5. நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன்
“என்னாச்சு மதுரா?”
பலத்த சிந்தனையில் இருந்தவளை அவனின் குரல் நிகழ் உலகத்திற்கு கொண்டுவர, அவனின் பரிவான பார்வை அவளுக்கு விளங்கவில்லை.
தன் எதிரே நின்றவனின் மீது எரிச்சலும் கோபமும் தான் போட்டி போட்டுக் கொண்டு வந்தது. தன் தந்தையிடம் காட்ட முடியாத கோபத்தை அவனிடம் காட்டினாள்.
“இன்னும் என்ன ஆகணும்? ஒன்னும் ஆக வேண்டாம்… உங்க வேலை எதுவோ அத மட்டும் பாருங்க மிஸ்டர் கருப்பு.. என்ன புரியலையா? அதான் என் பின்னாடி எனக்கு பாதுகாப்பா நிக்குற உங்க வேலையை மட்டும் பாருங்க போதும். தேவை இல்லாம என் முன்னாடி வந்து பேச ட்ரை பண்ணாதீங்க..” என்றாள் கோபமாய்.
அவளைப் பொருத்தவரை அது கோபமாய் தான் இருந்தது. ஆனால் அது அவனுக்கு அவளின் அளவு கடந்த வருத்தத்தின் வெளியிடாய் உணர்வுகளின் கொந்தளிப்பாய் தெரிய, கண்கள் கலங்க பேசிக் கொண்டிருந்தவளை அமைதியாக தான் பார்த்தான்.
அவளுக்கு பதிலும் பேசவில்லை அவள் பேசியதற்கு கோபமும் படவில்லை.
ஆனால் அவனின் அமைதியான அந்தப் பார்வையே மதுராவின் கோபத்தை இன்னும் தூண்டி விட,
“நீங்க என் அப்பா தர பணத்துக்காக தானே என்ன சேஃப்டி யா பாத்துக்க போறீங்க? அப்ப நான் ஒரு வகையில உங்க முதலாளி தானே? இனி என்ன வா போனு கூப்பிடாதீங்க.. மேடம்னு சொல்லி கூப்டுங்க..” என்றாள் அவனை கோபப்படுத்துவதற்காவே!
அவள் நினைத்தது போல பதிலுக்கு கோபப்படாமல் கருப்பசாமியும், “சரிங்க மேடம்” வேண்டுமென்றே சொல்ல,
மூக்கு விடைக்க அவனை முறைத்துப் பார்த்தவளுக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை. கல்மேடையில் தொங்க விட்டிருந்த கால்களை தூக்கி மேலே வைத்துக் கொண்டு அதில் முகம் புதைத்தாள்.
சில நொடிகளோ நிமிடங்களோ கழித்து அவள் நிமிரும் போது இருட்ட தொடங்கியிருந்தது. தன் அருகில் பார்க்க, கருப்பசாமியை காணவில்லை.
அவன் தன் அருகில் இல்லை என்பதை உணர்ந்ததும், “எல்லாரும் என்னை விட்டு போயிடுங்க.. யாரும் எனக்கு வேண்டாம்” என்று விட்டு கதறி அழ, அவளின் மனநிலையை அவளாலேயே கணிக்க முடியவில்லை அழ வேண்டும் போல் இருந்தது ..யாரும் இல்லை என்று தைரியம் எல்லாம் சேர்ந்து கொள்ள அழுதுவிட்டாள் நன்றாகவே! அவள் நெஞ்சில் இருந்த அழுத்தம் எல்லாம் கண்ணீராய் மாறியது.
ஆனால் அவள் நினைத்தது போல் கருப்பசாமி அவளை விட்டு செல்லவில்லை. இரண்டு மரங்கள் தள்ளி இருந்த இடத்தில் தான் மறைவாக நின்றிருந்தான். அவள் அழுவதை பார்த்ததும் அவள் அருகில் வர நினைத்தவன், தூரத்தில் ஜெகதீஷ் வருவதை பார்த்ததும் அப்படியே நின்ற இடத்திலேயே மறைவாய் நின்று கொண்டான்.
ஜெகதீஷ் தோட்டத்தின் பக்கம் வருவது அரிதுதான்.. சொல்லப்போனால் மதுராவை சிறுவயதில் தள்ளிவிட்ட பிறகு, அவனுக்கு தோட்டத்தைப் பார்த்தாலே ஒருவித பயம்தான்.. அது இப்பொழுது வரை தொடர தூரத்திலிருந்து தோட்டத்தின் அழகை ரசித்துக் கொள்பவன்.. அவ்வளவு எளிதில் தோட்டத்திற்குள் எல்லாம் வர மாட்டான். ஆனால் இன்று மதுரா கீழே தனியாக கை, கால்களை மடித்து தலை கவிழ்ந்து சுருண்டு போய் அமர்ந்திருந்த விதத்தை தன் அறை பால்கனியில் இருந்து பார்த்தவனுக்கு பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தனது விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி கீழே வந்து விட்டான். அதன் பிறகு தயக்கம் வந்து ஒட்டிக்கொள்ள அவனின் வேகநடை குறைந்து மிதமான நடையாக மாறியது.
அவளை நெருங்க நெருங்க தான் அவள் அழுது கொண்டிருக்கிறாள் என்பது வேறு தெரிய, நடையை வேகப்படுத்தியவன்,
ஒரு நொடி தயக்கத்திற்கு பிறகே, அவளின் தோள் தொட்டு அழைத்தான். அழுகையினூடையே நிமிர்ந்தவளுக்கு, கண்களில் கண்ணீர் நிறைந்திருந்ததால் எதிரே நின்றவன் மங்கலாய் தான் தெரிந்தான்.
மதுராவும் யார்? என்று புறக்கையால் கண்ணீரை துடைத்து விட்டு பார்க்க, ஜெகதீஷ் நிற்பதை பார்த்ததும் அதிர்ந்தாள்.
இவன் எங்கே இங்கே? ஏற்கனவே நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கிறோம் இவன் வேறு தன்னை கொத்துப் பரோட்டா போட வந்து விட்டானா? என்று நினைத்தவள்,
“என்ன ஜக்கு வாக்கிங் வந்தியா? நான் உன்ன டிஸ்டர்ப் பண்ணல.. நான் போயிடுறேன். இனி உன் கண்ணுல பட மாட்டேன்.. எதுவும் திட்டிடாத” என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல போக,
அவளின் வெகு நாளைக்கு பிறகான ஜக்கு என்ற அழைப்பு.
“என்ன ஜக்கு வாக்கிங் வந்தியா? நான் உன்ன டிஸ்டர்ப் பண்ணல.. நான் போயிடுறேன். இனி உன் கண்ணுலயே பட மாட்டேன்.. எதுவும் திட்டிடாத.. நான் ஆல்ரெடி மூட் அவுட் ல இருக்கேன்” என்று அவசரமாய் சொல்லிவிட்டு உள்ளே செல்ல எழுந்தாள் மதுரா.
வெகு வருடங்களுக்குப் பிறகான அவளின் ஜக்கு என்று அழைப்பு!
அதை உணர்ந்தவன் போல்
“ஏய் குட்ட நில்லு டி… எதுக்கு நீ அழுதுட்டு இருந்த? ஏதாவது பிரச்சனையா? என்கிட்ட சொல்லு”என்று முதல் முறையாக அவளிடம் சாதாரணமாக பேசினான் ஜெகதீஷ்.
“நான் ஒன்னும் குட்ட இல்ல.. நான் கரெக்டான ஹைட்ல தான் இருக்கேன் நீ தான் வளர்ந்த மாடு மாதிரி இருக்க” என்று முறுக்கி கொண்டாள். அவன் அடுத்து சொன்ன வார்த்தைகளை கவனிக்காதது போல்..
“அப்ப நானும் ஜக்கு இல்ல.. என்ன பாத்தா ஜக்கு மாதிரியா இருக்கு? பேரு வச்சிருக்கா பாரு ஜக்கு மக்குன்னு” என்றான் அவளைப் போலவே.
“சரியா சொன்ன நீ ஜக்கு இல்ல சரியான மக்கு தான். இனி உன்னை மக்குனே கூப்டுறேன்..மக்கு.. மக்கு…” என்றாள் பதிலுக்கு..
“ஏய் குட்ட மக்கு னு சொன்னா மண்டைய ஒடச்சிடுவேன்”என்று ஜெகதீஷும் கோவமாய் சொல்ல,
“அட மங்குனி மக்கே! அதான் சின்ன வயசுலயே தள்ளி விட்டு ஓடச்சிட்டியே.. இன்னும் உடைக்க என்ன இருக்கு” என்றாள் தனது தலையில் இருந்த தழும்பை சுட்டிக்காட்டி..
“அப்டி ஒடச்சும் உனக்கு வாய் குறைய மாட்டேங்கே குட்டிச்சாத்தான்” என்று நக்கல் தோரணையில் வெளியே சொன்னாலும்,
அவளின் தழும்பை பார்த்தவனுக்கு அன்றைய நினைவில் மனம் கனத்தது. தன் மேல் தவறுதான் என்றாலும் அந்த அறியா வயதில் அவனும் இவ்வளவு பெரிய அடிபடும் என்று நினைக்கவில்லை.
“ஹான் அதெல்லாம் உன்ன விட வாய் குறைவா தான் இருக்கு மக்கு” என்று ஏற்கனவே உணர்ச்சிவசத்தில் இருந்த மதுராவும் இன்று அடங்குவதாய் இல்லை.
இருவரும் சண்டைக்கோழிகளாய் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு நின்றனர்.
இது அவர்களின் வெகு ஆண்டுகளுக்கு பிறகான சண்டை… விவரம் தெரியாத வயதில் அவன் சண்டை இட்டாலும் மதுரா கொஞ்சம் பொறுத்து தான் போவாள். அதனாலேயே ஜெகதீஷ் அவளை பாடாய் படுத்துவான். ஆனால் இப்போதைய மதுரா அவனுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்தாள்.
இருவரும் வெளிப்பார்வைக்கு ஒருவரை ஒருவர் முறைத்தபடி இருந்தாலும் பல வருடங்கள் கழித்து நெஞ்சில் பாரம் குறைந்து இதமான உணர்வு ஏற்பட்டதை இருவராலும் மறுக்க முடியாது.
ஆனால் அந்த இதமான உணர்வை குலைப்பதற்காகவே அளவெடுத்து செய்தது போல் பிரகதீஷ் ஜெகதீஷை தேடி வந்து விட்டான்.
வந்ததும் ஜெகதீஷ் அருகே நின்ற மதுராவை பார்த்து முகத்தை சுழித்து, “இவகிட்டலாம் என்ன பேச்சு உனக்கு? அக்காக்கு தெரிஞ்சா கோபப்படும்னு தெரியாதா? சீக்கிரம் வா ஜெகா.. இன்னைக்கு நைட் வினோ அக்கா டின்னருக்கு வரேன்னு சொல்லி இருக்கா.. நம்ம பிளான் ஞாபகம் இருக்கு தான?.. அதுக்குப் ப்ரிப்பரேஷன் பண்ண தான் உன்னை கூப்பிட வந்தேன்” என்றதும், ஜெகதீஷும் மதுராவை மறந்தவனாக, “ஐயோ நானும் மறந்துட்டேன் டா சீக்கிரம் அரேஞ்ச்மெண்ட்ஸ் எல்லாத்தையும் பண்ணுவோம்” என்றதும், பிரகதீஷ் அவனை இழுத்துக் கொண்டு செல்ல, செல்வதற்கு முன் மதுராவை முறைக்க மறக்கவில்லை அவன்.
ஜெகதீஷ் மதுராவை பார்த்தாலும் எதுவும் சொல்லாமல் அவன் இழுத்து இழுப்பிற்கு சென்று விட்டான்.
அவர்கள் சென்றதும் இப்பொழுது மதுரா மட்டுமே தோட்டத்தில் தனித்து நின்றிருந்தாள்.
அவளுக்கு தெரியும் நாளை வினோதாவின் பிறந்த நாள்! அது அவளின் உடன் பிறந்த சகோதரர்களால் இன்று இரவு மிகக் கோலாகலமாக கொண்டாடப்படும் என்றும்.. நாளை அவர்கள் குடும்பமாக எங்காவது சென்று சுற்றி வருவார்கள் என்றும்..
மீண்டும் பழைய நினைவுகள் எல்லாம் வர,கண்கள் மீண்டும் கலங்க ஆரம்பிக்க, அவள் இதழ்களில் விரக்தியான புன்னகை அரும்பியது.
நீண்ட பெருமூச்சை வெளியிட்டவள்.. ஒரு வித ஏக்கத்தோடு வானத்தை பார்த்தாள் இருட்டிக் கொண்டிருந்த வானத்தில் மேகமூட்டத்திற்கு இடையில் இருந்து எட்டிப் பார்த்தது நிலா. அது அவளுக்காய் புன்னகைத்தது போல ஒரு பிரம்மை.
திடீரென்று சில்லென்று மேனி தழுவிய மாலை நேர குளிர் காற்றும் அவளை அணைத்து ஆறுதல் படுத்துவது போலவே இருக்க, அதை உணர்ந்தவளின் முகத்தில் சிறியதாய் ஒளி பரவியது.
எல்லாம் நன்மைக்கே! வாழ்க்கை வாழ்வதற்கே! நானும் நன்றாக வாழ்வதற்கு பிறந்துள்ளேன்! என்றெல்லாம் மனதிற்குள் தனக்குத்தானே உற்சாகமூட்டி கொண்டவள்,
சுற்றும் முற்றும் யாராவது இருக்கிறார்களா? என்று ஒரு முறை பார்த்துக் கொண்டாள்.
தன்னைத் தவிர அங்கு யாரும் இல்லை என்று உணர்ந்தவள்,
“ஐ அம் ய ஹாப்பி யஸ்ட் பெர்சன் இன் தி வேர்ல்ட்…”என்று கத்திய படி மகிழ்ச்சியாய் பவளமல்லி மரத்தை சுற்றியபடி ஓடினாள்.
மரத்தின் மேல் கிளைகளில் ஏறி அமர்ந்திருந்தவன்,
அவளையும்.. அவளின் ஒவ்வோரு அசைவுகளையும் கவனித்துக் கொண்டிருந்தான் தூரத்திலிருந்தே! அவளை நெருங்க நினைக்கவில்லை! தன் இருப்பையும் காட்டிக் கொள்ளவில்லை!
ஆனால் ரசித்தானோ?
______________________________
மறுநாள் வினோதாவின் பிறந்தநாள் என்பதால், குடும்பத்தோடு அவர்களின் குலதெய்வம் கோவிலுக்கு செல்வதாக முடிவு எடுத்தனர்.
குடும்பத்தோடு என்றால் கண்டிப்பாக அதில் மதுரா கிடையவே கிடையாது. அதுவும் வினோதாவின் பிறந்தநாள் என்றால் அவள் மதுராவை தங்களோடு வருவதற்கு அனுமதிக்கவே மாட்டாள்.
முத்து மாணிக்கம் நினைத்தால் அவளை அழைத்து செல்லலாம் தான்.. ஆனால் அவருக்குமே மதுராவை அழைத்து செல்வதில் அவ்வளவு பிரியம் இல்லை.
மதுராவை அழைத்து சென்றால் பிறந்தநாள் அதுவுமாக மூத்த மகள் மூஞ்சை ஏழு முழத்திற்கு தூக்கி கொண்டிருப்பாள். மகன்கள் இருவரும் அவளுடன் முட்டிக்கொண்டு சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு பஞ்சாயத்து பார்த்தே தனக்கு முடியாது என்பதால் பெரும்பாலும் மதுராவை வெளியே அழைத்து செல்வதை தவிர்த்து விடுவார். இந்த முறையும் அப்படியே தவிர்க்க,
எப்பொழுதும் போல் இன்றும் மதுரா மட்டும் வீட்டில் தனித்து இருக்க வேண்டிய நிலை!
அவர்களின் குலதெய்வம் கோயில் தேனி அருகே உள்ள ஒரு குக் கிராமத்தில் இருக்க, அங்கு சென்று சேரவே மதிய நேரத்தை தாண்டி விடும் என்பதால், கோவிலில் பூஜையை முடித்துவிட்டு அங்கிருந்த அவர்களின் பூர்வீக வீட்டில் அன்று இரவு தங்கிவிட்டே வர முடிவு செய்து இருந்ததார்கள்.
மதுராவின் பாதுகாப்பிற்காக வீட்டை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்திய, முத்துமாணிக்கம், அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமான கருப்பசாமி இருப்பதால், அவளை பத்திரமாய் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு சென்று விட்டார் குடும்பமாய்! மகிழ்ச்சியாய்!
வரிசையாக வீட்டை விட்டு வெளியேறிய கார்களை ஏக்கம் சுமந்த விழிகளோடு பார்த்தாள் மதுரவாணி.
“மேடம் ?”என்று அவளின் பின்னால் ஒரு குரல் கேட்க,
‘இவன் ஒருத்தன் ..தெரியாம நேத்து என்ன மேடம்னு கூப்பிட சொல்லிட்டேன்.. அதுல இருந்து இப்ப வர மேடம் மேடம்னு சொல்லியே டார்ச்சர் பண்றானே முருகா’ என்று மனதிற்குள் கருப்பசாமியை வறுத்தெடுத்தவள்,
“என்ன மிஸ்டர் கருப்பு?”என்று கேட்டாள் கோபமாய்.
அவளின் மிஸ்டர் பிளாக் அவள் கோபமாய் இருக்கும் சமயம் மிஸ்டர் கருப்பாக மாறி இருந்தது. அவனும் ஏன்? எதற்கு? என்று எந்த விளக்கமும் கேட்கவில்லை. இவளும் சொல்லவில்லை.
“எவ்ளோ நேரம் கார்போன பக்கம் பார்த்துட்டு இருப்பீங்க மேடம்? உள்ள போகலாமே மேடம்”
“நான் போக தான் போறேன் மிஸ்டர் கருப்பு”என்றாள் பல்லை கடித்துக் கொண்டு,
“நீங்க உள்ள போனா தான் மேடம் நானும் உள்ள போக முடியும் மேடம்” என்று அவன் வார்த்தைக்கு வார்த்தை மேடம் போட,
“ஸப்பா! மிடில… ஏய் மிஸ்டர் பிளாக் நேத்து ஏதோ ஒரு கோபத்துல மேடம்னு கூப்பிட சொல்லிட்டேன். என் தப்பு தான் தயவு பண்ணி இனி மேடம்னு கூப்பிடாதிங்க” என்று சொல்லிவிட,
அவன் அதற்கும் “சரிங்க மேடம்” என்று பதிலளிக்க,
“சரியான ஊம சேட்டை புடிச்ச ஆளு இந்த பிளாக்கு”என்று முணுமுணுப்பாய் சொல்லிவிட்டு அவனை முறைத்துக் கொண்டே வீட்டிற்குள் சென்று விட்டாள்.
அவள் சொன்னது மிகத் தெளிவாய் அவனது பாம்பு காதுகளுக்கு கேட்டு விட, மில்லி மீட்டர் அளவு புன்னகை அவன் இதழில்!
அதை அவளுக்கு தெரியாமல் மறைத்துக் கொண்டவன், அவள் பின்னாலேயே வீட்டிற்குள் சென்றான்.
மதிய உணவு வரை அறைக்குள்ளேயே அடைந்து கிடந்து தன்னிடம் இருக்கும் சில நாவல்களை படித்துக் கொண்டும் தனக்கு பிடித்த பாடல்களை சத்தமாய் ஒலிக்கவிட்டு கேட்டுக்கொண்டும் நடனமாடிக்கொண்டும் இருந்தவளுக்கு, அதற்கு மேல் அறைக்குள்ளேயே அடைந்து கிடக்க முடியவில்லை.
சரி தோட்டத்திற்காவது செல்வோம் தனது மொபைலையும் இயர் பட்ஸையும் எடுத்துக்கொண்டு கீழே இறங்கி வந்தவள், முதல் தளத்திற்கு வரும்போதுதான் கவனித்தால், அவளின் தந்தையின் அலுவலரை டிஜிட்டல் லாக் போடாமல் திறந்திருந்தது.
அவளுக்கு நன்றாகவே தெரியும் அவளது தந்தை வீட்டில் இல்லை என்றால் அவ்வறை எப்பொழுதுமே பூட்டிதான் இருக்கும் என்று!
இன்றும் அப்படித்தானே இருந்திருக்க வேண்டும்? ஒருவேளை தந்தை கவனக்குறைவாக சென்றுவிட்டாரோ? என்று யோசித்தவள் அடுத்தப்படி கீழ் இறங்காமல் அப்படியே நிற்க,
அதே சமயம் கருப்பசாமி அவளின் தந்தையின் அலுவலரை விட்டு கையில் சில டாக்குமெண்ட்ஸ் அடங்கிய ஃபைலுடன் வெளியே வந்ததும் மிக கவனமாக கதவில் பொருத்தப்பட்டிருந்த டிஜிட்டல் லாக்கை பாஸ்வேர்ட் போட்டு பூட்டியதை பார்த்ததும், அவளுக்கு வித்தியாசமாய் தெரிய,
இவன் ஏதோ தவறு செய்கிறானோ? என்று நினைத்தபடி அவனை சந்தேகமாய் பார்த்தாள் மதுரா.
முதல் முறையாக, ‘யார் இவன்? நல்லவனா? கெட்டவனா?’ என்ற கேள்வி அவள் மனதில் தீயாய் எழுந்தது.
தொடரும்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
37
+1
3
+1
2