அத்தியாயம் 3
புவித் கூறிச் சென்றதில் திகைத்து நின்ற அகனிகா தனக்கு வந்த அலைபேசி அழைப்பில் சுயம் மீண்டாள்.
“சொல்லுங்க சுகன்” என்றவள், அவன் சொல்லிய செய்தியை கேட்டதும், முகத்தில் எவ்வித சலனமுமின்றி, “ஸ்பாட் எங்க?” எனக் கேட்டாள்.
அவளின் அதிர்வின்றிய குரலில் சுகன் தான் அதிர்ந்து நின்றான். உணர்வுகளற்ற அவளின் குரலும், முகமும் பழக்கமாயிற்றே! நொடியில் மீண்டிருந்தான்.
என்ன தான் காவல்துறை அதிகாரியாக இருப்பினும், ஒவ்வொரு முறையும் ஒரு உயிரின் இறப்பை கையாளும் போது சக மனிதனாக மெல்லிய வருத்தம் எழுவது தான் இயல்பு. ஆனால் அகனிகாவிடம் எவ்வித உணர்வும் பிரதிபலித்திடாது.
“ஓகே… லொகேஷன் ஷார் பண்ணுங்க” என்றவள், புவித் அப்பொழுதுதான் குளியலறைக்குள் நுழைந்திருக்க, மற்றொரு அறைக்கு சென்றாள்.
அந்நேரம் விரைந்து செல்ல வேண்டுமென்ற எண்ணம் மட்டுமே இருந்திட, நினைவில்லாது அவ்வறைக்குள் வந்துவிட்டால். வந்த பின்னரே அவ்வறையின் வாசம், சுவற்றில் ஆங்காங்கே மாட்டியிருக்கும் புகைப்படம், இருவரும் இணைந்து கொட்டமடித்த நிகழ்வுகள் என பல நினைவுகளைத் தூண்டிவிட… சில வருடங்களாகவே இறுகிப் போயிருப்பவள் தன்னுடைய திடம் தொலைத்து… அதிலும் புகைப்படங்களில் தன்னுடன் இணைந்திருக்கும் நபரின் மலர்ந்த சிரிப்பில் தன்னுடைய ஜீவன் வற்றியவளாக, பெருங்குரலெடுத்து வெடித்து கதறினாள்.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் அழுகை என்றாலும், வீட்டை நிறைத்த அவளின் ஒலியில் அனைவரும் என்னவென்று பதறி கூடத்தில் கூடிவிட்டனர்.
இளங்கோ மற்றும் சிதம்பரத்திடம் தொழில் பற்றி உரையாடிவிட்டு அப்போது தான் மாடியேறிக் கொண்டிருந்த விதார்த், வேகமாக சத்தம் வந்த அறைக்குள் நுழைந்தான்.
அங்கு அகனிகாவின் நிலைகண்டு துடித்தவன்,
“டேய் அகா” என்று அவளின் பக்கம் செல்ல, தரையில் மண்டியிட்டு கைகளில் முகம் புதைத்து கதறிக் கொண்டிருந்தவள், தாவி கழுத்தோடு அவனை கட்டிக்கொண்டாள்.
“மாமா… மாமா…” என்று அரற்றியவள், “நான்… நான் எதுவும் வேணும்னு பண்ணல மாமா. அன்னைக்கு அப்படிலாம் நடக்கும் எனக்கே தெரியாது மாமா” என்று மீண்டும் மீண்டும் பிதற்றியவளாக சொன்னதையே சொல்லி அழுதாள்.
அனைவரும் மேலே வந்துவிட்டிருந்தனர்.
மகளின் அழுகையில் கேவல் வெளிப்பட்டாலும், அவளின் அருகில் கூட செல்லாது சந்தியா நின்றிருந்தார். அவர் மட்டுமல்ல மற்றவர்களுமே அவளின் பக்கம் சென்று தேற்றிட முயலவில்லை.
அகிலா உணர்வற்று பார்த்துக் கொண்டிருந்தார். என்ன தான் கோபம், வருத்தமிருந்தாலும், ஒரு உயிர் வலியில் துடிக்கும் போது ரசிக்கும் குணம் அவருக்கில்லை.
“இப்போ என்னாச்சு? ஒண்ணுமில்லை. என்ன நடக்கணும் இருக்கோ அது நடந்து, முடிஞ்சு, இந்த வீடும் அந்த வலியோடு வாழ பழகிடுச்சு. எதையும் மாத்தமுடியாது. கிராஸ் பண்ணி போகத்தான் வேணும்” என்று அவளின் முதுகில் தட்டிக்கொடுத்து நிதானமாக எடுத்துக் கூறிய விதார்த்துக்குமே கண்கள் கலங்கிவிட்டிருந்தது.
சிதம்பரம் இருவரின் அருகில் சென்று, நின்றவாறே தன்னுடைய மகனின் தோளில் கை வைத்தார்.
“அப்பா!” அவனது குரலிலும் மெல்லிய கரகரப்பு.
“அகா அழுகையை நிறுத்துறன்னு நீயும் சேர்ந்து அழுதுடுவபோல” என்று மனதின் ரணங்களையெல்லாம் தள்ளி வைத்தவராக, சூழலை மாற்றும் பொருட்டு கேலியாக பேசினார்.
“நல்லா கேளுங்க மாமா” என்று வர்ஷினி தண்ணீர் கொண்டு வந்தாள்.
“இதுதான் நீங்க அவளை ஆறுதல் படுத்துறதா?” என்றவள், “அவள் முகத்தை துடைச்சு, தண்ணி குடிக்க வைங்க” என்றாள்.
“வர்ஷா!”, விதார்த். அவனுமே அவளின் கதறலில் துவண்டிருந்தான்.
“இப்போ வர்ஷாக்கு என்ன? எல்லாரும் கலங்கி நின்னா ஆச்சா?” என்றவள், “காலையில யாருக்கும் வேலையே இல்லையா? இங்கவே நின்னுட்டிங்க?” என்று மற்றவர்களைப் பார்த்து வினவியதோடு, “அவ அழுகைக்கு எல்லாரும் ஓடி வந்ததும், நடந்தது புரிஞ்சு அவ மேலிருக்க தேவையில்லாத கோவமெல்லாம் மறந்துட்டிங்க நினைச்சேன். ஆனால் யாரும் இங்க மாறுல. மாறப்போறதுமில்லை… அப்புறம் இங்க நின்னு என்ன வேடிக்கை. போங்க…” என்று சந்தியாவை அழுத்தமாகப் பார்த்துக் கூறிக்கொண்டே அனைவரையும் விரட்டினாள்.
பவானி முதல் ஆளாக அகிலாவைக் கூட்டிக்கொண்டு சென்றிருந்தார்.
சந்தியா திரும்பி நடக்க,
“பெத்த பொண்ணுங்கிற எண்ணம் கொஞ்சமும் இல்லைல உங்களுக்கு?” என்ற வர்ஷினியின் கேள்வியில், நடை தடுமாறியபோதும் திரும்பிப்பாராது கீழே சென்றிருந்தார் சந்தியா.
“பார்த்துக்கோம்மா” என்று சிதம்பரம் சென்றிட, “தைரியமெல்லாம் போலீஸ் ட்ரெஸ் போட்டாதான் போல” என்ற இளங்கோ, “மீண்டுவர முயற்சி செய் அகா” என இன்னமும் விதார்த்தின் தோளில் விசும்பிக் கொண்டிருந்த அகனிகாவின் தலையில் ஆதுரமாய் வருடிச் சென்றார்.
விதார்த் அகனிகாவின் முதுகை தட்டிக் கொடுத்தபடி இருக்க, அவளின் அழுகையும் நிற்கவில்லை, இவனின் தவிப்புகளும் குறையவில்லை.
“இது ஆவரதுக்கில்லை” என்ற வர்ஷினி, புவித்தை அழைத்து வரச் சென்றாள்.
அறையின் கதவு திறந்திருக்க, தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள். அப்போதுதான் தேவித் குளித்து முட்டி வரையிலான நீண்ட ஷார்ட்ஸும், பெரிய சைஸ் டி ஷர்ட்டும் அணிந்து, துவாளையால் தலை துவட்டியபடி வெளியில் வந்தான்.
நீரின் சத்தத்தில் மனைவியின் கதறல் அவனுக்கு கேட்கவில்லை என புரிந்துகொண்டாள்.
“என்ன புது ஆளுங்க எல்லாம் என் ரூமுக்கு என்னைத் தேடி வந்திருக்காங்க” என்று கண்ணாடி முன் நின்றான்.
“யாருடா புது ஆளுங்க” என்று வர்ஷினி எகிற,
“பேசாம இருக்கவங்கலாம் புது ஆளுங்கதான்” என்று சிரித்தான்.
“அப்புறம் என்னை வம்பு பண்ணலாம்… அங்க ரெண்டும் உட்கார்ந்து எழுதிட்டு இருக்கு. வந்து என்னன்னு பாரு” எனக்கூறி முன் நடந்தாலும், “உன் பொண்டாட்டி இதிலிருந்து வெளியவே வரமாட்டாளாடா?” எனக் கேட்டிருந்தாள்.
“நாம எல்லாம் செய்தியா கேட்ட விஷயத்தை அவள் நேரில் பார்த்திருக்காள். எப்படி மறக்க முடியும்” என்றவனின் தொண்டை அடைத்து அவனது வலியை காட்டிக்கொடுத்தது.
வர்ஷினியின் நடை நின்று பின்னால் வந்தவனின் புறம் திரும்பியது.
“அருஷ்…”
“ஹேய் அண்ணி… அம் ஓகே” என்று பட்டென்று புன்னகைத்தவன், “எங்க?” என்றான்.
வர்ஷினி அவ்வறையை கை காட்டிட,
“இந்த ரூமுக்கு எதுக்கு வந்தாள். பூட்டி வைக்கலையா?” எனக் கேட்டபடி அங்கு விரைந்தான்.
“நேத்து சுத்தம் செய்யலாம்னு மாலதி அக்கா திறந்தாங்க. பூட்ட மறந்திட்டங்கா போல. கீ எங்க வச்சாங்க தெரியல. நானும் தேடிப் பார்த்திட்டு, இன்னைக்கு வேலைக்கு வந்ததும் கீ வாங்கி லாக் பண்ணிக்கலாம் விட்டுட்டேன். ஒரு சின்ன விஷயம் திரும்ப அவளை இப்படி பார்க்க வைக்கும் நினைக்கல” என்றாள்.
அதுவரை தன்னை திடமாகக் காட்டிக்கொண்ட வர்ஷினிக்குமே சட்டென்று கண்ணீர் வந்துவிட்டிருந்தது.
“ச்சூ… நீங்களும் ஸ்டார்ட் பண்ணாதீங்க அண்ணி” என்று நெற்றியை தேய்த்துக் கொண்டான் புவித். மலைப்பாக.
“முடியலடா… அவள் அப்படி அழறா… அப்பக்கூட என் மாமியார்ஸ் அண்ட் உன் மாமியார் கல்லு மாதிரி நிக்கிறாங்க” என்றாள். ஆதங்கமாக.
“தெரிந்தது தானே!” என்ற புவித், அவ்வறைக்குள் நுழைய, விதார்த்தும் தன்னுடைய கண்களை துடைத்துக் கொண்டிருந்தான்.
“அழுது முடிச்சாச்சா?”
புவித்தின் குரலில் தலை நிமிர்த்திப் பார்த்தான் விதார்த்.
“அவள் அழுதா நாலு தட்டு தட்டி மீட்காம, நீங்களும் கூட சேர்ந்து அழுதிட்டு இருக்கீங்க” என்ற புவித், “கனி” என்றழைத்தான்.
அவளிடம் அசைவென்பது கொஞ்சமும் இல்லை. விதர்த்தின் தோள் மீதே மயங்கியிருந்தாள்.
விதார்த் அவளின் கன்னம் தட்டவும்,
“அவள் தான் அழுதா ப்ரீத் ஹோல்ட் பண்ணுவா தெரியும்ல” என்ற புவித், மனைவியை கையில் தூக்கிக்கொண்டான்.
விதார்த் அவனின் பின்னால் வர,
“ஆபீஸ் போகலையா நீங்க?” எனக் கேட்டு விதார்த் மற்றும் வர்ஷினியை அனுப்பி வைத்துவிட்டு, தன்னுடைய அறைக்குள் நுழைந்து காலால் கதவினை மூடினான்.
மனைவியை படுக்கையில் கிடத்தி, அவளின் கன்னம் தட்டினான். முகத்தில் நீர் தெளித்து, இதயப் பகுதியை அழுத்திக் கொடுத்தான். எப்பொழுதும் இதுமாதிரியான தருணங்களில் இவ்வகை முதலுதவிக்கே கண் திறந்திடுவாள். இன்று கொஞ்சமும் அசைவின்றி இறக்கவும், படபடக்கும் மனதை இழுத்துப் பிடித்து அவளை எழுப்பிட முயற்சி செய்தான். பலனில்லை.
அதற்குமேல் காலம் கடத்திடக் கூடாதென்று மிதுனுக்கு அழைத்தான்.
“சொல்லுடா?”
“எங்க இருக்க? நான் காலேஜ் போறதுக்குள்ள வீட்டுக்கு வந்துடுவேன் சொன்ன?” என்ற புவித், மிதுன் பதில் சொல்வதற்கு முன், “மயங்கிட்டாடா. ஏழமாட்டேங்கிறா” என்றான்.
“எவ்வளவு நேரமாச்சு?”
“ரொம்பலாம் ஆகல. கிட்டத்தட்ட த்ரீ இயர்ஸ் ஆச்சு. இதுபோல நடந்து” என்றான் புவித்.
“நீ கூட இருந்தும் அவ்வளவுக்கு அழ விட்டிருக்க அவளை” என்ற மிதுன், “நடுவுல ஒரு வேலை. சோ, டிலே ஆகிடுச்சு. டென் மினிட்ஸ். வந்துடுவேன். நீ சிபிஆர் ட்ரை பண்ணு” என்றான்.
“வாட்!”
“என்னடா?” என்ற மிதுன், “அவள் உன் பொண்டாட்டி தானே?” என்றான்.
“ஒரு அண்ணன் மாதிரியாடா பேசுற நீ?”
“அவளுக்கு அண்ணனா இருந்தாலும்… நான் டாக்டர் டா. இப்போ டாக்டரா மட்டும் தான் நடந்துக்க முடியும்” என்ற மிதுன், “ஜஸ்ட் கிஸ் பண்ற மாதிரி, அவளுக்குள்ள உன் பிரீத் இன் பண்ணுடா” என்று சொல்லி வைத்திட்டான்.
புவித் அதிர்ந்து நின்றிருந்தான்.
மனைவி தான். அவன் காதல் மொத்தமும் அவளுக்கானது தான். அவளை தொட்டிருக்கிறான். உரிமையாக பேசியிருக்கிறான். அவளை தன்னுடைய கைவளைவில் வைத்துக்கொண்டு உறங்கியிருக்கின்றான். ஆனால் திருமணமாகி ஒரு வருடம் சென்ற நிலையிலும் சிறு முத்தத்திற்கும் அவர்களிடம் இடமில்லை.
அவளுக்காக அவனும், அவனுக்காக அவளும் மனதில் மட்டுமே நெருக்கம் கொண்டு வாழ்கின்றனர்.
“ஊஃப்…” கைகளை இடைக்குற்றி, காற்றினை இதழ் குவித்து ஊதியவன்,”கனி” என்று மீண்டும் ஒருமுறை அவளின் கன்னம் தட்டி எழுப்ப முயற்சித்தான்.
அசைவற்று கிடப்பவளின் நிலை மேலும் பாதிப்பிற்குள்ளாகக் கூடாதென்று நினைத்தவன்,
கண்களை மூடிக்கொண்டு அவளின் முகம் நோக்கி தன் முகத்தை கொண்டுச்சென்றான்.
இருவரின் மூக்கும் முட்டி நிற்க, உதடுகள் சேரும் கணம்…
“என்னாச்சு மாமா?” என்று கண் திறந்திருந்தாள் அகனிகா.
‘காலம் முழுக்க கல்யாணம் ஆகியும் நீ சிங்கிள் தான்டா. ஒரு மருத்துவ முத்தத்துக்கு கூட உனக்கு கொடுத்து வைக்கல.’ புவித் மனதிற்குள் புலம்பியவனாக நிமிர்ந்து நின்றான்.
“என்னாச்சு… ஒன்னும் ஆகல… ஒன்னுமே ஆகல” என்று கைகள் விரித்தவன், “ஆர் யூ ஓகே?” என்றான்.
“ம்ம்… அது சடனா” என்று விளக்கமளிக்க வந்தவளை கை காட்டி தடுத்திருந்தான்.
“சொல்றதுக்கோ கேட்கிறதுக்கோ ஒண்ணுமில்லை. உன்னை நீயே ஸ்ட்ரெஸ் பண்ணிக்கிறதை நிறுத்தினா போதும்” என்றவன், “எனக்கும் ஆறுதல் நீ மட்டும் தான்டி” என்றான்.
“மாமா…”
“சும்மா மாமா மாமான்னு ஒத்த வார்த்தையில சுருட்டாதடி” என்றவன், உடை மாற்றும் அறைக்குள் நுழைந்துகொண்டான்.
மீண்டும் சுகனிடமிருந்து அழைப்பு.
நெற்றியிலே தட்டிக்கொண்டவள்,
“ஆன் த வே சுகன்” என்று அழைப்பத் துண்டித்து வேகவேகமாக குளித்து காக்கி உடையில் மிடுக்காய் தயாராகி நின்றாள். சற்று முன்னர் அழுத்திய பெரும் தவிப்புகளில் மயங்கிக் கிடந்தவள் இவளா எனும் தோற்றத்தில் கம்பீரமாய் கண்ணாடி முன்பு நின்று தன்னை சரிபார்த்திருந்தாள்.
புவித் கல்லூரிக்கு செல்ல ஏதுவாக கிளம்பி வர,
“என்னை ட்ராப் பண்ண முடியுமா மாமா?” எனக் கேட்டாள்.
“உனக்கு ஓகேன்னா… எனக்கும் ஓகே” என்றான்.
“ம்ம்” என்றவள் நகர, அவளின் கைபிடித்து தடுத்து நிறுத்தினான்.
அவள் என்னவென்று கேட்கும் முன்பு, குட்டியான கருப்பு நிற ஸ்டிக்கர் பொட்டு ஒன்றை அவளின் இரு புருவங்களுக்கு மத்தியில் ஒட்டி விட்டான்.
“இப்போ போ” என்றவன், கண்ணாடி முன் திரும்பி தன் தலை வாறிட, அவள் அவனை பார்த்து நின்றாள்.
“என்ன?” என்றவனிடம் அவள் பதில் சொல்லுமுன், மிதுன் கதவினை தட்டிவிட்டு உள் வந்தான்.
“டேய் மச்சான்” என்று புவித் மிதுனை அணைத்து விடுக்க… அகனிகா வெளியில் சென்றாள்.
“என்னடா நீயென்னவோ சொன்ன?” என்ற மிதுனின் பார்வை தன்னைத் தாண்டிச் செல்லும் தங்கையின் மீதுதான்.
“ஓகே ஆகிட்டா” என்ற புவித், “அவளுக்கு கவுன்சிலிங் கொடுக்கணும் தோணுதுடா” என்றான்.
“உண்மையாவா?”
“ஆமாடா… எல்லார் மாதிரி அவளும் நார்மல் ஆகிடுவான்னு விட்டது தப்புன்னு தோணுது” என்ற புவித், “அவள் அதுலேர்ந்து வெளிவரவேக் கூடாதுன்னு இருக்கா” என்றான்.
“ம்ம்… நான் பேசிப் பார்க்கிறேன்” என்ற மிதுன், “ஹெவி டயர்ட் மச்சான். நீ காலேஜ் போயிட்டு வா பேசுவோம்” என்க, இருவரும் இணைந்து கீழே வந்தனர்.
புவித் உணவு மேசைக்கு செல்ல…
“வழக்கம்போல சாப்பிடலடா” என்றாள் வர்ஷினி.
“அக்கா எனக்கொரு ஆப்பிள் ஜூஸ்” என்ற மிதுன், தன்னையே பார்த்துக்கொண்டு பேச தயங்கி நிற்கும் அன்னை சந்தியாவை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை.
“என்ன அத்தை பொண்ணுகிட்ட தான் பேசக்கூடாதுன்னு இருக்கீங்க. இப்போ மகன்கிட்டவுமா?” என்ற புவித், அவரின் பதிலை எல்லாம் பொருட்படுத்தவில்லை, இரண்டு சப்பாத்திகளில் காய்கறி கலவையை வைத்து சுருட்டியவன், கையில் எடுத்துக்கொண்டவனாக வர்ஷினி மற்றும் மிதுனிடம் சொல்லிக்கொண்டு வெளியேறிவிட்டான்.
செல்வதற்கு முன் சந்தியாவிடம் பேசுங்க என்பதைப்போன்று மிதுனை காட்டிச் சென்றான்.
சந்தியாவிற்கு மகனிடம் பேச ஆசையிருந்தாலும், அவன் முகத்திற்கு நேராக அப்பட்டமாக தள்ளி நிறுத்துவான் என்று தெரிந்திருந்ததால் ஒரு பெரு மூச்சோடு அங்கிருந்து நகர்ந்திருந்தார்.
“வாடா மிதுன்… எப்போ வந்த?” என்று அகிலா வர, “கொஞ்சம் முன்ன அத்தை” என்ற மிதுனின் கன்னம் தட்டினார். ஆதுரமாய்.
“இப்போதான் வர வழி தெரிஞ்சுதாடா?” என்ற அகிலா, “ரிட்டர்ன் போற பிளானா?” எனக் கேட்டார்.
“இனி இங்க தான் அத்தை” என்ற மிதுன், “எனக்கு பிடிச்சதெல்லாம் செய்து வைப்பீங்களாம். நான் அதுக்குள்ள ஒரு குட்டித்தூக்கம் போட்டுட்டு வருவேனாம்” என்று அவரின் கன்னம் பிடித்து ஆட்டியவனாக எழுந்திருந்தான்.
மிதுன் உறங்கச் செல்வதற்கு முன்பு, தன்னுடைய மாமாக்கள் இருவரையும் பார்த்து பேசிவிட்டே அறைக்குச் சென்றிருந்தான்.
“மிதுன் மேல உங்க கோபம் போச்சா அத்தை…” வர்ஷினி கேட்க, “அவன் மேல எனக்கென்ன கோபம்? அன்னைக்கு என்னைவிட அதிகம் துடிச்சது அவன் தான்” என்ற அகிலா, “இப்போ அது எதுக்கு? மனசு பாரமாகிப்போவும்” என்றார்.
“இந்த தெளிவு அகா விஷயத்தில் ஏன் இல்லை உங்களுக்கு?” வர்ஷின் கேட்க, அகிலாவிடம் பதிலில்லை.
“இல்லாமப்போன ஒரு உயிருக்காக… இருக்க உயிரை கட்டப்படுத்தாதீங்க அத்தை” என்றிருந்தாள் வர்ஷினி.
வர்ஷினியின் கூற்று அகிலாவுக்கு பலவற்றை புரியச் செய்தாலும், அவரால் கடந்துவிட முடியாதே!
வர்ஷினி அவரையே பார்த்து நிற்க,
“பிள்ளைகளை ஸ்கூல் அனுப்பலையா நீ… ஓடு” என்று தனது வேலையில் மூழ்கிப்போனார் அகிலா.
சொல்லப்போனால் அகிலாவுக்கு அவரது பிள்ளைகளைவிட அகனிகா அதிகத்துக்கும் விருப்பமானவள். ஆனால் எல்லாம் அன்றைய நாளுக்கு பின் மொத்தமாக மாறியிருந்தது.
______________________________
தான் கையோடு சுருட்டிக் கொண்டு வந்திருந்த சப்பாத்தியில் ஒன்றை மனைவியிடம் நீட்டியவன், தான் ஒன்றை சுவைத்தபடி காரினை இயக்கிக் கொண்டிருந்தான் புவித்.
அகனிகா சப்பாத்தியையே வெறித்திருக்க…
“ஊட்டி விடணுமா?” எனக் கேட்டிருந்தான் புவித்.
“எல்லாரோட கஷ்டத்துக்கும் நான் ஒருத்திதான் காரணம்ல மாமா?” என்றாள் அகனிகா.
“ஆரம்பிச்சிட்டியா?” என்ற புவித், “நமக்குள்ள பேசிக்க இதைத்தவிர வேற ஒன்னுமே இல்லையாடி?” என்றான்.
தலை குனிந்தவளின் விழிநீர் அவளின் மடி சொட்டியது.
“எங்கப்போகணும்?” புவித்திடம் செல்ல வேண்டிய இடத்தை அவள் கூறிட, அதன் பின்னர் இருவரிடமும் பேச்சென்பதில்லை.
வரவேண்டிய இடம் வந்ததும் இறங்க முனைந்தவளின் கரம் பற்றியவன்,
“லவ் யூ கனி” என்றிருந்தான்.
குரலில் மிகுதியின் மிகுதியாய் காதல் சொட்டியது.
அகனிகா உணர்வுகளின்றி பார்த்திட,
“போ” என்று கரத்தினை விட்டான்.
அவன் விட்ட பின்னரும் கையை நீட்டியே இருந்தவள்,
“நானும்” என்றாள். மென் ஓசையாக.
“சொல்லணும் அவசியமில்லை. எனக்கு தெரியும். உன்னைப் புரியும்” என்றவன், கண்கள் சிமிட்டினான்.
இவளை கண்டதும் சுகன் அருகில் ஓடிவர, நொடியில் உடலில் மாற்றம் கொண்டுவந்தவளாக புவித்திற்கு தலையசைப்பைக் கொடுத்துச் சென்றாள்.
அவள் வந்திருந்தது அரசுப்பள்ளி.
“ஸ்கூலில் என்ன கேஸ்?” நினைத்த புவித், தோள்களை உயர்த்தி இறக்கியவனாக புறப்பட்டிருந்தான்.
பள்ளிக்கூடத்தில் பனிரெண்டாம் வகுப்பு ஆசிரியர், வகுப்பறை நாற்காலியில் இறந்து கிடந்தார்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
23
+1
1
+1
4