Loading

அத்தியாயம் 5

 

ராகவர்ஷினியின் கேள்வியில் மற்ற மூவரும் அதிர்ந்து நிற்க, அவளோ ஒரு விரக்தி புன்னகையுடன் பேசினாள்.

 

“அவங்க தான் உனக்கும் அம்மான்னு அவங்க அப்பா கிட்ட சொல்லிட்டு இருக்கும்போது எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா?” என்றவளின் கன்னம் தாண்டி வழிந்து கொண்டிருந்தது கண்ணீர்.

 

அதைக் கண்ட கீதாஞ்சலியோ மண்ணுக்குள்ளே புதைந்து விடுவது போல குன்றித்தான் போனார்.

 

ஆம், உதயகீதனை ஈன்றெடுத்தவர் கீதாஞ்சலி தான். கேசவமூர்த்தியின் முன்னாள் மனைவியும் அவரே. உதயகீதனின் வாழ்க்கையின் கருப்பு பக்கத்திற்கு காரணமானவரும் அவரே!

 

கேசவமூர்த்தியின் தூரத்து உறவினரின் பெண் தான் கீதாஞ்சலி. சற்று நொடிந்து போன குடும்பம். அதனால் தானோ என்னவோ கேசவமூர்த்தியின் தாய் நீலவேணி கீதாஞ்சலியை தன் மகனுக்கு வரனாக தேர்ந்தெடுத்தாரோ, அது அவரின் மனம் மட்டுமே அறியும் ரகசியம்!

 

கேசவமூர்த்தியின் தந்தை கார்மேகம், கேசவமூர்த்தியின் இருபது வயதிலேயே காலமாகி இருக்க, அந்த சிறு வயதிலேயே பாட்டன் வழி வந்த தொழிற்சாலையை நடத்தி, கிடைக்கும் இடைவேளையில் அவரின் படிப்பையும் முடித்து என்று ஒருவித அழுத்தத்தில் தான் இருந்தார் அவர்.

 

அதனால், வீட்டு பரிபாலனம் முழுவதும் நீலவேணியின் வசமானது. அதற்கு முன்னரும் அப்படி தான் என்றாலும், கணவரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தவருக்கு, கணவர் இறந்த பின்னர், முழு சுதந்திரம் கிடைத்தது போலிருந்தது.

 

அதனால் உண்டான ஆளுமை நீலவேணியின் நியாய புத்தியை சற்று மழுங்கடித்தது என்று தான் கூற வேண்டும்.

 

இதில், கேசவமூர்த்தியும் அன்னையின் சொல்லுக்கு மதிப்பு தர, அது கர்வமாக நீலவேணியின் மனதில் பதிந்து போனது. அதுவே, அவரின் குடும்பத்தில் அனைவரும் அவருக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவருக்குள் தோற்றுவித்தது.

 

இந்த சமயத்தில் தான், கேசவமூர்த்திக்கு பெண் பார்க்க, கீதாஞ்சலியை பற்றிய தகவல் கிடைத்தது.

 

இருவரின் ஜாதக பொருத்தம் அத்தனை நன்றாக இல்லை என்று ஜோசியர் கூறியிருந்தாலும், கீதாஞ்சலியின் குடும்ப சூழ்நிலை நீலவேணியை யோசிக்க வைத்தது.

 

மேலும், அவரின் ஒன்று விட்ட தங்கையோ, “அக்கா, எப்பவும் நமக்கு கீழ இருக்கவங்க தான் நம்ம சொல்லுக்கு அடங்கி இருப்பாங்க.” என்று தூபம் போட்டிருக்க, அது நீலவேணியிடம் தன் வேலையை காட்டியிருந்தது.

 

விளைவு, மணமக்கள் இருவரிடமும் சம்மதம் கேட்காமல், அவர்களின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

 

கேசவமூர்த்தி, முதலிலிருந்தே தாயின் விருப்பத்தை மதித்து நடந்து வந்ததால், அவருக்கு இந்த திருமணம் பெரிய விஷயமாக படவில்லை. இத்தனை விரைவாக திருமணம் செய்து கொள்ள வேண்டுமா என்பதை தவிர, அதில் ஆட்சேபிக்க வேறு எந்த காரணமும் அவருக்கு இல்லை.

 

கீதாஞ்சலிக்கோ, குழப்பமான மனநிலை தான்!

 

பேரழகி இல்லை என்றாலும், பார்ப்பவரை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கும் அழகியான கீதாஞ்சலிக்கு கல்லூரியில் அவ்வபோது காதல் கடிதங்கள் வந்தாலும், படிப்பை காரணம் காட்டி அதை மறுத்திருந்தார்.

 

ஆனால், இப்போது திருமணம் என்று வீட்டில் சொல்லியிருக்க, படிப்பை நிறுத்தும் இந்த திருமணம் அவசியமா என்று சிந்திக்க ஆரம்பித்திருந்தார் கீதாஞ்சலி.

 

அதை கலைக்கும் விதமாக, “இங்க பாரு கீதா, நம்ம தவம் செஞ்சா கூட, இந்த மாதிரி பெரிய சம்பந்தம் நமக்கு கிடைக்காது. உனக்கு அடுத்து தம்பி, தங்கச்சிங்க இருக்காங்க. அவங்க படிப்பு, கல்யாணத்துக்கு கூட சம்பந்தியம்மா உதவி செய்யுறேன்னு சொல்லி இருக்காங்க. எவ்ளோ பெரிய மனசு பார்த்தியா அவங்களுக்கு? அதனால, அடம்பிடிக்காம, கல்யாணத்துக்கு ஒத்துக்குற வழியை பாரு!” என்று அவரின் அன்னை கிட்டத்தட்ட மிரட்டி தான் இருந்தார்.

 

“அம்மா, இதென்ன வியாபாரமா? என்னை வித்து தம்பி தங்கச்சிங்க வாழ்க்கையை சீர்படுத்த போறீங்களா?” என்று ஆதங்கமாக கீதாஞ்சலி வினவ, பட்டென்று அவரை அடித்திருந்த அவரின் தாயோ, “என்ன வார்த்தைடி சொல்ற? உனக்கு நல்லது சொன்னா… எங்களையே இப்படி பேசி அவமானப்படுத்துவியா? இந்த கல்யாணம் பண்ணிக்கிட்டா, உனக்கு என்னடி குறைச்சல்?” என்று பொங்கி விட்டார்.

 

அதன்பிறகு கீதாஞ்சலியும் அமைதியாக யோசிக்க, படிப்பை தவிர வேறு எந்த காரணங்களும் திருமணத்திற்கு எதிராக எழவில்லை. எனவே, திருமணத்திற்கு பிறகு, படிப்பை தொடர ஏதாவது வழி செய்யலாம் என்று எண்ணி, அவரும் சம்மதம் தெரிவிக்க, அந்த ஊரே வியக்கும் வண்ணம் கோலாகலமாக நடந்தது கேசவமூர்த்தி – கீதாஞ்சலியின் திருமணம்.

 

முதலிரவு அறையிலேயே, கீதாஞ்சலி அவரின் படிப்பை பற்றி கேசவமூர்த்தியிடம் கூற, “படிக்கிறது நல்ல விஷயம் தானமா. உன் படிப்புக்கு எதிரா நான் இருக்க மாட்டேன். நீ தாராளமா படிக்கலாம். ஆனாலும், அம்மா கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கோ. என்னதான் இருந்தாலும், வீட்டுக்கு பெரிய மனுஷி இல்லையா?” என்று கணவர் கூறியதைக் கேட்டு அகமகிழ்ந்து தான் போனார் கீதாஞ்சலி.

 

அவர்களின் தாம்பத்திய வாழ்வும் சிறக்கவே செய்தது, அந்த படிப்பு விஷயத்தை பற்றி மாமியாரிடம் கூறும் வரை.

 

ஒரு வாரம் முழுக்கவே, பகல் முழுவதும் விருந்து, இரவு நேர தாம்பத்யம் என்று கீதாஞ்சலியின் நேரம் கடக்க, அன்று கேசவமூர்த்தி வேலைக்கு சென்றிருக்க, சற்று ஆசுவாசமாக உணர்ந்த கீதாஞ்சலி நீலவேணியிடம் பேசிக் கொண்டே மதிய உணவுக்கான ஆயத்த பணிகளை பார்த்துக் கொண்டிருந்தார்.

 

“கீதா, எனக்கு அடுத்து இந்த குடும்பத்தை நீதான் பொறுப்பா பார்த்துக்கணும். மூர்த்திக்கு எத்தனையோ பெரிய இடத்து சம்பந்தம் வந்திருந்தாலும், அவங்களை விட்டுட்டு உன்னை தேர்ந்தெடுத்துக்கு காரணம் கூட, நீ பொறுப்பா குடும்பத்தை பார்த்துப்பன்னு தான்.” என்று மருமகளின் மனதில் ஊசி ஏற்றுவது போல தனக்கு தேவைப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொண்டிருந்தார் நீலவேணி.

 

அதைக் கேட்டு முதலில், ‘என்னடா இது?’ என்று கீதாஞ்சலி திகைத்தாலும், பிறகு அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், “சரிங்க அத்தை.” என்று மட்டும் கூறினார்.

 

அத்துடன் நிறுத்தினாரா நீலவேணி?

 

“என் மகன் எப்பவும், என் சொல்லை தட்டமாட்டான்.” என்று கர்வமாக கூறிய நீலவேணி, கீதாஞ்சலியை ஒரு பார்வை பார்க்க, அது ‘நீயும் அப்படி தான் இருக்க வேண்டும்!’ என்பதை சொல்லாமல் சொல்லியது.

 

கீதாஞ்சலிக்கோ நீலவேணியின் பேச்சுக்கள் அனைத்தும் மூச்சு முட்டுவது போலிருந்தது.

 

‘இப்போ படிப்பை பத்தி சொன்னா…’ என்று சிந்தித்த கீதாஞ்சலிக்கு, ‘கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க.’ என்ற பதில் கிடைக்க, சற்று ஆறப் போடலாம் என்று எண்ணினார்.

 

மற்றபடி, நீலவேணி கீதாஞ்சலியை நன்றாக தான் கவனித்துக் கொண்டார்.

 

‘அவன் லேட்டா தான் வருவான் கீதா. அதுவரை சாப்பிடாம இருப்பியா?’ என்பதிலிருந்து, ‘இதென்ன, இவ்ளோ கம்மியா சாப்பிடுற? பாரு, உன் உடம்பு எப்படி இருக்குன்னு? நல்லா சாப்பிட்டா தான உடம்புல ஒட்டும்?’ என்று கண்டிப்பது வரை, அனைத்தும் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது, அவரின் கவனிப்பு அவரின் வாரிசுக்காக என்பதை அறியும் வரை!

 

முதல் மாத முடிவிலேயே, “என்னம்மா கீதா, நாள் தள்ளி போகலையா? அதுக்கு தான் நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்த சொன்னேன்.” என்று குற்றம்சாட்டுவது போலில்லாமல் சாதாரணமாக கூறுவது போலிருந்தாலும், அதில் கண்டிப்பு அளவு கடந்து தெரிந்தது கீதாஞ்சலிக்கு.

 

அதனுடன், மனதினுள் நெருஞ்சி முள்ளாக குத்தியது மாமியார் காட்டிய அக்கறை!

 

அதைப் பற்றி கேசவமூர்த்தியிடம் கூறினாலும், அவருக்கு இருந்த வேலைப்பளுவின் காரணமாக, வீட்டில் நடப்பவற்றை சரியாக கவனிக்காமல், “அம்மா நம்ம நல்லதுக்கு தான் சொல்லுவாங்க கீது. இப்போ என்ன குழந்தை தான? அடுத்த மாசம் நாள் தள்ளி போனா, சந்தோஷப்பட்டு உன்னை கொண்டாடுற முதல் ஆள் அவங்களா தான் இருப்பாங்க.” என்று கூறினார்.

 

அவர் செய்த மிகப்பெரிய தவறு இது தான்!

 

கீதாஞ்சலியின் மனம் என்னும் குட்டையில் எறியப்பட்ட முதல் கல்லும் அது தான்!

 

கேசவமூர்த்தி கூறியது போல, அடுத்த மாதம் கீதாஞ்சலிக்கு நாள் தள்ளியிருக்க, அவரை கொண்டாட தான் செய்தார் நீலவேணி.

 

மகனிடம் கூட, “புள்ளதாச்சி பொண்டாட்டியை கவனிக்காம அப்படி என்னடா உனக்கு வேலை?” என்று சத்தம் போட, கேசவமூர்த்தியோ கீதாஞ்சலியிடம், “பார்த்தியா எங்கம்மாவை?” என்று பெருமை பேசினார்.

 

ஆனால், கீதாஞ்சலிக்கு தான் அவற்றை எல்லாம் ஏற்க முடியவில்லை.

 

‘இதெல்லாம் அவங்க வாரிசுக்காக!’ என்ற எண்ணம் அவர் மனதினுள் ஊறிப் போயிருந்தது.

 

அதனுடன், கர்ப்பகால மனஉளைச்சல்களும் சேர்ந்து கொள்ள, கீதாஞ்சலி மனதளவில் சோர்ந்து போனார்.

 

இந்த சமயம் தான், “கர்ப்பமா இருக்குறப்போ, பொண்டாட்டியோட ஆசைகளை நிறைவேத்தனுமாமே. உனக்கு என்ன ஆசை கீது?” என்று கேசவமூர்த்தி கேட்க, சந்தர்ப்பத்தை விட மனதில்லாத கீதாஞ்சலி, “என்னன்னாலும் நிறைவேத்துவீங்களா?” என்று கேட்டு, அதற்கு சம்மதமும் வாங்கியவர், “நான் படிக்கணும்.” என்று கூறினார்.

 

ஏனென்றால், முதல் மாத இறுதியில் தான், மாமியாரிடம் படிப்பை பற்றி கூறி, அதற்கு திட்டு வாங்கி இருந்தார் கீதாஞ்சலி.

 

“கல்யாணமாகிடுச்சு… கட்டினவனை கவனிச்சு, பிள்ளைங்களை பெத்து, அதுங்களை படிக்க அனுப்ப வேண்டிய வயசுல, படிக்க போறாளாமே! கல்யாணமாகி ஒரு மாசம் ஓடிப்போச்சு… இன்னும் நல்ல சேதி சொல்ல வக்கில்ல… இதுல, படிப்பு ஒன்னு தான் கேடு!” என்று வார்த்தைகளை விட்டிருந்தார் நீலவேணி.

 

அது கேசவமூர்த்தியின் காதிற்கும் செல்ல, “அது… இப்போ நீ படிக்க போனா, இடையில கர்ப்பமாகிட்டா, உனக்கு கஷ்டமேன்னு அம்மா யோசிக்கிறாங்க.” என்று அந்த பேச்சை தவிர்க்க தான் பார்த்தார் அவர்.

 

தாயின் பேச்சைக் கேட்டே வளர்ந்தவாகிற்றே! அதை மீற, சிறிது காலவகாசம் தேவைப்பட்டது அவருக்கு.

 

அந்த சம்பவமும், கீதாஞ்சலியின் மனதிற்குள் ஆழமாக இறங்கியிருக்க, இப்போது கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பற்றிக் கொண்டார் அவர்.

 

கேசவமூர்த்திக்கு தான் தர்மசங்கடமான நிலை. எனினும், முதல் முறை மனைவி கேட்டதை செய்து கொடுக்க வேண்டும் என்று எண்ணியவர், நீலவேணியை ஏதோ பேசி சமாளித்தார்.

 

அதன்படி, அடுத்த ஒரு வாரத்தில், கீதாஞ்சலி மீண்டும் கல்லூரி செல்ல ஆரம்பித்தார்.

 

இந்த நிகழ்வு தான், கேசவமூர்த்தி மற்றும் கீதாஞ்சலியின் வாழ்க்கையையே மாற்றப் போகிறது என்பதை இருவருமே அப்போது அறியவில்லை.

 

அவ்வபோது மாமியார் முகம் திருப்புதலும், கர்ப்பகால அவஸ்தைகளும் தவிர சுமூகமாகவே சென்றது கீதாஞ்சலியின் வாழ்வு.

 

கேசவமூர்த்திக்கோ வேலை கழுத்தை பிடிப்பதை போலிருக்க, அவர் மீண்டும் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

 

விளைவு, கீதாஞ்சலி வெகுவாகவே தனிமையை உணர ஆரம்பித்தார். அவர் பிறந்த வீட்டிற்கு செல்லலாம் என்றால், அவரின் பெற்றோரோ, தம்பிக்கு இதை செய்ய வேண்டும், தங்கைளுக்கு அதை செய்ய வேண்டும் என்று பட்டியலிட,  அங்கு இருக்கும் நிமிடங்கள் எல்லாம் நரகமாகியது கீதாஞ்சலிக்கு.

 

ஒருமுறை தாங்க முடியாமல், ஏதோ பேசிவிட, “உனக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சுடுச்சுன்னு ஆடாத கீதா. அதை அமைச்சு கொடுத்தது நாங்க தாங்கிறதை மறந்துடாத. பணத்தை பார்த்ததும், உன் புத்தியும் மாறிடுச்சுல.” என்று அள்ள முடியாத வார்த்தைகளை கொட்ட, அத்துடன் அங்கு வருவதையே நிறுத்திக் கொண்டார் கீதாஞ்சலி.

 

பிறந்த வீடு ஆதரவும் இல்லாமல், புகுந்த வீடு ஆதரவும் இல்லாமல் தனித்து வாடுபவரை முதலில் கவனித்து பார்த்தது அவள் கல்லூரியில் புதிதாக சேர்ந்த ஆசிரியர் கிரிதரன் தான்.

 

படித்து முடித்த கையோடு வேலைக்கு சேர்ந்திருந்த கிரிதரனின் முதல் பணி, கீதாஞ்சலியின் வகுப்பிற்கு தான்.

 

கலகலப்பாக, அதே சமயம் மிகுந்த ஈடுபாட்டுடன் கிரிதரன் எடுக்கும் வகுப்பு அந்த கல்லூரியில் மிக விரைவாக பிரபலமானது. அவருக்கென்று தனி ரசிகப்பட்டாளமே உருவானது.

 

கீதாஞ்சலிக்கு கூட, அவரின் வகுப்பு பிடித்தமானது.

 

படிப்பு மட்டுமின்றி, மாணவர்களின் மனக்குறையை போக்க, எந்நேரம் என்றாலும் அவரை சந்தித்து பேசி தீர்வு பெறலாம் என்று அவர் கூறியிருக்க, அப்படி தான் கீதாஞ்சலியும் அவரின் தனிமையை பற்றி கிரிதரனிடம் கூறி ஆறுதல் தேடினார்.

 

கர்ப்பமாக இருந்த போதிலும், படிப்பை விடாமல் இருக்கும் கீதாஞ்சலியின் மீது கிரிதரனுக்கு பெரிய மரியாதை இருந்தது. அதன் காரணமாகவே, மற்றவர்களை காட்டிலும், கீதாஞ்சலியை சிறப்பாக கவனித்துக் கொண்டார்.

 

ஆனால், அது கீதாஞ்சலியின் மனதில் சலனத்தை உண்டு செய்யும் என்று அவர் எண்ணவே இல்லை. சலனமுற்றவருக்குமே, அது அத்தனை எளிதாக தெரிந்து விடவில்லையே!

 

நாட்கள் ஓட, செமஸ்டர் விடுமுறையிலேயே கீதாஞ்சலிக்கு சுகப்பிரசவமானது. கீதாஞ்சலியின் அழகை உரித்து வைத்து பிறந்திருந்தான் அவரின் மைந்தன்.

 

மகன் பிறந்ததில், பெற்றவர் இருவருக்கும் எத்தனை ஆனந்தனமோ, அதை விட பல மடங்கு ஆனந்தம் நீலவேணிக்கு!

 

அவரின் அலப்பறைகளை காணும் போது, ஒருவேளை மகள் பிறந்திருந்தால், இவர் என்னென்ன கூறியிருப்பார் என்று எண்ணுவதற்கு கூட பயமாக இருந்தது கீதாஞ்சலிக்கு.

 

இனியாவது வாழ்வில் மகிழ்ச்சி உதயமாக வேண்டும் என்ற எண்ணத்திலும், அவர் மகன் என்றே அடையாளப்படுத்த வேண்டும் என்றும், ‘உதயகீதன்’ என்ற பெயரை தேர்ந்தெடுத்தது கீதாஞ்சலி தான்.

 

தன் கணவர் பெயரை வைக்க வேண்டும் என்று ஆட்டம் போட்ட நீலவேணியை கேசவமூர்த்தியிடம் சொல்லி சமாளித்த கீதாஞ்சலி, எப்படியோ மகனுக்கு தான் தேர்ந்தெடுத்த பெயரையே வைத்தும் விட்டார். இந்த முதல் வெற்றி, அவருக்கு மகிழ்ச்சியை அள்ளி தர, இதே போன்று மற்ற விஷயங்களிலும் வென்று விடலாம் என்று கனவுக்கோட்டை கட்டினார்.

 

ஆனால், அதை சர்வசாதாரணமாக இடித்து தரை மட்டமாக்கி இருந்தார் நீலவேணி.

 

கணவரை வைத்து காரியம் சாதிக்கும் கீதாஞ்சலியின் யுக்தி எல்லாம் நீலவேணியின் அனுபவம் முன்னால் செல்லாக்காசாகிப் போனது.

 

தவிர, ‘குழந்தையை ஒழுங்கா வளர்க்க தெரியல.’ என்று குற்றச்சாட்டு வேறு!

 

மீண்டும் கீதாஞ்சலியின் வாழ்வு இருளை நோக்கி செல்வதாக அவருக்கு தோன்ற, கல்லூரிக்கு சென்றால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும் என்று அதற்கான நாட்களை எண்ண ஆரம்பித்தார் கீதாஞ்சலி.

 

அது ஒன்றும் அத்தனை எளிதாக இருக்கவில்லை. முதலிலேயே, கீதாஞ்சலி படிக்க செல்வதை விரும்பாத நீலவேணி, இப்போது குழந்தையை காரணம் காட்டி அவரை வீட்டிலேயே இருக்க வைத்து விட, உதயகீதனுக்கு மூன்று வயதாகி, அவனை பள்ளியில் சேர்க்கும் போது தான், கீதாஞ்சலியும் அவரின் கடைசி வருட படிப்பை படிக்க முடிந்தது.

 

அதற்கும், “பிள்ளை படிக்கப் போற வயசுல, உனக்கென்ன படிப்பு கேட்குது?” என்று நீலவேணி தடுக்க பார்க்க, முதல் முறை அவரை எதிர்த்து பேசியிருந்தார் கீதாஞ்சலி.

 

அதனை, வேறு விதமாக திரித்து நீலவேணி கேசவமூர்த்தியிடம் கூற, கணவன் மனைவிக்கு இடையே முதல் முறை பூசல் உண்டானது.

 

எனினும், படிப்பை விடாமல் பிடித்துக் கொண்டார் கீதாஞ்சலி. அதனுடன், கிரிதரனின் நினைவுகளையும் தான்!

 

ஆம், கிரிதரன் மீதான சலனங்கள் எதற்கென்ற காரணம் அறிந்த கீதாஞ்சலி முதலில் திகைத்து, தன்னைத்தானே நிந்தித்து, பின் செய்வதறியாது தனிமையில் அழுது புலம்பி, இப்படி எத்தனையோ முயன்று பார்த்தாலும், வாடியிருந்த மனதுக்கு இதமளிக்கும் கிரிதரனின் ஆறுதல்களை தேடிய மனதை அடக்கும் வழி தெரியவில்லை அவருக்கு.

 

முதலில், ‘இது தப்பு. எனக்கு கல்யாணமாகிடுச்சு. குழந்தை இருக்கு.’ என்று மனதை கட்டுப்படுத்த முயன்றாலும், கட்டுக்குள் வராமல் ஆட்டம் காட்டும் மனதை என்ன செய்வது என்று தெரியாமல் திணறி தான் போனார்.

 

இதற்கும் தீர்வு காண, சம்பந்தப்பட்டவரிடமே சென்று நின்றார் கீதாஞ்சலி.

 

அதைக் கேட்டு அதிர்ந்த கிரிதரனோ, “சாரி கீதாஞ்சலி. உனக்கு இப்படி ஒரு தாட் எப்படி வந்துச்சுன்னு தெரியல. அதுக்கு நான் காரணமா இருந்தா, என்னை மன்னிச்சுடு.” என்று கிரிதரன் வருத்தத்துடன் கூற, “நான் தான் சாரி கேட்கணும் சார். எனக்கும், இப்படி ஒரு எண்ணம் எதனால வந்துச்சுன்னு தெரியல. கல்யாணமாகி குழந்தையும் வந்ததுக்கு அப்பறம் இப்படி ஒரு எண்ணம்… எனக்கு என்னை நினைச்சாவே அசிங்கமா இருக்கு. ஒருவேளை, வீட்டுல கிடைக்காத ஆறுதலை நீங்க கொடுத்ததால இருக்கலாம்… இதை மனசுல வச்சுட்டு… அந்த பாரத்தை என்னால சுமக்க முடியல. அதான், உங்க கிட்ட சொன்னலாவது ஏதாவது தீர்வு கிடைக்கும்னு வந்தேன்.” என்று வேதனையுடன் கூறிய கீதாஞ்சலியை வருத்தத்துடன் பார்த்தார் கிரிதரன்.

 

அதன்பிறகு, இருவரும் சந்திப்பதை தவிர்க்க முயல, விதி நீலவேணியின் மூலம் அவர்களின் வாழ்க்கை பாதையை மாற்ற திட்டம் தீட்டி விட்டது.

 

இறுதியாக கீதாஞ்சலி கிரிதரனிடம் பேசியது கோவிலில் என்பதால், அதை நீலவேணியின் ஒன்று விட்ட தங்கை பார்த்து விட்டு, நீலவேணியிடம் பார்த்ததை மட்டும் கூறாமல், மேலும் சிலவற்றையும் சேர்த்துக் கூற, கொதித்து போனார் நீலவேணி.

 

ஏற்கனவே, குழந்தை வளர்ப்பில் குற்றம் கண்டு பிடித்து திட்டும் மாமியாரை வெறுத்து ஒதுங்கி செல்லும் கீதாஞ்சலி அன்றும் அது போலவே செய்ய, ஆங்காரத்தில் அவரின் முடியை பிடித்து இழுத்து அடித்து விட்டார் நீலவேணி.

 

இந்த சம்பவம் நடக்கும் சமயம் கேசவமூர்த்தி மகனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றிருந்தார். அது, கீதாஞ்சலிக்கு எதிராக மாறி விட்டிருந்தது. அதுவே, அவரை அந்த முடிவை எடுக்க வைக்கவும் காரணமாக இருந்தது.

 

தொடரும்…

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 29

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
24
+1
1
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. கீதாஞ்சலி என்ன சொல்ல?.

  2. நைஸ் கோயிங் 😍😍😍😍

    கீதாஞ்சலி செஞ்சதை நியாயப்படுத்த முடியாது….. உதயனை பத்தி கூட நினைக்கலையே….அப்போ செஞ்சதுக்கு இப்போ அனுபவிக்கிறாங்க தேவை தான் 😡

    1. Author

      நன்றி சிஸ் 😍😍😍 உண்மை… உதய் பத்தி யோசிச்சுருக்கணும் 😷😷😷