அத்தியாயம் 5
பரிதி அழைப்பை துண்டித்ததும், இனியன் வேகமாக அவனது பெயர் பலகை பொருத்தப்பட்ட அறைக்குச் சென்றான்..
பரிதிக்கும் இனியனுக்கும் தனி தனி அறை தான். வைஷ்ணவி பரிதிக்கு பர்சனல் செகரேட்டரி ஆக இருக்கின்றாள். அதனால் பரிதியின் அறையிலேயே அவளுக்கு இடம் ஒதுக்கப் பட்டு அமர்ந்து இருந்தாள்.
அவனது அறைக்குள் சென்ற இனியன், பரிதி கேட்ட ஃபைல்லை எடுத்துக் கொண்டு, அவனிடம் கொண்டு வந்து கொடுத்தான்.
அதை வாங்கி ஒரு முறை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு, அதனை மேனேஜரிடம் கொடுத்து, “இதை அந்த டெல்லி பார்ட்டிக்கு மெயில் பண்ணிடுங்க…” என்றான்.
அவரும் அதை வாங்கிக் கொண்டு சென்று விட்டார்.
“ஹான்.. இனியா.. அந்த MM கம்பெனி ஓட movement என்னனு கவனிச்சியா..” என, தன் தமையனைப் பார்த்துக் கேட்க,
“இந்த பெரிய ஆர்டர் நமக்கு கெடச்சி இருக்குறதுலேயே அவங்க நாள தாங்கிக்க முடியல.. அந்த சஞ்சய் ஆபீஸ்ஸை ரெண்டு ஆகிட்டானாம்.. அவன் இன்னமும் அந்த பழைய பலியோட தான் இருக்கானாம். இது மூலமா நமக்கு எப்போனாலும் பிரச்சனை தான்..” அவனுக்கு வந்த தகவலை தன் அண்ணனிடம் கூறிக்கொண்டு இருந்தான் இனியன்.
“இது உனக்கு எப்படி தெரிஞ்சது. அந்த காயதிரி சொன்னாளா..” என்று வைஷு உதட்டை சுழித்துக் கொண்டு கேட்டாள்.
“ஆமா.. அவ தான் சொன்னா.. அவ சொல்லலனா, நமக்கு எப்படி தெரியும் இந்த அளவுக்கு இன்ஃபர்மேஷன்.. அவ நமக்கு ஸ்பை வேலை பாக்கலானாலும், அவன் மூலமா நமக்கு எதுவும் பிரச்சனை வந்துருமோனு ஒரு நல் எண்ணத்துல சொல்றா.. நம்மளும் அதுக்கு ஏத்த போல கவனமா இருக்கலாம்ல..” என்றான் அவன்.
வைஷ்ணவி அதற்கு எதுவும் பதில் கூறாமல் அமைதியாக இருந்து கொண்டாள்.
பரிதியோ, “அவன் திருந்தவே மாட்டான் போல..” என்று பெருமூச்சுடன் சலித்துக் கொண்டான்.
“நமக்கு கெடச்ச ஃபாரின் டீல், அவன் கம்பெனிக்கு தான் முதல்ல போனாங்க. அப்புறம் அவன் தயாரிக்கிற பொருட்களோட தரம் குறைவா இருக்குறனால , அவங்களே ரிஜெக்ட் பண்ணிட்டு நம்ம கம்பெனியை தேடி வந்து இருக்காங்க.. இதுல நம்ம தான் சதி பண்ணி அவங்கள நம்ம பக்கம் இழுத்துட்டோம்னு அவன் கங்கணம் கட்டிட்டு அழையுறான்.. அண்ணா எதுக்கும் நம்ம ஜாக்கிரதையா இருக்கிறது ரொம்ப நல்லது..” என, பரிதியிடம் கூறிக்கொண்டு இருந்தான்.
பரிதியோ, “குரைக்கிற நாய் கடிக்காது இனியா .. அவனால ஒன்னும் பண்ண முடியாது. பார்த்துக்கலாம் விடு.. அப்புறம் எதுக்கும் காயத்திரியை ஜாக்கிரதையா இருக்கச் சொல்லு.. Un ஃப்ரண்ட் னு அவனுக்கு தெரிஞ்சா நம்ம சொல்லி தான் அங்க வேலை பாக்க வந்துருக்கானு நெனச்சி அவளுக்கு ஏதாவது ஆபத்து உண்டு பண்ணலாம்.. நீ அவகிட்ட சொல்லி வை.. எதுவும் இங்க தகவல் எதுவும் ஷேர் பண்ணாதனு.. நம்மளே பார்த்துப்போம். நம்மளுக்கு உதவி பண்ண போய் அவளுக்கு பிரச்சனை எதுவும் வந்துரக் கூடாது..” என்று தன் தம்பியிடம் கூறினான்.
இனியனும் அதற்கு சரி என்றுக் கூறி விட்டு அவனது அறைக்குச் சென்று விட்டான்.
அதே நேரத்தில், அவர்களது வீட்டில், மங்கள நாயகி தன் தம்பியான விநாயகத்திடம் பேசிக் கொண்டிருந்தார்.
“விநாயகம், குரு மூர்த்தி பத்தி எதுவும் தகவல் தெரிஞ்சதா..” எனக் கேட்க,
“இல்லக்கா.. எனக்கு எதுவும் கிடைக்கல..” என, எங்கும் தேடி கலைத்துப் போன விரக்தியில் பதில் கூறினார் விநாயகம்.
“ஹும்ம்ம்ம்… தப்பு பண்ணிட்டோம்..” என வேதனையின் தவிப்போடு கூறிய மங்கள நாயகி, பின்
“என்னைக்காவது வருவான்னு நம்புவோம்..” என்றார் ஒரு பெருமூச்சுடன்.
அதற்கு விநாயகமும் ஆமாம் என்றே ஆமோதித்தார்..
“சரிப்பா.. அது போகட்டும். அந்த தரகர் பொண்ணு ஜாதகம் எதுவும் வந்து இருக்குனு சொன்னாரா..” என விசாரிக்க,
“அட இல்லக்கா.. நானும் அந்த ஆளுகிட்ட விடாம கேட்டுட்டு தான் இருக்கேன்.. அந்த ஆளு என்னனா, ஒன்னும் சொல்ல மாட்டேன்றான். ” சலிப்புடன் கூறினார் விநாயம்.
“இந்த பரிதிக்கு வயசு ஏறிட்டே போகுது. கால காலத்துல அவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணலாம்னு பார்த்தா அவனுக்கு கூடி வர மாட்டேங்குதே..” என மங்களம் புலம்பியபடி இருக்க,
அந்நேரம் சரியாக வந்த மல்லிகாவோ, “எதுக்கு வெளிய தேடி அழையுறீங்க.. நான் தான் வைஷு இருக்கா.. அவளை பரிதிக்கு முடிச்சி விடுங்கனு எப்போ இருந்து சொல்லிட்டு இருக்கேன். நீங்க தான் கேக்க மாட்டேன்றீங்க..” என்று தன் நெடு நாள் ஆசையை நிறைவேற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் மல்லிகா கூற,
“நீ சொல்றது சரி தான் மல்லிகா.. ஆனால் பசங்க ஒத்துக்க மாட்டேன்றானுங்களே.. நம்ம என்ன பண்ண முடியும்..” என்று நாயகியும் எடுத்து உரைத்தார்.
“அவங்க அப்படித்தான் சொல்லுவாங்க. நம்ம தான் பேசி அவங்கள சம்மதிக்க வைக்கணும்..” என்று எப்படியாவது இவர்களின் திருமணத்தை நடத்தி வைத்து விட வேண்டும் என்று அதையே மறுபடியும் கூறினார்.
“என் பங்குக்கு நான் பேசிட்டேன். வேணும்னா இனி நீயும் உன் புருஷனும் ரெண்டு பெறுகிட்டயும் பேசிக்கோங்க.. ” என்று இனி தான் இதைப் பற்றி பேசப் போவதில்லை என்பதை மறைமுகமாக சொல்லிவிட்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்து விட்டார்.
அவர் சென்றதும் தன் கணவர் அருகில் அமர்ந்து மல்லிகா, “ஏங்க, உங்க அக்காவே சொல்லிட்டு போய்ட்டாங்க. நீங்க பரிதிகிட்ட பேசுங்க. நான் வைஷு கிட்ட பேசுறேன்.. எப்படியாவது பேசி ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிரனும்.” என்றார் கண்ணில் பூத்த பல கனவுகளுடன்.
“நீ ஏன் ஆரம்பத்துல இருந்து வைஷுவை பரிதிக்கு தான் கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்னு ஒத்த கால்ல நிக்குற. ஏன் அதுக்கு அடுத்து இனியன் இருக்கான். அவனுக்கு முடிக்கலாமே..” என்றார் மனைவியை பார்த்து ஒரு யோசனையுடன்.
“ஏங்க, இனியனை விட பரிதி தான் நல்ல பொறுப்பான பையன். நல்லா திறமைசாளியான பையன். அவனுக்கு எந்த கேட்ட பழக்கமும் கிடையாது.. ஆனால் இனியன் அப்படி இல்லை. அவனே அவன் அண்ணனை சார்ந்து தான் இருக்கான். அது மட்டும் இல்லை. அவன் தம் அடிக்கிறான். தண்ணி அடிக்கிறான். பொம்பள பிள்ளைங்க கூட எப்போ பாரும் கூத்து அடிக்கிறான்..” முகத்தை சுளித்த வண்ணம் இதை எல்லாம் கூறிக்கொண்டு இருந்தார் மல்லிகா.
“அவன் வயசுல அப்டித்தான்டி நிறைய பசங்க இருப்பாங்க.. எல்லாமே ஒரு அளவா தான் இருப்பான் அவன். அது போக இனியன் பொம்பள பசங்க கூட ஒரு நட்பா தான் பேசுறான் பழகுறான். மத்தபடி அவன் அளவு மீறி நடந்தது இல்லை. பரிதி நடக்க விட்டதும் இல்லை. நீ என்னமோ அவனை கெட்டவனா உருவகப் படுத்தி பேசுற.. இனியன் நம்ம பார்த்து வளந்த பையன்.. அவனை இந்த அளவுக்கு நீ நினைக்கணும்னு அவசியம் இல்லை..” சற்று முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு தான் கூறினார் விநாயகம்.
“ம்ம்க்கும்.. நீஙகதான் மெச்சிக்கணும் அவனை.. ” கூறி விட்டு முகத்தை திருப்பிக் கொண்டார்..
“இப்போ உனக்கு என்ன பிரச்சனை..” இப்பொழுது சற்று கடுமை தனிந்து பொறுமையாகக் கேட்டார்.
அவர் இப்படி கேட்டதும், அவரைப் பார்த்து நன்றாக திரும்பி அமர்ந்தவர் , “நீங்க பரிதிக்கிட்ட பேசிப் பாருங்க.. நான் நம்ம மக கிட்ட பேசுறேன்..” என்றார் கண்களில் ஆர்வம் மின்ன..
” அது தான் அக்கா ஏற்கனவே பேசிட்டாங்களே.. ” சலிப்புடன் விநாயகம் கூற,
“இந்த ஒரு தடவை நம்ம பேசி பாப்போம். ஜாதகம் எதுவும் பொறுந்த மாட்டேங்குதுனு.. ஒரு வேலை உனக்கான பொண்ணு வைஷுவா தான் இருப்பாளோ.. அப்படினு ஏதாவது சொல்லுங்க..” என்றார் சற்று அதிக ஆர்வத்துடன்..
“என்னமோ போ.. இந்த ஒரு தடவை தான் பேசுவேன்.. அவன் முடியாதுனு சொல்லிட்டானா அதுக்கு அப்புறம் நீயும் அந்த பேச்சை திரும்ப பேசவே கூடாது சரியா..” இந்த முறை இவர் கண்டிப்பாகவே கூறினார்.
” நான் கேட்கல.. ஆனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திகிட்டு எப்படி பேசணுமோ அப்படி பேசுங்க.. ” என்றார் அவரும் பதிலுக்கு.
அவரும் சரி என்றவாரு அங்கிருந்து கிளம்பி விட்டார்.
போகும் அவரின் முதுகையே பார்த்த மல்லிகாவின் முகத்தில் வெற்றிப் புன்னகை.
**********
“விக்ரம்.. விக்ரம்…” தன் தம்பியை அழைத்தபடி நிரஞ்சனா வீட்டிற்குள் நுழைய,
“என்ன க்கா..” அவனும் அக்காவின் சத்தம் கேட்டு கேள்வி எழுப்பினான்.,
“டேய்.. நம்ம தெருவுக்கு அடுத்த தெருவுல இருக்குற காமாட்சி பாட்டி உனக்கு தெரியும்ல..” என்று தன் தம்பியிடம் கேட்டாள்..
“ஆமா தெரியும். அம்மா இருக்கும் போது கூட அடிக்கடி இங்க வருவாங்களே.. ஆனால் அவங்க இறந்து போன பிறகு அவங்க இங்க வர்றதும் இல்லை..” வருத்தத்துடன் கூறி முடித்தான் விக்ரம்.
“ஆமா. அவங்கதான். அவங்களுக்கு உடம்பு முடியலடா.. கூட பார்த்துக்கவும் யாரும் இல்லை.. நான் போய் அவங்களுக்கு தேவையானதை செஞ்சி வச்சிட்டி வரேன்.. அதுவரைக்கும் நீ வீட்டுல பத்திரமா இரு. நான் வந்துருவேன்..” என்று அவனிடம் பல முறை பத்திரம் சொல்லிவிட்டு காமாட்சி பாட்டி வீட்டிற்குச் சென்றாள்.
பக்கத்து தெரு தான் என்பதால், நடந்து சென்றாள்.
அவரின் வீட்டை அடைந்ததும், பாவம் அவரின் இருமல் சத்தம் தான் அவளை வரவேற்றது.
“என்ன பாட்டி.. இருமல் சத்தம் வெளியே வரை கேக்குது… ஏதாவது கஷாயம் வச்சி குடிச்சீங்களா இல்லையா..” கேட்டுக்கொண்டே அடுக்களை பக்கம் சென்றாள்..
“அட நீ வேற ஏண்டி.. கஷாயம் போட்டுக் குடிக்கிற அளவுக்கு தெம்பு இருந்தா நான் ஏன் படுத்துட்டு இருக்க போறேன். வயசாகிருச்சு. முன்ன மாதிரி எசக்கும் இல்லை உடம்புல. அதான் இப்படி படுக்க போட்டுருச்சு. எனக்குன்னு யாராவது துணைக்கு இருந்தா இப்படி இருக்குமா என் நிலைமை..” என்று சலிப்புடன் ஆரம்பித்து சோகத்துடன் கூறி முடித்தார் காமாட்சி.
“சரி சரி.. விடு.. அப்படியே ஆரம்பிச்சிராத உன் சோகக் கதையை. கேட்டுக் கேட்டு சலிச்சுப் போச்சு..” என்று அவரிடம் பேசிக் கொண்டே அவருக்கு கஷாயம் ஒரு பக்கம் வைத்து விட்டு, இன்னொரு அடுப்பில் அவருக்கு கஞ்சியை வைத்தாள்.
அவரும் சும்மா இராமல், ” ரொம்பத்தான் டி.. என் சோகத்தை நான் சொன்னால் உனக்கு சலிப்பா இருக்கா.. ” என்று அவரும் பதிலுக்கு வாயாட ஆரம்பித்து விட்டார்.
“என் மகன் இந்த உலகத்தை விட்டு போனதும், மருமகள் பேரப் பசங்களை கூப்பிட்டுக்கிட்டு அவ அம்மா வீட்டுக்கே போய்ட்டா… இந்த வயசான காலத்துல இந்த கிழவி என்ன பண்ணுவான்னு கொஞ்சம் கூட அக்கறை இல்லாம அவ பாட்டுக்கு போய்ட்டா.. என்னை தனியா அனாதையா விட்டுட்டு போய்ட்டாங்க… அப்படினு ஊரு முழுக்க சொல்லி வச்சிருக்க.. போதாதுக்கு என்கிட்டயே 100 தடவை மேல சொல்லி இருக்க.. இன்னும் நீ புதுசா வேற சொல்லனுமா.. ” என்று பாட்டி கூறியதை நீட்டி முழக்கி கூறிக்கொண்டு இருந்தாள் அவரிடமே.
” அடப் போடி… வந்துட்டா பெரிய இவளாட்டம்.. எதுக்குடி வந்த நீ இப்போ.. என்னை எனக்கு பாத்துக்க தெரியாதா..” அவளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட,
” ம்ம்க்கும்.. நீ பார்த்துகிட்ட லட்சணம் தான் நல்லா தெரியுதே.. ஏதோ நான் பாவம் பார்த்து வந்து இருக்கேன். என்னையும் அனுப்பி விட்டனு வச்சிக்கோ.. எவளும் வர மாட்டா.. ” என்று மேலும் அவரை சீண்டிக் கொண்டிருந்தாள்.
இந்த முறை அவரிடம் மௌனம்..
அவரிடம் இருந்து எந்த பதிலும் வராததால் அவரை திரும்பிப் பார்த்தாள்..
அவரோ கண்கள் கலங்க அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“என்ன பாட்டி.. எதுவும் பேசாம அமைதி ஆகிட்ட.. உனக்கு இது எல்லாம் செட் ஆகாது.. எப்போ பாரும் வள வளனு பேசிட்டு இரு.. அதுக்கே உங்கிட்ட இருந்து நோய் எல்லாம் பறந்து போயிரும். நீ அமைதியா இருந்தனா அதுவும் உன்கூட சேர்ந்து வந்து உக்காந்துகிரும்.. அதுனால தான வந்ததுல இருந்து உங்கிட்ட பேச்சு கொடுத்துட்டு இருக்கேன்.. உங்கிட்ட எல்லாம் உருக்கமா பேசுனா வேலைக்கு ஆகாது. இப்படி அடாவடியா பேசுனா தான், நீயும் பதிலுக்கு பதில் பேசுவ.. ஆனால் நீ சும்மா இருந்தாலும் உன் வாய் சும்மா இருக்காது பாரேன்..” என்று பாட்டியிடம் சொல்லி விட்டு வாய் விட்டு சிரித்துக் கொண்டாள்.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த பாட்டியும் அவளது பேச்சைக் கேட்டு, சிரித்த படியே.. “போடிச் சிறுக்கி மவளே..” என்று அவளை செல்லமாக திட்டியும் கொண்டார்..
இருவரும் பேசி சிரித்துக்கொண்டே, அவருக்கு கஞ்சியையும், அதற்கு துவையலையும், கஷாயத்தையும் வைத்துக் கொடுத்தவள், அவரை உண்ண வைத்து விட்டே அங்கிருந்து சென்றாள்.
நித்தமும் வருவாள்..