Loading

அத்தியாயம் 6

மாலை போல வேலை முடித்து வந்த இளையவர்களிடம் பேசுவதற்கான வாய்ப்பை எதிர் நோக்கி காத்து இருந்தார் விநாயகமும் மல்லிகாவும்.

பரிதி எப்பவும் போல தன் அன்னையை காண தோட்டத்து பக்கம் சென்று விட, இனியனோ எப்பவும் போல “இல்லை ஸ்வீட்டி.. அப்படினா இல்லை..” என்று யாருடனோ கெஞ்சுவது போல பேசிக் கொண்டே செல்ல, மல்லிகா அதனை கவனித்து அருகில் இருந்த விநாயகத்தின் தோளை இடித்து, ” பார்த்தீங்களா.. நான் தான் சொன்னேன்ல.. ” என்பது போல கண் ஜாடைக் காட்டினார்.

அவர் எதுவும் பேசவில்லை.. அவருக்கு தான் தெரியுமே.. இனியனைப் பற்றி.. இவளுக்கு சொன்னாலும் புரியப் போவது இல்லை.. அதனால் அமைதியாக இருப்பதே மேல்.. என்று நினைத்து பரிதியிடம் பேசுவதற்கு சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்.

வைஷ்ணவி, கையில் சில கோப்புகளுடன் உள்ளே வந்தாள்.

வீட்டினுள் இருக்கும் அலுவலக அறையில் அதனை பத்திரப் படுத்தி விட்டு, அவளது அறைக்குச் சென்றாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த மல்லிகா, அவளது அறைக்குள் நுழைந்ததை பார்த்ததும், கணவரிடம் “நான் போய் அவகிட்ட பேசுறேன். நீங்க பரிதி வந்ததும் அவன்கிட்ட பேசுங்க..” என்று சொல்லிவிட்டு வைஷுவை காணச் சென்றார்.

விநாயகமும் ஒரு பெருமூச்சுடன் பரிதிக்காக காத்து இருந்தார்.

வழக்கம் போல, பரிதி தன் தாயை சந்தித்து அன்று நடந்த நிகழ்வுகளை எல்லாம் அவரிடம் பகிர்ந்து கொண்டான்..

இதில் அந்த சஞ்சய் பற்றி அவன் எதுவும் கூறவில்லை.. ஒரு வேளை அவரிடம் கூறினால், அவர் எதுவும் தங்களை நினைத்து பயம் கொண்டாள் தேவை இல்லாமல் அவருக்கு தான் மன உளைச்சல் என்று நினைத்து அவனைப் பற்றி பகிர்வதை முற்றிலுமாக தவிர்த்துக் கொண்டான்..

“சரிம்மா.. வாங்க உள்ள போகலாம்..” என்று அழைத்திட,

அவரோ, “முதல்ல நீ போ ப்பா.. கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு வரேன்.. ” என்று கூற,

“சரிம்மா.. சீக்கிரமா வாங்க..” என்று கூறி விட்டு, வீட்டிற்குள் நுழைய, அதுவரை கூடத்தில் ஷோபாவில் ஏதோ யோசனையுடன் அமர்ந்து இருந்த விநாயகம் அவனின் காலடி சத்தம் கேட்டதும் திரும்பிப் பார்த்தார்.

அவனும், அவரைப் பார்த்து ஒரு லேசான புன்னகையை சிந்தி விட்டு அவனது அறை நோக்கிச் சென்றான்..

சிறிது நேரம் கழித்து, மாடியேறி அவனது அறை நோக்கிச் சென்றார்..

அவனது அறையை அடைந்த பின்னும் ஒரு வித தயக்கத்துடனே அறையின் வாசலிலேயே நின்று இருந்தார்.

பின்னர் ஒரு பெருமூச்சை விட்டவர், அவனின் அறைக் கதவை தட்ட, சத்தம் கேட்டு கதவை திறந்தான் பரிதி.

அப்பொழுது தான் குளித்து விட்டு வந்து இருப்பான் போல, உடை அணிந்து விட்டு, தலையை துவட்டிக் கொண்டு இருந்து இருப்பான் போலும்..

தனது மாமனைப் பார்த்துவுடன் “என்ன மாமா.. சொல்லுங்க..” என்றான் மீண்டும் விட்ட வேலையை தொடர்ந்தபடி..

“பரிதி.. உங்கிட்ட ஒரு விஷயம் பேசணும் ப்பா..” என்று தயக்கத்துடனே ஆரம்பித்தார்.

அவரது தயக்கத்தை பார்த்தவனுக்கு ஒரு வித நெருடல் தான் தோன்றயது..

“இதுநாள் வரை அவர் தன்னிடம் இது போல பேசியது இல்லையே… ” என்று யோசித்தவன், அவரை அறைக்குள் வரும்படி அழைத்தான்..

உள்ளே வந்தவரிடம் “அங்க உக்காருங்க மாமா..”என்று அருகே போடப்பட்டிருந்த ஷோபாவை காட்ட, அவரும் அங்கே அமர்ந்தார்.

“சொல்லுங்க மாமா.. என்ன விஷயம்..” என்று அவன் கேட்க,

“அது வந்து பரிதி…” என்று தயக்கமாக  இழுத்தவரிடம், “தயங்காமல் சொல்லுங்க மாமா.. என்கிட்ட என்ன தயக்கம்..” என்று கேட்டான் அவன்.

அவரும் பெருமூச்சுடன், தயக்கத்தை வெளியே தள்ளி, “உங்களுக்கு பொண்ணு பாக்க தரகர் கிட்ட சொல்லி வச்சி இருந்தோம். அது உங்களுக்கு தெரியும் தானே..” என்று விநாயகம் கேட்டார்.

“ஆமா.. தெரியும்..” என்றான் யோசனையுடன்.

“நம்மளும் சொல்லி வச்சி ரொம்ப நாள் ஆச்சு.. இது வரைக்கும் உங்க ஜாதகத்துக்கு பொருந்துற போல ஒரு பொண்ணு கூட அமையல..” என்றார் அவர்.

“சரி.. அதுக்கு..”மேலும் அவர் என்ன தான் சொல்ல வருகிறார் என்று அவரது பேச்சைக் கவனித்தான்.

“ஒரு வேளை உங்களுக்கான பொண்ணு, நம்ம வைஷுவா இருக்கலாம்ல ப்பா..” என்றார் இப்பொழுது சற்று தயக்கத்துடன்.

“என்ன சொல்ல வரீங்க மாமா நீங்க.. முழுசா சொல்லி முடிங்க..” என்றான் அவனும் பொறுமையாக.

“உங்களுக்கு வெளிய பொண்ணு பார்த்ததுல எந்த பொண்ணும் அமையல. ஒரு வேலை வைஷு தான் உங்களுக்கான பொண்ணா இருக்குமோ.. அதுனால தான் வெளிய எங்கயும் அமையலோனு ஒரு கேள்வி உள்ளுக்குள்ள. அதான் உன்கிட்ட பேசிட்டு உனக்கு வைஷுக்கும் கல்யாண ஏற்பாடு பண்ணலாம்னு..” என்று முடிக்கக் கூட இல்லை..

அதற்குள் பரிதி, “நிறுத்துங்க மாமா.. நான் அம்மாகிட்ட ஏற்கனவே இதை பத்தி சொல்லிட்டேன். அப்புறம் ஏன் மறுபடியும் இதை பத்தி கேக்குறீங்க நீங்க. எனக்கு வைஷு மேல அந்த மாதிரி எண்ணம் துளி கூட இல்லை. அப்புறம் எப்படி எங்க வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும்.  அதே மாதிரி தான் அவளுக்கும். எனக்கு பொண்ணு கிடைக்கலனா கூட பரவாயில்லை. நான் இப்படியே இருந்துட்டு போறேன். தயவு செய்து இனி இந்த பேச்சை மட்டும் எடுக்காதீங்க.” என்றவன் கை எடுத்துக் கும்பிட, அவருக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது..

இதற்கு தானே அவர் மீண்டும் மீண்டும் கூறினார் தன் மனையாளிடம்..

இப்பொழுது இவருக்கு தான் தர்மசங்கடமான நிலைமை.

“பரிதி, உன் மனசு புரியாம உன்கிட்ட  இதை கேட்டு இருக்கக் கூடாது.. என்னை மன்னிச்சிருப்பா.” என்றார் உண்மையான வருத்தத்துடன்.

“மன்னிப்பு எல்லாம் வேண்டாம் மாமா.. விடுங்க.” என்றான் சிறிதாக முளைத்த புன்னகையுடன்.

“என்கிட்ட கேட்ட மாதிரி, வைஷு கிட்ட கேட்டுறாதீங்க.. என்னை போல அமைதியா இருக்க மாட்டா.. பேய்யாடம் ஆடிருவா..” என்றான் சிரித்தபடி.

” உங்க அத்தையை நெனச்சா அதான் எனக்கு பயமா இருக்கு.. ” என்றார் முழி பிதுங்கிய படி.

“என்ன மாமா சொல்றீங்க..” என்றான் விழி விரித்து.

“உங்க அத்தை அவகிட்ட தான் கேக்க போய் இருக்கா..” என்றார் பயத்துடன்..

“சரியா போச்சு. ரெண்டு பேரும் பேசி வச்சி கேக்குறீங்களா.. அத்தை பாவம். போய் என்னனு பாருங்க..” என்று அவரை அனுப்பி வைத்தான் சிரித்தபடியே..

வெளியே வந்த விநாயகம் நேராக சென்றது என்னவோ தன் மகளின் அறைக்கு தான்.

அங்கு அடையும் முன்னரே, சத்தம் வெளியே கேட்கத் தொடங்கி விட்டது.

“அடியேய்.. மல்லிகா.. நீதானா இதுக்கு ஐடியா கொடுத்த.. உனக்கு நல்லா வேணும்டி..” என்று மனதில் நினைத்தவர் அவளின் அறையை அடைந்ததும் அறையின் கதவை தட்ட, உள்ளே தாழப்பாள் போடப் பட்டிருந்தது..

“வைஷு.. அம்மாடி வைஷு.. கதவை திறம்மா..” என்றார்.

சிறிது நேரத்தில் கதவு திறக்கப் பட, கண் முன்னே வைஷ்ணவி காளி தேவியாய் நின்று இருந்தாள்.

உள்ளே வந்தவர் அறையை பார்க்க அறையோ அலங்கோலமாக காட்சி அளித்தது.

தன் மனைவியைத் தேட, அவரோ மூலையில் ஒடுங்கியபடி அமர்ந்து இருந்தார்.

மனைவியின் கோலத்தைப் பார்த்தால், அவருக்கே சிரிப்பு தான் வந்தது. 

இருந்தாலும் தான் சிரித்தால் மேலும் வருத்தப்படுவாள் என்று அதனை காட்டிக் கொள்ளாது தன் மகளிடம், ” என்னம்மா இது.. ரூம் இப்படி பண்ணி வச்சி இருக்க. எதுக்கு இப்படி.. ” என்று ஒன்றும் அறியாதவர் போலக் கேட்க,

“என்ன தைரியம் இருந்தா எனக்கும் பரிதி மாமாக்கும் கல்யாண ஏற்பாடு பண்ணுவேன்னு சொல்லுவாங்க.. எனக்கு அதுல கொஞ்சம் கூட விருப்பம் இல்ல. நான் அப்படி அவரை நெனச்சி பாக்கவும் இல்லை. தேவை இல்லாம இந்த மாதிரி யோசிச்சு,எங்க ரெண்டு பேரு வாழ்க்கையையும் சீரழிக்க பாக்குறாங்க..” என்று ஆவேஷம் குறையாமல் பேச,

“சரிம்மா.. அவளுக்கு அந்த மாதிரி சின்ன ஆசை.  அதான் உங்கிட்ட வந்து கேட்டுட்டா.. நீ கொஞ்சம் அமைதி ஆகு.. இனி உங்க அம்மா இந்த பேச்சை எடுக்க மாட்டா. உங்க அம்மா என்ன.. யாருமே எடுக்க மாட்டோம்..” என்று அவளிடம் வாக்குறுதி போல கொடுத்தவர், மனைவியை தங்களின் அறைக்கு அழைத்துச் சென்றார்.

அறைக்கு வந்த பிறகும், இன்னும் அவரின் பயம் தெளியவில்லை.

“என்ன நம்ம மக பேயாட்டம் ஆடி இருப்பா போல..” என்றார் சற்று நக்கலுடன்.

“இன்னைக்கு முழுசா சந்தரமுகியா மாறி இருக்குற நம்ம மகளை பார்த்தேன்..” என்றார் அந்த காட்சியை மனதினில் கொண்டு வந்து.

“இந்தா பாருடி.  உன் பேச்சை கேட்டு எனக்கும் சங்கடமான நிலைமை தான். அவன் எப்பவும் பெரிவங்களுக்கு மரியாதையை கொடுக்கிறனால என்னைத் திட்டல. ஆனால் கண்டிப்பா சொல்லிட்டான். இனி இந்த பேச்சை எடுக்கக் கூடாதுனு. பேசாம உன் வேலையை மட்டும் பாரு இனி. தேவை இல்லாத கற்பனை கோட்டையைக் கட்டாத..” என்றார் கண்டிப்புடன்.

“அய்யயோ.. இனி பேசவா மாட்டேங்க.. ” என்றார் தன் மகளை நினைத்து..

அவரும் சரி என்றவாரு கிளம்பிச் சென்று விட்டார்.

****************

மறுநாள் மீண்டும் காமாட்சி பாட்டி வீட்டிற்கு சென்று இருந்தாள் நிரஞ்சனா.

“பாட்டி.. பாட்டி..” என்று அழைத்தவாரு உள்ளே செல்ல,

அவரோ அடுக்களை முன் அமர்ந்து இருந்தார்.

“என்ன பாட்டி.. எந்திரிச்சி உக்காந்துட்ட போல.  சரி ஆகிருச்சா உடம்பு இப்போ..” என்று கேட்டுக்கொண்டே அவரின் அருகினில் வந்து அமர்ந்து கொண்டவள், அவர் செய்த வேலையை இவள் செய்ய ஆரம்பித்தாள்.

“ம்ம். பரவாயில்லைத்தா.. இப்போ. நேத்து நீ கஞ்சி வச்சி கொடுத்து சாப்பிட வச்சிட்டு போன பிறகு நல்லா தூங்கிட்டேன். காலைல எந்திரிக்கும் போது உடம்பு செண்டு போல இருந்துச்சு.. அதான் இன்னைக்கும் கஞ்சியே வைப்போம்னு வைக்கிறேன்..” என்றார் அவளிடம்.

“தள்ளு. நீ அங்க போய் உக்காரு. நான் பார்த்துகிறேன்.. ” என்று அவரை தள்ளி உக்காரச் சொல்லி இவளே நேற்று போல எல்லா வேலைகளையும் அவருக்கு பார்த்துக் கொடுத்தாள் .

அவரும் சற்று நகர்ந்து அமர்ந்த படி, அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“என்ன பாட்டி, என்னையவே பார்த்துட்டு இருக்க..” என்று அவள் கேட்க,

“உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு எப்படி தான் உங்க அம்மாக்கும் அப்பாக்கும் போறதுக்கு மனசு வந்துச்சோ.. என்னத்த சொல்ல.. இப்போ இருக்குற கால கட்டத்துல பொம்பள புள்ளைங்கள பத்திரமா பார்த்துக்க எவ்ளோ கஷ்டப் பட வேண்டி இருக்கு. உனக்கு துணையா உன் தம்பியை தவிர வேற யாரும் இல்லை. இப்படியே எத்தனை காலத்துக்கு இருக்க முடியும். நீயும் கல்யாணம் குழந்தை குட்டினு வாழ வேண்டாமா..” என்றார் அவளைப் பார்த்து பரிதாபத்துடன்.

அவளோ விரக்தியாக புன்னகைதாள்.

“ஏன்த்தா சிரிக்கிற..” என்றார் பாவமாக.

“எனக்கும் ஒரு காலத்துல அந்த ஆசை எல்லாம் இருந்துச்சி.. ஆனால் அம்மா போன பிறகு அம்மா ஸ்தானத்துல இருந்து தம்பியை நான் தான் பார்த்துக்கணும். அதுனால அந்த ஆசை கனவு எல்லாத்தையும் கனவாவே கலைச்சிட்டேன்..” என்றாள் விரக்தியாக.

காமாட்சி பாட்டி அவளையே பார்த்துக் கொண்டிருக்க,

“அம்மாவும் அப்பாவும் இல்லனு நான் நெனச்சி வருத்தப்பட்டது இல்லை. எங்க அம்மா அப்பா நியாபகமா இதோ என் கழுத்துல போட்டு இருக்குற இந்த செயின் இருக்கே. அது போதும். எப்பவும் அவங்க என் கூட இருக்குற எண்ணம் தான் தோணும். அவங்க கூடவே இருந்து எங்களை நல்ல படியா வழி நடத்துவாங்கன்ற நம்பிக்கை இருக்கு எனக்கு. அதுனால அதை பத்தி நெனச்சி நான் கவலைப் பட்டது இல்லை பாட்டி..” என்றாள் புன்னகையுடன்.

அவரும் அவளைப் பார்த்து சிரித்தவாறே, “உன் நல்ல மனசுக்கு உனக்கு ஒரு நல்ல வாழ்கை அமையும். இந்த பாட்டி சொன்னா பலிக்கும் டி.. வேணும்னா நீயே பாரு..” என்றார் கிண்டல் அடித்த படி.

அவளும் அவர் சொன்னதைக் கேட்டு, “ஆஹான். பாக்குறேன் பாக்குறேன்..” என்றபடியே அங்கிருந்து கிளம்பிச் சென்றாள் அவள்.

நித்தமும் வருவாள். 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
11
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்