Loading

வானம் 05

னது வீட்டு காம்பவுண்ட்டிற்குள் நின்றிருந்தவளின் கண்கள் அடிக்கடி வாசலையும், சாலையையுமே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. நீண்ட நேரமாக தனது பேத்தியின் செயல்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்த கற்பகம்மாள் அவள் அருகில் வந்து, “என்னடா மயிலு, ரொம்ப நேரமா ஏன் வெளியவே எட்டி எட்டிப் பார்த்துட்டு இருக்க?” என்றார் கேள்வியாய்.

“அதுவந்து…” என்றவள் முழுதாய் பதிலளிக்காமல் மீண்டும் சாலையையே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் இதழிகா. “என்ன மா?” என அவள் தோளைத் தொட, “சரயுவ காணோம் பாட்டி மா” என்றவளின் முகம் சோகத்தையும் ஏக்கத்தையும் ஒருசேர தத்தெடுத்திருந்தது.

“சரயுக்கு ஏதாவது முக்கியமான வேல இருந்திருக்கலாம் டா மயிலு. சரி, நீ உள்ள வா” என அவளை உள்ளே அழைத்துச் செல்ல முற்பட, “இல்ல பாட்டி மா. சரயு கண்டிப்பா நாளைக்கு வருவேன்னு சொல்லிருந்தாங்க” என்றவள் மீண்டும் சாலையில் கண்களை பதிக்க, கற்பகம்மாளிற்கோ மனம் பதறியது.

ஒரே நாள் தான் என்றாலும் சரயு இதழிகாவோடு பழகிய விதம் தான் இன்றும் அவளை எதிர்பார்க்கத் தூண்டியிருக்க கற்பகம்மாளும் வாசலை எட்டிப் பார்த்துவிட்டு, “சரயு வந்தா உன்னை வந்து கண்டிப்பா பார்ப்பா டா மயிலு. நீ கவலப்படாம உள்ள வா” என அவளை வற்புறுத்தி உள்ளே அழைத்துச் சென்றார்.

தன் பாட்டியின் கைப் பற்றி உள்ளே சென்றாலும் அவளது கண்கள் வாசலைத் தான் பார்த்துக் கொண்டிருந்தன. அதனைக் கவனித்த கற்பகம்மாள் என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்பிப் போனார்.

இதழிகாவை சமாதானப்படுத்த முயன்று அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருந்தாலும் உடனே தனது மகனுக்கு அலைப்பேசியில் தொடர்புக் கொண்டு இதழிகாவை பற்றி கூற, அவனும் அன்று விரைவாக வீடு வந்திருந்தான்.

“பாவம் அந்த பொண்ணுக்கு படிக்கிற வேல எதும் இருந்து வரலயோ என்னவோ! ஆனா நம்ம பாப்பா ரொம்ப எதிர்பார்க்க ஆரம்பிச்சுட்டா கண்ணா. அவ முகத்துல தெரிஞ்ச அந்த ஏமாற்றம்…” என முடிக்க முடியாமல் தன் மகனைப் பார்க்க,

“புரியுது மா. இதுவரைக்கும் இதழி மா’வுக்கு பிரண்ட்ஸ்னு யாரும் இல்லல்ல. அதான் அந்த பொண்ணு வந்து பழகுனோனே ஒட்டிக்கிட்டா. ரெண்டு மூணு நாள்ல சரியாகிருவா மா. நீங்க கவலப்படாதீங்க” என்றவன், நடுக்கூடத்தில் அமர்ந்து பொம்மைகளோடு விளையாடிக் கொண்டிருந்த தன் மகளை கண்களால் வருடினான்.

தன் பேத்தியின் அருகில் செல்ல முற்பட்ட கற்பகம்மாளிடம், “அந்த பொண்ணு பேரு என்ன ம்மா?” என்றான் சித்தார்த். நேற்று இரவு சரயுவைப் பற்றி தான் பக்கம் பக்கமாக தன் தந்தையிடத்தில் கதையளந்திருந்தாள் இதழிகா.

ஆனால் தன் மகளின் முகத்தில் அரும்பியிருந்த மகிழ்வை ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு அதற்கு காரணமானவளின் பெயர் கூட மனதில் பதியாமல் போயிருந்தன.

“சரயு, ஏன் பா?” என்றவரிடம், “ஒன்னுமில்ல மா, சும்மாதான்” என்றவன் எழுந்து வெளியே வந்து போர்டிகோவில் நின்றவனின் பார்வை அருகே இருந்த மகளிர் விடுதியின் மேல் படர்ந்தது.

ன் அறையில் பலகணி வழியே இதழிகாவின் வீட்டை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் சரயு. என்னதான் சம்யுக்தாவிடம் அங்கு செல்ல மாட்டேன் என்று கூறி இருந்தாலும் அவள் மனம் முழுவதும் இதழிகா தான் நிறைந்திருந்தாள். ஒருநாள் மட்டுமே தான் பழக்கம் என்றாலும் அந்த குழந்தையோடு அவளது உறவு ஏனோ பல ஆண்டு பழக்கமாய் உணர வைத்திருந்தது. அந்த உறவிற்கு அவளால் விளக்கம் கூற இயலவில்லை.

அவளை அங்கு செல்ல விடாமல் இருப்பதற்காக பிராஜெக்ட்டை காரணம் காட்டி அவளை இழுத்துப் பிடித்து வைத்திருந்தாள் சம்யுக்தா. ஆனால் அவளது மனதை எந்த கயிற்றால் கட்டுவது!

இதழிகாவின் வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தவளின் பார்வையில் பட்டான் சித்தார்த். அவனும் அந்நேரம் அவர்களது விடுதியை தான் பார்த்துக் கொண்டிருக்க, அவளது கண்களோ இதழிகா தெரிகிறாளா என அலைபாய்ந்து பின் சித்தார்த்தின் மீது படிந்தது.

அவனைப் பார்த்தவளுக்கு வானதியின் வார்த்தைகள் அவளது அனுமதி இல்லாமலே மனதில் ஓட ஆரம்பித்தன.

“சும்மாவா ஓடிப் போனா, புருஷன ஆம்பளையே இல்லனுல்ல சொல்லிட்டு ஓடிப் போனா”

அந்த வார்த்தைகளே காதில் ரிங்காரமிட, இதழிகாவின் நினைவுகளைத் தாண்டி தற்போது சித்தார்த்தின் நினைவுகள் படர்ந்தன. ‘ச்சே, பச்ச குழந்தைய விட்டுட்டு புருஷன் மேல இப்படி பழி போட்டுட்டு போற அளவுக்கு…’ என நினைத்துக் கொண்டிருந்தவளை மேலும் தொடர விடாமல் தடுத்திருத்தாள் சம்யுக்தா.

“இன்னும் தூங்கலயா டி, வா படுக்கலாம்” என அவள் தோளைத் தட்ட, என்ன கூறினாள் எனப் புரியாமல் தன் தோழியை பார்த்து விழித்தாள் சரயு.

“ஏய், ஏன் டி பேயறைஞ்சவ மாதிரி பார்க்கிற… சரி, வா நேரமாச்சு தூங்கலாம்” என்க, சரயுவின் பார்வையோ மீண்டும் இதழிகாவின் இல்லத்தின் மேல் திரும்ப அதற்குள் சம்யுக்தா பலகணியின் திரைச்சீலையை இழுத்து மூடியிருந்தாள்.

தன் தோழியின் கவனச்சிதறலைக் கவனித்திருந்தாலும் போகப்போக சரியாகிவிடும் என்ற எண்ணத்தில் சம்யுக்தாவும் அவளிடம் எதுவும் பேசாமல் படுக்கச் செல்ல மனமே இல்லாமல் தன் படுக்கையில் விழுந்தாள் சரயு.

தேப் போல் அடுத்தடுத்த நாட்களும் தொடர, இதழிகாவை சமாதானப்படுத்துவது தான் பெரும்பாடாகிப் போயின. சித்தார்த்திற்கு ஏனோ சரயு மேல் கோபம் எழுந்தது

அந்த கோபம் தன் தாயார்மேல் திரும்ப, “இனி யாராச்சும் இதழி மா கிட்ட பேச வந்தாங்கனு விட்ட அவ்ளோதான் மா. போதும், என் புள்ளையவும் நான் தொலைக்க தயாரா இல்ல” என்றவனிடம் பதில்பேச முடியாமல் நின்றிருந்தார் கற்பகம்மாள்.

இதழிகாவை ராமமூர்த்தி கடைக்கு அழைத்துச் சென்றிருந்த சமயம் பார்த்து சரயுவை பார்க்க அவளது விடுதிக்கே சென்றிருந்தார் கற்பகம்மாள்.

விடுதி வார்டனிடம் அவளைப் பற்றி விசாரிக்க, அவரோ அங்கிருந்த பெண்களிடம் சரயுவை அழைத்துவர சொல்லவும் அதனைக் கண்ட வானதி வேகமாக அங்குவந்து, “சரயுவும் சம்யுக்தாவும் ஷாப்பிங் போய்ருக்காங்க மேம். ஏன் மேம், எதும் அர்ஜென்ட்டா?” என்றவளின் கேள்வி வார்டனிடம் இருந்தாலும் பார்வை கற்பகம்மாளின் மேல் தான் இருந்தது.

அவளது பார்வை மாற்றத்தை உணர்ந்த கற்பகம்மாள், “பரவால்ல மேடம், நான் அப்புறம் சரயுவ பார்த்துக்கிறேன்” என்றவர் அங்கிருந்து கிளம்பினார்.

வெளியே வந்திருந்த தோழியர் இருவரும் ஒரு சூப்பர் மார்கெட்டின் முன் நின்றிருந்தனர். “ஏன் டி ஒரு சோப்பு வாங்க சூப்பர் மார்கெட் வரைக்கும் வரணுமா? அங்க பக்கத்துலயே வாங்கிருக்கலாம்ல” என்றவளுக்கு பதிலுரைக்காமல் உள்ளே இழுத்து சென்றிருந்தாள் சரயு.

“இவளோட ஒரே ரோதனையா போச்சு. எவளாச்சும் ஒரு சோப்பு வாங்க இவ்ளோ தூரம் வருவாளா” என சலித்தவாறே அவளை பின்தொடர்ந்தாள் சம்யுக்தா.

“என்ன சோப்பு டி வேணும்?” என சோப்புகள் அடுக்கப்பட்டிருந்த வரிசையில் நின்று வினவிக் கொண்டிருந்தவளுக்கு பதில் அளிக்காமல் சரயு வேறு எதையோ தேட, பதில் வராது போகவும் தன் தோழியை திரும்பிப் பார்த்தாள் சம்யுக்தா.

சரயுவின் பார்வை வேறெங்கோ பதிந்திருக்க அவளது பார்வை சென்ற திக்கை நோக்கினாள் அவள். அங்கு தன் தாத்தாவின் கைகளை கட்டிக்கொண்டு அவரின்மேல் சாய்ந்தவண்ணம் கையில் இருந்த சாக்லேட்டில் கவனம் பதிந்திருந்தாள் இதழிகா.

‘ஆக, மேடம் இதுக்கு தான் என்னை இங்க வரைக்கும் இழுத்துட்டு வந்தாளா!’ என நினைத்தவள், ‘அப்போ இது அவங்க அப்பாவோட கடையா?’ என வேகமாக கல்லாவில் அமர்ந்திருந்தவனை நோக்க அங்கே சித்தார்த் தான் நடுநாயகமாக வீற்றிருந்தான்.

தன் தோழியை சோதித்துப் பார்க்க நினைத்தவள், “சோப்பு எடுத்தாச்சு டி, வா போய் பில் போடலாம்” என அவள் கைப் பற்றி இழுக்க அவளிடம் என்ன கூறி மறுப்பது என யோசிப்பதற்குள் பில் போடும் இடத்தினருகே வந்திருந்தனர் இருவரும்.

“இதுக்கு பில் போட்ருங்க” என ஒரு சோப்பை மட்டும் நீட்ட, பில் போடும் பெண்ணோ அவளை ஏற இறங்க பார்த்துவிட்டு தன் பணியை செய்யத் துவங்க, “இரு டி வந்தறேன்” என தன் கையை இறுகப் பற்றியிருந்த சம்யுக்தாவின் கைகளை எடுத்து விட்டவள், அருகே இருந்த ஐஸ்கிரீம் ப்ரீஷரில் இருந்து சாக்கோபாரை எடுத்தவள், “இதுக்கும் சேர்த்து பில் போட்ருங்க” என்றவள் பில் போட்டவுடன் இதழிகாவை நோக்கிச் சென்றாள் சரயு.

“எங்க போற சரயு?” என்ற சம்யுக்தாவின் கேள்வி காற்றில் தான் பறந்தன. ஏதோ வேலையாய் இருந்த சித்தார்த்தின் காதுகளிலும் சரயு என்ற பெயர் ஒலிக்க அவனது தலை அனிச்சையாக ஒலி வந்த திசையை நோக்கின.

அதற்குள் சரயு இதழிகாவின் அருகே சென்றிருந்தாள். அவளை பார்த்த இதழிகாவோ கோபத்தில் முகத்தைத் திருப்பிக் கொள்ள அவளது உயரத்திற்கு மண்டியிட்டவள் இரு காதிலும் கைகளை வைத்து, “சாரி கியூட்டி” என மன்னிப்பு வேண்டினாள் சரயு.

“ஏன் நீங்க மூணு நாளா வரல?” என இதழை சுளித்தவளின் கண்களில் நீர் படர, அதனைக் கண்டவளின் உள்ளம் பதறியது. அவளை வாரி அணைத்துக் கொண்டவள், “சாரி டா கியூட்டி. கொஞ்சம் வேலை இருந்ததால தான் உன்னை பார்க்க வர முடியல. மன்னிச்சுரு மா” என்றவளின் பார்வை தன் அருகே வந்திருந்த சம்யுக்தாவின் மேல் குற்றச்சாட்டோடு பார்த்தது.

இதனை அவளும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரே நாள் தானே பழகினாள், போகப்போக சரியாகிவிடும் என்றெண்ணி தான் சரயுவை அங்கு போக விடாமல் தடுத்திருந்தாள். ஆனால் இதழிகாவின் கண்ணீரை கண்டவளுக்கு, தான் தவறு செய்துவிட்டமோ என்ற குற்றவுணர்வு எட்டிப் பார்க்க தன் தோழியிடம் பார்வையாலையே மன்னிப்பு வேண்டினாள் சம்யுக்தா.

“உனக்காக ஐஸ்கிரீம் வாங்குனேன்” என அவளது கடையிலேயே வாங்கி அதனை அவளுக்கே கொடுக்க, “லஞ்சமா சரயு?” என இடுப்பில் கைவைத்து முறைத்தாள் இதழிகா.

தன்னிடத்தில் செய்வதை எல்லாம் தன் மகள் சரயுவிடமும் செய்வதைக் கண்டவனுக்கு சரயுவையும் அவளையும் பிரிப்பதற்காக சென்ற கால்கள் அங்கேயே நின்றன.

சரயுவின் பெயரை கேட்டவுடனே இயல்பாய் எழுந்த கோபம் அவள் தன் மகளிடம் செல்வதைக் கண்டு மேலும் அதிகரித்து இந்த உறவிற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணித் தான் அவர்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தான் சித்தார்த். ஆனால் அங்கு நடப்பவைகளைக் கண்டு அவனது கால்கள் தன்னிச்சையாக நின்றன.

“அச்சோ, இது லஞ்சம் இல்ல டா கியூட்டி. வருங்கால போலீஸ் மேடத்துக்கு நான் லஞ்சம் கொடுப்பனா… இது என்னோட தவறுக்கான மன்னிப்பு வேண்டல். இத நீ வாங்கிக்கிட்டனா என்னை மன்னிச்சுட்டனு அர்த்தம், ப்ளீஸ்” என ஐஸ்கிரீமை அவள்புறம் மறுபடியும் நீட்ட, அவளோ ஆட்காட்டி விரலை தாடையில் வைத்தவாறே யோசனை செய்வதுபோல் பாவனை செய்ய, “ப்ளீஸ்” என இறைஞ்சினாள் சரயு.

இவர்களின் சம்பாஷணைகளை கேட்டுக் கொண்டிருந்த ராமமூர்த்தியோ தன் பேத்தியிடம், “அவங்கள மன்னிச்சு ஐஸ்கிரீம்ம வாங்கிக்கோ டா குட்டிமா” என்க, “ம்… ஓகே, ஆனா திரும்ப இப்படி பண்ணக்கூடாது” என கட்டளையிட, “சரிங்க போலீஸ் மேடம்” என பவ்யமாய் தலையசைத்தாள் சரயு.

இதழிகாவை தூக்கிக் கொண்டு எழுந்தவளின் அருகே வந்திருந்தான் சித்தார்த். தன் தந்தையை கண்டவள், “ப்பா, இவங்க தான் என் பிரண்ட் சரயு” என அவளை அறிமுகப்படுத்த, சரயுவோ தன் அருகே நின்றிருந்தவனைக் கண்டு அவனை எவ்வாறு எதிர்நோக்குவது எனப் புரியாமல் விழிக்கத் தொடங்கினாள்.

_தொடரும்

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
12
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment