Loading

அத்தியாயம் 8

 

இரா, “இன்னும் கொஞ்ச நாள்ல நான் இறந்துடுவேன்.” என்று கூறியதும், முதலில் ஒன்றுமே புரியவில்லை அத்வைத்திற்கு.

 

அதை யோசிக்கவும் எண்ணவில்லை அவன். முதலில், அழுபவளை தேற்றவே எத்தனித்தான்.

 

அவளின் இரு கரங்களையும், தன் இரு கரங்களுக்குள் பொத்தி வைத்துக் கொண்டவன், அவளின் அழுகை குறையும் வரை அமைதியாக நின்றான்.

 

அவளும், அவனின் அண்மையை உணராமல், அவள் இத்தனை நாள்களாக ஒதுக்கி, ஒளித்து வைத்த உணர்வுகளை மொத்தமாக வெளியிடுவது போல அழுது கொண்டே இருந்தாள்.

 

அவளின் அழுகை குறைவது போல தெரியாததால், “ஹே ஸ்டார்லைட், நீ அழுகுறப்போ கூட அழகாதான் இருக்க. அதுக்காக, இப்படி அழுதுட்டே இருந்தா எப்படி?” என்று அத்வைத் கேலியாக வினவ, அப்போதுதான் நிகழ்வை உணர்ந்து அவனிடமிருந்து விலகினாள்.

 

“க்கும், ரொம்பத்தான் வேகம்!” என்று சலித்துக் கொண்டவனோ, “இப்போ கொஞ்சம் ஓகேயாகிட்டியா?” என்றும் வினவ, லேசாக எரிச்சல் எட்டிப் பார்த்தது இராவிற்கு.

 

அவளின் இந்தக் கோபம், அவனிடம் எதிர்பார்த்த எதிர்வினை கிடைக்காததலா?

 

அப்படி என்ன எதிர்பார்த்தாள்?

 

அதிர்ச்சி?

 

கோபம்?

 

ஏமாற்றம்?

 

குறைந்தபட்சம் பதற்றம்!

 

இப்படி எதையுமே வெளிப்படுத்தாமல், அவளுக்கு ஆறுதலாக நின்றதோடு மட்டுமில்லாமல், இப்போது ‘ஓகேயா’ என்று கேட்டவனைக் கண்டு ஆயாசம் ஏற்பட்டது இராவிற்கு.

 

அதோடு, ‘இவனுக்கு நான் சொன்னது புரிஞ்சுதா?’ என்ற சந்தேகம் வேறு முளைக்க, அவனையே புருவம் சுருக்கிப் பார்த்தாள்.

 

இந்த களேபரத்தில், அவளின் வருத்தம் எல்லாம் பின்னோக்கி சென்று விட்டது.

 

அவளின் மனநிலையை ஓரளவு கணித்து விட்டவனோ, “இந்த ரணகளத்துலயும் கிளுகிளுப்பு மாதிரி, என்னை சைட்டடிச்சு முடிச்சுட்டியா?” என்று மீண்டும் கேலியில் இறங்கினான்.

 

அதில், தனது இளநீலநிறக் கண்களை அவள் விரிக்க, “பார்த்து பார்த்து, நானே உள்ள மூழ்கிடப் போறேன்.” என்று அப்போதும் நக்கலாக உரைத்தவன், “என்கிட்ட வேற எதையோ எதிர்பார்த்தியோ?” என்றபடி அவளை நெருங்கினான்.

 

அவளின் விரித்த விழிகள் விரித்தபடி இருக்க, காலகள் மட்டும் பின்னோக்கி நகர்ந்தன.

 

“நான் வேற என்ன செய்ய? முழுசா சொல்லாம, முக்கால்வாசியை மிழுங்கிட்டு சொன்னா, அதை வச்சு நான் என்ன ரியாக்ட் பண்ண ஸ்டார்லைட்?” என்றவன், உறைந்த நிலையில் நின்றவளில் துள்ளிக் கொண்டிருந்த குழலைக் காதோரம் ஒதுக்கியவாறே, “உனக்கு என்மேல நம்பிக்கை இருந்தா, எந்த சூழல்லயும் நான் உன்னோடவே இருப்பேன்னு நினைச்சா, உன் கடந்த காலத்தைப் பத்தி என்கிட்ட சொல்லு.” என்றான் மென்மையாக.

 

அத்தனை நேரம் இருந்த பாவனை மாறி, ஒரு விரக்தி சிரிப்பு மட்டுமே அவளிடம்.

 

அதைக் கண்டவனோ, “சோ, நீ என்னை நம்பல.” என்று அவளின் விழிகளை ஆழ்ந்து பார்க்க, எப்போதும் யாரையும் எதிர்த்து நிற்கும் அவளின் விழிகள் இப்போது அவனின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தளர்ந்தது.

 

“‘நம்பிக்கை’ங்கிற வார்த்தை என்னோட டிக்ஷனரில இருந்து மறைஞ்சு போய் ரொம்ப நாளாச்சு.” என்று அதே விரக்தியான குரலில் கூறியவள், அந்த நூலகத்திலிருந்து வெளியே வந்தாள்.

 

ஒரு பெருமூச்சுடன் அவளைப் பின்தொடர்ந்தவனோ, “அப்படி என்ன நடந்துச்சு இரா?” என்றான் அவளின் அகம் தொடும் குரலில்.

 

அவளின் அறைக்குள் நுழைந்த இராவோ, அங்கிருந்த குடும்ப புகைப்படத்தைக் கையிலெடுத்தவள், “இதோ… நாலு வருஷத்துக்கு முன்னாடி, இதுதான் உண்மைன்னு நினைச்சு சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்தேன். என்னோட இருபத்தியோராவது வயசு வரைக்கும். அந்த நாள் மட்டும் என் வாழ்க்கைல வரலைன்னா, எவ்ளோ நல்லா இருக்கும்னு எத்தனை முறை நினைச்சுருக்கேன் தெரியுமா?” என்றவளின் ஒற்றைக் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரை, எதுவும் செய்ய முடியாத நிலையில் கண்டு கொண்டிருந்தான்.

 

“என்ன நடந்துச்சு இரா?” என்று அவன் மென்மையாக வினவ, “எனக்கு மேஜிக் பவர் இருக்குன்னு தெரிய வந்துச்சு.” என்று தயக்கத்துடன் கூறியவளின் மூளை, அன்றைய நாளின் நினைவுகளுக்கே அழைத்துச் சென்றது.

 

*****

 

நான்கு வருடங்களுக்கு முன்பு…

 

வெளியூரில் தங்கிப் படிப்பை முடித்த இரா, அன்றுதான் வீட்டிற்கு திரும்பினாள். அது அவளின் பிறந்தநாளாக வேறு இருக்க, அவளின் மொத்த குடும்பமும் இராவின் வீட்டில் கூடிவிட்டனர்.

 

இராவின் குடும்பம் என்றால், ஐங்கரன், ரூபிணி, அவனி மட்டுமல்ல, ஐங்கரனின் ஒற்றை தங்கையான தாரணியின் குடும்பத்தினரும் அங்குதான் இருந்தனர்.

 

தாரணியின் கணவர் விநாயகம், ரூபிணியின் சொந்த அண்ணன். இது ஜோடிகளும், பெண் கொடுத்து, பெண் எடுத்து திருமணம் செய்து கொண்டனர்.

 

தாரணிக்கு இரண்டு புதல்வர்கள் – ரக்ஷன் மற்றும் ஷ்ரவன்.

 

அண்ணன்களுக்கும் தங்கைகளுக்கும், தங்களின் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற அவா இருந்ததுதான்.

 

ஆனால், அதெல்லாம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ரக்ஷன் வீட்டை விட்டுப் பிரிந்து சென்றதில், ஊசலாடிக் கொண்டிருந்தது.

 

ரக்ஷன் ஏன் பிரிந்து சென்றான் என்ற விவரம் இப்போது வரை, பிள்ளைகளுக்குத் தெரியாது.

 

எனவே, ரக்ஷனைத் தவிர அனைவரும் இராவின் பிறந்தநாளுக்காக அங்கு கூடியிருந்தனர்.

 

முதல் ஆளாக, ரக்ஷன்தான் இராவிற்கு அழைத்து வாழ்த்தினான் என்பது வேறு கதை!

 

இதோ, பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கோலாகலமாக ஆரம்பிக்க, இரா முதல் துண்டு கேக்கை எடுத்து அவளின் செல்லத் தங்கைக்கு கொடுத்த பின்னர், அடுத்தடுத்த துண்டுகளை பெற்றோருக்கும், மற்றவர்களுக்கும் கொடுத்தாள்.

 

அந்த நிகழ்வுகளில் பெரிதாக கலந்து கொள்ளாமல் இருந்தது ஷ்ரவன்தான்.

 

வயதும், அந்த வயதிலேயே ‘ஆண்’ என்ற அகம்பாவமும் சேர்ந்து கொள்ள, இராவையும் அவனியையும் அவன் கீழாகத்தான் பார்த்தான்.

 

மேலும், ‘எனக்கு வர விருப்பமில்லை’ என்றவனை, வற்புறுத்தி அழைத்து வந்திருந்தார் தாரணி.

 

ஏற்கனவே, ஒருவன் அவரின் ஆசையைத் தவிடுபொடியாக்கி சென்றிருக்க, இளைய மகனையாவது அண்ணனுக்கு மருமகனாக்கி விடவேண்டும் என்ற கனவுடன் இருந்தார் தாரணி.

 

அதற்காகவே, ஷ்ரவனை வலுக்கட்டாயமாக அழைத்து வந்திருந்தார்.

 

வேண்டா வெறுப்பாக வந்த ஷ்ரவனுக்கு, அங்கு நடப்பவைகளை கண்டு கோபமும் எரிச்சலும் ஒன்றோடொன்று போட்டிப் போட்டுக் கொண்டு எழுந்தது.

 

அதிலும், அனைவருக்கும் இரா முக்கியமானவளாகப்பட, அவனுக்கு அவளைக் கண்டாலே எரிச்சல் மேலும் அதிகரித்தது.

 

எனவே, கையில் ஒரு பழச்சாறை எடுத்துக் கொண்டு, வெளியே வந்தவன் மரங்களை வேடிக்கைப் பார்ப்பது போல நின்று கொண்டான்.

 

அன்றைய சம்பவத்திற்கு அதுவே தொடக்கப்புள்ளியானது.

 

அவனைத் தேடி வெளியே வந்த குட்டி அவனி, “ஷ்ரவன், இங்க தனியா என்ன பண்ணுற?” என்று எதார்த்தமாகக் கேட்க, “ஏய், மரியாதையா பேசுடி. ஷ்ரவனாம்ல? என்னமோ நீதான் பெயர் வச்ச மாதிரி!” என்று கடுகடுத்தான் அவன்.

 

அதில், அவனிக்கும் கோபம் வந்து விட, “உனக்கு மட்டும் மரியாதை டன் கணக்குல தெரியுதோ? என்னை ‘டி’ போட்டு பேசுற?” என்று எகிறிக் கொண்டு நின்றாள்.

 

“ப்ச், நானே செம கடுப்புல இருக்கேன். தேவையில்லாம வாங்கிக் கட்டிக்காத, போயிடு.” என்று ஷ்ரவன் எச்சரிக்க, பதின்பருவ தொடக்கத்தில் இருந்த அவனிக்கோ, ஷ்ரவனின் எச்சரிக்கை பெரிதாகத் தெரியவில்லை போலும்.

 

“இது என் வீடு. நான் எங்க போகணும்னு நீ சொல்லத் தேவையில்ல.” என்று அவனி மல்லுக்கட்டிக் கொண்டிருக்க, கோபத்தில் அவளைப் பலமாக தள்ளி விட்டுவிட்டான் ஷ்ரவன்.

 

அவர்கள் நின்றிருந்தது, புற்கள் அடர்ந்த தரை என்பதாலும், அருகே மரமோ, மேசையோ எதுவும் இல்லாத காரணத்தினாலும், பெரிதான அடிகள் எதுவுமின்றி தப்பித்தாள் அவனி.

 

ஆயினும், கீழே விழுந்ததில் உண்டான அதிர்ச்சியிலும், லேசான வலியிலும் கண்ணீருடன் முனகினாள் அவனி.

 

ஷ்ரவனோ அதிர்ச்சியில் உறைந்திருந்தான். அவனும் இப்படியாகக் கூடும் என்று எதிர்பார்க்கவில்லை. நொடி நேர கோபத்தின் விளைவாக, அவனி வலியில் முனகுவதைக் கண்டு பயத்தில் நின்றிருந்தவனுக்கு அவளுக்கு உதவ வேண்டும் என்று கூட தோன்றவில்லை.

 

அப்படியே விட்டிருந்தால், அவனே மீண்டு அவனிக்கு உதவி செய்திருப்பானோ, இது பெரிய அளவில் பிரச்சனையாகி இருக்காதோ என்னவோ!

 

ஆனால், விதி அங்கு இராவை இழுத்து வந்திருந்தது.

 

தங்கையைத் தேடி வந்த இரா, அவள் கீழே விழுந்து கிடப்பதையும், ஷ்ரவன் அவளின் முன்பு நிற்பதையும் கண்டு வேகவேகமாக அங்கு ஓடி வந்தாள்.

 

“அவனி, என்னாச்சு? கீழ விழுந்துட்டியா?” என்று பெரியவளாக முதலில் நிதானமாகத்தான் கையாண்டாள் இரா.

 

தன்னைக் கீழே தள்ளி விட்டதோடு, அதற்கு மன்னிப்பு கூட கேட்காமல் திண்ணக்கமாக நின்றிருந்த ஷ்ரவனைக் கண்டு கோபம் பொங்கிக் கொண்டு வந்தது அவனிக்கு.

 

சிறு பெண்ணல்லவா, அவன் பயத்தில் நின்றது எகத்தாளமாக நிற்பது போலத்தான் தெரிந்தது.

 

அந்த கோபத்தில், “ஷ்ரவன் என்னைக் கீழ தள்ளி விட்டுட்டான்.” என்று அவனி புகார் வாசிக்க, கேள்வியாக ஷ்ரவனை ஏறிட்டாள் இரா.

 

அதுவரை பயத்தில் இருந்த ஷ்ரவனுக்கோ இராவைக் கண்டதும் பொறாமை குணம் தலைதூக்க, ‘ஆமா, நான்தான் பண்ணேன்.’ என்பது போல நின்றான்.

 

“ஷ்ரவன், எதுக்கு அவனியை தள்ளி விட்ட?” என்று இரா அப்போதும் பொறுமையாக வினவ, “எனக்கு கோபம் வந்துச்சு, தள்ளி விட்டேன்.” என்றான் ஷ்ரவன் தெனாவெட்டாக.

 

இராவிற்கும் லேசாக கோபம் எட்டிப் பார்க்க ஆரம்பித்த தருணம் அது.

 

ஒரு பெருமூச்சுடன், “ஓகே, சாரி கேளு” என்றாள் இரா.

 

ஷ்ரவனோ, “என்னால சாரி எல்லாம் கேட்க முடியாது. போயும் போயும் சின்ன பொண்ணுகிட்ட, அதுவும் அவகிட்ட நான் சாரி கேட்கணுமா?” என்று நக்கலாகக் கேட்டவன், அங்கிருந்து செல்ல முயல, அவனின் கரத்தைப் பிடித்து தடுத்த இராவோ, “சாரி கேளு ஷ்ரவன்.” என்று பல்லைக் கடித்தாள்.

 

அப்போதுதான் அது நிகழ்ந்தது.

 

அவளின் உடலில் அவளின் அனுமதியின்றியே ஏதேதோ நிகழ்வது போல் உணர்ந்தாள் இரா.

 

“ப்ச், என்னை விடு.” என்று ஷ்ரவன் கத்த, அவன் தமக்கையை ஏதாவது செய்து விடுவானோ என்று அஞ்சிய அவனியோ, பெரியவர்களை அழைக்க உள்ளே ஓடியிருந்தாள்.

 

இராவிற்கும் ஷ்ரவனிற்கும் இடையே ஒரு போராட்டமே நடைபெற, அப்போது இராவே எதிர்பார்க்காத வண்ணம், ஷ்ரவன் தூக்கியடிக்கப் பட்டிருந்தான். 

 

அதுவும், இராவிலிருந்து வெளிப்பட்ட சக்தியால்தான் அவன் தூரச் சென்று மரத்தில் மோதி, மயக்கத்தில் கீழே விழுந்திருந்தான்.

 

அப்போதுதான் வெளிவந்த பெரியவர்களின் பார்வையிலும் விழ, “ஷ்ரவா…” என்று கத்தியபடி ஓடி வந்து மகனை மடி தாங்கியிருந்தார் தாரணி.

 

மற்றவர்களும் மயங்கி விழுந்திருந்தவனில் கவனம் செலுத்த, நடந்தது எதுவும் புரியாமல் பிரம்மை பிடித்தது போல் நின்றிருந்தாள் இரா.

 

ஷ்ரவனுக்கோ தலையில் அடிபட்டு குருதி சிந்த, உடனே அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தனர்.

 

வீட்டில் இராவிற்கும் அவனிக்கும் துணையாக ரூபிணியை விட்டுவிட்டுதான் சென்றிருந்தனர்.

 

அதுவரை, இராவிற்கும் ஷ்ரவனிற்கும் என்ன பிரச்சனை என்றெல்லாம் அவர்கள் பெரிதாக யோசிக்கவில்லை.

 

யோசிக்கவும் அவர்களுக்கு அவகாசம் இல்லை.

 

இப்போது மகளின் முகத்தில் தெரிந்த பீதியில், புருவச் சுருக்கத்துடன் அவளருகே வந்த ரூபிணி, “இரா, என்னாச்சுடா? ஏன் டென்ஷனா இருக்க? ஷ்ரவனுக்கு ஒண்ணும் ஆகாது. அதுதான், ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போயிருக்காங்களே.” என்றார், ஒருவேளை மகள் அதற்குத்தான் பதற்றமாக இருக்கிறாளா என்ற எண்ணத்துடன்.

 

அப்போதும் இரா அமைதியாக இருக்க, “இராம்மா, உனக்கும் ஷ்ரவனுக்கும் என்ன சண்டை? இந்த சின்னக்குட்டியாலதான் சண்டையா? அதுக்காக அவனை தள்ளி விடலாமா இரா?” என்று ரூபிணி வினவ, 

 

“அம்மா… நான்… தள்ளி விடல…” என்று ரூபிணியின் இறுதி வரிக்கு மட்டும் திணறலுடன் இரா பதிலளிக்க, “அப்புறம் எப்படி அவனுக்கு அடிபட்டுச்சு இரா? அதுவும் தலைல வேற ரத்தம் வந்துச்சே!” என்றார் ரூபிணி யோசனையுடன்.

 

மிகவும் பதற்றத்துடன், அங்கு நடந்ததை முதலிருந்து விளக்கிய இராவோ, “நான் அவனை தள்ளி விடணும்னு நினைக்கலம்மா. ஆனா, எனக்குள்ள இருந்து… ஏதோ ஒண்ணு… அவனை தள்ளி விட்டுச்சு.” என்ற இராவின் கண்களிலிருந்து தாரைத் தாரையாகக் கண்ணீர் வழிந்தது.

 

அவள் சொன்னதைக் கேட்ட ரூபிணியோ அதிர்ச்சியுடன் மகளைப் பார்த்தார். மகளைச் சுற்றி ஆறுதலாகப் போட்டிருந்த கரம் தன்னால் இறங்கியிருக்க, மகளை விட்டுத் தள்ளி அமர்ந்தார்.

 

அதை உணர்ந்த இராவோ பயத்துடன், “சத்தியமா, நான் எதுவும் செய்யலம்மா. ஐ பிராமிஸ்.” என்று அழுது கொண்டே சொல்ல, ரூபிணியோ அவரின் அலைபேசியை எடுத்துக் கொண்டு, அங்கிருந்து விரைந்து வெளியேறினார்.

 

*****

 

தன் கடந்த காலத்தை அத்வைத்திடம் சொல்லிக் கொண்டிருந்த இராவின் விழிகள் கலங்கி, கண்ணீரைப் பொழிந்தன, அன்றைய நாளின் தாக்கத்தில்!

 

“அன்னைக்குத்தான் என் வாழ்க்கையில முதல் ஏமாற்றத்தை சந்திச்சேன். என் அம்மாவே என்னை நம்பல. அவங்க ஏதாவது திட்டியிருந்தா கூட, என் பக்க நியாயத்தை எடுத்துச் சொல்லியிருப்பேன். ஆனா, அவங்க எதுவுமே பேசாம போனது… அதை விட, அவங்க நடந்துகிட்டது… ம்ச், ஏதோ என்னைப் பார்த்து பயந்த மாதிரி… என்னால அதை இந்த வாழ்நாள் முழுக்க மறக்கவே முடியாது.” என்று விரக்தியின் விளிம்பில் நின்றவளாக கூறினாள்.

 

அவளின் கடந்த கால வாழ்வின் சிறு பகுதியை மட்டும் கேட்டதற்கே கலங்கித்தான் போனான் அத்வைத்.

 

அவளையும் அவளின் அன்றைய மனநிலையையும் அவனால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது.

 

அங்கிருந்த கட்டிலில் அவளை அமரச் செய்தவன், அருகில் அமர்ந்து கொண்டு ஆறுதலாக அவளின் கரம் பற்றினான்.

 

எப்போதும் போல ஒரு விரக்தி சிரிப்புடன், “என் கதையைக் கேட்டு உங்களுக்கு பயம் வரலையா என்ன? ஹ்ம்ம், அதெப்படி வராம இருக்கும்? என்னைப் பெத்த அம்மாவே, விஷயம் தெரிஞ்சதும் என்னைப் பார்த்து பயந்தாங்களே!” என்று கூற, 

 

அவளின் கரத்தை இறுக்கப் பற்றிக் கொண்டே, “இதுவரைக்கும் வரல. ஒருவேளை, நீ உன் கதையை முழுசா சொன்னா வருமோ?” என்றான் அத்வைத்.

 

அவனது கரத்தை உதறி விட்டவளோ, “இதுவே போதும். தயவுசெஞ்சு, இனிமே என்னைப் பார்க்க வராதீங்க.” என்று எழுந்து நின்றவளைத் தடுத்தவன், “வெயிட் வெயிட்… உனக்கு ஏதோ சக்தி இருக்கு. அதைப் பார்த்து உன் அம்மாவே பயந்துருக்காங்க. அதுவுமில்லாம, நீ ஏதோ சாகப் போறேன்னு உளறிட்டு இருக்க. அதுக்கும் சரியான காரணம் சொல்லல. இதெல்லாத்துக்கும், இப்போ நீ என்னைத் துரத்துறதுக்கும் என்ன சம்பந்தம்?” என்று வினவினான்.

 

ஒரு பெருமூச்சுடன், “ஏன்னா, என்னோட முடிவை அஃபெக்ட் பண்ற மாதிரி எதுவும் நடந்துடக் கூடாதுன்னுதான்.” என்றவளின் குரல் தேய்ந்து ஒலித்தது.

 

அவளை நெருங்கி நின்றவன், “அப்படி என்ன அஃபெக்ட் பண்ணிடும் ஸ்டார்லைட்?” என்று என்னவென்று தெரிந்திருந்தும் அவள் வாயிலிருந்து வர வேண்டும் என்பதற்காக மிக நிதானமாக வினவ, அவளோ மௌனமாக அவனைப் பார்த்தபடி நின்றாள்.

 

“இப்போ கூட உன்னால சொல்ல முடியலல…” என்றவன் தன் முகத்தை தேய்த்துக் கொண்டு, “உனக்குத் தோணுறப்போ சொல்லு. ஆனா, அதுவரை நான் இங்கயிருந்து போகப் போறது இல்ல… ஐ மீன் இந்த ஊரை விட்டுப் போக மாட்டேன்.” என்றான் தீர்மானமாக.

 

அவனை ஆயாசத்துடன் பார்த்த இராவோ, “ஏன் புரிஞ்சுக்க மாட்டிங்குறீங்க? நான் தனியாதான் இருக்கணும். அப்போதான் இன்னும் கொஞ்ச நாள்ல என்னோட டெத்தை ஃபேஸ் பண்ண முடியும். இதுதான் விதி! சோ, பிளீஸ் என்னை விட்டுடுங்க.” என்று அவளையும் மீறிக் கேவினாள்.

 

“அவ்ளோ ஈஸியா எல்லாம் விட முடியாது ஸ்டார்லைட்! உன்னைப் பத்தி தெரியாதப்போவே என்னால முடியல. இதோ… உன்னோட கண்ணு வழியா எல்லாம் தெரிஞ்சதுக்கு அப்புறமும்… ஹுஹும், நோ சான்ஸ்!” என்று நிர்தாட்சண்யமாக மறுத்தவன், மணியைப் பார்த்து விட்டு,

 

“இன்னைக்கு லேட்டாகிடுச்சு. இதுக்கு மேல நான் இங்க இருந்தா, இன்னும் இந்த வீட்டையே வெறிச்சு வெறிச்சு பார்த்துட்டு இருக்க அந்த ரெண்டு பேருக்கும் எக்ஸ்க்ளூசிவ் கன்டெண்ட் கிடைச்சுடும். சோ, நாளைக்கு உன் மீதி கதையை கேட்குறேன். இப்போ நான் கிளம்புறேன்.” என்று வெளியேறினான்.

 

அவன் செல்வதையே பார்த்தவளோ, “நீ ஏன் இப்போ என் வாழ்க்கைல வந்த?” என்று முணுமுணுக்க, அதையும் கேட்டவனாக, மீண்டும் அந்த அறைக்குள் வந்தவன், “சும்மா இதையே யோசிச்சுட்டு இருக்காம, நாம சேர்ந்து எப்படி வாழப் போறோம்னு யோசிக்க ஆரம்பி ஸ்டார்லைட்.” என்றவனின் கண்களில்தான் எத்தனை உறுதி?

 

அந்த நொடி, இராவின் மனதிலும் அந்த ஆசை எழத்தான் செய்தது.

 

அவளின் தலையை லேசாகக் கோதியவன், “தாட்ஸ் குட்!” என்றவாறு வெளியேறினான்.

 

இராவின் அன்றைய இரவு, அத்வைத் கூறிய வாழ்க்கையை எண்ணியபடி கழிந்தது.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
14
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்