முகவுரை
இடம் : பூமி
ஆண்டு : 2037
இந்த உலகம், பல இயற்கை பேரழிவுகளுடன் மனிதனின் பேராசையாலும் கவனக்குறைவாலும் உண்டான செயற்கை அழிவுகளையும் சந்தித்த பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக புதிய இயல்பிற்கு திரும்பி வரும் காலம் தான் 2037.
‘உலகப்போர்’ என்று வரையறுக்க முடியாதவாறு ஆங்காங்கு நிகழ்த்தப்பட்ட மாதிரி ‘உயிரிப்போர்’ மூலம் மனித சக்தியே பாதியாக குறைந்து போன காலம் இது. ‘உலகின் சமநிலையைக் காக்க’ என்று இப்போதும் ஒரு சில ‘இல்லுமினாட்டி’ குழுக்கள் இதற்கு சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு தான் இருக்கின்றனர்.
2020 முதலே அடுத்தடுத்த தாக்குதல்களில் துவண்டு போய் சோர்வுற்ற மனித இனம், சற்றே சுதந்திர காற்றை சுவாசிக்கும் காலம் இது. இதற்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை சரிகட்டி பல நாடுகள் முன்னேற்ற பாதையில் பயணிக்க துவங்கிய காலகட்டம்.
இக்காலத்தில், உலகை இரு பெரிய மாகாணங்களாக பிரித்து, கிழக்கில் இருக்கும் நாடுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து ‘கிழக்கு மாகாணம்’ என்றும், மேற்கு நாடுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து ‘மேற்கு மாகாணம்’ என்றும் அழைக்கின்றனர். மாகாணங்களாக பிரித்தாலும், அந்தந்த நாட்டில் அவரவர்களின் ஆட்சி தான் நடத்தப்பட்டு வருகிறது.
சர்வேத அளவில் கலந்துரையாடல்களுக்கு கூடும்போது மட்டும் இரு மாகாணங்களின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அவர்களின் முன்னிலையில் சில பல முக்கிய கலந்துரையாடல்கள் நிகழ்த்தப்படும்.
இந்த பேரழிவுகளுக்குப் பின்னர், 2027இல் நடந்த சர்வதேச அமைப்பின் முதல் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் சில… எந்தவொரு நாடும் பிற நாடுகளின் மேல் எந்த வகையிலான போரையும் தொடுக்கக்கூடாது. பொருளாதார நிலையிலும், மருத்துவ வசதியிலும் பின்தங்கிய நாடுகளுக்கு மற்ற நாடுகள் உதவி செய்ய வேண்டும். அனைத்து நாடுகளும் அமைதியையும் சமாதானத்தையும் கடைபிடிக்க வேண்டும்.
இவையெல்லாம் இன்றளவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு ஒவ்வொரு கூட்டங்களிலும் அதன் சாதக பாதகங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
இதோ பத்து வருடங்கள் வெற்றிகரமாக முடிந்து பதினோராவது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் அமைப்பில் முக்கிய விவாதப் பொருளாக விளங்கியது, ‘ட்ரோன் வார்ஃபேர்’.
ட்ரோன் என்பது சிறிய அளவில் இருக்கும் ஆளில்லா வானுர்தி. இவற்றின் பயன்கள் இராணுவம் முதல் அடிப்படை பொருள் விநியோகம் வரை நீண்டிருக்கின்றன. இத்தகைய ட்ரோன்களைக் கொண்டு கடந்த ஆறு மாதங்களில் உலகின் பல்வேறு மூலைகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பது தான் தற்போது பலர் பேசும்பொருளாக மாறியுள்ளது.
இந்த ட்ரோன் தாக்குதல்கள் யாரால், யாரின் மீது நடத்தப்பட்டது என்பதை விசாரித்துக் கொண்டே இருக்கின்றனர். ஊடகங்களும் தொடர்ந்து இதே பிரச்சனையையே கிளற, ஒவ்வொரு நாடும் பிற நாடுகளை குற்றம்சாட்ட ஆரம்பிக்க, இதற்கு முடிவு தான் கிட்டிய பாடில்லை!
மாதங்கள் கழிய, இந்த பிரச்சனை கிழக்கு மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு இடையே பனிப்போரை ஏற்படுத்த, ‘மூன்றாம் உலகப்போர்’ மூண்டுவிடுமோ என்ற விவாதங்களையும் ஊடகங்கள் பரப்பிவிட, பிரச்சனை மேலும் பெரிதாவதற்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவசரமாக கூட்டப்பட்டது 2037ஆம் ஆண்டிற்கான கூட்டம்.
(பனிப்போர் உண்டாவதற்கான காரணம் இந்த ட்ரோன் தாக்குதல்கள் என்று பொதுவாக கூறிவிட முடியாது. இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டனர் என்று வேண்டுமானால் பொருள் கொள்ளலாம்!)
பல விவாதங்களுக்குப் பின்னர், உரிய உரிமம் இல்லாமல் ட்ரோன் போன்ற ரோபோக்களை பயன்படுத்த கூடாது என்றும், குறிப்பிட்ட சில துறைகளுக்கு மட்டுமே ட்ரோன்களுக்கான உரிமம் வழங்கப்படும் என்றும் அறிக்கை வெளியிடப்பட, அனைத்து நாடுகளும் இதற்கான சட்டங்களை இயற்றின. அதன்படி உரிய உரிமம் இல்லாமல் ட்ரோன்களை வைத்திருப்பவர்களின் மேல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. (எடுக்கப்பட்டதாக கணக்குகள் காட்டப்பட்டன)
ஆனாலும், சட்டங்கள் ஏழைகளுக்கு தான் என்பன போல, அதிகார வர்க்கத்தில் இருக்கும் பணக்காரர்கள் சிலர் சட்டங்களை மீறி ட்ரோன்களை பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றனர்.
என்ன தான் உலக அமைதி, சமாதானம் என்று சொல்லிக்கொண்டாலும், இரு மாகணங்களுக்கு இடையேயான பனிப்போர் மட்டும் முடியும் பாடில்லை. ஏதாவது ஒரு வழியில் மற்ற மாகாணத்தை சேதப்படுத்த வேண்டும் என்று தீவிரமாகவே இருந்தனர்.
மாகாணத்திற்குள்ளே இருக்கும் நாடுகளுக்கு மத்தியிலும் ‘பனிப்போர்’ நடந்து கொண்டிருந்தாலும், மாகாணங்களுக்கு இடையேயான பனிப்போரே இங்கு முன்னுரிமை பெற்றது!
*****
2037இல் இந்தியா…
2020ஆம் ஆண்டு முதலே பல சறுக்கல்கள் மற்றும் வீழிச்சிகளை சந்தித்த இந்தியா, தற்போது மெல்ல அவைகளிலிருந்து மீண்டு வருகிறது.
பெருமளவு மாறினாலும், மாறாமல் இருப்பவைகளும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. காலம் செல்ல செல்ல, பணக்காரர்கள் வசதியடைந்து கொண்டே இருக்கின்றனர். ஏழைகள் இன்னும் ஏழைகளாகிக் கொண்டே இறக்கின்றனர்.
நாட்டில் இன்றும் இலஞ்சம், ஊழல் முதலியவை இருந்தாலும், முன்னிருந்த அளவிற்கு இல்லை. அடுத்த மிகப்பெரிய பிரச்சனையான ‘சுற்றுசூழல் மாசு’ முதலியனவும் பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளால் களையப்பட்டன. இந்த கண்டுபிடிப்புகளால் உண்டாகும் விளைவுகள் ஆராயப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்படத்தக்கது.
கல்வி, அறிவியல் ஆகிய துறைகளில், இடையில் இருந்த மந்தநிலை குறைந்து தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.
இந்தியா தற்போது கிழக்கு மாகாணத்தில் இருக்கிறது. சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும் இதில் அடக்கம்.
நம் கதை பெருமளவில் இந்த கிழக்கு மாகாணத்தில் நடப்பது போன்று தான் சித்தரிக்கப்படவுள்ளது.
(இதிலிருந்து சில துணுக்குகள் கதைக்கு தேவைப்பட்டதாலும், கதை 2037இல் நடக்க இருப்பதால், உலகம் 2037இல் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றிய சிறிய அறிமுகத்திற்காகவும் மட்டுமே இந்த முகவுரை.)
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
+1