புயல் 5
போன் பேசி வைத்தாலும் அவனது ஆத்திரம் அடங்கவில்லை. அவர்களை இன்னும் போட்டு அடிக்க வேண்டும் என்றுதான் தோன்றியது. வரும் போது இருந்த மனநிலை அடியோடு கெட்டுப் போனது.
கருமம் இங்க வந்துருக்கவே கூடாது என்றெண்ணியவனுக்குள் ஒரு யோசனை. உடனே போனை எடுத்தவன் “நாளைக்குப் பார்க்கலாம்னு சொன்னேன்ல. எனக்கு இப்பவே பார்க்கணும் தயாரா இரு. நான் உடனே வர்றேன்” என்று சொன்னவன் போனை வைத்துவிட்டு கிளம்பிப் போய்விட்டான்.
உறக்கம் கலைந்து அவள் எழுந்திருக்கும் போது மாலை வெகு நேரம் ஆகியிருந்தது. ஆத்விக் ஞாபகம் வரவும் போனில் அவனுக்கு அழைத்தாள்.
தம்பிகாரன் எடுக்கவே இல்லை. மீண்டும் மீண்டும் அவள் அடித்துக் கொண்டே இருக்க “இப்போ என்னவாம் உனக்கு?” என்று கோபமாய் கத்தினான்.
“ஆத்வி!” களைப்பாய் அழைக்க, கோபத்தினைக் கட்டுப்படுத்தியவன் “அதான் என்கூட வரலைன்னு சொல்லிட்டேயே. இப்போ எதுக்கு எனக்குக் கூப்பிடுற. போ அந்த பொறுக்கி பின்னாடியே போ. உனக்குத்தான் தம்பி முக்கியம் இல்லைன்னு சொல்லிட்டயே. அன்னைக்கும் இப்படித்தான் நடந்துக்கிட்ட. இன்னைக்கும் இப்படித்தான். அந்தளவுக்கு காதல் என்ன?” என்றான் படபடவென்று.
“ஆத்வி! லிசன். அவனைப் பத்தி உன்னை விட எனக்கு நல்லாத் தெரியும்டா. இப்போதைக்கு நான் இங்கே இருக்கேன்டா. உன்னை வேற அடிச்சுட்டான்ல. அவனை நான் சும்மாவே விடமாட்டேன்டா” அவன் சொன்னதைக் கேட்காமலேயே அவள் பேசினாள்.
“நீ என்கிட்டதான் அவனைப் பத்தி இப்படிச் சொல்லுற? ஆனால் அவன்கிட்ட பம்முற அக்கா. இப்படி இருக்கப் போய்தான் அவன் அந்த வேலையைப் பார்த்துருக்கான். அவனை எல்லாம் நடுரோட்டுல ஓடவிட்டு கல்லாலயே அடிக்கணும். ச்சே கொஞ்சம் கூட மனசு உறுத்தலையா அவனுக்கு. இதுல பட்டு லட்டுவாம்.. எனக்கு அப்படியே எரிச்சலா வருது. நீயும் வரமாட்டுன்னு நின்னு சாதிச்சுட்டயே. எனக்குத் தெரியும் நீ அவனை இன்னமும் லவ் பண்ணுறன்னு.. இதுதான் அக்கா உன்னோட வீக்னஸ். இதை வச்சேதான் அந்த ஆளு உன்னை ஆட்டி வைக்கிறான். நீயும் அது புரியாமல் ஆடிட்டு இருக்க. இங்க அம்மா அப்பா அவளை ஏன்டா விட்டுட்டு வந்தன்னு என்னை போட்டு குடையுறாங்க”
“நான் சீக்கிரமே அங்க வந்துடுவேன் ஆத்வி. உனக்கு பெயின் ஒன்னும் இல்லையே. அவன் அடிச்சா எப்படி வலிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும்டா”
“ப்ச் இதெல்லாம் எனக்கு இப்போ வலிக்கல. அவன் உன்னை அடக்கி வைக்குறதுதான் வலிக்குது. நீ மட்டும் ம்ம்னு சொல்லு நாளைக்கு நீ நம்ம வீட்டுல இருப்ப”
“எப்படிடா?” அவள் கேட்கவும்
“எப்படியா? அதை நான் சொல்லுறேன் தங்கம். உன் தம்பி வேலை மெனக்கெட்டு போலீஸ்ல போய் புகார் கொடுப்பான். அவங்க வந்து என்னை உள்ள தூக்கிப் போடுவாங்க. அதை விட்டால் அந்த நல்லவனுக்குத் தெரிஞ்சது வேற என்ன தெரியப் போகுது. ஆனால் இந்த கெட்டவன் அப்படி இல்லையே தங்கம். போலீஸ்க்குப் போன அடுத்த செகண்ட் உன் தம்பியையும் சேர்த்தே நான் உள்ள வைப்பேனே” என்று சொல்லும் போதே அவளுக்கு ஆத்திரம் வந்தது.
“என் தம்பியை உள்ள வைப்பயா நீ.. அது நான் இருக்குற வரைக்கும் நடக்காது. உனக்கு உன் பிள்ளைங்க நல்லா இருக்கணும்ன்னா எனக்கு என் தம்பி முக்கியம். புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன். இனிமேல் என்னை மிரட்டுற வேலை எல்லாம் வேண்டாம். இங்க இருக்க ஒத்துக்கிட்டதுக்கு உன் மேல இருக்க காதல்னு தப்பா அர்த்தம் எடுத்துக்காத. அந்த காதல் எல்லாம் செத்துப் போயிடுச்சு. இப்போ எல்லாம் உன்னைப் பார்த்தாலே அடிச்சே சாவடிக்கலாம்னுதான் தோணுது” உறங்கி எழுந்த விழிகளில் கோபத்தின் சாயல் அதீதமாய் தெரிந்தாலும் அதிலுமே அவள் அழகை ரசித்தது அவனது விழிகள்.
“தூங்கி எந்திரிச்சும் அந்த தூக்கக் கலக்கம் இன்னும் போகலை என் தங்கத்துக்கு” என செல்லமாய் கன்னத்தில் குத்தியவன் “யோவ் மச்சான்.. உமாவோட பாசமலரே.. போனை வச்சுட்டு உங்க ஆளு கூட கடலை போடுங்க. என் ஆளுகிட்ட நான் அந்த வேலையைத்தான் போடப் போறேன். வாங்குனது இன்னும் பத்தலை போல” ஒரு மார்க்கமாகச் சொல்லிவிட்டு போனைக் கட் பண்ணியவன் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.
“வாயை கிழிச்சுடுவேன் பார்த்துக்கோ.. என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கு..” என அவள் எழ முயற்சிக்க.. அவள் கையைப் பிடித்தவன் “எங்க போற? உக்காரு” என்றான்.
“ரெஸ்ட் ரூம் போகக் கூட விடமாட்டான் போல எருமை” என முணங்கியபடியே கையை அவள் உதற, அவள் கையை விட்டவன் அவள் படுத்த இடத்திலேயே படுத்துக் கொண்டான்.
அவள் இல்லாத இந்த சில நாட்களில் அவன் உணரத் தவித்த அந்த வாசம் இப்போது அவனது நாசியில் அழுத்தமாய் ஏறியது.
உடல் முழுக்க அதை நிரப்பிக் கொண்டவன் மனம் அவள் மீதே படுத்திருப்பதாய் விபரீதமாக கற்பனை செய்யத் தொடங்கியது.
“உமா” மெல்ல முணங்கியவன் அந்த படுக்கைக்கு முத்தம் வைத்து அதனுள்ளயே தலையே ஆழப் புதைத்திருந்தான்.
உள்ளே இருந்து வந்தவளுக்கு மீண்டும் பசியெடுத்தது. சாப்பிடத் தோணவில்லை. பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.
மலைப்பாம்பு மாதிரி இவன் எதுக்கு உருண்டுகிட்டு இருக்கான் என்ற கேள்வி இருந்த போதும் அவனிடம் பேசாமல் மொபைலில் கவனம் செலுத்தினாள்.
ரீல்ஸ் பார்க்க ஆரம்பித்தவளுக்கு அதுகூட போர் அடிக்க ஆரம்பித்தது. பின் மொபைலில் பாட்டை ப்ளே செய்ய விட்டு அப்படியே கண்களை மூடிக் கொண்டாள். கைவிரல்கள் வயிற்றின் மீது இருந்தது.
அவளது வாசத்தின் தாக்கத்தில் உடலில் எக்குத்தப்பாய் உணர்வுகள் உற்பத்தியாக “ருத்ரா.. அடங்குடா.. இல்லை உன் பொண்டாட்டி உனக்குப் பேமிலி ப்ளானிங் பண்ணி விட்டுடுவா.. அப்பறம் பட்டு லட்டு மட்டும்தான்னு ஆகிடும். உனக்கு இன்னும் நிறைய பெத்துக்கணும்ல” என உள்ளுக்குள் குரல் கேட்க தன்னை அடக்கிக் கொண்டு அவளைப் பார்த்தான்.
அவள் முகத்தில் அளவுக்கதிகமான வேதனைதான் மையமிட்டிருந்தது. காதலிக்க ஆரம்பித்த அந்த அழகிய நாட்களை மனம் அசை போட ஆரம்பித்தது.
எப்படி இருந்தவ? அவளை எப்படியெல்லாம் பார்த்துக்கணும்னு ஆசைப்பட்டேன்? இப்படியொரு நிலையிலயா பட்டு லட்டோட வருகை இருக்கணும்? ம்ம் இதுதான் விதிங்கிறதா.. அவனுமே கிட்டத்தட்ட சோர்ந்து போய்தான் இருந்தான்.
அவனுக்கு அவளிடம் இருந்து வரும் கரிசனம் தேவையாய் இருந்தது. அது கிடைக்காது என்று அவனுக்கேத் தெரியுமே. தற்போதைய நிலையில் அதுவே கிடைக்காது என்ற போது காதல் அது மிகப்பெரும் கேள்விக்குறி தான்.
தற்போதைக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை. அவள் எவ்வளவு கோபப்பட்டாலும் வேதனைப்பட்டாலும் சரி அவள் என்னருகிலேயே இருக்க வேண்டும் அது மட்டுமே போதும் என்றவனின் பார்வையில் பட்டு லட்டு தற்போது குடியிருக்கும் இடையின் பரிணாமம் விழுந்தது.
அவன் விடாது குடியிருந்ததன் பலன்தானே அவனது உதிரத்தின் மாதிரிகள் அங்கே உருவெடுத்திருக்கிறது. தற்போது அங்கே குடியிருக்க வேண்டுமென ஆசை கடலளவு விரிந்திருக்க அவளது விழி மூடியிருந்த தோற்றத்தில் தெம்பு வரப் பெற்றவனாய்.. அவள் அருகே நெருங்கி வந்தான்.
அவள் வயிற்றின் மீது படிந்திருந்த கரத்தின் மீது தன் கரத்தினை வைத்து அழுத்தினான்.
சில அழுத்தங்கள் தேவைப்படும் அச்சமயம் மட்டும் கோபங்கள் கூட இரண்டாம் பட்சம்தான். உமா அப்படியொரு நிலையில்தான் இருந்தாள். அவளுக்கு அவனது தொடுகை தேவையாய் இருந்தது. அவளது காதல் அதை அனுமதிக்கவும் செய்தது.
வயிற்றில் அவனது உயிர்கள். இப்போது மட்டும் இருவருமே இயல்பாய் இருந்திருந்தால் இதை எப்படியெல்லாமோ கொண்டாடித் தீர்த்திருப்பார்கள் தான். அந்த ஏக்கம் அவனுக்குப் போலவே அவளுக்கும் இருந்திருக்க வேண்டும். அது நியாயமும் கூட.
அதனாலேயே அவன் கரத்தினை தட்டிவிடாமல் அவள் கணவனது தொடுகையை ஆழ்மனதோடு மனதாய் ரசிக்க ஆரம்பித்தாள்.
அந்த ரசனை இத்தனை நாளாய் இருந்த சர்ச்சையை தற்காலிகமாக ஒத்தி வைத்தது.
அவளின் ஒருகரம் மட்டும் அவன் கரத்திலிருந்து விடுதலைப் பெற்று மெல்ல மேலெழுந்து அவனது அடர்ந்த சிகையினுள் நுழைந்து அப்படியே தன் வயிற்றோடு அழுத்திக் கொண்டது.
ஆணவனுக்கு அவளது செய்கையில் இரகசிய புன்னகை.. அவள் தன்னை வெறுத்துவிட மாட்டாள் என்ற அவனின் நம்பிக்கைக்கு இந்த செயல் வலு சேர்ந்திருந்தது.
“மாமா” அவள் இதழ்கள் முணங்கிட அது அவனுக்கும் கேட்டது. இந்த நெருக்கத்தில் உண்மையிலேயே திண்டாடித்தான் போனான் ருத்ரன்.
அவனது இதழ்கள் அவளது வயிற்றில் அழுத்தம் கொடுத்தது. அது உள்ளிருக்கும் அவனது ஜீவன்களையும் தொட்டிருக்கும் என்றால் அது மிகையல்ல. அவள் வயிற்றுக்குள் வளரும் உயிர்களுக்கு அவன் தன் முகத்தினை அப்போதே காட்டி பதிய வைக்க எண்ணினான் போல.
அழுத்தி அழுத்தி அங்கேயே முகம் புரட்ட, அந்த நேரத்திலா அவன் அன்னை அங்கு வர வேண்டும்.
இருவரும் இருக்கும் கோலம் கண்டு முகம் சுழித்தவாறே “ருத்ரா” என்றழைத்தார் கடுப்புடன்.
கதவைக் கூடத் தட்டாமல் வந்து நின்ற அன்னையை விட சட்டென அவன் தலையைத் தள்ளிவிட்டு வெடுக்கென பதறி எழுந்த இவளைக் கண்டு ஆயாசமாக வந்தது அவனுக்கு.
“இப்படி வெடுக்குன்னு எந்திரிக்கக் கூடாதுடி” திட்டியவன் அவளைப் பிடித்து அமர வைத்து “ஏன்மா.. உள்ள வர்றதுக்கு முன்னாடியே சத்தம் போட்டுட்டு வர வேண்டியதுதானே” என்றான்.
“தப்புத்தான்.. இனிமேல் நீ சொன்னது மாதிரியே வர்றேன்” என்று சொன்னவர் “உமாவுக்காக பால் கொண்டு வந்தேன். குடிக்கச் சொல்லு” என்று அவனுக்கு அருகே இருந்த மேஜையில் வைத்துவிட்டு நகரப் பார்க்க “அம்மா” என்றான் அவன்.
“என்ன ருத்ரா?”
“அம்மா நான் உன்கிட்ட அப்பவே என்ன சொன்னேன்”
“நேரா நேரத்துக்கு அவளுக்குக் கொடுக்குறதை நான்தான் செய்யணும்னு சொன்ன. அதான் பால் வந்த உடனே பாலைக் காய்ச்சி அவளுக்குக் கொண்டு வந்தேன்”
“கொண்டு வந்தது சரி.. இப்படித்தான் அங்கேயே வச்சுட்டுப் போவயா.. “
“வேறென்ன செய்யணும். நானே உன் பொண்டாட்டிக்கு ஊட்டி விட்டுட்டுப் போகணுமா?”
“அதுதானே நியாயம்”
“ருத்ரா..” முகம் ஒருமாதிரியாகிவிட
“அம்மா தலையில எதுவும் அடிபட்டு பாதி விஷயத்தை மறந்துட்டயா என்ன?” என்றான் இவன். உமா அமைதியாக உங்க இரண்டு பேர் பேச்சுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் இருந்தாள்.
“என்னடா உளறிட்டு இருக்க. எனக்கு கீழே வேலை இருக்கு. அடுத்து சமையலுக்கு என்ன வேணும்னு போய் பார்க்கணும். எனக்குன்னு கூடமாட வேலைசெய்ய கூட இந்த வீட்டுல யாரும் இல்லை. எல்லாமே நான்தான் பார்த்தாகணும்?” ஏனோ உமாவுக்காக இவ்வளவு தூரம் எடுத்து வந்ததையே மனம் ஜீரணிக்க மறுத்தது இதுல ஊட்டி வேற விடுவாங்க.. பொறுமிக் கொண்டே அவனைப் பார்த்தார்.
“அதாவது என் தம்பி பொண்டாட்டி.. அதான் உன் சின்ன.. இல்லை இல்லை உன் செல்ல மருமகள் அவங்களுக்கு நீங்க என்ன பண்ணீங்கன்னு சொல்லிக் காட்டவா…”
அதையெல்லாமா இந்த நாயீ ஞாபகம் வச்சுருக்கு. அய்யோ மணி அப்போ நாம வேற ரொம்ப ஓவரா பாசத்தைப் பொழிஞ்சுட்டோமே.. என்ற ரீதியில் அவனைப் பார்க்க,
“லட்சு லட்சும்மா… இதை மட்டும் குடிச்சுடுங்க. குடிங்க.. ஐயோ வேண்டாம்னு சொல்லக் கூடாது லட்சுக்குட்டி.. கொஞ்சம்தானே குடிச்சுடும்மா. உனக்காகவே வேற ஒரு ஹார்லிக்ஸ் வாங்கி இதுல கலந்துட்டு வந்துருக்கேன். நல்லா இருக்குது.. உன் அண்ணி கூட சொல்லுவா டேஸ்ட் நல்லா இருக்கும்னு.. குடிச்சுடும்மா.. அத்தைக்காக குடிம்மா.. குடிம்மா..” அவரைப் போலவே சொல்லிக் காட்டி
“ஞாபகம் வந்துடுச்சா.. இப்போ என்ன பண்ணுறீங்கன்னா.. அதே மாதிரியே உமா உமாம்மா.. இதைக் குடிங்க.. அப்போத்தான் உடம்புக்கு நல்லதுன்னு இவளையும் நீங்க குடிக்க வைக்கணும்” அவன் சொல்ல சட்டென அவனைப் பார்த்து வைத்தார். கண்களில் ஒருவித அசூயை தெரிந்தது.
உமாவுக்கு அதுக்கும் மேல் இருந்தது. இந்த டிராமாவை வேற சகிச்சுக்கிட்டு நிக்கணுமா? அவள் பார்வை அதைத்தான் சொன்னது.
ருத்ரன் அதைப் பற்றின கவலையே இல்லாமல் “என் தம்பி பொண்டாட்டிக்கு பண்ணது அத்தனையும் நீ வரிசை மாறாமல் செய்யணும். ஆரம்பி” என நன்றாக சாய்ந்துக் கொண்டு செய்தே ஆக வேண்டும் என்ற தொணியில் சொல்ல, பிடிக்கவே இல்லை என்றாலுங் கூட அவரும் உமாவை நோக்கி வந்தார்..
புயல் தாக்கும்..