10. நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன்
அன்று நிச்சயதார்த்தம்…
தோட்டத்தின் பின்னணியில் மேடை அமைக்கப்பட்டு, கீழே அனைவரும் அமர்வதற்கான இருக்கைகளும் பூக்களாலும் கொடிகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
மேடையின் அலங்கார திரைச்சீலையில், பத்ரிநாத் மதுரவாணியின் பெயர்கள் மோதிரத்தால் பிணைக்கப்பட்டிருப்பது போல் தங்க நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருக்க,
கூடவே தொங்கவிடப்பட்டிருந்த ஹாட் வடிவ தங்கம் மற்றும் வெள்ளி நிற பலூன்கள் மேடையின் அழகை கூட்ட,
கூடியிருந்த அத்தனை பேர் முன்னிலையிலும் மேடையில் நிச்சயதார்த்த தாம்பூலம் மாற்றப்பட, மணமக்கள் மோதிரம் மாற்றுவதற்காக மேடையில் நிற்க வைக்கப்பட்டிருந்தனர்.
அருகில் ஆரவாரத்துடன் இருவீட்டின் குடும்பத்தினர். சோகத்தின் உருவாய் மதுரா நின்றிருக்க, வாயெல்லாம் பல்லாக பத்ரிநாத் நின்றான்.
“இன்னைக்கு குட்ட ரொம்ப சோகமா இருக்குற மாதிரி இருக்குல? முகமே வாடி போய் இருக்கு”என்று பிரகதீஷ் ஜெகதீஷிடம் சொல்ல,
அதற்கு ஆமோதிப்பாய் தலையசைத்தவன், “திடீர் கல்யாண ஏற்பாடு அதனால இருக்கலாம்” என்று பதில் அளித்தவனின் மனதில்
பதில் இல்லா கேள்விகள் பல…
மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்ள விதவிதமான போட்டோக்கள் போட்டோகிராபர்களால் எடுக்கப்பட்டது.
போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் சாக்கில் பத்ரிநாத் கைகள் வேறு அவளின் தோள்களையும் இடையையும் தீண்ட,
வெறுத்துப் போனவளாய் நின்றவளை போட்டோகிராபர் வேறு “ஸ்மைல் ப்ளீஸ்” என்று சிரிக்கச் சொல்ல, அத்தனை பேர் அவர்களையே பார்த்திருக்க மறுக்க முடியாமல் பல்லை கடித்துக்கொண்டு வறண்டு போன சிரிப்பை உதிர்த்தவளின் பார்வை தூரத்தில் நின்று அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வையோடு கலக்கத்துடன் கலக்க, மதுராவிடம் ஒரு தவிப்பு!
வினோதா ஒருபுறம் ரூபனிடம் கொதித்துக் கொண்டிருந்தாள்.
“அவளுக்கு இந்த கலர் நல்லாவே இருக்காதுன்னு தான் செலக்ட் பண்ணினேன்.. ஆனா அவளுக்கு இது செமயா சூட் ஆகியிருக்கு” என்று ஆலிவ் கிரீன் நிற லெஹாங்காவில் மேடையில் மின்னிக்கொண்டிருந்த மதுராவை வெட்டிக்கிழிக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் அவனின் பத்தினி.
“அக்கா அவ கல்யாணத்துல அவ நல்லா தானே இருக்கணும்?”என்று அப்போதுதான் அவர்களின் அருகில் வந்த பிரகதீஷ் வேறு தேவையில்லாமல் வாயை விட்டு விட,
“என்ன வீட்ல நான் இல்லாத நேரமா பார்த்து பாச பயிர வளந்துட்டால.. அப்டியே அவ அம்மா புத்தி” என்று வினோதா எகிறிக் கொண்டுவர,
“அக்கா போதும் என்ன இருந்தாலும் அவளும் இந்த வீட்டுக்கு பொண்ணுதான? ஏன் எப்ப பார்த்தாலும் அவளையே கரிச்சு கொட்டிட்டு இருக்கீங்க?” என்று பதில் சொன்னது என்னவோ ஜெகதீஷ் தான்.
“டேய் நீயா இப்டி பேசுற? “என்று நம்ப முடியாமல் அதிர்ந்து விட்டாள் வினோதா. அவளின் அதிர்ச்சி மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும் அவன் சொல்லியதில் தவறில்லை.
உண்மையில் மதுராவின் மீது குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை அந்த பெண்மணியால் பெற்றெடுக்கப்பட்டவள் என்பதை தவிர அவள் எந்த தவறும் செய்யவில்லையே! ஆனால் அச்சிறு வயதிலேயே அத்தனை வெறுப்பு அந்த பெண்மணி மீது… அது அப்படியே மதுராவின் மீதும் அப்படியே வந்துவிட்டது.
பின்னே அவர்களின் தாய் கல்யாணி இரண்டாவதாக இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த ஒரு மாதத்தில் உடல் பலவீனத்தால் நோயில் விழ, குழந்தைகளை பார்த்துக் கொள்ள முடியாத நிலை. அப்பொழுது வினோதாவிற்கு ஐந்து வயது இருக்கும்.. அவளையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பெண் தான் லீலாவதி தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியில் இருந்தவருக்கு முத்து மாணிக்கம் வீட்டோடு செவிலியரை ஏற்பாடு செய்வது தெரிய, ஏற்கனவே இருந்த வேலையை விட இங்கு சம்பளம் அதிகம் என்பதால் வேலைக்கு வந்தவர் ஆரம்பத்தில் குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொண்டார். ஆனால் போகப் போக தான் அவரின் சுயரூபம் தெரிந்தது.
படுத்த படுக்கையாய் குடும்ப தலைவி.. அவரை கூடவே இருந்து பார்த்துக் கொள்ள ஒரு வயதான பெண் அதுவும் வாயில்லாத பூச்சி தான் .. அதனால் அவரைகேள்வி கேட்க யாரும் இல்லை.
குடும்பத் தலைவி சரியாக இல்லாத வீடு வசதியாய் போக, நிறைய சொத்துக்கள் மாட மாளிகையில் சொகுசான வாழ்க்கை.. இதையெல்லாம் பார்த்தவர் முத்துமாணிக்கத்தை தன்வழிக்கு கொண்டு வர நேரம் பார்த்துக் கொண்டிருக்க, ஒரு அரசியல் பார்ட்டியில் குடித்துவிட்டு போதையாகி வந்திருந்தவரை அன்றே மஞ்சத்தில் மயக்கி தன் வசமாக்கினார்.
ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத மனைவியால் குடும்ப வாழ்க்கை கசந்திருக்க, அதை தனக்கு வாய்ப்பாய் பயன்படுத்திக் கொண்ட லீலாவதி அடுத்த மாதமே கருவுற்றார்.
தாமதமாக தன் தாதிப்பெண் மூலம் விஷயம் கேள்விப்பட்டு அரை உயிராய் இருந்த கல்யாணி அடுத்த நாளே உறக்கத்தில் இவ்வுலகத்தை விட்டு சென்று விட, இறுதி சடங்கு முடித்துவிட்டு வந்த முத்துமாணிக்கத்தின் முன் “இந்த தாலியை என் கழுத்துல கட்டுங்க சார்.. என் பிள்ளைக்கு அப்பா வேணும்ல்ல ” என்றார் லீலாவதி.
கூடியிருந்த மொத்த உறவினர்களின் முன்னிலையில், இப்படி வந்து நின்று கேட்ட லீலாவதிக்கு அப்பொழுது தான் ஐந்தாம் மாதம் தொடங்கி இருந்ததால் வயிறு காட்டிக் கொடுத்தது.
முத்துமாணிக்கம் கோபத்தில் பல்லை கடிக்க,
“இப்ப நீங்க கட்டலனா.. நான் உங்களுக்கு ஓட்டு போட்டு எம்எல்ஏ ஆக்குன மக்கள் கிட்ட போய் தான் எனக்கு கிடைக்க வேண்டிய நீதிய கேட்கணும்..”என்று குறிப்பார்த்து அவரின் பலவீனத்தில் அடிக்க, தாலியும் கட்டப்பட்டது.
லீலாவதி முத்துமாணிக்கத்தின் இரண்டாவது மனைவியானார்.
இனி அவர்தான் வீட்டின் எஜமானி என்ற மிதப்பில் திமிருடன் வலம் வர, கல்யாணியின் இறப்பிற்கு காரணம் லீலாவதி தான் என்று அவரைப் பார்த்துக் கொண்ட தாதிப்பெண் சொல்லக் கேட்ட வினோதாவிற்கு அச்சிறு வயதிலேயே லீலாவதியின் மீது அப்படி ஒரு பழி உணர்வு.
வயிற்றில் குழந்தை இருந்தாலும் லீலாவதி கடமைக்காகவோ குற்ற உணர்விற்காகவோ தன் பொறுப்பில் இருந்த இரட்டைக் குழந்தைகளை நன்றாகவே பார்த்துக் கொள்ள, அதுவே முத்துமாணிக்கத்திற்கு போதுமானதாக இருந்தது.
ஆனால் “இதெல்லாம் நடிப்பு பாப்பா” என்று தாயைப் பார்த்துக் கொண்ட தாதிப்பெண் சொல்லக் கேட்டவள், தன் தந்தையிடம் சொல்லி,
குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை அந்த தாதிப் பெண்ணிடம் ஒப்படைத்தாள்.
இப்படி வினோதா வீட்டில் நடக்கும் ஒவ்வொன்றிற்கும் லீலாவதியை எதிர்க்க, அதைக் கண்டு கொள்ளவே இல்லை அவர். அவருக்கு தேவையான வசதியான வாழ்வு தான் கிடைத்துவிட்டதே! இந்த சில்வண்டு செய்யும் சேட்டையா அவரைப் பாதித்துவிடும்? என்று இருந்து விட்டார்.
ஒன்பதாம் மாதம் தொடக்கத்தில் லீலாவதி இருக்க, முத்துமாணிக்கம் கட்சி வேலையாக வெளியூர் சென்றிருந்தார். வீட்டில் வினோதா தாதிப்பெண் மட்டுமே குழந்தைகளுடன் இருக்க, மதிய வேளையில் பிரசவ வலி வந்து விட்டது லீலாவதிக்கு.
வழியில் கதறி துடித்த லீலாவதி தன் அறையில் இருந்து வெளியே வர முயல, எப்போதும் போல் அவரை வம்பு இழுப்பதற்காக வெளியே கதவை அடைத்து விட்டு சென்று விட்டாள் வினோதா.
வெகு நேரம் கழித்து அவர் என்ன செய்கிறார்? என்று அறை அருகே வந்தவளுக்கு அவர் கதறும் சத்தம் கேட்டதும்,
“நல்லா வேணும் இந்த பொம்பளைக்கு” என்று வெளியே இவள் கைதட்டிக் கொண்டிருக்க, உயிர் போகும் வழியில் கத்திக் கொண்டிருந்தவரின் சத்தம் மெது மெதுவாய் குறைய இப்பொழுது சுத்தமாக இல்லை என்றவுடன் அப்பொழுது குழந்தையாக இருந்தவளுக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை. கதவைத் திறக்கவும் பயமாக இருந்தது.
அவசரமாய் ஓடிவந்து கீழே இரட்டையர்களின் அறையில் இருந்த தாதிப் பெண்ணிடம் சொல்ல, அவர் பதறிப்போய் மருத்துவமனைக்கு தகவல் சொல்லிவிட்டு, கதவைத் திறந்து பார்த்த பொழுது குழந்தை பிறந்திருந்தது. ஆனால் லீலாவதி ரத்த போக்கு அதிகமாகி இறந்து போயிருந்தார்.
முத்து மாணிக்கமும் விஷயம் கேள்விப்பட்டு வந்தவர் காதும் காதும் வைத்தது போல் இறுதி காரியத்தை முடித்து, தன்னைப் பிடித்த பீடை இன்றோடு ஓய்ந்தது என்று நினைத்தார். லீலா எப்படி இறந்தார் என்றெல்லாம் ஆராயவில்லை.
அதோடு வினோதா கதவை பூட்டியதால் தான் லீலாவதி இறந்தார் என்பது அந்த தாதிப் பெண்ணால் மறைக்கப்பட்டது.
ஆனால் வினோதாவின் வெறுப்பு லீலாவதி இடமிருந்து அவர் மூலமாக பிறந்திருந்த அக்குழந்தையின் மீது இடம் பெயர்ந்தது.
பிறந்த குழந்தையிடம் தன் தந்தையை கூட அவள் நெருங்க விடவில்லை.
அதுவும் வளர வளர தன்னைவிட அவள் அழகாக இருந்தது.. அவளின் பொறுமை, நளினம் அறிவு, கனிவு எதுவுமே பிடிக்கவில்லை.
அது மேலும் மேலும் அவள் மீது இருந்த வெறுப்பை தான் கூட்டியது. தன் வெறுப்பை அப்படியே தனது தம்பிகளுக்கும் சொல்லியே வளர்த்தாள் வினோதா. அவள் சொல்லியது போல் தான் சகோதரர்களும் சிறு வயது முதல் அவள் மீது கோபத்தையும் வஞ்சத்தையும் காட்ட, அதுவே போதுமானதாக இருந்தது அவளுக்கு.
ஆனால் அந்த வெறுப்பு இப்பொழுது இருவரிடமும் இல்லை என்பதை இந்த நொடியில் உணர்ந்த வினோதாவிற்கு மதுராவின் மீதுதான் கோபம்.
“அக்கா ..அது வந்து.”என்று சமாதானமாய் ஜெகதீஷ் ஏதோ சொல்ல வர,
“நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்.. நீயாவது அம்மா முகத்தை விவரம் தெரிஞ்சு பார்த்ததே இல்லை.. ஆனா சின்ன வயசுல அம்மா பாசத்துல அவங்கள பார்த்து வளர்ந்த எனக்கு அந்த பொம்பளையும் பிடிக்காது அந்த பொம்பள பெத்து போட்டு போனவளையும் பிடிக்காது..”என்ற கத்திவிட்டு வினோதா அழுதபடி அங்கிருந்து சென்றிருந்தாள்.
கூடவே ரூபனும், “ஏன்டா அவ குணம் தெரிஞ்சே இப்டி பண்றீங்க” என்று மச்சான்கள் இருவரையும் முறைத்தபடி செல்ல, சகோதரர்கள் இருவருக்கும் தன் அக்காவின் நிலையை பார்த்து வருத்தமே!
அவளின் இந்த அழுகைக்காகவே, மதுரா மீது தவறில்லை என்றாலும் அக்காவிற்காக அவளுக்கு பரிந்து இருவரும் பேசியதில்லை.
ஆனால் திருமணம் முடிந்து கண்காணாத தேசத்திற்கு செல்லப் போகின்றவள் அவளிடம் எதற்கு வெறுப்பும் வஞ்சமும் என்று நினைத்து தான், மதுராவிற்கு பரிந்து வினோதாவிடம் பேசிவிட, இதோ அவளின் அழுகையும் தவிப்பும் ஆரம்பித்தது.
வேக நடையுடன் அழுது கொண்டே சென்ற தமக்கையின் நிலையைப் பார்த்து பொறுக்க முடியாமல் பிரகதீஷ் கூட,
“ஏண்டா இப்படி பேசி தொலைஞ்ச? நமக்கு அக்கா தானே முக்கியம்?”என்று திட்டிவிட்டு அவளை சமாதானப்படுத்த விரைய,
அதற்கு மேல் மனது கேட்காமல் ஜெகதீஷும் அவன் பின்னேயே விரைந்தான்.
அதன் பிறகு சகோதரர்கள் இருவரும் அவளை சமாதானப்படுத்தி அழைத்து வர, முகத்தை தூக்கி வைத்து ரொம்பவே பிகு பண்ணி கொண்டாலும் பேசத்தான் செய்தாள் அவள்.
அவளுக்கு எப்பொழுதுமே தந்தை சகோதரர்கள் தனக்கென்று இருக்க வேண்டும்.. மதுராவிற்காக தன்னை ஒரு இடத்திலும் விட்டு தரக்கூடாது. மதுரா திருமணம் முடிந்ததும் இந்த நாட்டிலேயே இருக்கப் போவதில்லை என்ற விடயமே திருமண விஷயத்தில் மட்டும் சில உதவிகளை அவளுக்காய் செய்ய வைத்தது.
பத்ரிநாத் உடன் மேடையில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நெருப்பில் நிற்பது போல் மதுராவிற்கு இருந்தது. பத்ரிநாத்தின் தாய் சகுந்தலா உறவினர்கர் சிலரை புகைப்படம் எடுப்பதற்காக அழைத்துக் கொண்டு வர, பேச்சு அவர்களோடு இருந்தாலும் அவளின் இடையில் பத்ரியின் கைகள் திருட்டுத்தனமாய் உரச, நகரவும் முடியாமல் ஒட்ட நிற்கவும் முடியாமல் மதுராவிற்கு கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது.
உதவிக்காக கூட யாரையும் கூப்பிட முடியாத நிலையில் அவள்… இப்பவே தந்தையிடம் சென்று எனக்கு திருமணமே வேண்டாம் என்று சொல்லிவிடலாம் தான் ஆனால் அதற்குப்பின்? அவள் நிலை?
அவளுக்கான உரிமை எதுதான் இங்கு நியாயமாய் கிடைத்திருக்கிறது? பிறந்த போதே தாய் பாசம் இல்லை தந்தை பாசமும் இல்லை.. சகோதரர்களும் சகோதரியும் மாற்றான் தாய் பிள்ளைகள் என்று தெரிய வந்தபோது அவள் எப்படி உணர்ந்தால் என்று சொல்ல வார்த்தைகள் இல்லை.
தனக்கென்று யார் தான் இருக்கிறார்கள் என்று ஏக்கம் அவளுக்குள்.. !
திருமணத்தை பற்றிய எல்லாம் அவளுக்கு மிக நீண்ட கனவுகள் எல்லாம் இல்லை தனக்கென்று ஒரு உறவு தங்களுக்கு என்று ஒரு குடும்பம் அளவாய் அன்போடு அரவணைப்போடு தாய் தந்தையிடம் கிடைக்காத அன்பை பன்மடங்காக்கி பேரன்பாக பொழிய தனக்கே தனக்கென்று ஒருவன்… ஆனால் இப்போது எல்லாம் கனவாய் போய்விட்டதே!
அவள் திருமணமே இங்கு பந்தய குதிரையை போல் அத்தனை வேகமாய்.. அதுவும் அவளுக்கு பிடிக்காத சொந்தமாய் போய்விட மதுராவின் முகத்தில் அருளே இல்லை. பத்ரியின் தாயும் உடன் வந்தவர்களை புகைப்படம் எடுக்க வைத்துவிட்டு உணவு உண்ண அழைத்து சென்றுவிட, பத்ரிநாத் யாரோடோ தன் அலைபேசியில் பதட்டமாய் பேசியபடி சற்று தள்ளி சென்றான்.
மதுராவும் கிடைத்த இடைவேளையில் மேடையில் இருந்து சற்று தள்ளி மறைந்தாற்போல் ஒதுங்கி நின்றாள். கண்களை முட்டி நின்ற கண்ணீரை யாரும் அறியாமல் விரல்களால் சுண்டி விட்டாள். ஆனாலும் கண்கள் மீண்டும் நிறைந்து அவளுடன் சண்டித்தனம் செய்தது.
“ஜூஸ்”என்ற சொல்லோடு அவள் முன்னால் பழச்சாறு நிரம்பிய கண்ணாடி டம்ளர் ஒன்று நீட்டப்பட, கலங்கிய கண்களால் தன் முன்னால் இருப்பது யார்? என்று ஏறிட்டவளுக்கு அந்த நிமிடம் ஏனோ அத்தனை ஆசுவாசம்..
“பிளாக்” என்றாள் அழுகுரலில்,
அவளின் குரலில் தாயை பிரிந்த குழந்தையின் தவிப்பு இருக்க, அதை கண்டு கொண்டவனினுள் சிறு தடுமாற்றம்.
தடுமாற்றத்தை தடம் தெரியாமல் மறைத்தவன்,
“மதுரா கண்ட்ரோல் யுவர் செல்ப்” என்றான் உணர்வற்று.
“ம்ம்..”என்றவளுக்கு ஏனென்றே தெரியாமல் அட்சய பாத்திரம் போல் விடாமல் துடைக்க துடைக்க குறையாமல் கண்ணீர் பெருகியது.
அவளின் உள் மன உளைச்சலின் வெளிப்பாடு என்று புரிய இப்பொழுது ஆறுதல் சொன்னால் அவளின் அழுகை கூடும் வாய்ப்பு அதிகம் என்பதால்,
“தொடச்சது போதும் ஜூஸ குடி”என்றான் அழுத்தமாய்.. தன் அக்மார்க் காரக் குரலில்.
அவன் குரலில் அழுகை நின்று விட, கைகள் தன் பாட்டிற்கு ஜூசை வாங்க, அவள் குடித்து முடிக்கும் வரை பொறுமையாய் நின்றவன், அதன் பிறகு மாயமாய் மறைந்திருந்தான்.
இங்கு அலைபேசியில் பேசி விட்டு வந்திருந்த பத்ரியின் முகம் யோசனையாய் இருந்தது.
அவன் அதன் பிறகு மதுராவிடம் நெருங்காது நிற்க, மதுராவும் நிம்மதியாய் ஒதுங்கிக் கொண்டாள். உணவருந்த அருகருகே அமர வைக்கப்பட்டிருந்த போதும், அவன் அவளிடம் சீண்டவில்லை.
இப்படியாக நிச்சயதார்த்த விழா நல்லபடியாக முடிய, முத்துமாணிக்கத்திற்கு பாதி கடலை தாண்டிய உணர்வு.
அவரின் ஒட்டுமொத்த நிம்மதியையும் குழி தோண்டி புதைப்பதற்கு ஒருவன் வந்து கொண்டிருப்பதை அவர் அறியவில்லை.
மறுநாள் விடிந்தால் திருமணம்.
நாளைய விடியல் வராமலே இருக்கலாம் என்று எண்ணம் மதுராவிற்கு வர… தன் அறை பால்கனியில் நின்று வானத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, திடீரென்று ஒரு யோசனை எழ, ஏன் இத்தனை நாள் இது தனக்கு தோன்றவில்லை? என்ற எண்ணமும் வராமல் இல்லை. ஆனால் இது நடக்குமா? என்ற சந்தேகமும் கூடவே எழுந்தது.
ஆனால் இந்நேரத்தில் போய் யாரிடம் சென்று நேரத்தில் உதவி கேட்பது? என்று நினைத்தவளின் மனதிற்குள் கருப்பசாமி வந்து முறைக்கவும்,
இனம் புரியாத உணர்வு எழ,
“பிளாக்..” என்று அழைத்திருந்தாள் அவளையும் அறியாமல்.
அடுத்த நொடி அவள் அறையை ஒட்டி இருந்த மிகப்பெரிய யூகலிப்டஸ் மரத்தின் கிளைகளில் இருந்து அவலறை பால்கனிக்கு இரண்டு எட்டுகளில் குதித்து தாவி வந்திருந்தான் அவன்.
அதிர்ந்து போய் ஆஆஆ என்று அலறிவிட்டாள் மதுரா.
“ஹே கூல் கூல் நான் தான்”என்று கருப்பசாமி சமாதானப்படுத்தியும் அவளின் முட்டை கண்ணால் மலங்க மலங்க விழிக்க,
அதை கண்டு கொள்ளாமல்
“எதுக்கு கூப்ட்ட?”என்று கேட்டவனின் தோரணையில்,
பயந்தவளாய், “ஹான்..சு ..சும்மா..சும்மா”
“ஓ..சும்மாதான் கூப்பிட்டியா அப்ப நான் போகவா?”என்றவன் வந்த வழியே குதிக்கத் தயாராக,
இன்று தான் கடைசி வாய்ப்பு… விட்டு விடாதே என்று புத்தி உரைக்க,
தான் கேட்க வேண்டியது கேட்காமல் அவன் செல்ல போவதாக சொல்லவும்,
“ஹேய் பிளாக் வெயிட் வெயிட் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்”
என்றவளிடம், அவனும்
“சொல்லு?” என்றதும்,
‘அச்சோ டக்குனு சொல்ல கூட வர மாட்டேங்குது?’என்று யோசித்தவள், எதையாவது சொல்லி வைப்போம் என்று,
“நீங்க எப்படி மரத்து மேல போனீங்க?”என்று கேட்டிருந்தாள் அவசரமாய்.
“கால வச்சு தான்…” என்று அவன் சிரிக்காமல் சொல்லவும்,
“என்ன ஜோக்கா?”என்று கேட்டவளுக்கு, அப்போதுதான் அவன் அடர்ந்த கேசத்தில் சிக்கியிருந்த காய்ந்த இலைகள் கண்ணில் பட,
“அய்யோ தல ஃபுல்லா குப்ப” என்றவள், அதை தட்டி விட அவனை நெருங்க,
முட்டிக்கு கீழ் வரைக்குமான பிங்க் புள்ளிகள் வைத்த க்ரீம் நிற ஸ்கெட் ஹலோ கிட்டி பொம்மையை ஆங்காங்கே பதித்த பிங்க் நிற டீசர்டில் மாலையில் செய்யப்பட்டிருந்த அத்தனை அலங்காரங்களையும் கலைத்து, முடியை விரித்து விட்டிருந்தாள். முகத்தில் துளி மேக்கப் இல்லை… ஆனால் மாலையில் அலங்காரத்தில் பார்த்ததைவிட அவளின் இந்த அழகு அபாரமாய் தெரிய, தன்னை நெருங்கி நின்றவளைப் பார்த்தவனின் கண்களில் இனம் புரியாத உணர்வலைகள்.
ஆனால் அவளோ இயல்பாய் அவன் தலையில் இருந்த காய்ந்த இலைகளை எல்லாம் தட்டி விட்டவள்,
“உங்களுக்கு பாடிகார்ட் வேலை பார்க்க வேற இடமே கிடைக்கலையா? அப்பப்ப குரங்கு மாதிரி அங்கங்க தவ்விகிட்டே இருக்கீங்களே என்ன?”என்று கேட்க, அவனிடம் பதில் இல்லை. ஆனால் பார்வை முழுவதும் அவளிடமே இருக்க,
“என்னாச்சு உங்களுக்கு?” என்று அவன் முகம் பார்த்தவளுக்கு அப்பொழுதுதான் அவனை நெருங்கி நிற்பது புரிய, சங்கடமாய்
அவனிடமிருந்து விலகவும் ஏனோ இதயத்தில் வெற்றிடம் விழ, தானும் தன் பார்வையை விலக்கிக் கொண்டான்.
ஆனால் அவளோ, அவனின் அமைதியை தான் யோசித்ததை சொல்லும் வாய்ப்பாய் எடுத்துக் கொண்டு, ” நான் இன்னைக்கு மிட்நைட் யாருக்கும் தெரியாம ஓடிப் போகப் போறேன்.. இங்கருந்து சேஃபா போக எனக்கு ஹெல்ப் பண்ணுவீங்களா ப்ளீஸ்.. உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன்” என்று கேட்டிருந்தாள் அவசரமாய்…
“ஓ எவ்வளவு தருவ?” என்று கேட்டவனின் குரலே அதுவரை இருந்த இதத்தை தொலைத்து பயங்கரமாய் மாறி இருந்தது.
தொடரும்…
படிச்சிட்டு மறக்காம கமெண்ட் போட்டுட்டு போங்க மக்களே!
Happy reading☺️♥️
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
40
+1
3
+1
சூப்பர் ♥️
ரொம்ப நல்லா போகுது கதை
தேங்க் யூ சிஸ்🥰😍
நன்றி சிஸ்❤️
Thank you so much sister 🥰
பிளாக் என்ன பிளான் வைத்து இருக்கிறான்
ஹிஹிஹி பிளாக் ப்ளான் இப்ப சொல்ல மாட்டேனே😅 நெக்ஸ்ட் யு டி ல தெரிஞ்சிக்கலாம் சிஸ்😜😍❤️