Loading

அத்தியாயம் 8

 

உதயகீதனின் அறையில்… கோபத்தின் மறுஉறுவமாக சுழல்நாற்காலியில் அமர்ந்து எதிரில் பாவமாக நின்றிருந்த ஜீவநந்தினியை முறைத்துக் கொண்டிருந்தான் அவன்.

 

அவன் கரமோ காகித எடையை உருட்டிக் கொண்டிருக்க, மங்கையின் மனமெல்லாம், ‘அதை என் மேல தூக்கி போடாம இருந்தா சரிதான்!’ என்ற எண்ணமே நிறைந்திருந்தது.

 

“ஆஃபிஸ் வரது இதுக்கு தானா ஜீவநந்தினி?” என்று கோபத்தை கட்டுப்படுத்தியபடி அவன் வினவ, “எதுக்கு சார்?” என்று அப்பாவியாக மாறி, அவனின் எரிச்சலை அதிகரித்தாள் ஜீவநந்தினி.

 

“காட் டாம்… லேட்டா வந்ததும் இல்லாம, ஸ்டாஃப் எல்லாரையும் கூட்டி மாநாடு எல்லாம் நடத்தி… வாட் இஸ் திஸ்? பட்டப்பெயர் எல்லாம் வைக்குற அளவுக்கு உங்களுக்கு ஃப்ரீ டைம் இருக்குல?” என்று உதயகீதன் வினவ, அதற்கும் அலட்டிக் கொள்ளாமல், “சார், மாநாடு நடத்துற அளவுக்கு நான் பெரிய ஆளெல்லாம் இல்ல. ஏதோ திடீர் கல்யாணமாச்சே, நான் எப்படி இருக்கேன்னு பாசமா கேட்டுட்டு இருந்தாங்க. நான் கூட, இது ஒர்க்கிங் டைம்னு அவங்களை வேலை பார்க்க சொல்றதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க சார்.” என்று கூறினாள்.

 

அவனோ இடையில் கைவைத்தபடி, “லேட்டா வந்ததுக்கு என்ன காரணம் சொல்லப் போறீங்க?” என்று கூர்மையாக அவளை பார்க்க, “உங்களுக்கே தெரியும், நேத்து எனக்கு அவசரமா கல்யாணம் நடந்துச்சு. அதனால உண்டான மனஉளைச்சல் என்னை பாதிச்சாலும், என் ஆஃபிஸ் ஒர்க் அதனால தடைபட கூடாதுங்கிற நல்ல எண்ணத்துல, லீவு கூட போடாம வந்த என் டெடிகேஷனை நீங்க பாராட்டலைன்னாலும், இப்படி டிஸ்கரேஜ் பண்ணாம இருந்தா நல்லா இருக்கும் சார்.” என்றாள் அவள்.

 

அவன் அதற்கும் முறைக்க, “நானே ஒரு சூழ்நிலை கைதி சார்…” என்று அவள் மீண்டும் ஆரம்பித்தாள்.

 

அதில் அவனுக்கு தலை வலிப்பது போலிருக்க, கையசைத்து அவளை அமைதியாக இருக்க கூறியவன், வேலையை பற்றி பேச ஆரம்பித்தான்.

 

“இந்த வீகெண்ட் வாக்-இன்-டிரைவ் போகணும்ல? அதுக்கான பிரெப் எந்தளவுக்கு இருக்கு?” என்று அவன் வினவ, “எல்லா டீடெயில்ஸும் உங்களுக்கு மெயில் பண்ணிட்டேன் சார். நீங்க பார்த்து ஏதாவது சேஞ் பண்ணனும்னா சொல்லுங்க சார்.” என்றாள் அவள் பவ்யமாக.

 

மனதிற்குள், ‘நல்லவேளை, இவரு கல்யாண பிஸில வர மாட்டாருன்னு நினைக்காம, அன்னைக்கே முடிச்சு வச்சது நல்லதா போச்சு!’ என்று ஆசுவாசப்பட்டுக் கொண்டாள்.

 

அதற்கு ஆயுட்காலம் குறைவு என்பது போல, “எத்தனை நாள், நான் அசிஸ்டன்ட் இல்லாம கஷ்டப்படனும்னு நினைக்குறீங்க ஜீவநந்தினி?” என்று அடுத்த கேள்வியை அவன் முன்வைக்க, “உங்க எக்ஸ்பெக்டேஷன் வானளவுக்கு இருந்தா, யாரு கிடைப்பா? மேரேஜ் செக்ஷன்ல கூட இத்தனை கண்டிஷன்ஸ்,ரெஸ்டிரக்ஷன்ஸ் இருக்காது.” என்று முணுமுணுத்தாள் அவள்.

 

“வாட்? கம் அகேயின்…” என்று அவன் குரலை உயர்த்த, “எலிஜிபில் கேண்டிடேட் யாரும் இல்லை சார். அப்படி யாரையும் தேடி கண்டுபிடிச்சா உங்களுக்கு சொல்றேன் சார்.” என்று அதையும் பவ்யமாக அவள் கூற, “ஒரு வேலையும் உருப்படியா செய்யுறது இல்ல, இதுல வெட்டிப்பேச்சு பேச மட்டும் நேரம் கிடைக்கும்.” என்று முணுமுணுத்தவன், “கெட் லாஸ்ட்.” என்று திட்டி, அன்றைய கோட்டா முடிந்தது என்பதை போல அவனின் வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்.

 

“எல்லாரும் இவரை மாதிரியே ரோபோ போலவா வேலை செய்வாங்க!” என்று முணுமுணுத்தபடி வெளியே வந்த ஜீவநந்தினியை நிறுத்திய அவளின் தோழி ரேகா, “என்ன மேடம் விஷயம்? கல்யாணமானாலும் கூட நீ திட்டு வாங்குறது குறையாது போல இருக்கு!” என்று கேலி செய்தாள்.

 

“எல்லாம் என் தலையெழுத்து ரேக்ஸ். முசோக்கு அர்ஜெண்ட்டா பி.ஏ வேணுமாம். அரை பக்கத்துக்கு கண்டிஷன்ஸ் கொடுத்து தேட சொன்னா, நான் என்ன பண்றது… யாரையாவது உருவாக்க தான் செய்யணும்.” என்று அலுத்துக் கொண்டே அவளிடத்தில்  சோர்வாக அமர்ந்தாள் ஜீவநந்தினி.

 

வழக்கமாக ஒரே ஒரு முறை மட்டும் திட்டு வாங்கி பழக்கப்பட்டவள், அன்று பல முறை அவன் அறைக்குள் சென்று வந்து விட்டாள்.

 

“இதென்ன உங்க வீடுன்னு நினைச்சீங்களா ஜீவநந்தினி? இங்க நான் தான் உங்க பாஸ். நான் சொல்ற மாதிரி தான் நடக்கணும்.” என்று வெவ்வேறு விதமாக வேறு சொல்லிக் காட்டியபடி இருந்தான் உதயகீதன்.

 

‘யோவ் முசோ, வீட்டுல செஞ்சதுக்கு, இப்போ என்னை வச்சு செய்யுறல! க்ரைம் ரேட் ஏறிட்டே இருக்கு. பார்த்துக்குறேன்!’ என்று உள்ளுக்குள் கறுவியவள் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தாள்.

 

இதில், அவள் அடிக்கடி உதயகீதனின் அறைக்குள் செல்வதை பார்த்த மற்றவர்களின் ஆர்வப்பார்வையை கண்டவளோ, ‘இவனுங்க வேற, உள்ள என்ன நடக்குதுன்னு தெரியாம, நாங்க ஏதோ ரொமான்ஸ் பண்ற மாதிரி பார்த்து வைக்குறானுங்க!’ என்று நொடித்துக் கொண்டாள்.

 

ஒருவழியாக, மாலை ஆறு மணியாக, அதற்காகவே காத்திருந்ததை போல வீட்டிற்கு கிளம்பி விட்டாள் ஜீவநந்தினி.

 

வந்ததும் வராததுமாக, தந்தையையும் மாமனாரையும் அமர வைத்து, அலுவலகத்தில் நடந்தவற்றை எல்லாம் கூறியவள், “இப்போ சொல்லுங்க மாமா, உங்க மகனை மாதிரி அரிய வகை மனுஷங்க மத்தியில பொழப்பை ஓட்டுற எனக்கெல்லாம் பாராட்டு விழாவே நடத்தலாம் தான?” என்று கேட்டபடி குளம்பியை எடுத்து பருக, “நந்தும்மா, இப்படியெல்லாம் பேசக்கூடாது.” என்று சுதாகர் தான் அவளை அதட்டினார்.

 

“நீ சும்மா இரு சுதாகரா.” என்ற கேசவமூர்த்தியோ, “நீ ரொம்ப பாவம் தான்மா. அதுசரி, அவன் பி.ஏக்கு என்ன குவாலிஃபிகேஷன் வச்சுருக்கான்?” என்று வினவ, “அந்த கொடுமையை ஏன் கேட்குறீங்க மாமா? பொண்ணா இருக்கக் கூடாதாம். வயசு 28லயிருந்து 38 வரை தான் இருக்கணுமாம். இங்கிலீஷ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம்னு இத்தனை மொழிகள் தெரிஞ்சுருக்கணுமாம். ஃபாரின் லேங்குவேஜ் ஆடட் பெனிஃபிட்டாம்! சுறுசுறுப்பா இருக்கணுமாம். சொன்ன வேலையை ஏன், எதுக்குன்னு கேள்வி கேட்காம செய்யணுமாம். ஹயிட் வெயிட் கூட லிஸ்ட்ல இருக்கு. ஆக மொத்தம், உங்க மகன் பி.ஏவா ஒரு மனுஷனை எதிர்பார்க்கல. அவரை மாதிரியே ஒரு ரோபோவை தான் எதிர்பார்க்குறாரு!” என்று சலித்துக் கொண்டாள் ஜீவநந்தினி.

 

சரியாக அதே சமயம் உள்ளே நுழைந்த உதயகீதனோ, “அப்பா…” என்று பல்லைக் கடித்து கொண்டு அழைக்க, சுதாகரும், “நந்தும்மா, என்ன இது?” என்று கண்டிக்க முடியாமல் தயங்க, “நான் எஸ்கேப்…” என்று அறையை நோக்கி ஓட்டம் எடுத்திருந்தாள் ஜீவநந்தினி.

 

அவள் செல்வதையே கோபம் பொங்க பார்த்த உதயகீதனோ, “திஸ் இஸ் தி லிமிட்! என்னதான் நினைச்சுட்டு இருக்கா அவ? கல்யாணமாகிட்டதால ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்குறாளா?” என்று கத்தியவன், அப்போது தான் சுதாகர் வருத்தம் தோய்ந்த முகத்தை தொங்க போட்டபடி நிற்பதைக் கண்டான்.

 

அதுவரை சரளமாக வந்து விழுந்த வார்த்தைகள் சற்று நிதானம் பெற, ஒரு கரமும் இடையில் இருக்க, மற்றொரு கரம் புருவத்தை வருட, “சாரி அங்கிள்…” என்றான்.

 

“தம்பி, நந்து சின்ன வயசுலயிருந்து தனியாவே வளர்ந்துட்டதால, அந்த தனிமையை போக்கிக்க வேண்டி, படபடன்னு பேசுவா. ஆனா, மனசுல எதையும் வச்சுக்க மாட்டா. உங்க நிலைமையும் எனக்கு புரியது. நான் அவளை கண்டிச்சு வைக்கிறேன்.” என்று கவலையுடன் சொன்ன சுதாகர் அங்கிருந்து சென்று விட்டார்.

 

“உதய், என்ன பண்ணிட்டு இருக்க? கொஞ்சம் பொறுமையா பேசியிருக்கலாம்.” என்று நண்பனின் மன வருத்தம் தாளாமல் கேசவமூர்த்தி கூறிவிட, “ப்ச்…” என்று சலித்தபடி அங்கிருந்த நீள்சாய்விருக்கையில் தளர்ந்து அமர்ந்து விட்டான்.

 

“உங்க மருமகளுக்காக பார்க்குறீங்க, உங்க ஃபிரெண்டுக்காக பார்க்குறீங்க. ஆனா, என் மனசை மட்டும் நீங்க ஏன் புரிஞ்சுக்க மாட்டிங்குறீங்கப்பா?” என்று ஆழ்ந்த குரலில் உதயகீதன் வினவ, அவனருகே அமர்ந்த கேசவமூர்த்தியும், “இதெல்லாம் உனக்காக தான் உதய். இது இப்போ உனக்கு புரியாது. இப்போ விட்டா, உன்னையும் என்னால பிடிக்க முடியாது உதய். அப்பாக்கு உன்னை நல்லா தெரியும்.” என்று பல நாட்களுக்கு பிறகு மகனின் கேசத்தை வருடினார்.

 

“இப்போ இந்த கல்யாணத்துக்கு என்ன அவசியம்பா? தெரிஞ்சே, ரெண்டு பேரோட வாழ்க்கை வீணாகிடுச்சே!” என்று அவன் வினவ, “யாரோட வாழ்க்கையும் வீணாகல உதய். எல்லாரோட வாழ்க்கைலேயும் இது மாதிரியான சங்கடமான காலகட்டம் வரும். அதை எப்படி நாம கையாளுறோங்கிறதுல தான் அந்த வாழ்க்கை வெற்றிபெறுதா இல்ல தோல்வில முடியுதான்னு தெரியும்.” என்ற கேசவமூர்த்தி, தன்  வாழ்க்கையை பற்றி யோசிக்க துவங்கி விட்டார்.

 

அதை கண்டு கொண்ட உதயகீதனின் மனமோ தன்னாலேயே, ‘என் வாழ்க்கையை விட்டுட மாட்டேன்பா!’ என்று சொல்லிக் கொள்ள, இப்போது சற்று இலகுவான குரலில், “அதுக்குன்னு இவளையா? எப்படி தான் அங்கிள் இவளை இவ்ளோ நாள் சமாளிச்சாரோ? ஆஃபிஸ்ல கொஞ்ச நேரமே இவளை வச்சு சமாளிக்க முடியாது. இதுல, வாழ்க்கை முழுசா… உஃப், நீங்க கொஞ்சம் யோசிச்சுருக்கலாம்.” என்று அவன் கூற, சற்று முன்னர் இருந்த மனஉறுத்தல்கள் எல்லாம் மாயமாக மறைந்தது போல வாய்விட்டு சிரித்தார் கேசவமூர்த்தி.

 

“ரெண்டு பேருக்கும் எதுல ஒற்றுமை இருக்கோ, இதுல செம மேட்சிங் தான்!” என்று ஜீவநந்தினி கூறியதை மகனிடம் பகிர்ந்த கேசவமூர்த்தி, “நந்து ரொம்ப நல்ல பொண்ணு உதய். ஈஸி கோயிங் நேச்சர். நடந்தவைகளை நினைச்சு வருத்தப்பட்டுட்டே இருக்காம, அடுத்து என்னன்னு பார்க்குறது தான் அவ பிளஸ். நீ கூட பார்த்த தான, இந்த கல்யாணம் அவளுக்குமே நிறைய பிரஷர் கொடுத்துருக்கும். கிட்டத்தட்ட கட்டாய கல்யாணம் மாதிரி தான். ஆனா, அதுக்கு ஒடிஞ்சு போய் உட்காராம, எவ்ளோ துறுதுறுன்னு இருக்கா பாரு. உன்னை மாதிரி, எரிச்சலா கூட அவ இருந்து நான் பார்க்கல.” என்று இது தான் சாக்கென்று மகனையும் வார்த்தையால் குட்டியவர், “அவ இருக்குற இடம்  எப்பவும் கலகலன்னு தான் இருக்கும். சச் அ ஸ்வீட் கேர்ள்.” என்று மருமகளுக்கு பாராட்டு பத்திரம் வாசித்தார்.

 

“க்கும், லொடலொடன்னு பேசிட்டே இருந்தா, அப்படி தான்!” என்று நொடித்துக் கொண்டாலும், உதயகீதனுக்கும் ஜீவநந்தினியின் குணம் ஆச்சரியமாக தான் இருந்தது.

 

அவன் பார்த்த மற்ற பெண்களாக இருந்தால், விரும்பாத கட்டாய திருமணத்தால், ஒன்று கோபம் கொண்டிருப்பர், இல்லை என்றால் அழுது கொண்டிருப்பர். இப்படி, பேசி பேசியே மற்றவர்களை சோர்வடைய செய்ய மாட்டார்கள்.

 

அந்த வகையில், அவளின் மீது சற்று மதிப்பும் மரியாதையும் வந்திருந்தது உண்மை தான்!

 

அதனுடன், அவனே அறியாமல் அவன் பிரச்சனையை பற்றி அதிகம் சிந்திக்க விடாமல், அவளைப் பற்றி மட்டுமே சிந்திக்க வைத்திருந்தாள் ஜீவநந்தினி.

 

ஆம், நள்ளிரவு முதல் வைகறை வரை அவன் இருந்த மனநிலைக்கும் இப்போதைய அவன் மனநிலைக்கும் மலைக்கும் மடுவுக்குமான அளவு வித்தியாசம் இருந்ததே.

 

அதை சத்தமே இல்லாமல் சாதித்திருந்தாள் அவன் மனைவி. அவனும் அதை அறிந்திடவில்லை என்பது தான் ஆச்சரியம்!

 

இன்னும் சற்று நேரம் தந்தையிடம் பேசிவிட்டு அவன் அறைக்கு செல்ல முற்படும் நேரம், தோட்டத்தில் ஜீவநந்தினியும் சுதாகரும் பேசிக் கொண்டிருந்தது அவன் கண்ணில் பட்டது.

 

அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று தெரியா விட்டாலும், சுதாகரின் தீவிரமான முகபாவமும், ஜீவநந்தினியின் அமைதி தழுவும் சாந்தமான முகபாவமும் கண்டவனுக்கு, அங்கு நடக்கும் நிகழ்வுகள் புரியத்தான் செய்தது.

 

மனதோரம், தன்னால் தான் என்ற குற்றவுணர்வு எட்டிப் பார்த்தாலும், காலையிலிருந்து அவனை விதவிதமாக பேசியே வைத்து செய்தவளை இப்படி அமைதியின் சுவரூபமாக பார்ப்பது ஒருவித இன்பத்தை தந்தது என்று கூறினால், அது மிகையாகாது.

 

அது தந்த உற்சாகத்துடன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு கீழே வந்தவனின் பார்வை, அடிக்கடி மௌனத்தை தத்தெடுத்துக் கொண்ட மனையாளை சுற்றியே வந்தது.

 

கேசவமூர்த்தி கூட, “என்னடா ஆச்சு நந்துக்கு? நீ எதுவும் சொன்னியா?” என்று சுதாகரை கேட்டவர், மருமகளிடம், “நீ எதுவும் நினைக்காம, எப்பவும் போல இருடாம்மா.” என்று சொல்லி பார்த்து விட்டார்.

 

ஆனாலும், அவளின் மௌனம் களையவில்லை.

 

“அப்பா, இப்போ தான் அமைதியா நிம்மதியா இருக்கு. அது உங்களுக்கு பொறுக்கலையா?” என்று வேண்டுமென்றே அவளை வெறுப்பேற்ற உதயகீதன் கேட்டு வைக்க, அவனை ஓரக்கண்ணில் முறைத்தவள், மீண்டும் கவனத்தை அவள் முன்னிருந்த தட்டிற்கு கடத்தினாள்.

 

தந்தை பக்கம் திரும்பாமல், மாமனாருக்கு மட்டும் இரவு வணக்கத்தை செலுத்தி விட்டு அறைக்கு சென்றவளை கவலையுடன் சுதாகர் பார்க்க, அதற்கும் திட்டினார் கேசவமூர்த்தி.

 

“என் மருமகளை என்னடா சொன்ன? பாரு பிள்ளை முகமே வாடி போச்சு.” என்று கேசவமூர்த்தி கூற, “அவ பேசுறது தப்பு தான மூர்த்தி. இதே பேச்சு தான, நாளைக்கு வெளிய போகும் போதும் வரும். நான் இப்போ கண்டிக்கலைன்னா, வேற யாராவது ஏதாவது சொல்லிடுவாங்கங்கிற பயத்துல தான் மூர்த்தி, நானே என் பொண்ணை திட்டுறேன். எல்லாம் அவ நல்லதுக்காக தான. அவ புரிஞ்சுப்பா.” என்றார் சுதாகர்.

 

அவர் வருத்தத்துடன் கூறுவதை கவனமாக கேட்டுக் கொண்ட உதயகீதனோ, “அங்கிள், நம்ம வாழ்க்கையை நம்ம தான் வாழனும். அடுத்தவங்க என்ன சொல்லுவாங்கன்னு பயந்துட்டே வாழ்ந்தா நம்ம வாழ்க்கை நிம்மதியில்லாம போயிடும். அதனால, இதுக்கெல்லாம் கவலைபட்டுட்டு இருக்காதீங்க.” என்றான்.

 

*****

 

உதயகீதன் அறைக்குள் நுழையும் நேரம் கட்டிலில் அமர்ந்திருந்த ஜீவநந்தினி, சட்டென்று இழுத்து போர்த்தி படுத்துக் கொண்டாள்.

 

அதில் உண்டான சிரிப்புடன் அவன் உள்ளே நுழைய, அந்த சிரிப்பை உறைந்து போக வைக்கும் விதமாக அவன் அலைபேசி ஒலித்தது.

 

அதில் தெரிந்த பெயரை கண்டவனின் முகம் மீண்டும் இறுகிப் போக, அவன் மனமோ அதை ஏற்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் சிக்கித் தவித்தது.

 

அதே சிந்தனையுடன் பால்கனியை அடைந்தவன், அழைப்பவளின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அந்த அழைப்பை ஏற்றிருந்தான்.

 

அழைப்பு ஏற்கப்பட்டதும், “ஹலோ உதய், என்ன இவ்ளோ நேரம்?” என்று பரபரப்பாக வினவிய ராகவர்ஷினி, “ப்ச், சாரி சாரி, முன்னாடி இருந்த உதய்னு நினைச்சு பேசிட்டேன்.” என்று சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ஊசியாக குத்தினாள்.

 

அவளை எதுவும் சொல்லிவிட முடியாதவனாக, ஒரு பெருமூச்சுடன், “என்ன விஷயம் ராகவர்ஷினி?” என்றான் உதயகீதன்.

 

ஆம், ராகவர்ஷினி தான்!

 

அவள் வாழ்க்கைக்காகவும், தன் வாழ்க்கைக்காகவும் அவளை தள்ளி நிறுத்த முடிவெடுத்து விட்டான்.

 

அவன் மட்டும் முடிவெடுத்தால் போதுமா?

 

அவன் விளிப்பை கேட்டதும், ஏமாற்றமடைந்த ராகவர்ஷினி, அதை அப்பட்டமாக குரலில் காட்டியபடி, “ஓஹ், இனிமே ‘ராகவர்ஷினி’ தான? ஹ்ம்ம், ஓகே உதய், உங்களுக்கு எப்படி தோணுதோ, அப்படியே கூப்பிடுங்க. நான் இப்போ உங்களை கூப்பிட்டதுக்கு காரணம், நாளைக்கு நான் உங்களை மீட் பண்ண முடியுமா?” என்று தயங்கியபடி கேட்டாள்.

 

அந்த உரையாடலே இருவருக்கும் விசித்திரமாக இருந்தது.

 

உதயகீதனிடம் ராகவர்ஷினிக்கு எப்போதுமே தயக்கம் என்பது சிறிதும் இருந்ததில்லை. அதோடு, இந்த கேள்வி கேட்பது எல்லாம் புதிது தான்.

 

உதயகீதன் அமைதியாக இருக்க, “ஓஹ், நீங்க பிஸியா இருப்பீங்கல? சாரி, உங்களை நான் டிஸ்டர்ப் பண்றேன்ல?” என்று உள்ளே சென்று விட்ட குரலில் அவள் வினவ, வேறு எதுவும் சொல்லாமல், “நாளைக்கு ஈவினிங் மீட் பண்ணலாம். டேக் கேர்.” என்று அழைப்பை துண்டித்து விட்டான் உதயகீதன்.

 

காதிலிருந்த அலைபேசியை எடுத்து மர்ம சிரிப்புடன் பார்த்த ராகவர்ஷினியோ, “என்கிட்ட இருந்து ரொம்ப தள்ளி போயிட்ட ஃபீல் வருது உதய். ஆனா, அவ்ளோ ஈஸியா உன்னை விட்டுட மாட்டேன். திரும்ப உன்னை என் பக்கத்துல வர வைக்க என்ன வேணும்னாலும் செய்வேன்.” என்று சொல்லிக் கொண்டவளை அதிர்வோடு பார்த்துக் கொண்டிருந்தார் கீதாஞ்சலி.

 

இங்கு உதயகீதனோ, தன் வாழ்க்கை பாதை மாறியதை எண்ணி வெதும்பியவனாக உள்ளே வந்தான்.

 

அவன் முகம் இறுகிக் கிடந்ததை ஓரக்கண்ணில் பார்த்த ஜீவநந்தினியோ, ‘இவ்ளோ நேரம் நல்லா தான இருந்தாரு? இப்போ என்ன பேக் டூ முசோவா?’ என்று எண்ணியபடி கண்களை மூடிக் கொண்டாள்.

 

தொடரும்…

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 38

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
30
+1
3
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. வர்ஷி லூசு. நந்தினி😍😍😍

  2. நந்து செம கேரக்டர் 🥰 உதய் நந்தினி நல்ல காம்போ 🤣

    என்ன வேணுமாம் இந்த வர்ஷினிக்கு அடிக்கடி அண்ணனை தொல்லை பண்ணிக்கிட்டே இருக்கா…. 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

    1. Author

      நந்து 😍😍😍 வர்ஷிக்கு அண்ணன் தான் வேணுமாம் 😝😝😝