
அத்தியாயம் 9
கட்டிலில் படுத்த உதயகீதனின் நினைவுகள் எல்லாம் அவன் ராகவர்ஷினியை முதன்முதலில் பார்த்த நாளுக்கு சென்றது.
ஒன்றரை வருடங்களுக்கு முன்னர்…
‘யூ & கே சொல்யூஷன்ஸ்’ வருடந்தோறும் நடத்தும் நேர்முகத் தேர்வு அந்த புகழ்பெற்ற கல்லூரியில் நடந்து கொண்டிருந்தது.
ராகவர்ஷினி அந்த கல்லூரியில் தான் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு வேலைக்கு செல்லவெல்லாம் விருப்பம் இல்லை. இருந்தாலும், தன் அறிவுத் திறமையை மற்றவர்களுக்கு காட்ட வேண்டியே நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டிருந்தாள்.
நேர்முக தேர்வுக்கு வரும் முதல் நிறுவனமே ‘யூ & கே சொல்யூஷன்ஸ்’ என்பதால், அதில் தேர்வாகி விடுவோம் என்ற கர்வத்தில் தான் சுற்றிக் கொண்டிருந்தாள் ராகவர்ஷினி.
அதற்கு நேர்மாறாக, முதல் எழுத்து தேர்விலேயே தோல்வி என்று தெரிய வர, அதிர்ச்சியுடன் கூடிய அவமானம் அவளை தொற்றிக் கொள்ள, அதே சமயம், தேர்வுத்தாள் திருத்துவதில் ஏதோ கோளாறு நடந்திருப்பதாக தகவல் கிடைக்க, மற்றவர்களுக்கு முன்பாக கிளம்பி விட்டாள் சண்டையிடுவதற்கு.
“என்ன இன்டர்வியூ நடத்துறீங்க?” என்று அவள் கத்த, அவளுடன் மற்றவர்களும் சேர்ந்து கொண்டனர்.
அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களோ, “சாரி ஃபார் தி இன்கன்வினியன்ஸ். இப்பவே இன்னொரு டெஸ்ட் வைக்குறோம்.” என்று சமாதானப்படுத்த முயல, “இப்படி தான் எங்க டைமை எல்லாம் வேஸ்ட் பண்ணுவீங்களா? யாருக்கு வேணும் உங்க ரீ-டெஸ்ட்?” என்று சத்தம் போட்டாள் ராகவர்ஷினி.
தன்னை தேர்வு செய்யாத நிறுவனத்தில் மீண்டும் ஒருமுறை முயற்சித்து பார்க்க அவளின் ஈகோ இடம் கொடுக்கவில்லை. அதனாலேயே இந்த முடிவு!
அப்போது சத்தம் கேட்டு அங்கு வந்தான் உதயகீதன்.
ஆறடியை தொட்டுவிடும் அவன் உயரமும், அதற்கேற்ற உடல்வாகுடன், அறிவுக்களை முகத்தில் கொட்டிக் கிடக்க, அவனை ஆர்வமாக பார்க்கும் பார்வைகளை அலட்சியப்படுத்தும் திமிரும் ராகவர்ஷினியை வெகுவாகவே கவர்ந்தது.
“என்ன பிரச்சனை இங்க?” என்று அவன் கேட்டிபடி அங்கு வர, அவனின் ஊழியர்கள் ஏதோ சொல்ல, “இதைக் கூட பார்க்க மாட்டீங்களா? ஹௌ இர்ரெஸ்பான்சிபில் ஆர் யூ?” என்று சத்தம் பெரிதாக இல்லாமல் அவர்களை திட்டினான் அவன். ஜீவநந்தினிக்கும் திட்டு விழுந்தது சிறப்பு குறிப்பு!
அதைப் பார்த்து, ‘அட செம ஹேண்ட்சம்!’ என்று ராகவர்ஷினி எண்ணிக் கொண்டிருந்த வேளை, இவர்கள் பக்கம் திரும்பியவன், அவன் சார்பாக மன்னிப்பு வேண்ட, கூட்டமும் மெல்ல கலைய துவங்கியது.
ஆனால், அவனையே பார்த்தபடி நின்றிருந்த ராகவர்ஷினியோ, “இங்க நடந்த தப்புக்கு நீங்க சாரி கேட்டீங்க. ஆனா, இவ்ளோ நேரம் எங்க டைம் வேஸ்ட்டானது வேஸ்ட்டானது தான? அதை எப்படி காம்பென்ஸேட் பண்ணப் போறீங்க?” என்று வினவ, அவளையே ஒரு நொடிக்கும் அதிகமாக கூர்ப்பார்வை கொண்டு பார்த்தவன், “என்ன எதிர்பார்க்குறீங்க மிஸ்..?” என்று இழுத்தான் உதயகீதன்.
“ராகவர்ஷினி…” என்று அவளின் பெயரைக் கூறியவள், “இனிமே, இந்த மாதிரி தப்பு நடக்காம பார்த்துக்கோங்க.” என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல முற்பட, “அப்போ நீங்க ரீ-டெஸ்ட் எழுதலையா?” என்று அவனையும் மீறி வினவி இருந்தான் உதயகீதன்.
ஆம், இதுவரை அவனாக இறங்கி சென்று யாரிடமும் பேசயிராதாவன், அவன் வாழ்நாளில் முதல் முறையாக அதை சாத்தியமாக்கி இருந்தான்.
அவளின் நேர்கொண்ட பேச்சா, தவறை துணிந்து தட்டிக் கேட்டும் குணமா, அலட்சியமா, எது அவனை அவளை நோக்கி ஈர்த்தது என்று குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை.
இவை எல்லாம் இல்லை, அவளின் கண்கள் தான் முதலில் அவனை ஈர்த்தது என்பதை அவன் சமீபமாக தானே அறிந்து கொண்டான்.
அந்த விழிகள் – எங்கோ கண்டது போல இருந்தது உதயகீதனுக்கு. எங்கு என்று எத்தனை தேடியும், அவனின் மூளை அத்தனை எளிதாக பதிலை தர தயாராக இல்லை.
அவன் தான் அதை மனதின் அடியாழத்தில் புதைத்து வைத்திருந்தானே!
விழிகள் அவனை வசமாக்க, அவனறியாமலேயே அவளை நோக்கி அடியெடுத்து வைத்திருந்தான் உதயகீதன்.
உதயகீதனின் கேள்வியில் திரும்பி பார்த்த ராகவர்ஷினியோ, மெல்லிய முறுவலை வெளியிட்டபடி, “இது எனக்கானது இல்லன்னு மனசுல பதிஞ்சுடுச்சு. சோ, திரும்ப முயற்சி பண்றது வீண் தான்.” என்றவள், ஒரு தலையசைப்புடன் அவனிடம் விடைபெற்றாள்.
‘ஹ்ம்ம், ஷீ இஸ் சம்திங் யூனிக்.’ என்று எண்ணியவன், அதில் மறைந்திருந்த அவளின் பிடிவாதத்தையும், கர்வத்தையும் அறிந்து கொள்ள தவறி விட்டான்.
அப்போது மட்டுமல்ல, அவளை காதலித்த நாட்களில் கூட, அவளின் குணங்கள் அவ்வபோது வெளிவந்தாலும், அவற்றை பெரிதாக கண்டு கொள்ளவில்லை அவன்.
ஒருவேளை, அப்போதே கவனித்து, அவளை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால், இப்போது அவளை ஏமாற்றத்தின் விளிம்பிலிருந்து சற்று சுலபமாகவே மீட்டிருக்கலாமோ என்னவோ!
இருவரின் அடுத்த சந்திப்புக்கு, விதியே பாதை ஏற்படுத்தி கொடுக்க, அதன்பிறகு அந்த பணியை இருவரும் ஏற்றுக் கொண்டனர்.
ஒரு ஐந்து நட்சத்திர உணவகம் ஒன்றில் எதேச்சையாக சந்தித்தவர்கள், பேச்சுவாக்கில் ஒருவரையொருவர் அறிந்து கொண்டனர்.
பின்னர், வாரத்திற்கு ஒருமுறை என்றிருந்த சந்திப்பு, இரு மாதங்களிலேயே வாரத்தில் பலமுறை சந்திக்கும் அளவுக்கு அவர்களின் உறவு வளர்ந்தது.
எவரிடமும் கொடுக்க விரும்பாத உரிமையை விரும்பியே ராகவர்ஷினிக்கு கொடுத்திருந்தான் உதயகீதன். அவளும் அதை பயன்படுத்தி, அவனின் கவனம் அவளிடம் மட்டுமே இருக்குமாறு பார்த்துக் கொண்டாள்.
அதன்காரணமாக, அவனின் குணாதிசயத்தில் கூட மாற்றம் உண்டாகி இருந்தது உண்மையே!
எப்போதும் வேலை வேலை என்று திரிபவன், அவளுக்காக வேளை ஒதுக்கினான். தான் உர்ரென்று இருந்தால் தான் அலுவலகம் சரியாக இயங்கும் என்று எண்ணத்தின் காரணமாகவோ என்னவோ, சிரிப்பு என்ற ஒன்றை மறந்தவன் போல வலம் வந்தவன் முகம் இளக்கத்தையும் சிரிப்பையும் பூசிக்கொண்டது.
அந்த மாற்றம் அவன் தந்தை மட்டுமல்ல ஜீவநந்தினியுடன் சேர்த்து அந்த அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் அனைவருக்கும் ஆச்சரியமாகவே இருந்தது.
அதன் காரணமும் அடுத்த மாதத்தில் தெரிய வந்தது.
உதயகீதன் – ராகவர்ஷினி சந்திக்க துவங்கி சரியாக ஆறாம் மாதத்தில் காதலை பகிர்ந்திருந்தனர். காதலை முதலில் உணர்ந்தது ராகவர்ஷினியாக இருந்தாலும், சொன்னது என்னவோ உதயகீதன் தான்.
அதற்கு, அவளுக்கு வெளியே சொல்வதற்கு கூச்சம் என்றெல்லாம் இல்லை.
‘தான் ஒருவரிடம் இறங்கி சென்று காதலை சொல்வதா?’ என்ற எண்ணம் அவள் மனதில் வியாபித்திருந்தது தான் அதற்கு காரணம்!
அந்த ஒருவர், அவளின் சரிபாதியாக போகிறவராகினும் சரி, அவள் கர்வத்தை விட்டு தர விரும்பவில்லை அவள்.
காதலை உணர்ந்தது முதல் பகிர்ந்தது வரை அனைத்தும் வேககேவமாக நடக்க, திருமணத்தை சற்று தள்ளி வைக்கலாம் என்று தான் நினைத்திருந்தான் உதயகீதன்.
ஆனால், அவனின் மனம் கவர்ந்தவள் அதற்கும் மறுப்பு கூறி, உடனடியாக நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால், அவனுக்கு விருப்பம் இல்லை என்றாலும் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தான், அவளுக்காக மட்டுமே!
ராகவர்ஷினி அந்த விஷயத்தில், உதயகீதனை அவளின் கட்டுப்பாட்டிலேயே தான் வைத்திருந்தாள்.
உபயம், அவளின் தோழிகள்!
“வர்ஷி, உன் ஆளு செம. இவ்ளோ ஹேண்ட்சமான ஆளெல்லாம் இவ்ளோ நாள் சிங்கிலா இருந்தாருங்கிறதை தான் நம்ப முடியல.” என்று அவளின் தோழியின் கூற்று தான் அனைத்திற்கும் மூலக்காரணமாக அமைந்தது.
“ச்சு, அவரை நான் நம்புறேன்.” என்று அப்போதும் ராகவர்ஷினி நம்பிக்கையுடன் பேச, “அவரை நம்பலாம். ஆனா, சுத்தி இருக்குறவங்களை நம்ப முடியுமா என்ன? எதுக்கும் அவரோட கவனம் உன் பக்கம் இருக்க மாதிரியே வச்சுக்கோ. கொஞ்சம் லூஸா விட்டாலும், யாராவது கொத்திட்டு போயிடுவாங்க.” என்று கூறி சிரித்தாள் அந்த தோழி.
வெறும் கேலி பேச்சென கடந்து செல்லாமல், அது ராகவர்ஷினியின் மனதில் பதிந்து கொண்டது.
அது தான் அவர்களின் அவசர திருமண ஏற்பாட்டுக்கும் காரணம்!
அதை அறியாத உதயகீதன், அவனின் காதலி, அவனை சேர்வதற்கு ஆர்வம் கொண்டு அவசரப்படுகிறாள் என்று எண்ணி, அவனின் காதல் விஷயத்தையும், திருமண விஷயத்தையும் தந்தையிடமும் பகிர்ந்தான்.
வேலையை தவிர மற்ற எதிலும் கவனமில்லாத மகன் அப்படியே இருந்து விடுவானோ என்ற கவலையில் இருந்த கேசவமூர்த்திக்கு, அவன் ஒரு பெண்ணை காதலிக்கிறான் என்பதே ஆச்சரியம் என்றால், உடனே திருமணம் நடக்க வேண்டும் என்று அவன் கேட்பது இனிய அதிர்ச்சியாக இருந்தது.
ஆனாலும், மனதிற்குள் சுதாகரின் பெண்ணான ஜீவநந்தினியை மருமகளாக்க முடியவில்லையே என்று சிறு ஏக்கம் உண்டானது உண்மை தான். எனினும், மகனின் விருப்பம் வேறாக இருக்க, அதை மாற்ற விரும்பாமல் உண்மையான மகிழ்ச்சியுடனே சம்மதம் தெரிவித்தார்.
வருங்கால மருமகளாகப் போகும் ராகவர்ஷினியை நேரில் பார்த்தபோதும், சில விஷயங்களை தவிர பெரிதாக குறை சொல்ல எதுவும் இல்லை கேசவமூர்த்திக்கு.
அதில் முதன்மையானது, அவள் உதயகீதன் மீது எடுத்துக் கொள்ளும் உரிமை! அல்லது, உதயகீதனிடம் மட்டுமே எடுத்துக் கொள்ளும் உரிமை என்றும் சொல்லலாம்.
சிறுவயது பிள்ளைகள் என்று எண்ணி அதை சிரித்த முகமாகவே ஏற்றுக் கொண்டார் கேசவமூர்த்தி.
ராகவர்ஷினி கேசவமூர்த்தியிடம், அவளின் பெற்றோர் ஜெர்மனியில் செட்டிலாகி விட்டார்கள் என்றும், அவள் அவளின் பெரியப்பா வீட்டில் தங்கி படித்ததாகவும் கூற, திருமண பேச்சுவார்த்தையை, பெற்றவர் இல்லாமல் எப்படி துவங்குவது என்று தயங்கினார் கேசவமூர்த்தி.
“அங்கிள், அம்மாக்கு வீசிங் பிராபிளம் இப்போ அதிகமா இருக்குறதால, உடனே இந்தியா வர முடியாத சூழல்.” என்று ராகவர்ஷினி கூற, “அச்சோ, அப்போ உங்க அம்மாக்கு சரியானதும் ஆரம்பிக்கலாமேமா. அவங்களுக்கும் ஒரே பொண்ணோட கல்யாண வேலைகளை, தானே செய்யணும்னு ஆசை இருக்கும்ல.” என்று நியாயமாகவே பேசினார் கேசவமூர்த்தி.
“அப்படின்னா, ரொம்ப லேட்டாகிடும் அங்கிள். அம்மாவே, பெரியப்பா வச்சு கல்யாண வேலையை ஆரம்பிக்க சொல்லிட்டாங்க.” என்று ராகவர்ஷினி அவசரப்பட, உதயகீதனும் கூட “எதுக்கு இந்த அவசரம் வர்ஷி? பொறுமையாவே நடக்கட்டுமே.” என்று கூறினான்.
“நோ உதய், இனியும் என்னால உன்னை பிரிஞ்சு இருக்க முடியாது.” என்று ஏக்கமாக ராகவர்ஷினி கூற, அதற்கு மேல் வேறு என்ன பேச?
ராகவர்ஷினியின் பெரியப்பா சசிதரன் குடும்பத்தை அழைத்து ஒப்புத்தாம்புலம் மாற்றி, உதயகீதன் – ராகவர்ஷினி திருமணத்திற்கான நாளை குறித்தனர்.
அப்போது கிரிதரனிடம் அலைபேசியில் கேசவமூர்த்தி, உதயகீதன் இருவருமே பேசத்தான் செய்தனர். கீதாஞ்சலி சிகிச்சையில் இருந்ததால், அவர்களால் அவருடன் பேச இயலவில்லை. இத்தனை ஏன், அவரின் புகைப்படத்தை கூட பார்த்திருக்கவில்லை. இது தான் விதியின் சதியோ!
அதன் பிறகு, உதயகீதன் – ராகவர்ஷினியின் நாட்கள் ரெக்கை கட்டிக் கொண்டு பறந்தன. திருமணத்திற்கான ஆடை வாங்க, நகை வாங்க, பத்திரிக்கை தேர்ந்தெடுக்க, அலங்காரங்கள் பற்றி நிகழ்ச்சி மேலாண்மையினருடன் கலந்துரையாட என்று அனைத்திற்கும் ஜோடியாகவே வலம் வந்தனர்.
அவ்வபோது உதயகீதனை பார்க்க வேண்டி அவனின் அலுவலகத்திற்கும் விஜயம் செய்வாள் ராகவர்ஷினி. அவளின் ஒவ்வொரு அசைவிலும், அவள் அந்த அலுவலகத்தின் உரிமையாளனுக்கு உரிமையானவள் என்பது தெரியும்படி பார்த்துக் கொள்வாள்.
அது சிலருக்கு எரிச்சலை தந்தது என்னவோ உண்மை தான்.
“நம்ம சார் கூட இவ்ளோ ஸீன் போட்டுருக்க மாட்டாரு, இந்தம்மாக்கு என்னவாம்?” என்று சிலர் பொறாமையில் பொசுங்குவதை ஓரக்கண்ணில் பார்த்து, அது தந்த குஷியுடன் காதலனை பார்க்க செல்வாள் ராகவர்ஷினி.
அது அவளுக்கு அலாதி இன்பத்தை கொடுத்தது என்பது நிதர்சனமான உண்மை!
எங்கும் அவளே முக்கியமாக கருதப்பட வேண்டும். அவளை பார்த்து மற்றவர்கள் பொறாமை பட வேண்டும். சிறந்தவை எல்லாம் அவளிடம் இருக்க வேண்டும். அவள் நினைப்பது மட்டுமே நடக்க வேண்டும். – இவை எல்லாம் அவள் எண்ணத்தில் தோன்றி, மனதில் பதிந்து, மூளையை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. அதற்கேற்ப சூழ்நிலையும் அமைந்து வந்தன.
சூழ்நிலை மாறினால்?
அவளின் அடிப்படையே ஆட்டம் கண்டு விடும்!
அது தான் இப்போது அவளை தவறான பாதையில் வழிநடத்திக் கொண்டிருக்கிறது.
*****
நடந்ததை எண்ணிப் பார்த்து வேதனையில் முகம் கசங்க படுத்திருந்தான் உதயகீதன்.
அவன் மனமோ, ‘வேகவேகமா என் வாழ்க்கைக்குள்ள வந்து, வேகவேகமா காதல் சொல்லி, கல்யாணத்துக்கு திட்டம் தீட்டுனது எதுக்காக? அதே வேகத்துல என் வாழ்க்கையை விட்டு வெளியேறவா?’ என்று கேட்க, மூளையோ, அவளிடம் எது ஈர்த்தது என்னும் ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தது.
அது தந்த விடை தான் பிடிக்கவில்லை!
அவளின் விழிகள்! அவை தான் அவனை முதலில் ஈர்த்தன. அதற்கான காரணம் அறியும் போது, தன்னையே வெறுத்தான் உதயகீதன்.
மீண்டும் அதை நினைத்து பார்க்கக் கூடாதென்று மனதிற்கு கட்டளையிடும் சமயம், அவனை அந்த நினைவுகளிலிருந்து மீட்பதை போல, பட்டென்று அவன் மீது காலை போட்டாள் ஜீவநந்தினி.
அதில் லேசாக கத்திய உதயகீதனோ, அதற்கு காரணமானவளை முறைக்க முயல, அவளோ உறக்கத்தின் பிடியில் அல்லவா இருந்தாள்.
“தூங்குறப்போ மட்டும் தான் வாய்க்கு ரெஸ்ட் கொடுப்பா போல!” என்று வாய்விட்டே கூறியவன், அவளின் காலை எடுத்து விட முயன்றான், ‘ஜஸ்ட் மிஸ்!’ என்று எண்ணியபடி!
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் காலுடன் சேர்த்து கையையும் அவன் மீது போட, “ச்சு, தூங்குன மாதிரி தான்!” என்று அலுத்துக் கொண்டான் உதயகீதன்.
அவன் உறக்கத்துடன், கடந்த கால வருத்தங்களையும், அவளறியாமலேயே தற்காலிகமாக பறித்துக் கொண்டவளோ சுகமாக நித்திராதேவியை தழுவிக் கொண்டிருந்தாள்.
*****
தன் திட்டம் வெற்றி பெற்றதை எண்ணி மகிழ்வுடன் இருந்த ராகவர்ஷினியை நிகழ்விற்கு கொண்டு வந்தது கீதாஞ்சலியின் குரல்.
“வர்ஷி, நீ என்ன செஞ்சுட்டு இருக்கன்னு புரியுதா?” என்று அவர் கோபமாக வினவ, அவரை பார்க்க விரும்பாதவளாக முகத்தை திருப்பியவள், “தொலைஞ்சு போன என் சந்தோஷத்தை மீட்கப் போராடிட்டு இருக்கேன்.” என்றாள்.
அவளின் செயலிலேயே உள்ளுக்குள் மறித்துப் போன கீதாஞ்சலி, அவர் பெற்ற இரு செல்வங்களின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு, அவரின் வருத்தங்களை விடுத்து, மகளிடம் பேச முயன்றார்.
“இது தப்பு டா வர்ஷி. உதய் உனக்கு அண்…” என்ற கீதாஞ்சலியை முடிக்க விடாமல், காதுகளை பொத்திக் கொண்டு, “நோ நோ, அந்த வார்த்தையை சொல்லாதீங்க. அவன் எனக்கு உதய் மட்டும் தான்.” என்று கத்தினாள்.
புரிந்து கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் மகளை என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போனார் கீதாஞ்சலி.
மகளின் பிடிவாதத்தை கண்டு, அவளை ஏன் ஒழுங்காக வளர்க்கவில்லை என்று தன்னைத்தானே நொந்து கொண்டார் அவர்.
இருந்தாலும் மகளாகிற்றே! அப்படியே விட முடியுமா என்ன?
காதுகளை பொத்தியிருந்த அவளின் கரங்களை பிரித்தபடி, “நீ கேட்க விரும்பலன்னாலும் அது தான் நிஜம் வர்ஷி. அதுவுமில்லாம, உதய்க்கு கல்யாணமும் ஆகிடுச்சு.” என்று உண்மையை உணர்த்த முயன்றார் கீதாஞ்சலி.
“அதுக்கு காரணம் நீங்க தான்! எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான்! ஐ ஹேட் யூ!” என்று கதற ஆரம்பித்தவள், “நீங்க எனக்கு அம்மாவா வேண்டாம். உங்களால தான உதய் எனக்கு கிடைக்க இத்தனை கஷ்டமா இருக்கு, சோ, நீங்க வேண்டாம். யாருமே வேண்டாம்… நானும் உதய்யும் எங்கேயாவது தனியா போயிடுறோம். எனக்கு உதய் வேணும்.” என்று அரற்றியபடி மயங்கி விழ, அதைக் கண்ட கீதாஞ்சலி திக்பிரம்மை பிடித்ததை போல நின்று விட்டார்.
தொடரும்…
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நந்தினி தான் கியூட்.
😍😍😍
கீதாஞ்சலி மகனை தான் விட்டுட்டு போனாங்க பொண்ணையும் சரியா வளர்க்கல…… சுதந்திரமா வளர்க்குறேன்னு செல்லம் குடுத்து கெடுத்து வச்சுருக்காங்க 😤😤😤😡😡
இவளால உதய் தான் கஷ்டப்படப் போறான்…..
கீதாஞ்சலி 😷😷😷 உதய் பாவம் 🧘🏼♀️🧘🏼♀️🧘🏼♀️