அத்தியாயம் 9
பையை வாங்கி உள்ளே பிரித்துப் பார்க்க, அவனது உடைகள் மற்றும் அவனுடைய பொருட்கள் இருந்தன.
அதில் அவனுடைய அலைபேசி கண்ணில் பட, அதை எடுத்துப் பார்க்க, அது எப்பொழுதோ தன் உயிரை விட்டு இருந்தது.
அவனது பர்ஸை தேட, அது ஓரமாக ஒதுங்கி இருந்தது.
அதை எடுத்துப் பார்க்க, அதில் அவனது தாயின் புகைப்படம் தான் முதலில் கண்ணில் பட்டது.
அது போக டெபிட் கார்டுகள், சில கம்பெனியின் பெயர் பொறித்த அடையாள அட்டைகள் மற்றும் முழுவதும் ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் கொத்தாக இருந்தன.
அவளுக்கு அது எல்லாம் தேவை இல்லையே..
அவர்கள் வீட்டில் இவரைக் காணவில்லை என்று என்ன பதறு பதறுகிறார்களோ… அவர்களுக்கு எப்படியேனும் தெரியப்படுத்தி விட வேண்டும் என்ற எண்ணம் தான் அவளினுள் நிறைந்து இருந்தது.
அந்த அடையாள அட்டைகளில் ஒன்றை எடுத்துப் பார்க்க, “இளா லெதர் அண்ட் காஸ்மெடிக்ஸ்..” என்று பொன்னிற எழுத்துகளால் பொறிக்கப்பட்ட பெயர் இருந்தது.
அவளுக்கு தெரியாது அல்லவா அந்த பெயருக்கு சொந்தக்காரனே உள்ளே படுத்து இருப்பவன் என்று.
அதில் இருந்த அலைபேசி எண்ணுக்கு அழைக்க அது போகவில்லை. அது தான் பரிதியின் தொடர்பு எண் அல்லவா.. எப்படி அழைப்பு போகும்??.
அடுத்து இருந்த மற்றும் ஒரு எண்ணிற்கு தொடர்பு கொண்டாள். இந்த முறை அழைப்பு அந்தப் பக்கம் சென்றது.
காரை ஓட்டிக் கொண்டிருந்த இனியனோ, அலைபேசி சத்தம் கேட்கவும் எடுத்துப் பார்க்க ஏதோ புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்ததைப் பார்த்து யோசனையுடனும் உள்ளூற ஏற்பட்ட கலக்கத்துடனும் காரை ஓரமாக நிறுத்தி அழைப்பை ஏற்றான்.
“ஹலோ… யாரு??” என்று சற்று அவன் பயத்துடன் கேட்க,
“ஹலோ சார்.. என் பேரு நிரஞ்சனா.. இங்க ஒருத்தருக்கு ஆக்சிடண்ட் ஆகிருச்சு. அவரோட பர்ஸ் ல, இருந்த கார்டு எடுத்து தான் உங்க நம்பருக்கு கூப்பிட்டேன் சார்.. நீங்க அவருக்கு தெரிஞ்சவங்களா இருப்பீங்கன்ற எண்ணத்துல தான் உங்களுக்கு கால் பண்ணேன் சார்.. அவரு வீட்டுக்கு எப்படியாவது தகவல் கொடுக்கணும். ” என்று படபடப்புடன் பேசிக் கொண்டிருந்தாள் அவள்.
இந்த பக்கம் இனியன் எந்த வித எதிர்வினையும் காட்ட முடியாமல் பிரம்மை பிடித்தவன் போல அமர்ந்து இருந்தான்.
“தான் கேட்டது சரி தானா.. நமது பேக்டரியின் பெயர் பொறித்த அட்டையை அண்ணன் தவிர நமக்கு வேண்டப்பட்டவர்கள் பல பேர் வைத்து இருக்க வாய்ப்பு உண்டு. முதலில் தீர விசாரிக்கலாம்.” என்ற எண்ணத்தில் தன்னுள் சுழன்றவன், அவள் அடுத்து பேசியது எல்லாம் அவன் கருத்தில் பதியவில்லை.
அந்த பக்கம் அவள் எந்த வித பதிலும் வராமல் போனதில், “சார்.. சார்..” என்று கத்திக் கத்தி அழைத்துக் கொண்டிருக்க, இந்த பக்கம் அருகில் இருந்த விநாயகம் அவனை உலுப்பினார்.
“ஹான்..” நிதானத்திற்கு வந்தவன்,
“ஹலோ.. சொல்லுங்க மேம்.. அவரு எங்க அடிப்பட்டு கிடந்தாரு. கார் ஆர் பைக்…?? எதுன்னு தெரிஞ்சா தான் நான் யாருனு கன்ஃபார்ம் பண்ண முடியும்..” என்று விபத்து நடந்தது தன் அண்ணனாக இருக்கக் கூடாது என்ற முனைப்பில் அவளிடம் இவன் விபத்து நடந்த நபர் பற்றி நிதானமாக கேட்டுக் கொண்டிருந்தான்.
அவளும் சரியாக, அவன் தொழிற்சலையில் இருந்து வீடு செல்லும் பகுதியை குறிப்பிட்டுக் காட்டி, அவனது கார் பற்றிய தகவலைக் கூறினாள்.
இப்பொழுது அவனுக்கு லேசாக அச்சம் பரவியது உள்ளுக்குள்.
“நீங்க எந்த ஹாஸ்பிடல் ல இருக்கீங்க இப்போ..” என்று அவன் கேட்க,
“Xxxx ஹாஸ்பிடல் ல இருக்கோம் சார். உடனே வாங்க..” என்று அவள் வைத்துவிட, இவனுக்கோ கண்ணை கட்டி காட்டில் விட்ட உணர்வு தான்.
அவள் விபத்து நடந்த பகுதியை குறிப்பிட்டு சொல்லி இருந்ததால், அந்த இடத்தில் சென்றுப் பார்த்தால் எப்படியும் சேதம் அடைந்த கார் இருக்கும். அதை வைத்து அண்ணன் தானா என்று உறுதி படித்துக் கொள்ளலாம் என்று நினைத்தவன் வேகமாக அந்த பகுதிக்கு வண்டியைச் செலுத்தினான்.
மழை இப்பொழுது மட்டுப்பட்டு இருந்தது.
நிரஞ்சனா கூறிய இடத்தில் சென்று பார்க்க, அந்தப் பக்கம் வருவோர் போவோர் எல்லாம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவன் ஓரமாக வண்டியை நிறுத்தி, கூட்டத்தை விலக்கிக், காரின் இலக்கத்தைப் பார்க்க, அது சாட்சாத் பரிதியின் கார் என்று தெள்ளத் தெளிவாக தெரிந்து. விநாயகமும் புரியாமல் அவனுடன் சென்றுப் பார்க்க அவருக்கும் அதிர்ச்சி தான்.
இனியும் தாமதிக்க நேரமில்லை என்று வேகமாக காரை நோக்கி ஓடியவன், காரை இயக்கத் தொடங்க, தன் மாமன் வந்து ஏறியதும் உடனே புறப்பட்டான்.
அவன் காரின் வேகத்தைப் பார்த்த அவருக்கு, ” அய்யயோ இப்போ நம்ம உயிருக்கே உத்தரவாதம் இல்லை போலயே.. ” இன்று எண்ணியவர், “டேய்.. இனியா.. எதுக்கு டா இவ்ளோ வேகம்.. கொஞ்சம் மெல்லப் போ.” என்று சத்தம் போட்டார்.
அதன் பிறகே சற்று வேகத்தைக் குறைத்தான்.
கொஞ்சம் நிதானத்திற்கு வந்த விநாயகம், “என்ன டா ஆச்சி.. நம்ம பரிதி ஓட கார் ஆக்சிடண்ட் ஆகி இருக்கு ஆனால் பரிதியை காணோம். என்ன தான் நடந்துச்சு. நீ முழுசா சொல்லு..” என்று கேட்டவரிடத்தில், தனக்கு கால் வந்ததில் இருந்து நடந்த அனைத்தையும் கூறினான்.
“அய்யயோ.. நம்ம பரிதி இப்போ எப்படி இருக்கானு தெரியலே.. அக்கா கிட்ட நான் என்னனு சொல்லுவேன் ..” அப்பொழுதே புலம்ப ஆரம்பித்து விட்டார் மனிதர்.
இதற்கிடையில் , அறுவை சிகிச்சை செய்ய மீண்டும் பணம் வந்து கட்டும்படி செவிலியர் வந்து சொல்லிவிட்டுச் செல்ல, அவளும் “ஆபத்துக்கு பாவம் இல்லை. அவங்க வீட்டுல சொல்ல சொல்லியாச்சு. எப்படியும் வந்துருவாங்க. இப்போ நம்ம கைல இருக்கிற பணத்தை கட்டிட்டு அவங்க வீட்டு ஆளுங்க வந்ததும் நம்ம வாங்கிக்க வேண்டியது தான்..” நினைத்தவள், தன்னிடம் இருந்த பணத்தை கட்டுவதற்குச் சென்றாள்.
அங்கு கேஸ் கவுண்ட்டரில் இருந்த பெண்ணிடம், ” மேடம் இப்போ கைல இவ்ளோதான் இருக்கு. பேலன்ஸ் அமௌன்ட் அப்புறம் கட்டுறேன்.. ” கையில் இருந்த பணத்தைக் கொடுத்து, அதற்கான பில்லையும் வாங்கிக் கொண்டாள்.
பரிதிக்கு அறுவை சிகிச்சை செய்ய எல்லா ஏற்பாடும் செய்யப்பட்டு, அவனுக்கு அறுவை சிகிச்சையும் நடை பெற்றது.
அதே சமயத்தில், இனியனும் நிரஞ்சனா கூறிய மருத்துவமனையை அடைந்து, அங்கு வரவேற்பு பெண்மணியிடம், “மேடம்.. இங்க கொஞ்ச நேரம் முன்னாடி ஆக்சிடண்ட் ஆகி ஒரு நபரை கூட்டிட்டு வந்தாங்களே.. அவங்க இப்போ எங்க இருக்காங்க..” விசாரிக்க, அந்த பெண்மணியோ, “அவங்களுக்கு இப்போ சர்ஜரி நடந்துட்டு இருக்கு சார். நீங்க அங்க போங்க. ஆபரேஷன் தியேட்டர் ஃபர்ஸ்ட் ஃபுளோர்ல இருக்கு.” என்று அதற்கான வழியையும் சேர்த்துக் கூறினாள்.
இனியனும் விநாயகமும்,அவசரமாக மின் தூக்கியில் சென்று, அந்த இடத்தை அடைய, அதற்கு முன்னே போடப் பட்டிருந்த சேரில் நிரஞ்சனாவும் விக்ரமும் அமர்ந்து இருந்தனர்.
ஆட்டோக்காரரோ, ” எனக்கு சவாரிக்கு மாத்தி மாத்தி கூப்பிட்டிகிட்டு இருக்காங்க மா.. நான் போய் ஆகணும். எதுனாலும் எனக்கு போன் பண்ணு. இப்போ நான் கிளம்புறேன்.” கூறி விட்டு எப்பொழுதோ கிளம்பி இருந்தார்.
பாவம். அவருக்கும் ஆட்டோ ஒட்டினால் தானே வருமானம். அவரையும் குறை சொல்லி விட முடியாது.
இருவரையும் பார்த்த இனியனுக்கு, தன்னிடம் பேசிய பெண்ணாக இருக்குமோ என்று அவளிடம் சென்று, “நீங்க தான் ஆக்சிடண்ட் ஆகிருச்சுனு கால் பண்ணீங்களா??”அவளிடம் கேட்க
அவர்களை கவனித்துக் கொண்டிருந்த நிரஞ்சனாவும் இனியன் அப்படிக் கேட்டதும், “ஆமா சார்.. நான் தான் கால் பண்ணேன். நீங்க அவருக்கு தெரிஞ்சவங்களா..” என்று கேட்டாள்.
“அ.. அவரு.. என்னோட அண்ணன்..”என்றான் கலங்கிய கண்களுடன்.
அவனுடைய கலக்கத்தைப் பார்த்தவள், “சார்.. நீங்க பீல் பண்ணாதீங்க.. அவரு உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லனு டாக்டர் சொல்லிட்டாங்க. காயத்துக்காகவும், எலும்பு முறிவுக்காகவும் தான் இப்போ ஆபரேஷன் பண்ணிட்டு இருக்காங்க சார்..” என்று மருத்துவர் கூறியதை அவனிடம் கூறினாள்.
அவனோ, இரு கைகளை எடுத்து கும்பிட்டு, ” உங்களுக்கு வெறும் வாய் வார்த்தையால மட்டும் நன்றினு சொன்னால், அது ஈடாகாது.. ” அவள் செய்த உதவிக்கு மனமார்ந்த தன் நன்றியை தெரிவித்தான்.
விநாயகமும், “ரொம்ப நன்றி மா.. எங்க குடும்பத்துக்கு பக்க பலமே அவன் தான். அவனை காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி மா..” என்றனர் இருவரும் மாறி மாறி.
“அச்சோ.. இருக்கட்டும் சார். அந்த ஸ்பாட்ல நான் இருந்தனால தான் இந்த உதவியை பண்ண முடிஞ்சது.. பார்த்துட்டு சும்மா இருக்க முடியல. எனக்கும் மனிதாபிமானம் இருக்கு சார். எனக்கு நீங்க இந்த அளவுக்கு நன்றி சொல்லணும்னு தேவை இல்லை..” என்றாள் பெருந்தன்மையுடன்.
இனியனோ, இப்பொழுது சற்று தெளிவாக உணர்ந்தவன், “அண்ணாவை எப்போ உள்ள கூட்டிட்டு போனாங்க..” அவளிடம் கேட்டதற்கு,
“ஒரு 45 நிமிஷம் ஆகி இருக்கும் சார்..” என்றாள்.
“ஓகேங்க.. இனி நாங்க பார்த்துகிறோம். இவ்ளோ நேரம் கூட இருந்து பார்த்துகிட்டதுக்கு திரும்பவும் நன்றி..” என்றான் இனியன்.
“சார்.. இதுல உங்க அண்ணாவோட திங்ஸ் இருக்கு..” என்றவள், அந்தப் பையை அவனிடம் கொடுக்க, அவனும் அதை வாங்கிக் கொண்டான்.
“சரிங்க சார்..” என்றவள் சற்று தயக்கத்துடன் ஏதோ சொல்ல வருவது போல தோன்ற, விநாயகமோ அவளின் தயக்கத்தை பார்த்தாவாறு , “இனியா.. அந்த புள்ளைக்கு ஏதாவது பணம் கொடுத்து அனுப்புடா..” என்றார்.
அவனோ, அதற்காகவா என்று யோசித்தவன், ” ஏதாவது சொல்லனுமா.. “அவளைப் பார்த்து கேட்டான்.
“ஆமா சார்..” என்றவள், தன் கைப் பையில் இருந்த பணம் செலுத்திய ரசீதை எடுத்து அவனிடம் கொடுத்தாள் .
“என் கைல இருந்த பணத்தை வச்சிக் கட்டிட்டேன் சார்.. பேலன்ஸ் அமௌன்ட் நீங்க கட்டிருங்க. அப்புறம் அந்த பணம் என்னோட தம்பி ஆபரேஷன்க்காக வச்சி இருந்தது சார்.” என்றாள் தயக்கத்துடன்.
இப்பொழுது தன் மாமாவை திரும்பி முறைத்தவன், “சாரிங்க இந்த பதட்டத்துல இதை பத்தி உங்ககிட்ட கேக்க முடியல.. ” என்றவன் இரண்டு லட்ச ருபாய் கையில் இல்லை என்பதை உணர்ந்து, “கைல பணமா இவ்ளோ அமௌட் இல்லை. உங்ககிட்ட கூகிள் பே ஆர் பேடிஎம் அது போல எதுவும் இருக்கா..”அவளிடம் கேட்க,
தன் கீபேட் போனை எடுத்திக் காட்டினாள்.
“ஓ.. காட் ..” என்று நொந்தவன், தன் மாமனிடம் தனது எ.டி.எம் கார்டுகளில் ஒன்றை எடுத்து “பக்கத்துல எதுவும் எ.டி.எம் இருந்தா பணம் எடுத்துட்டு வாங்க மாமா..” என்று கொடுத்து அனுப்பினான்.
“ஹாஸ்பிடல் பக்கத்துல ஒன்னு இருக்குடா. நான் உள்ள வரும் போது பார்த்தேன்.” என்றவர், அவனிடம் வாங்கிக் கொண்டு, “நீ வாம்மா.. உனக்கு அப்படியே எடுத்துக் கொடுத்துருறேன்..” என்று அவளையும் சேர்த்து அழைக்க,
” சரிங்க சார்.. அப்போ நான் கிளம்புறேன் ” இனியனிடம் கூறி விட்டு நிரஞ்சனா, தன் தம்பி விக்ரமை கை பிடித்து அழைத்துச் செல்ல, அப்பொழுது இருவரும் கவனித்தனர் அவனை. இவ்வளவு நேர பேச்சின் போதும் அவன் அமைதியாக இருந்ததற்கு காரணம் இப்பொழுது தான் புரிந்தது.
நிரஞ்சனாவை, “ஒரு நிமிஷம்..” என்று நிறுத்தியவன், ” உங்க தம்பிக்கு.. ” என்று முழுதாக கேட்க முடியாமல் சற்றுத் தயங்க,
அவர்களின் சங்கடத்தை உணர்ந்தவள், ” ஆமா சார்.. பார்வை தெரியாது. அதுக்கு ஆபரேஷன் பண்ண தான் இன்னைக்கு கிளம்பினோம். ” அவள் கூற, அவனுக்கு புரிந்தது. அவள் கையில் இரண்டு லட்ச ரூபாய் எப்படி வைத்து இருந்தாள் என்று.
“ம்ம்ம்ம்..” என்றவன், “சரி.. மாமா.. நீங்க கூட்டிட்டுப் போங்க..” என்று அவரிடம் கூறிவிட்டு, நிரஞ்சனாவைப் பார்க்க, அவளும் ஒரு தலை அசைப்புடன் தன் தம்பியை மெல்ல அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.
போகும் அவளின் முதுகையே பார்த்து இருந்த இனியனுக்கோ, அப்பொழுது தான் நெற்றிப் பொட்டில் ஆணி அடித்த போன்ற ஒரு விஷயம் நினைவில் வந்தது.
“அய்யயோ… அம்மாகிட்ட இந்த விஷயத்தை சொல்லணுமே..” என்று புலம்பியவன், ஒரு பெருமூச்சுடன் தன் அன்னைக்கு அழைத்தான்.
நித்தமும் வருவாள்.