புயல் 6
இதைச் செய்வதற்கு சுத்தமாக விருப்பம் இல்லை என்ற போதும் மணியம்மாள் வகையாக ருத்ரனிடம் மாட்டிக் கொண்டதால் வேறு வழியில்லாமல்
“இதைக் குடி” என அவளிடம் நீட்டினார். அதில் வெறும் கடமைதான் இருந்தது.
“அம்மா! குரல்ல செல்லம் கொஞ்சம் கூட இல்லையே.. இப்படியா நீ லட்சணாவுக்கு குடுத்த. இல்லையே..”
“அது ரொம்ப நாளாச்சு இல்லையாப்பா.. மறந்துடுச்சு”
“உனக்கு அது மட்டுமா ம்மா மறக்கும். என் பொண்டாட்டி சம்பந்தப்பட்ட எல்லாமே மறக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும்”
“ச்சே அம்மா அப்படியெல்லாம் செய்வேனா.. அது உமா ஏற்கனவே கோபமா வேற இருக்கு அதுதான்.. கொஞ்சம் தயக்கமா இருக்கு”
“அப்போ அவ வீட்டை விட்டுப் போகாமல் இருந்திருந்தால் நீ நல்லா கவனிச்சுருப்ப அப்படியாம்மா?” அப்பாவியாய் ருத்ரன் கேட்க அவரும் தலையாட்டி ஆம் என்றார்.
“நீ கவனிச்ச கவனிப்பு எல்லாம் எப்படிப்பட்டதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். நீ என்ன எல்லாம் டிராமா பண்ணுவ அதுவும் தெரியும். அதான் போன்ல அதை ரெக்கார்ட் பண்ணி வச்சுருக்கேன்..” என்றவன் அதையும் போட்டுக் காட்ட இரண்டு பையித்தியங்களுக்கு இடையே மாட்டிக் கொண்ட பாவனையை முகத்தில் தேக்கி வைத்துப் பார்த்தாள் உமா மகேஷ்வரி.
“இப்படியே வார்த்தை மாறாமல் சொல்லணும். அந்த பாசமும் அப்படியே இருக்கணும். புரிஞ்சதாம்மா. ஒன்னும் அவசரமில்லை இன்னும் இரண்டு மூனு தடவை கூட வீடியோ பார்த்துட்டு அப்பறமா நீ ஆரம்பி “
மணி எப்படியாவது பேசிட்டு இந்த ரூமை விட்டுட்டு போயிடுடி.. இல்லைன்னா இவன் இன்னைக்கு நம்மளை விடமாட்டான் என்று நினைத்தவர் “அம்மாடி உமா.. உமாம்மா..” என ஆரம்பிக்கும் போதே அந்த தொனியில்
“எனக்கு யாரோட பாசமும் வேண்டாம். அவங்க அவங்க அவங்களோட எல்லையில நின்னுட்டா போதும். உங்க மகனையே நான் வேண்டாம்னு சொல்லுறேன். நீங்க பாசமா இருக்கணும்னு ஒன்னும் அவசியமே இல்லை. அதுமட்டும் இல்லாமல் அதுதான் உங்களுக்கு வரவும் வராதே” பொறுத்தது போதும் என்று உமா பொங்கிவிட “அவ அப்படித்தான் சொல்லுவா அதுக்குன்னு நாம அப்படியே விட முடியுமா அம்மா. அவ வயித்துல இருக்குறது இரண்டு உசுரு. அவங்களுக்கு நீ இன்னும் கொஞ்சம் அதிகமாவே பாசம் காட்டணும். புரிஞ்சுதா? நீதானே அயம்மா. கொஞ்சங்கூட என் பசங்க மேல உனக்கு பாசமே இல்லையா?” என்றான் ருத்ரன்.
“உமாம்மா” என மறுபடியும் சலித்தபடி ஆரம்பிக்க “பாசம் கம்மியா இருக்கும்மா. இன்னும் இரண்டு கரண்டி நீ கூடவே போடலாம்” என்று இவன் ஆரம்பிக்க, ஐயோ முடியலைடா சாமி. இந்த கருமத்தை எல்லாம் பார்க்கணும்னு என் தலையில எழுதியிருக்கே என நினைத்தவள் அங்கிருந்து நகர்ந்தாள்.
“பாலைக் குடிச்சுட்டு போ உமா. உனக்காகத்தானே நான்…”
அவன் ஆரம்பிக்கும் போதே “எப்பா சாமி எனக்கு உடம்புல ஸ்ட்ரென்த்தே இல்லை. எங்க வீட்டுல இருந்தாலாவது நான் வேணுங்கிறதை கேட்டு வாங்கி நிம்மதியாய் சாப்பிட்டுருப்பேன். இங்க வந்து நீ புள்ளைங்களை பட்டினி தான் போடப் பார்க்குற. எனக்குத் தெரிஞ்சுப் போயிடுச்சு. நானாவது சும்மா வாய்ப் பேச்சுக்குத்தான் சொல்லுறேன். நீ அதை நடத்திட்டுத்தான் வேற வேலைப் பார்ப்ப போல. உங்க அம்மாவுக்குத்தான் அந்த பாசம் இருக்காதுன்னு தெரியும்ல. ஏன் டார்ச்சர் பண்ணுற? இதைப் பார்த்து நான் உன்னை நல்லவன்னு நம்பணுமா? நீ தான் அம்மா பையனாச்சே.. அதுக்காகவே பிறவி எடுத்தவன் மாதிரில்ல பேசுவ.. எப்போ அதை ரிசைன் பண்ண? இதெல்லாம் எதுக்காக?” அவள் மூச்சு விடாமல் பேசிக் கொண்டிருக்கும் போதே
“அக்கா” என உள்ளே நுழைந்தான் ஆத்விக்.
அங்கிருந்த மற்ற இருவரைக் கவனிக்காமல் “இந்தா பசியோட இருப்ப சாப்பிடு. இங்க இருக்கறவங்க எல்லாம் மத்தவங்களை பட்டினி போட்டுக் கொடுமை படுத்த மட்டும்தான் லாயக்கு” என்று அவன் கேரியரை நீட்ட வேகமாக வாங்கிக் கொண்டாள்.
அவளுக்கு அருகிலேயே அமர்ந்து அவன் சாப்பிட வைக்க இருவரையும் தான் ரசனையாக பார்த்திருந்தான் ருத்ர தாண்டவன். அவனுக்கு சில சமயங்களில் உமாவை விட ஆத்வியைத்தான் அதிகம் பிடிக்கும். இது அப்படியான ஒரு தருணம்.
“அம்மாவும் அப்பாவும் வந்து கூட்டிட்டுப் போகவான்னு கேட்டாங்க” ஆத்வி பேச்சை ஆரம்பிக்க
சாப்பிட்டுக் கொண்டே அவள் வேண்டாம் என மறுத்தாள்.
“ஏன்க்கா இப்படிப் பண்ணுற? எல்லாரும் உன்னோட நல்லதுக்குத்தானே சொல்லுறோம். கேக்கவே கூடாதுன்னு இருக்கயா?”
“அவளுக்கு நல்லது எதுன்னு அவளுக்கேத் தெரிஞ்சுருக்கே மச்சான்” பேசியபடியே ருத்ரன் உமாவுக்கு அருகே அமராமல் ஆத்வியின் அருகே அமர்ந்தான்
“ஆமா ஆமா சோறு கூட போடாமல் அவளை பட்டினியோட இருக்க விடுற இந்த வீட்டுலதான் அவ நல்லது இருக்கு. அடப் போயா.. ச்சே நானா இருந்தால் உன் தலையில கல்லைத் தூக்கிப் போட்டுட்டு ஜெயில்ல போயாவது நிம்மதியாய் சாப்பிட்டுட்டு இருந்துருப்பேன். என்ன ஜென்மமோ.. மொதல்ல தள்ளி உக்காரு”
“மச்சாவ். நீ இப்படியெல்லாம் முகத்தைச் சுழிச்சுட்டு பேசுறதைப் பார்க்குறப்போ அப்படியே உன்னைக் கொஞ்சணும் போல இருக்குயா.. உமா மாதிரியே வேற இருக்கயா.. ?” அவனது குரலில்
“அடச்சீ” என ஆத்வி ஒரு மாதிரியாக அவனைப் பார்க்க அதில் சிரித்தவன் சட்டென அவன் கன்னத்தில் எச்சில் பதித்தான் ருத்ரன்.
“அட கருமம். ச்சே ச்சே..” என்று அவன் பரபரவென்று துடைக்க “மச்சி உன் அக்கா பண்ணுற மாதிரியே பண்ணுறடா..” என்றான் கண்சிமிட்டி..
சாப்பிட்டுக் கொண்டிருந்தவளுக்கு புரையேறியது.
“பாத்து சாப்பிடுடி” என்று அவன் தலையைத் தட்டி தண்ணீர் குடுக்க மணியம்மாளுக்குத்தான் இதைப் பார்க்க பார்க்க வயிறு எரிந்தது.
“ச்சே இந்த வீட்டுக்கு வந்தேன் பாரு என்னைச் சொல்லணும்.. ஏய் உமா வா மொதல்ல நாம இங்க இருந்து கிளம்புவோம்..”
“மச்சான் நான் காலையிலேயே சொன்னதுதான். நீயும் கூட இங்கேயே இரு.. எனக்கொன்னும் பிரச்சனை இல்லை” அவனது கன்னத்தினையே பார்த்தபடி அவன் சொல்லவும் ஆத்தி இங்கேயே இருக்குறதா.. கற்புக்கு உத்திரவாதம் இல்லை போல இதுதான் ஆத்விக் மனதில் ஓடியது.
அதில் ஒரு நிமிடம் பயந்தவன் அங்கிருந்த மூடியை எடுத்து அவனை நோக்கி விட்டெறிந்தான்.
அதை லாவகமாக பிடித்தவன் “மச்சி இந்த விளையாட்டு எல்லாம் நாம மட்டும் இருக்கும் போது வச்சுக்கலாம். இங்க பட்டு லட்டு இருக்காங்க. எப்பவும் சூதானமாக இருக்கணும் புரிஞ்சதா..? நீயும் எங்களோடவே இரு.. எனக்கும் ஜாலியா இருக்கும்” எனச் சொல்ல “அக்கா நான் கிளம்புறேன். ச்சே இவன்கூடலாம் நீ எப்படித்தான் வாழ்ந்தயோ?” என அவன் பதறி சொல்லவும் “அதைத்தான் உனக்கும் காட்டலாம்னு.. அடேய் நில்லு ஆத்வி” என்பதற்குள்ளயே அவன் அங்கிருந்து நொடியில் இடத்தினை காலி செய்திருந்தான்.
இவனது கலாட்டாவில் உமாவிற்கு அவ்வளவு சிரிப்பு.. சத்தமாக அவள் சிரிக்கவும் ருத்ரனுக்கு அது பிடித்திருந்தது.
“உமா மெதுவாடி.. சிரிச்சு வயிறு பிடிச்சுக்கப் போகுது” பட்டு லட்டுவின் நலத்திற்காக அவன் சொல்ல அவளும் சிரிப்பினைக் கட்டுப்படுத்தி சாப்பாட்டில் கவனம் செலுத்தினாள். ஏனோ அவள் மனம் வெகு காலத்திற்கு பிறகு நிறைந்திருந்தது.
“ஊட்டிவிடட்டுமா”
“இல்லை வேண்டாம் நானே சாப்பிட்டுக்கிறேன்” எனச் சொல்லி சாப்பிட மணியம்மா அங்கிருந்து வெளியேறி இருந்தார்.
வாசலுக்கு விரைந்து சென்று பார்க்க அங்கு ஆத்விக் தன் முகத்தினைக் கழுவிக் கொண்டிருந்தான். ச்சே கொஞ்ச நேரத்துல வயித்தைக் கலக்கிடுச்சே.. கருமம் அவனா இவன்.. அய்யய்யோ நினைக்க நினைக்க நடுக்கமே வந்துவிட்டது ஆத்விக்கு..
இனி இங்க வரவேக் கூடாது போலயே இவ்வாறு நினைத்துக் கொண்டே இன்னமும் முகத்தினைத் தேய்த்து கழுவிக் கொண்டிருந்தவன் பின்னே “இப்படியெல்லாம் வாழணும்னு உன் அக்காவுக்குத் தலையெழுத்தா. ருத்ரா இன்னும் அந்த பொண்ணை விடலை தம்பி. என் பையன்னாலும் அவன் பண்ணுறது தப்புதானே. இப்போ உன் அக்காவோட வாழ்க்கைதான் எனக்கு முக்கியமா படுது. ருத்ரன் ஏதாவது சொல்லி அவனோட கௌரவத்தைத் தக்க வைக்கத்தான் பார்க்குறானே தவிர உண்மையிலேயே உன் அக்கா கூட வாழணும்னு நினைக்கவே இல்லை. நீதான் ஏதாவது முயற்சி பண்ணி உங்க அக்காவை இங்க இருந்து கூட்டிட்டுப் போகணும். இல்லைன்னு வை அவ கடைசி வரைக்கும் கண்ணீர் சிந்திட்டுத்தான் இருப்பா” மணியம்மாளின் குரல்.
“என் அக்கா மேல அவ்வளவு அக்கறையா உங்களுக்கு.. பரவாயில்லையே.. நீங்க சொன்னதும் ஒரு வகையில சரிதான். என் அக்காவை எப்படிக் கூட்டிட்டுப் போறதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். நீங்க அதை நினைச்சு கவலைப்பட வேண்டாம். நிம்மதியாவே இருங்க.. உங்க பையனை பார்க்குற விதமா நான் பார்த்துக்கிறேன். அதுசரி எங்ககிட்ட இப்படிப் பேசுறீங்களே.. நீங்க ஏன் அந்த பொண்ணு வீட்டுலயே போய் பேசக் கூடாது. இல்லைன்னா நீங்க அருமை பெருமையாய் பெத்து வளர்த்த உங்க மகனை செருப்பாலயாவது அடிச்சு அசிங்கப்படுத்தியிருக்கலாமே. அந்தாளை மட்டும் எதுவுமே சொல்லாமல் இருக்கீங்களாமே ஏன்?” அவரையே அவன் பார்த்துக் கேட்க அவரோ “என்ன இருந்தாலும் என்னோட பையனாச்சே” என தடுமாறி பதில் சொன்னார் மணியம்மாள்.
“ஓஹ் அதோ உங்க பையன் வர்றது மாதிரி இருக்கு”
அவ்வளவுதான் உள்ளே ஓடியே விட்டார்.
“இடியட்.. இதெல்லாம் ஒரு பொம்பளையா.. ச்சே இந்த பொம்பளைக்குப் பொறந்ததால தான் அந்த ஆளும் இப்படி இருக்காப்ல போல.. வந்து சேர்ந்துருக்கானுங்க பாரு.. நமக்குன்னு. எல்லாம் நம்ம உடன்பிறப்பை சொல்லணும்” என்றபடி அவன் இன்னும் தண்ணீரை முகத்தில் அடித்து அவன் கழுவினான்.
“ஓஹ் காட்.. என்ன இது அந்த நினைப்பே வருது” என கர்சீப்பில் முகத்தை அழுந்த துடைத்தவன் காதருகே “ரொம்ப பண்ணாத மச்சான். அப்பறம் வேற ஏதாவது பண்ணிடுவேன்” என்ற குரல் கேட்க பதறிப் போய் விலகினான்.
சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
“இந்தாடா கேரியர்.. சாப்பாடு செம. அத்தைகிட்ட நான் சொன்னேன்னு சொல்லிடு..” என அவன் அதை நீட்ட வாங்கியவன் “நீ வண்டியில போகும் போது கல்லை விட்டு எறியுறேனா இல்லையான்னு பாரு. காலையில் அடிச்சதைக் கூட தாங்கிக்குவேன்டா.. இதை.. ச்சே கருமம் வாந்தியா வருது” என கருவிக் கொண்டே சொல்ல..
“ஒரு கிஸ்ஸூக்கே உனக்கு வாந்தி வருதா மச்சி.. அங்கே உங்க அக்கா வாந்தியெடுக்க நான் எவ்வளவு…?”
அவ்வளவுதான் அதைக் கேட்க ஆள் அங்கில்லை. ஓடியே விட்டிருந்தான்.
இவன் பையனா இருக்கும் போதே இவ்வளவு அழகா இருக்கானே. பொண்ணா எல்லாம் பொறந்திருந்தால் எம்புட்டு அழகா இருந்துருப்பான் என்று பெருமூச்சு விட்டபடியே நின்றிருந்தவனை போனின் அழைப்பு மீட்டெடுத்தது.
“ம்ம் சரி வர்றேன்..” என்றபடியே உள்ளே வந்தவன் “உமா சரக்கு இன்னைக்கு வருது.. நான் போயிட்டு வர்றேன். வர்ற லேட்டாகும். நீ தூங்கு என்ன?” என்று சொல்ல பதில் எதுவும் வரவில்லை அந்தப்பக்கம் இருந்து.
“உன்கிட்டதான் பேசுறேன் உமா”
அதே மௌனம்தான்.
“உமா..”
‘நீ போடா.. நீ திரும்பி வரும்போது நான் இங்க இருந்தால்தானே’ என்ற நினைப்பில் அவள் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
அலைபாயும் அவள் விழிகளையே ஆழ்ந்துப் பார்த்தவன் அவளது சிந்தனையில் ஓடுவதையும் கணித்துவிட்டான்.
அவனிடம் இப்போது மர்மப் புன்னகை..
புயல் தாக்கும்…