Loading

அத்தியாயம் 6

 

“த்தூ… என்ன காரியம் டி பண்ணிட்டு இருக்க? கட்டுன புருஷன், பொறந்த குழந்தைன்னு வீட்டுல இருக்குறப்போ, வெளிய எவனோடவோ சிரிச்சு பேசிட்டு இருக்க? ச்சீ, இதெல்லாம் நல்ல குடும்பத்து பொண்ணு செய்யுற காரியமா? தகுதி, தராதரம் பார்க்காம, உன்னை போய் என் மகனுக்கு கட்டி வச்சேன் பாரு என்னை சொல்லணும்!” என்று நீலவேணி கத்தி பேச, முதலில் தன்னைக் குறித்து அவர் பேசியது அருவருப்பை கொடுத்தாலும், இறுதியில் அவர் சொன்னது கோபத்தை வரவழைத்தது.

 

அத்துடன், அங்கு நீலவேணியின் சொந்தங்கள் சிலர் நின்றிருக்க, அனைவரின் முன்பும் தன்னை பேசியதை கீதாஞ்சலியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒருபக்கம் அவமானமாக இருக்க, மறுபுறம் கோபம் அவரின் சிந்தனையை சற்று மழுங்க செய்திருந்தது.

 

“அத்த, என்ன நடந்துச்சுன்னு தெரியாம பேசாதீங்க? நானா வந்து, என்னை தான் உங்க மகனுக்கு கட்டி தரணும்னு கெஞ்சுனேன்? ஒன்னுமில்லாத குடும்பத்துல இருந்த என்னை ஏன் நீங்க தேர்ந்தேடுத்தீங்கன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கீங்களா? உங்களுக்கு, எல்லாரும் உங்க காலடியில இருக்கணும்னு ஆசை. அதை நிறைவேத்திக்க, என்னை உங்க மருமகளாக்குனீங்க!” என்று கீதாஞ்சலி பேச, தன் திட்டத்தை அவள் போட்டுடைத்து விட்டாலும், அது வெளியே தெரியாதவாறு சமாளிக்க, பேச்சை வேறு பக்கம் திசை திருப்பினார் நீலவேணி.

 

“அடிப்பாவி, இப்போ தான் உன் இன்னொரு முகம் தெரியுது. இப்படி பேசி, உன் தப்பை மறைக்கலாம்னு எண்ணமா? நீ உன் இஷ்டத்துக்கு விளையாட என் பையன் வாழ்க்கை தான் கிடைச்சுதா? எல்லாரும் ஏன் சும்மா நிக்குறீங்க? நல்லா கேளுங்க இவளை…” என்று நீலவேணி ஏற்றிவிட, சுற்றி இருந்தவர்களும் கீதாஞ்சலியை கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்.

 

அனைவரின் முன்பும் அப்படி நிற்பது அவமானமாக இருக்க, கீதாஞ்சலியின் கண்கள் கண்ணீரால் நிறைந்திருக்க, அப்போதும் மனமிரங்காத கூட்டத்தினர், “வாயை திறந்து பேசேன்மா. உனக்கும் அந்த பையனுக்கும் எந்த சம்பந்தம்? எப்போ இருந்து இது நடக்குது? கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தேவா?” என்று கேட்க, நீலவேணியும், “அப்படியா தான் இருக்கும். அதனால தான், கர்ப்பமா இருக்கும்போது கூட பிடிவாதம் பிடிச்சு காலேஜுக்கு போனா.” என்று தூண்டி விட்டார்.

 

கீதாஞ்சலிக்கு தான் அருவருப்பாக இருந்தது.

 

நல்லவேளை, குழந்தை உண்டான பிறகு அவர் கல்லூரி சென்றார். இல்லை என்றால், அவன் பிறப்பையும் கூட அல்லவா சந்தேகப்பட்டிருப்பர் என்று விரக்தியாக எண்ணினார் கீதாஞ்சலி!

 

அதற்கு மேல் அவர்களின் குற்றச்சாட்டை கேட்டுக் கொண்டு சும்மா இருக்க முடியாமல், “ஆமா, அவரை நான் காதலிக்குறேன். வீட்டுல எனக்கு கிடைக்காத ஆறுதல், அவருக்கிட்ட எனக்கு கிடைச்சது. என் மனசு அதை விரும்ப ஆரம்பிச்சது. இது தப்புன்னு உணர்ந்து, இதை நீட்டிக்க கூடாதுன்னு தான், அவருக்கிட்ட பேசிட்டு வந்தேன்.” என்று உண்மையை போட்டுடைத்தார் கீதாஞ்சலி.

 

ஆனால், அவர்களோ முற்பாதியை மட்டும் பிடித்துக் கொண்டு, “நீயெல்லாம் ஒரு பொண்ணா? குடும்பத்துக்கே களங்கம் நீ!” என்று அவரை தூற்ற, நீலவேணி ஒருபடி மேலே சென்று, “இனிமே, உனக்கு இங்க இடம் இல்ல. வெளிய போ.” என்று கீதாஞ்சலியை கழுத்தை பிடித்து வெளியே தள்ள, அப்போதும் கீதாஞ்சலி, “நான் என் புருஷனையும் குழந்தையையும் பார்க்கணும்.” என்று கூறினார்.

 

“அவனுக்கு உன்னோட பேச விருப்பம் இல்ல. உன் நிழலை கூட தொடக் கூடாதுன்னு தான், இங்க இருக்காம என் பேரனை தூக்கிட்டு வெளிய போயிட்டான். உன் மூஞ்சில முழிக்க கூட அவனுக்கு விருப்பம் இல்லையாம்.” என்று நீலவேணி பொய்களை அடுக்க, சிந்திக்கும் திராணியை இழந்திருந்த கீதாஞ்சலியும் அதை நம்பி மனம் வருந்தி அங்கிருந்து சென்றார்.

 

எங்கு செல்ல என்று கூட தெரியவில்லை அவருக்கு. மனம் பல எண்ணங்களில் சிக்கி தவிக்க, கால்கள் தானாக அவர் படித்த கல்லூரிக்கு நடை போட்டன.

 

அவரின் அதிர்ஷ்டமோ துரதிர்ஷ்டமோ, கிரிதரன் அப்போது தான் வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தார்.

 

கீதாஞ்சலி, இந்நேரத்தில் அங்கு வந்திருப்பதையும், அவர் முகத்திலிருந்த வேதனையும் கிரிதரனுக்கு ஏதோ தவறாக பட, அவரை அழைத்து என்னவென்று விசாரித்தார்.

 

தன் பக்க நியாயத்தை கேட்க ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணத்தில், அழுது கொண்டே நடந்த அனைத்தையும் கூறினார் கீதாஞ்சலி.

 

கேட்ட கிரிதரனுக்கு தான் வேதனையுடன் குற்றவுணர்வும் சேர்ந்து கொண்டது.

 

“நீ அழாத கீதாஞ்சலி. நானே வந்து உங்க வீட்டுல பேசுறேன். இது ஒரு மிஸ்ஸண்டர்ஸ்டாண்டிங். எடுத்து சொன்னா, புரிஞ்சுப்பாங்க.” என்று கிரிதரன் கூற, விரக்தியாக சிரித்த கீதாஞ்சலி, “உங்களை பேசக் கூட விட மாட்டாங்க சார்.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்த கீதாஞ்சலியின் தம்பி, “அக்கா, இங்க என்ன பண்ற? அங்க உன் மாமியார், நீ யாரோடவோ ஓடிப்போயிட்டதா வீட்டுல வந்த சத்தம் போட்டுட்டு இருக்காங்க.” என்று சொல்லிக் கொண்டே அருகிலிருந்த கிரிதரனை ஒரு பார்வை பார்த்து, “அப்போ கூட நான் நம்பல. ஆனா, இப்போ… நீயாக்கா இப்படி மாறி போன? ச்சீ…” என்று எதிரிலிருந்தவரை பேசக்கூட விடாமல் அங்கிருந்து சென்று விட்டார்.

 

மீண்டும் விரக்தியாக சிரித்த கீதாஞ்சலி, “நான் தான் சொன்னேனே சார்… அந்த கூட்டத்ததுல, என் கணவர் மட்டும் தான் கொஞ்சம் நல்லவர்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, இப்போ அவரும், என்கிட்ட பேசக்கூட செய்யாம, அவரே என்னைப் பத்தி ஒரு முடிவுக்கு வந்துட்டாரு. இனி, நான் அங்க போறதுல அர்த்தமே இல்ல.” என்று கூற, அவரை வருத்தமாக பார்த்த கிரிதரன், “இனிமே, என்ன செய்யப் போற கீதாஞ்சலி? உன் மகன்…” என்று இழுத்தார்.

 

“அது அவரோட மகனும் தான? அவரே பார்த்துக்கட்டும். இனி, என் வாழ்க்கையை மட்டும் நான் பார்த்துக்கப் போறேன்.” என்று கீதாஞ்சலி கூற, அதில் அதிர்ந்த கிரிதரனோ, “இது தப்பு கீதா. என்ன இருந்தாலும் உன் மகன்… ஒரு தப்பும் செய்யாத அவனுக்கு எதுக்கு இந்த தண்டனை?” என்று நியாயமாக வினவினார்.

 

அதில் கண்கள் கலங்க, “எனக்கு தெரியல சார்… என்ன பண்ணன்னு எனக்கு தெரியல. இப்போ அங்க போய் என் மகனை கேட்டா, உடனே கொடுத்துடுவாங்களா? இன்னும், பேசி என்னை அசிங்கப்படுத்துவாங்க. அது எனக்கு தேவையா?” என்று அழுது கொண்டே கீதாஞ்சலி கூற, “உன் கணவர் கிட்ட பேசி… சேர்ந்து வாழ முயற்சி பண்ணலாம் கீதா. அவங்க ஆயிரம் சொன்னாலும்… உன் கணவர்…” என்னும்போதே, அவரை பார்த்த கீதாஞ்சலி, “இது தான் சாக்குன்னு, உங்களை என் காதல் மூலமா ஃபோர்ஸ் பண்ணுவேன்னு நினைச்சு இப்படி சொல்றீங்களா சார்?” என்று கேட்டார் கீதாஞ்சலி.

 

“ப்ச், நான் என்ன சொல்றேன், நீ என்ன பேசுற கீதா?” என்று கிரிதரன் கோபமாக கூற, “எனக்கு அங்க போக வேண்டாம் சார். யாரையும் பார்க்க வேண்டாம். என்னோட கடந்த கால வாழ்க்கையை நான் மறக்க நினைக்குறேன். பிளீஸ், எனக்கு அதுல இருந்து மீண்டு வர உதவி செய்யுங்க. எனக்கு ஒரு வேலை மட்டும் பார்த்து கொடுத்தா கூட போதும். அதுக்கு மேல, உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன்.” என்று கண்ணீர் வழிய கீதாஞ்சலி பேசும் காட்சி, கிரிதரனின் மனதை பிசைந்தது.

 

தெரிந்தோ தெரியாமலோ, கீதாஞ்சலியின் இந்த நிலைக்கு தானும் ஒரு காரணம் என்பதை உணர்ந்த கிரிதரன் ஏதோ முடிவெடுத்தவராக கீதாஞ்சலியின் கைப்பற்றி அழைத்து சென்றார்.

 

அதன்பிறகு எல்லாம் வேகம் தான். முறைப்படி விவாகரத்து வாங்க வேண்டும் என்பதால், தன் அண்ணன் சசிதரனின் உதவியுடன் அதற்கான பணிகளை மேற்கொண்டார் கிரிதரன்.

 

விவாகரத்து எளிதாக கிடைத்து விட்டாலும், கேசவமூர்த்தியின் குடும்பத்தினர் பேசிய பேச்சுக்கள் எல்லாம் காதால் கூட கேட்க முடியாதவை.

 

அவற்றை எல்லாம் கீதாஞ்சலி கடந்து வந்து விட்டாலும், கேசவமூர்த்தியின் வேதனை சுமந்த விழிகளையும், உதயகீதனின் ‘அம்மா’ என்ற கதறலையும் அவரால் சகிக்க முடியவில்லை.

 

‘தவறு செய்து விட்டேனோ’ என்று சிந்திக்கும் வேளையில் கிரிதரன் அவரின் கைப்பற்றி, ‘போலாமா?’ என்பது போல சைகை செய்ய, இனி, அதை நினைத்து பயனில்லை என்பதால், தன் புது வாழ்க்கையை வாழ ஜெர்மனி நோக்கி பயணப்பட்டார் கீதாஞ்சலி.

 

ஜெர்மனி சென்ற பின்னர், உடனே எல்லாம் கீதாஞ்சலியின் வாழ்க்கை மாறிவிடவில்லை. அவரின் கடந்த கால நினைவுகள் அடிக்கடி அவரை துன்புறுத்திக் கொண்டே இருக்க, கிரிதரன் அவரின் காதல் மூலம் கீதாஞ்சலியை அதிலிருந்து மீட்டார். முழுவதுமாகவா என்பது கேள்விக்குறியே!

 

அவர்களின் காதலுக்கு அடையாளமாக பிறந்தவள் தான் ராகவர்ஷினி. கடந்த கால கசடுகள் மறைந்து, அவர்களின் வாழ்வில் ராகம் மீட்ட வந்தவளுக்கு கீதாஞ்சலி தேர்ந்தெடுத்த பெயர் தான் அது.

 

குழந்தை பராமரிப்பு குறித்து எவ்வித குத்தல்களும் இன்றி தானே சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் ராகவர்ஷினியை வளர்த்தார் கீதாஞ்சலி. அதற்கு உறுதுணையாக இருந்தார் கிரிதரன்.

 

ஆனால், அவரின் வளர்ப்பு தான் தவறென்பது இப்படி மருத்துவமனையில் படுத்திருக்கும் மகளை கண்டு நெஞ்சம் விம்மியது கீதாஞ்சலிக்கு.

 

நொடி நேரத்தில், அவரின் வாழ்க்கையில் நடந்தவற்றை நினைத்து பார்த்து குன்றிப் போன கீதாஞ்சலி மகளை கூட பார்க்க முடியாமல், அழுகையை அடக்கியபடி அறையை விட்டு வெளியே செல்ல, கிரிதரனுக்கோ மகளை பார்ப்பதா, இல்லை மனைவியை பார்ப்பதா என்று ரெண்டும்கெட்டான் நிலை தான்!

 

இருக்கும் சூழலை உணர்ந்த உதயகீதன் தான் ஒரு பெருமூச்சுடன், “வர்ஷி, இது அதைப் பத்தி பேசுற நேரம் இல்ல. மோரோவர், அப்படி பேசவும் எதுவுமில்ல.” என்று கடினத்துடன் கூறியவன், “முதல்ல, ஹெல்த்தை கவனி. டேக் கேர்.” என்றவன், அங்கிருந்து நகர முற்பட, பட்டென்று அவனின் கரத்தை பற்றினாள் ராகவர்ஷினி.

 

மகளின் செயலை கண்டிக்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் கிரிதரன் தடுமாற, உதயகீதன் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு பின்னால் திரும்பி பார்த்தான்.

 

“நீ சொன்ன ‘டேக் கேர்’ருக்கு என்ன அர்த்தம் உதய்? இனி, எப்பவும் உன்னை பார்க்கக் கூடாதுன்னா?” என்று ராகவர்ஷினி வருத்தம் தோய்த்த குரலில் வினவ, உதயகீதனோ என்ன சொல்வது என்று தடுமாறி, பின்னர் நிர்மலமான குரலில், “அப்படி எதுவும் இல்ல வர்ஷி. காரணம் இருந்தா நம்ம மீட் பண்ணலாம்.” என்று ‘காரணத்தை’ அழுத்தி கூறினான்.

 

அதில் விரக்தியாக சிரித்த ராகவர்ஷினி, “இனிமே, காரணம் இருந்தா தான் மீட் பண்ண முடியும்ல? எவ்ளோ சாதாரணமா சொல்லிட்ட உதய் நீ. உன்னை மாதிரியே ஏன் என்னால மாற முடியல உதய்? ஒருவேளை, நான் ரொம்ப எமோஷனல் இடியட்டா இருக்கேனோ? இப்போ கூட, எல்லாருக்கும் நான் தான் தப்பா தெரியுறேன்ல உதய்? ஒரு வருஷ காதல்! எல்லாம் ஒரே செகண்ட்ல இல்லாம போயிடுச்சுல! இது தான் விதியோ!” என்றெல்லாம் புலம்பினாள்.

 

அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தான் உதயகீதன்.

 

அவன் மனதிலும் அதே கேள்விகள் படையெடுத்துக் கொண்டு தானே இருக்கின்றன.

 

எதற்கு இந்த காதல்? எதற்கு இந்த திருமணம்? அவன் வாழ்வின் ரணங்களை கீறி விடுவதில் விதிக்கு என்ன அத்தனை ஆனந்தம்?

 

கேள்விகள் எளிதாக உருவாகி விட்டன தான். ஆனால், அதற்கான பதில்கள் தான் அகப்படாமல் போக்கு காட்டிக் கொண்டிருக்கின்றன.

 

சிறிது நேரத்தில் ராகவர்ஷினியே, “சாரி உதய், உன்னோட நேரத்தை நான் ரொம்ப எடுத்துக்கிட்டேன். உன் மனைவி கோச்சுக்க போறாங்க. நீ கிளம்பு.” என்றவள், “உன் கல்யாணத்துக்கு விஷ் பண்ற அளவுக்கு எனக்கு பெரிய மனசு இல்ல உதய்.” என்று அப்போதும் குத்தல் பேச்சை விடாத மகளிடம், “வர்ஷி, அவரை போக விடும்மா.” என்று கெஞ்சினார் கிரிதரன்.

 

அதற்கு மேல், அவளின் உடல்நிலையும் உரையாடுவதற்கு உகந்ததாக இல்லாத காரணத்தினால், அவள் உறக்கத்திற்கு செல்ல, அப்போது தான் உதயகீதனால் அங்கிருந்து வெளியே செல்ல முடிந்தது.

 

அறையை விட்டு வெளியே வந்த உதயகீதனிடம், “சாரி உதய். வர்ஷி ரொம்ப டிப்ரெஸ்ட்டா இருக்கா. அதனால தான் இவ்ளோ பேச்சு.” என்று வருந்தி மன்னிப்பு கேட்டார் கிரிதரன்.

 

“அவளோட இந்த நிலைக்கு தெரிஞ்சோ தெரியாமலோ, நானும் ஒரு காரணம். அதுக்காக மட்டும் தான், நான் இன்னைக்கு இங்க வந்தேன். இனிமே, நாங்க சந்திக்காம இருக்குறது தான், அவளுக்கு நல்லது.” என்று இறுகிய குரலில் உதயகீதன் கூற, அதை ஆமோதித்த கிரிதரனும், “எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, அவ்ளோ சீக்கிரம், வர்ஷியை ஜெர்மனி கூட்டிட்டு போயிடுவோம்.” என்றார்.

 

அதற்கு ஒரு தலையசைப்பை மட்டும் பதிலாக கொடுத்தவன் அங்கிருந்து கிளம்பி விட்டான். அத்தனை பேச்சுக்களையும் கீதாஞ்சலியும் கண்ணீரோடு கேட்டுக் கொண்டு தான் இருந்தார். அவரிடம் பார்வையை கூட செலுத்தாமல் சென்று விட்டான் உதயகீதன். ஆனால், கீதாஞ்சலியின் பார்வை முழுவதும் அவனிடம் தான்!

 

*****

 

சூரியக்கதிர்கள் மூடியிருந்த கண்களை துளைக்க முற்படும் அதே சமயத்தில், பலமுறை ஸ்னூஸ் செய்யப்பட்ட அலாரம் விக்ரமாதித்தனாக மாறி, வேதாளமாக உறங்கிக் கொண்டிருப்பவளை எழுப்பும் பணியை மேற்கொள்ள, ஏதோ நினைவில் அடித்துப் பிடித்து எழுந்தவள், “ஹையோ, லேட்டா போனா அந்த முசோ முறைச்சே சாவடிப்பானே.” என்று கத்தியபடி விழிகளை விரிக்க, எதிர்திசையில், அவள் கூறியதை போலவே முறைத்துக் கொண்டிருந்தான் முசோவாகிய உதயகீதன்.

 

இரவு முழுவதும் வெளியே சுற்றிவிட்டு, சிவந்து போன கண்களுடன், அப்போது தான் அறைக்குள் நுழைந்தவன், மனைவியாகிப் போனவளின் வார்த்தைகளில் ருத்ரத்தாண்டவம் ஆடாதது ஒன்று தான் குறை!

 

கணவனின் முறைப்பில், உறக்கம் முற்றிலும் பறிபோக, அப்போது தான் நடந்தவைகள் அனைத்தும் நினைவுக்கு வர, ‘ஹையோ, பார்க்குறானே பார்க்குறானே…’ என்று ஜீவநந்தினியின் மனம் அடித்துக் கொள்ள, எப்படியாவது சமாளிக்க வேண்டி, “அது வந்து… ஒரு கெட்ட கனவு… நான் லேட்டா போய் முசோ கிட்ட திட்டு வாங்குற மாதிரி…” என்று சொல்லிக் கொண்டே வந்தவள், மானசீகமாக தலையிலடித்துக் கொண்டு, மீண்டும் சமாளிப்பாக, “முசோன்னா… நீங்க இல்ல… அதுவந்து… முசோன்னா… ஹான், நம்ம ஆஃபிஸ் வாட்ச்மேன் முனுசாமி இருக்காருல அவரு தான்…” என்று கூறினாள்.

 

அவளின் கேவலமான சமாளிப்பில், அவளின் மனசாட்சியே காறித் துப்ப, மனதில் அந்த முனுசாமிக்கு மன்னிப்பு வேண்டியபடி எதிரிலிருந்த உதயகீதனின் முகத்தை பார்த்தாள் ஜீவநந்தினி.

 

அவனோ, அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்க விரும்பாமல், குளியலறைக்குள் சென்று விட, “யோவ் முசோ, உனக்கென்ன அவ்ளோ திமிரு? ஒருத்தி உன்னை மதிச்சு, உன் கோபத்தை மதிச்சு விளக்கம் கொடுத்தா, அதை மதிக்காம போவியா நீ? இந்த வீட்டுல, எப்படி நிம்மதியா இருக்கன்னு பார்த்துடுறேன்.” என்று மென்குரலில் சபதம் கொண்டாள் அந்த முசுட்டு முசோலினியின் மனைவி ஜீவநந்தினி.

தொடரும்…

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 45

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
32
+1
2
+1
4

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. கீதாஞ்சலி என்ன நியாயம் சொன்னாலும் அவர் பண்ணின தப்பு மன்னிக்க முடியாதது… கேசவன்கிட்ட பேசியிருக்கணும் மகனையும் விட்டுக் கொடுத்துட்டாங்க…. சரியான செல்பிஷ்… 😡 புத்தி சொல்லி சரியா வழி நடத்த வேண்டிய வாத்தியாரும் குற்ற உணர்ச்சினு சொல்லிட்டு அவங்க தப்புக்கு உடந்தை… 😡

    நந்தினி 🤣🤣🤣🤣

    1. Author

      எல்லாரோட சுயநலத்தால பாதிக்கப்பட்டது உதய் தான் 💔💔💔