
நதி 5
அன்று
பேயென மழை பெய்துகொண்டிருந்த அந்தி மழைச் சாரலில், சில்லென நனைந்தபடி தன் வாகனத்தை இயக்கி வந்துகொண்டிருந்தாள் அகரநதி. மழை அவளுக்குப் புதிதல்ல. ஆனால் அன்று மழை, அவளுக்குள் ஏதோ ஒன்றை கிளறி விட்டது போல இருந்தது. ஹெல்மெட்டின் உள்ளே விழுந்த துளிகள், காற்றோடு கலந்து முகத்தைத் தொட்டபோதெல்லாம் அவள் உதடுகளில் சின்ன சிரிப்பு தோன்றியது. அந்த சிரிப்பு மகிழ்ச்சிக்கானதா, சுதந்திரத்துக்கானதா, இல்லை தன்னைத் தான் மறந்த தருணத்துக்கானதா என்று அவளுக்கே தெரியவில்லை.
“என்ன சிங்கம், நனைய வச்சிட்டாளேன்னு வருத்தப்படுறியா?” என்று அவளின் ஸ்கூட்டியைப் பார்த்து கேட்டாள். அதற்குச் ‘சிங்கம்’ என்று பெயர் சூட்டியதும் அவளே. அதில் ஏறி அமரும் போதெல்லாம், சிங்கத்தின் மீதே ஏறி அமர்வதை உணர்ந்ததால் அந்தப் பெயரைச் சூட்டினாள். அவள் சொல்லாவிட்டாலும், மழையில் நனைந்து கொண்டு, சிங்கத்தின் மீது அமர்ந்து செல்லும் மகிஷாசூர வர்த்தினியைப் போலவே காட்சி தந்தாள் அகரநதி.
“சரி சரி… எனக்கு மழையில நனையுறது பிடிக்கும். சோ உனக்கும் பிடிச்சுதான் ஆகணும்.” என்று அவளே பேசிக்கொண்டு சிரித்தபடி வந்தாள். மழையைக் கண்டு ஒதுங்கி நிற்பவர்களைப் பார்த்துச் சிரிப்பு தான் வந்தது அவளுக்கு. சிலருக்கு மழை சிரமம்; சிலருக்கு அது சுவாசம். அவள் இரண்டாவது வகை.
சென்னையின் பிரதான தார் சாலையில் வாகனங்கள் குறைந்து, சாலை சற்றே வெறிச்சோடி இருந்தது. அந்த வெறிச்சோடிய சாலையில், நாட்டையே ஆளும் அரசி போல் சீறிப் பாய்ந்துகொண்டிருந்தவளின் கண்களில் அன்று தான் அவன் விழுந்து தொலைத்தான். அந்த அவன் – தீரேந்திரன்.
நிஹாரிக்காவின் கைப்பேசியில் ஒருமுறை பார்த்த அதே முகம். ஆனால் அப்போது கவனிக்காத அந்த முகம், இன்று மழைச்சாரலில் மாசற்ற புன்னகையுடன் நேருக்கு நேர் வந்தது. மழை காரணமாக அவன் முகம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அவனை நெருங்க நெருங்க அவளின் இதயம் தாளமிட ஆரம்பித்தது. காரணம் புரியாத ஒரு பதட்டம், இனிமையான ஒரு துடிப்பு.
தேர்வில் தேர்ச்சி பெற்ற உற்சாகத்தில், காக்கி சட்டை அணியாத காவலன், மழையில் நனைந்தபடி தன் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் இருந்த சந்தோஷம் போலியானது அல்ல. அது உழைப்புக்குப் பிறகு கிடைக்கும் உண்மையான மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியைப் பார்த்தபோது தான் அவளுக்கு முதல் முறையாக, “இந்த மனிதன் வேற மாதிரி” என்ற எண்ணம் வந்தது.
விழிகள் அவனைத் தாண்ட மறந்தபோது தான், நிலை தடுமாறி வண்டியிலிருந்து கீழே விழுந்தாள். அவள் சாலையின் ஓரத்தில் விழ, அவளின் சிங்கமோ தனியே ஓரமாய் சரிந்து விழுந்தது. மழையில் நனைந்துக் கொண்டிருந்தவன், அவளைப் பார்த்ததும் ஓடிவந்தான். அவள் எழுந்து நிற்பதற்கு உதவி செய்தான் தீரேந்திரன். அவனின் முதல் தொடுதலிலேயே, ஏதோ ஒரு மென்மை அவளை ஆட்கொண்டது. அவன் விழிகளில் இருந்த கம்பீரமும், அதே நேரம் இருந்த கவலையும் அவளுக்குள் ஒரு விசித்திரமான அமைதியை கொடுத்தது.
அவளை விட்டுவிட்டு, அவள் வாகனத்தை தூக்கி நிறுத்தியபோது, அவள் மனம் மட்டும் இன்னும் அவன் கைகளிலேயே இருந்தது. “ஏய் அதி, அவன் போலீஸ். கெட்டவனா தான் இருப்பான். அவனை பார்க்காதே.” என்று அவளுடைய மூளை எச்சரித்தது. ஆனால் மனமோ, தன்னை தூக்கி நிறுத்திய அந்த ஆண்மகனின் அழகை, மயில் தோகையாய் இமை விரிய ரசித்தது. அவளின் காஜலிட்ட விழிகள் அவனை விட்டு நகர மறுத்தன.
“என்னது, கண்டதும் காதலா? அதி, நீ அந்த ரகம் இல்லை. அவன் பெரிய பேரழகனும் இல்லை.” என்று இன்னொரு குரல் அவளுக்குள் பேச முயன்றது. அதற்குப் பதிலாக இன்னொரு குரல், “கெட்டவனா இருந்தா ஹெல்ப் பண்ணிருக்க மாட்டானே. அவன் நல்லவன் தான். போலீஸ்லையும் நல்லவங்க இருக்க தான் செய்வாங்க.” என்று மெதுவாகச் சொன்னது.
அவளுக்குள் இப்படியொரு பட்டிமன்றம் நடக்கிறது என்பதை அறியாதவனாய், “ஏய் பொண்ணு, பார்த்து போ.” என்று நேராய் சொன்னான். அவள் துப்பாட்டாவால் மூடியிருந்த முகத்தில், கண்கள் மட்டும் தெளிவாகத் தெரிந்தன. அந்த கண்களில் ஒரு நொடி தன்னைப் பார்த்தவனுக்கு, அவளும் தன் பார்வையை விலக்க முடியாமல் நின்றாள்.
“தேங்க்ஸ்… தீரா.” என்று சொன்னவள், வண்டியை இயக்கி கிளம்பினாள். காற்றில் சிறகை விரித்துப் பறக்கும் பறவையாய் உணர்ந்தாள் அகரநதி. விழிகள் சந்தித்த நொடியில் காதல் வருமா என்றால், இல்லை என்று சொல்லி விட முடியாது. முதல் சந்திப்பிலேயே தன் முகவரியை தொலைத்தவள், தன் சிங்கத்தில் சென்னை மாநகரத்தை பவனி வந்துகொண்டிருந்தாள்.
மழை மெதுவாக நின்றது. தேனை பருகிக்கொண்டிருந்த போதை வண்டை போல இருந்தவள், மழை நின்றதும் சற்று தெளிந்தாள். அதே சமயம் அவளுடைய செல்போனும் இசைந்தது. அவனின் அழைப்பிற்கு செவி மடுத்தாள் பேதைப் பெண்ணவள்.
“சொல்லு கார்த்தி.”
“அதி, எங்கடி இருக்க? காலேஜ் முடிஞ்சா வீட்டுக்கு போக மாட்டியா?” திட்டினான் அவன். கார்த்தியின் குரல் அவளை மீண்டும் நிஜத்துக்கு அழைத்தது. வீடு, அம்மா, அப்பா, அரியர்கள், பொறுப்புகள் – எல்லாம் மீண்டும் நினைவுக்கு வந்தன.
“ஏய், பயங்கர மழைடா… நனைஞ்சுட்டேன்.”
“நனைஞ்சிட்டியா? நீ நனையலனாதான் அதிசயம். இதையே காரணமா சொல்லுறே பார்த்தியா?”
“ஆமா, நீ எங்கே இருக்கடா?”
“நான் கிரிக்கெட் விளையாட வந்திருக்கேன் ஏரியா பசங்க கூட, வீட்டு பக்கத்துல இருக்கிற கிரவுண்டுல இருக்கேன்.”
“சரிடா, நான் வீட்டுக்குத்தான் போயிட்டு இருக்கேன்” அதி மொழிந்தாள்.
“சரி சரி. அம்மா போன் பண்ணினாங்க. வீட்டுக்கு போ. அம்மாக்கு கால் பண்ணி பேசு, பதறிட்டாங்க” என அவன் சொல்ல,
“ஓகே ஓகே! போறேன் பக்கி” எனச் சொன்னவள், வீட்டை நோக்கி பயணமானாள்.
இவளுக்காக வாசலிலேயே காத்திருந்தார் வசந்தி.
“காலேஜ் விட்டால் வீடு வந்து சேர மாட்டியா டி? எங்க சுத்திட்டு வர?” எனக் கேள்விகளை அடுக்கியவர், அவள் நனைந்திருப்பதைப் பார்த்துப் பதறிப் போனார்.
“பரீட்சை நேரத்துல இப்படி நனைஞ்சு வந்திருக்கியே. பரீட்சை எழுத முடியாமல் போனால் என்னடி பண்ணுவ? போடி போ போய் துணியை மாத்திட்டு வா.” என அவளை அறைக்குள் அனுப்பினார்.
இரவு உடைக்கு மாறியவள், தலை முடியை உலர்த்தியபடி வந்தாள்.
“ஏன்டி, மழையில நனைஞ்ச?”
“ஜாலியா இருந்துச்சுமா” பதில் கொடுத்தாள்.
“அதி, உடம்புக்கு எதாவது ஆயிடுச்சுனா என்னடி பண்ணுவ?”
அவர் அக்கறையோடு சேர்த்து கோப முகம் காட்டினார்.
“காலேஜ்க்கு லீவ் போடுவேன் மா” எனச் சிரித்தபடி தாயின் தோளில் சாய்ந்தாள்.
“நல்லா லீவ் போடுவமா? ஏற்கனவே இரண்டு அரியர். இதுல நீ லீவு வேற போடுவியா?” எனப் பேசியபடி கோபாலன் வீட்டிற்குள் நுழைந்தார்.
“அப்பா, அது நான் ஒன்னும் அரியர் வைக்கல. அம்மாக்கு உடம்பு சரியில்லைன்னு லீவு போட்டேன். அது அரியர் விழுந்துருச்சு. அடுத்த செம்ல க்ளியர் பண்ணிக் காட்டலனா, என் பேரு அகரநதி இல்ல” என அவள் சவாலாய் சொன்னாள்.
“இப்படித்தான் இரண்டு வருசமா சொல்லிட்டு இருக்க. பார்ப்போம் மா” எனச் சொல்லியபடி அவர் சோபாவில் அமர்ந்தார்.
தந்தைக்குத் தண்ணீரை எடுத்து வந்து கொடுத்தவள்,
“நான் அரியர் க்ளியர் செய்யுறேன், எனக்கு என்ன வாங்கித் தருவீங்கப்பா?” என ஆசையோடு கேட்டாள்.
“உனக்கு என்ன வேணும் கேளுமா. அப்பா செய்யுறேன்.” அவர் சொல்ல,
“ஓரே ஒரு நாள் லீவ் போட்டு, என் கூடயும் அம்மா கூடயும் டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்களாப்பா? அந்தச் சூப்பர் மார்க்கெட்டுக்கு லீவ் விடுவீங்களா?” என்று அவள் சாதாரணமாய்க் கேட்டு விட,
மகளின் பாசத்தில் நெகிழ்ந்து போய் அமர்ந்திருந்தார். கண்களில் வழிந்த நீரைத் துடைத்துவிட்டு அடுக்களைக்குள் சென்று விட்டார் வசந்தி.
உனக்கு என்ன வேணும் என்று கேட்டால், அதி பொண்ணோ பொருளோ கேட்கவில்லை. மாறாக, குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட வேண்டும் என்றாள். இப்படிப் கேட்கும் மகள் எத்தனை பேருக்குக் கிடைக்கும்?
‘மகளைச் சரியாகத்தான் வளர்த்திருக்கிறோம்.’ எனப் பெருமிதம் கொண்டவர், மகளின் ஈரம் சொட்டிக்கொண்டிருந்த கேசத்தைத் துவற்றியபடி சொன்னார்.
“உனக்காக அப்பா செய்யுறேன்டா. நீ நல்லா படி.”
முகம் மலர்ந்தவள், அடுக்களைக்குள் சென்றாள்.
“அம்மா, பார்த்தீங்களா அப்பாவ? நம்ம கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுறேன்னு சொல்றாங்க. நீங்க தான் கேட்கவே பயந்திட்டு இருந்தீங்க” என வசந்தியின் முகத்தைப் பார்த்து சொன்னாள்.
“நீ பொண்ணு. அதான் கேட்ட உடனே சரின்னு சொல்லிட்டாங்க அப்பா. நான் கேட்டிருந்தால் கன்னத்துல ஒரு அறை தான் விழுந்திருக்கும். மகளுக்கு இருக்குற சலுகை எந்த மனைவிக்கும் இருக்காதுடி. இப்போவே உங்க அப்பா கொடுக்குற சலுகையெல்லாம் அனுபவிச்சுக்க. புருசன் வீட்டுக்கு போனால் இதெல்லாம் கிடைக்காது,” எனச் சலித்தபடி வசந்தி சென்றுவிட,
“அப்பாவ குறை சொல்றதே வேலையா வச்சிருமா. அப்பா நமக்காகத்தான் இவ்வளவு கஷ்டப்படுறாங்க” எனக் காபியை எடுத்துக்கொண்டு தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்
அந்த இரவில், அவள் அறைக்குள் தனியாக அமர்ந்தபோது மட்டும், மழை மீண்டும் பெய்ய ஆரம்பித்தது. இந்த முறை வெளியில் இல்லை. அவளுக்குள்.
டைரியை திறந்தவள், நீண்ட நேரம் வெறும் பக்கத்தை பார்த்தாள். பிறகு மெதுவாக எழுதினாள். இன்று அவள் எழுதிய ஒவ்வொரு வார்த்தையும், அவளுக்குள் முளைத்துக் கொண்டிருந்த ஒரு புதிய உணர்வின் சாட்சி. காதல் என்று சொல்ல முடியாத, ஆனால் மறுக்கவும் முடியாத ஒன்று.
அவள் கண்ணை மூடினாள். மழை, அவன் முகம், அவன் குரல், அந்த ஒரு நொடி தொடுதல் – எல்லாம் மீண்டும் மீண்டும் நினைவில் ஓடியது. இது ஒரு சந்திப்பின் முடிவு அல்ல என்பதை அவள் மனம் உணர்ந்திருந்தது. இது மெதுவாக ஆரம்பிக்கும் ஒரு காதலின் முதல் வரி மட்டுமே.
மழை நின்றிருந்தாலும், அகரநதிக்குள் காதல் மழை தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தது.
காதல் என்று சொல்ல பயமாக இருக்கிறது.ஏனென்றால் அது அவ்வளவு பெரிய வார்த்தை. ஆனால்
அவன் கண்களை மறக்க முடியவில்லை.
மழைச்சாரலில் தெளிவாக தெரியாத முகம்.
ஆனால் நினைவில் மட்டும்
அவ்வளவு தெளிவாய் பதிந்த முகம்
சென்னை மீண்டும் தன் வழக்கமான இரவுக்குள் சென்றுவிட்டது.
ஆனால் அகரநதி ,அந்த மழைக்குள் தான் இன்னும் நின்றிருந்தாள்.
“இது காதல் இல்லையெனில்,இது என்ன?”
அவளுக்கு பதில் தெரியவில்லை.ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக இருந்தது.இது மறந்து போகும் சந்திப்பு இல்லை.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஒருவழியா ஹீரோ ஹீரோயின் சந்திச்சுட்டாங்க … அழகான குடும்பம் … நட்பு … அதுக்கு ஏன் இவ்வளவு சோதனைகள் வரணும் … வில்லன் தான் யாருன்னு தெரியல … டைரி எங்க இருக்குன்னு தெரியலையே
அழகாய் நடந்து முடிந்த நாயகன் நாயகி சந்திப்பு.
இந்திரன் வருவித்த மழையில் நனைந்தபடியே மகிழ்வுடன் தன்னுடைய சிங்கத்தின் மீதேறி மகிஷாசுரமர்த்தினியாக பயணித்தவள் தனது தீரேந்திரனைக் கண்டு நிலை தடுமாறிவிட்டால்.
மழையை சுவாசமாக கொண்டவள் இப்பொழுது தீராவின் வாசம் கண்டு அவனது கைகளுக்குள் அகப்பட்ட மனதுடன்.
வெளியில் பெய்த சாரல் மழை அடங்கி நதியின் உள்ளே அடங்காத காதல் மழை ஆரம்பம்.
அகரநதி தன் மனதை அருவியென டைரியில் வழியவிட்டிருப்பாலோ?
அனைத்தையும் கார்த்தியிடம் பகிர்பவள் தீரனின் மீதான தனது ஈர்ப்பையும் கூறி இருப்பாளா? பார்ப்போம்.