
அத்தியாயம் 7
இல்லம் அமைதிப் போர்வை போர்த்தி இருந்தது. குடும்பத்தார் எதுவும் உரைக்கவில்லை என்றாலும், விழாவிற்காக வந்த சிற்றன்னையின் மூலமாக அனைத்தையும் அறிந்து இருந்தாள் ரோகிணி.
மெல்ல அடியெடுத்துத் தமையனின் அருகே வந்தவள், “ஏன் அண்ணா, இப்படிச் செஞ்ச?”
தங்கையை நேருக்கு நேர் பார்த்தவன், சைகை மொழியின் வாயிலாக, “காரணம் சொல்லணுமா ரோகி?”
“ஆமா, சொல்லு.”
“எனக்கு இஷ்டம் இல்ல.”
“இன்னைக்குக் காலையில வரைக்கும் ஓகேவா இருந்தது, இப்பப் பிடிக்காம போயிடுச்சா.?”
அவன் அமைதி காக்க, “என்கிட்ட குறை இருக்கிறப்ப, எல்லாரும் அதைப் பத்திப் பேசத்தான் செய்வாங்க அண்ணா.”
“யாரோ பேசுனா, எனக்கு அதைப் பத்தி கவலை இல்ல. நான் கட்டிக்கப் போற பொண்ணு பேசக் கூடாதுல?”
சிரித்த ரோகிணி, “சரி, லாவண்யா பேசுனாங்க நிச்சயத்தை நிறுத்திட்டு வந்துட்ட. உனக்கு, இனி பார்க்கப் போற பொண்ணும் பேச மாட்டானு என்ன உறுதி?”
“அப்பவும் வேண்டாம்னு இதே முடிவை தான் எடுப்பேன்.”
“ஓ.. இதுவே கல்யாணத்துக்குப் பின்னாடி நடந்திருந்தா? டிவோர்ஸ் பண்ணிடுவியா.?”
நொடி தாமதிக்காது, “ஆமா.” என்றான் சரண்.
ரோகிணி திகைத்து, “அண்ணா..?”
“வாழ்நாள் முழுக்க, அது உறுத்தும். அந்த உறுத்தலோட வாழுறதுக்கு, விலகிப் போறது நல்லது.’
“ஒரு விஷயம் சொல்லுறேன். இது உன்னோட வாழ்க்கை. நீ, உனக்காக தான் வாழணும். எனக்காக இல்ல. அதேபோல, நான் கடைசி வரைக்கும் உன்கூட இருக்கப் போறதும் இல்ல. எப்படியும் எனக்குக் கல்யாணம் செய்வீங்க தான? நான் வேற வீட்டுக்குப் போயிடுவேன். அண்ணியோட பேசுறதுக்கான அவசியம் கூட இல்லாம போகலாம். அப்படி இருக்கும் போது ஏதோ நாலு வார்த்தை சொல்லிட்டாங்கனு கல்யாணத்தை நிறுத்துறது சரியில்ல.”
“போனா போகுதுனு ஒரு தடவை விட்டா, அது தொடர்ந்து நடக்கும். என் தங்கச்சியை என்னோட மனைவியே மரியாதை குறைவா பேசுறதுக்கு நான் அனுமதிச்சா, அப்புறம் எப்படி நான் நல்ல மனுஷனா இருக்க முடியும்? நிச்சயத்தை நிறுத்துனது உனக்காக இல்ல ரோகி, எனக்காக. பேஸிக் ரெஸ்பெக்ட் கூட தர தெரியாந ஒரு பொண்ணுக்கூட எப்படி வாழ முடியும்?”
“ம்ம்..” என ரோகிணி மெலிதான பெருமூச்சை விட, “என் கல்யாணம் இருக்கட்டும். இப்ப ஏதோ சொன்னியே.?”
“என்ன சொன்னேன்?”
“கல்யாணம் செஞ்சு வேற வீட்டுக்குப் போயிடுவேன்னு..”
“ஐயோ அண்ணா! அது பேச்சு வாக்குல ஏதோ சொல்லிட்டேன்.”
“அப்படியா? மனசுல இல்லாம எப்படி வாய்ல வரும்?
“ப்ச்ச்.. நீ பேச்சை மாத்தாத. இப்ப பேசுறது உன்னோட கல்யாணத்தைப் பத்தி.”
“அதான், நிறுத்தியாச்சே. இனி பேச என்ன இருக்கு.?”
“நிஜமாவா? வேண்டாம்னு முடிவே பண்ணிட்டியா?”
“இந்நேரம் வரைக்கும் அதைத்தான சொல்லிக்கிட்டு இருந்தேன் ரோகிமா?”
“அப்ப, வேற பொண்ணு பார்க்கலாம்ல?”
“அதுக்குள்ளயா? என்ன அவசரம்?”
“நீ என்னதான் சமாதானம் சொன்னாலும், உன்னோட கல்யாணம் நின்னதுக்கு நான்தான் காரணம்ங்கிற எண்ணம் மாற மாட்டிது அண்ணா. அதுனால சீக்கிரம் கல்யாணம் செஞ்சிக்கோ. அப்பதான் என்னால கில்ட் இல்லாம இருக்க முடியும்.”
மெலிதாய்ச் சிரித்தவன், “சரி பண்ணிக்கிறேன். ஆனா, கொஞ்சம் கேப் விட்டுக்கலாம். அடுத்தடுத்துனு அவசரத்துல செஞ்சு, பின்னாடி அவதிப்படக் கூடாதுல?”
“ம்ம்..” என்றவள் இரு கை விரல்களையும் கோர்த்துக் கொண்டு தலையைக் குனிந்து இருக்கையில் அமர, தங்கையைக் கனிவோடு நோக்கினான் சரண்.
இருவரும் பேசி முடிக்கும் வரை, அமைதியாய் பார்த்திருந்தார் பாகீரதி. இந்த இடைவெளியில் லாவண்யாவின் வீட்டில் நடந்ததை, விமலிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார், அவனது சிற்றன்னை.
வழக்கமாய் எட்டு மணிக்கு மேல் எழுபவன், இன்று அன்னை அழைத்ததின் பெயரில் முன்னரே எழுந்திருந்தான். தற்போது வேலை எதுவும் இல்லாததால், சிறிய அன்னைக் கேட்ட விஷயத்தை எதார்த்தமாய் உரைத்துவிட்டு, படுக்கையில் கவிழ்ந்து கொண்டான் விமல்.
தமக்கையின் அருகே வந்தவர் குரல் தாழ்த்தி, “அக்கா..”
“என்ன.?” என்றபடி பாகீரதி திரும்ப, “நம்ம சரணுக்குப் பொண்ணு ரெடியா இருக்கு போல?”
புரியாத விழித்தவர், “என்ன சொல்லுற?”
“இப்பதான் சின்னவன்கிட்ட பேசிட்டு வர்றேன். அவங்க வீட்டுலயே இன்னொரு பொண்ணு இருக்குதாம்.?”
“என்னைச் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டு, உன்கிட்ட வந்து ஒப்பிச்சு இருக்கான் அந்த லூசுப் பையன்.”
மெலிதாய்ச் சிரித்தவர், “அவன் எங்க சொன்னான்? நான்தான் கேட்டு வாங்குனேன்.”
“அதான பார்த்தேன்?”
“அதை விடு, பொண்ணு எப்படி இருக்கு?”
“எதுக்கு விசாரிக்கிற?”
“சும்மா தெரிஞ்சிக்கத்தான்.”
தங்கையை நம்பாத பார்த்த பாகீரதி, “ம்ம்.. இலட்சணமா இருக்கா. அவ, ஒரு விதமான அழகு.”
“அப்புறம் என்ன, பேச வேண்டியது தான?”
“சும்மா இருக்க மாட்டியா நீ? இப்பதான் அவன் அமைதியாகி இருக்கான். திரும்ப இதைப்பத்தி பேச்சை ஆரம்பிச்சு, பிரச்சனை வரவா?”
“என்ன பிரச்சனை வரப் போகுது? ஊர் உலகத்துல அக்காவுக்குப் பார்த்த மாப்பிள்ளைய தங்கச்சிக் கட்டிக்கிறது இல்லையா? இல்ல தம்பிக்கு பேசி முடிச்ச பொண்ணை, அண்ணன் தான் கல்யாணம் செய்யிறது இல்லையா? எல்லாமே நாம பார்க்கிற விதத்துல தான இருக்கு? சரண்கிட்ட பேசு.”
“எரியிற கொள்ளியில எண்ணெயை ஊத்துறதுக்கு வழி சொல்லுற?”
“நீ இருக்கியே! அவன் உன்னோட பிள்ள. சொன்னா கேட்க மாட்டானா?”
“முதல்ல.. சொல்லி கேட்டதுனால தான், இப்ப இங்க வந்து நிக்கிறோம். இதுக்கு மேலயும் அவன்கிட்டப் போயி, என்னால சொல்ல முடியாது.”
“அப்ப, நான் சொல்லுறேன் சரண்கிட்ட.”
“வேண்டாம்!” எனப் பாகீரதி தங்கையின் கைப்பற்றித் தடுத்திட, “அக்கா.. ஒவ்வொருத்தருக்கும் ஃபோன் போட்டு விசேஷம் நின்னு போச்சுனு சொல்லுறது எவ்வளவு சங்கடமான காரியம் தெரியுமா? அதுவும் கல்யாண மாப்பிள்ளையே அதைச் செய்யும் போது, என்ன ஏதுனு விசாரிச்சு அவனைச் சோதிச்சுப் பார்த்திடுவாங்க. பிள்ள பாவம் அக்கா.”
அதுக்காக உடனே வேற பொண்ணு கூட நிச்சயம் செய்ய முடியுமா?
ஏன் செஞ்சா என்ன? மணமேடையில கடைசி நேரத்துல பொண்ணோ மாப்பிள்ளையோ மாறுதது இல்லையா? இல்ல, கல்யாணம் கட்டி அவங்க சந்தோஷமா தான் இருக்குறது இல்லையா?
பாகீரதி மறுமொழி செல்ல இயலாது அமைதியாய் இருக்க, நான் உடனே கல்யாணத்தை ஒன்னும் செய்யச் சொல்லல. பேசுவோம்னு தான் சொல்லுறேன். சரி வந்தா, பார்க்கலாம். இல்லேனா அப்படியே நிப்பாட்டிக்கலாம்.
அவர் மகனை நோக்கினார். கைப்பேசியில் உறவுகளின் தொடர்பு எண்களை எடுப்பதும், அதற்கு அழைப்பு விட தயங்குவதுமாய் இருந்தான். ஆனாலும் காலம் தாழ்த்த இயலாதே?
‘முதலில் சமையல் காரரிடம் பேசி விடலாம்!’ என்று அழைப்பு விடுத்து செவியோடு இணைத்தான்.
அதற்குத் தடை விதிக்கும் விதமாய், “சரண்..” என அழைத்தார் அவனின் சிற்றன்னை.
அவன் தலையைத் திருப்பிக் கேள்வியாய் பார்க்க, “ஃபோனைக் கட் பண்ணு.”
புரியாது நோக்கியவன், “என்ன சித்தி?”
“ஆஃப் பண்ணு. அப்புறம் பேசிக்கலாம்.”
“எதுக்கு? முன்னாடியே சொல்லீட்டோம்னா, அவங்க வேற எதுவும் விசேஷத்துக்கு ஆர்டர் வந்தா, எடுத்து செஞ்சுக்குவாங்க இல்ல?”
“சரி தான்டா. அதுக்கு முன்னாடி நாம கொஞ்சம் பேசிக்கலாம்.”
“இனி பேச என்ன இருக்கு?”
“பேசிப் பார்த்தா தான, இருக்கா இல்லையானு தெரியும்? அதை விட்டுட்டு பேசாமலேயே, முடிவுக்கு வர்றது சரியில்ல சரண்.”
ஒரு பெருமூச்சை விட்டுக் கொண்டவன், “சரி, சொல்லுங்க சித்தி. இப்ப, என்னப் பேசணும்?”
“உங்க அம்மா, அந்த வீட்டுக்குப் போனப்ப அங்க என்ன நடந்துச்சுனு சொன்னாளா?”
“ம்ம்.. சொன்னாங்க.”
“அதைப் பத்தி என்ன நினைக்கிற?”
“நினைக்க என்ன இருக்கு? வேண்டாம்னு சொல்லிட்டேனே?”
“எந்த விஷயமும் காரணம் இல்லாம நடக்குறது இல்ல சரண். இன்னைக்குக் காலையில வரைக்கும், இதெல்லாம் நடக்கும்னு நாம யாராவது நினைச்சுப் பார்த்தோமா? ஆனா நடந்துடுச்சு. கூடவே சம்பந்தமே இல்லாம, லாவண்யாவோட அக்காவைப் பத்தியும் பேச்சு வந்துடுச்சு!”
‘ஆனா சித்தி..” எனப் பேச முயன்றவனைத் தடுத்தவர், “அக்கா, நீங்க பேசும் போது அந்தப் பொண்ணு அங்க இருந்துச்சா?” என்று பாகீரதியிடம் வினவினார்.
“ம்ம்..”
‘எதுவும் சொல்லுச்சா?”
மறுத்துத் தலை அசைத்தவர், “ரெங்கநாயகி அம்மா கேட்டது என்னை மாதிரி அந்தப் பிள்ளைக்கும் அதிர்ச்சியான விஷயம் தான். ஆனா, அமைதியா தான் இருந்துச்சு. எதுவும் பேசல.”
“ம்ம்.. சரண், நாம பேசிப் பார்த்தா என்ன?”
“சித்தி, புரிஞ்சு தான் பேசுறீங்களா?”
“அதெல்லாம் நல்லா புரிஞ்சு தான் பேசுறேன். இன்னாருக்கு இன்னாருனு எழுதி இருந்தா, நாம என்ன குட்டிக்கரணம் அடிச்சாலும் அதை மாத்த முடியாது. நான் என் புருஷனைப் பிடிக்காம தான் கட்டிக்கிட்டேன். அன்னைக்கு பொண்ணோட விருப்பத்தை எல்லாம் யாரு கேட்டா? அதுக்குனு வாழாம போயிட்டேனா? கொஞ்சம் ஆளு அப்படி இப்படி இருந்தாலும், என்னை நல்லா தான் வச்சிருக்காரு. நானும் சரினு இந்த வாழ்க்கையை ஏத்துக்கிட்டேன்.
ஒருவேளை உனக்கு அந்தப் பொண்ணுதான்னு முடிச்சுப் போட்டிருந்தா? அதுக்குத் தான் சொல்லுறேன், பேசிப் பார்க்கலாம்னு. சரி வந்தா, அடுத்து செய்யிறதைப் பார்ப்போம். இல்லேனா, அப்படியே விட்டுடுவோம். யாருக்கும் எந்த நட்டமும் இல்லையே?”
அவன் மனம் இல்லாமல், “சித்தி வேணாமே.?” என்றிட, “சும்மா இரு நீ! ஒரு விஷயம் நடந்திருக்கு. அதைப் பத்திப் எங்கக்கிட்ட என்ன ஏதுனு கலந்து பேசாம, உன் இஷ்டத்துக்கு நீயா போயி பெரிய மனுஷன் மாதிரி கல்யாணத்தை நிப்பாட்டிட்டு வந்துட்ட. நாங்க அதை சரினு ஏத்துக்கல. அதேமாதிரி, இப்ப நாங்க சொல்லுறதை நீ கேளு!” எனக் கட்டளை இட்டார்.
சரண் இயலாமையுடன் அமர்ந்திருக்க, “அண்ணா, கொஞ்சம் சித்தி சொல்லுறதைக் கேளேன் ப்ளீஸ்?” என்று ரோகிணியும் தன் பங்கிற்குச் சலுகையாய் வினவ, குடும்பத்தாரை வருந்த வைக்க விரும்பாது தலை அசைத்தான்.
“அக்கா, உனக்கு அந்தப் பிள்ளையைப் பத்தி எல்லா விபரமும் தெரியுமா.?”
“பேரு மௌனிகா. சென்னையில வேலை பார்க்குதாம். அம்மா அப்பா ரெண்டு பேரும் இல்ல. அந்தப் பிள்ளைக்கு பத்து வயசு இருக்கும் போது, ஆக்ஸிடெண்ட்ல தவறிட்டாங்க.”
“ம்ம்.. வேற எதுவும்?”
“எனக்குத் தெரிஞ்ச வரை, ஊருக்கு வர்றதே இல்ல. ரெங்கநாயகி அம்மாவைத் தவிர்த்து, சித்தப்பா சித்தினு தங்கச்சிகனு வீட்டுல இருக்கிற ஆளுங்க கூட சரியா பேச்சு வார்த்தை இல்லனு நினைக்கிறேன். ஆனா பார்க்கிறதுக்கு, அப்படி ஒன்னும் கடுமையான ஆளா தெரியல.”
“சரி, அப்ப ரெங்கநாயகி அம்மாக்கே ஃபோன் போடு. அவங்கக்கிட்டயே கேட்டுக்கலாம்.” என்றிட, சற்றே மனம் படபடக்க, காலையில் தனக்கு அழைப்பு வந்த அதே எண்ணிற்கு அழைத்தார் பாகீரதி.
மறுபுறம் மௌனிகா தொடர்பிற்கு வர, “ஸ்பீக்கர்ல போடு அக்கா. எல்லாருமே கேட்கிறதக்கு வசதியா இருக்கும்!” என்றார் அவரின் தங்கை.

