Loading

அத்தியாயம் 9

 

யுகேந்திரனின் வாகனம் அவனுடன் சேர்த்து அறுவரையும் சுமந்து கொண்டு கரிகாலன் சந்திப்பதாகக் கூறிய இடத்தை நோக்கி விரைந்து சென்று கொண்டிருந்தது.

 

அதற்கு முன்னரான பயணத்தைப் போலல்லாது, இப்பயணம் வெகு அமைதியாகக் கழிந்தது.

 

காரணம் சுடரொளி என்றால் அது மிகையாகாது!

 

அவள்தான் மதுசூதனனைக் கண்ட பொழுதிலிருந்து அமைதியைத் தத்தெடுத்துக் கொண்டவளாக, சாந்த சொரூபியாக மாறி விட்டாளே!

 

அதற்காக அவள் பேசவே இல்லை என்று கூறிவிட முடியாது.

 

வாகனத்தில் எறியதிலிருந்து, “அவரோட ஊர் என்னன்னு கேளேன்… அவரு சிங்கிளா கமிட்டடா? கடவுளே, என் வாழ்க்கைல முதல் முறையா சைட்டடிக்கிறேன், கமிட்டடா மட்டும் இருக்கக் கூடாது…” என்று தொடர்ந்து மென்மொழியிடம் கிசுகிசுத்துக் கொண்டே இருந்தாள்.

 

அருகில் அமர்ந்த பாவத்திற்காக சிறிது நேரம் பொறுத்துக் கொண்ட மென்மொழி, அதற்கு மேல் பொறுக்க முடியாமல், “உனக்கு வேணும்னா நீ கேளேன்… இப்போ எதுக்கு என் காதுல ஓதிட்டு இருக்க!” என்று கத்தி விட, எங்கு தான் போட்ட வேஷம் களைந்து விடுமோ என்ற பதற்றத்தில் மென்மொழியின் வாயை மூடினாள் சுடரொளி.

 

இவர்களின் சம்பாஷனைகளைக் கேட்டு சிரித்துக் கொண்ட இன்பசேகரனோ, அவனின் நீண்ட நேர சந்தேகத்தை மதுசூதனனிடம் கேட்டான்.

 

“உங்களை நான் இதுக்கு முன்னாடி பார்த்துருக்கேனா?” என்று அவன் வினவ, மதுசூதனனோ ஒரு சிரிப்புடன், “ஆமா… ஆனா, ஒரு ஹலோ சொல்றதுக்குள்ள மறைஞ்சு போயிட்டீங்க.” என்றான்.

 

“ஓஹ், அப்போ நீங்கதான் அந்த ஏலியனா?” என்று சிரிப்புடன் வினவிய மென்மொழியின் பார்வை சுடரொளியை நோக்க, அவளோ தோழியைப் பார்வையாலேயே சுட்டுவிடும் நோக்கில் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

‘ஏலியன்’னிற்கான விளக்கத்தைக் கேட்டு அறிந்து கொண்ட மதுசூதனனிடம், “உங்களுக்கு எப்படி அந்த கல் கிடைச்சது?” என்று வாகனத்தை ஓட்டிக் கொண்டே வினவினான் யுகேந்திரன்.

 

“இது என் அப்பா, அவர் இறக்கும் போது தந்தது.” என்று கரத்திலிருந்த கல்லைப் பார்த்துக் கொண்டே கூறினான் மதுசூதனன்.

 

“உங்க அப்பா ஆர்க்கியாலஜி டிப்பார்ட்மெண்ட்ல இருந்தாரா?” என்று சட்டென்று யுகேந்திரன் வினவ, ஆச்சரியத்துடன் அதை ஆமோதித்தான் மதுசூதனன்.

 

“ஹ்ம்ம், எங்க சுத்துனாலும் இந்த ஒரே டிப்பார்ட்மெண்ட்ல முட்டிக்குதே.” என்று அந்தப் பயணத்தில் முதல் முறையாகச் சத்தமாகப் பேசிய சுடரொளி, மதுசூதனனிடம், “மால்ல நீங்க ஏன் மயங்கி விழுந்தீங்க? இப்போ நீங்க ஓகேவா?” என்று கேட்டிருந்தாள்.

 

அவளின் கேள்வியில் மதுசூதனனைத் தவிர அந்த வாகனத்திலிருந்த மற்ற அனைவரும் அவளை நமுட்டுச் சிரிப்புடன் பார்த்தனர். யுகேந்திரனும் ரியர்வியூ கண்ணாடியில் அவளைக் கண்டான்.

 

‘ஹையோ! இவங்களை வச்சுக்கிட்டு!’ என்று மனதிற்குள்ளே சலித்துக் கொள்ளத்தான் முடிந்தது சுடரொளியால்.

 

மற்றவர்களின் எண்ணத்தை அறிந்து கொள்ளாத மதுசூதனனோ, “எனக்கு ஒன்னுமில்லங்க. நிறைய பவர் யூஸ் பண்ணிட்டேன் போல. அதான் மயங்கிட்டேன்.” என்றான்.

 

வேறெதுவோ கேட்க வந்த சுடரொளியை இடைமறித்த யுகேந்திரன், “உங்களுக்கு எப்போ இந்தக் கல்லைப் பத்தியும் அதோட சக்தியைப் பத்தியும் தெரிஞ்சுது மதுசூதனன்?” என்று வினவினான்.

 

தன்னைப் பேச விடாமல் அடக்கிய யுகேந்திரனை முறைத்த சுடரொளியை அங்கு யாரும் கண்டு கொள்ளவில்லை!

 

“ஒரு வருஷத்துக்கு முன்னாடி என் அப்பா இறந்தப்போ, இந்தக் கல்லை என்கிட்ட குடுத்து, ‘இதைப் பத்திரமா பாதுகாக்கணும்’னு சொல்லி என்னோட செயின்ல கோர்த்துக்க சொன்னாரு. ஆனா, அதுக்கு மேல வேற எதுவும் சொல்லல. சொல்ல அவருக்கு வாய்ப்பும் இல்ல. அப்போ கூட நான் பெருசா எதுவும் நினைக்கல. ஃப்ரீயா விட்டுட்டேன். ஆனா, அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா என்கிட்ட சில மாறுதல்களை உணர ஆரம்பிச்சேன். நான் தொடாமலேயே சில பொருட்களை மூவ் பண்ண முடிஞ்சது. முதல்ல, இது தற்செயலா நடக்குதுன்னு நினைச்சேன். அதுவுமில்லாம அப்போதான், எனக்கு மைல்டா ஒரு ஆக்சிடெண்ட் வேற ஆச்சு. தலைலயும் வேற லைட்டா அடிபட்டுச்சு. சோ, இதெல்லாம் நானா கற்பனை பண்ணிக்கிறேனோன்னு கூட நினைக்க ஆரம்பிச்சுட்டேன்.” என்று பெருமூச்சுடன் கூறினான் மதுசூதனன்.

 

“சோ, உங்களுக்கு டெலிகைனெசிஸ் பவரா?” என்று யாழ்மொழி ஆர்வத்துடன் வினவ, “ஆமா, என்னால தொடாமலேயே பொருட்களை மூவ் பண்ண முடியும். ஆனா, ரொம்ப பவர் யூஸ் செஞ்சா டையர்ட்டாகிடுவேன்.” என்றான் மதுசூதனன்.

 

“ஆமா, நீங்க எப்படி சரியான நேரத்துல அந்த மாலுக்கு வந்தீங்க?” என்று மென்மொழி வினவ, “நான் சொல்லப் போறது சரியான்னு எனக்குத் தெரியல. ஆனா, என்னால உங்களை… உங்க கிட்ட இருக்க பவர்ஸை சென்ஸ் பண்ண முடிஞ்சது. நேத்துல இருந்தே எனக்குள்ள ஒரு வியர்ட்டான ஃபீலிங் இருந்துச்சு. அது என்னனும் எனக்கு சரியா தெரியல. அப்போதான் நீங்க திடீர்னு என் முன்னாடி வந்தீங்க. அதோட உங்க கிட்ட இருந்த கிரீன் கலர் கல்லுல இருந்து வெளிவந்த வெளிச்சத்தையும் நான் பார்த்தேன்.” என்று இன்பசேகரனைப் பார்த்துக் கூறியவன்,

 

“என்னை மாதிரி இன்னும் சிலர் இருக்கலாம்னு அப்போதான் எனக்குத் தோணுச்சு. அதோட, உங்க எல்லாரையும் என்னால சென்ஸ் பண்ணவும் முடிஞ்சது.” என்று மதுசூதனன் கூற, “ஓஹ், அப்போ உங்களுக்கு ஜிபிஎஸ் பவரும் இருக்குன்னு சொல்லுங்க.” என்றாள் சுடரொளி.

 

அதற்கு மேல் அவளின் வாயை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை போலும்!

 

அதற்கு ஒரு சிரிப்பை பரிசளித்த மதுசூதனன், “அந்தப் பவரை வச்சுத்தான், நீங்க ஹாஸ்பிடல்ல இருந்தப்போ நானும் அங்க வந்தேன். ஆனா, உங்களை நெருங்க எனக்குப் பயமாவும் இருந்துச்சு. காரணம், என் அப்பா திரும்பத் திரும்பச் சொன்னது, இந்தக் கல் விஷயத்துல யாரையும் நம்பக் கூடாதுன்னுதான். அதனாலயே, தூரத்துல இருந்து உங்களை கண்காணிச்சேன். ஆனா, உங்களை சிலர் துரத்திட்டு வரதை பார்த்ததும், நீங்களும் என்னை மாதிரித்தான்னு புரிஞ்சுகிட்டேன்.” என்றான் மதுசூதனன்.

 

“அப்போ அந்த பச்சை கலர் மஹிந்திரா தார், உங்க வண்டி தானா?” என்று புருவச் சுருக்கத்துடன் யுகேந்திரன் வினவ, அதை ஒப்புக்கொண்டான் மதுசூதனன்.

 

“அடக்கடவுளே, எங்களை துரத்துற வில்லனோட வண்டின்னுல அதை நினைச்சோம்.” என்று சுடரொளி கூற, ஐவரும் கண்டுபிடித்ததைக் கேட்டறிந்து கொண்டான் மதுசூதனன்.

 

“ஹாஸ்பிடல்ல இருந்தது என் வண்டிதான். ஆனா, அதுக்கு முன்னாடி நான் எந்த ஆக்சிடெண்ட்டும் பண்ணல.” என்ற மதுசூதனன், யுகேந்திரனின் பார்வையை உணர்ந்து, “வேணும்னா, என்னோட கார் ஜிபிஎஸ்ஸையும், என்னோட மொபைல் நம்பர் இருந்த டவர் ரேஞ்சையும் செக் பண்ணிக்கோங்க.” என்றான்.

 

“இட்ஸ் ஓகே மது. ரிலாக்ஸ்…” என்ற யுகேந்திரன், “கல்லு மூலமா பவர்ஸ் கிடைச்ச ஒரே நாள்ல எங்களை ரவுடிங்க துரத்த ஆரம்பிச்சுட்டாங்க. அப்படின்னா, நீங்களும் இதுல சிக்கியிருக்கணும்ல.” என்று வினவினான்.

 

“அதனாலதான், நான் ஒரே இடத்துல இருக்குறது இல்ல. எப்பவும் டிராவல்லேயே இருப்பேன்.” என்றான் மதுசூதனன்.

 

“இந்தக் கல்லைப் பத்தி உங்களுக்கு வேற எதுவும் தெரியுமா? உங்க அப்பா ஏதாவது க்ளூஸ் விட்டுட்டுப் போயிருக்காரா?” என்று மென்மொழி கேட்க, “நானும் என் அப்பாவோட ஆஃபிஸ், வீடுன்னு எல்லா இடத்துலயும் தேடிப் பார்த்துட்டேன். ‘குமரிக்கண்டம்’ங்கிறதைத் தவிர வேற எதுவும் தெரியல.” என்று உதட்டைப் பிதுக்கினான் அவன்.

 

அத்தனை நேரம் ஏதோ தீவிர சிந்தனையில் இருந்த சுடரொளியோ, “கைஸ், நம்மள்ள சிலருக்கு ரெண்டு பவர்ஸ் இருக்கு… அதைக் கவனிச்சீங்களா? இன்பாக்கு டிரான்ஸ்போர்டேஷன், சூப்பர் ஸ்திரேந்த்… யாழுக்கு ஷேப்ஷிஃப்டிங், சூப்பர் ஹியரிங்… இப்போ மதுக்கு டெலிகைனெசிஸ், பவர் சென்சிங்…” என்றாள்.

 

அவளைத் தொடர்ந்து யுகேந்திரன், “எனக்கு மைண்ட் ரீடிங், மைண்ட் கண்ட்ரோல்.” என்று கூற, “அப்போ நானும் மொழியும்தான் ஆட் ஒன் அவுட்டா?” என்று உதட்டைப் பிதுக்கி சுடரொளி வினவ, “எல்லாருக்கும் ஒரே நேரத்துல பவர்ஸ் கிடைச்சுடாது. எனக்கே ஒரு வருஷமாகி இருக்கே. சோ, பொறுமையா இருங்க. உங்களுக்கும் வேற ஏதாவது பவர்ஸ் கிடைக்கும்.” என்று மதுசூதனன் கூற, அதற்கு மேல் வாய் திறப்பாளா அவள்!

 

மறுபக்கம் மொழியோ, “எல்லாரோட பவர்ஸும் டிஃபன்சிவ்வா இருக்கு. ஆனா, எனக்கு…” என்று நிறுத்த, “உன்னோட பவர் உனக்கு மட்டுமில்ல, நம்ம எல்லாருக்குமே ரொம்ப முக்கியமானது மொழி.” என்று ஆறுதல் கூறினான் யுகேந்திரன்.

 

அதே சமயம், அவர்கள் வர வேண்டிய இடமும் வந்திருந்தது.

 

நகரத்தின் நெருக்கடி இல்லாத ஆளரவமற்ற இடத்தில், சாலையிலிருந்து பல கிலோமீட்டர் தள்ளி இருந்த ஒதுக்குப்புறமான பழைய கட்டிடம் அது.

 

அதற்கு முன் நிறுத்தப்பட்ட வாகனத்திலிருந்து இறங்கினர் அறுவரும்.

 

“சீக்ரெட் மீட்டிங்குன்னே செதுக்கி வச்ச மாதிரி இல்ல. அந்தக் கரிகாலன் நல்ல பிளேசைதான் செலக்ட் பண்ணியிருக்காரு.” என்று முதலில் இறங்கிய சுடரொளி கூற, மற்றவர்கள் அவளைக் கண்டு கொள்ளவில்லை.

 

மாறாக, தங்களை யாரும் பின்தொடர்கின்றனரா என்று சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

“இப்போ நாம இங்க எதுக்கு வந்துருக்கோம்?” என்று மதுசூதனன் இன்பசேகரனிடம் முணுமுணுக்க, “நம்மகிட்ட இருக்கக் கல்லைப் பத்தி தெரிஞ்சுக்கத்தான்.” என்றான் அவன்.

 

அதற்குள், உள்ளே இருந்து வந்த கரிகாலன் தன்னை அறிமுகப்படுத்தியதோடு, “உங்களை யாரும் ஃபாலோ பண்ணி வரலையே?” என்று கேட்டு உறுதிபடுத்திக் கொண்டார்.

 

அவரின் உடல்மொழியில் தெரிந்த பதற்றத்தை அனைவரும் உணர்ந்தே இருந்தனர்.

 

பின்னர், அறுவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

 

“இப்போ சொல்லுங்க, எதுக்காக என்னைக் கான்டேக்ட் செஞ்சீங்க?” என்று கரிகாலன் வினவ, “சார், மிஸ்டர். ஆராவமுதனுக்கும் உங்க ஃபேமிலிக்கும் எப்படி பழக்கம்னு தெரிஞ்சுக்கலாமா? தப்பா எடுத்துக்காதீங்க… இது ரொம்ப சென்சிட்டிவ்வான விஷயம். எங்களோட சேஃப்டிக்காக, யாரையும் நம்பாம இருக்குறது பெட்டர்னு தோணுது…” என்று பொறுமையாக விளக்கினான் யுகேந்திரன்.

 

அதற்கு ஒரு சிரிப்பை வெளியிட்ட கரிகாலனோ, “ஆராவமுதன் சாரோட ரிசர்ச்சைப் பத்தி நீங்க விசாரிக்கிறீங்கன்னு தெரிஞ்சதும், விஷயம் எவ்ளோ சீரியஸ்னு எனக்குப் புரிஞ்சுடுச்சு யுகேந்திரன். நானும் அதுக்காகத்தான் இவ்ளோ கேர்ஃபுல்லா இதை ஹேண்டில் பண்றேன். இந்த விஷயம் சின்னதா வெளிய கசிஞ்சா கூட, உங்க உயிருக்கு உத்திரவாதம் இல்ல.” என்று எச்சரித்தவர், ஒரு பெருமூச்சுடன், “ஆராவமுதன் சாரும் என் அப்பாவும் ஃபிரெண்ட்ஸ்… நான் அவரோட ஸ்டுடெண்ட்.” என்றார்.

 

“ஃபிரெண்டா? தாத்தாக்கு ஃபிரெண்ட்ஸ் யாரும் இருந்ததா எனக்குத் தெரியாதே…” என்று மென்மொழி குழப்பத்துடன் கூற, “ஹ்ம்ம், அவங்களோட வேலைல இருந்த ஆபத்து அவங்களுக்கு நெருக்கமானவங்களை பாதிச்சுடக் கூடாதுன்னு, எல்லா உறவுகளையும் தள்ளியே நிறுத்துனதா, சார் ஒருமுறை சொல்லியிருக்காரு.” என்றார் அவர்.

 

ஆராவமுதன் இறக்கும் வரை தனிமையில் இருந்ததற்கான காரணம் இப்போதுதான் விளங்கியது மொழி சகோதரிகளுக்கு!

 

“அந்த ஆபத்து ‘குமரிக்கண்டம்’ பத்தின ஆராய்ச்சியாலையா?” என்று யுகேந்திரன் வினவ, “ஆமா… சில வரலாறுகள் தெரியுறதுக்கு தெரியாம இருக்குறது பெட்டர். அப்படி ஒண்ணுதான் குமரிக்கண்டம். ஆனா, சந்தர்ப்ப சூழ்நிலையால, அதைப் பத்தி தெரிஞ்சுகிட்ட சில கெட்டவங்களுக்கு எதிரா சத்தமே இல்லாம போராடுனவருதான் உங்க தாத்தா. அவரு மட்டும் இல்லன்னா, இன்னைக்கு இந்த உலகம் எப்படியெல்லாமோ மாறியிருக்கும்…” என்று ஒரு பெருமூச்சுடன் கரிகாலன் கூற, யாழ்மொழி உட்பட அங்கிருந்த அனைவருக்கும் ஆராவமுதனைப் பற்றிய ஆர்வம் தொற்றிக் கொண்டது!

 

தொடரும்…

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்