” என்று கால் மேல் கால் போட்டபடி, சம்மணமிட்டு அமர்ந்தார் மாடசாமி.
“மாந்திரீகம், ஆன்மிகத்தோட ஒரு பகுதிதான். இதை ரெண்டு வகையா பிரிக்கலாம் – ஆச்சாரம், அனுச்சாரம். ஆச்சார தியானம், யோகிகளாலும் முனிவர்களாலும் கடைப்பிடிக்கப்படுறது. இவங்க பூர்வஜென்ம பலன்களாலும், தங்களோட மனதின் ஆற்றலால, பிரபஞ்சத்தோட பலன்களை ஏற்று, விருப்பு, வெறுப்பு, ஆசைகளை எல்லாம் துறந்து வாழ்ற சமநிலைவாதிகள். இவங்களோட முறை, தியானமும், மந்திர உச்சாடனமும். அதோட, சாந்தமான கடவுள்களுக்கு சைவ படையல்கள் வச்சு வழிபாடு செஞ்சு, மந்திர சக்திகளை பெறுவாங்க. சித்தர்களோட சித்து விளையாட்டுகள் எல்லாம் இதன்கீழ வரும். பொதுவா, ஆச்சார முறையில, மத்தவங்களுக்கு நன்மைகள் செய்யக்கூடிய பலன்களைதான் வேண்டுவாங்க.”
“அடுத்து, அனுச்சார முறை… இந்த முறையைக் கடைப்பிடிக்கிறவங்க, அவங்க நினைச்சதை பிரிபஞ்ச சக்தியான கடவுள்களை தீவிரமா வழிப்படுறது மூலம் அடைய நினைப்பாங்க. இவங்களோட வேண்டுதல்கள் எல்லாம் பெரும்பாலும் சுயநலமாதான் இருக்கும். ஒண்ணு, தங்களுக்கு நல்லது நடக்கணும்னு வேண்டுவாங்க. இல்ல, மத்தவங்களுக்கு, அதாவது தங்களோட எதிரிகளா பாவிக்கிறவங்களை அழிக்கணும்னு வேண்டுவாங்க. இதைத்தான் கருப்பு மாந்திரீகம்னு (பிளாக் மேஜிக்) சொல்லுவாங்க. பில்லி, ஏவல், சூனியம், செய்வினை எல்லாம் இது கீழ வரும்.”
“இந்த அனுச்சார மாந்திரீகம், பெரும்பாலும் தனிமையான இடத்துலயோ, சுடுகாட்டிலயோ நடக்கும். இதுக்கான மந்திர உச்சாடனங்கள் சொல்லி, காளி, பைரவர், வாராகி போன்ற உக்கிரமான கடவுள்களுக்கு அசைவ உணவுகளை படையலிட்டு இந்த முறையைக் கடைபிடிப்பாங்க.” என்றார் மாடசாமி.
முதலில், அசுவாரசியத்துடன் கேட்டுக் கொண்டிருந்த அத்வைத்திற்கு சில நொடிகளிலேயே ஆர்வம் வந்து விட்டது.
அதே ஆர்வத்துடன், “பில்லி, சூனியம், ஏவல், செய்வினை பத்தி கொஞ்சம் விரிவா சொல்றீங்களா?” என்று வினவினான்.
“ஹ்ம்ம், பில்லிங்கிறது ஒருத்தரை உடல் ரீதியா, மன ரீதியா மந்திரவாதியோட கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து, அவங்களோட விருப்பப்படி ஆட்டுவிக்கிறது. சூனியம்னா வெறுமைன்னு அர்த்தம். ஒருத்தரை உடல் ரீதியா, மன ரீதியா, பொருளாதாரத்துலயும் ஒன்னுமில்லாம ஆக்குறதுதான் சூனியம். ஏவல்னா கட்டளைன்னு பொருள். அதாவது, தங்களோட கட்டளைப்படி ஒருத்தரை நடக்க வைக்கிறது. செய்வினைன்னா, மாந்திரீகத்தின் மூலமா ஒருத்தரை பல வழிகள்ல திசை திருப்பி, அழிந்து போக வைக்கிறது.”
“ஒருத்தருக்கு பில்லி, சூனியம், ஏவல், செய்வினை செய்யணும்னா, அவங்களோட ஜாதகமோ, புகைப்படமோ, வியர்வை அல்லது ரத்தம் பட்ட துணியோ, தலைமுடி அல்லது காலடி மண்ணோ வேணும்.” என்றார்.
“தாந்த்ரீகம்னா என்ன?” என்று அத்வைத் அடுத்தக் கேள்வியை முன்வைத்தான்.
“தாந்த்ரீகம்னா, ஆன்மீக அருளை எளிய முறையில பெறுவதற்கு செய்யப்படுற முறை. இது ரொம்பவே ஆபத்தானது. இதைக் கூர்மையான கத்தில நடக்கிறதுக்கு சமம்னு சொல்லுவாங்க. கொஞ்சம் பிசகினாலும் சர்வநாசமாகிடும். இதுவும் ரெண்டு வகைப்படும். ஒண்ணு, உணர்வுபூர்வமா செய்யுற முறை. இன்னொன்னு, செயலாக்க முறை.”
“முதல் முறையில, உணர்வுபூர்வமா தங்களோட உடல்ல இருக்க சக்கரங்களை விழிப்படையச் செய்து, அதன் மூலமா சக்திகளை பெறுவாங்க. ரெண்டாவது முறை, ஆண் – பெண் களவியல் சார்ந்து சக்திகளை பெறுவாங்க. இதுக்கு மேல, இதை விரிவா சொல்ல விரும்பல. ஏன்னா, இதைப் பத்தி முழுசா தெரியாம, அரைகுறை அறிவோட செஞ்சு நாசமானவங்க நிறைய பேர் இருக்காங்க.” என்றார்.
“ஐயா, இந்த காட்டுல மாந்திரீகமும் தாந்திரீகமும் நடந்துட்டு இருக்கா? அதுதான் இந்த ஊரோட மர்மமா?” என்று அத்வைத் கேட்க, சிரிப்புடன் பதில் கூற ஆரம்பித்தார் மாடசாமி.
“ஆமா தம்பி, இன்னைக்கும் சிலர் சக்தியை அடையுறதுக்காக பேராசையோட மாந்திரீக, தாந்த்ரீக முறைகளை செஞ்சுட்டுதான் இருக்காங்க. அதுல எந்த பிரயோஜனமும் இல்ல. ஏன்னா, அதுக்கு செய்யுற இடத்துலயும் சக்தி இருக்கணும். ஆனா, இந்த மண்ணுல அந்த சக்தி எப்போவோ போயிடுச்சு.” என்றார் மாடசாமி யோசனையுடன்.
“அப்போ, இந்த பில்லி, சூனியம், ஏவல், செய்வினை எல்லாம் இன்னமும் செஞ்சுட்டுதான இருக்காங்க?” என்று அத்வைத் வினவ, “ஹ்ம்ம், மனுஷங்களோட மனசுல பொதுநலம் மறைஞ்சு சுயநலம் ஆக்கிரமிச்சதன் வெளிப்பாடு இது. நல்லதுக்காக மாந்திரீகத்தை பயன்படுத்தாம, தீமைக்காக மட்டும் பயன்படுத்த பார்க்கிறாங்க. ஆனா, அது இருமுனைக் கத்தின்னு அவங்களுக்கு தெரியல. ரெண்டு பக்கமும் காவு வாங்காம விடாது.” என்றவர், “எனக்கு கொஞ்சம் அசதியா இருக்கு.” என்று பெருமூச்சுடன் கூறினார்.
ஓரளவு தகவல் கிடைத்த திருப்தியுடன், “ரொம்ப நன்றிங்க ஐயா.” என்று எழுந்த அத்வைத்தை தடுத்த மாடசாமி, “இதுக்குள்ள ரொம்ப தலையை விடாதீங்க. உங்களையே மூழ்கடிச்சுடும். கிடைச்ச தகவலை எடுத்துக்கிட்டு, இந்த ஊரை விட்டு சீக்கிரம் கிளம்புங்க.” என்றவர், அவ்விடத்தில் படுத்துக் கொண்டார்.
‘ஏன்’ என்ற கேள்வியைக் கூட கேட்கும் சந்தர்ப்பத்தை அவனுக்கு வழங்கவில்லை அவர்.
ஒருவித குழப்பத்துடன் அத்வைத் வெளியேற, “என்ன சார், அதுக்குள்ள பேசிட்டீங்களா?” என்று கேட்டபடி வந்தான் வாசு.
“உன்னைத்தான் தேடிட்டு இருந்தேன். என்னைத் தனியா கோர்த்துவிட்டு எங்கப் போன?” என்று அத்வைத் கேட்க, “அது… என் ஒன்சைட் லவர் இங்க பக்கத்துல இருந்தா. அவளைப் பார்க்கப் போனேன் சார்.” என்றான் சிரித்துக் கொண்டே.
“க்கும், ஒன்சைட் லவ் வேறயா? ஆமா, இந்த ஆள் பத்தியும் உன் ஒன்சைட் லவர்தான் சொன்னதா?” என்று அத்வைத் கேட்க, “ஆமா சார், ஏன் என்னாச்சு? தகவல் கிடைச்சுதா?” என்று வாசு வினவினான்.
“ம்ம்ம், கிடைச்சது. அதோட, லாஸ்ட்டா ஒரு வார்னிங்கும் கிடைச்சது.” என்று பெருமூச்சுடன் கூறிய அத்வைத், பேச்சை மாற்றும் பொருட்டு, “ஆமா, உன் ஒன்சைட் லவ், எப்போ டபுள் சைடாகுமாம்?” என்றான்.
“இனிமே, எங்க டபுள் சைடாக? அவளுக்கு இன்னொருத்தன் மேல லைட்டா லவ் உருவாகி இருக்காம்.” என்று பெருமூச்சுடன் கூறிய வாசுவை தோளோடு இறுக்கிக் கொண்டே நடந்தான் அத்வைத்.
தொடரும்…
செம.
நன்றி சிஸ் 😍
சூப்பர் எபி♥️
நன்றி சிஸ் ❤️