Loading

அத்தியாயம் 4

 

தனது இடத்திற்கு வந்த அத்வைத், அவன் எடுத்த புகைப்படங்களைப் பார்த்தபடி, இரா கூறியவற்றையும் எண்ணிப் பார்த்தான்.

 

“மாந்திரீகம், தாந்த்ரீகம்… ஹ்ம்ம், இதுவரை நான் பார்க்காத ஏரியாதான்.” என்று மர்மமாக சிரித்துக் கொண்டான்.

 

அதே சமயம், தன் வீட்டை அடைந்த இராவோ அத்வைத் கூறிய ‘ஸ்டார்லைட்’டைதான் நினைத்துக் கொண்டிருந்தாள்.

 

அதில், அவளின் இதழ்கள் லேசாக விரிய, அது எதிர்புறமிருந்த கண்ணாடியில் தெரிந்த அவளின் பிம்பத்திலும் எதிரொலித்தது.

 

அதெல்லாம் அவள் பின்னே இருந்த சுவரில் ஒட்டப்பட்டிருந்த குறிப்புகளைக் கண்ணாடியில் பார்க்கும் வரைதான்.

 

‘ப்ச், என்ன செஞ்சுட்டு இருக்கேன் நான்?’ என்று தலையைப் பிடித்துக் கொண்டவள், நிமிரும் போது அவளின் விழிகளில் அப்பட்டமான வலி தென்பட்டது.

 

‘எனக்குன்னு ஒரு வாழ்க்கை இல்ல… இருக்கவும் கூடாது!’ என்று தனக்குத்தானே கூறிக் கொண்டவள், அதன்பிறகு அவனின் நினைவுகள் எழாத வண்ணம், வேலையில் மூழ்கி விட்டாள்.

 

*****

 

மறுநாள் சோம்பலாக விடிந்தது அத்வைத்திற்கு. எந்த வேலையும் செய்யத் தோன்றாமல், படுக்கையில் இருந்தவனை, அழைப்பு மணி சத்தம் எழுப்பியது.

 

அவனின் அறை வாசலில் நின்றிருந்தவன் வாசுதான்.

 

“என்ன சார், உயிரோடதான் இருக்கீங்க போல?” என்று வாசு வினவ, அவன் குரலிலிருந்த கேலியைக் கண்டு கொண்ட அத்வைத்தோ, “அதுல உனக்கு வருத்தம் போல!” என்றான், உடலை முறுக்கியபடி.

 

“ஹ்ம்ம், சொன்னதைக் கேட்காம, அந்த நேரத்துல வெளிய போயிருக்கீங்களேன்னு பக்குபக்குன்னு இருந்தாலும், உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தா, நீங்க அந்த பொண்ணோட உல்லாசமா பேசிட்டு வரீங்க. ஒரு ஜீவன் உங்களுக்காக முழிச்சிட்டு இருந்ததைக் கூட கண்டுக்கல.” என்றான் வாசு.

 

அதில், அவனின் முகத்தையே முழு நிமிடம் அத்வைத் உற்று நோக்க, “என்ன இப்போ? என் முகத்துல என்ன இருக்கு?” என்று வாசு வினவினான்.

 

அதற்கு அத்வைத்தோ, “ஒரே நாள்ல உனக்கு என்மேல இவ்ளோ பொஸஸிவ் வந்துடுச்சான்னு பார்த்தேன்!” என்று தோளைக் குலுக்க, அவனை முறைத்த வாசு, “உங்க மொபைல் எங்க? சார் உங்களுக்கு கூப்பிட்டுட்டே இருந்தாராம். நீங்க அட்டெண்ட் பண்ணலன்னு, என் தூக்கத்தையும் கெடுத்துட்டாரு.” என்று கொட்டாவி விட்டான்.

 

“ஓஹ், மொபைல்லா… அது சார்ஜ் இல்லாம எங்கேயோ இருக்கு!” என்று அத்வைத் சாதாரணமாகக் கூற, இரு பக்கமும் தலையை அசைத்த வாசு, “முதல்ல, சார்ஜ் போட்டு அவருக்கு கூப்பிட்டுப் பேசுங்க சார்.” என்று கிளம்ப எத்தனித்தான்.

 

அவனின் கழுத்துப்பட்டையை பின்னிலிருந்தது இழுத்த அத்வைத்தோ, “இரு இரு, அதுக்குள்ள எங்க கிளம்பிட்ட? நேத்து உன் சார் கிட்ட என்னைப் போட்டுக் குடுத்தது நீதான?” என்று வினவ, “அது என் வேலை.” என்று அங்கிருந்து ஓடிவிட்டான் வாசு.

 

இரவிலேயே சார்ஜ் போட்டு வைத்த அலைபேசியை எடுத்த அத்வைத், அதை உயிர்ப்பிக்க, அதே சமயம் சாரதியிடமிருந்து அழைப்பு வந்தது.

 

ஒரு பெருமூச்சுடன், அதை ஏற்றபடி பால்கனிக்குச் சென்றான்.

 

“ஹலோ அத்வைத், என்னாச்சு ஏன் என் ஃபோன் கால்ஸ் எதையுமே எடுக்கல?” என்று சாரதி பதற்றத்துடன் வினவ, “சார்ஜ் இல்ல அங்கிள்.” என்று சாதாரணமாகக் கூறினான் அத்வைத்.

 

“அதி என்ன இது? நான் திரும்பவும் சொல்றேன், நீ இருக்கிறது ஆபத்தான இடம். நீ செய்யிறது ஆபத்தான வேலை.” என்று சாரதி கூற, அத்வைத்தின் விழிகளோ, தொலைவில் தெரிந்த அவனவளின் தோற்றத்தில் நிலைபெற்றன.

 

‘இந்த நேரத்துல எங்கப் போறா?’ என்று அத்வைத் யோசிக்க, சாரதி கூறியவை அவன் மூளைக்குள் சென்றனவா என்று தெரியவில்லை.

 

“அதி… அதி… லைன்ல இருக்கியா?” என்று சாரதி கத்த, மிக மெதுவாக, “ஹ்ம்ம் இருக்கேன் அங்கிள்.” என்றான் அசுவாரசியமாக.

 

“அதி, உன் கான்சென்டிரேஷன் எங்க இருக்கு? அங்கப் போனதுல இருந்தே நீ சரியில்ல.” என்று சாரதி காட்டமாகக் கூற, “அட, நீங்கதான வேலையை சீக்கிரம் முடிக்கச் சொன்னீங்க. அதுக்காகத்தான் உழைச்சிட்டு இருக்கேன். நேத்து கூட, ராத்திரின்னு பார்க்காம… அதான் உங்க ஸ்பை வாசு  சொல்லியிருப்பானே.” என்றான் அத்வைத்.

 

“வாசுவா? அப்படின்னா அவன் அறிமுகப்படுத்திக்கிட்டான்?” என்று சாரதி குழப்பத்துடன் வினவ, “ஆமா… ஏன் அவனோட உண்மையான பெயர் அது இல்லையா? ஓஹோ, என்கிட்ட கூட பெயரை மறைக்க சொல்லியிருக்கீங்களா?” என்றான் அத்வைத்.

 

அவனது பார்வை இன்னமும், இராவிடம்தான்!

 

“நான் எதுவும் சொல்லல அதி. அவனா ஏதாவது… ப்ச், இப்போ அது எதுக்கு? நைட்டு நேரத்துல எதுக்கு வெளியப் போறன்னு கேட்கத்தான் நான் கால் பண்ணதே.” என்றார் சாரதி.

 

“இது நல்லா இருக்கே! என் வேலையே ராத்திரிதான? அதாவது மர்மத்தை கண்டுபிடிச்சு, அதோட உண்மையை வெளிய கொண்டு வரதுதான? அப்போ ராத்திரிலதான வேலை செய்ய முடியும்.” என்று அலுத்துக் கொண்ட அத்வைத், இரா வேறு எங்கோ செல்வதைக் கண்டு, 

 

“சரி, நான் அப்புறமா கால் பண்றேன்.” என்று அழைப்பைத் துண்டிக்க எண்ணியவன், “சொல்ல மறந்துட்டேன். இங்க என்ன நடக்குதுன்னு ஒரு க்ளூ கிடைச்சிருக்கு. அது மாந்திரீகம், தாந்த்ரீகம் சார்ந்ததா இருக்கலாம். எதுக்கும் கன்ஃபார்ம் பண்ணிட்டு உங்களுக்குச் சொல்றேன்.” என்று அவசரமாகக் கூறிவிட்டே அழைப்பைத் துண்டித்தான்.

 

அதைவிட அவசரமாகக் கிளம்பியவன், வீதிக்கு வர, அதற்குள் காணாமல் சென்றிருந்தாள் இரா.

 

‘அடச்சே, மிஸ் பண்ணிட்டேனே!’ என்று அத்வைத் புலம்பியவாறே கண்களை மூட, அவன் முன் வந்த வாசுவோ, “நடுரோட்டுல இப்படிக் கண்ணை மூடி என்ன வேண்டுறீங்க சார்? இதுக்கு காட்டுக்குப் பக்கத்துல இருக்க அம்மன் கோவில்ல வேண்டுனாலும் பிரயோஜனமாகும்.” என்றான் கிண்டலாக.

 

“உனக்கு வேற வேலையே இல்லையா?” என்று அலுப்புடன் அத்வைத் கண்களைத் திறக்க, “இதுதான என் வேலையே!” என்று தோள்களை ஏற்றி இறக்கினான் வாசு.

 

“ஆமா, உன் பெயர் வாசுன்னு ஏன் பொய் சொன்ன?” என்று அத்வைத் வினவ, “என்ன பண்றது சார், என் வேலை அப்படி.” என்றவாறே அங்கிருந்து சென்றான் வாசு.

 

‘சரி, லவ் லைஃபைதான் என்ஜாய் பண்ண முடியல. வேலையாச்சும் பார்ப்போம்.’ என்று எண்ணிய அத்வைத், முந்தின இரவு சென்ற பாதையிலேயே மீண்டும் நடந்தான்.

 

ஞாயிற்றுக்கிழமை என்பதாலோ என்னவோ, வீதிகளில் ஒன்றிரண்டு நபர்களைத் தவிர வேறு யாரையும் காணவில்லை.

 

இரவு நேரத்தில் காண முடியாத அழகை எல்லாம் புகைப்படக் கருவியில் சேமித்துக் கொண்டே, மெல்ல நடை போட்டான்.

 

வீதிகளைக் கடந்து காட்டுப்பகுதியை அவன் வந்தடைய, இப்போது அந்த இடத்தில் அவனைத் தவிர யாருமே இல்லை.

 

‘ஹ்ம்ம், காலைல கூட இந்த இடத்துக்கு யாரும் வரது இல்ல போலயே!’ என்றபடி திரும்பியவனுக்குத் தரிசனம் கொடுத்தாள் இரா.

 

எப்போதும் குர்தியில் காட்சியளிப்பவள், இன்று அவளின் விழி நிறத்திற்கு ஏதுவாக, இளநீல வண்ணத்தில் சேலை அணிந்திருந்தாள். 

 

அறையிலிருந்த போதே அவளைக் கண்டு விட்டாலும், தொலைவில் இருந்ததால், அத்வைத்தால் ரசிக்க முடியவில்லை.

 

அதற்காகத்தானே மின்னல் வேகத்தில் ஓடி வந்தான். அதற்குள் இரா மாயமாக மறைந்திருந்தாளே!

 

இதோ, இப்போது எந்த அவசரமும் இல்லாமல், எவ்வித தொந்தரவும் இல்லாமல், பொறுமையாக, நிதானமாக, உதட்டில் குடியேறிய புன்னகையுடன் அவனின் ‘ஸ்டார்லைட்’டை ரசித்துத் கொண்டிருந்தான்.

 

“இரவுல மட்டும் இல்ல, பகல்ல கூட ஜொலிக்கிறியே ஸ்டார்லைட்!” என்று முணுமுணுத்தவன், அவளை நெருங்க, அவளோ அவனைக் கண்டு கொள்ளாமல் அவளின் வழியில் சென்றாள்.

 

‘நேத்து நல்லாதான கோ-ஆப்பரேட் பண்ணா. இன்னைக்கு என்னாச்சு?’ என்று மனதிற்குள் புலம்பியவாறே, “அட, ஸ்டார்லைட் நில்லு. சேலை கட்டிக்கிட்டு கூட, உன்னால இவ்ளோ வேகமா நடக்க முடியுதா? ஆச்சரியம்தான்!” என்று வியந்தவன், “ரொம்ப அழகா இருக்க ஸ்டார்லைட். நேத்து சொன்னேனே, டிவைன்… அதேதான்!” என்று உணர்ந்து, மனமார சொன்னான்.

 

அதற்கு எவ்வித எதிர்வினையும் இல்லை அவளிடம்!

 

“நைட்டுல மட்டும்தான் பேசுவியோ? இல்ல, மர்மத்தை பத்தி மட்டும்தான் பேசுவியா?” என்று கேலி கலந்த குரலில் அவன் கேட்க, ஒரு முறைப்பு மட்டுமே அவளிடமிருந்து கிடைத்தது.

 

அவனா பின்வாங்குவான்?

 

அவளைப் பின்தொடர்ந்தவன், “இன்னைக்கு என்ன மங்களகரமா சேலைல வந்துருக்க? ஏதாவது விசேஷமா? ஹே, உனக்கு இன்னைக்கு பேர்த் டேவா? ஆமா, கிட்டத்தட்ட ஒரு வாரம் பழகியிருக்கோம்.” என்று கூற, மீண்டும் ஒருமுறை அவனைத் திரும்பி முறைத்தாள்.

 

“சரி சரி, ஒரு வாரமா பார்க்கிறோம்… ஆனா, உன் பேர்த் டே என்னன்னு கூட எனக்கு தெரியலையே. நானெல்லாம் உன்னை மாதிரி இல்லப்பா. இன்னும் ஒரு மாசத்துல எனக்கு பேர்த் டே வருது. உன்கிட்ட இருந்து ஹெவியா கிஃப்ட் எதிர்பார்க்கிறேன்.” என்று நிறுத்தாமல் பேசிக் கொண்டே இருக்க, அவளோ ‘நீ என்ன வேணும்னாலும் பேசு. நான் கொஞ்சம் கூட அசர மாட்டேன்!’ என்பது போல நடந்து கொண்டிருந்தாள்.

 

அவளின் நடை கோவிலில்தான் முடிந்தது.

 

“ஓஹ், இதுதான் காட்டுல இருக்க அம்மன் கோவிலா?” என்ற அத்வைத் கோவிலின் வெளிப்புறத்தைப் புகைப்படம் எடுத்துக் கொண்டான்.

 

இருவரும் ஜோடியாக கோவிலுக்குள் நுழைய, அதே சமயம் கோவில் மணியும் அடிக்க, “அட, யாரோ நமக்கு மணியடிச்சு வரவேற்பு தராங்க போலயே!” என்றான் அத்வைத்.

 

அவனைத் திரும்பியும் பாராமல் உள்ளே சென்றவளை நோக்கி, “இரா அக்கா…” என்று அழைத்தபடி ஓடி வந்தாள் அவனி.

 

உடனே இலகுவான இராவோ, “பார்த்து வா அவனி.” என்று மென்மையாகக் கூற, ‘அட ஸ்டார்லைட்டோட ஸ்விட்ச் இங்க இருக்கா!’ என்று குறித்துக் கொண்டான் அத்வைத்.

 

அதற்குள் உள்ளே சென்று விட்டனர் பெண்கள் இருவரும். அத்வைத்தும் உள்ளே நுழைய, “என்னோடவே வாங்கன்னு சொன்னேன்ல. அப்பாவும் அம்மாவும் இப்போதான் கிளம்பினாங்க. நீங்க அவங்களைப் பார்த்தீங்களா?” என்று அவனி பேசியது அவனுக்கும் கேட்டது.

 

“இல்ல அவனி.” என்ற இரா, அத்வைத்தைப் பார்த்ததும், “சரி வா, சாமி கும்பிட்டுட்டு கிளம்புவோம்.” என்றாள்.

 

அங்கிருந்த மூவரும், கருவறையில் சாந்தமாக காட்சியளித்த அம்மனை வணங்கினர்.

 

பின் அங்கிருந்து பெண்கள் இருவரும் வெளியேற, அத்வைத் வழக்கம் போல பின்தொடர்ந்தான்.

 

காலணிகளை மாட்டும் இடத்தில், “இரா அக்கா, எங்க என் பேர்த் டே கிஃப்ட்?” என்று அவனி சிணுங்கலுடன் வினவ, மெல்லிய சிரிப்புடன், “எல்லாத்துக்கும் அவசரமா? வீட்டுக்கு வா தரேன்.” என்றாள் இரா.

 

இயல்பாகவே அவளால் பாதிக்கப்படும் அத்வைத்திற்கு, அவளின் சிரித்த முகம் அளவில்லா ஆனந்தத்தைத் தர, அதற்குக் காரணமான அவனியையும் அக்கணமே பிடித்தது.

 

“ஹாய் அவனி. ஹாப்பி பேர்த் டே.” என்று அவன் அதே மகிழ்வுடன் வாழ்த்த, தன்னிச்சையாக சிரித்துக் கொண்டே, “தேங்க்ஸ்!” என்ற அவனி, இராவை திரும்பிப் பார்த்தாள்.

 

தெரியாதவர்களிடம் பேசக்கூடாது என்று கூறியவள் இரா அல்லவா?  அனுமதி வேண்டிய பார்வை அது!

 

சின்னவளின் பார்வையைப் புரிந்து கொண்டவனோ, “அடடா, நான் யாருன்னு உன் அக்கா சொல்லலையா?” என்று கேட்க, ‘இல்லை’ என்பது போல தலையசைத்த அவனி தமக்கையைக் கேள்வியாகப் பார்த்தாள்.

 

“நான்தான் உன் அக்காவோட புது ஃபிரெண்டு.” என்றான் அத்வைத். இப்போதும் அவனி இராவைத்தான் கேள்வி தொக்கிய பார்வையுடன் பார்த்திருந்தாள்.

 

இரா நினைத்தால், அவனியை அங்கிருந்து அழைத்துச் சென்றிருக்க முடியும். அத்வைத் நண்பன் என்று கூறிய பின்னரும் அப்படிச் செய்தால், தேவையற்ற கற்பனைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் அமைதியாக நின்றாள்.

 

‘அதுக்கு முன்னாடியே கூட்டிட்டுப் போயிருக்கலாமே! இல்லன்னா, அவன் சொல்றது பொய்னு சொல்லிட்டு கூட்டிட்டுப் போகலாமே!’ என்ற மனசாட்சியின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் மௌனியாகிப் போனாள்.

 

இரா மறுத்து எதுவும் சொல்லாததில், அத்வைத் கூறியவை உண்மை என்பதைக் கண்டு கொண்ட அவனியோ, விழிகளை விரித்து, “அப்படியா?” என்று வினவ, “அப்படித்தான்!” என்று சிரித்துக் கொண்டே கூறிய அத்வைத், “பேர்த் டே கேர்ளுக்கு கிஃப்ட் எதுவும் இல்லையே என்கிட்ட.” என்றான்.

 

“நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணும்போது குடுங்க.” என்று அவனி புன்னகையுடன் கூற, “சூப்பர், அப்போ நெக்ஸ்ட் டைம் மீட் பண்றோம்.” என்று அடுத்த சந்திப்புக்கு அத்வைத் அடிபோட, “அவனி, நீ அத்தை வீட்டுக்குப் போகணும்ல. வா கிளம்பலாம்.” என்ற இரா, கையோடு தங்கையை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.

 

“பொண்ணை கரெக்ட் பண்றதுக்கு, முதல்ல குடும்பத்தை கரெக்ட் பண்ணனும் போல.” என்று புலம்பிய அத்வைத்தின் முன்னே வந்து நின்றார் ஒருவர்.

 

அவரை அத்வைத் புருவம் சுருக்கிப் பார்க்க, “தம்பி, இப்படி அந்தப் பொண்ணு பின்னாடியே திரிஞ்சா, ஊருல அந்தப் பொண்ணுக்குத்தான் கெட்டப் பெயர் உண்டாகும்.” என்று ஒருவித அழுத்தத்துடன் கூறினார் அவர்.

 

“சார், தப்பான எண்ணத்துல எல்லாம் சுத்தல. எனக்கு அந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்கு…” என்று ஏதோ கூற வந்தவனை இடைவெட்டியவர், “அந்தப் பொண்ணுக்கு?” என்று அவசரமாக வினவினார்.

 

“எங்க? சாதாரணமா பேசுறதே பெரிய பாடா இருக்கு…” என்றவன், ஏதோ யோசித்தவனாக, “ஆமா, இதெல்லாம் நீங்க எதுக்கு கேட்டுட்டு இருக்கீங்க?” என்று கேட்டவனின் புருவம் சுருங்கி விரிந்தது, அவர் யாராக இருக்கக்கூடும் என்ற அனுமானத்தால்!

 

அவனின் யூகத்தைப் பொய்யாக்காமல், “அவ என் பொண்ணு.” என்று அவர் கூற, கண்களைச் சுருக்கி வேறு பக்கம் பார்த்தான் அத்வைத்.

 

‘சுத்தம்! இவர்தான் என் வருங்கால மாமனாரா?’ என்று அவன் மனதிற்குள் புலம்ப, “தம்பி, திரும்ப என் பொண்ணு பின்னாடி சுத்தாதீங்க.” என்று கண்டிப்புடன் கூறிவிட்டுச் சென்றார் அவர்.

 

‘அதெப்படி சொல்லலாம்?’ என்ற உரிமையுணர்வு தலைதூக்க, “சார்…” என்று அழைத்து விட்டான்.

 

அதன்பின்பே அவனின் மனம், ‘இரா, அவரோட பொண்ணு. இதைச் சொல்றதுக்கு அவருக்கு எல்லா உரிமையும் இருக்கு.’ என்று உண்மையை எடுத்துரைக்க அமைதியானான்.

 

ஆனால், முன்னேறி சென்ற மனிதரோ அத்வைத்தின் குரலில் திரும்பிப் பார்க்க, இப்போது ஏதாவது சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் அவன்.

 

சட்டென்று அவனின் மூளை வேலை நிறுத்தம் செய்துவிட, அவரின் பார்வையோ தீர்க்கமாக அவனைத் துளைத்தது.

 

‘வருங்கால மாமனார்டா அதி. ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன் பெஸ்ட்டா இருக்கணும். எதையாவது கேளு!’ என்று அவனின் மனமும் இடித்துரைக்க, அந்த அழுத்தத்தில், என்ன கேட்பது என்று தெரியாமல் தத்தளித்தவன், “உங்கப் பொண்ணோட பேர்த் டே என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டே விட்டான்.

 

அவன் வாய் உதிர்த்த சொற்களின் அர்த்தம் உதிர்த்த பின்னர்தான் மூளைக்கு உரைத்தது.

 

எதிரிலிருந்த மனிதரின் பார்வை உஷ்ணமாக மாற, ‘போச்சு! மொத்தமும் போச்சு!’ என்று மானசீகமாக தலையில் கைவைத்து விட்டான்.

 

அவரை சமாளிக்கும் பொருட்டு, “இல்ல, இன்னைக்கு உங்க ரெண்டாவது பொண்ணோட பெர்த் டேல. அதான், உங்க முதல் பொண்ணோட…” என்று அவன் மேலும் உளற ஆரம்பிக்க, அவரோ எதுவும் கூறாமல், பார்வையாலேயே அவனைப் பஸ்மமாக்கி விட்டு சென்று விட்டார்.

 

“எல்லாம் இந்த வாயால!” என்று தன் வாயிலேயே அடித்துக் கொண்டவன், பின்னே நடக்க, அவன் காலில் ஏதோ தட்டுப்பட்டது.

 

என்னவென்று குனிந்து பார்த்தவன் திகைப்பில் ஒருநொடி சிலையாகிப் போனான்.

 

மர்மங்கள் பலவற்றைக் கண்டவனே அதிரும் அளவிற்கு அங்கிருந்தது, ஒரு எலும்புத்துண்டு. சரியாக சொல்ல வேண்டும் என்றால் அது ஒரு விரல்.

 

பார்த்ததும் அது விரல் என்பதற்கு அடையாளமாக, ஒரு மோதிரமும் அதில் மாட்டப்பட்டிருந்தது.

 

*****

 

வேறொரு இடத்தில்…

 

“எல்லாமே இருக்கும் போது அது மட்டும் எப்படி மிஸ்ஸாகும்? ஒழுங்கா பார்த்துதான் எடுத்தீங்களா?” என்று ஒரு குரல் கோபத்திலும் ஏமாற்றத்திலும் வெளிப்பட,

 

“நைட்டு நேரத்துல, யாருக்கும் தெரியாம எடுக்கணுங்கிற அவசரத்துல மிஸ்ஸாகி இருக்கும். திரும்ப போய் எடுத்துக்கலாம்.” என்று மற்றொரு குரல் சற்று ஆதரவாக ஒலித்தது.

 

“என்ன இவ்வளவு சாதாரணமா சொல்றீங்க? அதை வச்சுத்தான் எல்லாமே இருக்கு.” என்று முதல் குரல் பதற்றத்தில் கூற,

 

“இன்னைக்கு நைட்டே திரும்ப போய் எடுத்துட்டு வந்துடுறேன்.” என்ற இரண்டாம் குரலில் எப்படியாவது முடித்து விட வேண்டும் என்ற பரபரப்பு தென்பட்டது.

 

இரவு வரை இருந்தால்தானே?

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
15
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments