கண்ணாலம் 5
பேருந்தை விட்டு இறங்கியவள் முன்பு மீண்டும் அவன். வாய் அகலச் சிரித்துக் கண்ணடித்தான். முறைத்துவிட்டுச் சென்றாள் பூங்கொடி. விடாது துரத்தினான் சிங்காரவேலன். வீட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருந்த சூரியன், இவர்கள் அலும்பைப் பார்த்துக் கொண்டு அங்கேயே நின்று இருக்க, அதன் தாக்கம் தாங்காது வேக எட்டுக்களில் நடந்து கொண்டிருந்தவள் தேகத்தில் வேர்வைத் துளிகள்.
மெதுவாகப் பின்னால் வண்டியில் சென்று கொண்டிருந்தவன் பார்வை அவள் முதுகில் படர்ந்தது. சாப்பிட எடுத்து வைத்த பொருளைக் காணாதது போல் அடித்துப் பிடித்து வண்டியைத் தள்ளிக்கொண்டு முன் நின்றான். முகம் முழுவதும் வேர்வைத்துளி ஒப்பனையாகப் படர்ந்து இருந்தது.
அண்ணாந்து சூரியனைப் பார்த்தவன் வாய்க்குள் முணுமுணுத்தான். அதற்கு இவன் செயல் பிடிக்கவில்லை போல, சரியாகச் சூரிய ஒளியை அவள் முகத்தில் அடித்தது. கண் கூச இமை சுருக்கியவள் வெயிலின் தாக்கம் தாங்காது நடையைக் குறைத்தாள்.
“பன்னிப் பயலே, மணி அஞ்சு ஆகுதுடா… உங்கப்பன் ஆத்தா தேட மாட்டாங்களா உன்ன. நானே என் லாலாவ இப்புடித் தொட்டுக் கொஞ்சனதில்ல. எம்புட்டுத் தைரியம் இருந்தா எனக்குச் சொந்தமானவள நீ ரசிச்சிட்டு இருப்ப. மரியாதையாப் போடா அந்தப் பக்கம்…”
இயற்கை இவனுக்குக் கட்டுப்படுமா! அது தன் வேலையைச் சரியாகச் செய்து கொண்டிருந்தது. தன் பேச்சைக் கேட்காத சூரியனைப் பார்த்துப் பல்லைக் கடித்தவன், “நாளைக்கு நீ இருக்க மாட்டடா.” என்று விட்டு அவளை ஓரக்கண்ணால் பார்த்தான்.
இத்தனை வார்த்தை ஜாலங்கள் எல்லாம் அவள் கேட்கத்தான்… கேட்கிறாள். கேட்டும் பயன்தான் கிடைக்கவில்லை சிங்கார வேலனுக்கு. அவ்வப்போது கேட்கும் வண்டிச் சத்தத்தைப் போல், அவன் வார்த்தைகளையும் பத்தோடு பதினொன்றாகக் கடந்தாள்.
‘ரியாக்சனே வரல.’ என உள்ளுக்குள் புலம்பிக் கொண்டே பின் தொடர்ந்தவனை அந்த ஊரே பாவமாகப் பார்த்தது.
வேல் பட்ட நெஞ்சில், வஞ்சியின் விழி பட்ட வலியைக் கண்களில் பறைசாற்றிக் கொண்டு, தன் மீது வரும் ஒவ்வொரு பாவமான பார்வைக்கும் பாவமான பதிலைத் திருப்பிக் கொடுத்தான். தனக்குப் பின்னால், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வருவது தெரியாது வீட்டை வந்தடைந்தவள், செருப்பை உதறித் தள்ளித் திண்ணையில் அமர, அவளை உரசிக்கொண்டு மூச்சு வாங்க அமர்ந்தான் சிங்காரவேலன்.
“அப்பப்பா, அம்மம்மா… என்னா வெயிலு.”
பூங்கொடியின் தோள் மீது தலை சாய்ந்து அவள் துப்பட்டாவை எடுத்து விசிறினான். சாய்ந்திருப்பவனைத் தள்ளிவிட்டு நகர்ந்து அமர்ந்தாள். கூச்சமே அல்லாது மீண்டும் உரசிக்கொண்டு அமர்ந்தவன், “ரொம்பத் தாகமா இருக்கு, எனர்ஜிக்கு கிஸ்சு கீஸ்சு கிடைக்குமா?” எனக் காய்ந்த இதழைத் தன் நாவால் ஈரமாக்கினான்.
பத்து விரல் நகங்களை அந்த உதட்டில் வைத்துக் கீறி எடுப்பது போல், எரிச்சலாக உள்ளே சென்றவள் ஓங்கிக் கதவைச் சாற்றினாள். அவ்வளவு பெரிய அவமானம் நடந்தும், துளியும் உள்ளம் கசங்காமல் திண்ணையில் சுகமாக அமர்ந்தவன்,
“ஹப்பா… வாய்க்கு வந்ததை வானத்து மேல தூக்கி அடிச்சிட்டு, இப்படி வானரமா தாவிக்கிட்டு இருக்கியேடா சிங்காரா…” சத்தமாகப் புலம்பினான்.
***
இன்றிலிருந்து தனக்குத் தலைவலி தொடங்கிவிட்டது என்பதை அறியாது கண் விழித்தவள் முன், கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருந்தான் சிங்காரவேலன். அதுவும் குரங்கு போல் அமர்ந்திருந்தவன் கண்ணில் கண்ணாடியை வேறு மாட்டிக் கொண்டிருந்தான்.
“ஹாக்!”
“நான்தான் லாலா, உன் மாமன்!” பல் இளித்தான்.
“இங்க என்னா பண்ற?”
“நேத்து ராத்திரி திடீர்னு எனக்கு ஒரு டவுட் வந்துருச்சு. அதைத் தீர்த்துக்கத்தான் வந்தேன்.”
“என்னா டவுட்டு?”
“நீ தூங்குனா அழகா இருப்பியா, அம்சமா இருப்பியான்னு…”
“பாட்டி…”
சமைத்துக் கொண்டிருந்த கரண்டியோடு வந்தவரிடம் சிடுசிடுத்தாள். அவரோ அந்தக் கரண்டியை வந்தவன் மீது தூக்கி அடித்து விட்டுச் செல்ல, “பார்த்தியா, இந்தக் கெழட்டுக் கெழவிக்குக் கொழுப்ப…” திட்டி அவரை அப்படிச் செய்ய வைத்தவள் இடமே புகார் வாசித்தான்.
“தயவுசெஞ்சு கெளம்பு…”
“ஏன் லாலா, இந்த டிரஸ்க்கு என்னா?” எனச் சம்பந்தமில்லாமல் கேட்க, குழம்பினாள் பூங்கொடி.
“நல்லாத்தான இருக்கு… இந்த ட்ரெஸ்ஸோட உன்னை வழி அனுப்ப வந்தா போதாதா? எதுக்குத் திரும்பக் கெளம்பச் சொல்ற.”
“ஐயோ கடவுளே!”
“சரி சரி கோபப்படாத. நீ ஆசைப்பட்டா ஒரு தடவை இல்ல, பத்துத் தடவை கூடக் கெளம்பி வருவேன்.” எனக் குழைந்து கழுத்தை இங்கும் அங்கும் அசைத்தவன், “மாமா உன் கூடவே சேர்ந்து ரெடி ஆகட்டா…” அநியாயத்திற்கு வழிந்தான்.
“கண்டபடி பேசி விட்டுடுவேன்!”
“கண்டபடி கொஞ்சியும் ரொம்ப நாள் ஆகுது. செத்த அதைக் கொஞ்ச நேரம் பண்ணிட்டு அப்புறம் திட்டுறியா…”
அதற்கு மேல் பொறுமை இல்லை பூங்கொடியிடம். தலையணையைத் தூக்கி அவன் முகத்தில் வீசி அடித்தவள், தொட உயர்ந்த அவன் கையை எட்டி மிதித்து விட்டுச் சென்றாள். வலி பொறுக்க முடியாது துள்ளிக் கொண்டிருந்தவன் மீது பவுடர் டப்பாவைத் தூக்கி அடித்து,
“நான் குளிச்சிட்டு வர்றதுக்குள்ள கெளம்பி இருக்கணும்.” மிரட்டி விட்டுச் சென்றாள்.
எழுந்து வேட்டியை உருவி மீண்டும் இடுப்பிற்கு நடுவில் முடிச்சுப் போட்ட சிங்காரவேலன், அவளை முறைத்துக் கொண்டே வெளியேறினான். விட்டது தொல்லை என்று குளித்து முடித்துத் தயாராகி வாசலில் வந்து நின்றவள், நரநரவென்று பல்லைக் கடிக்க,
“நீ குளிச்சிட்டு வர்றதுக்குள்ள திரும்பிக் கெளம்பி வந்துட்டேன்.” என்றவனை என்ன செய்வதென்று தெரியவில்லை பூங்கொடிக்கு.
வாய்க்குள் சொல்லக் கூடாத வார்த்தைகளைச் சொல்லி அவனைத் திட்டிக்கொண்டு செருப்பை மாட்டியவள், ஒரு அடி எடுத்ததும் வாய் பிளந்தாள். அவள் வீட்டிலிருந்து கண்ணுக்கெட்டும் தூரம் வரை பந்தல் போட்டிருந்தான் சிங்காரவேலன். ஸ்தம்பித்து நின்றவள் அதைச் செய்தவனைத் திரும்பிப் பார்க்க, சட்டைக் காலரை உயர்த்திவிட்டுக் கால் மீது கால் போட்டான்.
அமைதியாக வீட்டை விட்டுக் கிளம்பியவள், எங்குதான் இந்தப் பந்தல் முடியும் என்று எண்ணிக் கொண்டே செல்ல, பேருந்து நிலையம் வரை அவை நீண்டது. பந்தலைப் போட்ட வேலன் சுகமாக அவளைப் பின்தொடர்ந்து வர, பந்தலின் முடிவை எண்ணிக் கொண்டு வந்தவள் அவனுடனான முடிவைப் புதுப்பிக்க விரும்பவில்லை.
பேருந்திற்காகக் காத்திருக்கும் காதலியை உரசிக்கொண்டு, “எப்புடி? இனி அந்தச் சூரியன் உன்னை சைட் அடிப்பானா?” காலரை உயர்த்திவிட்டுக் கெத்தாகக் கேட்டான்.
“என்னா குரளி வித்த காட்டுனாலும், இனி உன் பின்னாடி வரமாட்டேன்.”
“நீ வர வேணாம், நான் வரேன்.”
“என்னை விட்டா வேற பொண்ணுங்களே இந்த ஊரு உலகத்துல இல்லையா?”
உள்குத்தலோடு கேட்கும் அத்தை மகளிடம், “கோடிப் பொண்ணுங்க இருந்தாலும், என் லாலா மாதிரி வராதே. அவ கோடில ஒருத்தி! எனக்காகவே அந்த பிரம்மன் படைச்சவ. என் அத்தை மக அன்புக்கு முன்னாடி, எந்தப் பொண்ணும் நிக்க முடியாது.” தீவிரமாகப் பேசிக் கொண்டிருக்க, அவள் பாட்டிற்கு வந்த பேருந்தில் ஏறி அமர்ந்தாள்.
“அடிப்பாவி!” என அரண்டவனைச் சீண்டாது, காலியாக இருக்கும் பேருந்தைக் குழப்பத்தோடு பார்த்தவள் நடத்துனரிடம் காரணம் கேட்க, அவரோ சிங்காரத்தைக் கை காட்டினார்.
சிரித்த முகமாகப் பேருந்தில் ஏறியவன், மொத்தப் பயணச்சீட்டையும் அவள் மீது கொட்டினான். அனைத்தையும் தட்டிவிட்ட பூங்கொடி, முறைப்பை மட்டுமே பதிலுக்குக் கொடுக்க, “என் அத்த மவ அழுங்காம, குலுங்காமப் போகணும்.” என்றுவிட்டு அவளுக்கு முன் இருக்கையில் அமர்ந்தவன், அவள் பக்கமாகத் திரும்பி கை இரண்டையும் கம்பியில் வைத்துக்கொண்டு தலை சாய்த்துப் பார்த்தான்.
“எதுக்கு இதெல்லாம் பண்ணிட்டு இருக்க?”
“உனக்காகன்னு சொல்லிப் புரிய வெக்கிற அளவுக்கா என் செயல் இருக்கு.”
“அதான் கேட்குறேன். எனக்காக எதுக்கு இதெல்லாம் பண்ற?”
“எதுக்கு லாலா, வெடுக்கு வெடுக்குன்னு பேசுற.”
“யாரும் வேணான்னு தான உறவை முறிச்சிக்கிட்டுத் தனியா வந்து இருக்கேன். அப்பவும் நிம்மதியா விடாம துரத்துனா என்னா அர்த்தம்?”
“உன் நிம்மதிய நான் கெடுக்கிறனா?”
“ஆமா!”
ரோசம் வந்து கிளம்பி விடுவான் என்ற எதிர்பார்ப்போடு, வார்த்தையை விட்டவள் பக்கத்தில் வந்தமர்ந்த சிங்காரவேலன், “இதான் கடைசி லாலா, இதுக்கு மேல உன் பின்னாடி வரமாட்டேன்.” என அவள் தோள் மீது சாய்ந்தான்.
‘வரமாட்டேன்’ என்றதில் புருவம் சுருக்கியவள், தன் தோள் மீது சாய்ந்ததில் கடுப்பாகி முடியைப் பிடித்துத் தள்ளி விட்டாள். பாவமான முகத்தோடு, “அதான் வரமாட்டேன்னு சொல்லிட்டனே. உன் கம்பெனி வர வரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்க. என் உயிர் மூச்சு இருக்கற வரைக்கும் உன் தோள்ல சாய்ஞ்ச இந்த நிம்மதியோட வாழ்ந்துட்டுப் போறேன்.” என்றதோடு நிறுத்தாமல் அவள் கருணையைப் பெற மூன்று நான்கு முறை கண்ணைச் சிமிட்டிக் காட்டினான்.
அலும்புக்குப் பிறந்தவன் மீது, எப்படித்தான் நம்பிக்கை பிறந்ததோ தெரியவில்லை. கடைசி என்றதில் அமைதியாக ஜன்னல் பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். தோள் சுகம் கிடைத்ததில் குஷி ஆகியவன், அதை முழுதாக அனுபவித்தான். கண்மூடி அவளுடனான அழகிய தருணங்களை நினைத்தவனுக்கு, இப்போது இருக்கும் இடைவெளி வலியைக் கொடுத்தது. விரைந்து பாதிக்கப்பட்ட மனம், காதல் எனும் மருந்தை நாட வேண்டி ஏக்கத்தோடு அமர்ந்திருந்தவனைத் தோள் உயர்த்திச் சீண்டினாள்.
“கம்பெனி வரப்போகுது, நகரு.”
“வர வரைக்கும் இருந்துட்டுப் போறேன் விடு, லாலா.”
“போனால் போகுதுன்னு விட்டது தப்பாப் போச்சு!”
“அதான், இனி வரவே போறது இல்லையே.”
நடிகனின் நடிப்பில் மீண்டும் அவள் திருவாய் மூடிக்கொண்டது. பேருந்து நிற்கும் வரை அடம் பிடித்து அவள் மீது சாய்ந்திருந்தவன், “உம்மா…” எனக் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு, அடிக்க வரும் அவள் கைக்குச் சிக்காமல் பேருந்தை விட்டு இறங்கி விட்டான்.
அவனையும், அவன் கொடுத்த முத்தத்தையும் ஏற்க விரும்பாது, உச்சக்கட்ட எரிச்சலுக்கு ஆளான பூங்கொடி தன் பையைத் தூக்கி அடித்துத் திட்ட வருவதற்குள்,
“உம்மா…” என மீண்டும் சத்தமாக ஒரு பறக்கும் முத்தத்தைக் கொடுத்து விட்டு ஓட்டம் பிடித்தான்.
தூக்கி அடித்துக் கீழே விழுந்த பையை, மீண்டும் எடுத்து ஓடியவன் பக்கம் வீசி அடித்தவள் கண்டமேனிக்குத் திட்டினாள். அவை அனைத்தையும் கேட்டுக் கொண்டே ஓடிய சிங்காரம்,
“மாமன் குடுத்த முத்தம் இன்னைக்கு முழுக்க உன் கூடவே இருக்கும். நான் திரும்பி வந்து குடுக்கற வரைக்கும் பத்திரமா பார்த்துக்கடி அத்த மவளே…” என்றதோடு நிறுத்தாமல் மீண்டும் காற்றில் ஒரு முத்தத்தைத் தூது அனுப்பிவிட்டுச் சிட்டாகப் பறந்தான்.
***
சிங்காரவேலன் செய்த சேட்டையால் அன்றைய நாள் முழுவதும் எண்ணெயில் முக்கி எடுத்த அப்பளம் போல் முறுக்கிக் கொண்டே இருந்தாள் பூங்கொடி. நேற்றுப் பூனை போல் அமைதியாக இருந்தவள், இன்றுப் புலி போல் சீறுவதைக் கண்ட புதுத்தோழிகள் அஞ்சி நடுங்க, “இன்னொரு தரம் இப்புடிப் பண்ணட்டும், அந்த வாயில கொள்ளிக் கட்டயச் சொருகிடுறேன்.” வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
“என்னாடி புலம்பிட்டு இருக்க.”
“ஒன்னும் இல்ல.”
“ஆமா… நேத்து வந்தாரே அவரு நிஜமாகவே உன் ஆளா?”
பதில் சொல்லாமல் கேள்வி கேட்ட நிஷாந்தியைக் கண்ணால் சுட்டுப் பொசுக்கியவள், “கட் பண்ண இந்த பீஸ எடுத்துட்டுப் போயிக் குடு.” என்று விட்டுத் தன் வேலைகளைத் தொடர்ந்தாள்.
“பூங்கொடி!”
“என்னா?”
“எதுக்கு இப்புடி மூஞ்சக் காட்டுற.”
“என் மூஞ்சே அப்புடித்தான்.”
“உன் ஆளப் பார்த்தா மட்டும் மாறுது.”
“இந்தா மணிமேகலை, யாரும் என் ஆள் கெடையாது. சும்மா வாய்க்கு வந்ததைப் பேசாத.”
“பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலையே.”
கட் செய்ய அடுக்கி வைத்த துணிகளைத் தூக்கி அடித்தவள், “இப்போ உங்க நாலு பேத்துக்கும் என்னா தெரியணும்.” பட்டென்று கேட்டு விட்டாள்.
“நேத்து அவரு எங்ககிட்டப் பேசினதும் அப்புடி முறைக்கிற. கேட்டா ஆளு இல்லன்னு சொல்ற. அதான் என்னா கணக்குன்னு தெரிஞ்சுக்கலாம்னு.”
“ஒரு மண்ணுக் கணக்கும் இல்லை. அவன் யார் கூடப் பேசினா எனக்கென்ன?”
“அப்போ பிரச்சினை இல்லன்னு சொல்ற.”
“ஆமா!”
“அப்போ நாங்க பேசலாம்.”
“எது?”
“உனக்குப் பிரச்சினை இல்லன்னா நாங்க பேசறதுல தப்பு இல்லல்ல.”
தோழிகளைக் கண்டு கடுமையாக முறைத்தவள், அவர்களிடம் காட்ட முடியாத கோபம் அனைத்தையும் வாய் இல்லாத துணி மீது காட்டினாள் பூங்கொடி. அவள் நடவடிக்கையைக் கவனித்த தோழிகள் அன்றைய நாள் முழுவதும் வெறுப்பேற்றிக் கொண்டிருக்க, இவள் காதலன் செய்த வேலையால் அவன் குடும்பமே வெறுப்பாகி அமர்ந்திருக்கிறது.
செய்த தவறுக்கு அமைதிப் பூங்காவாக உலா வந்து கொண்டிருந்த நீலகண்டனைத் தேடிக்கொண்டு மூன்று நபர்கள் வந்தார்கள். வந்தவர்களிடம் கோமளம் விவரத்தைக் கேட்க,
“பந்தல் போட்டதுக்கான பணத்தை உங்ககிட்ட வாங்கிக்கச் சொன்னாரு.” என்றார்கள்.
ஏதோ ஒரு வீட்டிற்குப் பந்தல் என்று எண்ணியவர் தொகையைக் கேட்டதும் வாய் பிளக்க, “இது பத்து நாளுக்கான வாடகை மட்டும்தான். உங்க மவன் நாள் கணக்குச் சொல்லல. பத்து நாளுக்கு ஒரு தடவை வந்து பணத்தை வாங்கிக்கச் சொன்னாரு.” எனப் பணத்தை வாங்கிக் கொண்டு சென்றனர்.
காதலிக்கு முத்தம் கொடுத்த மிதப்பில், ஆடிப் பாடி ஆனந்தமாக வீடு வந்து சேர்ந்தவனை என்ன இது என்று கேட்க, “என்னான்னா… என் கண்ணாலத்தை நிறுத்துனது நீங்க தான… என் லாலா சமாதானமாகி என்னைக் கட்டிக்கிடச் சம்மதம் சொல்ற வரைக்கும் குடுத்துட்டு இருங்க.” என்றதோடு நிறுத்தாமல்,
“ஒரு பஸ் வாங்கலாம்னு இருக்கேன். பணத்துக்கு ஏற்பாடு பண்ணிக்கங்க.”என்றான் சாதாரணமாக.
“எடேய்!”
“உங்களுக்காகப் பேசப் போய் தான் வாழ்க்கைய இழந்து நிக்கிறேன். பண்ண பாவத்துக்குப் பிராயச்சித்தமா பண்ணுங்க.”
“இந்தப் புத்தி அப்ப இருந்திருக்கணும்.” எனக் குத்திக் காட்டினார் கோமளம்.
“என் மருமவ கழுத்துல தாலி கட்டாம, எங்கடா போற பரதேசின்னு அப்பவே புடிச்சு ஒக்கார வச்சுத் தாலி கட்ட வெச்சிருக்கணும். எல்லாத்தையும் எல்லாரும் பண்ணிட்டும், பார்த்துட்டும் தான் இருந்தீங்க. கடைசில பழியை மட்டும் என் மேல போடாதீங்க. அப்பன அடிக்கிறாங்கன்னு ரோசம் பொத்துக்கிச்சு. இப்பதான் அப்பன் புள்ளையாவே இருந்தாலும், வாயும் வயிறும் வேற வேறன்னு தெரியுது.”
“அப்புடி என்னாடா உன்ன வேத்து ஆளா நான் பார்த்துட்டேன்.”
“அப்புடிப் பார்க்கப் போய் தான, காசு குடுத்ததுக்கு இப்படி மூஞ்சத் தூக்கி வச்சுட்டு ஒக்காந்து கெடக்கீங்க.”
“பூங்கொடிகிட்ட நான் பேசிப் பாக்குறேன். நீ இந்த மாதிரிக் கோமாளித்தனம் பண்ணாம இருன்னு சொல்றேன்.”
“ஒன்னும் தேவையில்லை. நான் பண்ண தப்புக்கு நான்தான் சமாதானம் பண்ணனும். அவ மனசு மாறி என்னை ஏத்துப்பா…”
அதுவரை அமைதியாக இருந்த அவன் அண்ணன் கண்ணன், “ஒருவேளை, பூங்கொடி உன்னை மன்னிக்கவே இல்லனா என்னாடா பண்ணுவ.” என ஒரு பேச்சிற்குக் கேட்க,
“பினாயில் வாயனுக்குப் பொறந்தவனே.” என்று விட்டான் பட்டென்று.
சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்த நீலகண்டன் திகைத்து நேராக அமர, “நானே நாயா பேயா அலைஞ்சுகிட்டுக் கெடக்கேன். தம்பிகாரன் கஷ்டப்படுறானே, பாவம் பார்த்து நாலு ஐடியா குடுக்கலாம்னு இல்லாம அபசகுனமா பேசுற. ஒருவேளை, என் லாலா என்னை மன்னிக்கவே இல்லன்னு வச்சுக்க, நீ உன் பொண்டாட்டியோட வாழ மாட்ட.” என்றான்.
“அவன் ஏற்கெனவே வாழாம தான் கெடக்கான்.”
“ஓஹோ!”
தூணில் சாய்ந்து கொண்டு நின்றிருந்த புவனாவைப் பார்த்தவன், “என்னா அண்ணி, தங்கச்சி வெளிய போராட்டம் பண்ற மாதிரி நீங்க உள்ளுக்குள்ள போராட்டம் பண்ணிட்டு இருக்கீங்களா?” கேட்க,
“அவளை மாதிரி அத்து விட்டுட்டுப் போக வழி இல்லாம ஒக்காந்து கெடக்கேன்.”
தாலி கட்டியவளைப் பாவமாகப் பார்த்தான் கண்ணன். அவனைப் பாவமாகப் பார்த்தது மொத்தக் குடும்பமும். அந்தப் பார்வையில் இருந்து மாறுபட்ட சிங்காரவேலன், “இப்பதான் நீங்க என் அண்ணி! இந்த மாதிரி ஒரு பன்னிக்கு மன்னிப்பைக் குடுக்காதீங்க. நம்ம மாமாவை மரியாதை இல்லாம என்னமா பேசிப்புட்டான். எனக்கு வந்த கோவத்துக்கு அங்கயே தூக்கிப் போட்டு மிதிச்சிருப்பேன். உங்க மொகத்துக்காகத் தான் சும்மா விட்டேன்.” என அடித்தானே பல்டி!
உருப்படாத ஒருவனைத் தன் கொழுந்தன் ரூபத்தில் பார்த்த புவனா மனத்திற்குள் கண்டபடி வசைபாட, “இப்பக் கூட ஒன்னும் கெட்டுப் போகல. ஒத்த வார்த்தை சொல்லுங்க, அத்து விட்டுட்டு மகராசன் கணக்கா வேற மாப்பிள்ளை பார்க்குறேன் உங்களுக்கு.” என்றவனை என்ன செய்தால் தகும் என்று பார்த்தது அந்த மொத்தக் குடும்பமும்.
“ஏண்டா, எதுக்குடா அவன் வாழ்க்கையில கும்மி அடிக்கிற?”
“என்னாப்பா பண்றது? நீ உஷாரா வெளி இடத்துல இருந்து பொண்ணு எடுத்துட்ட. அந்தக் குடைமிளகா வாயன் இன்னொரு பொண்ணைப் பெத்து அதை நீ கட்டி இருந்தினா தெரிஞ்சிருக்கும், என்னாடா…”
கண்ணனைக் குறை சொல்லி அவன் குடும்பத்தைப் பிரிக்கப் பார்த்துவிட்டுக் கடைசியில், அவனையே தன் ஆதரவுக்கு இழுக்கும் அறுந்தவால் குரங்கை ஒன்றும் சொல்ல முடியாது அண்ணன்மார்கள் வாயை மூடிக் கொண்டனர். ஜகஜாலக் கில்லாடி மகனைப் பெற்றோர்கள், மனத்திற்குள்ளே தலையில் அடித்துக் கொண்டனர்.
***
திருமணத்திற்கு முன்னர் வரை பூர்வீகத் தொழிலான ரைஸ் மில்லை, கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டிருந்த சிங்காரவேலன், அதை அம்போவென விட்டுவிட்டுக் காதலி பின்னால் சுற்றித் திரிகிறான். அதன் கணக்கு வழக்குகளைக் கேட்டு நீலகண்டன் முறைத்தும், அஞ்சாதவன் காசை மட்டும் களவாடிச் செல்கிறான். அவனுக்கு இப்போது தேவை எல்லாம் பூங்கொடி மட்டுமே. அவள் அவன் வசம் ஆனால் மட்டுமே, அவன் வசம் இருந்த அனைத்தும் வளம் பெறும்.
மதிய உணவு உண்டவன், “கரெக்டா நாலு மணிக்கெல்லாம் எழுப்பி விடுங்க. என் லாலாவக் கூட்டிவரப் போகணும்.” என மனசாட்சி இல்லாமல் நடுக்கூடத்தில் பாய் விரித்து மல்லாக்கப் படுத்தான்.
“இவன் பொழப்பப் பார்த்தியா சரவணா… வெள்ளன எந்திரிக்கிறான். குளிச்சு முடிச்சுட்டு லாலாவைப் பார்க்கப் போறேன்னு போறான். கரெக்டா திங்கிற நேரத்துக்கு வீட்டுக்கு வந்து நடு வீட்டுல தூங்கிட்டு, சாயங்காலமானா பளபளன்னு ரெடி ஆகிப் போறான்.”
“வாழ்வு தான்டா இவனுக்கு. வம்படியா நம்மதான் தாலி கட்டாதடான்னு இழுத்துட்டு வந்த மாதிரி, ஏதாச்சும் கேட்டா உங்களால தான் என் கண்ணாலம் நின்னு போச்சு. நீங்கதான் பொறுப்புன்னு மண்டையச் சூடேத்துறான்.”
குசுகுசுவென்று பேசிக் கொண்டிருப்பதைப் பாம்புக் காதைக் கொண்டு ஒட்டுக் கேட்ட நம் சிங்காரம், “வெட்டியாப் பேசிகிட்டு இருக்காம, அந்த ஃபேனைக் கொஞ்சம் போடுங்கடா…” என்றிட, “மேல சுத்துற ஃபேன் போதாதோ அய்யாக்கு.” என்றார்கள்.
“இப்பல்லாம் வெயில்ல அதிகம் சுத்துறதால காத்து போதல பிரதர்ஸ். அதுவும் இல்லாம, நாட்டுக் கோழிக் குழம்பு வேற வயிறு முட்டத் தின்னுட்டேனா, சூட்டக் கெளப்புது.”
வாய்க்கு வக்கனையாக அவன் அடிக்கும் கூத்தை அங்கிருந்த அனைவரும் அலுத்துக்கொண்டு கடக்க, ஆந்தைக் கண்ணிற்குச் சொந்தக்காரன் சரியாக அலாரம் அடிப்பதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்னதாக எழுந்து விட்டான். லூசான வேட்டியை இறுக்கமாகக் கட்டிக் கொண்டவன் அடிக்கும் அலாரத்தை நிறுத்திவிட்டு,
“ம்ம்… ஒருத்தனுக்காது என் வாழ்க்கை மேல அக்கறை கெடக்குதா பாரு. உங்களுக்காக வாழ்க்கைய இழந்துட்டு நிக்கிறேன் பாரு, என்னைய என் மாமன் சேதுராமன் செருப்பைக் கொண்டே அடிச்சுக்கணும்.” புலம்பிக் கொண்டு தயாராகி வந்தவன், வாசல் பெருக்கிக் கொண்டிருக்கும் அன்னத்தைக் கண்டு நிற்க, இவனைப் பார்த்தவர் தொடப்பத்தைக் கீழே வீசிவிட்டு அவசரமாக வீட்டிற்குள் நடந்தார்.
“அத்த… அத்த… ஒரு நிமிஷம் நில்லு!”
ஓட்டமாக ஓடி அத்தையின் கைப் பிடித்தவன், “என் மூஞ்சக் கூடப் பார்க்கப் புடிக்கலயா?” தாழ்ந்த குரலில் கேட்டான்.
“என்னாத்துக்கு நான் பாற்க்க? உன்னையப் பார்த்ததும் போதும், நான் பெத்ததை இழந்துட்டு நிக்கிறதும் போதும். கூடப்பிறந்தவள்னு உங்கப்பனுக்கு நெனப்பு இல்ல. அத்தயாச்சேன்னு உனக்குப் பாசம் இல்ல. இப்புடியாப்பட்ட உங்களை நான் எதுக்குப் பார்க்கணும்? நான் ஒருத்தி உசுரோட இருக்கும் போதே என் பொண்ணு அனாதையாட்டும் வாழறதைப் பார்க்க நெஞ்சு வலிக்குது.”
“நீயும் என்னைப் புரிஞ்சுக்காமல் பேசுற அத்த.”
“என்னாத்தடா நான் புரிஞ்சிக்க… என் பொண்ண நீ புரிஞ்சுகிட்டியா? உங்கப்பனும், என் புருசனும் இன்னைக்கு நேத்தா அடிச்சுக்கிறாங்க. அடிச்சுகிட்டுப் போங்கடா குடிகாரப் பயலுகளான்னு உதறித் தள்ளிட்டு, என் பொண்ணு கழுத்துல தாலி கட்டாம அம்போன்னு விட்டுட்டுப் போற. இப்பவே இப்படிப் பண்ணுற, காலம் போய் நான் இல்லாத காலகட்டத்துல என் பொண்ணை அம்போன்னு விடமாட்டன்னு என்னா நிச்சயம்.” என்றவர் மனம் பொறுக்க முடியாது குலுங்கி அழ ஆரம்பித்தார்.
அதுவரை பொறுத்துக் கொண்டு நின்றிருந்தவன் அவரைச் சூழ்ந்து, “எதுக்கு அத்தை அழற? நீ வளர்த்த புள்ள நானு. என் குணம் எப்புடின்னு உனக்குத் தெரியாதா? ஏதோ தப்புப் பண்ணிட்டேன். அதுக்காண்டி அப்படியே உன்னையும், உன் பொண்ணையும் விட்டுடுவேன்னு நெனைச்சியா…” வருத்தத்தோடு பேசிக் கொண்டிருக்கும் மருமகனைக் கடந்து திண்ணையில் அமர்ந்தவர்,
“நான் யாரையும் எதுவும் நெனைக்கல சாமி. பெத்த பொண்ணே என்னை விட்டுட்டுப் போயிடுச்சு. வளர்த்த புள்ளையா வாழ்க்கை முழுக்க வரப்போகுது? உங்கப்பன ஒரு சொல்லு சொன்னதும், என் பொண்ண வேணாம்னு சொல்லிட்டல்ல. என்னா இருந்தாலும் நானும், என் பொண்ணும் வேத்து ஆளு தான உனக்கு.” கண்ணீர் சிந்தினார்.