கண்ணாலம் 6
திண்ணைக்குக் கீழ் அமர்ந்து அத்தையின் கையைப் பிடித்துத் தன் கன்னத்தில் வைத்துக் கொண்டவன், “ஏன் அத்த, உன் மருமவன் மேல நம்பிக்கை இல்லையா? என்னைக் கேவலமா நாலு வார்த்தை திட்டு. நாசமாப் போயிடுவேன்னு சாபம் கூடக் குடு. ஆனா, நம்பிக்கை இல்லன்னு மட்டும் சொல்லாத. நானும் மனுஷன் தான… என்னையும் மீறித் தப்புப் பண்ணிட்டேன். அதைத் தப்புன்னு இப்ப வரைக்கும் சொல்லிக்கிட்டுத் தான கெடக்கேன். உன் பொண்ண வேணாம்னு உள்மனசுல இருந்து சொல்லியிருந்தா, எதுக்கு அவ பின்னாடி அலையப் போறேன். தப்புப் பண்ணவன மன்னிக்கவே கூடாதா? ஒரு தடவை பண்ணிட்டா அப்புடியேதான் பண்ணிக்கிட்டுக் கெடப்பனா… என் லாலாவக் கட்டிக்க விடாம, எது தடுத்து இருந்தாலும் ரொம்ப வலிச்சிருக்கும். அது நான்னு நெனைக்கும் போது உடம்பெல்லாம் ஊசி மாதிரிக் குத்துது அத்த… எப்படிடா இப்படிப் பண்ணன்னு தனியா ஒக்காந்து என்னை நானே அடிச்சுப்பேன். உன் பொண்ணு எனக்கு இல்லையோன்னு பயந்து, ராத்திரியெல்லாம் தூக்கம் வரமாட்டேங்குது.” என்றவன் பேசப் பேச அன்னத்தின் கண்ணீர் குறையத் தொடங்கியது.
அதைக் கூட அறியாது, “நீ சொன்னது சரிதான்! நீ பெத்த புள்ளையா இருக்கவும் தான, ஒரு தப்பும் பண்ணாத உன்னை வேணாம்னு சொல்லிட்டுப் போயும் வக்காலத்து வாங்கிட்டுக் கெடக்க. நான், நீ பெத்த புள்ள இல்லையே, எனக்காக எதுக்கு நீ பரிந்து பேசப் போற…” என்றவன் வலது கண்ணில் இருந்து ஒரு சொட்டு நீர் கீழ் இறங்கி மீசையில் பட்டுத் தன் தடத்தைத் தொலைத்தது.
சிரிப்பிற்கும், கேலிக்கும் பெயர் போன மருமகன் முகத்தில் தெரிந்த கண்ணீரில் மனம் வதங்கிப் போனவர், அவசரமாக அவன் கன்னத்தைத் தொட்டுக் கண்ணீரை வெளியேற்றினார். அத்தையின் கைகளைத் தன் கண்ணுக்கு மேல் பொத்தி வைத்து,
“என் லாலா அழுதால் கூட என் மனசு தாங்கிக்கும். நீ எனக்கு அம்மா மாதிரி அத்த… நீ அழுதா நான் உடைஞ்சிடுவேன்.” என்ற மருமகனைப் பலமுறை சேர்த்தணைத்த மடியில் சேர்த்துக்கொண்டு கதறி அழுதார்.
அத்தையை அணைத்துக் கொண்டு ஆறுதல் சொல்லியவனுக்கும் அடிக்கடி கண்ணீர் சிந்தியது. போதும் என்ற வரை தன் மனபாரத்தைக் குறைத்தவர், அவன் கண்ணைத் துடைத்துவிட்டுத் தன் கண்ணையும் துடைத்து, “நான் ஏதோ மனசு தாங்காமல் பேசிட்டேன். எனக்கு நீயும் புள்ள தான்டா… அதனாலதான் ரொம்பக் கஷ்டமா இருக்கு. நல்லா வாழ வேண்டிய ரெண்டு பேத்தையும் எந்தப் பொல்லாத கண்ணு பிரிச்சுதோ…” என்றிட, ஒரு வழியாகச் சமாதான உடன்படிக்கைக்கு வந்த அத்தையை எண்ணி மகிழ்ந்தான்.
வற்றிப்போன கண்ணீரைத் தன் கட்டை விரல் கொண்டு சுத்தமாகத் துடைத்து எடுத்தவன், “இப்பச் சொல்லு, உன் மருமவன் என்னா பண்ணா நீ சந்தோஷமா இருப்ப…” அதிகாரமாகக் கேட்டான்.
“நான் என்னாடா பெருசா சொல்லப் போறேன். பூங்கொடியும், நீயும் சந்தோசமா வாழனும். நின்னு போன அந்தக் கண்ணாலத்தோட உங்களைப் புடிச்ச எல்லாப் பீடையும் ஒழியனும். நீங்க புள்ள குட்டியோட வாழுற அழகைப் பார்த்தால் போதும் இந்த அத்தைக்கு.”
“இம்புட்டுத் தான… என் அத்தைக்காக இதைக்கூடச் செய்யலன்னா நான் என்னா மருமவன்? உன் பொண்ணைக் கெஞ்சிச் சமாதானம் பண்ணப் பார்க்குறேன். ஒத்து வரலைன்னா, குண்டுக் கட்டாய் தூக்கி வந்து தாலி கட்டிச் சீமந்தம் பண்ணிப்புடுறேன்.”
கலகலவென்று சிரித்தவர் அவன் கேசம் கோதி, “இப்பதான் மனசுக்குச் சுளுவா இருக்கு.” நிம்மதியில் பெருமூச்சு விட்டார். சற்று இடைவெளி கொடுத்து அவர் கையைச் சுரண்டினான் சிங்காரவேலன். என்னவென்று பார்த்தவரிடம் பல்லைக் காட்டியவன் எனக்கு ஒரு சத்தியம் வேண்டும் என்றான்.
“என்னான்னு?”
“என் கண்ணுல இருந்து சிந்தின கண்ணீர், கடுகளவும் வெளிய தெரியாதுன்னு.”
சத்தம் வராமல் சிரித்தவர், “நீ நிஜமாவே அழுதியா?” கேட்டார்.
“அதான் அத்த தெரியல, பொசுக்குன்னு வந்துடுச்சு. இது நாலு பேருக்குத் தெரிஞ்சா எம்புட்டுப் பெரிய அசிங்கம்.”
“ஹான்!”
“அட நிஜமா அத்த. இந்தச் சிங்காரவேலன் நாலு பேரை அழ வெச்சவன்னு தான் இந்த ஊரும், சனமும் நம்பிக்கிட்டு கெடக்கு. அவன் அழுதான்னு தெரிஞ்சா அதிர்ச்சியில அத்திப்பட்டி ஆகிடும் இந்த ஊரு. அப்புறம் நக்மா வந்து உங்களைத் தோண்டி எடுக்கும்போது தான் என்னால பார்க்க முடியும்.”
“ஹா ஹா ஹா…”
மனம் விட்டுச் சிரித்தவரைக் கண்டு மகிழ்ந்தவன், அவர் கையை ஆதரவாகப் பற்றிக்கொண்டு, “என்னால நடந்த பிரச்சினையை நானே சரி பண்ணிடுவேன் அத்தை. உன் பொண்ணை நிச்சயம் உன் வீட்டுக்குக் கூட்டிட்டு வருவேன். அதுவரைக்கும் மனசு நோகாம எனக்காகப் பொறுத்து இரு.” என அன்பொழுகப் பேசினான்.
கனிவாகப் பார்த்த அன்னத்தின் முகம், “என் லாலா வீட்டுக்கு வர்றதுக்குள்ள அந்தக் கொடுக்காப்புளி மூக்கனை விரட்டி விட்டுடு.” என்றதில் கடுகடுவெனப் பார்த்தது.
அத்தையின் பார்வை மாற்றத்தை உணர்ந்து திருதிருவென்று கண்ணைச் சுழற்றிய சிங்காரம், “ஈஈஈ… நீ சிரிக்கிறதை விட மொறச்சாத்தான் ரொம்ப அழகா இருப்ப அத்தை, அதான்.” எனக் கேவலமாகச் சமாளிக்க, கன்னத்தில் இடித்தார்.
***
அத்தையைச் சமாளித்துவிட்டுக் காதலியைப் பார்க்க வருவதற்குள் நேரமாகிவிட்டது. இவன் தொல்லை இல்லாமல் நிம்மதியாகப் பேருந்தில் ஏறியவள் தன் ஊருக்கு வந்து இறங்கினாள். வந்தவள் பார்வையில் முதலில் விழுந்தது அந்தப் பந்தல் தான். காலையோடு எடுத்து விடுவான் என்ற நினைப்பைத் துவம்சம் செய்தவனை எண்ணிக் கொண்டே நடந்தவள் செவியில்,
“ஹாய் செல்லம்!” என்ற வார்த்தை விழுந்தது.
அதுவரை ஓடிக் கொண்டிருந்த அவன் நினைப்பைத் தூரம் ஒதுக்கி வைத்தவள் வெடுக்கு வெடுக்கென்று நடக்க, “இடுப்ப ரொம்ப வளைக்காத லாலா… அங்க நான் இன்னும் சரியாகவே ரொமான்ஸ் பண்ணல.” என முறைப்பை வாங்கிக் கட்டிக் கொண்டான்.
“என்னைத் தேடுனியா?”
“சத்தியமா இல்ல!”
“தேடுன மாதிரி உன் கண்ணு சொல்லுச்சு.”
“அது உன் பிரம்ம!”
“எங்க, என்னைப் பாரு.”
பூங்கொடியின் கன்னத்தில் கை வைத்துத் தன் பக்கம் இழுத்தான். தட்டி விட முயன்றவளை உதாசீனம் செய்து அந்தக் கண்ணுக்குள் ஊடுருவி இதயத்தைத் தொட்டு வந்தவன், “ரொம்பத் தேடி இருக்க போல…” குறும்பாகக் கண் சிமிட்டினான்.
“கையை எடு!”
“எதுக்கு இப்புடித் தட்டி விடுற?”
“இன்னொரு தடவை என்னைத் தொடாத!”
“ரொம்பத்தான். போனைப் போட்டுக் கூப்பிட்டுக் கொஞ்சுனது எல்லாம் மறந்து போச்சு.”
“அதான், வேலை முடிஞ்சுதுன்னு கழற்றி விட்டுட்ட.” என்றதும் நடையை நிறுத்தியவன் முன்னே சென்று கொண்டிருந்தவள் கைப்பிடித்துத் தன் பக்கம் திருப்பினான்.
அவன் செயலை எதிர்பார்க்காது, நிலை தடுமாறி அவன் நெஞ்சில் மோதி நின்றவளைக் கடுமையாக முறைத்துக் கொண்டிருந்தான். மாமன் முறைப்பில் வார்த்தையின் வீரியத்தைப் புரிந்து கொண்டு மருகி நின்றாள். சற்றும் தன் பார்வையின் கடுமையை மாற்றிக் கொள்ளாது, இருக்கும் இடைவெளியைக் குறைத்து அவளை நெருங்கி நின்றான். பூங்கொடியின் நெஞ்சுக்கூடு பயத்தில் ஏறி இறங்கியது.
ஆழமாகப் பார்த்து, “அநியாயத்துக்குப் பொய் சொல்ற. இப்பதான் தட்டுத் தடுமாறித் தொட்டு முத்தம் குடுக்கவே ஆரம்பிச்சேன். அதுக்குள்ள அதுக்கு முட்டுக்கட்டையைப் போட்டுட்டு, வேலைய முடிச்சிட்டன்னு அநியாயமாப் பேசுற. நீ பேசறதக் கேட்டு எனக்குள்ள இருக்க கன்னிப் பையன், ‘அடப்பாவி! என்னை ஏமாத்திட்டியாடா’ன்னு கேட்டா என்னாடி பதில் சொல்வேன்…” என்றான் விரைப்பாக.
“உஃப்!”
“என்னா உஃப்? ஒழுங்கா என் கன்னிப்பையன் கிட்ட நீ இன்னும் கன்னிப்பையன் தான்டான்னு சொல்லு. அந்தப் பரதேசிப் பையன் என்னை நம்ப மாட்டான்.”
“கிறுக்கு!”
“இந்தாடி, சொல்லிட்டுப் போ…”
அவள் நிற்காமல் நடக்க, இவன் நடக்காமல் ஓடினான். தொடத் துடிப்பவனின் கையைத் தட்டி விட்டு முறைக்க, எட்டிப் பிடித்து அணைப்பதில் குறியாக இருந்தான். சிட்டுக்குக் கை கால் முளைத்த குறையாகப் பறந்தோட நினைப்பவளின் பின்னே வந்து கொண்டிருந்தவன், வலது கையை அவள் வலது கைக்கு நடுவில் நுழைத்து நடுவயிற்றில் ஐவிரல்களைப் பதித்துத் தன் பக்கம் இழுத்தான்.
சற்றென்று நடந்த நிகழ்வில் ஒன்றும் செய்ய முடியாது, அவன் உடலோடு தன் பின்உடலை ஒட்ட வைத்து ஒன்றி நின்றவள், வயிற்றில் குடி கொண்டிருக்கும் கையை விடுவிக்கத் துள்ளிக் குதித்தாள். காதலியின் தேக வாசனையில் உற்சாகம் பிறப்பெடுக்க அவள் கழுத்தோடு முகம் புதைத்து,
“பொய்ய நெஜமாக்குவோமா?” கேட்ட, வார்த்தைகள் யாவும் அவள் அணிந்திருந்த காதணியோடு மின்னியது.
மீசைக் குறுகுறுப்பும், அவன் இதழ் இம்சையும் சிறைப்பட்டவளை நொந்து போகச் செய்தது. அதை இன்னும் சோதிக்கும் விதமாக மேல் ஆடையைத் தாண்டி மற்றொரு கையையும் இடைக்குள் குடிபுக வைத்தான். வெடுக்கென்று நடந்து கொண்டிருந்த இடை பச்சக்கென்று பசை போட்டு ஒட்டிக் கொண்டது.
காய்ந்த பூவும், வேலை செய்த அலுப்பில் உண்டான வேர்வையும், கலைந்திருந்த கூந்தலும் காதல் போதையை அதிகரித்தது. போதாக்குறைக்குத் தன்னால் கசங்கிய ஆடையை, இன்னும் கசக்கும் முயற்சியில் இறங்கியவன் வீதி என்பதை மறந்தான். இவன் நேரம் வேறு யாரும் அங்கு இல்லை.
முதுகில் மூக்கை நுழைத்து, விடுபட்ட நாள்களுக்கும் சேர்த்து இதழ் முத்தம் பதிக்கச் செய்வதறியாது நின்று கொண்டிருந்தாள். தனக்குள் சுருட்டிக் கொண்டவன், கை விரல்களை அசைத்து வயிற்றுச் சதைகளைக் கைக்குள் அடக்கினான். அதுவரை, மெதுவாகத் தடுத்துக் கொண்டிருந்தவள் வேகத்தை அதிகரிக்க, கிடைத்த நெருக்கத்தைத் தொலைக்க விரும்பாது அந்த வேகத்தையும் தாண்டி வேகம் எடுத்தான்.
காலையில், ஒரு முத்தத்திற்கு வெறியாகிப் பாய்ந்தவள், கணக்கில்லாத முத்தங்கள் தன் மேனியில் பதிவதை உணர்ந்து எரிச்சலுற்றாள். முத்தம் அவனை மோகத்தைக் கயிறு கட்டி இழுத்தது. அதன் பலம் தெரியாது இணங்கிச் செல்ல ஆரம்பித்தவன் கைகள் தளர ஆரம்பித்தது. இதுதான் சமயம் எனப் பட்டென்று விலகியவள், அவன் மார்பில் கை வைத்து அசுர வேகத்தில் தள்ளிவிட, அவள் கை பலம் தான் புத்தியைத் தெளிய வைத்தது.
பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் உதட்டைக் குவிக்க, வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு நடையைக் கூட்டினாள் பூங்கொடி. இருவருக்கும் நடுவில் இடைவெளி உண்டானது. அத்தை மகளின் நடையை ரசித்துக் கொண்டே பின்னால் சென்றவன், “ஏய்!” என ஓடிச் சென்றான். அவன் பிடிக்க வருவதற்குள், கால் தடுக்கி விழச் சென்றவள் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தாள்.
அவள் பின்னே நடந்து கொண்டிருந்தவன் அப்படியே நின்று இடுப்பில் கைவைத்து முறைக்க, தார் சாலையின் மச்சமான சிறு பள்ளம் பல்லைக் காட்டியது.
***
பூங்கொடி அவனை அலைய வைத்து இன்றுடன் பத்து நாள்கள் முடிந்துவிட்டது. இந்தப் பத்து நாளும் பத்து அவதாரங்களை எடுத்து இருக்கிறான் சிங்காரவேலன். இன்னும் எத்தனை அவதாரங்களை எடுத்தால் அவன் மனம் கவர்ந்தவள் மனம் கனியுமோ!
“யாருமா உள்ள? விடிஞ்சு ரெண்டு மணி நேரம் ஆகுது. சட்டுனு கதவைத் தொறந்தீங்கன்னா, சாமியோட தரிசனத்தைப் பார்த்துருவேன்.”
இன்று வேலைக்குச் செல்லவில்லை பூங்கொடி. அவளுக்கு விடுப்பென்று தெரியாது விடிந்ததும் வந்து அமர்ந்தவன், இன்னும் திறக்காத கதவைத் தட்ட ஆரம்பித்து விட்டான். முழித்துக் கொண்டுதான் படுத்திருந்தாள் பூங்கொடி. அவன் புலம்பல்கள் அனைத்தும் காதில் விழுந்தது. எண்ணங்கள் இரண்டு நாள்களுக்கு முன் நடந்த சம்பவத்தை வட்டமிட்டது.
அத்தை மகளின் காலைத் தடுக்கிவிட்ட பள்ளத்தின் மீது கடும் கோபம் கொண்டவன், அதை மட்டும் பழி வாங்காமல் மொத்தத் தார் சாலையையும் பழிவாங்கி விட்டான். இவன் பழி வாங்கலில் பலியானது நீலகண்டனின் பணம். மொத்த ஊருக்கும் சேர்த்துச் சுடச்சுட சிமெண்ட் கலவையைக் கொட்டிச் சாலை அமைத்து விட்டான். சாலை போடும் வேலை தூக்கம் கெடுக்கும் வேலை. அதன் சத்தம் யாரையும் தூங்க விடாது. ஆனால், பூங்கொடி மட்டும் சுகமாகத் தூங்கினாள்.
ஊரையே அதிர விட்டு ரோட்டைச் சீரமைத்தவன், அவள் இருக்கும் தெருவில் ஒரு சின்னச் சத்தம் வரவிடவில்லை. அரசாங்கம் செய்ய வேண்டியதைத் தனி ஒருவனாகச் செய்வதால், பெரும் லாபம் ஈட்ட அவனை நம்பி வந்தவர்கள் திண்டாடிப் போனார்கள். இரவோடு இரவாகத் தெருவைச் சீரமைக்க வேண்டும். ஆனால், சிறு சத்தம் இல்லாமல்.
விடிய விடிய இவனோடு போராடிவிட்டு, விட்டால் போதும் என்று அவர்கள் ஓடிவிட, விடிந்து கதவைத் திறந்தவளுக்கு ஆச்சரியம்! மெல்ல வீட்டை விட்டு வெளியில் வந்தவள் தலையை இங்கும் அங்கும் திருப்பினாள். அவள் நினைத்தது போல் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை சிமெண்ட் கலவை பளபளத்துக் கொண்டிருந்தது. அன்றைய நாள் முழுவதும் ஊரே சிங்காரவேலனைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தது.
“இந்தா கெழட்டுக் கெழவி, நீ முழிச்சிகிட்டுத் தான் கெடக்கன்னு தெரியும் எனக்கு. நீயா கதவத் தொறந்தா இந்தக் கதவு கதவா இருக்கும்.”
பேரன் கொடுத்த மிரட்டலில், புலம்பிக் கொண்டே கை ஊன்றி எழுந்தவரைத் தடுத்தவள் தானே திறந்தாள். தெய்வீகக் கோபுரத்துக்கு நடுவில், கருவறையில் வீற்றிருக்கும் அம்மனைத் தரிசிக்க எவரேனும் கதவைத் திறக்க வேண்டும். அந்த விதியை மாற்றித் தெய்வமே கதவைத் திறந்து தரிசனம் கொடுத்தது போல் கண்களை விரித்தான்.
இமை முடிகள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் விரிந்த நிலையில் மலைத்து நிற்க, கண்ணுக்குள் இருக்கும் கருவிழியில் அவள் உருவம் அழகாகத் தெரிந்தது. மீசைக்குக் கீழ் அளவெடுத்துச் செய்த அவன் இதழில் அளவில்லாத புன்னகை. ஆங்காங்கே அரும்பிய தாடியில் புல்லரிப்பு. அத்தனையும் அவளுக்கென்று புரிய வைக்க, மனத்தில் பதிய வைக்கத்தான் எண்ணம் இல்லை பூங்கொடிக்கு.
“உனக்கு வேற வேலையே இல்லையா? எதுக்கு இவ்ளோ வெள்ளென வந்து ஒக்காந்து கெடக்க.”
“அய்யய்யோ லாலா…”
படக்கென்று எழுந்து அவளைக் கவ்விக் கொள்ளப் பரபரக்க, பயந்து இரண்டு அடி பின்னால் சென்று நின்றாள் பூங்கொடி. அந்த இரண்டு அடியை ஒரே தாவாகத் தாவி, “தூங்கி எழுந்தா கூட இவ்ளோ அழகா இருக்கியே. எங்க அத்தை என்னா வரம் வாங்கி உன்னப் பெத்துச்சோ…” திருஷ்டி கழித்துப் போட்டான்.
பத்து விரல்களும் படபடவென்று உடைந்து திருஷ்டியைக் கழிக்க, “என்னாதான் நெனச்சிட்டு இருக்க உன் மனசுல. நீ பாட்டுக்கு ரோடு போடுற, பந்தல் போடுற. பார்க்குற எல்லாரும், என் மேல உசுரையே வச்சிருக்க உன்னைக் கொடுமைப் படுத்துற மாதிரிப் பேசிட்டுப் போறாங்க. எதுவும் வேணாம்னு வந்தவளை, வம்படியா தொந்தரவு பண்ணிகிட்டு ஊரெல்லாம் நல்லவன் வேஷம் போட்டுக்கிட்டு இருக்க.” கடுகடுக்க, அவன் பார்வை பனியாரத்தில் மொய்க்கும் ஈ போல் வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
கேட்க வேண்டிய கேள்விகளைக் கேட்க, வெகு நேரம் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வந்தவளை அந்தப் பார்வை தொந்தரவு செய்தது. அடுத்தடுத்துக் கேட்க வேண்டிய கேள்விகளைக் கேட்க முடியாமல், அங்கும் இங்கும் தலையைத் திருப்பி அவன் பார்வை வித்தையை விரட்டியடிக்க முயற்சித்தாள். எதற்கும் அசைந்து கொடுக்காமல் அப்பட்டமாக சைட் அடித்துக் கொண்டிருந்தான்.
“உங்கிட்டப் பேசறது வேஸ்ட்!” என்று விட்டுக் கதவைச் சாற்றியவளுக்குப் படபடவென்று துடிக்கும் மனத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
பின்பக்கம் ஓடினாள். தொட்டியில் நிரம்பி இருந்த தண்ணீரைக் கை நிறைய அள்ளி, முகத்தில் தெளித்தவளை அலேக்காக அள்ளினான் சிங்காரவேலன். தண்ணீரில் தவறி விழுந்த தவளை போல் கை, கால்களை அசைத்துக் கொண்டிருந்தவளை ஒரு குலுக்குக் குலுக்கிக் கைக்குள் அடக்கிக் கொண்டான். விழுந்து விடப் போகும் பயத்தில் ஒடுங்கிப் போனவள் விழிகளைத் திறந்தாள்.
சுழற்றிவிட்ட பம்பரம் போல், தாமரைக்குள் இருந்த விதைக் கண்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்க, காதலிக்கத் துவங்கினான் அதன் அசைவுகளை. வெகு நாள்களுக்குப் பிறகு இடை எனும் அங்கத்தில் கையெனும் சிறகுகள் பறந்து கொண்டிருக்கிறது. வயிற்றுச் சதைகளில் குடியிருந்த சிறு முடிகள் சிறகுகளின் படபடப்புத் தாங்காமல் நெட்டையாக நின்று எதிர்ப்புத் தெரிவித்தது. பின்னங்கால்களைச் சுற்றி இருந்த மற்றொரு கை, இறுகப் பிடித்து அதன் கனத்தை அளந்து கொண்டிருந்தது.
அவள் விழிகளை விட்டுத் தன் விழியை அகற்றிக் கொள்ளாமல், மெல்ல நகர்ந்து துணி துவைக்கும் கல் மீது அமர்ந்து அவளைத் தன் மீது அடக்கிக் கொண்டான். விடியற்காலைப் பொழுதும் வேர்த்துக் கொட்டியது பூங்கொடிக்கு. சில்லென்ற காற்று அவளுக்கு உதவாமல் போனது. விக்கித்த உணர்வுகள் கட்டுப்பாட்டை இழந்தது.
வகிடு எடுத்த தலைமுடியில் ஆரம்பித்த அவன் காதல் ஊர்வலம், மெல்ல நகர்ந்து புருவம் எனும் சிறு பாம்பை வந்தடைய, நெருங்கி நின்ற இரு புருவமும் கொத்தி விழுங்க முயன்றது. அதில் விழாது தப்பித்து ஓடி வந்தவன், கண் எனும் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து விட்டான். அதுவரை ஒட்டாத இமைகள், அவன் பார்வை பட்டதும் ஒட்டி மொத்தமாக விழுங்கிக் கொள்ள, உள்ளே விழுந்தவன் சென்று கொண்டே இருந்தான்.
இதயத்தைத் தாண்டி அவன் வீற்றிருக்கும் இடம் வரை தொட்டுவிட்டு மீண்டு வந்தவன், கூர்மையான சறுக்கு மரத்தில் விழுந்தான். எழுந்து நிம்மதிப் பெருமூச்சு விட நினைத்தவனை வெடி நிறைந்த உதட்டுத் திரி அவனைத் தீண்டியது. அதில் தூண்டப்பட்டவன் உணர்வுகளை அடக்க வழி தெரியாது, உதட்டோடு உதடு வைத்து வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த மோகத்தை வெடிக்க வைத்தான்.
எடுத்ததுமே வேகத்தைக் கையாண்டவன், பத்து நாள்கள் ஆகத் தவம் இருந்த உதட்டிற்குப் பெரும் படையல் இட்டுப் பசியாற்றினான். குழந்தை போல் தூக்கி வைத்துப் பேசுவான் அல்லது வம்பிழுப்பான் என்று எதிர்பார்த்தவள், கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு அவன் வேகத்தைத் தாக்குப் பிடித்தாள். அல்லி உதடுகள் அந்தக் கயவனின் உதடுகளோடு ஒன்றி, ஒன்றாகச் சங்கமித்து எச்சிலோடு விளையாடியது.
இடையில் இருந்த கையும், பின்னங்கால்களில் இருந்த கையும், மோகம் தாங்காது இறுக்கிப் பிடித்து அவள் உடலை வதைக்க, கன்னிப் போகும் அளவிற்குச் சிவந்து போனது. வலியெடுக்கும் உடலுக்கு முத்தமே மருந்தானது. வலியில் துடிப்பதும், அவன் கொடுக்கும் முத்தத்தில் அடங்குவதுமாகப் பூங்கொடியின் மோகம் இருந்தது.
எதைப் பற்றியும் கவலை கொள்ளாது, அவள் விருப்பத்தையும் தெரிந்து கொள்ளாது நாடியவன், தடுக்காமல் இருக்கும் அவள் செயலில் சுதந்திரமாகக் கையாள ஆரம்பித்தான். தூக்கி வைத்துக் கொண்டிருந்தவளை, மடிமீது சாய்த்து விட்டுப் பின்னங்கால்களுக்குப் பின் இருந்த கையை விடுவித்தவன், கழுத்துக்குப் பின் விரல் நுழைத்து இறுக்கிப் பிடித்தான் கூந்தலை. அதில் முகம் சுணங்கியவள் நிலையை, அரைகுறையாக மூடியிருந்த கண் வழியாகக் கண்டு கொண்டு இதழை இழுத்துச் சுகம் கொடுக்க, அணைக்காமல் இருந்த கைகள் மெல்ல உயர்ந்து அவன் கழுத்தோடு சுற்றியது.
தொடாமல் இருக்கும் பொழுதே அவன் ஆட்டம் அடங்காது. தொட்டுவிட்ட பின், அவன் நிலை அவனே அறியவில்லை. தோல் மேல் மறு தோலாக மாறி இருந்த ஆடையைக் கிழிக்கும் அளவிற்குக் கசக்கியவன், அவள் மனத்தையும் கசக்கி விட்டே வேகத்தைக் குறைத்தான். இருவருக்குள்ளும் ஒன்று போல் சுற்றிக் கொண்டிருந்த மூச்சுக்கு வழி கிடைத்தது.
மோகத்திற்காக வேகமெடுத்தவன், தன் ஆசைக்காக நிதானம் கொண்டான். சிவந்து போன தசைகளை வருடிவிட்டுச் சமாதானம் செய்தவன், கைவிரல்களில் சுற்றி இருந்த கூந்தலுக்கு விடுதலை கொடுத்தான். தாக்கம் குறைவதை அறியாது அவனோடு ஒட்டி இருந்தவளுக்கு, முத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர விருப்பமில்லை. நிதானமாக இருந்திருந்தால் ஆசை கொண்ட மனத்தைக் கண்டித்து இருப்பாள். அவன் வசம் இருந்தவள், எதையும் உணரும் சூழ்நிலையில் இல்லாது, நிதானித்த முத்தத்தோடு பயணிக்க ஆரம்பித்தாள்.
அதுவரை தாரை வார்த்துக் கொடுத்த இதழை மீட்டெடுத்து, மெல்ல அசைத்து அவன் உதட்டைக் கவ்விக்கொள்ள முயன்றாள். வேகத்தைக் குறைத்ததும் நிதானம் கொண்டவன், அவளாகவே நெருங்கி வருவதில் உற்சாகம் கொண்டு அவளுக்குச் சொந்தமான உதட்டை அவளிடமே கொடுத்து விட்டான். அவனைப் போல் ஆத்திரமாகக் கையாளாமல், நிதானமாகப் பிரிந்திருந்த ஏக்கத்தைத் தீர்க்க ஆரம்பித்தாள்.
காதலியின் முத்தத்தில் மனம் நிறைந்தது சிங்காரவேலனுக்கு. மயிலிறகைப் போல் பத்து விரல் கொண்டு அவள் தேகத்தை வருடிவிட்டு உணர்வைத் தூண்டி விட்டான். அவை அவளுக்குள் ஊடுருவி வேலை செய்ய ஆரம்பித்தது. அவனைப் போல் இறுக்கமாகப் பிடிக்காமல், பின்னந்தலை முடியை மென்மையாகப் பிடித்து முத்தத்தை நீடித்தாள். சுகம் கண்டு சொக்கிப் போனான் சிங்காரம். தன் நிலை அறியாது தன்னவனோடு ஒட்டி உறவாடியவள் செவியில்,
“பூங்கொடி!” என்ற வார்த்தை விழுந்தது.
பட்டென்று விழி திறந்தவள், செய்து கொண்டிருக்கும் செயல் அறிந்து உதட்டை உருவிக் கொள்ளப் போராட, அவள் விலகும் நேரம் கவ்விப் பிடித்து முத்தத்தைத் தொடர முயன்றான். நிலவரம் புரிந்து தன்னிலை தெளிந்து, வெடுக்கென்று எழுந்தவள் எச்சிலில் நனைந்திருந்த உதட்டைத் துடைத்துக் கொண்டு ஓடி விட,
“கெழட்டுக் கெழவி…” பல்லைக் கடித்தான்.
ஒரே ஓட்டமாக ஓடிவந்து அறைக்குள் நுழைந்தவள், சுவரில் சாய்ந்து கொண்டு மூச்சு வாங்க ஆரம்பித்தாள். துடிப்பு அடங்காது ஆடிக் கொண்டிருக்கும் அதரமும், வேகம் குறையாது வெடவெடத்துக் கொண்டிருக்கும் இதயமும், சற்று முன்னர் நடந்ததைப் படம் போட்டுக் காட்டியது. ‘எப்படி?’ என்ற ஆராய்ச்சிக்குள் இறங்கிப் போனவள் வெட்கிப் போனாள். அப்படியே, சுவரோடு சுவராகத் தன் உடலை ஒட்டவைத்து அமர்ந்தவள் கால் முட்டியில் முகம் புதைத்தாள்.