Loading

காதல் -43

 

” எங்க மா போனா… காலையில நான் பேசிட்டு தானே போனேன் ” என மறவன் பதட்டமாக கேட்க..

 

” இல்ல டா இங்க கூட கொஞ்சம் நேரம் வந்து இருந்தா.. நல்லா தான் டா பேசுனா.. என்னாச்சுன்னு தெரியலை.. நீ தேனு கிட்ட வேணும்னா பேசிப் பாரு டா ”

 

” இல்ல மா அவங்க ரொம்ப மன வருத்ததுல இருக்காங்க… அவங்களுக்கும் அவ எங்க போனான்னு தெரியலை ” என கூறியவன் மனதில் தினேஷ் வந்து நிழலாட… வேகமாக அலைபேசியை எடுத்து அவனுக்கு அழைத்தான்.

 

” சொல்லுங்க மறவன்… ஷார்ப்பா 10 மணிக்கு வாங்க…  ” என்ற தினேஷ் பேச்சை இடையில் வெட்டியவன்….

 

” அது இல்ல தினேஷ்… சாயாலியை காணோம்… அங்க எதுவும் வந்தாளா ” என மறவன் கேட்டதும் அதிர்ந்தவன்.. ” வாட்… காணோமா … இருங்க நான் உடனே வரேன்.. இங்க அவங்க வரலை மறவன் ” என்று அலைபேசியை துண்டித்து விட்டு மறவன் வீட்டிற்கு கிளம்பினான் தினேஷ்.

 

” டேய் நேத்து இந்த பையனை வச்சு நீதான் கலாட்டா பண்ண.. அதுல எதுவும் கோவமா இருக்காளா டா ” என சிந்தாமணி தன் சந்தேகத்தை கேட்க.. நேற்று நடந்த நிகழ்வை மனக்கண் முன் கொண்டு வந்தான் மறவன்.

 

மறவன் மீது கோபம் கொண்டு நேராக தன் வீட்டிற்கு சென்றவள் அங்குள்ள தனி அறைக்குள் சென்று கதவடைத்து கொள்ள… பின்னால் அவளை துரத்தி கொண்டு வந்தவன்.. அங்கு தேனு இருப்பதை பார்த்து சங்கட்டமாக நிற்க.. அவனது நிலைமையை புரிந்து கொண்ட தேனு.. ” சாயா உள்ள ரூம்ல இருக்கா தம்பி.. நீங்க போங்க.. நான் கடை வரைக்கும் போயிட்டு வரேன் ” என வீட்டை விட்டு வெளியேறி விட்டார் அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுக்க நினைத்து..

 

வேகமாக அறை வாசலுக்கு சென்றவன்.. ” யாழி ” என கதவை தட்ட , அறையே அமைதியாக இருந்தது…

 

” கதவை திற யாழி ” என மறவன் கேட்ட அடுத்த நிமிடம் கதவை திறந்தவள், அவனை அத்தனை கோவமாக முறைத்து பார்க்க.. ‘ போச்சு டா மறவா இன்னைக்கு உனக்கு சனி உச்சில இருக்கு ‘ என மனதில் நினைத்து கொண்டு.. ” என்னாச்சு ஏன் கோபமா வந்துட்ட” என தெரிந்து கொண்டே அவன் கேட்க…அதில் மேலும் கடுப்பான சாயா…

 

” ஓ.. அப்போ நான் ஏன் இங்க வந்தேனு உங்களுக்கு தெரியாதுல , அப்போ அப்படியே இருக்கட்டும்.. இனிமே நீங்க உங்க வீட்லயே இருங்க.. நான் இங்க இருக்கேன் ” என முதலுக்கும் ஆப்பு வைக்க.. அதிர்ந்து போனான் மறவன்.

 

‘ இதுக்குமேல முடியாது டா மறவா சரண்டர் ஆகிடு ‘ என மனசாட்சி கூறிய அறிவுரையை கேட்டு..  ” யாழி அது சும்மா விளையாட்டுக்கு பண்ணது டி… ” என்றதும்…

 

” எது விளையாட்டுக்கு மறவன்… உங்க கூட வாழ வந்துட்டேன்னு இப்ப என்ன வச்சு விளையாடிட்டு இருக்கீங்களா ” என கண்ணீர் மல்க கேட்க.. அவள் இதை இத்தனை சீரியசாக எடுப்பாள் என்பது தெரியாமல் விழி பிதுங்கி நின்றான் மறவன்.

 

” சரி தப்பு என் மேல தான்… சாரி யாழி ” என இறங்கி வந்து அவள் முன்பு கெஞ்ச… சாயாலியோ அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.

 

அவளை தன் பக்கம் திருப்பி நெஞ்சோடு அணைத்தவன்… ” இங்க பாரு யாழி நீ யாருன்னு அவனுக்கு தெரியனும் அதுக்காக தான் இங்க வர வச்சேன்… இந்நேரம் நீ எனக்கு சொந்தமானவன்னு அவனுக்கு தெரிஞ்சு இருக்கும்.. உன்ன உண்மையாவே விரும்பிட்டான்.. மறக்க கொஞ்சம் நாள் ஆகும் , இதை நம்ம வாய் வார்த்தையா கூட சொல்லி இருக்கலாம், ஆனால் நேர்ல நம்ம ரெண்டு பேரையும் ஒன்னா பார்த்ததுக்கு அப்பறம் அவனுக்கு உன்மேல இருக்கிற எண்ணம் சீக்கிரம் போகும் , அதுக்கு தான் வர வச்சேன், அதோட உன்ன வச்சு அங்க கொஞ்சம் விளையாடிட்டேன் ” என அவள் தலையை வருடிக் கொண்டே பேச.. அமைதியாக அவன் பேசுவதை எல்லாம் உள்வாங்கி கொண்டிருந்தாள் சாயா.

 

” சரி எனக்கு ஒரு விஷயம் சொல்லு ” என்றதும் தலையை உயர்த்தி அவனை பார்த்தாள்..

 

” என்ன விஷயம் ”

 

” தமிழ் மறவனுக்காக இப்போ என் கிட்ட நெருங்கி இருக்கியா… இல்ல தமிழ் காதலனுக்காக நெருங்கி இருக்கியா ” என தன் மனதில் உள்ள முக்கிய சந்தேகத்தை கேட்டு விட.. மேலும் அவனை இறுக்க கட்டிக் கொண்டவள்… ” தமிழ் காதலன் தகுதியையே விட்டுக் கொடுத்த தமிழ் மறவனுக்காக தான் நெருங்கி இருக்கேன் ”  என்றதும் அவன் மனதில் உள்ள கொஞ்ச நஞ்ச பாரமும் இறங்கியது.

 

அவளது பதிலில் ஆதீத மகிழ்ச்சி அடைந்தவன்… அவளது கழுத்து வளைவில் அழுந்த முத்தமிட… அதில் அவள் உடல் சிணுங்கி , அவனை தள்ளி விட்டு அறையில் இருந்து ஓடி இருந்தாள் சாயா..

 

இதுதான் நேற்று நடந்த சம்பவம்… எல்லாம் நன்றாக போய் கொண்டிருக்கும் சமயத்தில் என்னவாகி விட்டது என்று பெரும் குழப்பமாக இருந்தது.

 

அதே நேரம் தினேஷ் வீடு வந்து சேர… ” மறவன் நீங்க சாயா வேலை பார்த்த இடத்தில விசாரிச்சு பார்த்தீங்களா ” என்றான்.

 

” இல்ல தினேஷ்.. உங்களுக்கு தெரியும் தானே… ”

 

” ம்ம் தெரியும் … வாங்க போகலாம் ” என இரு ஆடாவர்களும் சாயா வேலை செய்யும் இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

 

அங்கும் அவள் வரவில்லை என்ற தகவல் வர, நெற்றியை நீவிக் கொண்டு… ” இந்த ஊருக்கு அவ வர முக்கிய காரணம் பழனி தான்.. அவளோட நண்பன்.. அவன் கிட்ட கேட்கலாம் ” என தேனுவிடம் அவனது முகவரியை கேட்டுக் கொண்டு அவனிடம் விசாரிக்க.. அவனும் சாயா இங்கு வரவில்லை என்று கூறி விட்டான்..

 

அனைவரும் சொல்லி வைத்தார் போல ஒரே விஷயத்தை கூறி விட, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அங்குள்ள கல்லில் அமர்ந்து விட்டான் மறவன்..

 

” மறவன் கவலை படாதீங்க.. சாயா எங்கையும் போக வாய்ப்பு இல்ல.. அவங்க போற இடம் எல்லாம் எனக்கு தெரியும்.. அங்க எல்லாம் நம்ம போய் பார்க்கலாம் ” என தினேஷ் சற்று தெம்பூட்ட.. அதில் சற்று தெளிந்தவன் அவனிடம் காரில் ஏறி அவள் வழக்கமாக செல்லும் கோவில், அருவி, பூங்கா , சிறுவர் பள்ளி என பல இடங்களுக்கு அழைத்து சென்றான்.

 

அத்தனை இடங்களுக்கு சென்றாலும் பலன் என்னவோ பூஜ்யம் தான்…  ” இதுக்கு மேலே வெயிட் பண்ண வேணாம் மறவன்… போலீஸ்ல இன்பார்ம் பண்ணிடலாம் ” என தினேஷ் கூறவும்.. அவனுக்கும் அதுவே சரியென பட.. இருவரும் காவல் நிலையம் செல்வதற்காக காரில் ஏறி அமர்ந்தனர்

 

காரில் அமர்ந்தவனின் அலைபேசி அடிக்க.. புருவ முடிச்சுகளுடன் அதை பார்த்தவன்.. போனை எடுத்து காதில் வைத்தான்..

 

” என்ன மறவா பொண்டாட்டியை தேடி அலையுற போல ” நக்கலாக கேட்ட தமிழ் அகரன் குரலில் செயல் இழந்து போனான் மறவன்.

 

” டேய் விளையாடாத சாயா எங்க ” என கர்ஜனையாக வெளி வந்த குரலில் , அப்பக்கம் பெருத்த அமைதி.

 

” டேய்ய்ய்ய்ய்ய்ய்…‌” என மறவன் கத்தவும்..

 

” ப்ச் கத்தாத மறவா.. நான் என்ன செய்யட்டும் சொல்லு, பொறுமையா அவ்வளவு நிதானமா நேத்து நான் சொல்லிட்டு வந்தேன்… ஆனால் எனக்கே தெரியாம என்ன தூக்க ஆள் ஏற்பாடு பண்ணிருக்க ரைட் ” என அகரன் கேட்கவும்.. கண்களை இறுக்க மூடி திறந்தான் மறவன்.

 

” அதுனால …. அதுனால என்ன டா… நீ ஒன்னும் நல்லவன் கிடையாதே… ”

 

” அதான் கெட்டவனா மாறிட்டேன் ” என எதிர் பக்கம் அவன் சிரிக்கும் சிரிப்பில் கோபத்தின் உச்சிக்கு சென்ற மறவன்… ” என் யாழிக்கி மட்டும் ஏதாவது ஆச்சு, உன்ன உயிரோட விட மாட்டேன் டா ”

 

” இதேதான் நானும் அவ கிட்ட சொன்னேன்.. ”

 

” என்ன சொன்ன… நீ ஏன் அவ கிட்ட பேசுன ” என்றவனது குரலில் பயம் தெரிய..

 

” உன் அப்பா தப்பு பண்ணாம பரலோகம் போயிட்டாரு சாயா… அதுக்கு காரணம் வேற யாரும் இல்ல நீயே தான்னு… அன்னைக்கு நடந்த சிசிடிவி ஆதாரத்தை காட்டினேன் ” என்றதும் தலையில் இடி விழுந்ததை போல அமர்ந்து விட்டான் மறவன்.

 

” அப்பறம் சிசிடிவி எப்படி வந்ததுன்னு கேளு, அன்னைக்கு ஒரு வீட்ல தானே அந்த சம்பவம் நடந்துச்சு, அதுக்கு பக்கத்தில உள்ள பைனான்ஸ் கம்பெனில மாட்டி இருந்த சிசிடிவில எல்லாமே ரெகார்ட் ஆகிருக்கு… அந்த பைனான்ஸ் கம்பெனி பூட்டி ரொம்ப மாசம் ஆனதுல நீங்க அதை பெருசா எடுக்கலை… ஆனால் எனக்கு அது பெருசா தேவை பட்டுச்சு… அதான் வாங்கி .. உன் பொண்டாட்டிக்கு படம் போட்டு காட்டினேன் ” என நக்கலாக கூற… காதில் வைத்திருந்த அலைபேசி அப்படியே கீழே சரிந்து விழுந்தது.

 

நேற்று அகரனிடம் பேசி விட்டு வந்த மறவன்… ஒரு முடிவோடு அவனை தூக்கி தன் கஸ்டடியில் வைத்து கொள்ள நினைத்து ஆள் பேசினான்… எப்படியும் மூர்த்தியின் கம்பெனியை வாங்கினாலும் மீண்டும் தன் உழைப்பதை சாயாவின் தந்தை கொலை சம்பவத்தை வைத்து வாங்கி விடுவான் என்று நன்றாக தெரியும்..  அதனால் அவன் இந்த முடிவு எடுக்க.. அவனுக்கு அப்பனாக இருக்கும் அகரன், இவன் காய் நகத்துவதற்கு முன்பே அவன் நகற்றி இருந்தான் மறவன் மனைவியை வைத்து.

 

எந்த உண்மை அவளுக்கு தெரிந்தால் தாங்க மாட்டாள் என்று இன்று வரையில் மறைத்து வைத்தானோ … இன்று அதே உண்மையை தெரிந்து கொண்டு என்ன செய்கிறாள் … எந்த நிலைமையில் இருக்கிறாள் என்பது தெரியாமல் கண்ணீர் தரை தட்ட அமர்ந்திருந்தான் .

 

“என்னாச்சு மறவன்..  ஏதாவது தெரிஞ்சதா ” என தினேஷ் ஆர்வமாக கேட்டான்..

 

” அவ்வளவு தான் தினேஷ்… என் சாயா இப்போ உயிரோட இருக்காளான்னு சந்தேகமா இருக்கு ” என்றதும் தினேஷ் அதிர்ந்து… ” அதெல்லாம் நீங்க மனச போட்டு குழப்பாம தெளிவா ஒரு முடிவு எடுங்க … முதல்ல யோசிங்க… பேசுனது யாரு, என்ன விஷயம் அதை எல்லாம் யோசிங்க ஒரு வழி கிடைக்கும் ” என்றதும் சட்டென்று நிமிர்ந்த மறவன்…

 

” தினேஷ்… காரை எடுங்க… சாயா அங்க தான் இருப்பா… ” என தெளிவாக கூற… ஒரு பெரும் மூச்சை விட்டவன் வேகமாக மறவன் கூறிய இடத்திற்கு காரை செலுத்தினான்.

 

சாயா கிடைப்பாளா??? அப்படியே கிடைத்தாலும் … எந்த நிலையில் கிடைப்பாள் ???

 

சனா💖

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்