Loading

அத்தியாயம் 5

கல்லூரி வகுப்பறை என்ற சொல்லுக்கு மாறாக அத்தனை அமைதியாக இருந்த அறையில் நடுநாயகமாக நின்று பாடம் நடத்திக் கொண்டிருந்தான் புவித் ஆருஷ்.

ஆசிரியர் என்ற சொல்லுக்குரிய நேர்த்தியானத் தோற்றம். அவனது பார்வை நொடியில் அனைத்து மாணவர்களின் கண்களையும் சந்தித்து பயணித்துக் கொண்டிருந்தது.

பெண்கள் பக்கம் மெல்லிய முணுமுணுப்பு.

“இன்னைக்கு சாருக்கு இந்த பர்பிள் கலர் ஷர்ட் செமயா இருக்கு.” மாணவி ஒருத்தி தனது குறிப்பேட்டில் எழுதி தனது தோழியிடம் நகர்த்தினாள்.

“ஆமா… கியூட். சாருக்கு மட்டும் கல்யாணம் ஆகமா இருந்திருந்தா நானே ப்ரொபோஸ் பண்ணியிருப்பேன்.” மற்றொருத்தி பதில் எழுதி அவளிடம் நகர்த்தினாள்.

இருவரின் கவனமும் அவர்களின் பேச்சில் இருந்திட, சத்தமின்றிய எழுத்துவடிவ உரையாடலாக இருந்தாலும், புவித் கண்டுகொண்டான்.

அடுத்த நொடி இருவரையும் வகுப்பைவிட்டு வெளியேற்றியிருந்தான்.

“ரம்யா அண்ட் ரஞ்சனி…போத் ஆஃப் யூ, கெட் அவுட் ஆஃப் மை கிளாஸ்.” முகத்தில் கோபம் தெரிய, அழுத்தமாகக் கூறியிருந்தான்.

அவனது வகுப்பு மாணவர்களுக்கே அவனது கோபம் புதிது. இதுநாள் வரையிலும் இவ்வளவு கடுமையாக புவித்தின் முகத்தை யாரும் பார்த்ததில்லை.

இரு பெண்களும் எழுந்து டெஸ்க் விட்டு வெளியில்வர,

“கிவ் தட் நோட்” என்றான்.

ரம்யா தனது கைகளிலிருந்த குறிப்பேட்டை நடுங்கியபடி புவித்திடம் கொடுத்தாள்.

இருவரும் அவனை குறித்து எழுதியவற்றை படித்த புவித்தின் விழிகளில் கனல் கூடியது.

அவனுக்கு நன்கு தெரியும் பெண்கள் மத்தியில் தனக்கிருக்கும் கிரேஸ் பற்றி. ஆனால் ஒருபோதும் அதனை அவன் ஏற்கும் விதமாக சிறு புன்னகையையும் காட்டியதில்லை. அதிக கண்டிப்பு காட்டிடாத தோழமையுடன் மாணவர்களுடன் பழகுபவன் தான். இருப்பினும் தன்னுடைய எல்லையில் ஆசிரியன் எனும் வரையறைக்குள் நின்றிடுவான். அந்த எல்லையை மாணவர்களை எப்போதும் தொடவிட்டதில்லை அவன்.

இதுவரை கோபம் என்பதை மாணவர்களிடம் காண்பித்தது இல்லை.

இளம் பெண்கள், அவர்களிடத்தில் தன்னைப்போன்ற இளம் ஆசிரியனுக்கு உண்டான இடம் இப்படித்தான் இருக்குமென்று கடந்துவிடுவான். அவனும் அவ்வயதை கடந்து வந்தவன் தானே. ஆனால் ரசிப்பும் பிடித்தமும் அதன் எல்லையில் நின்றுவிட்டால் தான் அழகு.

“ரெண்டு பேரும் எதுக்கு காலேஜ் வரீங்க?” எனக் கேட்டவன், “ஃபிரண்ட்லியா ட்ரீட் பண்ணா… உங்க பேச்சு எப்படியிருந்தாலும் ஸ்மைல் பண்ணிட்டு போவேன்னு நினைச்சீங்களா?” என்றான்.

“சாரி சார்… உங்களை பிடிக்கும் அதுதான்” என்று இருவரும் நடுங்கும் குரலில் தயங்கியபடி மொழிய…

“ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்” என்ற புவித், “அஸ் அ டீச்சரா பிடிக்கிறது தப்பில்லை. பட் உங்க பேச்சு” என்று அவர்கள் எழுதிய உரையாடலை சுட்டிக்காட்டியவன், “இது, பேசின உங்களைவிட எனக்கு தான் அசிங்கம். ஃப்ரெண்டலியா பழகுறது… நமக்குள்ள கம்யூனிகேட் ஈசியா இருந்தா தான், உங்க அட்டென்ஷன் என்மேல இருக்கும். நான் சொல்றதும் புரியும், உங்களுக்கும் எந்தவொரு பிராப்ளம் அப்படின்னாலும் என்கிட்ட தயங்காம சொல்லுவீங்க அப்படிங்கிற எண்ணத்தில் தான். பட் அதை இப்படி மிஸ்யூஸ் பண்றது ஸ்டூடண்டா ரொம்பவே தப்பு” என்றான்.

“சாரி சார்…” இருவரும் ஒன்றாக வருந்தினர்.

“இன்னைக்கு உங்களைவிட்டா, இது ரிப்பீட் ஆகும். நாளைக்கு உங்க பேரண்ட் கூட்டிட்டு வாங்க. நவ் போத் ஆஃப் யூ அவுட்” என்று வெளியில் கை காண்பித்தான்.

இருவரும் வெளியேறிட, தன்னுடைய மேசைக்கு அருகில் வந்த புவித், மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அதில் சாய்ந்து நின்றான்.

“ஸ்டூடண்ட்ஸ் ஸ்டூடண்டா மட்டும் நடந்துக்கோங்க” என்று அழுத்தமாகக் கூறியவன், வகுப்பு முடிந்ததற்கான மணி அடிக்கவும் வேக எட்டுக்கள் வைத்து வெளியேறினான்.

செல்லும் முன்பு அவனது பார்வை, இங்கு நடந்த எதுவும் தனது கருத்தில் பதியவில்லை எனும் விதமாக முதல் வரிசையில் அமர்ந்திருந்த நித்யா என்ற மாணவியின் மீது நொடியளவில் பதிந்து விலகியது.

வெளியேறிய புவித் வாயிலில் நின்றிருந்த இரு மாணவிகளின் பக்கம் தனது பார்வையையும் திருப்பாது சென்றுவிட்டான்.

அடுத்ததாக அவ்வகுப்பிற்கு வந்த மற்றொரு பேராசிரியர் ஜானவி இரு மாணவிகள் வெளியில் நிற்பதைக் கண்டு என்னவென்று விசாரித்து நடந்ததை தெரிந்துகொண்டாள்.

இவ்விஷயம் மேலோட்டமாகப் பார்ப்பதற்கு என்னவென்று தோன்றலாம்… மாணவ மாணவியருக்கு நடுவே, கல்லூரி நாட்களில் கிரஷ் என்றளவில் ஆசிரியரை வைத்திருப்பது சாதாரண ஒன்றாக இருக்கலாம்.

ஆனால் இது பெரும் பின்விளைவுகளுக்கு வழிவகுத்திடம். அதனை உணர்ந்ததாலே புவித்திடம் இத்தகைய எதிர்வினை.

அம்மாணவிகள் செய்தது விளையாட்டாக இருந்தாலும், நானும் அவர்களுடன் விளையாடுகிறேன் என்று புவித் நெருக்கமாக பேசினால்? விபரீதமல்லவா?

புவித்தை பற்றி நன்கு தெரிந்ததால்… ‘அவன் இவ்ளோ ரியாக்ட் பண்ணாம இருந்திருந்தா ஆச்சரியம்’ என மனதில் நினைத்தவளாக பாடம் நடத்தத் துவங்கினாள்.

வகுப்பு முடிந்து இடைவேளையின் போது… ஜானவி மற்றும் புவித் மட்டும் பேராசியர்களுக்கான அறையில் தனித்திருந்தனர்.

இருவரும் கல்லூரிகால நெருக்கமான நண்பர்கள். தனித்து இருக்கும்போதும், கல்லூரிக்கு வெளியிலும் ஒருமையிலேயே பேசிக்கொள்வர்.

“என்னடா அதிசயமா கோபமெல்லாம் வந்திருக்கு உனக்கு?” என புவித்திடம் கேட்ட ஜானவி, அவன் முன்பு உணவு டப்பாவை நீட்டினாள்.

அதிலிருந்து பழத்துண்டு ஒன்று எடுத்துக்கொண்ட புவித்,

“இது ரொம்பவே தப்பு ஜானு” என்றான்.

“புரியுதுடா. ஆனால் காலேஜ் லைஃப்ல இது சாதாரணம்” என்றாள்.

“என்னால ஒரு டீச்சரா இந்த இடத்தில் இருந்துட்டு இதெல்லாம் டாலரேட் பண்ண முடியல ஜானு. ஒழுக்கம் நம்ம பேச்சிலும் இருக்கணும். சாதாரணப் பேச்சு தான் நாளைக்கு பெரிய சிக்கலில் கொண்டு போய் நிறுத்தும். இன்னைக்கு அவங்க பேச்சு தெரிஞ்சும், நான் கண்டுக்காம விட்டேன்னா, நானே அவங்களை என்கரேஜ் பண்ற மாதிரி ஆகிடும்” என்றான்.

“சரி விடுடா. ரொம்ப டென்ஷன் ஆகாத. இனி அந்தப் பொண்ணுங்க மட்டுமல்ல, மத்த பொண்ணுங்களும் உன் பக்கம் திரும்பாது” என்றவள், அவன் முகம் இன்னமுமே உம்மென்று இருக்க, “உன் ஆளு அயர்ன் லேடி எப்படிடா இருக்கா?” எனக் கேட்டாள்.

மனைவியைப் பற்றியக் கேள்வி என்றதும் புவித்தின் முகம் சடுதியில் பூவாய் பூத்தது.

“மேடம் அவங்க வேலையில் ரொம்ப பிஸி” என்றவன், “இருக்க இருக்க ரொம்பவே உள்ளுக்குள்ள டவுன் ஆகிட்டு இருக்கா ஜானு” என்றான்.

“அந்தநாள் மட்டும் வராம இருந்திருந்தா அவள் இப்படியா இருந்திருப்பா” என்ற ஜானு, “எனக்கு அவள் உன்கிட்ட லவ் சொன்ன நாள் இன்னும் நினைவிருக்கு. எவ்வளவு சேட்டை” என்று அந்த நாள் நினைவில் புன்னகைத்தாள்.

புவித்தின் இதழிலும் குறுநகை தேங்கியது.

அந்நேரம் அவர்களின் பேச்சிற்கு உரித்தானவளிடமிருந்து புவித்திற்கு அலைபேசி அழைப்பு வந்தது.

“என்ன காக்கி மேடம் அதிசயமா எனக்கு கால் பண்ணிருக்கீங்க?” எடுத்ததும் ஆச்சரியமாக வினவினான்.

அவள் அவனது கேள்வியில் பதிலின்றி மௌனம் காக்க…

“மாத்தி டயல் பண்ணிட்டீங்களா?” என்றான்.

“மாமா பிளீஸ்” என்றவள், மூச்சினை ஆழ்ந்து வெளியேற்றுவது அவனால் உணர முடிந்தது. அவனது காதுக்குள் அவளின் மூச்சுக்காற்றின் தடம். வெம்மையாய் தீண்டியது.

“எப்போ பிளீஸ் பண்ணனும் தெரியாதாடி” என்றவன், “நான் காலேஜில் இருக்கேன் கனி” என்றான். அருகிலிருக்கும் ஜானவிக்கு கேட்காத மெல்லிய ஓசையில்.

“அச்சோ மாமா என்னை பேசவிடுங்க.”

“அப்படியே மேடம் பேசிட்டாலும்.” அவளுக்கு அய்யோடா என்றானது.

அவளாக அவனுக்கு அழைப்பு விடுப்பது அதிசயம் போன்றுதான். ஒரே வீட்டில் ஒரே அறையில் கணவன் மனைவியாக இருப்பினும், அவளுக்கான அவனின் அழைப்புகள் வெகுவாக குறைந்து பல வருடங்கள் ஆயிற்று.

இந்த நொடி அவள் எதற்காக அழைத்திருந்தாலும், அவனுக்காக அவள் அழைத்திருக்கிறாள். அக்கணத்தை நீட்டிக்கவே வம்பு செய்தான்.

“நான் வைக்கிறேன்.”

“உன்கிட்ட நான் விளையாடக் கூடாத கனி” என்றவன் குரலில் வழிந்த துள்ளல் சட்டென்று வடிந்திருந்தது.

பற்களால் கீழ் உதட்டை அழுந்த கடித்து அவனது மென் வேதனையின் சாயலை விழுங்கினாள்.

“கூடவே இருந்தாலும் மிஸ் பண்ற ஃபீல்’டி” என்றான்.

“ஹாஸ்பிடல்ல இருக்கேன்” என்றவள் வைத்துவிட்டாள்.

அவளுக்கான அவனது உணர்வுகளை இயல்பாக பேச்சிலே அவளுள் கடத்திவிடுவான். இன்று நொடிப்பொழுதில் அதிகத்திற்கும் கடத்திவிட்டான் போலும், விழிகளில் முட்டி நிற்கும் நீர் கரை உடைக்காது காக்க பெரும்பாடுபட்டாள்.

அகனிகா மருத்துவமனையில் இருக்கின்றாள் என்றதும் புவித்திடம் சட்டென்று பதற்றம் குடியேறியது.

மனைவிக்கு வேகமாக அழைப்பு விடுத்தான்.

அவள் எடுக்காது போகவே, அவள் மருத்துவமனை என்றதில் நிரூப்பிற்கு அழைத்தான்.

நிரூப் ஜானவியின் கணவன்.

“கனி உன் ஹாஸ்பிடலுக்கா (அரசு மருத்துவமனை) வந்திருக்கா?” நிரூப் எடுத்ததும் கேட்டிருந்தான்.

“ஆமா ஆருஷ்” என்ற நிரூப், அவளுக்கு ஒன்றுமில்லையென சொல்லும் முன்பு அழைப்பைத் துண்டித்த புவித், “எனக்கு லீவ் சொல்லிடு ஜானு” என்று அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.

அவனுள் இன்னதென்று விவரிக்க முடியாத பதற்றம்.

முன்பு ஒருமுறை அவள் அழைத்த சூழல் கண்முன் வந்து அவனது வேகத்தை அதிகரிக்கச் செய்தது.

மனம் கனி என்று துடிக்கும் ஓசை அவனை மொத்தமாக ஆட்கொண்டது.

மருத்துவமனை வந்து சேர்ந்தவன், காரினை நிறுத்தி சாவியை கூட எடுக்காது உள்ளே ஓடிவந்தான்.

பொதுப்பிரிவின் ஆரம்பத்திலேயே அகனிகா நின்றிருக்க…

இருக்கும் இடம், சூழல் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாது, மனைவியை தன்னுடைய இறுகிய அணைப்பிற்குள் கொண்டு வந்திருந்தான்.

“கனி… உனக்கு உண்ணுமில்லையே?” எனக் கேட்டவனின் சிந்தை முழுவதும், பழைய நினைவில் கட்டுண்டிருந்தது.

“மாமா… மாமா…”

தான் மருத்துவமனையில் இருக்கின்றேன் என்றதும் பயந்துள்ளான் என்பது அவனது செயலில் உணர்ந்தவள் அவனை அமைதிப்படுத்த முயன்றாள்.

அவளது அழைப்பில் அவனது பிடி இறுகவே செய்தது.

மீண்டும் ஒருமுறை அவளுக்கு என்னவானதோ எனும் தவிப்பில் நாட்கள் நகர்ந்திடுமோ எனும் எண்ணம் அகம் பதிய, வெளியில் தன்னைத்தாண்டியே அவளை எதுவும் அண்டும் என்பதைப்போன்று தனக்குள் தன்னவளை அடைக்காத்தான்.

அவனை விலக்க முயன்றவள் முடியாது போக, முழுமையாக அவனுள் அடங்கி நின்றாள்.

நொடிகள் கரைய, தன்னவள் தனது கைவளைவில் பாதுகாப்பாக இருக்கின்றாள் எனும் நிதர்சனம் அவனுள் பதிய மெல்ல பிரிந்து நின்றவன், அவளின் இருபக்க கையையும் பிடித்துக் கொண்டு,

“என்னாச்சுடா? உனக்கு ஒண்ணுமில்லதன?” எனக் கேட்டுக்கொண்டே, அவளை உச்சி முதல் பாதம் வரை பார்வையால் அலசினான்.

“நீங்க ஓகேவா இப்போ?” எனக் கேட்டவள், அவன் ஆமென தலையசைத்ததும், “எனக்கு எதுவும் ஆகல. உங்க முன்னாடி நல்லா தானே இருக்கேன்” என்று அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தாள்.

“அப்புறம் எதுக்கு இங்கிருந்து கால் பண்ண நீ?” என்றவன், “நிஜமா எதுவுமில்லையே?” என்றான். அவளின் விழிகளை கூர்ந்து நோக்கி.

அவளும் அசையா கருவிழிகளுடன், இல்லையென இடவலமாக தலையசைத்தாள்.

“ஊஃப்…” இதழ்கள் குவித்து காற்றை வெளியேற்றி ஆசுவாசம் அடைந்தான்.

“ஒரு மர்டர் கேஸ்” என்றவள் மேற்கொண்டு சொல்லும் முன்பு,

“ஹேய் அது நான் பண்ணல” என்றான் புவித்.

அவனை முறைத்துப் பார்த்தவள்,

“அந்த தைரியமெல்லாம் உங்களுக்கு வராதுன்னு தெரியும்” என்று முணுமுணுத்தாள்.

“எனக்கு கேட்டுச்சு.”

புவித் சொல்ல அவள் அவனுக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்தாள்.

“நிரூப் தான் அட்டாப்சி பண்றாங்க. டீடெயில் கலெக்ட் பண்ண வந்தேன். இங்க ஒரு பேஷண்ட்டுக்கு பிளட் தேவைப்படுது. உங்க க்ரூப் தான்” என்று அகனிகா கூறவும், அவள் தன்னை அழைத்துக்கான காரணம் விளங்கியது.

புவித்திடம் பதிலில்லை.

செவிலியை அருகே அழைத்த அகனிகா, “இவங்களோட போங்க” என்றாள் புவித்திடம்.

இருக்கையிலிருந்து எழுந்த புவித்,

“நான் வரவரை இருப்பியா?” எனக் கேட்டான்.

அவன் கேட்ட விதமே அவளுக்கு என்னவோப்போல் இருந்திட, அவளின் தலை தானாக அசைந்தது.

“குட்” என்ற புவித், தன்னுடைய அலைபேசியை அவளிடம் நீட்டினான்.

வாங்கிக்கொண்டவள், மற்றொரு செவிலி நிரூப் அழைப்பதாகத் தெரிவிக்க, நிரூப்பின் அறைக்குள் சென்றாள்.

“வா அகா. சிட்” என்று அவள் அமர தனக்கு முன்னிருந்த இருக்கையை காண்பித்த நிரூப், தன்னுடைய கையிலிருந்த அறிக்கை தாளில் கையெழுத்திட்டு அவளிடம் கொடுத்தான்.

“இது கார்டியாக் அரெஸ்ட் தான் அகா. நைட் எயிட் டூ எயிட் தர்ட்டிகுள்ள டெத் டைம். மர்டரா இருக்க வாய்ப்பே இல்லை” என்றான்.

“இது மர்டர் அப்படின்னு உள்ள ஒரு இன்டியூஷன் நிரூப்” என்ற அகா, “பெஞ்சமின் அந்த இடத்தை எக்ஸாமின் பண்ணிட்டு சொல்லட்டும். அப்புறம் கன்பார்ம் பண்ணுவோம்” என்றாள்.

“ம்ம்” என்ற நிரூப், “மார்னிங் நீ அங்க இன்வெஸ்டிகேட் பண்ணும் போதே நோட் பண்ணேன். அவர் உள்ள இருந்ததை வாட்ச்மென் எப்படி கவனிக்காம லாக் பண்ணார்?” எனக் கேட்டான்.

“அந்த டவுட் எனக்குமே வந்தது நிரூப்” என்ற அகா, “சுகன் கேட்டதுக்கு, கிளாஸ்ல லைட் ஆஃப்ல இருந்ததால எல்லாரும் ஈவ்வினிங் ஸ்பெஷல் கிளாஸ் முடிச்சிட்டு கிளம்பிட்டாங்கன்னு உள்ள செக் பண்ணலன்னு சொன்னாராம். அங்க தான் எனக்கு டவுட் ஆகுது” என்றாள்.

“என்ன டவுட் உனக்கு?”

“அவர் கவனிக்கல ரைட்… பட் உள்ளிருந்த குணசீலன் ஏன் இருட்டுல இருக்கணும். வேணும்னே தான் உள்ளிருக்கிறது தெரியக் கூடாதுன்னு நினைச்சிருக்கார்” என்றாள்.

“நீ சொல்றது பார்த்தா பர்பஸ்ஸா உள்ள இருந்த மாதிரி தான் தெரியுது” என்ற நிரூப், “இது மாதிரி தான் இன்னொரு கேஸ் வந்திருக்கு” என்றவன், அதற்கான உடற்கூறு ஆய்வு அறிக்கையை அவள் முன் நகர்த்தி வைத்தான்.

அறிக்கையை அவள் பார்த்திட,

“கார்டியாக் அரெஸ்ட் தான் இவருக்கும். மார்னிங் பெஞ்சமின் போயிருக்கிறதா சுனில் சொன்னாரே! அந்த கேஸ். இவரும் டீச்சர் தான்” என்ற நிரூப்பை ஏறிட்ட அகனிகா, “டெத் பிளேஸ் எங்க?” எனக் கேட்டாள்.

“தெரியல. நீ பெஞ்சமின்கிட்ட கேட்டுப்பாரு” என்றான்.

“ஹ்ம்ம்…” என்ற அகா முகம் யோசனையைக் காட்ட,

“இது கோ இன்சிடன்டா கூட இருக்கலாமே” என்றான் நிரூப்.

“மே பீ” என்றவள், “இது இத்தோடு நிக்கப் போறதில்லைன்னு மட்டும் தோணுது” என்று எழுந்துகொண்டாள்.

வெளியில் செல்ல கதவில் கை வைத்திட,

“மிதுன் நாளைக்கு ஜாயின் பண்றான்” என்றான் நிரூப்.

ஒரு நொடி தயங்கி நின்று திரும்பிய அகா, “மார்னிங் வீட்ல பார்த்தேன்” என்று வெளியேறினாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
21
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்