Loading

அத்தியாயம் 3

 

படுக்கையில் படுத்த இராவோ, தனக்குள்ளேயே தர்க்கம் புரிந்து கொண்டிருந்தாள்.

 

முடிவில், “அவனைத் தினமும் பார்க்கிறதாலதான், இந்த பிரச்சனை. நாளைக்கே அங்கிள் கிட்ட பேசி, ஃபேக்டரி வேலைக்கு மாறிடனும்.” என்று கூறிக் கொண்டாள்.

 

உடனே அவளின் மனமோ, ‘அது என்ன அவ்ளோ ஈஸியா? முதல்ல, அங்கதான வேலை செஞ்ச. நிம்மதியா வேலை செய்ய முடியலன்னுதான இங்க வந்த.’ என்று பழைய நினைவுகளை மீட்டித் தர, “ப்ச், இந்த தொல்லைக்கு அந்த தொல்லையே பரவால்ல.” என்றவளின் மனக்கண்ணிலும் அவன் தோன்றி இம்சையளிக்க, தலையை இருபக்கமும் அசைத்து அவனின் பிம்பத்தை மறைய வைக்க முயன்றாள்.

 

அவளின் முயற்சியில் சிரித்துக் கொண்ட மனமோ, ‘பார்க்காம இருக்கிறதால, பாதிப்பு ஏற்படாதுன்னு யாரு சொன்னா? அதுதான் இன்னமும் உன்னைப் பாதிக்கும்.’ என்று எடுத்துரைத்தது.

 

“ப்ச், கொஞ்சம் குழப்பாம இருக்கியா? இனிமே, நான் அவனைப் பார்க்கப் போறதும் இல்ல. அதனால, இப்படி உட்கார்ந்து புலம்பிட்டு இருக்கப் போறதும் இல்ல.” என்றவள், சற்று வெளியே சென்று வந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணியபடி ஆயத்தமானாள்.

 

யாரைத் தவிர்க்க வேண்டும் என்று இத்தனை நேரம் மனதோடு போராடினாளோ, அவனை அந்த இரவு வேளையில் காப்பாற்றப் போவதே அவள்தான் என்று அப்போது அவளுக்குத் தெரியாதே!

 

ஜெர்கினின் ஹூடினால் தலையையும், பாக்கெட்டினுள் கைகளையும் மறைத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தாள் இரா.

 

அந்த சிறிய வீட்டின் கதவு திறந்து மூடும் சத்தத்தில், பெரிய வீட்டில் விளக்கு எரிந்தாலும், அதைக் கண்டு கொள்ளாமல், வாயிற்கதவைத் திறந்து வீதியில் இறங்கி நடந்தாள்.

 

பூச்சிகளின் ரீங்கார சத்தத்தைத் தவிர வேறெந்த சத்தமும் இல்லை அவ்விடத்தில்.

 

இராவிற்கும் இம்மாதிரியான பயணங்கள் புதிதில்லை. சொல்லப்போனால், காலையில் செல்வதைக் காட்டிலும், இரவில், யாருமற்ற வீதியில் நடந்து செல்வது அவளுக்கு நிம்மதியைதான் அளித்தது.

 

யாரின் பார்வைக்கோ, பேச்சிற்கோ ஆளாக வேண்டாம் அல்லவா?

 

அதே சிந்தனையுடன் நடந்து கொண்டிருந்தவளுக்கு, மெல்லிய ஒலியில் காலடிச் சத்தம் கேட்க, சத்தம் வந்த திசையை உன்னிப்பாக கவனித்தபோது அதைக் கண்டாள்.

 

யாரோ ஒருவன், காடிருக்கும் திசை நோக்கி நடப்பதைப் புருவம் சுருங்கப் பார்த்த இரா, பின்னர் தோளைக் குலுக்கியபடி அவளின் வழக்கமான திசையில் பயணிக்க ஆரம்பித்தாள்.

 

ஆனால், அவளின் மனமோ, ‘யாரு அது? வழக்கமா இந்த நேரத்துல யாரும் காட்டுப்பக்கம் போக மாட்டாங்களே!’ என்ற கேள்வியைக் கேட்டது.

 

‘யாரா இருந்தா என்ன?’ என்று அவள் அலட்சியமாக பதில் கேள்வி கேட்க, அவளின் மனமோ, ‘யாராவது தெரியாதவங்க, வழிமாறி அங்க போகலாம்ல. தப்பா எதுவும் நடக்குறதுக்கு முன்னாடி, அவங்களை எச்சரிக்கலாம்.’ என்று நியாயமாகப் பேசியது.

 

‘எச்சரிச்சா மட்டும், இந்த ஊர்க்காரங்க என்னைத் தலையில தூக்கி வச்சு கொண்டாடப் போறாங்களா?’ என்று முரண்டு பிடித்தவளை, ‘நீயும் சுயலாபத்துக்காகத்தான் எதையும் செய்வ, அப்படிதான? அப்போ நீயும் சுயநலவாதிதான? மத்தவங்களை குறை சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கு?’ என்று கேட்டே அதன் வழிக்கு கொண்டு வந்து விட்டது.

 

இராவின் மனசாட்சி என்றால் சும்மாவா?

 

விளைவு, காட்டுப்பகுதியை நோக்கி அடிகளை எட்டு வைத்து நடந்து கொண்டிருந்தாள் இரா.

 

போகும் வழியெல்லாம், “இது எனக்கு தேவையில்லாத வேலை!” என்ற முணுமுணுப்பு வேறு!

 

அப்போதுதான் தூரத்தில் யாரோ ஒருவன் நிற்பதைக் கண்டுவிட்டு, வேகமாக அவனை நோக்கி ஓடினாள்.

 

அதற்குள் அவன் டார்ச்சை உயிர்ப்பித்து உள்ளே நுழைய முற்பட, அவன் தோளில் கைவைத்து நிறுத்தி இருந்தாள்.

 

அதில், அவன் திரும்பிப் பார்க்க, அவளும் ஓடி வந்ததால், மூச்சு வாங்கியபடி அவனைத்தான் பார்த்திருந்தாள்.

 

இருவரின் விழிகளும், நொடிப்பொழுதேனும், ஒன்றோடொன்று தழுவியபடி கட்டுண்டிருக்க, பலமாக வீசிய காற்றுதான் இருவரையும் நிகழ்விற்கு அழைத்து வந்தது.

 

“அட, ஸ்டார்…” என்று ஆரம்பித்த அத்வைத், “க்கும், இரா?” என்று அவளின் பெயரையே கேள்வியாக முடித்திருக்க, இராவோ என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தாள்.

 

‘அடக்கடவுளே, இங்கேயும் இவனா?’ என்று பல காலத்திற்குப் பிறகு கடவுளை அழைத்திருந்தாள் இரா.

 

இராவின் வாழ்வில், முற்றுப்புள்ளியாகிப் போன பலவற்றை காற்புள்ளியாக மற்ற வந்தவன்தான் அத்வைத்தோ?

 

இரா, தனக்குள் தடுமாறிக் கொண்டிருக்க, அத்வைத்தோ அவளின் முகம் காட்டும் வர்ணஜாலங்களில் தடுமாறிக் கொண்டிருந்தான்.

 

அவனின் சில கால (!!!) கனவல்லவா அது?

 

யாருமற்ற தனிமை, வெளிச்சத்திற்கு இடமில்லாத காரிருளில், அத்வைத்தின் அலைபேசியின் உதவியால் துளி வெளிச்சம் மட்டும் அவள் மீது வாரியிறைக்கப்பட்டிருக்க, அதுவே அவளை அழகியாகக் காட்டியது.

 

அவளின் அந்த அழகிய முகம், அவன் பார்க்க, முதன்முதலில் காட்டும் உணர்வுகளைக் கருவியில் அல்லாது விழிகளால் படம்பிடித்துக் கொண்டான், அந்தக் காதலன்!

 

அவளைக் காணும்போதெல்லாம் தானாக உதட்டில் ஒட்டிக் கொள்ளும் சிரிப்பு, இப்போதும் தோன்ற, “டிவைன்!” என்றான் அந்த தருணத்தை சுகமாக உள்வாங்கியபடி.

 

அதில் லேசாக எரிச்சலுற்றவள், “டிவைன் இல்ல டீமானிக்!” என்றவள், அவளை நோக்கி இருந்த அலைபேசி வெளிச்சத்தை, அவர்களின் முன்னிருந்த பாதையை நோக்கி காட்டினாள்.

 

அங்கு, சில பொருட்கள் சிதறிக் கிடந்ததைக் கண்ட அத்வைத், அவற்றை ஆராயும் பொருட்டு முன்னேறிச் செல்ல முற்பட, மீண்டும் அவன் கரத்தைப் பற்றித் தடுத்த இராவோ, “ஹலோ இது ஒண்ணும் சாதாரண இடம் இல்ல, உங்க இஷ்டத்துக்கு உள்ள நுழைய.” என்று படபடத்தாள்.

 

அவனுக்கான அவளின் படபடப்பை ரசித்தவனோ, மேலும் அவளைச் சீண்டும் விதமாக, “ஆஹான், யாருக்கிட்ட பெர்மிஷன் கேட்டுட்டு உள்ள நுழையணும்?” என்று வினவ, அவனை முறைத்தவளோ, “எல்லாமே கிண்டலும் கேலியும் இல்ல மிஸ்டர். அத்வைத்.” என்று அழுத்தமாகக் கூறினாள் அவள்.

 

அந்த அழுத்தத்தை எல்லாம் அவன் கவனித்ததாகத் தெரியவில்லை.

 

அவள் முதன்முதலாக உரைத்த அவனின் பெயரிலேயே தேங்கி விட்டது அவன் இதயம்.

 

அவனிடமிருந்து பேச்சை எதிர்பார்த்தவளோ, அவனின் விழிவீச்சில் சிக்க விரும்பாமல் செரும, அதில் நிகழ்விற்கு வந்தவனோ, தலையைக் கோதியபடி, “சரி சொல்லுங்க மேடம், அப்படி சீரியஸா இங்க என்ன நடக்குது?” என்றான், வெளிச்சம் காட்டிய பொருள்களை பார்வையிட்டபடி.

 

அவளோ ஒரு பெருமூச்சுடன், “பூஜை நடந்துருக்கு.” என்க, “இந்த அர்த்தஜாமத்துல, இந்த அத்துவான காட்டுக்குள்ள பூஜையா?” என்று அவன் நம்பாமல் கேட்டான்.

 

“தாந்த்ரீக பூஜை எல்லாம், இந்த நேரத்துல, இந்த இடத்துலதான் நடக்கும். எல்லாம் தெரிஞ்ச மாதிரியே பேச வேண்டியது!” என்றவள், இறுதி வரியை மட்டும் முணுமுணுத்தாள்.

 

அதையும் கேட்டவனோ, “தெரிஞ்சுக்கத்தான் கேட்குறேன்.” என்று கூற, அப்போதுதான் அவனின் வேலையைப் பற்றிய நினைவே எழுந்தது அவளுக்கு.

 

“ப்ச், உங்க வேலையை என்கிட்ட காட்ட வேண்டாம். நான் எதுவும் சொல்லப் போறது இல்ல.” என்று அவள் உறுதியாகக் கூற, “என் வேலையா? என் வேலையைப் பத்தி எல்லாம் உனக்குத் தெரியுமா? அப்போ, என்னைப் பத்தி விசாரிச்சிருக்க, ரைட்?” என்று அவன் நாவால் ஒருபக்கக் கன்னத்தை துருத்தியபடி வினவினான்.

 

என்ன சொல்வதென்று தெரியாமல் சில நொடிகள் தடுமாறியவள், “இப்போ இதெல்லாம் அவசியமா?” என்று பேச்சை மாற்ற முயல, “அதுசரிதான், நம்ம கதையை அப்புறம் பேசுவோம்.” என்றவன், அந்த மர்மமான இடத்தை ஆராயச் சென்றான்.

 

அதில் அவள் மீண்டும் கோபம் கொள்ள, “அட, அந்த லைன்னை தாண்ட மாட்டேன்மா.” என்று உறுதியளித்தப் பின்னர்தான், சற்று அமைதியாக இருந்தாள் அவள்.

 

அத்வைத், அங்கிருந்த பொருட்களை எல்லாம் புகைப்படம் எடுத்துக் கொண்டவன், சற்று தள்ளியிருந்த பொருளை தொடப் போக, அவன் கையை தட்டிவிட்டவளோ, “ப்ச், என்ன ஏதுன்னு தெரியாம, அதைத் தொடப் போறீங்க…” என்றாள்.

 

“ஹ்ம்ம், யாரும் எதுவும் சொல்ல மாட்டிங்குறீங்க. நான் என்னதான் பண்றது? என் வேலை இதுதான!” என்று பாவமான முகத்துடன் அவன் கேட்க, சிறிது நேரம் அவனின் முகத்தையே உற்று நோக்கியவள், “என்னமோ பண்ணுங்க!” என்று திரும்பி நடக்கத் தொடங்கி விட்டாள்.

 

“அட, நில்லுங்க மிஸ். ஸ்டார்லைட்!” என்று இம்முறை அவன் அவளுக்காக வைத்த பெயரைச் சொல்லி அழைக்க, ஆச்சரியமாக அவனை நோக்கினாள் இரா.

 

யாரும் அழைத்திடாத பெயரல்லவா! அதுவும், அப்பெயரின் பொருள்தான் அவளுக்கு மேலும் ஆச்சரியத்தை அளித்தது.

 

“ஸ்டார்லைட்?” என்று அவள் முணுமுணுக்க, “ஏன் நல்லா இல்லையா? ஆனா, எனக்கு நல்லா இருக்கே.” என்று அவன் உற்சாகமாக பேச ஆரம்பித்து விட்டான்.

 

அவள் பேசாதபோதே, அத்தனையாக பேசுபவன், சந்தர்ப்பம் கிடைக்கும்போது பேசாமல் விடுவானா என்ன?

 

இம்முறை அவள் எதுவும் பேசவில்லை. அந்தப் பெயர் அவளுள்ளும் ஏதோ மாற்றத்தை மெதுவாக, மிக மெதுவாக ஏற்படுத்திக் கொண்டிருப்பதைக் கையாளாகாத்தனத்துடன் உணர்ந்து கொண்டிருந்தாள்.

 

அவள் மீண்டும் அவளின் கூட்டிற்குள் சென்று விட்டதை உணர்ந்த அத்வைத்தோ, அவள் கேட்காத காரணத்தை அவனே கூறினான்.

 

“வந்த வேலை முடியாம, எதுக்கு வந்தேன்னே தெரியாம, ஒருவித எரிச்சல்ல சுத்திட்டு இருந்தப்போதான், உன்னை முதல் முறையா பார்த்தேன். பார்த்ததுமே ஒரு ஸ்பார்க்… எதுக்குன்னு தெரியாம சுத்திட்டு இருந்தவனுக்கு, ‘இவதான் நீ இங்க வந்ததுக்கான காரணம்’னு சொல்ற மாதிரி இருந்துச்சு. அப்போ உன் பெயர் வேற எனக்கு தெரியாதா… அதான், நானே உனக்கு ‘ஸ்டார்லைட்’னு பெயர் வச்சுட்டேன்.” என்று அவனின் மனதையும் லேசாக உணர்த்தி இருந்தான் அத்வைத்.

 

எதைத் தவிர்க்க வேண்டும் என்று நினைத்து ஓட எண்ணினாளோ, அது நடந்தே விட, சொல்லத் தெரியாத உணர்வலைக்குள் சிக்கிக் கொண்டவளாக, அமைதியாக நடந்தாள் இரா.

 

‘ஹ்ம்ம், இப்போதான் கொஞ்சமா பேசினா… அதுக்குள்ள உன் திருவாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காம, எதையோ பேசி திரும்ப அவளை ஆஃப் பண்ணிட்ட.’ என்று தன்னைத்தானே திட்டிக் கொண்ட அத்வைத், 

 

“என்ன லைட்டு உடனே டிம்மாகிடுச்சு? இருட்டுல இருந்தாதான் பிரகாசமா எரியுமோ?” என்று அவன் ஒரு விதத்தில் கேட்க, அதை அவள் எவ்வாறு புரிந்து கொண்டாளோ, ஒரு விரக்தி சிரிப்பை மட்டுமே எதிர்வினையாக்கினாள்.

 

அவளின் உணர்திறன் மிக்க பகுதியை தன் பேச்சினால் தொட்டு விட்டதை உணர்ந்தவனோ, உடனே பேச்சை மாற்றி விட்டான்.

 

“சரி நம்ம பெர்சனலை அப்புறமா பேசிக்கலாம். இப்போ ப்ரோஃபெஷனலா பேசுவோமே.” என்று அவன் கூற, “உங்க எந்த கேள்விக்கும் பதில் சொல்றதா இல்ல.” என்று திட்டவட்டமாக மறுத்தாள்.

 

“இப்படி கேட்டவுடனே மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டா எப்படி மூவ் பண்றதாம் ஸ்டார்லைட்?” என்று அவனும் வினவ, “ம்ச், முதல்ல என்னை அப்படிக் கூப்பிடுறதை நிறுத்துங்க.” என்றாள் கண்களை மூடிக்கொண்டு.

 

“ஏன்? நான் அப்படிக் கூப்பிடுறது உன்னை டிஸ்டர்ப் பண்ணுதா ‘ஸ்டார்லைட்’?” என்று அவளருகே வந்து மென்குரலில் வினவினான் அத்வைத்.

 

ஏற்கனவே, அவனால் பாதிப்பிற்குள்ளான அவளின் இதயமோ, இப்படி மென்குரலில் பேசுபவனிடம் மயங்காமல் இருந்தால்தானே அதிசயம்?

 

அவளின் உணர்வுகளின் மீதே கோபம் கொண்ட வஞ்சியவளோ, அதே கோபத்தைக் கண்களில் தேக்கி வைத்துக் கொண்டு விழிகளைத் திறக்க, நல்ல பையனாக தள்ளி நின்று கொண்டான் அத்வைத்.

 

“எதுக்கு இப்படி பிஹேவ் பண்றீங்க?” என்று இரா பல்லைக் கடித்துக் கொண்டு வினவ, “நான் என்ன பண்ணேன்?” என்று அப்பாவி வேடம் தரித்து வினவினான் அந்த மாயவன்.

 

அவனிடம் கோபத்தைக் கூட காட்ட பிடிக்காதவளாக, அங்கிருந்து தனியே கிளம்ப முற்பட, “அட, என்னைத் தனியா விட்டுட்டு எங்கப் போற?” என்று கவனமாக அவளுக்கான பெயரை உச்சரிக்காமல் அவன் வினவினான்.

 

“நான் எங்கயோ போறேன், உங்களுக்கு என்ன?” என்று அவனைத் திரும்பியும் நோக்காமல், அவளின் பாதையில் கவனத்தை செலுத்தியபடி அவள் கூற, “எது? எனக்கென்னவா? உங்க ஊரைப் பத்தி தெரிஞ்சும், இந்த நேரத்துல என்னைத் தனியா விட்டுட்டுப் போறியே?” என்று கேட்டுக் கொண்டே, அவளைப் பின்தொடர்ந்தான்.

 

அதில், ஒருநொடி அவனைத் திரும்பி முறைத்தவளோ, “இந்த நேரத்துல, தனியா கிளம்பி வரத் தெரிஞ்ச உங்களுக்கு, போக மட்டும் துணை வேணுமா?” என்றாள்.

 

‘உன் துணை என் வாழ்க்கை முழுக்க வேணும்!’ என்று சொல்லத் துடித்த வாயை வெகுவாகக் கட்டுப்படுத்தியவனோ, அவளைப் பாவமாகப் பார்த்து வைத்தான்.

 

அவளோ ஒரு பெருமூச்சுடனும், “பேசாம வரணும்.” என்ற எச்சரிக்கையுடனும் அவனின் கோரிக்கைக்கு செவி சாய்த்தாள்.

 

சிறிது தூரம்தான் நடந்திருப்பார்கள், அதற்குள் அத்வைத், “ஆமா, உங்க ஊர்ல எதுக்கு ஏழு மணிக்குள்ள எல்லாரும் வீட்டுக்குள்ள அடைஞ்சுடுறாங்க?” என்று வினவ, அவனை முறைத்தாள் இரா.

 

“ஓஹ் சாரி சாரி…” என்றவன் சில நொடிகளில், “இஸ்க் இஸ்க்…” என்று சத்தம் கொடுக்க, “இப்போ என்ன?” என்று லேசாக எட்டிப் பார்த்த எரிச்சலுடன் வினவ, “நானெல்லாம் பேசாம இருந்தா, என்னாலேயே ஏத்துக்க முடியாது. இதோ, பாதி தூரம் வந்துட்டோம். இன்னும் கொஞ்சம்தான? அதுவரை பேசிக்கிறேனே?” என்று வார்த்தையால் மட்டுமல்ல விழிகளாலும் கெஞ்ச, அதை நிராகரிக்கும் மனமின்றி, “என்னமோ பண்ணுங்க!” என்று திரும்பி விட்டாள்.

 

“ஷப்பா, இப்போதான் நிம்மதியா இருக்கு. அதே மாதிரி, அந்த ப்ரோஃபெஷனல் மேட்டருக்கும் போனா போகுதுன்னு ஓகே சொல்லேன்.” என்று கூற, கோப மூச்சுடன் ஏதோ பேச வந்தவளை தடுத்தவன், “பிளீஸ்… இது ஒண்ணே ஒண்ணு. நானும் ஒரு வாரமா முக்கிட்டு இருக்கேன், ஒருத்தர் கூட வாயே திறக்கல.” என்று மீண்டும் அதே அப்பாவி பாவனையில் கூற, “என்னைப் பார்த்தா மட்டும் இளிச்சவாயி மாதிரி இருக்கா?” என்றாள் அவள் கோபத்துடன்.

 

“எப்படி இருக்குன்னு சொன்னா, நீ கோபப்படுவ. நமக்கு எதுக்கு அந்த விஷயம்?” என்று தோளைக் குலுக்கியவன், “பிளீஸ்…” என்று கெஞ்ச, “இதுதான் லாஸ்ட்!” என்றபடி முன்னால் திரும்பி விட்டாள்.

 

“ஆமா ஆமா, இதுதான் லாஸ்ட்.” என்றவன், “சரி அந்த எழு மணி ரகசியம் என்ன?” என்று கேட்க, “ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, இந்த ஊரு மாந்திரீகம், தாந்த்ரீகம் மாதிரியான விஷயங்களுக்கு ரொம்ப பாப்புலரா இருந்துச்சு. வேற வேற ஊர்லயிருந்து மக்கள் மட்டுமில்லாம, மந்திரவாதிகளும் இங்க வருவாங்க. இந்த ஊருக்கே அப்படியொரு மந்திர சக்தி இருந்தந்துச்சு. ஏதோ ஒரு காரணத்தால, இந்த ஊரோட மந்திர சக்தி மொத்தமா அழிஞ்சுடுச்சு. அதுக்கப்புறம் இங்க மாந்திரீகம், தாந்த்ரீகம் எதுவும் வேலை செய்யல. அதையும் மீறி, சிலர் மந்திரங்களை பிரயோகிக்க, அதனால ஊருக்குள்ள பல பிரச்சனைகள் ஏற்பட்டுச்சு.” என்றவள் சிறு இடைவெளி விட்டு,

 

“அதனால ஊருக்குள்ள பல கட்டுப்பாடுகள் கொண்டு வந்தாங்க. அதுல ஒண்ணுதான், ஏழு மணிக்கு எல்லாரும் வீட்டுக்கு போயிடனுங்கிறது.” என்றாள்.

 

அவள் கூறியவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்டவனோ, “இதெல்லாம் உண்மைனு நீ நம்புறியா?” என்று வினவ, “ஏன், நீங்க நம்பலையா?” என்று பதில் கேள்வி கேட்டாள் அவள்.

 

“ஜர்னலிஸ்ட்டாச்சே, எதையும் கண்ணால பார்க்கிற வரை நம்ப மாட்டேன்.” என்றவன், “இதோ, என் இடம் வந்துடுச்சு. சொன்ன சொல் தவற மாட்டேன்.” என்று அவளிடம் விடைபெற்றவன், விடுதியை நோக்கி நடக்க, “நம்பாம இருக்கிறதுதான் உங்களுக்கு நல்லது!” என்று முணுமுணுத்தாள் அவள்.

 

திடீரென்று திரும்பியவன், “ஆமா, நீ எப்படித் தனியா போவ? நான் துணைக்கு வரவா?” என்று வினவ, ‘ஆளை விடு’ என்பது போல திரும்பி நடக்க ஆரம்பித்து விட்டாள் அவள்.

 

“சரி சரி, நான் ஃபாலோ பண்ணி எல்லாம் வரமாட்டேன். மெதுவா போ.” என்றவனின் சிரிப்பு சத்தம் அவளை அடைய, அவளின் இதழ்களும், அவளின் அனுமதியின்றி விரிந்தன.

 

இருவரும் தனிமையில் இருந்ததாக எண்ணிக் கொண்டிருக்க, இருளுக்கும் கண்கள் உண்டு என்பதை மறந்து விட்டனர்.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
24
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்