Loading

அத்தியாயம் 6

ஐவரின் பார்வையும் அந்தக் காகிதத்தையே வெறித்திருந்தது.

 

“VIBGYOR – நம்ம கிட்ட இருக்க கலரை வச்சு பார்க்கும்போது, ரெட் அண்ட் வயலட் கலர்தான் மிஸ்ஸிங். அப்போ அது யாரு கிட்ட இருக்கும்?” என்று மென்மொழி அவளின் பார்வையை விலக்காமல் வினவ, “நம்மள துரத்திட்டு வந்த ரவுடிஸோட தலைவன் கிட்ட கூட இருக்கலாம்.” என்றான் யுகேந்திரன்.

 

“நான் பார்த்த அந்த மர்ம உருவத்துக்கிட்ட கூட இருக்கலாம்.” என்று இன்பசேகரன் கூற, “இப்போ என்ன பண்றது?” என்று யாழ்மொழி வினவினாள்.

 

“இந்த இடத்தை புரட்டிப் போட்டுத் தேட வேண்டியதுதான்!” என்றாள் சுடரொளி.

 

அவள் எளிதாகக் கூறி விட்டாலும், அது அத்தனை எளிதான காரியமாக இருக்கவில்லை.

 

“ஷப்பா, எதை எடுத்தாலும் பிட்டு பேப்பரா இருக்கு. அடியேய் மொழி, உண்மையாவே இங்க உங்க தாத்தா மட்டும்தான் இருந்தாரா? ஒரு மனுஷனால, இவ்ளோ இன்ஃபர்மேஷனை எப்படித்தான் சேகரிச்சு வைக்க முடியுதோ!” என்று அலுத்துக் கொண்டாள் சுடரொளி.

 

மறுபக்கம் யாழ்மொழியோ, “ப்ச், நம்ம யாருக்காவது சூப்பர் ஃபாஸ்ட் பவர் கிடைச்சுருந்துருக்கலாம்!” என்று புலம்பினாள்.

 

இரண்டு மணி நேரம் கழிந்தும், அவர்களால் எதுவும் கண்டுபிடிக்க முடியாமல் போக, “எப்பா சாமி ஆளை விடுங்க.” என்று அந்தக் காகித குவியல்களுக்குள்ளேயே அமர்ந்து விட்டாள் சுடரொளி.

 

“ப்ச், சுடர்…” என்று மென்மொழி அதட்ட, “எம்மா தாயே, என்னை விட இந்த பேப்பர் பிட்டுதான் உனக்கு முக்கியமா?” என்று மெதுவாக எழுந்து கொண்டே சுடரொளி வினவினாள்.

 

அவளின் கரம் பற்றி எழுப்பிய மென்மொழியோ, “ம்ச், அதோட வொர்த் தெரியாம பேசாத.” என்றாள் கண்டிப்புடன்.

 

“க்கும், இங்க என்ன புதையல் வேட்டைக்கான க்ளூவா இருக்கு?” என்று சலிப்புடன் வினவிய யாழ்மொழி சட்டென்று அனைவரையும் அமைதியாக இருக்கச் சொல்லி விட்டு, “உங்களுக்கு அந்தச் சத்தம் கேட்டுச்சா?” என்றாள் சுற்றிலும் பார்வையை சுழற்றியபடி.

 

“உன் உடன்பிறப்புக்கு கிடைச்சுருக்க இன்னொரு பவர் ஹ்யூமர் சென்ஸ் போலயே. எல்லாரும் அமைதியானதுக்கு அப்புறம் என்ன சத்தம் கேட்குமாம் அவளுக்கு?” என்று மென்மொழியின் காதைக் கடித்தாள் சுடரொளி.

 

“ப்ச், நீ எதுக்கு அவளையே நோண்டிட்டு இருக்க?” என்று மென்மொழியும் ரகசியக் குரலில் தோழியைக் கடிய, “ஹ்ம்ம் வேண்டுதல்!” என்று சுடரொளி சற்று சத்தமாகவே கூறிவிட, அவளை முறைத்த யாழ்மொழியோ, “நான் எவ்ளோ சீரியஸா சொல்லிட்டு இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் அதை மதிக்காம பேசி சிரிச்சுட்டு இருக்கீங்க.” என்றாள் எரிச்சலைக் குரலில் தேக்கியபடி.

 

“எம்மா தாயே, நாங்க எதுவும் பேசல. நீ உன் செவன்த் சென்ஸை வச்சு எதையோ ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கியே, அதைக் கன்டின்யூ பண்ணு.” என்று சுடரொளி சிறிதே நக்கல் கலந்த குரலில் கூற, மூக்கை விடைத்துக் கொண்டு சண்டைக்கு வந்து விட்டாள் யாழ்மொழி.

 

வழக்கம் போல இருவரையும் சமாதானப்படுத்தும் வழி தெரியாமல் மென்மொழி விழி பிதுங்கி நிற்க, ஆண்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டனர்.

 

இருவரின் சண்டையும் தானாக ஓயாது என்பதை புரிந்து கொண்ட யுகேந்திரன், “ரெண்டு பேரும் உங்க சண்டையை கொஞ்சம் நிறுத்துங்க. இங்க இருக்க குழப்பங்களும் பதில் இல்லாத கேள்விகளும் ஏற்கனவே தலைவலியை குடுத்துட்டு இருக்கு. இதுல, நீங்களும் உங்கப் பங்குக்கு எல்லாரையும் டென்ஷன் பண்ணிட்டு இருக்கீங்க.” என்று சற்று அழுத்தமாகவே பேசிவிட, அது அந்த இடத்தைச் சற்று சாந்தமாக்கியது.

 

இருவரும் வெவ்வேறு திசையை பார்த்துக் கொண்டு நிற்க, மென்மொழியிடம், அவளின் தோழியைப் பார்த்துக் கொள்ளுமாறு  விழிமொழியால் பேசிய யுகேந்திரன், யாழ்மொழியிடம் பேச ஆரம்பித்தான்.

 

“இப்போ சொல்லு, உனக்கு என்ன சத்தம் கேட்டுச்சு?” என்று யுகேந்திரன் வினவ, யாழ்மொழியோ அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்தபடி, “இங்க நம்மள தவிர வேற யாரோ இருக்காங்கன்னு நினைக்கிறேன்.” என்றாள்.

 

“ஆமா, இறந்து போன உங்க தாத்தாவோட ஆவிதான் இங்க சுத்திட்டு இருக்கு போல. உனக்குத்தான் உன் தாத்தாவை ரொம்ப பிடிக்குமே. அதான், உன்கிட்ட கம்யூனிகேட் பண்ண ட்ரை பண்றாரு போல.” என்று மென்மொழி எத்தனை கட்டுப்படுத்தியும் பேசியிருந்தாள் சுடரொளி.

 

அதில் யாழ்மொழி மட்டுமல்லாமல், அனைவரும் அவளை முறைக்க, “ஹிஹி, மனசுல பட்டதை வார்த்தை மாறாம பேசிடுறது என்னோட இன்னொரு பவர் போல. நீங்க கண்டுக்காதீங்க.” என்று சமாளிப்பு புன்னகையுடன் பேசி மழுப்பினாள் சுடரொளி.

 

அங்கிருந்த பசை நாடாவை (செலோடேப்) எடுத்து சுடரொளியின் வாயில் ஒட்டிய மென்மொழியோ, அவளை முறைத்துக் கொண்டே இருக்க, ‘ஹையோ, இவளுக்கு தாத்தாதான் ஹீரோங்கிறதை மறந்துட்டு வாயை விட்டுட்டேனே. ஹ்ம்ம், ஒண்ணு பேசாம கொல்லுவா, இல்ல பேசியே கொல்லுவா. எதுக்கும் கொஞ்ச நேரம் அமைதியா இருப்போம்.’ என்று எண்ணிய சுடரொளி பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு வேறு புறம் திரும்பிக் கொண்டாள்.

 

இப்போது மீண்டும் யாழ்மொழியிடம் திரும்பிய யுகேந்திரன், “உனக்கு ஏன் அப்படி தோணுச்சு?” என்று வினவ, அவளோ புருவச் சுருக்கத்துடன், “ஏன்னா, எனக்கு ரொம்ப மைல்டா சத்தம் கேட்டுச்சு. எங்க இருந்துன்னு எக்சாக்ட்டா தெரியல. ஆனா, இந்த வீட்டை சுத்தித்தான் யாரோ நடமாடுற மாதிரி இருந்துச்சு.” என்றாள்.

 

அதைக் கேட்ட மென்மொழியோ, “யாழ், எங்க யாருக்கும் எதுவும் கேட்கலையே. உனக்கு மட்டும் கேட்குதுன்னா… இது உன்னோட இன்னொரு பவரா இருக்குமோ?” என்று யோசனையுடன் வினவ, அதை உறுதிபடுத்த வேண்டி, “இப்பவும் சத்தம் கேட்குதா?” என்று கேட்டான் யுகேந்திரன்.

 

விழிகளை மூடி எதையோ அவதானித்த யாழ்மொழியோ, “ம்ம்ம், யாரோ வேகமா நகருற சத்தம் லைட்டா கேட்குது.” என்று கூற, யுகேந்திரனும் கண்களை மூடி மறைந்திருப்பவரின் எண்ணங்களை கணிக்க முயன்றான்.

 

ஆனால், அதற்கு முன்பே, “கைஸ் இங்க வாங்க…” என்ற சுடரொளியின் குரலும், அதைத் தொடர்ந்து, “ஆ… அம்மா பேய்…” என்று மற்றொரு குரலும் பின்பக்கமிருந்து கேட்க, மற்ற நால்வரும் அத்திசை நோக்கி விரைந்தனர்.

 

அதற்குள், “ஹே, யாரைப் பார்த்து பேய்னு சொல்ற?” என்று சுடரொளி யாரோ ஒருவனிடம் சண்டைக்குச் செல்ல, அவனும் அவளிற்குச் சளைக்காதவனாக, “பின்ன இப்படி திடீர்னு கத்தி… பொசுக்குன்னு கண்ணுக்கு முன்னாடி தெரிஞ்சா  என்னன்னு சொல்றதாம்? கொஞ்ச நேரத்துல என் ஹார்ட்டே நின்னுடுச்சு. ஆமா, நீங்க எப்படி அதை செஞ்சீங்க?” என்று சற்று ஆர்வத்துடன் வினவினான் அந்தப் புதியவன்.

 

“அதை விடு, முதல்ல நீ யாருன்னு சொல்லு. இங்க என்ன பண்ணிட்டு இருக்க? அதுவும் பின்பக்கம் நின்னுட்டு ஒட்டு கேட்டுட்டு இருக்க… உண்மையைச் சொல்லு, நீ அந்த ரவுடி கும்பல்ல ஒருத்தன்தான?” என்று சுடரொளி கேள்விகளை அடுக்க, மற்றவர்களும் அங்கு வந்து விட்டனர்.

 

“என்னாது ரவுடியா? இந்தப் பாடியை பார்த்தா ரவுடி மாதிரியா தெரியுது?” என்று புலம்பியவனோ, மென்மொழியிடம் திரும்பி, “அக்கா, என்னைத் தெரியலையா? நான் பக்கத்து வீட்டுப் பையன்கா. நீங்க இங்க வரப்போ எல்லாம் உங்களைப் பார்த்து சிரிப்பேனே.” என்று அழும் குரலில் பேசினான் அவன்.

 

மென்மொழி அவனை ஆமோதிப்பாக பார்க்கும் வேளையில், இன்பசேகரனோ, “பக்கத்து வீட்டுப் பையன் எதுக்கு பின்பக்கம் வந்து எங்களை வேவு பார்த்துட்டு இருக்க?” என்று புருவச்சுழிப்புடன் வினவினான்.

 

சுடரொளியோ மென்மொழிக்கு மட்டும் கேட்கும் வண்ணம், “எனக்குத் தெரியாம இங்க ஒரு ஷோ ஓடிருக்கு போலயே! அவன் என்னவோ உன்னைப் பார்த்து சிரிப்பேன்னு சொல்றான். நீ அதுக்கு தலையசைச்சுட்டு இருக்க. என்னடி நடக்குது இங்க?” என்று கிசுகிசுக்க, அவளை முறைத்த மென்மொழி, மீண்டும் அந்தப் புதியவன் கூறுபவற்றிக்கு செவி சாய்க்க ஆரம்பித்தாள்.

 

“சார், அது வந்து… எப்பவும் அந்த அக்கா மட்டும் வருவாங்க. இன்னைக்கு நீங்க எல்லாரும் கூட்டமா வந்துருக்கீங்களா, அதான் என்னன்னு பார்க்கலாம்னு ஒரு ஆர்வத்துல வந்தேன். ஆனா, நீங்க பேசுன எதுவும் எனக்கு கேட்கலை சார். பிராமிஸ்.” என்று அவன் கெஞ்ச, “இப்படி கேட்டா சரியா வராது. வா ஸ்டேஷன் போவோம்.” என்றான் யுகேந்திரன்.

 

“சார் சார்… ஸ்டேஷன் எல்லாம் வேண்டாம் சார். என் அப்பாக்குத் தெரிஞ்சா அவ்ளோதான்!” என்றவன், “எனக்குத் தெரிஞ்ச உண்மையை சொல்லிடுறேன் சார்.” என்றான்.

 

வெளியே நின்று பேச வேண்டாம் என்று அனைவரும் உள்ளே செல்ல, சற்றுத் தேங்கிய சுடரொளியோ, அவனிடம் பெயரைக் கேட்டு அறிந்து கொண்டு, “அதுசரி கிருஷ்ணா, உன் ‘அக்கா’ கூட நானும்தான் ரெண்டு மூணு முறை வந்துருக்கேன். என்னை எல்லாம் உனக்கு அடையாளம் தெரியலையா? அவளை மட்டும்தான் தெரியுமோ?” என்று அவளின் வேலையை சிறப்பாக செய்தபடி உள்ளே அழைத்துச் சென்றாள்.

 

“சரி, இப்போ சொல்லு… நீ இங்க எதுக்கு வந்த?” என்று யுகேந்திரன் வினவ, “சார், இந்த அக்காவோட தாத்தாவும், என்னோட தாத்தாவும் பழக்கம் போல. அப்படித்தான், ஆரா தாத்தா அவரோட ரிசர்ச்சைப் பத்தி என் தாத்தா கிட்ட சொல்லியிருக்காரு போல. அது மட்டுமில்லாம, இந்த ரிசர்ச்ல இருக்க ஆபத்தைப் பத்தியும் சொல்லியிருக்காரு.” என்றான் கிருஷ்ணன்.

 

அதுவரை, “உன் தாத்தாக்கு செல்லப்பெயர் எல்லாம் வச்சுருக்கான் பாரேன்.” என்று கேலி செய்த சுடரொளி முதல், ஆராவமுதனைப் பற்றிய பேச்சென்பதால் அதிக ஆர்வம் காட்டாத யாழ்மொழி வரை அனைவரின் கவனமும் கிருஷ்ணன் கூறிய ஆபத்தில் குவிந்தது.

 

“ஆபத்தா? என்ன சொல்ற கிருஷ்ணா? என்ன ஆபத்து?” என்று அவனிடம் கேட்ட மென்மொழியின் மனதிற்குள், அதுவரை எழாத தாத்தாவின் மரணம் குறித்த கேள்வி சட்டென்று உதித்தது.

 

அதை அறிந்தவனாக யுகேந்திரன், அவளின் பக்கம் வந்து நின்றான், ஆறுதலாக!

 

தலையை சொரிந்த கிருஷ்ணனோ, “என்ன ஆபத்துன்னு எனக்கு சரியா தெரியல அக்கா. நானே இதை, என் தாத்தா இறக்குறதுக்கு முன்னாடி, என் அப்பா கிட்ட சொன்னப்போ, மறைஞ்சு நின்னு கேட்டது.” என்றான்.

 

“சரி நீ கேட்டதை முழுசா சொல்லு.” என்று யுகேந்திரன் ஊக்க, அவன் அறிந்ததைக் கூறத் துவங்கினான் கிருஷ்ணன்.

 

“உங்க தாத்தா இந்த வீட்டுல விட்டுட்டுப் போன குறிப்புகளைத் தேடிச் சிலர் வரலாம்னும், அதனால பெரிய பாதிப்பும்னும் என் தாத்தா சொல்லிட்டு இருந்தாரு. அப்புறம் ஏதோ கல்லைப் பத்தி பேசுனாங்க. அது என்னன்னு எனக்கு முழுசா புரியல. இதெல்லாம், எனக்கு ஒரு ஆர்வத்தைக் குடுத்துச்சு. அது மட்டுமில்லாம, இந்த அக்கா வேற இங்க அடிக்கடி வந்துட்டு போவாங்களா. அப்படி உள்ள என்னதான் இருக்கும்னு ஒரு கியூரியாசிட்டில இப்படி பின்பக்கம் வந்து பார்ப்பேன். வேற எதுவும் இல்ல சார்.” என்றான் கிருஷ்ணன்.

 

அவன் கூறியவற்றை மட்டுமல்லாது, அவன் மனதில் நினைப்பதையும் அறிந்து கொண்டு, அவன் கூறுவது உண்மையே என்பதை உறுதிபடுத்திக் கொண்ட யுகேந்திரன், “உன் அப்பாக்கு வேற ஏதாவது தெரிஞ்சுருக்க வாய்ப்பிருக்கா?” என்று வினவினான்.

 

“இருக்கலாம் சார்…” என்று இழுத்த கிருஷ்ணன், “சார் சார், என் அப்பாக்கு நான் இங்க வந்த விஷயம் எல்லாம் தெரிய வேண்டாம். பிளீஸ் சார்.” என்று கெஞ்சினான்.

 

“அது நீ நடந்துக்குறதைப் பொறுத்து இருக்கு. இனிமே, இப்படி பின்பக்கமா வர வேலை எல்லாம் கூடாது.” என்று எச்சரித்த யுகேந்திரன், “இப்போ உன் அப்பா எங்க இருக்காங்க?” என்று வினவ, “அவருக்கு என்ன… ஊர் ஊரா சுத்திட்டு இருப்பாரு.” என்று உதட்டை வளைத்தான் கிருஷ்ணன்.

 

யுகேந்திரன் அவனைக் கூர்மையாக பார்க்க, “என் அப்பா ஆர்கியாலஜிஸ்ட் சார்.” என்றான்.

 

பின்னர், கிருஷ்ணனிடம் சில கேள்விகளைக் கேட்டுப் பதில்களை வாங்கிக் கொண்ட யுகேந்திரன், மீண்டும் எச்சரித்தே அவனை அனுப்பி வைத்தான்.

 

“சார், அவனோட அப்பா கிட்ட பேசுனா, இந்த கல்லைப் பத்தி ஏதாவது தெரிய சான்ஸ் இருக்கா?” என்று இன்பசேகரன் வினவ, “ஹ்ம்ம், நானும் அதைத்தான் யோசிக்கிறேன் இன்பா. அத்தோட, இந்த ரிசர்ச், கல், ஆர்க்கியாலஜி இதெல்லாம் ஒன்னை நோக்கித்தான் நம்மளை நகர்த்துதுன்னு தோணுது.” என்றவனின் பார்வை சுவரில் இருந்த குமரிக்கண்டத்தின் படத்தில் பதிந்தது.

 

“இன்னும் இந்த இடத்துல தேடனும்னு சொல்லிடாதீங்க. நான் ரொம்ப டையர்ட்டா இருக்கேன்.” என்று யாழ்மொழி கூற, “யாழ், நாம பெரிய பிரச்சனைல இருக்கோம். அந்த ரவுடிஸை மறந்துட்டியா? திடீர்னு வந்த பவர்ஸை பத்தி நாம தெரிஞ்சுகிட்டே ஆகணும்.” என்றாள் மென்மொழி.

 

“எம்மா மொழி, நீயாச்சு… உன் தாத்தாவோட பிட்டு பேப்பராச்சு. மணி என்னன்னு பார்த்தியா? ஓவர்நைட்டு தூங்கக் கூட இல்ல. எனக்கு வேற பயங்கரமா பசிக்குது. பசில கண்ணெல்லாம் மங்கிப் போய், நீங்க எல்லாரும் கொஞ்சம் கொஞ்சமா இன்விசிபிளாகிட்டு வரீங்க.” என்றாள் சுடரொளி.

 

மென்மொழி ஒரு பெருமூச்சுடன் சகோதரியையும் தோழியையும் பார்க்க, “நீங்க ரெஸ்ட் எடுங்க. அதுக்குள்ள, அந்த ரவுடிஸ் பத்தி ஏதாவது தெரியுதான்னு விசாரிக்கிறேன்.” என்ற யுகேந்திரன் கடிகாரத்தைப் பார்த்து விட்டு, கொஞ்ச நேரத்துக்கு அப்புறம், கிருஷ்ணனோட அப்பா கிட்ட பேசிப் பார்க்கலாம்.” என்றவன், “கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க.” என்று இன்பசேகரனிடம் கூறினான்.

 

“சியூர் சார். நான் இவங்களை மொழியோட வீட்டுல டிராப் பண்ணிடுறேன். என் வீடும் பக்கத்துலதான்.” என்றான் இன்பசேகரன்.

 

ஏதோ யோசித்த யுகேந்திரன், “யாழ்மொழி, இன்பா உங்களுக்கு ஆக்சிடெண்ட் பண்ண காரோட நம்பர், இல்ல மாடல் ஏதாவது ஞாபகம் இருக்கா?” என்று வினவ, யாழ்மொழி ‘இல்லை’ என்று தலையசைக்க, இன்பசேகரனோ, “அது… ஒரு மாதிரியான டார்க் கலர் கார்… பிளாக்னு சொல்ல முடியாது. மாடல்… மஹிந்திரா தார்னு நினைக்கிறேன். ஆக்சிடெண்ட் பண்ணிட்டு நிக்காம போயிட்டதால, நம்பரை நோட் பண்ண முடியல.” என்றான் இன்பசேகரன்.

 

அதை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்ட யுகேந்திரனோ, மென்மொழியிடம் திரும்பி, “கான்டேக்ட் நம்பர்?” என்று வினவ, அத்தனை நேரம் சோர்வுற்றிருந்த சுடரொளிக்கு சட்டென்று ஆற்றல் கிடைத்தது போல, “ஹுஹும், என்ன நடக்குது இங்க?” என்று விஷமத்துடன் கேட்டாள்.

 

“உங்களை எல்லாம் கான்டேக்ட் பண்ணனுமே, அதுக்குத்தான்.” என்று யுகேந்திரன் அழுத்திக் கூறினாலும், அங்கிருந்த யாரும் அதை நம்புவதாக இல்லை!

 

“இங்க இத்தனை பேரு இருக்கோம். எங்க நம்பரை வாங்கணும்னு தோணலையா போலீஸ்கார்?” என்று சுடரொளி வேண்டுமென்றே வினவ, இன்பசேகரனும் அவளுடன் சேர்ந்து கொண்டான்.

 

யுகேந்திரனோ சற்றும் அசராமல், “தோணல…” என்றவன், மீண்டும் மென்மொழியிடம் திரும்பி இம்முறை பார்வையால் வினவ, அவளோ மனதிற்குள், ‘எதுவும் நினைக்கக் கூடாது…’ என்று கூறிக் கொண்டே, அவளின் அலைபேசி எண்ணைப் பகிர்ந்தாள்.

 

அத்துடன், மென்மொழியின் விலாசத்தையும் பெற்றுக் கொண்ட யுகேந்திரன், “ஓகே கைஸ், சேஃபா இருங்க. ஏதாவது தப்பா தோணுச்சுனா, உடனே எனக்கு கால் பண்ணுங்க.” என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்லும் முன்னர், மென்மொழிக்கு மட்டும் கேட்கும் வகையில், “எதுவும் நினைக்கக் கூடாதுன்னு நினைச்சாலும் அதுவும் எனக்கு கேட்கும்.” என்று நமுட்டுச் சிரிப்புடன் கூறிவிட்டே சென்றான்.

 

அதற்கும் கேலி செய்து சிரித்த சுடரொளியை ஒரு வழியாக சமாளித்து, ஆராவமுதனின் முக்கிய குறிப்புகள் அடங்கிய தொகுப்பை எடுத்துக் கொண்டே மற்றவர்களுடன் இல்லம் நோக்கிப் பயணித்தாள் மென்மொழி.

 

*****

 

“சாரி சார், அவங்களை மிஸ் பண்ணிட்டோம்.” என்று அலைபேசியின் மறுமுனையில் இருந்தவன் கூற, “உங்க முயற்சி வீண் போகல. அவங்க அந்த கல்லைப் பயன்படுத்த தெரிஞ்சுகிட்டாங்கங்கிறதை நாமளும் தெரிஞ்சுகிட்டோம்.” என்று மர்மச்சிரிப்புடன் கூறியவனோ,

 

“லெட் யுவர் ஹன்ட் கன்டின்யூ. ஆனா, அவங்களை நெருங்குறதுக்கு முன்னாடி என்கிட்ட இன்ஃபார்ம் பண்ணுங்க. சிசுவேஷன் பார்த்து ஆக்ட் பண்ணனும்.” என்றவனின் விழிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு மின்னியது அந்தக் கல்!

 

தொடரும்…

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்