அத்தியாயம் 7
அந்த பெரிய காம்பவுண்ட் சுவரருகே சென்ற அத்வைத், அழைப்பு மணியை அழுத்தப் போக, அதற்குள் கதவு அதன் வழக்கமான கீறிச்சிடும் சத்தத்துடன் திறந்து கொண்டது.
கதவைத் திறந்தது இராதான்.
ஆனால், அவளுமே அத்வைத்தை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் திகைத்த பாவனையிலேயே தெரிந்தது.
அத்வைத் பேசுவதற்கு முன்பே, இராவின் விழிகள் அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தன.
அதைப் புரிந்து கொண்டவனோ, “இப்போ நான் நம்ம பெர்சனல் பத்தி பேச வரல. ப்ரொஃபெஷனலா பேச வந்துருக்கேன்.” என்றான் நிர்மலாமான குரலில்.
அதற்கு ஒரு புருவச் சுருக்கத்தை எதிர்வினையாகக் கொடுத்தவள், “ப்ரொஃபெஷனலா பேசவும் நமக்குள்ள எதுவும் இல்ல.” என்று அழுத்தம் திருத்தமாகக் கூற, அதை பெரிதாக எடுத்துக் கொள்பவனா அத்வைத்?
“ஏன் இல்ல? இந்த ஊர்லயே உங்க குடும்பம்தான் பாரம்பரியமான குடும்பமாமே. அதாவது தலைமுறை தலைமுறையா இங்கேயே வாழ்ந்துட்டு இருக்கீங்களாம். அப்போ, இந்த ஊரோட வரலாறு உங்களுக்கு தெரிஞ்சுருக்கும்ல. அதைப் பத்தி பேசத்தான் வந்தேன்.” என்றான் அவன்.
இராவோ ஒரு பெருமூச்சுடன், “அதை எதுக்கு உங்ககிட்ட சொல்லணும்?” என்று கைகளைக் கட்டிக் கொண்டு வினவ, அவளின் விழிகளை நேர்ப்பார்வை பார்த்தபடி, “உனக்கு நான் இங்க இருந்து போகணும், அப்படித்தான? என் வேலை முடிஞ்சா, நான் இங்கயிருந்து போயிடுவேன். ஐ பிராமிஸ் யூ.” என்றான்.
அந்த நொடி, அந்த ஒரே ஒரு நொடி, இராவின் பார்வை மாறியது.
அது வெளிப்படுத்திய ஏமாற்றத்தை உணர்ந்து கொண்ட அத்வைத்தோ, ‘இதை சொன்னா, ஒத்துக்க மாட்டா பிடிவாதக்காரி!’ என்று மனதிற்குள் கூறிக் கொண்டான்.
அவனின் மனமோ, ‘உண்மைலேயே வேலை முடிஞ்சதும் போயிடுவியா?’ என்று வினவ, ‘எந்த வேலைன்னு நான் சொல்லலையே!’ என்று தன் மனம் மட்டுமறிய புன்னகைத்துக் கொண்டான்.
நொடியினில் ஏமாற்றத்தை தனக்குள் மறைத்துக் கொண்ட இராவோ, இன்னமும் யோசனையில் இருக்க, அவளைக் குழப்ப ஆரம்பித்து, அதில் ஓரளவு வெற்றியும் கண்டான் அத்வைத்.
அதே சமயம், இராவின் வீடிருக்கும் தெருவில், அவளையும் வாசலில் நிற்கும் அத்வைத்தையும் பார்த்தபடி, அவர்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டு சென்ற இருவரைக் கண்டாள் இரா.
அவர்களின் பார்வையிலிருந்து தப்பிக்க எண்ணினாளோ, இல்லை ‘நீங்க எப்படியோ நினைச்சுட்டுப் போங்க. நான் என் இஷ்டப்படிதான் நடப்பேன்’ என்று அவர்களுக்குக் காட்ட எண்ணினாளோ, அத்வைத்தை உள்ளே அழைத்தாள்.
அவளின் அழைப்பு அத்வைத்திற்கு என்றாலும், பார்வை முழுவதும் அந்த இருவரிடம்தான். அதில், ஒருத்தி வானதி!
அப்போதே இராவிற்கு தெரியும், இது எப்படி மக்கள் மத்தியில் பரவும் என்று.
ஆனால், அதற்காக எல்லாம் இரா பயந்து விடவில்லை.
இது அவளுக்கு முதல் முறையும் அல்லவே!
எப்படியோ, அத்வைத் அந்த வீட்டிற்குள் நுழைய, அந்த இருவரும் அவர்களுக்குத் தெரியாமலேயே காரணமாகிப் போயினர்.
“அட, இவ்ளோ பெரிய வீடா?” என்று அங்கிருந்த பெரிய வீட்டை கண்டபடி அத்வைத் கூற, “வழி இந்தப் பக்கம்…” என்று அவளின் சிறு வீட்டை நோக்கி நடந்தாள் இரா.
அந்தப் பெரிய வீட்டைத் திரும்பி பார்த்தபடி நடந்தாலும், அவளிடம் அதைப் பற்றி எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை அத்வைத்.
“ஆமா, நீ எங்கயாவது வெளியப் போகக் கிளம்புனியா என்ன?” என்று அவன் வினவ, ஒரு பெருமூச்சுடன், “இப்போ அதுக்கு அவசியம் இல்ல.” என்றாள்.
ஒருத்தர் தங்குவதற்கு ஏதுவாக ஸ்டுடியோ வீடு போல இருந்ததை சுற்றிலும் பார்த்தான் அத்வைத்.
“ஹ்ம்ம், உன்னைப் போல அழகா, அதே சமயம் மர்மமாதான் இருக்கு.” என்று அவன் வாய்வழி சான்றிதழ் தர, அதைக் கண்டு கொள்ளாதவளோ, உபசரிப்பில் இறங்கினாள்.
அவனும் கூச்சப்படாமல், “எனக்கு ஒரு காஃபி.” என்று கேட்க, அவனுக்கான பானத்தை தயாரிக்க, தடுப்புக்கு பின்னிருந்த சிறு அடுக்களை நோக்கி நடந்தாள்.
அவனோ அங்கிருந்த இருவர் அமரக்கூடிய நீள்சாய்விருக்கையில் அமர, அங்கு ஏற்கனவே இருந்த இராவின் மடிக்கணினி, அவன் கரம் பட்டு மின்னியது.
அதன் திரையில் இருந்ததோ, ஒரு செய்தித்தாளின் பக்கம்.
“பெருகி வரும் நரபலி கலாச்சாரம்… சமூகம் எதை நோக்கி நகர்கிறது?” என்ற தலைப்பைக் கொண்ட செய்தி அது.
அதை சத்தமாக வாசித்த அத்வைத்தோ, ஒரு நமுட்டுச் சிரிப்புடன், “இது எனக்கு ரொம்ப பரிச்சயமானதா இருக்கே. அட, இது நான் எழுதினதாச்சே…” என்று கூறிக் கொண்டிருக்கும்போதே, அவசரமாக வந்த இரா, மடிக்கணினியை மூடியபடி, “அடுத்தவங்களோட திங்க்ஸை அவங்க பெர்மிஷன் இல்லாம தொடக் கூடாதுன்னு தெரியாதா?” என்று பதற்றத்துடன் வினவினாள்.
அத்வைத்தோ சாவகாசமாக இரு கைகளையும் நீள்சாய்விருக்கையில் நீட்டியபடி, “லேப்டாப்பை கிளோஸ் பண்ணாதது உன் தப்பு. எதேச்சையா என் பார்வைல பட்டதுக்கு எப்படி நான் பொறுப்பாவேன்?” என்று கூறியவன், “அடுத்தவங்கன்னு எனக்கு தோணலயே.” என்பதை மென்குரலில் என்றாலும், சம்பந்தப்பட்டவளுக்கு கேட்கும் வகையில்தான் கூறினான்.
அதைக் கண்டு கொள்ளாததைப் போல இருந்த இரா, அவனுக்கு குளம்பியைக் கொடுத்தபடி, அவன் எதுவும் கேட்கும் முன்னரே, “இந்த ஊரைப் பத்தி என்ன தெரியணும் உங்களுக்கு?” என்றாள்.
அவளின் முயற்சியை உணர்ந்து புன்னகையை உதட்டிற்குள் மறைத்தவன், “இந்த ஊருக்கு ஏதோ மந்திர சக்தி இருக்குன்னு அன்னைக்கு சொன்னியே, அதைப் பத்தி தெரிஞ்சுக்கணும். அப்போதான், இங்க நடக்கிற மர்மங்களை முழுசா தெரிஞ்சுக்க முடியும்.” என்றான்.
இராவின் புருவ முடிச்சு, அவள் எதையோ சிந்திப்பதை உணர்த்த, சில நொடிகளில் ஏதோ முடிவெடுத்தவளாக, “இங்கேயே இருங்க. நான் வரேன்.” என்று வீட்டை விட்டு வெளியே சென்றாள்.
சென்றவள் என்ன நினைத்தாளோ, மீண்டும் உள்ளே வந்து, “எதையும் டச் பண்ணாம இருக்கணும்.” என்று மிரட்டிவிட்டு செல்ல, பக்கென்று சிரித்து விட்டான் அத்வைத்.
“ஹ்ம்ம், இதுவும் கூட நல்லாதான் இருக்கு.” என்று இரு கைகளையும் மேலே உயர்த்தியபடி கூறிக் கொண்டான் அவன்.
இராவோ, பல மாதங்களாக நுழையாத அந்த பெரிய வீட்டிற்குள் நுழைந்தாள்.
உள்ளே சென்ற நொடி, பல நிகழ்வுகளும் நினைவுகளும் அவளை அலைக்கழிக்க முயல, அதில் சிக்கிக்கொள்ள விருப்பமில்லாதவளாக, அவள் தேடி வந்ததை எடுக்கச் சென்றாள்.
இரு தளங்களும், அதற்கு மேல் மொட்டை மாடியும் என்று விசாலமாக இருந்தது அந்த வீடு.
இரண்டாவது தளத்திற்கு வந்தவள், நான்கு வருடங்களுக்கு முன் அவளின் அறையாக இருந்ததைக் கடந்து செல்லும்போது, அவளையும் மீறி அங்கு தேங்கி நின்று விட்டாள்.
தன்னிச்சையாக அவளின் கரம் நீண்டு அந்த அறைக்கதவை திறந்தது.
உள்ளே, எதுவுமே மாறவில்லை. மாற்றப்படவில்லை.
அவளுக்குப் பிடித்த இளநீலநிற பெயிண்ட், ஒற்றை வயர் கட்டில், சுவர் முழுக்க புகைப்படங்கள் என்று எதுவுமே மாறவில்லை.
அங்கு மாறியிருப்பது அவள் மட்டும்தானோ!
வெளியில் இருந்தே அவளின் பார்வை, அங்கிருந்த புகைப்படங்களைச் சுற்றி வந்தது.
அந்தப் புகைப்படங்களில் இருந்தவர்களின் முகங்களில்தான் எத்தனை சிரிப்பு, எத்தனை மகிழ்ச்சி!
இப்போது அனைத்தும் எங்கோ மாயமாக மறைந்து விட்டது போலிருந்தது.
இரா, அவளின் கடந்த காலத்தை விட்டு வெளிவர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்க, அவளின் செவியருகே, “அட, இதுதான் உன்னோட ரூமா ஸ்டார்லைட்?” என்ற குரல் கேட்க, திடுக்கிட்டுத் திரும்பினாள்.
அங்கு, அவனின் ஆராய்ச்சிப் பார்வையுடன் நின்றிருந்தான் அத்வைத்.
“ப்ச், நீங்க இங்க என்ன செய்றீங்க? உங்களை அங்கதான வெயிட் பண்ண சொன்னேன்.” என்று சிறிது எரிச்சலுடன் இரா வினவ, “சும்மா சொல்லியிருந்தா ஓகே. ஆனா, எதையும் டச் பண்ணக்கூடாதுன்னு கண்டிஷன் வேற போட்டியே… என்னால எல்லாம் உன் கண்டிஷனை ஃபாலோ பண்ண முடியாது. அப்புறம், எதையாவது செஞ்சு, அதுக்கு நீ இன்னும் டென்ஷனாவியோன்னு பயத்துலதான் இங்க வந்துட்டேன்.” என்றான் அத்வைத் சாவகாசமாக.
“பயத்துல நீங்க இங்க வந்தீங்க?” என்றவளின் பார்வையில், ‘இதை நான் நம்பணும்?’ என்ற கேள்வி தொக்கி நிற்க, “அஃப்கோர்ஸ், பயம்தான்!” என்றவன், அந்த வீட்டை சுற்றிப் பார்த்துவிட்டு, “இவ்ளோ பெரிய வீடு இருக்குறப்போ, நீ ஏன் அந்த வீட்டுல இருக்க?” என்று வினவினான்.
அடுத்த நொடியே, “சாரி சாரி, அது உன்னோட பெர்சனல்னா வேண்டாம்.” என்றவன், அவன் வாயை லேசாக அடித்தபடி, “அதைக் கேட்காதன்னு எவ்ளோ முறை சொன்னேன்?” என்று முணுமுணுத்துக் கொண்டான்.
அவனையே கவனித்துக் கொண்டிருந்தவளுக்கு, அவனின் அந்த செய்கை இளமுறுவலை அவளின் உதட்டில் படரவிட்டது.
அதற்கு எப்போதும் போல பதில் சொல்லாமல் விட்டிருக்கலாம். ஆனால், அவனை வெறுப்பேற்றி பார்க்க எண்ணினாளோ என்னவோ, “ஆமா, அது என் பெர்சனல்.” என்று கூறினாள்.
அதில் அவளைத் திரும்பிப் பார்த்தவனோ, “எத்தனை நாளைக்குன்னு பார்க்கத்தான போறேன்.” என்று முணுமுணுத்துவிட்டு, அவளைக் கடந்து அந்த அறைக்குள் நுழைந்து விட்டான்.
“ப்ச், இப்போ எதுக்கு என் பெர்மிஷன் இல்லாம என் ரூமுக்குள்ள போறீங்க?” என்றவளின் குரலில் அவள் எதிர்பார்த்த அழுத்தம் இல்லாதது, அவளுக்கே ஆச்சரியம்தான்.
“அட இரும்மா, உன் முகம் சிரிக்கும்போது எப்படி இருக்குன்னு பார்க்க வேண்டாமா? நான் இதுவரை பார்க்காததாச்சே!” என்றவன், “உனக்குள்ள நுழையதான் உன் பெர்மிஷன் வேணும். உன் ரூமுக்குள்ள நுழைய எல்லாம் உன் பெர்மிஷன் தேவையில்ல.” என்றும் சேர்த்துக் கூறினான்.
“வாட்?” என்று அவனின் முதல் வரியில் திகைத்துப் போனவளாக அவள் கேட்க, “அதாவது, உன் மனசுக்குள்ள நுழையன்னு சொல்ல வந்தேன்.” என்றவன் கண்களைச் சிமிட்டியபடி, “அதுக்குள்ள டெர்ட்டி தாட்ஸா ஸ்டார்லைட்?” என்று குறும்பாக வினவ, அவனை இழுத்துக் கொண்டு வெளியே வந்தாள் இரா.
இருவருக்குமே, அன்றைய நாளின் பகல் பொழுதில் ஏற்பட்ட மனக்கிலேசம் நினைவில் இல்லை போலும்!
“என் ரூமுக்குள்ள நுழையணும்னாலும் என் பெர்மிஷன் வேணும்.” என்று அழுத்தமாகக் கூறிய இரா, அவனது பார்வையைச் சந்திக்க முடியாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
‘இன்னைக்கு இவ்ளோ போதும்!’ என்று எண்ணிய அத்வைத்தும், அவளைப் பின்தொடர்ந்தான்.
இரண்டாம் தளத்தின் மத்தியில் அமைந்திருந்த பெரிய அறையின் கதவை இரா திறக்க, உள்ளே எட்டிப் பார்த்த அத்வைத்திற்கு, அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த எண்ணற்ற புத்தகங்களைக் கண்டு ஆச்சரியத்தில் விழிகள் இரண்டும் விரிந்தன.
“இவ்ளோ பெரிய லைப்ரரியை வீட்டுக்குள்ளயே வச்சுருக்குறது எல்லா பெரிய குடும்பத்துக்கும் இருக்க டெம்ப்ளேட்டா?” என்று திகைப்பு மாறாமல் அவன் வினவ, அவளோ உள்ளே நுழைந்தபடி, “இதெல்லாம் தலைமுறை தலைமுறையா வாழ்ந்த எங்க குடும்பத்தினரோட கலெக்ஷன்ஸ். அடுத்த சந்ததியினருக்கு பணத்தையும் சொத்தையும் விட அறிவு முக்கியம்னு நினைச்சுருப்பாங்க போல.” என்று சற்று பெருமையாகவே உரைத்தாள் இரா.
“நைஸ்… ஆமா, எவ்ளோ வருஷமா உங்க குடும்பம் இங்க இருந்துட்டு வராங்க?” என்று அத்வைத் வினவ, “எனக்குத் தெரிஞ்சு கிட்டத்தட்ட பத்து தலைமுறைகளால, இங்கதான் இருந்துருக்காங்க.” என்றாள் இரா.
“அப்போ பாரம்பரியத்துக்கு சரியான எடுத்துக்காட்டு உங்க குடும்பம்தான்னு சொல்லு. ஆமா, இத்தனை தலைமுறைகள்ல, எத்தனை காதல் இருந்துருக்கு?” என்றான்.
அதுவரை புத்தகங்கள் மீது பார்வையைப் பதித்திருந்த பாவை, அவனை நோக்கித் திரும்ப, அவனோ இன்னமும் புத்தகங்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“எங்க குடும்பத்துல எத்தனை காதல் இருந்துச்சுன்னு கூட உங்க நியூஸ்ல போடப் போறீங்களா?” என்று அவள் நக்கலாக வினவ, “அது நியூஸ்ல போட இல்ல. சும்மா ஒரு ஜெனரல் நாலேஜுக்கு.” என்றவன், “ஆமா, உன் அப்பா உன்கிட்ட எதுவும் சொல்லல?” என்று கேட்டான்.
அவன் திடீரென்று தந்தையைப் பற்றி வினவியதும், காலையில் தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடந்த சம்பாஷனைகள் நினைவில் வந்து போக, இலகியவள் சற்று இறுகினாள்.
இருப்பினும், அத்வைத்தின் கேள்வியே அவன் வில்லங்கமாக ஏதோ செய்திருக்கிறான் என்பதைக் கூற, அதைக் தெரிந்து கொள்ள வேண்டி, “இல்ல, ஏன் என்னாச்சு?” என்று வினவினாள்.
“உன்கிட்ட பேசக் கூடாதுங்கிற மாதிரி உன் அப்பா சொன்னாரு. அதுல கொஞ்சம் கடுப்பாகி, உன் பெர்த் டே என்னன்னு அவருக்கிட்டயே கேட்டேன். அதான், உன்கிட்ட என்னைப் பத்தி ஏதாவது சொன்னாரான்னு கேட்டேன்.” என்று சாவகாசமாக கூறியவனை அதிர்ந்து பார்த்தாள் இரா.
அவளின் பார்வையிலேயே செய்தியை உணர்ந்து கொண்டவன், “சரி சரி வா வேலையைப் பார்ப்போம்.” என்று பேச்சை மாற்றினான் அத்வைத்.
இருபுறமும் தலையை அசைத்துக் கொண்ட இராவோ, அவனை அந்த அறையின் ஓரத்திலிருந்த பெரிய புத்தகத்திற்கு முன் அழைத்துச் சென்றாள்.
“இதுதான், இந்த ஊரைப் பத்தி, எங்க குடும்பம், வழிவழியா வரவங்களுக்கு சொல்ல விட்டுட்டுப் போன குறிப்பு.” என்று அவள் கூற, அதன் அளவைக் கண்டவனோ, “ரொம்ப பெரிய குறிப்பா இருக்கே.” என்றான்.
“உங்களுக்கு எது தேவையோ, அதை மட்டும்தான் சொல்லப் போறேன்.” என்றவள், அந்த புத்தகத்தை திறந்தாள்.
“எங்க குடும்பம் பல தலைமுறைகளுக்கு முன்னாடி நாடோடியா இருந்தவங்க. அப்படித்தான் மறைப்புரதுக்கும் வந்திருக்காங்க. இந்த ஊருக்கு ஏதோ சக்தி இருந்ததால, அவங்க இங்கேயே செட்டிலாகிட்டாங்களாம்.” என்றாள்.
“ஓஹ், அப்போ மாடசாமி சொன்னது உண்மைதான் போல.” என்று அத்வைத் கூற, “அவரை எப்போ பார்த்தீங்க நீங்க?” என்று சிறிது பதற்றத்துடன் வினவினாள் இரா.
“இன்னைக்குதான்… அந்த காட்டுல வச்சு நாம சண்டை போட்டோமே… அதுக்கு முன்னாடிதான்.” என்றான் தோளைக் குலுக்கியபடி.
“அவரு என்ன சொன்னாரு?” என்று இன்னமும் பதற்றம் விலகாத குரலில் அவள் வினவ, “அதான்… இந்த மாந்திரீகம், தாந்த்ரீகம் பத்தியும், அதை எப்படி செய்யுறதுன்னும், பில்லி, சூனியம்…” என்று ஆரம்பித்தவன், “அதெல்லாம் நிறைய சொன்னாரு. நீ எதுக்கு இவ்ளோ நெர்வஸா இருக்க?” என்று சந்தேகமாகக் கேட்டான்.
“அது… ஒன்னுமில்ல. அவரு ஏற்கனவே சொல்லிட்டாருன்னா, நான் எதுக்கு மறுபடியும் அதையே சொல்லணும்னுதான் கேட்டேன்.” என்று ஒருவாறு சமாளித்து விட்டாலும், அதை அவன் நம்பினானா என்று தெரியவில்லை.
பின்னர் அவளே, “வேற எதுவும் சொல்லலையா?” என்று வினவ, அவளை ஆழ்ந்து பார்த்தபடி, “இத்தோட நிறுத்திட்டு, என்னை ஊரை விட்டுப் போகச் சொன்னாரு.” என்றான்.
அதைக் கேட்டவளோ ஒரு பெருமூச்சுடன் அந்த புத்தகத்தை மூடி விட்டு, “அவரு சொன்னதுதான் சரி. நீங்க இங்க இருந்து கிளம்புங்க.” என்று நகர முற்பட, அவளின் கரத்தைப் பற்றி தடுத்திருந்தான் அத்வைத்.
அவன் லேசாக பற்றியிருந்தாலும், வலியில் அவள் கத்தியிருக்க, அதைக் கண்டு கொண்ட அத்வைத்தோ, அவளின் கரத்தைத் திருப்பிப் பார்த்தான்.
அவளின் உள்ளங்கையில் கத்தியால் கீறப்பட்ட பெரிய காயம் இருப்பதைக் கண்டவனோ, “இரா, என்ன இது? இவ்ளோ பெரிய வெட்டுக்காயம் இருக்கு… அதுக்கு மருந்து கூட போடலையா?” என்றான் பதற்றமாக.
அவனுக்கு மேலே பதற்றத்துடன், “அதெல்லாம் தேவையில்ல. கொஞ்ச நாள்ல சரியாகிடும்.” என்ற இரா, அவனை அங்கிருந்து கிளப்புவதிலேயே குறியாக இருந்தாள்.
“நில்லு இரா, இங்க என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியணும். அவரு, என்னை இங்கயிருந்து கிளம்ப சொல்றாரு. நீயும் அதைக் கேட்டதும், அதை ஆமோதிக்கிற மாதிரி பேசுற. என்னதான் நடக்குது?” என்று அத்வைத் கேட்க, “அவரு நம்ம ரெண்டு பேரையும் ஒண்ணா பார்த்துருப்பாரு.” என்றாள் இரா எங்கோ பார்த்தபடி.
“இல்ல, எனக்குப் புரியல. ஒண்ணா பார்த்தா என்ன? நான் உன்னை ஏதாவது செஞ்சுடுவேன்னு நினைக்கிறீங்களா?” என்று அவன் வினவ, இராவோ ஒரு பெருமூச்சுடன், “இது உங்களைப் பத்தினது இல்ல அத்வைத். என்னைப் பத்தினது… என்னோட முடிவைப் பத்தினது… அதுக்கு நீங்க இங்க இருந்து கிளம்புறதுதான் சரி.” என்றாள் தீர்மானமாக.
“உன்னோட முடிவா? என்ன அது?” என்று அவன் புருவம் சுருக்கி வினவ, அதற்கு பதில் சொல்லப் போவதில்லை என்பது போல நின்றவளிடம், “இதுல நானும் சம்பந்தப்பட்டுருக்கேன். சோ, நீ சொல்லித்தான் ஆகணும்.” என்று கட்டாயப்படுத்தினான்.
அதில் தூண்டப்பட்ட இராவோ, “இன்னும் கொஞ்ச நாள்ல, நான் இறந்துடுவேன்… இறக்கணும்! இதுதான் என்னோட முடிவு. நானா எடுத்த முடிவு இல்ல… என்மேல திணிக்கப்பட்ட முடிவு! போதுமா? தெரிஞ்சுடுச்சுல… கிளம்புங்க.” என்றவளின் ஆவேசத்தைத் தாண்டிய கண்ணீர், அவனைத் தாக்கியது.
முழுதாகவும் புரியவில்லை, புரிந்ததும் அவன் மனதிற்கு ஒப்பவில்லை!
அழுபவளின் கரத்தை இறுக்கப் பற்றிக் கொண்டான், ‘எப்போதும் உடனிருப்பேன்’ என்ற செய்தியை அவளுக்குள் கடத்தியபடி.
அப்போது அவனால் முடிந்தது அது ஒன்றே!
தொடரும்…
ஸ்டார் லைட் புதிர் தான்.
புதிரா இருந்தாதான் அவ ஸ்டார்லைட் 😉