Loading

அத்தியாயம் 7

 

“என் பொறுமையும் ஓரளவுக்கு தான்! இன்னைக்கு பார்த்துடுறேன், நானா முசோவான்னு. என்ன நினைச்சுட்டு இருக்காரு அந்த மனுஷன்?” என்று மெல்லிய குரலில் பேசிக் கொண்டே, அவளுக்கு தேவையான ஆடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

 

அவ்வபோது நேரத்தை பார்த்து, “ஹையோ, லேட்டாகிடுச்சே! பொண்ணு நானே இவ்ளோ நேரம் எடுத்துக்க மாட்டேன். இவருக்கு என்னவாம்?” என்று புலம்ப, அதற்கு மேல் அதை நீட்டிக்க விரும்பாத காரணத்தினாலோ என்னவோ, உதயகீதன் குளியலறையை விட்டு வெளியே வந்தான்.

 

அவன் முழுதாக வெளியே வருவதற்கு கூட காத்திராமல், அவனை இடித்து தள்ளி விட்டு அவசரமாக அவள் உள்ளே செல்ல பார்க்க, அதில் மட்டுப்பட்டிருந்த கோபம் மண்டையை சூடாக்க, “ஹலோ நில்லு, கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லையா உனக்கு?” என்று கேட்டு விட்டான்.

 

அவளே அலுவலகத்திற்கு நேரமாகி விட்டதே என்ற பதற்றத்தில் அங்கும் இங்கும் ஆடிக் கொண்டிருக்க, அவளுக்கு சலங்கை கட்டி விட்டது போல இருந்தது உதயகீதனின் வார்த்தைகள்.

 

“ஸ்டாப் மிஸ்டர். உதயகீதன். முதல்ல, எனக்கு ரெஸ்பெக்ட் கொடுக்கணும். அதென்ன ‘ஹலோ’? எனக்கு என்ன பேரா இல்ல? இல்ல, நான் என்ன உங்க ஆஃபிஸ் ஸ்டாஃபா?” என்று நக்கலாக வினவியவள், அவன் ஏதோ கூற வருவதை கிரகித்து, “அஃப்-கோர்ஸ் ஆஃபிஸ் ஸ்டாஃப் தான். ஆனா, அது இங்க இல்ல, ஆஃபிஸ்ல மட்டும் தான்! இங்க நான் உங்க ‘பெட்டர்-ஹாஃப்’. அதுக்கு மீனிங் தெரியும் தான?” என்று வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்.

 

அவன் அவளை முறைக்க, ‘இதுக்கே இப்படியா? இனிமே தான் இந்த நந்துவோட ஆட்டத்தை பார்க்க போறீங்க முசோ! எத்தனை நாள் அந்த ஆஃபிஸ் ரூம்ல வச்சு கிழி கிழின்னு கிழிச்சுருப்பீங்க? எல்லாத்தையும் கணக்கு வச்சுருக்கேன். மொத்தமா செட்டில் பண்ணாம விடுறதா இல்ல.’ என்று மிதப்பாக நினைத்துக் கொண்டாள் ஜீவநந்தினி.

 

அவளின் மனவோட்டத்தை அவளின் முகம் கண்ணாடியாக பிரதிபலிக்க, ‘இவ எல்லாம் பேசுற அளவுக்கு இருக்கு என் வாழ்க்கை!’ என்று சலித்துக் கொண்டவன், “தேவையில்லாததை பேசி டைம் வேஸ்ட் பண்றது எனக்கு பிடிக்காது.” என்று சொல்லியவனை இடைவெட்டியவள், “எது தேவையில்லாததா? செல்ஃப்-ரெஸ்பெக்ட் என்னோட உரிமை! அதை தேவையில்லாததுன்னு நீங்க எப்படி சொல்லலாம்?” என்று போர்க்கொடி தூக்க, அவளை சமாளிக்க முடியாமல் உச்சுக்கொட்டியபடி தலையை கைவைத்து விட்டான்.

 

அதையே அவளின் முதல் வெற்றியாக கருதியவள், “ஆமா, இப்போ எதுக்கு ‘தேவையில்லாம’ நீங்க என்னை கூப்பிட்டீங்க?” என்று அந்த ‘தேவையில்லாம’வில் அழுத்தம் கொடுத்து வினவியவள், அவன் முறைப்பதை பொருட்படுத்தாமல், “உங்களுக்கு வேணும்னா, இந்த பிசி டைமிங்ல வேலை இல்லாம இருக்கலாம். ஆனா, எனக்கெல்லாம் தலைக்கு மேல வேலை இருக்கு! அதுவும், என் பாஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு வேற.” என்று பேசியபடி இருக்க, ‘இவ எப்போ தான் பேசுறதை நிறுத்துவா?’ என்று உதயகீதன் சலிப்புடன் யோசிக்கவே ஆரம்பித்து விட்டான்.

 

“எழுந்தது லேட்டு! இதுல, எனக்கு வேலையில்லையாமா? சரிதான்.” என்று அவன் முணுமுணுக்க, “மிஸ்டர். உதயகீதன், ஏதாவது சொல்றீங்களா இல்லை என வேலையை பார்க்கவா?” என்று மீண்டும் அவள் வினவ, ‘எல்லாம் என் நேரம்!’ என்பது போல பார்த்தவன், “நீ இங்க இருக்கணும்னா, சில கண்டிஷன்ஸ் இருக்கு!” என்று அவன் சொல்லும்போதே, சர்வநிச்சயமாக இதற்கும், எதிரிலிருப்பவர்களின் தொண்டை தண்ணீர் வற்றும் அளவுக்கு பேசுவாள் என்பதை அறிந்தே இருந்தான்.

 

கணவன் மனதை படித்து அப்படியே நடக்கும் மனைவியாக, “கண்டிஷனா? எத்தனை முறை தான் சொல்றது?” என்று சலிப்புடன் கூறுவதை போல, முன்தினம் அவன் கட்டிய தாலியை எடுத்துக் காட்டியவள், “இது என்னன்னு ஞாபகம் இருக்கா? அடிக்கடி மறந்து போகுதுன்னு நினைக்குறேன். வேணும்னா, கொஞ்ச நாள் இதை நீங்க கட்டிக்கோங்களேன்.” என்று கூற, கோபத்தில் அவளை நோக்கி ஒரு அடி முன்னே எடுத்து வைக்க, வேகமாக கதவை பூட்டி தாழ்பாள் போட்டுக் கொண்டாள்.

 

அப்போதும் அடங்காமல், “எனக்கு லேட்டாகிடுச்சு. அதனால தான் உள்ள வந்தேன். வேற எதுவும் இல்ல.” என்று உள்ளிருந்தே குரல் கொடுக்க, “ச்சை, உன்கிட்ட எல்லாம் மனுஷன் பேசுவானா?” என்ற எதிர்வினையே உதயகீதனிடமிருந்து வந்தது.

 

சில நிமிடங்கள் மௌனத்தில் கழிய, மெல்ல குளியலறை கதவை திறந்து எட்டிப் பார்த்தவள், அவன் அங்கில்லாததை கண்டு ஆசுவாசமாக உணர்ந்தாள்.

 

“ஷப்பா, ஒரு பொழுது சமாளிக்கவே இவ்ளோ பேச வேண்டியதா இருக்கே, வாழ்க்கை முழுக்க முசோவை எப்படி சமாளிக்க போறேனோ?” என்று மென்குரலில் புலம்பியபடியே வேகமாக கிளம்பியவள், கீழே வர, அவளுக்காக காத்திருந்தனர் அவளின் தந்தையும் மாமனாரும்.

 

இருவருக்கும் சிரிப்புடனே காலை வணக்கத்தை கூறியவள், “அப்பா, நான் ஆஃபிஸ் கிளம்புறேன். லேட்டாகிடுச்சு, கேன்டீன்ல சாப்பிட்டுக்குறேன்.” என்று தந்தையிடம் அவசரமாக கூறியவள், “சாரி அங்கிள்…” என்றவள், பின் அவளே திருத்தி, “சாரி மாமா, அலாரம் சொதப்பிடுச்சு. இல்லன்னா, மார்னிங் சீக்கிரம் எழுந்து…” என்று மனதறிந்து பொய் சொல்ல இருந்தவளை தடுத்த அவளின் தந்தை சுதாகர், “இப்போ தான் மூர்த்தி கிட்ட உன்னை பத்தி சொன்னேன்டா.” என்றார் நமுட்டுச் சிரிப்புடன்.

 

அதில் அவரை நோக்கி திரும்பியவள், “எல்லாமே சொல்லிட்டீங்களா?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு வினவ, “ஆமாடா, ஒரு ஃப்ளோல…” என்று சமாளிக்க முயன்றார் சுதாகர்.

 

இருவரையும் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த கேசவமூர்த்தியோ, “அதுக்கு என்னம்மா, ஃப்ரீயா விடு.” என்றவர், “ஆமா, நீ இன்னைக்கே எதுக்கும்மா ஆஃபிஸ் போற?” என்று வினவ, “ஏன் மாமா, இதே கேள்வியை உங்க மகன் கிட்ட கேட்டீங்களா?”என்று கேலியாக வினவினாள் ஜீவநந்தினி.

 

“க்கும், சும்மாவே முறைச்சுட்டு இருக்கான். இதுல, இந்த கேள்வியை கேட்டேனா அவ்ளோ தான்!” என்று பயந்தபடி கேசவமூர்த்தி கூற, “பொறந்ததுல இருந்து கூட இருக்க உங்களுக்கே இப்படின்னா, என் நிலைமையை யோசிச்சு பாருங்க மாமா. நீங்களாச்சு, அவரு வீட்டுல இல்லாத நேரம் தப்பிச்சீங்க. என் நிலைமையை பாருங்க, அங்கயும் மாட்டிக்கிட்டேன்.” என்று புலம்பினாள் ஜீவநந்தினி.

 

நண்பன் ஏதாவது தவறாக நினைத்துக் கொள்வானோ என்ற எண்ணத்தில், “நந்தும்மா என்ன இது? உதய் தம்பி தங்கமான புள்ள.” என்று சுதாகர் கூற, “சுதாகரா, என் பையனை பத்தி எனக்கு தெரியாதாடா?” என்று கேட்ட கேசவமூர்த்தியோ சிறு சிரிப்புடன் மருமகளிடம் திரும்பி, “உன்னை ரொம்ப டார்ச்சர் பண்றானாம்மா?” என்று கேட்டார்.

 

மாமனார் பரிவுடன் கேட்க, அவ்வபோது உண்மை விளம்பியாக அவதாரம் எடுக்கும் ஜீவநந்தினியோ, “உங்க பையனை பத்தி உங்க கிட்டயே இப்படி சொல்லக் கூடாது தான். ஆனாலும், நீங்களும் தெரிஞ்சுக்கணும்ல.” என்ற ‘டிஸ்க்ளைமருடன்’ பேச ஆரம்பித்தாள்.

 

“என்னன்னு மாமா இவரை நீங்க வளர்த்தீங்க? ஒரு மனுஷன் அப்பப்போ டென்ஷனான, அது ஓகே. ஆனா, எப்பவும் டென்ஷன் மூட்லயே இருந்தா, எப்படி தான் வேலை பார்க்குறதோ? எங்களை எல்லாம் மனுஷங்கன்னு நினைச்சாரா இல்ல ரோபோன்னு நினைச்சாரான்னு தெரியல. அவரு மனசுல நினைக்குறதை கூட கண்டு பிடிச்சு செய்யணும்னா, அது ரோபோவால கூட முடியாது. ச்சு, இவரோட இத்தனை நாள் குப்பை கொட்டுனதுக்கு, நியாயமா பார்த்தா, எல்லாருக்கும் நீங்க அவார்ட் கொடுக்கணும்! உங்களுக்கு தெரியுமா, இவருக்கு ‘உதயகீதன்’னு பேரு வச்சதுக்கு பதிலா, ‘முசுட்டு முசோலினி’ன்னு பேரு வச்சுருக்கலாம். ரொம்ப பொருத்தமா இருக்கும். நான் கூட அப்படி தான்…” என்று ஒரு வேகத்தில் பேசிக் கொண்டே சென்றவள், அப்போது தான் கைகட்டி அவளை முறைத்தபடி நின்றிருக்கும் கணவனை பார்த்து அப்படியே வாயை மூடிக் கொண்டாள்.

 

தன் மாமனாரை நோக்கி மெதுவாக நகர்ந்தவள், “ஏன் மாமா அவரு வந்துருக்காருன்னு ஒரு க்ளூ கூட கொடுக்கல?” என்று மெல்லிய குரலில் வினவ, “நீ எங்கம்மா என்னை பேச விட்ட?” என்ற கேசவமூர்த்தி சூழலை சமாளிக்க வேண்டி, “மருமக எவ்ளோ அழகா பேசுறா, இல்ல உதய்?” என்று கேட்டு வைக்க, ‘க்கும், போச்சு! இப்போ அவருக்கிட்ட ஒப்பினியன் கேட்கலைன்னா தான் என்ன?’ என்று மனதிற்குள் புலம்பினாள் ஜீவநந்தினி.

 

“அவ என்னை குத்தம் சொல்லிட்டு இருக்கா, அது அழகா இருக்கா உங்களுக்கு?” என்று உதயகீதன் அழுத்தமாக வினவினான். பேச்சு தந்தையிடம் என்றாலும், பார்வை முழுக்க அவளிடம் தான்!

 

துளைக்கும் அவன் பார்வையிலிருந்து தப்பிக்க வேண்டி, “நான் கிளம்புறேன்பா…” என்று ஜீவநந்தினி கூற, “சாப்பிட்டு போம்மா. தனியா எப்படி போவ? உதய் கூட போ.” என்று கேசவமூர்த்தி கூற, ‘அடக்கடவுளே, திரும்ப இவரோடவே கோர்த்து விடுறாரே!’ என்று எண்ணியவள் குனிந்த தலை நிமிராமல் நின்றிருந்தாள்.

 

உதயகீதனோ அவளை மதிக்காமல், சாப்பிடும் அறை நோக்கி செல்ல, தன் விதியை நொந்தபடி ஜீவநந்தினியும் அவனை பின்தொடர்ந்தாள்.

 

எங்கு அவன் அருகே அமர சொல்லி விடுவார்களோ என்று பயந்தவள் வேகவேகமாக அவனுக்கு எதிரே அமர, அதுவே பெரிய தவறாகிப் போனது. மீண்டும் அவன் முறைப்பை தாங்க வேண்டும் அல்லவா?

 

அங்கு பரிமாறப்பட்ட அனைத்தும் அவளுக்கு பிடித்தவைகளாக இருந்தாலும், அவற்றை ஒருவித பதற்றதுடனே தான் சாப்பிட வேண்டியதாக இருந்தது.

 

‘க்கும், கல்யாண வீட்டுல சாப்பிடுற மாதிரியா இருக்கு, ஏதோ டெரரிஸ்ட் கூட உட்கார்ந்து சாப்பிடுற ஃபீல் தான் வருது!’ என்று எண்ணிக் கொண்டே கொறித்தவள், அவன் சாப்பிட்டு முடிக்கும் முன்னரே கிளம்ப வேண்டும் என்ற அவசரத்தில் சீக்கிரம் சாப்பிட்டு எழுந்து விட்டாள்.

 

மீண்டும் ஒருமுறை தந்தையிடமும் மாமனாரிடமும் விடைபெற்றவள், எங்கு அவர்கள் தடுத்து மீண்டும் அவனுடன் கோர்த்து விட்டுவிடுவார்களோ என்ற பதற்றத்தில், “மாமா, உங்க மகன் நேத்து நைட்ல இருந்து இன்னைக்கு மார்னிங் வரை வீட்டுல இல்ல. என்னன்னு விசாரிச்சு வைங்க, ஈவினிங் வந்து கேட்டுக்குறேன்.” என்று அவனை மாட்டிவிட்டே சென்றாள்.

 

அவள் செய்யும் அட்டூழியங்களை அப்படியே விட முடியாமல், அதே நேரத்தில் பெற்றோர் எதிர்க்க எதுவும் சொல்ல முடியாமல் அழுத்தத்துடன் அமர்ந்திருந்த உதயகீதனிடம் மருமகள் கூறியதை எவ்வாறு கேட்பது எனது தயங்கியபடி கேசவமூர்த்தி அவனையே பார்த்திருந்தார்.

 

“ப்ச் அப்பா, என்ன இது? இப்போ என்ன, நான் எங்க போனேன்னு தெரியணுமா?” என்று உதயகீதன் வெகு நேரம் கழித்து வாயை திறக்க, “என்கிட்ட சொல்லலன்னாலும் நந்து கிட்ட சொல்லணும்ல உதய். அவ உன் மனைவிபா. இனி, எது செய்யுறதா இருந்தாலும், அவகிட்டயும் சொல்லிட்டு செய் உதய்.” என்று எடுத்துரைத்தார் கேசவமூர்த்தி.

 

சுதாகர் இதிலெல்லாம் கலந்து கொள்ளவில்லை.

 

ஒரு பெருமூச்சு விட்ட உதயகீதனோ, “வர்ஷினி சூசைட் அட்டெம்ப்ட் பண்ணிட்டா. அதான், அங்க போயிருந்தேன்.” என்று தகவல் கூறுவது போல சொல்ல, அதற்கு எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்று தெரியாமல் இருந்தனர் மற்ற இருவரும்.

 

சில நொடிகள் மௌனத்தில் கழிய, “இதை அவகிட்ட சொல்றப்போ, கொஞ்சம் எதிர்ல இருக்கவங்க பேசுறதுக்கு டைம் கொடுக்கவும் சொல்லுங்க. எப்போ பார்த்தாலும், அவளுக்கு மட்டும் தான் பேச தெரியுங்கிற மாதிரி பேசிட்டே இருக்குறது!” என்று சலிப்புடன் கூறியவன், சுதாகரின் முகத்தை பார்த்து, “சாரி அங்கிள்.” என்று கூறியபடி அங்கிருந்து கிளம்பினான்.

 

*****

 

உதயகீதனின் அலுவலகத்திலோ, அன்றைய ‘ஹாட்-நியூஸ்’ உதயகீதன் – ஜீவநந்தினியின் திருமணம் தான்!

 

முதலில் நடக்க இருந்த திருமணம் நின்றதற்கான காரணிகளில் துவங்கி, உதயகீதன் குடும்பத்திற்கும் ஜீவநந்தினியின் குடும்பத்திற்கும் எவ்வாறு பழக்கம் என்பது வரை, அனைத்து விஷயங்களும் தோண்டி எடுத்து விவாதிக்கப்பட்டது.

 

சிலர், “நல்லவேளை, அந்த கல்யாணம் நின்னு போச்சு. சரியான அலட்டல் அந்தம்மா!” என்று பேச, வேறு சிலரோ, “ஏன் கல்யாணம் நின்னு போச்சு? ஏன் அவசர அவசரமா நந்துவை கல்யாணம் பண்ணி வச்சாங்க? அப்போ அந்த பொண்ணு சைடு தான் ஏதோ தப்பு இருக்கும் போலயே!” என்று பேசினர்.

 

ஆக மொத்தம், ‘உதயகீதன்’, ‘ராகவர்ஷினி’ மற்றும் ‘ஜீவநந்தினி’ ஆகிய மூவரின் பெயரும் தான் அங்கு அடிக்கடி உச்சரிக்கப்பட்டன. அதனுடன் ஊறுகாயாக அவர்களின் குடும்பமும் அலசப்பட்டது.

 

இது இத்தனை விரிவாக பேசப்பட காரணம் உதயகீதன் மட்டுமல்ல ஜீவநந்தினியும் தான்.

 

ஆம், உதயகீதன் அந்த அலுவலகத்தில் எத்தனை பிரபலமோ, ஜீவநந்தினியும் அத்தனை பிரிபலம்.

 

உதயகீதனின் ‘யூ & கே சொல்யூஷன்ஸ்’ஸில் சீனியர் ஹச்.ஆர் மேனேஜராக இருக்கிறாள் ஜீவநந்தினி. துறுதுறுவென்று, எப்போதும் சிரித்த முகமாக வலம் வருபவளை பிடிக்காதவர்கள் வெகு சிலரே. அதுவும், அவள் பிரபலமாக இருப்பதால் உண்டான பொறாமையால் தான்!

 

வாரயிறுதி நாட்களில் நடைபெறும் ‘ஃபன் ஃபிரைடே’ முதல், வருடந்தோறும் நடைபெறும் போட்டிகள், நிகழ்ச்சிகள், விழாக்கள் என்று அனைத்திலும் சுறுசுறுப்பாக பணியாற்றுபவள் அவள். சொல்லப்போனால், அந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் அவளின் மேற்பார்வையில் தான் நடக்கும் என்று கூட சொல்லலாம்.

 

அவளின் திறமையை கண்ட உதயகீதனே அந்த பொறுப்புகளை அவளிடம் தந்து விடுவான் என்றால் உண்மையிலேயே அவள் அதில் கில்லாடி என்று தான் சொல்ல வேண்டும்!

 

என்னதான் இது ஒரு பக்கம் என்றாலும், உதயகீதனிடம் அதிகமாக திட்டு வாங்குபவர்கள் பட்டியலில் ஜீவநந்தினியின் பெயரும் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும்.

 

அவள் பிரபலமானதற்கு முக்கிய காரணமே அது தானே!

 

அவனிடம் திட்டு வாங்கி மற்றவர்கள் கண்ணீரும் கம்பலையுமாக வெளியே வர, ஜீவநந்தினியோ எதுவும் நடக்காததை போல வலம் வருவாள். அடுத்த முறையும், உதயகீதனுக்கு பிடிக்காத ஏதோ ஒன்றை செய்து திட்டு வாங்கினாலும், அதை பெரிதாக எல்லாம் கண்டு கொள்ள மாட்டாள்.

 

“நீ மட்டும் எப்படி இவ்ளோ அசால்ட்டா அவரை ஹேண்டில் பண்ற? அந்த சீக்ரெட்டை எங்களுக்கும் சொல்லேன்.” என்று எத்தனையோ நபர்கள் வந்து ஆலோசனைகள் கேட்கும் அளவுக்கு பிரபலமானவள் தான் ஜீவநந்தினி.

 

இதோ, திருமணம் முடிந்த அடுத்த நாளே, அவள் அலுவலகத்திற்கு வந்திருக்க, அவளை சூழ்ந்து கொண்டனர் அனைவரும்.

 

“நந்து, திடீர் மேரேஜ், இப்போ உடனே ஆஃபிஸ் வந்துருக்க! என்ன விஷயம்? சார் கோபப்பட்டாரா?”

 

“ஏன் கல்யாணம் நின்னுச்சாம்? உனக்கு ஏதாவது தெரியுமா?”

 

“அட, இனிமே அவங்க நமக்கு முதலாளி. மரியாதை கொடுத்து பேசுங்க.”

 

இப்படி ஆளாளுக்கு பேசிக் கொண்டே இருக்க, ஜீவநந்தினி இன்னும் அறைக்கு சென்ற பாடில்லை.

 

“பிளீஸ் கைஸ், என்னை என் கேபினுக்கு போக விடுங்களேன்.” என்று அவள் எத்தனை கேட்டும், ஒரு பிரயோஜனமும் இல்லை.

 

அதே சமயம், உதயகீதனும் அலுவலகம் வந்திருக்க, அங்கு கூடியிருந்த கூட்டம் எதற்கென்று யூகித்து, அதன் காரணமாக முகம் இறுகிப் போக, மெல்ல கூட்டத்தை நோக்கி நடந்தான்.

 

அப்போதென்று பார்த்து, “இனிமே, ‘முசுட்டு முசோலினி’ன்னு எல்லாம் சாரை சொல்ல மாட்ட தான நந்து?” என்ற குரல் கேட்க, அது உதயகீதனின் கோபத்தை விசிறி விட்டது போலானாது.

 

“வாட் இஸ் ஹேப்பெனிங் ஹியர்? இதென்ன ஆஃபிஸா இல்ல மார்கெட்டா? யாருக்கும் வேலை செய்யுற மூட் இல்லன்னா இப்போவே ரிலீவ் பண்ணிடுறேன். வீட்டுக்கு போய் ஜாலியா என்ஜாய் பண்ணுங்க.” என்று உதயகீதன் பேச ஆரம்பிக்கும் போதே கூட்டம் கலைந்து, அனைவரும் அவரவரின் இடத்திற்கு சென்றனர்.

 

அவன் பார்வையோ அங்கு பாவமாக நின்றிருந்த ஜீவநந்தினியை தான் குற்றம்சாட்டியது.

 

“கம் டூ மை ரூம்.” என்று பல்லிடுகில் வார்த்தைகளை துப்பி விட்டு அவன் நகர்ந்து விட, ‘இதென்ன டா கொடுமை! பேசுனவங்க அவங்க. அவங்களை விட்டுட்டு என்னை முறைச்சு தள்ளுறாரு. கிச்சானாலே இளிச்சவாயன் தான்ல!’ என்று புலம்பியபடி கணவனை பின்தொடர்ந்தாள் அவள்.

 

தொடரும்…

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 35

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
24
+1
2
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

6 Comments

  1. அவனை பேச விட்டுடுவாளா இவ இன்னிக்கு?!!

  2. நந்து உன்னை எப்படி சமாளிக்கிறதுன்னு முமு தான் யோசிக்கணும் 🤣🤣🤣🤣 என்னா வாயி 🤭🤭 பாவம் உதய் 😅