Loading

7. நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன் 

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த மதுராவிற்கு சட்டென்று ஒரு கரம் வந்து தன்னை அழுத்தியதும் தூக்கத்திலிருந்து தூக்கி வாரி போட எழ முயன்றவளுக்கு கண்ணை திறந்தாலும் எதிரே யார் இருக்கிறார்கள்? என்று தெரியாத அளவிற்கு கும்மிருட்டு ஒருபுறம் என்றால், கத்த முடியாத அளவிற்கு  அவளின் வாயை இறுக மூடி இருந்த வலிமையான கரங்களின் அழுத்தம், கை கால்களால் உதறித் தள்ள முயல,

அதற்குள் அவள் படுத்திருந்த மெத்தையிலிருந்து அத்தனை வேகமாக கீழே தள்ளப்பட்டிருந்தாள்.

தான் தள்ளப்பட்ட வேகத்திற்கு கண்டிப்பாக தலையில் பலமாக அடிப்பட போகிறது என்று பயத்தில் அனிச்சையாக கண்களை இறுக மூடிக் கொண்டவளுக்கு நினைத்தது போல் அடி எதுவும் பட்டிருக்கவில்லை

தனது ஒரு கையால் அவளின் வாயை இறுக மூடிருந்தவன், மற்றொரு கரத்தினால் அவளின் பின் தலையை தாங்கி தரையில் மோதாமல் காத்திருந்தான். அவனின் மூச்சு காற்று மதுராவின் நெற்றியில் விழ, அவனும் அவளோடு தான் தரையில் விழுந்திருந்தான் என்பதை கணித்தவளுக்கு ஒன்றுமே புரியாத நிலை. 

இவன் யார்?  இங்கு என்ன நடக்கிறது? என்று யோசிக்க கூட முடியாமல் மூளை வேலை நிறுத்தம் செய்ய, எதையும் உணர்வதற்கு முன்பே, கட்டிலின் அடியில்   அவ்உருவத்தினால் இழுத்து செல்லப்பட்டிருந்தாள் மதுரா.

அதற்குள் அவளின் அறைக்கு வெளியே பலரின் கால் தடங்கலின் ஓசையும், பலரின் பேச்சு சத்தமும் சிறு சிறு டார்ச் வெளிச்சங்களும்‌ பரவ,

வாயை மூடி இருந்தாலும்,  அதை மீறி “ம்ப்.ம்ப்..” என்ற சத்தம் வெளிவர,  தன் மீது உரசியும் உரசாமலும் கிடந்தவனை தன் பலம் எல்லாவற்றையும் திரட்டி தள்ள முயன்றாள் மதுரா.

“ஸ்ஸ் மதுரா இட்ஸ் மீ.. சத்தம் போடாத கொஞ்ச நேரத்துக்கு”  என்று கருப்பசாமியின் கரகரப்பான குரல் மிக மெதுவாய் அவளின் காது மடலுக்கு அருகே ஒலிக்க, அவளின் எதிர்ப்பு குறைந்தது. அவள் இனி கத்த மாட்டாள் என்ற நம்பிக்கையில் கருப்பசாமியும் அவளின் வாயிலிருந்து கையை எடுத்தான்.  

ஆனால்வெளியே படார் படார் என்று எதுவோ உடைக்கப்படும் சத்தத்தில் எதுவோ பெரிய பிரச்சனை என்று புரிந்து பயத்தில் மதுராவிற்கு உடல் எல்லாம் வியர்த்து வழிந்தது. சுற்றிலும் இருட்டு பயம் ஒருபுறம் பதற்றம் ஒருபுறம் என்று அவளுக்கு தலையே சுற்றி விட்டது.

அதற்குள் அவர்கள் இருந்த அறையின் கதவு உடைக்கப்பட்டு ஏழெட்டு தடியர்கள் டார்ச் அடித்தபடி உள்ளே நுழைந்தனர்.

அறையில் உள்ள பொருட்கள் எல்லாம் அத்தடியர்களால் சிதறடிக்கப்பட்டது. அவள் அறையில் இருந்த பொருட்கள் எல்லாம் கீழே சிதறி விழ விழ, மதுராவிற்கு பயமும் பதற்றமும் கூடி போனது.. வெளிப்படையாய் உடல் தூக்கி வாரி போட அச்சிறு இடைவெளியில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவளைத் தொடாதவாறு அவள் மேலே படாமல் படர்ந்திருந்த கருப்பசாமியின் சட்டையை இறுக்கமாய் பிடித்துக் கொண்டாள் பயத்தில்.

அந்த அறையின் ஒவ்வொரு மூலையையும் தேடியவர்கள் கட்டிலின் அடியே தேட வர, அதை உணர்ந்தவன் தன்னை பிடித்திருந்தவளின்  கையை தனக்குள் கொண்டு வந்து தன் உடலோடு சுருக்கி கால்களை மடக்கி அவளை மறைத்தவாறு ஒரு குழந்தை தாயின் வயிற்றில் சுருண்டு படுத்திருக்கும் நிலையில் படுத்து கொண்டான். ஏற்கனவே கட்டிலின் அடியில் சில பழைய பொருட்கள் இருந்ததாலும் பொருட்களோடு பொருட்களாக மாறுவதற்கேற்ப அவனின் கருப்பு உடை வேறு உறுதுணையாக இருந்தது.

அவர்கள் இருந்த நிலை இந்தப்புறம் இருப்பவர்களுக்கு பார்க்கும் பொழுது ஏதோ ஒரு துணி மூட்டை கட்டிலின் அடியில் கிடப்பது போல் இருக்க, டார்ச் லைட்டில் இருந்த லேசான வெளிச்சத்தில் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

சற்று நேரத்தில் அவர்கள் தேடியவள் இங்கில்லை எங்கேயோ தப்பித்து விட்டாள் என்று தங்களுக்குள்ளேயே பேசியவர்கள்  அடுத்த அறைக்கு தேட சென்று விட,

அவர்கள் சென்ற அடுத்த நொடி,

“நீ இங்கேயே இருந்துக்கோ மது.. என்ன சத்தம் கேட்டாலும் வெளியே வராத..”என்ற அவசர சொல்லோடு அவளிடம் இருந்து விலகி வெளியே செல்லப் போன கருப்பசாமியை அடுத்த நொடி இழுத்து மார்போடு இறுக்கமாய் அணைத்திருந்தாள் மதுரா.

“போ.. போகாத பிளாக்.. என..என..க்கு ரொம்ப..ப பயமா இருக்கு..எ..எ.. என் கூ..டவே இரு‌.. நீ போ..போய்ட்டா எ..என்ன தூக்..கிட்டு தூக்கிட்டு போயிடுவாங்க ப்ளீஸ்ஸ்”என்று பயத்தில் உடல் நடுங்க பிதற்றியவளின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவனின் மார்பை நனைக்க,

புரியாத அவஸ்தை அவனுக்குள்..

அவளிடமிருந்து சட்டென்று விலக முடியாமல் அவளின் அழுகை தடுக்க, ஆறுதலுக்காக அவளை அணைத்துக் கொள்ளவும் முடியாமல் கடமை அதனை கடுக்க, 

முயன்று தன்னை கட்டுப்படுத்தியவன்,

“மதுரா இட்ஸ் ஓகே இனி அவங்க இங்க வர மாட்டாங்க.. நான் தான் இருக்கேன்ல்ல.. நான் பாத்துக்குறேன்..” என்று கூறி அவளின் முதுகை தட்டி கொடுத்தவன், 

அவளிடம் இருந்து மொத்தமாய் விலகப் பார்க்க, அவனின் சட்டையை விடாமல் பிடித்திருந்தவளின் அழுகை இன்னும் அதிகமானது. 

“ஸ்ஸ்ஸ் மதுரா என்ன இது? குழந்த மாதிரி..”

“நீ நீங்க… போ..க வேணா..ம் பிளாக்.. பய ..பயமாயிருக்கு என..எனக்கு”என்று அவள் சொன்னதையே திரும்பவும் சொல்ல, அவனுக்கு கோபம் தான் வந்தது.

ஆனால் அவளின் அதீத பயத்தை உணர்ந்தவனுக்கு, அவளின் மீது கோபத்தை காட்டவும் முடியவில்லை.

“ப்ச்ச்..அவங்களோட முக்கியமான எய்ம் உன்ன கிட்டனாப் பண்றது தான் மதுரா.. அதனாலதான் உன்னை சேவ் பண்ணிட்டு அவங்கள கவனிக்கலாம்ன்னு அவங்களுக்கு முன்ன பால்கனி வழியா உன் ரூமுக்கு வந்துட்டேன்.. அவங்க தேடி வந்தது கெடைக்காம இப்போதைக்கு அவங்க போக மாட்டாங்க… திரும்ப இங்க வரக்கூட வாய்ப்பு இருக்கு..சோ நான் வெளியே போய் தான் ஆகணும்” என்றவன், 

“மதுரா ரொம்ப தைரியமான பொண்ணாச்சே! நான் போய் அவங்கள என் வழியில கவனிச்சுட்டு வரேன் அதுவரை இங்கேயே இருப்பியாம்” என்று சிறுகுழந்தைக்கு செல்வது போல் சொல்லி அவளை ஆறுதல் படுத்த மதுரா கொஞ்சமாய் தெளிந்தாள்.

இறுக்கமாய் பிடித்திருந்த அவனின் சட்டையை விடுவித்தாள்.

அதில் அவளிடமிருந்து நகர்ந்து, கட்டிலின் அடியில் இருந்து வெளியே வந்து விட்டவன், என்ன நினைத்தானோ? பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த அவளின் கரங்களை மென்மையாய் அழுத்தி,

“வெளிய என்ன சத்தம் கேட்டாலும், நானே வந்து உன்னை கூப்பிடுற வர வெளியே வராத மதுரா..” என்று கட்டளையிடும் குரலில் சொல்லிவிட்டே சென்றான் கருப்பசாமி.

அவன் மதுராவை விட்டு சென்ற சிறிது நேரத்தில் வெளியே கலவரமாக அடிதடி நடப்பதற்கு உண்டான சத்தங்களும் சிலரின் அலறல் சத்தமும் கேட்க கேட்க அவளின் இதயத்துடிப்பும் கூடிக்கொண்டே சென்றது. 

இதெல்லாம் யாருக்காக நடக்கிறது? எல்லாம் தனக்காக தானே … தான் எதற்கு அந்த அயோக்கியனின் கண்ணில் பட்டு தொலைந்தேன் அன்று..என்று தன்னையே நிந்தித்து, இதற்கு தீர்வு இல்லையா? என சிந்தித்து சோர்ந்து போனாள் பெண்ணவள்.

அவள் சிந்தனை எல்லாம் மீறி, திடீரென்று துப்பாக்கி சுடும் சத்தங்கள் வேறு காதை பிளக்க, பயத்தில் தன்னைக் குறுக்கிக் கொண்டு படுத்திருந்தவளின் உடல் தூக்கி வாரி போட்டது.

யாருக்கு என்னவோ? கருப்பசாமி தானே வெளியே சென்றிருந்தான் அவனிடம் துப்பாக்கி இருந்ததா? அதனின் சத்தம் தான் இப்பொழுது வந்ததா? இல்லையெனில் தன்னை தேடி வந்த கயவர்களிடம் இருந்த துப்பாக்கியின் சத்தமா அது? ஒன்றும் புரியாமல், அதற்கு மேல் ஒன்றும் செய்யாமல் கையாலாகாதவளாய் அங்கேயே பதுங்கி இருக்கவும் அவளால் முடியவில்லை.

அவன் என்னவோ, சாதாரணமாக ‘நான் கூப்பிடும் வரை வெளியே வராதே’ என்று சொல்லி சென்று விட்டான். ஆனால் இவளுக்கு தான் முடியவில்லை. வெளியே செல்வோமா? வேண்டாமா?

உணர்ச்சியின் பிடியில் தத்தளித்தவள்,

அவன் சொன்னதை மீறி.. தன் பயத்தையும் மீறி, 

ஏதோ ஒரு தைரியத்தில் தன் அறையை விட்டு வெளியே வந்து விட்டாள். சுற்றிலும் இருட்டாகத்தான் இருந்தது.

கால்கள் தன் பாட்டிற்கு சத்தம் வந்த திசையை நோக்கி பயத்துடன் நடக்க ஆரம்பிக்க, கண்களில் கண்ணீர் வடிந்த வண்ணம் இருக்க, உடல் நடுங்க, நடந்தவளின் கால்களில் கலவரத்தின் விளைவால் உடைந்து கிடந்த கண்ணாடி பொருட்கள் சிலது குத்தி கிழிக்க, வலித்தது அவளுக்கு ஆனாலும் நடையை நிறுத்தவில்லை. 

தன்னை விட்டு சென்றவனுக்கு ஒன்றும் ஆகி இருக்காது தானே? அவன் திடகாத்திரமான ஆண்மகன் என்று மனதிற்கு புரிந்தாலும், தன் பொருட்டு ஒருவன் காயப்படுவதையோ துன்புறுத்தப்படுவதையோ அவள் சுத்தமாய் விரும்பவில்லை என்று அவன் மீதான தன் அக்கறைக்குத் தனக்குள்ளையே ஒரு காரணமும் சொல்லிக் கொண்டாள்.

மூன்றாம் தளத்தின் இறுதிக்கு தட்டு தடுமாறி வந்துவிட்டவளுக்கு சற்று தூரத்தில் ஏதோ வெளிச்சம் தெரிந்தது..

இரண்டாம் தளத்திற்கு செல்லும் வளைவின் நடுவில் ஏதோ எரிவது போல் இருக்க, அதன் வெளிச்சத்தில் கூர்ந்து பார்த்தாள். 

தூரத்தில் நிற்பது கருப்பசாமி தானே? கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த நெருப்பின் வெளிச்சத்தில் அவன் உடல் முழுவதும் ரத்தமாய் இருப்பது தெரிய, அவனை சுற்றிலும் பத்து பதினைந்து பேருக்கு மேல் தரையில் இரத்த களரியாய் வீழ்ந்து கிடந்தனர். அவனை சுற்றிலும் இரத்தம் இரத்தம் மட்டுமே!

அத்தனை பேரையும் தனி ஒருவனாய் அடித்து வீழ்த்தி இருந்தவனுக்கு பாதுகாப்பு கொடுக்கவா அவள் வந்தாள்?

அந்த நெருப்பின் வெளிச்சமும் அவன் முகத்தில் இருந்து செந்நிறமும் அவன் கண்களில் தெரிந்த வெறியும், அவனை அப்படியே மகா அசுரனாய் அவளுக்கு காட்சிப்படுத்த, அவனை அத்தகைய தோற்றத்தில் பார்த்து வெலவெலத்துப் போனாள் மதுரா.

அதற்குள் அவனும் அவளைப் பார்த்து விட, அவனின் முகத்தில் இருந்த வெறி இன்னும் கூடியது போல் ஒரு மாயபிம்பம் எழ, உச்சகட்ட பயத்தில் நா உலர உடல் நடுங்க எச்சில் விழுங்கியபடி அவனைப் பார்த்தபடியே மதுரா ஒவ்வொரு எட்டாக பின்னெடுத்து வைக்க,

அவனோ அவளை நோக்கி ஒவ்வொரு எட்டாக முன்னெடுத்து வைத்தான்.

அவனின் அந்த ராட்சச தோற்றத்திலும் அவன் தன்னை நோக்கி வருவதையும் உணர்ந்தவள்,

“வே..ணாம் வேணாம் கிட்ட வராத.. என..எனக்கு ப..பயமா இருக்கு” என்றபடி பின்னால் போக, அவனும் முன்னால் வருவதை நிறுத்தவில்லை.

அவனின் கையில் ஈட்டி போன்ற கூர்மையான ஆயுதம் இருக்க, அதிலிருந்து துளி துளியாய் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. 

அவளை நோக்கி முன்னால் வந்து கொண்டிருந்தவன், எந்தவித சலனமும் இல்லாமல் தன்னிடமிருந்த ஈட்டியை மதுராவை நோக்கி குறிப்பார்த்து எறிய,

ஏற்கனவே அடுத்தடுத்த அதிர்ச்சியினால் துவண்டு போய் இருந்தவள் தன்னை நோக்கி வந்த கூர்மையான ஆயுதத்தை பார்த்தும், அது தன்னை பின்னிருந்து தாக்க வந்தவனின் மார்பை  குத்தி கிழித்து.. அவன் உயிர் வலியில் துடிதுடித்து இரத்த வெள்ளத்தில் விழுந்ததைப் பார்த்தும் கண்ணை இருட்டிக் கொண்டு உலகம் தட்ட மாலை சுற்ற, அடுத்த நொடி நினைவிழந்து மூர்ச்சையானாள் மதுரா.

அவள் தரையில் விழுவதற்கு முன்னே கருப்பசாமியின் வலிமை பொருந்திய புஜங்கள் அவளை தாங்கி பிடித்திருந்தன. 

தொடரும்…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
38
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments