
அத்தியாயம் – 7
குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த அஞ்சலி, “அந்த பீடிங் பில்லோவை எடுங்க.” என்று விக்கியை அழைக்க, அது அவன் காதில் விழாத அளவிற்கு எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.
இரண்டு முறைக்கு மேல் அழைத்தும் அவன் கவனிக்காததால், அருகே இருந்த டயஃபரை அவன் மீது தூக்கிப் போட்டிருந்தாள் அஞ்சலி.
“ஹே அம்மு, என்னாச்சு?” என்று திடுக்கிட்டு அவளைப் பார்த்தான் விக்னேஸ்வரன்.
“என்னாச்சு உங்களுக்கு? நானும் அப்போ இருந்து பார்த்துட்டு இருக்கேன். மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி உட்கார்ந்திருக்கிங்க. கூட இருந்த அம்மாவையும், அத்தையையும் ஏதேதோ சொல்லி வீட்டுக்கு அனுப்பி வச்சிருக்கிங்க. கேட்டாலும் பதில் சொல்லாம ஒன்னும் இல்லன்னு டாபிக் சேஞ்ச் பண்ணுறிங்க. வாட்ஸ் ஈட்டிங் யுவர் மைன்ட் வரு…” என்று பொரிந்து தள்ளினாள் அஞ்சலி.
கடந்த இரண்டு நாளாக நடந்த எதற்கும், எந்த விளக்கமும் தராமல் இருப்பதோடு இப்படி எதையோ மனதிற்குள் போட்டுக் குழம்பிக் கொண்டிருந்தவனைப் பார்த்தவளுக்கு மனம் படபடத்தது. அவை அனைத்தையும் மொத்தமாக இப்போது கொட்டி விட்டாள்.
“எதுக்கு டா டென்ஷன் ஆகுற?” என்று கேட்க, கண்களால் பீடிங் பில்லோவைக் காட்டினாள். புரிந்தவனாக, அதை எடுத்து அவளுக்கு வாகாக வைத்து விட்டவன் அவள் அருகே அமர்ந்தான்.
“என்ன பிரச்சனை வரு உனக்கு?”
“எனக்கு என்னடி பிரச்சினை? அதெல்லாம் ஒண்ணுமில்லை.”
“என்ன என்கிட்ட மறைக்கிறிங்க? பேபி பொறந்ததும் என்கிட்ட இருந்து நீங்க டிஸ்டன்ஸ் ஆகுற மாதிரி இருக்கு.” என்று அவள் கடைசி வார்த்தையை முடிக்கும் முன்பே அவளது வலது கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது.
“அம்மு, ஏன்டி இப்படியெல்லாம் பேசிட்டு இருக்கே. உன்னை விட்டா யாருடி இருக்கா எனக்கு. உன்னை விட்டுத் தள்ளிப் போனா, நான் நிம்மதியாவா இருப்பேன். உனக்கு போஸ்ட்பார்ட்டம் டிப்ரசன்னு நினைக்கிறன்.” என்று அவள் கண்ணீரைத் துடைத்து விட்டான்.
“உண்மையைச் சொல்லுங்க, என்ன உங்க மனசுல ஓடிட்டு இருக்கு?” என்று மீண்டும் விட்ட இடத்திற்கே வந்தாள்.
“இந்த நாள்கள் திரும்பி வராது அம்மு… தேவையில்லாததை எல்லாம் இப்போ யோசிச்சு உன் மதர்ஹூட்டை ஸ்பாயில் பண்ணிட்டு, கொஞ்ச நாள் அப்புறம் இதை நினைச்சு நீ தான் வருத்தப்படுவ.”
“நீ இவ்வளவு பேசுறதைப் பார்க்கத்தான் வரு, எனக்குப் பயமே வருது.”
“ஹே அம்மு, கொஞ்சம் உன் மூளைக்கு ரெஸ்ட் விடு டி. எதையாவது யோசிச்சுகிட்டே இருக்கு உன் குட்டி மூளை.”
“நீ சொல்லு, அப்போ தான் அமைதி ஆவேன்.”
ஆழ்ந்த மூச்சை எடுத்தவன், “எனக்கே எதுவும் தெளிவாத் தெரியல, இதுல உன்னை ஏன் குழப்பனும்னு தான் நான் எதுவும் சொல்லல. அதுக்குள்ள என்னவெல்லாம் பேசுறடி நீ.”
“ஹான், பேச்சை மாத்தாம சொல்லு.”
“நான் சொல்லுவேன், நீ என்கிட்டச் சண்டைக்கு வரக்கூடாது.”
“விகா என்ன பண்ணான்?” என்று நேரடியாகக் கேட்டிருந்தாள்.
“நம்ப பேபி பொறந்த அன்னைக்கு வந்தது, அகியா இருந்தால் என்ன பண்ணியிருப்ப?”
“அகியா? அகி எப்படி வர முடியும்? அவன் தான் யூ.எஸ்ல இருக்கானே. என்கிட்ட கால் பேசி ஆறுமாசம் ஆகுது.”
“எப்படிப் பேசுவான், அவன் தான் அங்க இல்லையே!”
“என்ன சொல்ற வரு. எனக்கு ஒன்னும் புரியல.”
“ஏன், அகி இங்க விகா மாதிரி வந்திருக்கக் கூடாது?”
“உனக்கு ஏன் இப்படி ஒரு எண்ணம்? அகி எப்படி விகா மாதிரி வர முடியும்.”
“நேத்து வந்த விகாவுக்கும், இன்னைக்கு வந்தவனுக்கும் நிறைய வித்தியாசம். கண்ணால பார்க்கிறதுல எந்த வித்தியாசமும் இல்லை. அவங்க மானரிசம்ல நிறைய சேஞ்ச் தெரிஞ்சுது.”
“எனக்கு எதுவும் தெரியலையே.”
“எனக்கும் இத்தனை நாள் எந்தச் சந்தேகமும் இல்லை. அதுக்குக் காரணம் அகி ஆதிராகிட்ட மட்டும் தான் அவனோட நாடகத்தை நடத்திருக்கனும்னு தோணுது. நம்ப குழந்தை பொறந்த அன்னிக்கு, அவன் ருத்ர தாண்டவம் ஆடினான். எனக்கு ஒன்பது வருசத்துக்கு முன்னாடி எல்லார் கிட்டயும் எடுத்து எரிஞ்சு பேசின நம்ப அகி தான் ஞாபகம் வந்தான்.”
“உன்னோட கற்பனைக்கு அளவு இல்லையா? நேத்து கூட எனக்கு மெயில் பண்ணிருக்கான் பாரு.” என்று ஒரு புகைப்படத்துடன் அவளுக்கு அனுப்பிய செய்தியை அவனிடம் காட்டினாள்.
“கண்ணை மூடிக்கிட்டா, இந்த உலகம் இருண்டு போயிருச்சுன்னு பூனை நினைக்குமாம். அந்த மாதிரி இருக்கு அம்மு நீ பேசுறது. எதையும் கற்பனை பண்ணி நான் பேசல. முழுசாத் தெரியலன்னு தான் சொன்னேனே தவிர எதுவுமே தெரியாதுன்னு சொல்லல.” என்று நிறுத்தியவன்,
“ஆதிராவைப் பழி வாங்கத்தான் அவன் விகா மாதிரி நடிச்சிருக்கான். ரெண்டு நாளா எனக்கு அந்த டவுட் இருந்துச்சு. எனக்கு மட்டும் இருந்தா கற்பனைன்னு சொல்லலாம். ராம் மாமாக்கும் தோணியிருக்கு. அதை ஆதுகிட்ட அவர் சொல்லியிருக்காரு.” என்று ஆரம்பித்தவன் சற்று முன் ஆதிரா கூறிய அனைத்தையும் அஞ்சலியிடம் கூறினான்
“நம்பவே முடியல வரு என்னால.”
“இவ்வளவு தூரம் இறங்கிப் பழி வாங்குவான்னு நான் எதிர்பார்க்கல.”
“ஆதி அக்கா மேல, அப்படி என்ன அகிக்குக் கோபம்?”
“அதைப்பத்தி இன்னொரு நாள் சொல்லுறேன். இப்போ நீ தூங்கு. பாப்பா தூங்குற நேரம் தான் உனக்கு ரெஸ்ட். நான் அவளைத் தொட்டில்ல போடுறேன்.” என்று அவர்களது மகவைத் தோளில் போட்டுத் தட்டி ஏப்பம் வந்ததும், மெல்லிய பருத்தித் துணியால் அவளைப் போர்த்தி அழகாகத் தொட்டிலில் படுக்க வைத்தான்.
அஞ்சலிக்கு நடந்ததை, நடப்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தாலும், அவளவன் சொன்னது போல அவளது தாய்மையை எந்தவித அழுத்தமும் இல்லாமல் அனுபவிக்க நினைத்தாள். அனைவரும் வளர்ந்தவர்கள். தொழிலதிபர்கள் கூட… அவர்களது பிரச்சினையைக் கையாளும் அளவிற்கு அவர்களுக்குப் பக்குவம் இருக்கும் என்று யோசித்தாள்.
இரவு முழுவதும் முழித்திருந்தவளுக்குக் கண்கள் சொருக, அப்படியே கண்களை மூடி உறங்க ஆரம்பித்தாள். குழந்தை தூங்கியதை உறுதிப்படுத்தியவன், சத்தமில்லாமல் நடந்து அவளிடம் வந்தான். கலைந்திருந்த முடியைச் சரி செய்து நெற்றியில் முத்தமிட்டவன், அவளைத் தொந்தரவு செய்யாமல் மீண்டும் அவன் அமர்ந்திருந்த இடத்தில் போய் அமர்ந்து அலைபேசியைப் பார்க்க ஆரம்பித்தான்.
மனத்தில் அவனுக்கு ஆயிரம் எண்ணம் ஓடியது. ஆதிரா நடந்ததை மறந்து விட்டாள். இந்த ஒன்பது ஆண்டில், அவனின் எண்ணம் துளியும் இல்லாமல் கடந்தவளுக்கு அந்த ஒற்றை நாளின் நினைவு இருக்காது என்று சரியாகக் கணித்த விக்னேஸ்வரன், அவளை எப்படி அகர்ணனிடம் இருந்து விலக்கி வைப்பது என்று யோசிக்க ஆரம்பித்தான்.
******
வீட்டிற்கு அவள் வரும் முன்னே, அகர்ணன் இந்தியா வந்திருக்கும் செய்தி லிங்கம் மூலம் சீதாவிற்கு வந்திருந்தது. அவரது அனுபவம் நடந்ததை ஒருவாறு கணக்கிட்டது. இன்று, தான் அவளை விரட்டிப் பேச வைக்கவில்லை என்றால், மேலும் மேலும் அவள் காயப்பட்டு உள்ளுக்குள் உடைந்திருப்பாள்.
அன்று தேற்ற முடியாத நிலையில் நின்றிருந்தவனைப் போல், ஆதிராவும் நின்றிருப்பாள் என்று நினைக்கும் போதே அவர் மனம் பதறியது.
நல்ல வேளையாகப் பெரும் பாதிப்பில் இருந்து அவளைக் காப்பாற்றிய நிம்மதியில், கூடத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார் சீதா. சரியாக ஆதிரா காரை விட்டு இறங்கிய சமயம் ராமச்சந்திரனும் வீட்டிற்கு வந்திருந்தார்.
அவரைப் பார்த்தவள், “நானும் இன்னைக்கு ஆபீஸ் வரல, நீங்களும் சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்டா அங்க வேலை எப்படிப்பா நடக்கும்.” என்று அவரைக் கடிந்தாள்.
மெலிதாகச் சிரித்தவர், “நீ பொறந்ததுல இருந்து கம்பெனிப் பொறுப்பை எடுத்துக்கிற வரை, இப்படித்தான் டா வீட்டுக்கு வருவேன். எதுக்காக ஓடுறோம், குடும்பத்துக்காகத் தானே. இப்போ நான் உன் கூட இருக்கனும்.” என்று அவள் தலையைத் தடவினார்.
“அப்பா, நான் என்ன சின்னக் குழந்தையா? அதெல்லாம் நான் ஸ்ட்ராங்கா தான் இருக்கேன். நீங்க எதையும் போட்டுக் குழப்பிட்டு இருக்காதிங்க. பிரஷர் ஏறுனா மாணிக்கம் மாமா (விக்னேஸ்வரன் அப்பா) என்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவாரு.”
“அப்படியே பயந்துட்டுத் தான் மறுவேலை!” என்று சீதா அவளைச் சீண்ட, செல்லமாக அவரை முறைத்து உள்ளே சென்றாள்.
“காபி போடவா, இல்லை ஜூஸ் போடவா ஆது?”
“எனக்கு ஒரு ஸ்வீட் லைம் ஜூஸ் போடுங்கம்மா” என்று சோபாவில் அமர்ந்து தந்தையுடன் தொழில் சம்பந்தமாகப் பேச ஆரம்பித்து விட்டாள்.
இது வழமையான விசயம் என்றாலும், சீதாவிற்கு ஆதிராவை நினைத்துப் பிரமிப்பாக இருந்தது. ஒரு சராசரிப் பெண்ணாக இருந்தால், இந்நேரம் தான் ஏமாந்து விட்டதை எண்ணிக் கண்ணீர் விட்டுக் கதறியிருப்பார்கள். இவள் என்னவென்றால், சாவகாசமாக அமர்ந்து பிசினஸ் பற்றி அழமாகப் பேசிக் கொண்டிருக்கிறாள்.
அவள் கேட்டது போல அவளுக்கு ஜூஸைப் போட்டவர், அவரது கணவருக்கு டீ போட்டு ஒரு டிரேயில் எடுத்து வந்து அமர்ந்தார்.
அதை அவள் குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்த சீதா அவளிடம் பேசினார்.
“என்ன முடிவு எடுத்திருக்க ஆது?”
“எல்லாத்தையும் பேசி முடிச்சுட்டேன் அம்மா. இனி என் விசயத்தில தலையிடாதனு சொல்லிட்டேன். வேற என்ன இதுல பண்ண முடியும்?” என்று அவள் பதில் அளிக்க இதை எல்லாம் வெறும் பார்வையாளனாகப் பார்த்திருந்தார் ராமச்சந்திரன்.
“அவ்வளவு தானா ஆதுமா? அம்மா கிட்ட ஏதாவது ஷேர் பண்ணனுமா?”
“ஒன்னும் இல்லம்மா, சீக்கிரம் சரி ஆகிடுவேன். வேறென்னம்மா நான் சொல்லனும்னு நினைக்கிறிங்க?”
“நீ தான் சொல்லணும் ஆது. மனசுக்குள்ளயே வச்சு உன்னை நீயே ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத.”
“ஹான், அதெல்லாம் எதுவும் இல்லம்மா. கொஞ்சம் வருத்தம் அவ்வளவு தான்… எப்பவும் இருக்கிறதை விட இன்னும் ஜாக்கிரதையா இருக்கணும். இது எனக்கு ஒரு பாடம்.”
“அடுத்து என்ன பண்ணப் போற? இப்படியே இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா?”
“ஏன்மா, இப்படியே நான் எதுக்கு இருக்கனும்? எனக்குக் கொஞ்சம் டைம் வேணும், நடந்ததை டைஜஸ்ட் பண்ணி அதுல இருந்து வெளியே வர… ஒன்ஸ் நான் மூவ் ஆன் ஆகிட்டா, நானே அடுத்து என்னனு சொல்லுறேன்.”
“ஆர் யூ ஓகே ஆது?”
“நோ மா, ஐ ஆம் நாட் ஓகே! பட் வில் பீ சூன். ஓகே” என்றவள் அவர் மடியில் தலை வைத்துப் படுத்து விட்டத்தைப் பார்த்தாள்.
அந்தப் பார்வையில் பெற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அவள் பெரிதும் காயப்பட்டிருக்கிறாள் என்பதை மட்டும் புரிந்து கொண்டனர்.
அவள் காலை மடியில் வைத்து அமுக்கியபடி, அவர் மனத்தில் இருப்பதைப் பேச ஆரம்பித்தார் ராமச்சந்திரன்.

