Loading

திடீரென்று “கந்தன் ஏன் இன்னும் வரவில்லை. பேருந்துகள் எல்லாம் ஓடுகிறது என்று செய்தியில் சொன்னார்களே! என்றாள் தெய்வானை. 

“எல்லா இடங்களுக்கும் பேருந்துகள் போகுகிறதா என்று தெரியவில்லை. முக்கிய நகரங்களுக்கு தானே சொல்லி இருக்கிறார்கள்” என்று ஏதோ சொல்லி சமாளித்தான். 

தாங்கள் இருவரும் இருக்கும் இனிமையான தனிமைப் பொழுதுகளை இழக்க விரும்பாத குகன், கந்தனுக்கு ஃபோன் செய்து தான் ஊருக்கு செல்லும் வரை நீங்கள் இங்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டான். 

அதை எப்படி அவனால் தெய்வானையிடம் சொல்ல முடியும். அதேபோல் காலையில் மட்டுமே கோனார் வந்து பால் கறந்து செல்வார். அவரிடம் தேவையான பொருட்களை வாங்கி வரும்படி சொல்லிவிடுவான். மறுநாள் காலையில் அவர் வாங்கி வந்து கொடுத்து விடுவார், அவர் வந்து செல்வதே தெய்வானைக்கு தெரியாது. 

நாட்கள் செல்ல, அவனைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது என்பதால் ஃபோன் செய்து அவனை வீட்டிற்கு வரும்படி கூறினார் மீனாட்சி. அவரிடம் இனிமேலும் மறைக்க விரும்பாத குகன், “என்னால் இப்பொழுது வர முடியாது” என்று கூறி “எனக்கு திருமணம் முடிந்து விட்டது” என்றும், தன் திருமணத்தைப் பற்றி கூறினான். 

அதில் அதிர்ந்த மீனாட்சி “என்னை ஏமாற்றுவதற்காக சும்மா சொல்லாதேடா” என்றார்.

“இல்லை அம்மா. உண்மையிலேயே கல்யாணம் முடிந்து விட்டது” என்று தங்கள் திருமணம் செய்து கொண்டபோது எடுத்த புகைப்படத்தை அனுப்பி விட்டான். 

அதில் மேலும் அதிர்ந்த மீனாட்சி “உனக்கு இங்கு நான் பெண் பார்த்து இருக்க, நான் பார்த்த பெண்ணை விட்டு வேறு எவளையோ கல்யாணம் செய்து இருக்கிறாயே!” என்று மகனை திட்டினார். தெய்வானையை தவறாக பேசினார். 

அதில் கோபம் கொண்ட குகன் “அவள் என் மனைவி. அவளை பற்றி தவறாக என்னிடம் பேசினீர்கள் என்றால் அவ்வளவுதான். உங்களுக்கு என்றைக்கு அவளையும் ஏற்றுக் கொள்ள தோன்றுகிறதோ, அன்றுதான் நான் அங்கு வீட்டிற்கு வருவேன். இல்லை நான் இங்கேயே இருந்து கொள்கிறேன்” என்று ஃபோனை வைத்து விட்டான். 

பின்னர் மகன் சொன்ன செய்தியை கணவரிடம் கூற, அவரும் ஃபோன் செய்து “இப்படி பெரியவர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்வது சரியாடா?” என்று மகனிடம் கேட்டார்.

“அது சரியா? தவறா? என்றெல்லாம் இப்பொழுது பேசி பிரயோஜனம் இல்லை அப்பா. நான் அவளை மணந்து கொண்டேன். அவள் என் மனைவி. மனைவியுடன் நீங்கள் என்னை வரவேற்றால் நம் வீட்டிற்கு நான் வருகிறேன். இல்லை என்றால் நாங்கள் இங்கேயே இருந்து கொள்கிறோம்” என்றான் முடிவுடன். 

சக்திவேலுக்கு தன் மகன் தங்களுடன் இருந்தால் போதும் என்று இருந்தது. ஆகையால் “மருமகளையும் அழைத்துக் கொண்டே வீட்டிற்கு வா” என்றார். 

அவரது மருமகள் என்ற அழைப்பில் மனமகிழ்ந்த குகன், “கண்டிப்பாக வருகிறோம். அம்மாவிடமும் சொல்லுங்க. அம்மா சொன்னா தான் நான் அவளை அழைத்துக் கொண்டு வருவேன்” என்று சொல்லி விட்டான். 

தன் தாய் தந்தையிடம் பேசியதை தெய்வானையிடம் சொல்ல, அவளுக்கு பயம் வந்தது.

“உங்கள் அம்மாவிற்கு என்னை பிடிக்கவில்லையா? என்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்களா?” என்று பயந்தபடியே அவனிடம் கேட்க,

அவளை அணைத்துக்கொண்ட குகன் “யாருக்கு உன்னை பிடித்தால் என்ன? பிடிக்காவிட்டால் என்ன? நீ என் மனைவி. எனக்கு உன்னை பிடித்தால் போதும்” என்று அவளின் பயம் போக்க இறுக்கமாக அணைத்துக் கொண்டான். 

அதன் பிறகு அவனது தாய் அவனிடம் பேசும் பொழுதெல்லாம் அவனை மட்டுமே வரும்படி கூறிக் கொண்டிருந்தார். இவனும் மறுத்து பேசிக் கொண்டிருக்க, 

ஒரு நாள் “தெய்வானை நீங்கள் மட்டுமாவது போய் அவர்களை பார்த்துவிட்டு வாருங்களேன் அவர்களுக்கும் உங்களை பார்க்க வேண்டும் என்று இருக்கும் அல்லவா?” என்றாள். 

“கண்டிப்பாக அவர்கள் உன்னை ஏற்றுக்கொள்வார்கள் தெய்வா. அதன் பிறகு நாம் ஒன்றாகவே அங்கு செல்வோம்” என்று அவளது பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டான்.

இப்படியே இரண்டு மூன்று நாட்கள் ஓட தோட்டத்தில் ஏதோ சத்தம் கேட்டதும் “நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன்” என்று வேகமாக குகன் வெளியே சென்று விட்டான். அவன் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் அவனது ஃபோன் ஒலிக்க, அவனது அம்மா தான் அழைத்து இருந்தார் ஃபோனை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல குகன் எங்கே இருக்கிறான் என்று தெரியவில்லை. அதற்குள் ஃபோன் கட் ஆகி, மீண்டும் அழைத்தார். 

காலம் கடத்தாமல் அதை அட்டென்ட் செய்த தெய்வானை “ஹலோ” என்றாள் தயக்கமாக.

அவளது சத்தத்தை கேட்டதும் மகன் சொன்ன பெண் இவள்தான் என்று புரிந்து கொண்ட மீனாட்சி, “என்ன? பணக்காரனா ஒருத்தன் கிடைத்ததும் வளைத்து போடலாம் என்று நினைத்து விட்டாயா?” என்றார். 

அவர் அப்படி கேட்டதும் அவளுக்கு கண்களில் கண்ணீர் வர, “அப்படி எல்லாம் இல்லை” என்று பேச வருவதற்குள், 

“என்னிடம் நீ பேசாதே. உன்னை கட்டிக்கிட்டதிலிருந்து என் பையன் என்னுடன் சரியாகவே பேசுவதில்லை. என்னத்த காட்டி அவனை மயக்கினாயோ! தெரியவில்லை? வீட்டிற்கும் வர மாட்டேங்கிறான்” என்று தரக்குறைவான வார்த்தைகளை எல்லாம் சொல்லி அவளை திட்டி விட்டு வைத்தார். 

அதில் அதிர்ந்த தெய்வானை அப்படியே திண்ணையில் அமர்ந்து விட்டாள்.  

அரை மணி நேரம் கழித்து வந்த குகன் “ஏதோ ரோட்ல போற நாய் உள்ள வந்துருச்சு போல இருக்கு, அதுதான் ஒரே சத்தம்” என்று பேசிய படியே அவளின் அருகில் அமர்ந்தான். 

அவன் அமர்ந்ததும் தன்னை சமாளித்த தெய்வானை லேசாக புன்னகைத்துக் கொண்டாள். 

“ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்? உடம்புக்கு ஏதும் சரி இல்லையா?” என்று அவளது நெற்றியை தொட்டுப் பார்த்தான். 

அவனது கைகளைப் பிடித்து தன் கையில் வைத்துக் கொண்டு, “அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க. நீங்க வேகமா வெளியே போனீங்கல்ல. இன்னும் உங்களை காணுமே என்று இங்கேயே உட்கார்ந்திருந்தேன்” என்றாள். 

“ஒரு அரை மணி நேரம் கூட என்னை பார்க்காமல் உன்னால் இருக்க முடியாதா?” என்று அவளது நெற்றியில் நெற்றி முட்டினான் கேட்டான். 

அதன் பிறகு அவன் செல்ல சீண்டல்கள் சீண்ட, வழக்கமாக பகல் என்று மறுக்கும் தெய்வானை இன்று அவன் ஆசைக்கு இணங்கினாள்.

கூடல் முடிந்து அவளை விட்டு விலகிய குகன் “வழக்கமா பகல்ல உன் பக்கத்துல வந்தா, எல்லாம் நைட்டு தான் என்று விலகி விடுவாய்? இன்று என்ன?” என்று அவளை அனைத்தான். 

“இதில் என்ன இருக்கு கணவனுக்கு என்னென்ன ஆசையோ! அதையெல்லாம் நிறைவேற்றுவது தானே மனைவியின் கடமை” என்று அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். 

இப்படியே நாட்கள் கடக்க உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியாக மனிதனாக குகன் தன்னை உணர்ந்து உல்லாசமாக இருந்தான். 

அவனது மொத்த சந்தோஷத்தையும் குலைக்கும் விதமாக ஒரு நாள் அவனது தாய் மீனாட்சி, அவனது தந்தை சக்திவேலுக்கு கொரோனா வந்து விட்டதாக கூறி அழுதார். “டாக்டர் என்னென்னவோ சொல்றார். ரொம்ப பயமா இருக்கு. நீ வாப்பா” என்று அழுதார். 

அதைக் கேட்டதும் அதிர்ந்த குகன், தெய்வானையை அழைத்து, “நாம் இப்பொழுது உடனே ஊருக்கு செல்ல வேண்டும். அப்பாவிற்கு உடம்பு சரி இல்லையாம்” என்று பதட்டமாக கூறினான். 

அதன் பிறகு கந்தனுக்கு அழைத்து தான் இப்பொழுதே ஊருக்கு கிளம்புவதால், அவர்களையும் கிளம்பி வந்து வீட்டை பார்த்துக்கும்படி கூறினான். அனைத்தையும் பரபரப்பாக செய்து கொண்டிருக்க தெய்வானையோ அமைதியாக அவனை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். 

அவளை பார்த்த குகன் “என்ன தெய்வா? நான் அவசரமாக கிளம்பி கிட்டு இருக்கேன். நீ இப்படி அமைதியாக உட்கார்ந்து இருக்கிறாய்?” என்று சந்தேகமாக கேட்டான். 

உட்கார்ந்தபடியே அவனின் வயிற்றுடன் அணைத்துக் கொண்டு, அவனின் மேல் தலை சாய்த்த தெய்வானை, “இப்பொழுது நான் உங்கள் கூட வரவில்லை” என்றாள் அமைதியாக.

“என்ன தெய்வா? புரியாமல் விளையாடாதே! உன்னை இங்கு விட்டுவிட்டு நான் மட்டும் தனியாக போகனுமா? முடியாது! சீக்கிரம் எழுந்து கிளம்பு” என்று கோவமானான் குகன். 

– தொடரும்..

– அருள்மொழி மணவாளன்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
15
+1
4
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்